Friday, December 30, 2011

அரசியல் புயல் .. சினிமா விருதுகள் 2011

இந்த வருட விருதுகளுக்கு செல்வதற்கு முன் இவ்வருட முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை பார்க்கலாம்


அரசியல்


இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களுக்கு அய்யாவும் பின் அம்மாவும் தமிழகத்தை ஆண்டனர். அய்யாவின் ஆட்சியில் கடைசி சில மாதங்கள், கட்சியினர் மீதான ஊழல் குற்ற சாட்டுகள் மக்களை பெரிதும் வெறுப்படைய செய்ய, ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

தேர்தல் தொகுதி பங்கீட்டில் தி.மு.க விற்கும் காங்கிரசுக்கும் முட்டி கொண்டது. காங்கிரஸ் அறுபத்தொரு தொகுதி கேட்டது ( இதை விட காமெடி இருக்குமா?) முதலில் முடியவே முடியாது என மறுத்த தி.மு.க பின் ஒத்து கொண்டது. இதே போல அ. தி.மு.க கூட்டணியிலும் தொகுதி பங்கீட்டில் சண்டை வந்து பின் சரியானது.

சென்ற சட்ட மன்ற தேர்தலில் ஒரு சில சீட்டுக்களுக்காக தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறி, தன்னை கைது செய்த " அன்பு சகோதரி" இடம் வந்த வை. கோ இம்முறை சகோதரியிடம் கோபித்து கொண்டு தேர்தலில் போட்டியிட வில்லை என அறிவித்தார் .

வலுவான அ. தி.மு.க கூட்டணி மக்களின் ஆளும் கட்சிக்கெதிரான கடும் எதிர்ப்புணர்வால் பெரும் வெற்றி பெற்றது.

இதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலில் மம்தா வெற்றி பெற்று பல ஆண்டுகளாக அங்கு நடந்த கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முடிவு கட்டினார்.

தமிழக பஞ்சாயத்து தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட இம்முறையும் அ. தி.மு.க பெரும் வெற்றி பெற்றது. சூட்டோடு சூடாக பால், பஸ், மின்சார கட்டண உயர்வை அறிவித்து தற்போது மக்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளது.

முல்லை பெரியார் ஆணை தொடர்பாக வருட இறுதியில் தமிழகம்-கேரளா இடையே பெரும் பிரச்சனை மீண்டும் வெடித்தது. கேரளாவில் இருக்கும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். உச்ச நீதி மன்றம் தலையிட்டும் கூட வழக்கம் போல் கேரளா செவி சாய்க்க வில்லை.

தமிழகத்தில் பருவ மழை மிக தாமதமாக தொடங்கினாலும் பின்  போதும் போதும் என்கிற அளவு கொட்டி தீர்த்தது. சென்னை சாலைகள் மழைக்கு பின் வழக்கம் போல் பல் இளித்தன. இந்த ஆட்சியிலும் சாலைகள் அப்படியே தான் இருக்கும் என்பதை உணர்ந்து மக்கள் பெரு மூச்சுடன் வாழ துவங்கினர். வருட கடைசி வாரத்தில்  "தானே புயல்" மீண்டும் பெருமழையை தருவித்தது.

மார்ச் மாதம் நடந்த கடுமையான பூகம்பத்தில் ஜப்பான் நிலை குலைந்தது. 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். ஆயினும் இதிலிருந்து விரைவில் மீண்டு ஜப்பான் தன் பழைய நிலையே எட்டி பிடித்தது. இத்தகைய மோசமான இயற்கை பேரிடரை எப்படி எதிர் கொள்வது என வாழ்ந்து காட்டினர் ஜப்பானியர்கள்.

ஒசாமா பின் லேடன் சுட்டு கொல்ல பட்ட செய்தியை பாரக் ஒபாமா அறிவித்தார். அநேகமாய் அது ஒன்று தான் ஒபாமாவிற்கு இந்த வருடம் நடந்த நல்ல விஷயம். பற்றபடி நிறைய பின்னடைவுகள் தான். வேலை இல்லா திண்டாட்டம் அதிகம் என்கிற குரல் அமெரிக்காவில் தொடர்ந்து ஒலித்தது.

தமிழகத்தில் முல்லை பெரியாறு அணையும், கூடங்குளமும் வருட பின் பகுதியில் பெரும் பிரச்சனைகளாக மாறின. இரண்டு விஷயத்துக்கும் இது வரை எந்த தீர்வும் தெரிய வில்லை.

உயிர் தோழி நீக்கம் நிஜமா, இது நீடிக்குமா என அடுத்த வருட இறுதிக்குள் தெரியலாம்

கிரிக்கெட்


1983-க்கு பிறகு மீண்டும் ஒரு முறை இந்தியா உலக கோப்பை வென்றது கனவு போல் இருக்கிறது. சச்சின் ஒரு முறையேனும் உலக கோப்பை வெல்லும் அணியில் இருந்ததும், தொடர் முழுதும் யுவராஜின் அற்புத ஆட்டமும் மறக்க முடியாதவை. கூடவே இறுதி போட்டியில் தோனியின் ஆட்டமும் அந்த கடைசி சிக்சும் !!

இங்கிலாந்து போய் இந்தியா அடி வாங்க, இங்கு வந்து இங்கிலாந்து அடி வாங்கியது.

சச்சின் நூறாவது செஞ்சுரிக்காக இந்தியா முழுதும் நகம் கடித்து காத்திருக்கிறது.

                                                           ***

விருதுகள்

மறைந்த எழுத்தாளர் சுஜாதா நினைவாக, அவர் செய்த இந்த செயலை அவர் மானசீக சிஷ்யன் தொடர்கிறேன்.

2010 விருதுகள் வாசிக்க : இங்கே செல்லவும்

2009 விருதுகள் வாசிக்க : இங்கே செல்லவும்
***

2011 - விருதுகள்


சிறந்த படம்: எங்கேயும் எப்போதும் 

சிறந்த இயக்குனர்வெற்றி மாறன் (ஆடுகளம்)   

சிறந்த நடிகர் : தனுஷ் ( ஆடு களம்/ மயக்கம் என்ன) 

சிறந்த நடிகை: அஞ்சலி

சிறந்த நகைச்சுவை நடிகர் : சந்தானம் (சிறுத்தை)

ரசித்த நடனம் : மாசமா (எங்கேயும் எப்போதும் )

இந்த வருட கனவு கன்னிகள்:

No 1 : அனுஷ்கா

No 2 : அஞ்சலி

No 3 : ஓவியா (களவாணி) ரம்யா நம்பீசன், ப்ரியா ஆனந்த்

சிறந்த கதை: பாஸ்கர் சக்தி (அழகர்சாமியின் குதிரை) 

சிறந்த வசனம்: ஞானவேல் (பயணம்) 


சிறந்த குணசித்திர நடிகை: லட்சுமி ராமகிருஷ்ணா (யுத்தம் செய்) 

சிறந்த குணச்சித்திர நடிகர்: M .S பாஸ்கர்  (பயணம்)


சிறந்த இசை அமைப்பாளர் : G.V. பிரகாஷ் குமார் -ஆடுகளம் (தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக)

சிறந்த பாடலாசிரியர் : மதன் கார்க்கி (என்னமோ ஏதோ - கோ ) ;
                                                     பா. விஜய் (இன்னும் என்ன தோழா- 7ஆம் அறிவு)

சிறந்த பின்னணி பாடகர்:  எஸ்.பி.பி ( அய்யய்யோ நெஞ்சு அலையுதடி ; யம்மா யம்மா காதல் பொன்னம்மா)

சிறந்த பின்னணி பாடகி : சின்மயி ( சார காத்து ; நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ)

மோசமான ஜிராக்ஸ் இயக்குனர் : விஜய் (தெய்வ திருமகள்)

(தான் எடுக்கும் அனைத்து படங்களின் கதையும் வெளி நாட்டில் இருந்து திருடுவதால்)

சிறந்த காமெடி சீக்வன்ஸ் - சிறுத்தை (கல்யாண மண்டப காமெடியும், க்ளைமாக்ஸ் Bomb காமெடியும்)இந்த க்ளைமாக்ஸ் சீனில் ஒண்ணரை நிமிடம் கழித்து 1 .28-ல் தான் சந்தானம் என்ட்ரி. " ஐ யாம் மம்மூட்டி"


சிறந்த புதுமுக இயக்குனர் : சரவணன் (எங்கேயும் எப்போதும்)

சிறந்த புதுமுக நடிகை : இனியா (வாகை சூடவா) 

சிறந்த புது இசை அமைப்பாளர்: சத்யா (எங்கேயும் எப்போதும்)

சிறந்த டிவி தொகுப்பாளர் : சிவ கார்த்திகேயன் ( ஜோடி சீசன் ; சூப்பர் சிங்கர்)
**
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !

தொடர்புடைய 2011 : ஸ்பெஷல் பதிவுகள் :

2011: சிறந்த 10 பாடல்கள்

2011: Top 10 படங்கள்

Thursday, December 29, 2011

2011 எனக்கு எப்படி இருந்தது?

2011-ல் நான் என பதிவுலகில் ஒரு தொடர் பதிவு போய்க்கிட்டிருக்கு. நம்மை யாராவது எழுத சொல்லுவாங்கன்னு பார்த்தா யாரும் கூப்பிடலை. வான்டடா வந்து வண்டியில் ஏறும் வடிவேலு மாதிரி " நமக்கு நாமே" திட்டத்தில் என்னை நானே அழைத்து இப்பதிவு எழுதி விட்டேன்.

அலுவலகம், சார்ந்த துறை, பதிவுலகம் என தனிப்பட்ட அனுபங்கள் தான் இந்த பதிவில் இருக்கும். முழுக்க சுயசரிதை ! பிடிக்கா விட்டால் எந்த நிலையிலும் நீங்கள் எஸ் ஆகலாம் !!
*****
இந்த படமாவது Profile போட்டோவுக்கு  சரியா வருமா என யோசிக்கும் அய்யாசாமி


2010- ஜனவரியில் துவங்கிய ஒரு நல்ல விஷயம் இந்த ஆண்டும் முழுதும் தொடர்ந்தேன். ஜிம்முக்கு செல்வது தான் அது ! வாரத்தில் ஐந்து நாட்களாவது ஆபிஸ் ஜிம்முக்கு போவதை இரண்டு ஆண்டுகளாக தொடர்கிறேன். வெயிட் எல்லாம் தூக்கி உடம்பை முறுக்கு ஏற்றாமல், டிரெட்மில், சைக்கிள் போன்றவற்றில் தான் தினமும் 45 நிமிடம்  செலவழிப்பேன். இதனால் உடம்பு குறையாட்டியும் ஏறாமல் இருக்கு. சர்க்கரை நோய், BP போன்றவை வராமல் தடுக்க முடிகிறது. வரும் ஆண்டுகளிலும் இதனை விடாமல் தொடர வேண்டும் என்பது ஆசை + பிரார்த்தனை. உடல் நலனில் செலுத்தும் இந்த அக்கறை தான் முதல் இடம் ! உடல் நலனை விட முக்கியம் வேறு எதுவுமே இல்லை!

அலுவலக வாழ்வில் சற்று மாறுதல்களும் பிரஷரும் இருந்தது. Legal -departmentல் உடன் இருந்த ஒரே நபரான ராம் வேலையை விட்டு விலக, குறுகிய கால அவகாசத்தில் இருவரை வேலைக்கு எடுத்து அவர்களை முழுதும் பயிற்சி தர வேண்டியிருந்தது. மேலும் புதிதாக சில வேலைகள் என் வசம் வந்தது. இதனால் தினம் இரவு 9 முதல் 11 வரை வீட்டிலிருந்து அலுவலக வேலை பார்க்கிற மாதிரி ஆனது. (அப்போது தான் US-க்கு காலை நேரம் !) துவக்கத்தில், தூங்கும் நேரத்தில் இந்த விஷயங்களை செய்ததால், அன்றைய பிரச்சனை குறித்த சிந்தனையில் இரவு தூக்கம் சற்று disturb ஆனது. ஆனால் பிரச்சனை உடனேயே தீர வேண்டும் என நினைக்கும் என் எண்ணத்தில் தான் தவறு என உணர்ந்து அதை மாற்றி கொண்ட பின் இந்த இரு மணி நேர இரவு அலுவல் பழகி விட்டது.

நான் படித்து முடித்த ACS- Institute -ல் முன்பு மாணவர்களுக்கு பகுதி நேரமாக வகுப்பு எடுத்து வந்தேன். சில ஆண்டுகளாக அதனை நிறுத்தி விட்டேன். இந்த ஆண்டு முதல், அங்கு மாணவர்களுக்கு வெவ்வேறு தலைப்புகளில் செமினார் எடுப்பதை துவங்கி உள்ளேன். இவ்வாறு இவ்வருடம் ஐந்து வெவ்வேறு தலைப்புகளில் செமினார் எடுத்ததால் அந்தந்த தலைப்புகள் குறித்து விரிவாக வாசிக்க, அவை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. இது நான் சார்ந்த துறை சார்ந்த விஷயங்கள் என்பதால் மிக உதவியாக இருந்தது. இவற்றிற்கு அந்த செமினார் அட்டன்ட் செய்தவர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது நேரடியாகவும், பின் ACS- Institute -ல் இருந்து வந்த feedback மூலமும் அறிய முடிந்தது. வரும் வருடங்களிலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இப்படி செமினார் எடுப்பது தொடரும்.

நான் சார்ந்த துறையில் பல்வேறு மீட்டிங் இவ்வருடம் கலந்து கொண்டதில் நிறைய புது நண்பர்கள் (அனைவரும் என்னை போல கம்பனி செகரட்டரிகளே !) கிடைத்தனர். இவர்களில் நான்கைந்து பேராவது தினம் ஒருவருக்கொருவர் போன் செய்து பரஸ்பரம் சந்தேங்களை தீர்த்து கொள்கிறோம். இதுவரை எந்த வருடமும் இல்லாத அளவு அதிக எண்ணிக்கையில் இந்த வருடம் என் துறை சார்ந்த புது நண்பர்கள் கிடைத்தது மிக மகிழ்ச்சியான விஷயம்.

புழுதிவாக்கம் பள்ளி அறிமுகம் ஆனது இந்த வருடம் தான். அதன் பிறகு

ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு

என இப்பள்ளிக்கு இந்த ஆண்டு முடிந்த உதவிகள் செய்து வருவது மிகுந்த மன நிறைவை தருகிறது.

அதிகம் ஊர் சுற்றுவதில் நாட்டமுடையவன் எனினும் இந்த வருடம் வேளாங்கண்ணி-நாகூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பயணங்கள் மட்டுமே சாத்தியம் ஆனது. காஞ்சிபுரம் மிக அற்புத செய்திகள் சொன்னது. இது பற்றிய பயண கட்டுரை தொகுப்பு விரைவில் நம் ப்ளாகில் துவங்கும் !

தமிழகம் தாண்டி எங்கும் பயணம் செல்லாதது இவ்வருடம் சற்று ஏமாற்றம் தான். வரும் வருடமாவது வேறெங்கும் செல்ல சந்தர்ப்பம் வாய்க்குமா என பார்க்க வேண்டும்.

இறுதியாக ப்ளாக் உலக அனுபவங்களுக்கு வருவோம்:

இந்த வருடத்தின் பிப்ரவரியில் தமிழ் மணம் நட்சத்திரமாக ஒரு வாரம் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். பால குமாரன் சந்திப்பு குறித்த கட்டுரை நிறைய கருத்து வேறுபாடுகளை கிளப்பியது. அம்மா குறித்த பதிவும் சீனு சார் குறித்த பதிவும் என்னுள் எவ்வளவு நெகிழ்வை ஏற்படுத்தியதோ அதே உணர்வை அப்பதிவை வாசித்த நண்பர்களிடமும் கண்டது இனிய அனுபவமாக அமைந்தது.

பின் நவம்பரில் யுடான்ஸ் ஸ்டாராகவும் இதே வருடத்தில் இருந்தாயிற்று. இந்த இரு முறையும் ஸ்டாராக இருந்த போது ஒவ்வொரு முறையும் ப்ளாகை தொடர புதிதாக நிறைய நண்பர்கள் கிடைத்தனர்.

இவ்வருடம் முழுதும் குறைந்தது வாரம் இரு பதிவுகளாவது எழுதியிருக்கிறேன். இப்படி தொடர்ந்து எழுதியது இந்த வருடம் மட்டும் தான் ! நடுவில் மூன்று வாரம் தினம் பதிவு எழுதி பார்த்து அந்த மூன்று வாரமும் தமிழ் மணம் முதல் இருபது பதிவுகளுக்குள் வருகிற திருப்தியும் பார்த்தாயிற்று. பின் இது சரிப்படாது என தினம் எழுதுவதை கை விட்டேன்.

இவ்வருட அளவுக்கு மிக அதிக பதிவுகள் எழுதுவது இனி எந்த வருடத்திலும் நிச்சயம் சிரமமே ! பதிவுலகம் தருகிற சுதந்திரம் : வேண்டுகிற போது எழுதலாம் என்பதே ! அவ்வழியில் வருகிற ஆண்டு
வாரம் ஓரிரு பதிவுகள் எழுதும் எண்ணம் !

பதிவுலகில் நிறைய்ய்ய புது நண்பர்கள் கிடைத்தனர். அவர்களோடு கை கோர்த்தவாறு வரும் ஆண்டுகளும் பயணிப்பேன்.

பொதுவாக நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட கூடாது என ஆழமாய் நம்புபவன் நான். நம்மை நம்மோடு மட்டும் தான் ஒப்பிடவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சாமாவது வளர்ச்சி அடைந்தோமா என பார்க்க, வருட இறுதி ஒரு நல்ல வாய்ப்பு ! நீங்களும் இவ்வருடம் செய்த நல்ல விஷயங்கள் குறித்து யோசியுங்கள் நண்பர்களே !!

Tuesday, December 27, 2011

2011ல் பதிவுலகம்:நல்ல விஷயங்களும், சர்ச்சைகளும்

பதிவுலகம் என்பது சமூகத்தின் ஒரு அங்கம் தானே? சமூகத்தில் நடக்கிற மாதிரியான நல்லது, கெட்டது, சண்டைகள், போட்டி பொறாமைகள் அனைத்தும் இங்கும் உண்டு. இந்த வருடத்தில் எனக்கு நினைவில் இருக்கும் இத்தகைய சில விஷயங்களை இங்கு பகிர்கிறேன். பதிவர்களுக்கான இந்த வருட டயரி குறிப்பாக இருக்க வேண்டும் என்பது எண்ணம்.

நல்ல விஷயங்கள்:

1. ஜாக்கி சேகர் பதிவின் மூலம் மைதிலி என்கிற ஏழை கல்லூரி மாணவிக்கு கல்வி கட்டண உதவி கிடைத்தது. வெளி நாடு வாழ் பதிவர்கள் ஸ்ரீராம் மற்றும் ராமசாமி அடுத்து வரும் ஆண்டுகளிலும்  இவருக்கு உதவுவதாக கூறி உள்ளனர். .

2. தமிழ் மீனவர் மீது தாக்குதல், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனை, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நாடகம் , அண்ணா நூற்றாண்டு நூலக இட மாற்றம் போன்ற விஷயங்களில் பதிவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதல் பரிசு பெறும் ஜெயலட்சுமி
3. புழுதிவாக்கம் பள்ளி பற்றி ப்ளாகில் நான் எழுதியதை வாசித்த Cotton grower என்கிற நண்பர் ஜெயலட்சுமி என்கிற ஏழை மாணவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்புவதாக கூறி, இன்று வரை அனுப்பி வருகிறார். அதே புழுதிவாக்கம் பள்ளிக்கு +2 மாணவர்கள் கணினி ஆசிரியர் இன்றி சிரமப்படுகிறார்கள் என்று எழுதியதும், சக பதிவர் விதூஷ் மூலம் அவர் தம்பி +2 மாணவர்களுக்கு கணினி பாடம் எடுத்து தந்தார்.

4. கே. ஆர். பி செந்தில், கேபிள் சங்கர், உலகநாதன், யுவ கிருஷ்ணா உள்ளிட்ட பல பதிவர்களின் புத்தகங்கள் இவ்வருடம் வெளியாகி பரவலாக விற்பனை ஆகின. ஓ. ஆர். பி ராஜா மற்றும் கே. ஆர். பி செந்தில் இணைந்து ழ பதிப்பகம் துவக்கினர். உலகநாதன் அவர்கள் உ பதிப்பகம் துவக்கியுள்ளார். 

5. பதிவர்கள் கார்த்திகை பாண்டியன் மற்றும் நேசமித்திரன் இணைந்து வலசை என்கிற இலக்கிய இதழ் கொண்டு வந்தனர். பதிவர் நிலா ரசிகனும் நரேனும் இணைந்து ஒரு சிற்றிதழ் கொண்டு வந்துள்ளனர்.

 இவ்வருடம் நடந்த சில பதிவர் சந்திப்புகள்/விழாக்கள் :

1. ஆதி- பரிசல் -யுடான்ஸ் இணைந்து நடத்திய சிறுகதை போட்டிக்கான பரிசளிப்பு விழா டிசம்பர் 18 அன்று சென்னையில் நடந்தது. சென்ற முறை ஒரு பரிசு வென்ற RVS இம்முறையும் பரிசு வென்றார். (நீங்க தான் RVS அடுத்த முறை ஜட்ஜு!)

2. ஈரோடு சங்கமம் தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக இனிதே நடந்தது. இணைய உலகில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய 15 நண்பர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

3. நண்பர் டுபுக்கு சென்னை வந்த போது பதிவர் அப்துல்லா ரம்ஜான் காரணமாக பிரியாணி விருந்து தந்தார். அப்போது அவர் அலுவலகத்தில் கூடி அனைவரும் பேசி மகிழ்ந்தோம்.

4. யூத் பதிவர் சந்திப்பு பதிவர்களின் ஆஸ்தான பதிவர் சந்திப்பு இடமாகி விட்ட டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தது.

5. டெரர் கும்மி நண்பர்கள் இணைந்து இந்த ஆண்டுக்கான இணைய விருதுகள்/ போட்டி அறிவித்துள்ளனர். வருகிற ஆண்டுகளிலும் அவர்கள் இதனை தொடர வாழ்த்துவோம் !

இன்னும் நிறைய பதிவர் சந்திப்பு நடந்தது. நான் பலவற்றுக்கு செல்லாததால் நினைவில்லை.
****
சர்ச்சைகளுக்கும் பதிவுலகுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு அலை அடித்து ஓயும். அவற்றில் சில ....

1. இன்டி ப்ளாகர்ஸ் என்கிற அமைப்பு ப்ளாகர்களுக்கான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது. இதில் எழுந்த சர்ச்சை அதை ஒட்டி இரு வேறு வித கருத்துக்கள் (கருத்து ஒன்று : இங்கே கருத்து இரண்டு: இங்கே ) ..கொஞ்ச நாள் பதிவுலகம் அமளி துமளிபட்டது. வழக்கம் போல் எந்த முடிவுக்கும் வராமல் பிரச்சனை ஓய்ந்தது.

2. பதிவர் லதானந்த் தான் ஒரு விபத்தில் இறந்ததாக ஒரு செய்தி எழுப்பி விட, பல நண்பர்கள் பதறி அடித்து கொண்டு சென்றால், அது பொய் செய்தி என தெரிந்து அவர் மீது மிக கோபமாகினர். இது குறித்து பல கோபமான பதிவுகள் வந்தன.

3. மங்காத்தா வந்த போது விஜய் ரசிகர்கள் கிண்டலடித்து பதிவுகள் எழுத, வேலாயுதம் வந்த போது அஜீத் ரசிகர்கள் அதே போல் செய்தனர். ("இது எங்களுக்குள்ள ஜகஜம்") .

4. பதிவர் ஒருவரின் ஆபரேஷனுக்காக பணம் வசூலித்ததில் எழுந்த சர்ச்சை இன்னும் நிறைய பூதம் கிளப்ப, நர்சிம் இணையத்தில் எழுதுவதை  நிறுத்தி விட்டார்.

5. எழுத்தாளர் சாருவின் Chat  லீலைகள் அம்பலம் ஆனது. சாரு அதனை மறுத்தாலும் உலகம் அதனை நம்பியதென்பது அவர் வருட இறுதியில் நடத்திய புத்தக விழாவிற்கு முக்கிய புள்ளிகள் வழக்கம் போல் வராததில் தெரிந்தது.

6. தமிழ் மணத்துடன் வந்த ஒரு மன கசப்பில் நிறைய பதிவர்கள் தமிழ் மணத்தின் மீது கோபமானார்கள்.  பின் சிறு தாமதத்துக்கு பின் தமிழ் மணம் விளக்கமும் வருத்தமும் கூற, பல பதிவர்கள் தமிழ் மணத்தில் மீண்டும் இணைந்தாலும் இன்னும் நிறைய நல்ல பதிவர்கள் தமிழ் மணத்தில் மீண்டும் இணையாமல் இருப்பது சற்று வருத்தமாக தான் உள்ளது. 


**
சர்ச்சைகள் பற்றி நினைவு படுத்த வேண்டுமா என கேட்கலாம். இந்த சர்ச்சைகள் பதிவுலகில் என்னென்ன செய்ய கூடாது என்பதை அனைவருக்கும் நினைவு படுத்த வேண்டும் என்பதால் தான் பகிர்கிறேன். பதிவுலகத்தில் சற்று சறுக்கினாலும் இதற்காகவே காத்திருந்தது போல் நூற்றுகணக்கில் கற்களும் சொல்லடியும் விழும். இத்தகைய அடிகளுக்கு பின் பதிவுலகம் வெறுத்து எழுதுவதை நிறுத்துபவர் பலர் ! சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய இடம் இது !!

**
எனது குறுகிய வாசிப்பின் காரணமாக நிறைய சந்திப்புகளையும், நல்ல விஷயங்களையும் நான் தவற விட்டிருக்க கூடும். அவற்றை நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.

Monday, December 26, 2011

2011 : அசத்தலான டாப் 10 படங்கள்

கடந்த மூன்று ஆண்டுகளாகவே என் ரசனையில் வருடத்தின் சிறந்த படங்கள் பட்டியல் வெளியிட்டு வருகிறேன்.

2010ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே பார்க்கலாம் !

2009ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே பார்க்கவும். 
****

பத்து படங்கள் என வைத்து கொண்டதால் எனக்கு இந்த ஆண்டில் பிடித்த இன்னொரு படம் இதில் இடம் பெறாமல் போகிறது. அந்த படம் : குள்ள நரி கூட்டம். காமெடி, அழகான காதல், போலிஸ் செலக்ஷனில் உள்ள அரசியல் என வித்யாசமான கதை களம் ! பதினோராவது இடம் என ஒன்று இருந்தால் அது குள்ள நரி கூட்டம் படத்துக்கு தான் !

கமர்சியலாக வெற்றி பெறாத ஓரிரு படங்கள் கூட "ரசிக்க தகுந்த நல்ல படங்கள்" என்கிற அடிப்படையில் இதில் உள்ளது. 
இந்த முறை என் கணிப்பில் ஒன்று முதல் பத்தாம் இடத்தை பெறும் படங்கள் இதோ ..

1. எங்கேயும் எப்போதும்
என்னை பொறுத்த வரை இந்த வருடத்தின் மிக சிறந்த படம் இது தான். ஆடுகளம் இதற்கு மிக அருகில் வர கூடிய மற்றொரு படம் என்றாலும் எங்கேயும் எப்போதும் வெல்கிறது.

சாலை பாது காப்பு என்கிற விஷயத்தை நிகழ் காலத்துக்கும், இறந்து காலத்துக்கும் இடையே மாறி மாறி பயணிக்கும் கதையில் ஆங்காங்கு சொல்லி கொண்டே இருப்பது சிறப்பு. புது இசை அமைப்பாளர் சத்யா இசையில் நான்கு பாடல்கள் அருமை !

ஜெய்-அஞ்சலி, சர்வன்-அனன்யா நான்கு பேருமே மிக இயல்பாக நடித்திருந்தனர். படம் பார்த்து விட்டு அடுத்த சில மணி நேரத்துக்கு நம்மை உலுக்கி போடும் இந்த படம் இந்த வருடத்தின் சிறந்த படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழ் சினிமாவுக்கு மிக நல்ல புது வரவு கதாசிரியர் மற்றும் இயக்குனர் சரவணன் !

2. ஆடுகளம்தேசிய விருது பெறும் தனுஷ்
கோழி சண்டை என்கிற ஒரு வித்யாசமான களம். கிளை மாக்சை விடவும் இன்டர்வெல் ப்ளாக் தான் செம !!

முக்கிய பாத்திரங்களை பார்த்து பார்த்து செதுக்கி இருந்தார் இயக்குனர். தனுஷுக்கு மட்டுமன்றி நடன இயக்குனர் உள்ளிட்ட வேறு சிலருக்கும் தேசிய விருது கிடைத்தது. பழைய பாரதி ராஜா படம் போல நம் கிராமத்தை அதன் அழகோடும் குரூரத்தோடும் பார்க்க முடிந்தது இந்த படத்தில் !

G.V. பிரகாஷ்  குமார் பாடல்கள் அட்டகாசம் !  தாப்சி அறிமுகமான போது எனக்கு தெரிந்தே பலர் " தாப்சி தாப்சி என புலம்பி கொண்டிருந்தனர்"     (அட அய்யா சாமி இல்லப்பா !!)

( ஆடுகளம் விமர்சனம் நமது ப்ளாகில் இங்கே )3. கோ


அநேகமாய் இந்த வருடத்தின் மிக பெரிய வெற்றி படம் (லாபம் ஈட்டிய வகையில்) இது தான் என நினைக்கிறேன்.  இயக்குனர் KV ஆனந்த் ஒரு brilliant டைரக்டர் என மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார். இயக்குனராக அவரது மூன்றாவது படமும் சூப்பர் ஹிட். இதுவரை எடுத்த மூன்றும் வெவ்வேறு Genre கதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜீவா அந்த பாத்திரத்துக்கு Tailor made !. Bubbly ஹீரோயின் பாத்திரத்துக்கு பியா மிக நன்கு பொருந்தினாலும், முக்கிய ஹீரோயின் கார்த்திகா நிச்சயம் பெரிய letdown  ! வித்தியாமான கதை, சுவாரஸ்யமான திரை கதை, செம பாடல்கள், ரசிக்க வைக்கும் songs picutrization  என சொல்லி அடித்தனர் வெற்றியை !

(கோ விமர்சனம் நமது ப்ளாகில் இங்கே )

4. அழகர்சாமியின் குதிரை

பாஸ்கர் சக்தியின் குறு நாவலை வைத்து சுசீந்திரன் எடுத்த படம். இதன் nativity மற்றும் originality ஆகியவற்றுக்காகவே மிக பிடித்தது . அப்பு குட்டி என்கிற ஹீரோ கிட்ட தட்ட இடை வேளையின் போது தான் வருகிறார். மேலும் அப்பு குட்டியை ஹீரோவாக போடும் தைரியத்தை எப்படி பாராட்டுவது ! காமெடி, சஸ்பென்ஸ், இளைய ராஜாவின் இனிய இசை ஆகியவற்றால் மனதை கவர்ந்த படம் இது. சென்னையில் நடந்த உலக திரைப்பட விழாவில் சிறந்த பட விருது கிடைத்ததில் ஆச்சரியம் இல்லை.5. மங்காத்தா

அஜீத் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் ஒரு வெற்றி படம் வேண்டும் என மிக எதிர் பார்த்திருந்த நிலையில் அவர்களுக்கு கிடைத்த ஜாக் பாட் தான் இந்த படம். அநேகமாய் இந்த வருடத்தில் மிக பெரிய ஓப்பனிங் கிடைத்த படம் இதுவாக தான் இருக்கும். சற்று வித்யாசமான கதை. ஹீரோ என்றாலே " அனைத்து நற்குணங்களும் நிரம்பியவன்" என்பதை விடுத்து, கெட்டவன் ஒருவன் ஹீரோவாக இருந்தது மக்களை சற்று ஆச்சரியபடுத்தியது. அஜித் Stylish ஆக நடித்திருந்தார். யுவனின் பாடல்களும் சேர்ந்து கொள்ள இந்த வருடத்தின் பெரிய வெற்றி படங்களில் ஒன்றானது.


6. காவலன்

காவலன் VS வேலாயுதம். இரண்டுமே விஜய்க்கு வெற்றி படங்கள் தான். சொல்ல போனால் வேலாயுதம் தான் காவலனை விட பெரிய வெற்றி என்றாலும், எனக்கு காவலன் தான் அதிகம் பிடித்தது. இந்த படம் வந்த சூழலை நினைத்து பாருங்கள். பொங்கலுக்கு படம் தியேட்டருக்கு வருமா என்பதே பெரிய கேள்வி குறியாக இருக்க, அநேகமாய் வராது என்றே பலரும் நினைத்த நிலையில் கடைசி நேரத்தில் வந்தது. நல்ல தியேட்டர் கிடைக்காமல், தயாரிப்பாளர் தரப்பில் சரியான Publicity-ம் இல்லாமல் படம் மவுத் டாக் மூலமே செமையாக ஓடியது.

விஜயை இப்படி ஜாலியான பாத்திரத்தில் பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. வடிவேலுவும் ஜோடி சேர, காமெடி அசத்தலாக இருந்தது. படத்தின் இறுதியில் சண்டை இல்லாமல் உணர்வுகளுக்கு முக்கிய துவம் கொடுத்து முடித்தது ஆச்சரியம் + அழகு !

7. பயணம்

நான் ரொம்பவே ரசித்து பார்த்த படம். வசூல் ரீதியில் பெரிய வெற்றி படமாக இல்லது இருக்கலாம். ஆனால் இந்த வருடத்தின் தவற விட கூடாத படம் என இதனை நிச்சயம் சொல்லலாம். விமான கடத்தல் என்கிற விஷயத்தை எடுத்து கொண்டு, அதை எவ்வளவு காமெடி + சுவாரஸ்யத்துடன் சொல்ல முடியுமோ அவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்கள். நாகார்ஜுனா ஐம்பது வயதுக்கு மேல் ஆனாலும் செம பிட்! தன் பாத்திரத்தை மிக கண்ணியமாக சரியாக செய்திருந்தார். காமெடி தான் படத்தை மிக ரசிக்க வைத்தது. கூடவே அடுத்த என்ன நடக்கும் என்கிற ஆவலும். ராதா மோகன் வெல்டன் ! நீங்கள் இயக்கும் ஒவ்வொரு படமும் அந்த வருடத்தின் சிறந்த படங்கள் பட்டியலில் வந்து விடுகிறது !

8. வாகை சூட வா

வாகை சூடவா வந்த போது பதிவுலகில் இரு வேறு கருத்துகள் நிலவின. இதனை பாராட்டி சிலரும், படம் போர்- தியேட்டரில் ஆள் இல்லை என்று சிலரும் விமர்சனம் எழுதினர். எனக்கு படம் ரொம்பவும் பிடித்தது. இந்த கதை நடப்பது வேண்டுமானால் நாற்பது வருடத்துக்கு முந்தைய காலமாக இருக்கலாம். ஆனால் படம் சொல்ல வந்த செய்தி ஒவ்வொரு கிராமமும் கல்விக்கு முக்கிய துவம் தரவேண்டும் என்பதே. இந்தியாவில் கல்வியறிவு இன்னும் அறுபது விழுக்காடு அளவில் தான் உள்ளது. மீதமுள்ள நாற்பது சதவீத மக்களுக்கு சேர வேண்டிய படம் இது. கல்வி சம்பந்தமான சில நல்ல விஷயங்களில் நண்பர்களுடன் சேர்ந்து இயங்குவதால் இந்த படத்தின் முக்கியத்துவம் எனக்கு புரிகிறது.

அழுத்தமான செய்தியை நகைச்சுவையாய், அருமையான பாடல்கள், அழகான ஒளிப்பதிவு என அற்புதமாய் தந்த இயக்குனர் சற்குணத்துக்கு ஒரு பூங்கொத்து !!

9. காஞ்சனா

பொதுவாய் First Part படம் போல், அதன் Second part வெற்றி பெறாது. ஆனால் அந்த சென்டிமென்ட்டை உடைத்து இந்த படம் பெரும் வெற்றி பெற்றது. நான் ரசித்தது காமெடி மட்டும் தான். கோவை சரளா மற்றும் தேவதர்ஷினி காம்பினேஷன் செமையாக சிரிக்க வைத்தது. க்ளைமாக்ஸ் டான்ஸ் சில சண்டைகள் போர் அடித்தாலும் இந்த வருடம் செம லாபம் பார்த்த வெற்றி படம் என்கிற அடிப்படையில் மட்டும் டாப் டென்னில் இடம் பிடிக்கிறாள் காஞ்சனா.

காஞ்சனா விமர்சனம் நமது ப்ளாகில் இங்கே )

10. சிறுத்தை
ஒரு ரீ மேக் படம் தான் என்றாலும் மிக ரசிக்கும் படி சொல்லி இருந்தனர்.  கார்த்தி மற்றும் சந்தானம் காமெடி இந்த படத்தை மறுபடி மறுபடி பார்க்க வைக்கிறது. இந்த வருடமே விஜய் டிவியில் ரெண்டு முறை போட்டு விட்டனர். காமெடி பார்ட் மட்டும் எப்போது வந்தாலும் பார்த்து விட்டு விழுந்து விழுந்து சிரிப்போம். கதை காதுல பூ ரகம் தான் ..கார்த்தி ரெண்டு பாத்திரங்களுக்கும் நல்ல வித்யாசம் காட்டியிருந்தார். அடுத்தடுத்து வெற்றி படங்களாக நடித்து கார்த்தி தன் இடத்தை உறுதி செய்து கொண்டுள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்


2011-சிறந்த பத்து பாடல்கள்

2011-மாபெரும்  மொக்கை படங்கள்

***
உங்களுக்கு பிடித்த படம் ஏதேனும் நான் தவற விட்டிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் !

Friday, December 23, 2011

வானவில்: முல்லை பெரியாறு அணை - ரங் தே பசந்தி

பார்த்த படம்: ரங் தே பசந்தி

அமீர்கான் பற்றிய பதிவு எழுதிய போது அவரது இந்த படம் அவசியம் பாருங்கள் என பல நண்பர்களும் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தனர். அது தான் இப்படம் பார்க்க காரணம்.

இங்கிலாந்து நாட்டு பெண் ஒருவர் இந்தியா வந்து விடுதலை போராட்டம் குறித்து ஒரு படம் எடுக்கிறாள். அமிர்கான், சித்தார்த் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் அதில் நடிக்கிறார்கள். நடிக்கும் போது விளையாட்டு தனமாக நடித்தாலும், படம் முடிக்கும் போது தான் சுதந்திர போராட்ட வீரர்கள் மேல் மிகுந்த மரியாதை அவர்களுக்கு வருகிறது. நாட்டில் அரசியல் வாதிகளால் நடக்கும் சில விஷயங்களால் அவர்கள் நேரடியே பாதிக்க பட, சம்பந்த பட்ட அமைச்சரை அவர்கள் கொல்கிறார்கள். ஆனால் இறந்த அமைச்சருக்கு "தியாகி" பட்டம் கிடைக்கிறது. அவர் செய்த ஊழலை அம்பல படுத்தும் போது, மாணவர்கள் நால்வரும் கொல்ல படுகிறார்கள்.

அருமையான படம் ! பார்த்து முடித்ததும் லஞ்சம் சூழப்பட்ட நம் அரசியல் முறை மீது நிறைய கோபம் வருகிறது. அமீர் என்கிற பெரிய ஹீரோ இருந்தும் அனைவருக்கும் சமமான பங்களிப்பு உண்டு. அமீருக்கு ஹீரோயின் இல்லை. டூயட் இல்லை. சித்தார்த்தும் என்னமாய் நடித்துள்ளார் ! நம் மாதவன் கூட குறிப்பிடத்தக்க ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை பார்க்காவிடில் அவசியம் பாருங்கள் !

விகடனில் ராஜூ முருகனின் வட்டியும் முதலும் தொடர்

விகடனில் தொடர்ந்து மண் மனம் கமழும் ஏதாவது ஒரு தொடர் வெளியிடுகிறார்கள். சுகாவின் தொடர் முடிந்ததும், ராஜூ முருகனின் வட்டியும் முதலும் தொடர் ஆரம்பித்து விட்டனர். ராஜூ முருகன் தஞ்சை காரர். சுந்தர சுகன், தஞ்சை பிரகாஷ், தஞ்சை வாசன் என தொடரில் அவர் சொல்லலும் ஆட்களையெல்லாம் நானும் சந்தித்துள்ளேன். இரவு முழுதும் டீ மட்டும் குடித்து விட்டு இலக்கியம் பேசும் நண்பர்கள் அவர்கள். ராஜூ முருகனையும் சந்தித்திருக்க கூடும். நேரில் பார்த்தால் தெரியும் !

சுகா தொடர் வந்த போது திருநெல்வேலி காரர்கள் "எங்க ஆளு பாத்தியா?" என செம ரவுசு விட்டனர். (எங்கேப்பா ராம லட்சுமி மேடம்?) இப்போ எங்க நேரம் !! தஞ்சாவூருன்னா சும்மாவா? அசத்துங்க ராஜூ முருகன் !

டிவி பக்கம்

மக்கள் தொலை காட்சியில் ஒரு நல்ல நிகழ்ச்சி ஞாயிறு மாலை ஒளி பரப்பாகிறது. குடிசை வாழ் குழந்தைகளை நல்ல கடைக்கு அழைத்து சென்று நல்ல துணிகள் வாங்கி தந்து, பின் VGP கோல்டன் பீச் அல்லது MGM போன்ற ஏதாவது இடத்துக்கு கூட்டி சென்று விளையாட வைக்கிறார்கள். அவர்களுக்கு இந்த இடங்களை பார்க்க ஒரு வாய்ப்பு மற்றும் நல்ல உடை கிடைக்கிறது. டிவியில் தங்களை பார்க்கவும் முடிகிறது. நிகழ்ச்சி நடத்துபவர் சுத்த தமிழில் பேச அந்த குழந்தைகள் ஆங்கிலம் கலந்து தான் பேசுவர். அந்த வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தை சொல்லி பேச சொல்வது செமையாக இருக்கும். முடிந்தால் ஞாயிறு மாலை ஆறு மணிக்கு மக்கள் தொலை காட்சியில் இந்த நிகழ்ச்சி பாருங்கள் !

ஆனந்த் SMS கார்னர்

If people criticise you, hurt you or shout at you, dont be bothered. Just remember, in every game, it is the audience who make the noise, not the players.

போஸ்டர் கார்னர் 
முல்லை பெரியாறு அணை


முல்லை பெரியாறு அணை குறித்து கல்கியில் ஞானி மிக எளிமையாக பல விஷயங்கள் சொல்லியிருந்தார். நீங்கள் வாசிக்கா விடில் அதிலிருந்து சில தகவல்கள்:


முல்லை பெரியாறு அணை இருக்கும் இடம் கேரளா எனினும், அந்த அணையை தமிழகத்துக்கு 999 வருட லீஸ் விட்டுள்ளனர். இப்படி தங்கள் மாநிலத்தில் உள்ள அணையில் தமிழகத்துக்கு உரிமை இருப்பது தான் கேரளா காரர்களுக்கு செம கடுப்பு. மேலும் அவர்களுக்கு அரசியல் செய்ய இது ஒரு வாய்ப்பு.

தமிழகம்-கேரளா பிரிக்க பட்ட போது இந்த அணை இருக்கும் இடம் தமிழத்துடன் சேர வேண்டியது. சில அரசியல் குழப்பங்களால் கேரளாவிற்கு போய் விட்டது.

"அணை பலவீனம்" என்கிற பொய்யை கேரள அரசியவாதிகள் நாற்பது ஆண்டுக்கு மேலாக சொல்லி வருகிறார்கள். பல ஆய்வுக்கு பிறகு அறிஞர் குழுக்களும், உச்ச நீதிமன்றமும் இது தவறு என சொல்லியும், இதே பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி கேரள மக்களை நம்ப வைக்க பார்க்கின்றனர்.

அணையை நல்ல விதமாக பராமரித்தால் எந்த பிரச்னையும் இல்லை. அணை தமிழகத்தால் மிக நன்றாக பராமரிக்கபடுகிறது.

அணை உடைய வாய்ப்பே இல்லை. அப்படி வாதத்துக்கு சொன்னாலும் அதிலிருந்து வெளியாகும் நீர் மற்றொரு நீர் தேக்கத்துக்கு செல்வது போல் தான் உள்ளது. சுற்றி இருக்கும் கிராம மக்களில் 90 % தமிழர்கள். ஒருவேளை மக்கள் பாதிப்பு எனில் தமிழர்கள் தான் அதிகம் பாதிப்படைவார்கள்.

**
எனக்கு தெரிந்து இதற்கு ஒரே தீர்வு உச்ச நீதி மன்றத்திலிருந்து வரும் தீர்ப்பு தான். ஆனால் கர்நாடகா, கேரளா இரு மாநிலங்களும் உச்ச நீதி மன்ற தீர்ப்பையே தங்களுக்கு எதிராக இருந்தால் என்றும் மதிப்பதில்லை. இப்படி மதிக்காத பட்சம் "நீதிமன்ற அவமதிப்பு" என அரசை டிஸ்மிஸ் செய்ய சொல்லவேண்டும் !


நிற்க. வருகிற ஞாயிறு அன்று மெரினாவில் இது குறித்த கூட்டம் நடக்கவுள்ளது. சென்னை நண்பர்கள் அனைவரும்  கலந்து  கொள்ளவும்

அய்யா சாமி


காலையில் எழுந்ததும் போர்வையை மடிப்பதென்பது அய்யா சாமிக்கு ரொம்ப பெரிய வேலை மாதிரி தெரியும். போர்வையை மடிக்கணுமே என்றே படுக்கையில் இருந்து எழாமல் உருளுவார். எழுந்து விட்டாரென்றால் மிக விரைவாய் அடுப்படிக்கு போய் வேலையில் குதித்து விடுவார் தான். ஆனால் கொஞ்சம் Starting trouble ! நடத்துங்கையா ! வீட்டம்மா கிட்டே பாட்டு வாங்கினா தான் நீர் எல்லாம் திருந்துவீர் !

Wednesday, December 21, 2011

2011-ன் மாபெரும் மொக்கை படங்கள்

நூறு படம் வந்தால் பத்து படம் தான் ஓடுகிறது. மீதம் தொண்ணூறும் தயாரிப்பாளர் கையை கடிக்கிறது ...அறுவையாகவும் இருக்கிறது ! அதற்காகவெல்லாம் படம் பாக்காம இருக்க முடியுமா? அதிக சிரமம் இன்றி இந்த வருடத்தின் சிறந்த பத்து மொக்கை படங்களை தேர்ந்தெடுத்தேன்.

******
சென்ற வருடத்தின் (2010) சிறந்த மொக்கை படங்களை இங்கே வாசிக்கலாம்
******
சிறு படங்களில் பல தோல்வி என்றாலும், அவற்றை கணக்கில் எடுக்கலை. சற்றேனும் எதிர் பார்க்க வைத்து தோல்வி அடைந்தவை மட்டுமே இங்கு கணக்கில் உள்ளது. வாருங்கள் மொக்கை படங்களை சற்று ரீ- வைன்ட் செய்து பார்ப்போம்.

வெடி

விஷால், சமீரா ரெட்டி என்கிற டபிள் ஹீரோ சப்ஜக்ட். என்னது சமீரா ரெட்டி ஹீரோயின் ஆச்சே அப்புடீங்கறின்களா? ம். நீங்க தான் அப்படி சொல்றீங்க. நமக்கு ஒன்னும் அப்படி தோணலை. டுவிட்டரில் கூட பலர் சமீராவை கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காங்க. சமீரா பையன் தனி ஹீரோவா நடிக்க பாக்கலாம்.

சரி வெடி படத்துக்கு வருவோம். போலீஸாக இருக்கும் விஷால் வில்லன்களை பந்தாடும் கதை. இதில் தங்கச்சி செண்டிமென்ட் வேற ! முடியலை ! விவேக் காமெடி கொஞ்சம் பரவாயில்லாம இருந்தது. "இச்சு இச்சு இச்சு கொடு " பாட்டு ஓரளவு பிடித்தது. அந்த பாட்டு சாருவுக்கு(ம்) பிடிக்கும் என்ற பிறகு எனக்கு பிடிக்காமல் போயிடுச்சு !

சன் டிவி தயாரிச்சு செமையா ஊத்தி கொண்ட படம். புது மாப்பிள்ளை பிரபு தேவாவின் வெடி நமத்து போயிடுச்சு.

வந்தான் வென்றான்

ஜீவா மற்றும் இயக்குனர் கண்ணன் ஆகியோருக்காக பார்த்து நொந்த படம். வெளியான ஒரு மாசத்துக்குள், ஜெயா டிவியில் போட்டுட்டாங்கன்னா பாத்துக்குங்க எப்படி இருக்கும் படம்னு? தாப்சி... "பே.......ப்சி".

அஞ்சனா..அஞ்சனா & காஞ்சனமாலா ரெண்டு பாட்டு மட்டும் நல்லா இருந்தது. இந்த தயாரிப்பாளர் இனி சினிமா தயாரிப்பாரா??

அவன் இவன்

பாலா இயக்கிய படம் இந்த லிஸ்டில் வருவது எனக்கே கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கு. இருந்தாலும் உண்மையை சொல்லி தானே ஆகணும்? காமெடி என்று சொல்லி கெட்ட வார்த்தைகளில் பெண்கள் பேசினார்கள். டைரக்டர் சார் இது தான் உங்க டக்கா? வழக்கமான பழி வாங்கும் கதைக்கு எதுக்கு பாலா வேணும்? ஆர்யா முடியை டைரக்டர் ஒரு வழி பண்ணார். விஷால் இன்னும் பாவம். படம் முடியறதுக்குள் கண்ணு வலி வந்துடுச்சு. பாலா இதுவரை எடுத்த படங்களில் கடைசி இடம் இந்த படத்துக்கு தான் தரணும். இதை விட மோசமான படம் இனி மேல் தர மாட்டார் என நம்புவோம்.

எங்கேயும் காதல்

சன் மற்றும் பிரபு தேவா கூட்டணிக்கு இன்னொரு மாபெரும் தோல்வி படம் ! அருமையா பாட்டு போட்டு கொடுத்திருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். கொடுமையான கதையால் அவை அனைத்தும் நாசமாகி விட்டது. காதில் பூ சுற்றும் கதை. ஜெயம் ரவி நடித்து இந்த ஆண்டு வெளி வந்த ஒரே படம்.. இப்படி ஆகிடுச்சு. ஹன்சிகா பார்த்து நம்ம பதிவர்கள் பலர் ஜொள்ளு விட்டனர். ஆனால் படம் பார்த்தா வெறுத்து போயிருப்பாங்க.

யுவன் யவதி

பரத் என்கிற சற்று மார்கெட் உள்ள நடிகர் நடித்ததாலும் , சந்தானம் இருந்ததாலும் ஓரளவு எதிர் பார்ப்பு ஏற்படுத்திய படம். ஆனால் ஒரு வாரம் கூட எந்த தியேட்டரிலும் ஓட வில்லை. இந்த வருடத்தின் மாபெரும் தோல்வி படம் + தயாரிப்பாளரை மட்டையாக்கிய படம் என போட்டி வைத்தால் இந்த படம் tough fight கொடுக்கும்

வெப்பம்

இயக்குனர் கெளதம் மேனன் தயாரிப்பு, பெண் இயக்குனர் இயக்கம் என்பதால் தான் பார்த்தேன். தாதா கதையை இவ்வளவு அறுவையாகவும் சொல்ல முடியுமா? கொடுமைடா சாமி !! இருந்தும் இந்த படத்தை முழுவதும் பார்க்க காரணம் நித்யா மேனன் என்கிற ஹீரோயின்.. ஹிஹி

மாப்பிள்ளை

ரஜினி நடித்த மாப்பிள்ளையே எனக்கு பிடிக்காத படம். அதுக்கு ரீ மேக் வேறா? ஆடு களம், மயக்கம் என்ன மாதிரி அருமையாக நடித்த தனுஷுக்கு இந்த படம் திருஷ்டி பொட்டு. விவேக் காமெடி சிரிப்பு வரலை; சன் டிவியின் மற்றொரு தோல்வி படம்.

நடுநிசி நாய்கள்

இந்த படம் எடுத்த இயக்குனரை என்ன சொல்லி திட்டுவது? படம் வெளி வந்த போதே போதும் போதும் என்கிற அளவு திட்டி விட்டார்கள். நான் விஜய் டிவியில் போட்ட போது தான் பார்த்தேன். பல காட்சிகள் டிவியில் வெட்டி தள்ளி விட்டனர். அப்போதும் பார்க்க கொடுமையாக இருந்தது. கெளதம் மேனன் என்கிற இயக்குனருக்கு ஒரு நல்ல இமேஜ் இருந்தது. அது இந்த படத்தால் சற்று சரிந்தது என்பது உண்மை.

தூங்கா நகரம்

அய்யா அவர்களின் பேரன்,  அய்யா ஆட்சியில் இருக்கும் போது எடுத்த படம். இருந்தும் படத்தை ஓட வைக்க முடியலை. நாலு நண்பர்களை கொண்டு கதை சொன்னாலே படம் ஓடிடுமா என்ன? இயக்குனரே ஒரு நண்பன் பாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு பிளாஷ்பேக்குகள் மேல் என்ன அப்படி ஒரு காதலோ? பிளாஷ்பேக்குக்குள் பிளாஷ்பேக்.. அதற்குள் இன்னொரு பிளாஷ்பேக்.. என படமே பிளாஷ்பேக்குகளில் நகர்கிறது.

தூங்கா நகரம். நம்மை தியேட்டரிலேயே, படம் பார்க்கும் போது தூங்க வைத்த படம்.

விருதகிரி

கேப்டன் இயக்குனர் ஆன படம். காமெடியன் இல்லா விட்டாலும் கேப்டனே அந்த குறையை போக்கினார் . படத்தில் ஒரு நிமிடமே வந்து போகும் நண்டு, சுண்டு கேரக்டர்கள் கூட கேப்டனை வானளாவ புகழ்ந்து பேசுகிறார்கள். வில்லன்களே இவரை புகழும் போது வயிற்றை பிடித்து கொண்டு நாம் சிரிப்பது உறுதி.

சீரியஸ் படம் என்கிற போர்வையில் வந்த சிரிப்பு படம் இது !
*******
மொக்கை படங்கள் லிஸ்ட் பார்த்தாச்சு. இந்த வருடத்தின் சிறந்த படங்களுக்கு இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருங்கள் !
*******
தொடர்புடைய பதிவுகள் : 2011-ன் சிறந்த பத்து பாடல்கள்

Monday, December 19, 2011

ஈரோடு சங்கமம்- ஒரு டயரி குறிப்பு

ஈரோடு சங்கமம் நடக்கும் அதே நாளன்று சென்னை யுடான்ஸ் விழாவும் இருந்ததால் ஈரோடு செல்வதில் தயக்கம் இருந்தது. பின் கடந்த இரு வருடங்கள் தவற விட்டோம், இம்முறையாயவது செல்வோம் என ஈரோடு சென்றேன்.

சனிக்கிழமை மதியம் ரயிலில் கே. ஆர். பி செந்தில், மெட்ராஸ் பவன் சிவகுமார், Philosophy பிரபாகரன், ஆரூர் மூனா செந்தில், ரமேஷ் (KRP செந்தில் தம்பி) ஆகியோருடன் புறப்பட்டோம்.

ரயிலில் ஏறியது முதல் செம அரட்டை. பதிவர்கள் சேர்ந்தால் வேறென்ன பேச்சு… பதிவுலகம் பற்றி தான் !! பதிவர்கள் அனைவர் பற்றியும் பிரித்து மேய்ந்தனர். நிறைய காமெடியான பதிவுலக அனுபவங்கள் பகிரப்பட்டன. அவையெல்லாம் இங்கு கூறாமல் விடுகிறேன்..எழுதி விட்டால், இனி இது மாதிரி தகவல்கள் நம்மை நம்பி சொல்ல மாட்டார்கள் :))

ரயிலில் சுற்றி இருந்தவர்கள் பலருக்கும் ப்ளாக் பற்றி தெரியாவிடினும் எங்கள் பேச்சை சிரிப்புடன் கேட்டு கொண்டு தான் இருந்தனர். நாத்திகம் -ஆத்திகம் என ஒரு விவாதம் கிளம்பியது. KRP செந்தில் நாத்திகம் பற்றி பேசியதும் அங்கிருந்த இளம் பெண்கள் இருவர் (வயது 52 & 56 ) அவருடன் கார சாரமாகவும் ஆணித்தரமாகவும் கடவுள், விதி பற்றியெல்லாம் விவாதித்தனர். மெட்ராஸ் பவன் சிவகுமார் வக்கீல் ஆகியிருக்க வேண்டியவர். செமையாக argue செய்கிறார். வேறு compartment -ல் இருந்து பாதியில் எங்களுடன் வந்து சேர்ந்து கொண்ட ஆரூர் மூனா செந்தில் எதுவும் பேசாமல் இருந்தார்.

"பேருந்து பயணத்துக்கே மூணு பதிவு எழுதினார்.இப்போ ரயில் பயணத்துக்கு எத்தனை பதிவு வர போவுதோ? அவர் இப்போ தலைப்பு தான் யோசிசிட்டுருக்கார். ரயிலில் பெண் பயணிகளுடன் சண்டையிட்ட பதிவர்கள் -ன்னு தலைப்பு வைங்க. ஹிட்ஸ் பிச்சிக்கிட்டு போகும்" ... என ஆரூர் மூனாவை ஓட்டினர்

பதிவர்கள் எது பத்தி பேசினாலும் ஹிட்ஸ், பின்னூட்டம், தலைப்பு மாதிரி சமாச்சாரங்கள் இல்லாமல் பேசுவதே இல்லை. ஐந்து நிமிஷம் பேசினால் இவை எல்லாம் ஓரிரு முறையாவது வந்துடும் !!

மேலும் ரயிலில் மட்டுமன்றி ஈரோடிலும் சாம் ஆண்டர்சன், புரட்சிக்காரன் போன்றவர்கள் பற்றி நிறைய பேச்சு இருந்தது. "அவர் தான் சாம் ஆண்டர்சன் " " ஏம்பா நீதானே புரட்சி காரன்" என்றெல்லாம் அடிக்கடி கேள்விகளும் பேச்சும் இருந்தது

ஈரோடு இறங்கி பல புதிய நண்பர்களை சந்தித்தோம். நான் முதல் முறை சந்தித்த சில நண்பர்கள் பற்றி :

ஈரோடு கதிர்: பல முறை போனில் பேசினாலும் முதல் முறை நேரில் பார்க்கிறேன். மனிதர் காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்.மிக சிறந்த organizer .

சங்கவி: "அண்ணே அண்ணே" என அன்பை பொழிந்தார். நாங்கள் இருந்த வரை பல முறை எங்களை வந்து பார்த்து எல்லாம் சரியா இருக்கா என கேட்டு கொண்டே இருந்தார். இரவு நெடு நேரம் அணைத்து ரூம்களுக்கும் சென்று பேசியவர், இரவு தூங்கினாரா இல்லையா என தெரியலை... காலையும் எங்களை வந்து எழுப்பினார். இவருடன் நீண்ட நேரம் பேசியதில் ஈரோடு பற்றி நிறைய அறிய முடிந்தது

கோபி ராமமூர்த்தி: இலக்கிய சூறாவளி. பெங்களூரில் வசிக்கும் Chartered accountant . கும்பகோணம் காரர். நேரில் பார்க்க போட்டோ வில் இருப்பது போல் இல்லாமல் வித்யாசமாய் இருந்தார். இது பற்றி சிவகுமார் கேட்க " ஆமாம் அது பழைய போட்டோ. ப்ளாகில் பாதி விஷயம் மிகை படுத்தல் தானே? " என சொல்லி சிரித்தார். குறைந்த நேரமே பேசினாலும் அவர் தொழில், அதன் பின்னணி பற்றி பேசி அறிய முடிந்தது.

ஷர்புதீன் : வெள்ளி நிலா என்கிற இதழ் நடத்துபவர். என்னை பார்த்தவுடன் " உங்க ஹைதராபாத் பயண கட்டுரை அப்படியே எடுத்து நான் புக்கில் போட்டேன் " என்றார். மகிழ்ச்சி தான் ! ஆனா "நம்ம எழுத்தை புக்கில் பாத்தால் இன்னும் மகிழ்ச்சியா இருக்குமே. புக் அனுப்பி இருக்கலாமே " என்றேன். சென்னை பற்றி "மிக நெரிசலான ஊர், அதான் கோவை வந்துட்டேன்; வாழ்க்கையை அங்கு என்ஜாய் செய்ய முடியாது" என்று அவர் சொல்லி கொண்டே போக, " ஒரு கம்பனிய விட்டு கிளம்பும் போது அங்கு உள்ள குறையெல்லாம் சொல்லிட்டு அதுனால தான் போறேன் அப்படின்னு சொல்ற மாதிரி சென்னை விட்டு கிளம்பியதும் அங்க உள்ள குறையை சொல்றீங்க; ஆனா சென்னை பத்தி தப்பா பேசினா, எனக்கு கோபம் வரும்" என நான் சொல்ல செம சண்டை வர போகுது என சுற்றி உள்ளவர்கள் காதுகளை தீட்டினார்கள். ஆனால் நாங்கள் அடுத்து வேறு தலைப்புக்கு தாவி, ஒன்றாய் சேர்ந்து மதிய சாப்பாட்டுக்கு போய் விட்டோம்.

ஸ்ரீ, மதுரை: மதுரையிலுள்ள பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளர் ஆக உள்ளார். பழக இனிமையானவர். அதிகம் பேச வாய்ப்பு இல்லை

தமிழ் வாசி பிரகாஷ்: அனைவருக்கும் தெரிந்த பதிவர். எங்கள் அறைக்கு வந்து நெடுநேரம் நட்புடன் பேசிகொண்டிருந்தார்.

நாய் நக்ஸ்: செம ஜாலி ஆன பதிவர். ஏன் இந்த பேர் என்றதுக்கு " நாய் எனக்கு பிடிக்கும். அதனால் முதல் பாதி. நக்கீரன் என் நிஜ பேர், அதை சுருக்கி ரெண்டாம் பாதி" என்றார். விழா மேடையில் "மனோவுக்கு போன் செய்து ஸ்பீக்கரில் போட்டு மைக் அருகே வைத்தார், அப்போது மாணவன் லைனில் வந்து விட்டார்". செம காமெடி ஆக இருந்தது

சீனா ஐயா & அவர் துணைவியார்: சீனா சாரின் மனைவியும் பதிவர் என இதுவரை தெரியாது. அவர் பேசும் போது " சீனா சார் ரத்தம் ஓ நெகடிவ் எனும் அரிய வகை குருப் என்பதால் ஏராளமான முறை ரத்தம் தந்துள்ளார். நள்ளிரவெல்லாம் ரத்தம் கேட்டு போன் வந்தாலும், அலுக்காமல் செல்வார். பத்து பேருடன் பிறந்து சிறு வயதில் படிக்கவே சிரமப்பட்டவர் இப்போது பலரை படிக்க வைக்கிறார்" என்று மேடையில் பேசியது நெகிழ்வாய் இருந்தது.

வானம்பாடிகள் பாலா சார்: பல முறை சந்திக்க நினைத்த நபர். இம்முறை சந்திக்க முடிந்தது. தன் காமிராவில் படம் பிடித்து கொண்டு பிசியாக இருந்தார்

ஆரூர் மூனா செந்தில்: ரயில்வேக்கு செலக்ட் ஆகி சேர காத்திருக்கும் சில மாதங்களில் ப்ளாக் உலகம் வந்ததாகவும் இதில் பல புது நண்பர்கள் கிடைத்துள்ளதாகவும் பேசி கொண்டிருந்தார். எங்க ஊர் காரர்

மெட்ராஸ் பவன் சிவகுமார்: இவருடன் நிறைய பேச, பழக முடிந்தது. புத்தகம் மற்றும் ப்ளாக் நிறைய வாசிக்கிறார் . யாருடைய எந்த பதிவை பற்றி பேசினாலும் அதில் உள்ளதை நன்கு நினைவு வைத்து பேசுகிறார். நைட் டியூட்டி பார்ப்பதால், சனி, ஞாயிறில் எழுதி அப்போதே பதிவு போடுவதாக சொன்னார். வெளி இடங்களுக்கே செல்லாதவன் பதிவுலகம் மூலம் தான் வெளியூர் எல்லாம் வருகிறேன் என்றார். நிறைய தெரிந்து கொள்ளும் ஆர்வமும் நட்பான சுபாவமும் கொண்ட நல்ல இளைஞர்.

Philosophy பிரபாகரன்: எழுத்தில் இருக்கும் நக்கல் நேரில் தெரிய வில்லை. வித்யாசமான ஹேர் ஸ்டையில். பாதி நேரம் முடியை ஒதுக்கி விட்டு கொண்டே தான் பேசுகிறார். தம்பி: Girl friend-க்கு புடவை கிடைத்ததா? :))

C.P. செந்தில் குமார்: மனிதர் துறு துறுன்னு இருக்கிறார். இங்கும் அங்கும் ஓடுகிறார். ஒரு இடத்தில் உட்கார முடியலை. நம்ம ஊர் பதிவர் செமையா கலக்குகிறார் என இவர் தன்னை அறிமுகம் செய்ய மேடை ஏறிய போது ஈரோடு மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். நான் இவருடன் அதிகம் பேச முடியலை.

கே. ஆர். பி செந்தில்: ஏற்கனவே பல முறை சந்தித்திருந்தாலும் இம்முறை நிறைய பழக முடிந்தது. பழக மிக இனிமையானவர். எல்லோருக்கும் சேர்த்து டிக்கட் புக் செய்ததுக்கு கூட காசு வாங்கிக்க மாட்டேன் என அடம் பிடிக்குமளவு நல்லவராய் இருக்கிறார். மாறு பட்ட கருத்துகளையும் சண்டை போடாமல் சிரித்தவாறே சொல்கிறார் .

நிகழ்ச்சி பற்றி நிறைவாய் சில வரிகள்:

பதிவு மற்றும் இணைய உலகில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களை கௌரவிக்கும் விதத்தில் விழா நடந்தது. விருது பெற்றவர்களும், அவர்கள் பேசியதும் என் நினைவில் இருந்து : 
போட்டோ நன்றி:  CP .  செந்தில் குமார்   
1. உண்மை தமிழன்: அங்கீகாரம் நிறைய மகிழ்ச்சி அளிப்பதாக சொன்னவர், இதனால் இனி ஒவ்வொரு பதிவும் 25 பக்கத்துக்கு பதில் 50 பக்கம் எழுதுவேன் என்றார் :))

2. ஜாக்கி சேகர்: இவர் மேடை ஏறும் போதும் பேசும் போதும் நிறையவே கை தட்டல்கள். இணையம் மூலம் தான் தனக்கு அனைத்தும் கிடைத்தது என்று கூறியவர் உணர்ச்சி வசப்பட்டு " விமர்சனம் எல்லாம் என் கால் தூசிக்கு சமம்" என்றதும் பதிவர்கள் நாளை தங்கள் பதிவுக்கு சூடான தலைப்பு ரெடி என குறித்து கொண்டனர்.

3. சீனா ஐயா

4. யுவக்ரிஷ்ணா

5. அதிஷா


6. பால பாரதி (சக பதிவர்களால் பதிவரான தனக்கு இந்த அங்கீகாரம் கிடைப்பது மகிழ்ச்சி என்றார்)

7. தேனம்மை லட்சுமணன் (தன் இரு புத்தகங்கள் இவ்வருடம் வெளியாகிறது. அதற்கு உங்கள் ஆதரவு தேவை என்றார்)

8. வெயிலான் (சேர்தளம் நபர்களால் உழைப்பால் தான் இது கிடைத்தது என்றும் அவர்களுக்கும் இப்பரிசு சேரும் என்றும் சொன்னார்)

9கே. ஆர். பி செந்தில் குமார்: Illegal migration குறித்த sensitive பதிவான பணம் புத்தகத்துக்காகவும், பிற சமூக அக்கறை பதிவுகளுக்ககவும் விருது பெற்றார்

10. ரவிக்குமார் : நாளைய இயக்குனர் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற இளைஞர். "இந்த பரிசுக்கு உரியவனாக என்னை இனி ஆக்கி கொள்வேன்" என்றார் பணிவுடன்.

11. ஜீவ்ஸ், புகை பட கலை, PITS (தமிழில் புகை படக் கலை) நிர்வாகி

12. ஓவியர் ஜீவா

13. சுரேஷ் பாபு

14. இளங்கோவன்

15. மகேந்திரன்

***

ரோடோரம் இருக்கும் மன நிலை குன்றியவர்களையும், முதியவர்களையும் தகுந்த இல்லங்களிலோ, அவர்கள் வீடுகளிலோ சேர்க்கும் மகேந்திரனுக்கு விருது வழங்கப்பட்ட போது,  " இது சாதனை அல்ல, இது என் கடமை. உங்கள் அனைவரின் கடமையும் கூட" என்று பேசி நெகிழ வைத்தார்.

பரிசு பெற்ற 15 பேர் குறித்த விரிவான தகவல் இந்த பதிவில்

பதிவர் செல்வாவின் "மனசு" குறும்படம்  நிகழ்ச்சியில்  வெளியிடப்பட்டது

விழாவை ஈரோடு கதிர், அருள்மொழி மற்றும் மகுடேஸ்வரன் தொகுத்து வழங்கினர்.   

பரிசு பெற்ற ஒவ்வொரு பதிவர் குறித்தும் மிக விரிவான, அழகான குறிப்புகள் தயார் செய்து வீடியோவில் காண்பித்தனர். இதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஈரோடில் ஆண்டு தோறும் புத்தக சந்தை ஏற்பாடு செய்யும் திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் பரிசளித்து சிறப்புரை ஆற்றினார். பின் பரிசு பெற்றோர் ஏற்புரை, பதிவர்களின் அறிமுகம் கலந்துரையாடலுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

திரும்ப வரும் போது அண்ணன் உண்மை தமிழனும், நானும் காவேரி கணேஷின் நண்பர் அன்பழகன் அவர்களின் காரில் இரவே ஊர் வந்து சேர்ந்தோம்.

ஈரோடு நண்பர்களின் அன்பை உபசரிப்பை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது !

பரிசு பெற்றவர்களுக்கும் விழாவை சிறப்பாக நடத்திய ஈரோடு நண்பர்களுக்கும் வாழ்த்துகள் !

Friday, December 16, 2011

ஐ யாம் கலாம் இந்தி பட விமர்சனம்

ஐ யாம் கலாம்’ என்கிற ஹிந்தி படம் சமீபத்தில் பார்த்தேன். முன்னாள் ஜனாதிபதி கலாம் அவர்களால் முன்னேற வேண்டும் என்கிற உந்துதல் ஏற்படும் ஏழைச் சிறுவன் குறித்த கதை.


கதை

சோட்டு என்கிற ஏழை சிறுவன் வறுமை காரணமாக அவனது உறவினரின் டீ கடையில் வேலைக்கு சேர்கிறான். எதையும் பார்த்த உடன் புரிந்து கொள்ளும், கற்று கொள்ளும் திறமை சாலி சோட்டு ! இவன் வேலை பார்க்கும் கடைக்கு அருகிலேயே ஒரு பழைய அரண்மனை உள்ளது. இதில் உள்ள பணக்கார சிறுவன் சோட்டுவுடன் நண்பனாகிறான். பணக்கார சிறுவனின் தந்தை தங்கள் அந்தஸ்துக்கு நிகரானவர்களுடன் தான் பழக வேண்டும் என்று சொன்னதை மீறி சோட்டுவுடன் பழகுகிறான். தனது உடை, பொருட்களை சோட்டுவிற்கு தருகிறான்.

பள்ளி கூடம் செல்லா விட்டாலும் படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறான் சோட்டு. தானாகவே புத்தகங்களை வைத்து வாசிக்கிறான்.

சோட்டு ஒரு நாள் டிவியில் அப்துல் கலாம் பேசுவதை கேட்டு மிக ஈர்க்கபடுகிறான். அவரை போல நானும் பெரிய ஆள் ஆவேன் என்று கூறி தன் பெயரை கலாம் என மாற்றி கொள்கிறான்.

பணக்கார சிறுவனின் வீட்டில் உள்ள வேலை ஆட்கள் சோட்டு மீது திருட்டு பட்டம் சுமத்தி அவனை விரட்டுகின்றனர். மனமுடைந்த சோட்டு தனியே தில்லிக்கு செல்கிறான். கலாமை சந்தித்து கடிதம் தரவும் பேசவும் எண்ணுகிறான்.

சோட்டு திருடன் இல்லை என்பதை அவன் நண்பன் நிரூபிக்கிறான். அனைவரும் டில்லி சென்று சோட்டுவை தேடி கண்டுபிடிக்கின்றனர். தன் மகன் பேச்சால் மனம் மாறிய பணக்கார சிறுவனின் தந்தை, சோட்டு தன் மகனுடன் சேர்ந்து பள்ளியில் படிக்கலாமென்றும், அவன் அம்மா தன் இல்லத்தில் வேலை பார்ப்பார் என்றும் கூறுகிறார். சோட்டு பள்ளிக்கு செல்வதுடன் படம் முடிகிறது.

தொண்ணூறு நிமிட படம் ! பாடல்கள் என்று பெரிதாய் இல்லை. குட்டி பாடல்கள் சில பின்னணியில் வருகின்றன. சோட்டுவாக நடித்தவன் தில்லியை சேர்ந்த ஒரு குடிசை வாழ் சிறுவன் ! ஹர்ஷ் மயார் என்கிற இந்த சிறுவன் மிக இயல்பாக நடித்துள்ளான். அவனது வெள்ளந்தியான சிரிப்பும், எதையும் பாசிடிவ் ஆக எடுத்து கொள்ளும் குணமும் மிகை இன்றி உள்ளது. ஆர்வத்துடன் முயன்றால் எதையும் கற்று கொள்ளலாம் என்பது இவன் பாத்திரம் வழியே சொல்லப்படுகிறது.

சோட்டுவின் கடை முதலாளியாக, அவன் உறவினராக வருபவர் கேரக்டர் மிக சுவாரஸ்யம். இவருக்கு ஒரு வெளி நாட்டு பெண் மீது ஒரு தலை காதல் ! அதற்காக தன் நடை, உடையை மாற்றி கொள்கிறார். அந்த காதல் தோல்வி அடைய அந்த கோபம் சோட்டு மீது திரும்புகிறது.

கடையிலிருக்கும் இன்னொரு வேலை ஆள் தான் படத்தில் சின்ன வில்லன். எப்போதும் சோட்டுவுடன் சண்டையிடுவதும், சோட்டுவின் புத்தகங்களை அடுப்பில் போட்டு எரிப்பதுமாக நம்பியார் வேலை செய்கிறார்.

பணக்கார சிறுவன் நம்ப முடியாத அளவு நல்லவனாக இருப்பது சற்று நெருடுகிறது. அழகாக இருப்பதால், அந்த பாத்திரத்துக்கு இயல்பாக பொருந்துகிறான்.

நிலா மதாப் பண்டா என்கிற இயக்குனர் படத்தை இயக்கி உள்ளார். நிறைய குறும் படங்களை இயக்கிய இவரின் முதல் திரைப்படம் இது. குழந்தைகள் படம் என்கிற விதத்திலும் பாசிடிவ் கருத்துகளை சொன்ன விதத்திலும் நிச்சயம் பாராட்டு பெறுகிறார்.

இந்த படம் இந்த ஆண்டு ஆகஸ்டில் இந்தியாவில் ரிலீஸ் ஆனது. பல உலக திரைப்பட விழாக்களில் திரை இடப்பட்டு வருகிறது. அப்துல் கலாமும் இந்த படம் பார்த்து தன் ஆசிகளை பட குழுவினருக்கு வழங்கினார் என்பது கூடுதல் தகவல்.

என் பன்னிரண்டு வயது மகளுடன் படத்தைப் பார்த்தேன். என்னை விட அவளுக்குப் படம் மிகப் பிடித்திருந்தது ! குழந்தைகளுக்கான இத்தகைய தரமான படங்கள் இன்னும் நிறைய வெளி வர வேண்டும் என்கிற எண்ணத்தைப் படம் தருகிறது !

***
டிசம்பர் 5, 2011  தேதியிட்ட உயிரோசை இதழில் வெளியானது

Wednesday, December 14, 2011

2011: சிறந்த பத்து பாடல்கள்

புத்தாண்டிற்கு இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில் இந்த வருடத்து சிறந்த பாடல்களின் தொகுப்பு இது.

பத்து பாடல்கள் மட்டுமே என்பதால் பிறை தேடும் இரவிலே ( மயக்கம் என்ன)  டியோ டியோ டோலே (அவன் இவன்) உள்ளிட்ட பாடல்கள் லிஸ்டில் இடம் பெறாமல் போகிறது.

சென்ற ஆண்டின் (2010) சிறந்த பத்து பாடல்கள் : இங்கே 
2009-ன் சிறந்த பத்து பாடல்கள்    : இங்கே

1 , 2 , 3 என எந்த ரேங்கிங்கும் இன்றி இந்த வருடத்தின் சிறந்த பத்து பாடல்கள் இதோ..

நீ கோரினால் (180 )

மதன் கார்க்கியின் பாடல் வரிகளுக்கு புது இசை அமைப்பாளர் ஷரத் இசை அமைத்துள்ளார். அட்டகாசமான மெலடி தந்தமைக்கு வெல்டன் ஷரத் !

நீ கோரினால் வானம் மாறாதா?
தினம் தீராமலே மேகம் தூறாதா? என்று ஆண் துவங்க


தீயே இன்றியே நீ என்னை வாட்டினாய்
உன் ஜன்னலை அடைத் தடைத்து ஓடாதே என்று பெண் தொடருவார்.

"நநநநநந " என பாட்டின் துவக்கத்திலும் இறுதியிலும் வரும் ஹம்மிங் Very catchy !

இந்த பாடலின் சிறப்பே மிக வித்யாசமான மெட்டு தான். மெதுவாகவும், பின் திடீரென்று வேகமாகவும் போகும் இந்த பாட்டு.

எனக்கு தெரிந்த பல யூத்துகளின் ரிங் டோனாக இந்த பாடல் இருந்ததே இந்த பாடலின் வெற்றிக்கு சாட்சி !

கேட்க மட்டுமன்றி பார்க்கவும் இந்த பாட்டு நன்றாகவே இருக்கும். Thanks to ஹீரோயின் ப்ரியா ஆனந்த் !
சொட்ட சொட்ட நனைய வைத்தாய் / மாசமா (எங்கேயும் எப்போதும்)

இந்த இரண்டு பாடல்களையும் சேர்த்தே தான் சொல்ல வேண்டி உள்ளது. மாசமா பாட்டு மிக எளிமையான மெட்டு, இசை, பாடல் வரிகள். But very attractive and effective ! தோள் அசைப்பை வைத்தே இந்த பாட்டை மிக மிக ரசிக்கும் விதத்தில் படமாக்கிய குழுவிற்கு ஒரு பூங்கொத்து !

சொட்ட சொட்ட நனைய வைத்தாய் ரொம்ப அழகிய மெலடி. கேட்கும் போதே மனதை என்னமோ செய்கிறது. இவை தவிர "கோவிந்தா..கோவிந்தா" என இன்னொரு ஹிட் பாடலையும் தந்த புது இசை அமைப்பாளரிடம் அடுத்தடுத்த படங்களில் இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம் !

யாரது (காவலன்)

விஜய் நடித்து இவ்வருடம் வெளி வந்த இரு படங்களிலும், படம் பார்த்த பிறகு பாடல்கள் ரொம்பவே பிடித்தது. அவற்றில் ஒரே பாட்டை சொல்ல வேண்டுமெனில் இந்த பாட்டை தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஜனவரியில் வந்த இப்பாட்டை வருடக்கடைசி வரை, தொடர்ந்து மிக அடிக்கடி கேட்கிறேன். அப்படி ஏதோ இந்த பாட்டில் இருக்கிறது. குறிப்பாக மெட்டு ....Beautiful ! படமாக பார்க்கும் போதும் விஜய் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும் படி உள்ளது. ஏழாம் அறிவு - இன்னும் என்ன தோழா

படம் வெளியாகும் முன்பே அனைவர் மனதிலும் இடம் பிடித்த பாடல் இது. உலகெங்கும் உள்ள ஈழ தமிழர்களுக்கு இந்த பாட்டை சமர்ப்பிப்பதாக ஹாரிஸ் ஜெயராஜ் சொல்லியிருந்தார். பாடல் வரிகளும் அவர்களுக்கு மிக பொருந்துவதாகவே இருந்தது. "வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே" என்கிற வரிகளோடு அனைவராலும் ஒன்ற முடிந்தது.

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்!


விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?படமாக்கிய விதத்தில் சற்று ஏமாற்றம் தான் எனினும், இத்தகைய நல்ல பாடலை தந்தமைக்கு ஹாரிஸ் ஜெயராஜ், பா. விஜய் மற்றும் முருக தாசுக்கு நன்றி !!

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ (எங்கேயும் காதல்)

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி
பாடல் வரிகள்: மதன் கார்க்கி

ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான மெலடி. டிபிகல் ஹாரிஸ் பாட்டு தான் என்றாலும், ஹாரிஸ் எப்படி மியூசிக் போட்டாலும் அநேகமாய் எனக்கு பிடித்து விடுகிறது.

இந்த பாட்டின் மெட்டு ஒரு ஊஞ்சல் போல் அங்கும் இங்கும் ஊசலாடும். அது தான் பாட்டின் அழகே. பாட்டிற்கு பின்னணி இசையில் தபேலா போன்ற வாத்தியங்கள் உபயோகம் செய்துள்ளது சற்று வித்யாசமாக உள்ளது. ஹரீஷ் ராகவேந்திரா மற்றும் சின்மயி பாடிய இந்த அருமையான பாட்டை கேட்டு பாருங்கள்விழிகளிலே விழிகளிலே (குள்ள நரி கூட்டம்)

இசை செல்வகணேஷ்
பாடல் ஆசிரியர்: நா. முத்து குமார்
பாடியவர்கள் சின்மயி & கார்த்திக்

இந்த பாடல் கேட்க கேட்க தான் பிடிக்க ஆரம்பித்தது. குறிப்பாய் படம் பார்த்ததும் ரொம்ப பிடிக்க ஆரம்பித்தது. ஹீரோயின் ரம்யா நம்பீசனின் கண்களும், குட்டி குட்டி சிரிப்பான சம்பவங்களும் சேர்ந்து இப்பாடலை நன்கு என்ஜாய் செய்ய வைக்கிறதுஅமளி துமளி (கோ)

மற்றொரு ஹாரிஸ் ஜெயராஜ் மெலடி. இந்த பாட்டின் மெட்டு ஒரே கோட்டில் இல்லாமல் வெவ்வேறு விதமாய் செல்வது தான் பாடலை மிக ரசிக்க வைக்கிறது. KV ஆனந்த் இந்த பாடலை இது வரை நாம் பார்த்திராத, மிக அரிதான, eye catching லொகேஷன்களில் படமாக்கியிருந்தார். இதே படத்தின் என்னமோ ஏதோ தான் பலருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். எனக்கும் அந்த பாடல் பிடிக்கும் என்றாலும், இந்த பாடலில் இருக்கும் ஏதோ ஒரு அழகு இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது !
ஆரிரோ.. ஆராரிரோ (தெய்வ திருமகள்) 

இந்த படமே ஒரு "Copy cat" படம் என நிறையவே கோபம் உள்ளது. ஆனாலும் இந்த பாட்டை ரசிக்காமல் இருக்க முடிய வில்லை. காரணம் பாட்டு அப்பா -பெண் உறவை பற்றி சொல்வதால்.  ! வெறும் டூயட்களே வரும் திரை உலகில் இத்தகைய பாடல்கள் மிக அபூர்வம் தான் ! எனக்கும் என் பெண்ணுக்கும் மிக பொருந்துவதால் இந்த பாடல் ரொம்பவே ஸ்பெஷல். 

அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரமானதே
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன் உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே

கேட்கும் போதே சில நேரம் நமக்கும் விழிகளில் ஈரம் வர வைக்கும் வரிகள் !இதே படத்தில் வரும் "விழிகளில் ஒரு வானவில்  " கேட்க அல்ல, பார்க்க மிக பிடித்த பாடல். :))

சார காத்து (வாகை சூட வா)

இந்த வருடம் தேர்ந்தெடுத்துள்ள பத்து பாடல்களில், இந்த பாடலையும் சேர்த்து எத்தனை பாடல் சின்மயி பாடியது பாருங்கள் ! உண்மையில் வரிசை படுத்தும் போது தான் சில பாடல்கள் சின்மயி பாடியது என்பதையே அறிந்தேன். தமிழில் டாப் பாடகிகளில் சின்மயி நிச்சயம் செம உயரத்தில் இருக்கிறார் ! இந்த பாட்டும் சரி படமாக்கிய விதமும் சரி செம அழகு. குறிப்பாக ஒளிப்பதிவு.. மீன் துள்ளி நீரில் விழுவதை ரொம்ப அழகாய் காட்டிய ஒளிப்பதிவாளர் யார்னு தெரியலை. Very Well done !அய்யய்யோ நெஞ்சு அலையுதடி / யாத்தே, யாத்தே (ஆடுகளம்)

இசைக்கு வயது கிடையாது என்பதை SPB இந்த வருடம் இரண்டு பாடல்கள் மூலம் மீண்டும் உறுதி படுத்தினார். தன் மகன் SPB சரணுடன் இணைந்து பாடிய இந்த பாட்டு அட்டகாசம். பாட்டில் மெட்டு, மென்மையான குரல், உறுத்தாத இசை என அனைத்துமே அற்புதமாக உள்ளது. ஆண் குரலில் எது SPB , எது சரண் என்று பிரித்து அறிய முடியா விட்டாலும், பாடலை ரசிப்பதை அது தடை செய்ய வில்லை. பாடலை வெற்றி மாறன் படமாக்கிய விதமும் செம கியூட். தனுஷ் சாப்பிட்டு முடித்து விட்டு தன் சட்டையில் ஈர கையையும், வாயையும் துடைத்து கொள்ள, அதை பார்க்கும் ஹீரோயினும் தயங்கியவாறு தன் உடை மேல் கையை துடைத்து கொள்வது கவிதை.இதே ஆடு களத்தில் " யாத்தே யாத்தே" பாட்டும் கேட்க மட்டுமன்றி பார்க்கவும் அழகாக இருந்தது.
***
உங்களுக்கு பிடித்த பாடல் இதில் இருந்தால் சொல்லுங்கள். இல்லா விடினும், உங்களுக்கு பிடித்த விடுபட்ட பாடல் எது என்பதை குறிப்பிடலாம் !
***
அடுத்தடுத்த வாரங்களில் வர இருக்கும் புத்தாண்டு சிறப்பு பதிவுகள்:

2011- சிறந்த பத்து தமிழ் படங்கள்

பதிவுலகம் 2011

டாப் 10 மொக்கை படங்கள் - 2011

Monday, December 12, 2011

வானவில்: மயக்கம் என்ன.. உங்களில் யார் பிரபு தேவா..?

பார்த்த படம்: மயக்கம் என்ன


விமர்சனங்கள் நிறைய படித்ததால் அதிக எதிர்பார்ப்பு இல்லை. அதனாலோ என்னவோ படம் ஓகே என்கிற அளவு பிடித்தது. குறிப்பாக தனுஷ் நடிப்பு .. அருமை. தனுஷ் என்கிற நடிகர் நினைவுக்கு வராமல் அந்த பாத்திரம் தான் பெரும்பாலும் தெரிவது ஆச்சரியம் ! ரிச்சாவும் கூட புது முகம் என தெரியாத அளவு நன்கு நடித்துள்ளார். செல்வராகவன் தான் சற்று சொதப்பி விட்டார்.

" Follow your passion " என்கிற நல்ல கருத்தை சொல்ல வந்தவர், நண்பனின் காதலியை இன்னொரு நண்பன் காதலித்து மணப்பதுகெல்லாம் ஏன் போக வேண்டும்? முக்கிய விஷயத்துக்கு இது பெரிய diversion ஆக அமைந்து விட்டது. இப்படி நடப்பதே இல்லை என்பதில்லை. இதையெல்லாம் சினிமாவில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்படி முற்போக்காக ( !!) கதை சொன்னவர் கல்யாணம் ஆன பிறகு ஹீரோயின் புடவை மட்டுமே கட்டுவதாக காட்டுவது ஏனோ? அப்போது முற்போக்கு என்ன ஆனது? ஹீரோயினுக்கு அம்மா, அப்பா கிடையாதா? இப்படி இயக்குனரிடம் கேட்க எவ்வளவோ உண்டு.

செல்வராகவன் பழைய படங்களை விட, செக்ஸ் சமாச்சாரங்கள் குறைவாக இருப்பது ஆறுதல். படம் முழுதும் பார்க்க மிக முக்கிய காரணம் தனுஷ் நடிப்பும், GV பிரகாஷின் இசையும் தான் ! இருவரையும் அவசியம் பாராட்ட வேண்டும்.

விகடனில் கம்பனி செக்ரட்டரி படிப்பு குறித்து

விகடனின் யூத் விகடன் இணைய தளம் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. இதில் வீடுதிரும்பலில் வெளியான "அன்னதானம் - சில அனுபவங்கள்" குட் ப்ளாக்ஸ் பகுதியில் வந்துள்ளது.

மேலும் கம்பனி செக்ரட்டரி படிப்பு குறித்து நல்ல பதிவொன்று வெளியாகியுள்ளது. இதிலிருந்து சில பகுதி உங்கள் பார்வைக்கு

"என்ஜினீயரிங் படித்த பிறகும் வேலையில்லாதவர்கள் உண்டு. ஆனால், கம்பெனி செகரட்டரிஷிப் படித்து வேலையில்லாதவர்கள் இல்லை. அது மட்டுமல்ல, இன்னும் எத்தனை பேர் வந்தாலும் இப்படிப்பிற்கு வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது" என்கிறார் தி இன்ஸ்டியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியாவின் தென்மண்டல தலைவர், பி.ரவி.

"இந்தியாவில் கம்பெனி செகரட்டரி தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த படிப்பு பற்றி பல மாணவர்களுக்கு தெரிவதில்லை".

"வீட்டில் இருந்தே இந்த படிப்பை படிக்கலாம். ஆரம்ப நிலை, நிர்வாக நிலை, தொழில் நிலை என்று மூன்று வகையாக இந்த படிப்பு உள்ளன. இளநிலை பட்டம் பெற்றவர்கள், நேரடியாக நிர்வாக நிலை படிப்பில் சேரலாம். மூன்று ஆண்டுகளில் இந்த படிப்பை முடித்துவிடலாம்.இதற்கு ரூ.30 ஆயிரம் மட்டும்தான் செலவாகும். இந்த படிப்பை முடித்தவுடனே, ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் வரை சம்பளம் தர நிறுவனங்கள் காத்திருக்கின்றன".

முழுவதும் வாசிக்க இங்கே செல்லவும்

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு

சென்னையில் கடந்த சில காலமாக கடும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது. இது குறித்து சில மாதங்களுக்கு முன் ஜூனியர் விகடனில் கட்டுரை வந்தது. அப்போது இண்டேன் நிறுவன அதிகாரிகள் பிரச்சனையை கவனித்து வருவதாகவும், விரைவில் நிலைமை சரியாகும் என்றும் சொல்லி இருந்தார்கள். ஆனால் பல மாதங்களாகியும் நிலைமை சீராக வில்லை. கேஸ் சிலிண்டர் புக் செய்தால் கிடைக்க 45 நாட்களுக்கு மேல் ஆகிறது ! இப்படி ஆனால் என்ன செய்வது? பல வீடுகளில் கேஸ் சிலிண்டர் 30 நாள் போல் தான் வரும். புக் செய்தால் கிடைக்கவே 45 நாள் ஆனால் மக்கள் பாடு எவ்வளவு திண்டாட்டம் என்று பார்த்து கொள்ளுங்கள்.

இவ்வளவு ஆகியும் நம் மக்களிடம் எந்த மாறுதலும் இல்லை. பத்து பேர் சேர்ந்து கடைக்கு முன் கத்துவதில்லை. ஒரு பொது நல வழக்கு பதிவு செய்து இண்டேன் நிறுவனத்தை கோர்டுக்கு இழுக்க வில்லை. பொறுமையின் திருவுருவமாக உள்ளனர் சென்னை மக்கள்.

பலரும் வீடுகளில் இண்டக்ஷன் அடுப்பு வாங்கி உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். சிலிண்டர் டெலிவரி ஆன மறு நாளே அடுத்த சிலிண்டருக்கு புக் செய்து விடுகிறார்கள். இதனால் வேறு டிமாண்ட் அதிகரிக்கும். இந்த பிரச்சனை எப்படி,எப்போது சரியாகும் என தெரியவில்லை.

சேவாக்கின் ரெட்டை சதம்

எந்த விஷயமும் முதலில் செய்வது தான் கடினம். நூறு மீட்டர் ஓட்ட பந்தயத்தை முதலில் பத்து நொடிக்குள் ஓட முடியாது என்று நினைத்தனர். முதலில் ஒரு நபர் ஓடி சாதனை செய்த பின் பலரும் பத்து நொடிக்குள் ஓடி முடித்தனர். அது போல தான் ஒரு நாள் போட்டியில் இருநூறு ரன் என்பது முடியாத காரியம் என நினைத்திருக்க, சச்சின் முதலில் அந்த சாதனை செய்தார். அதனை சேவாக முறியடித்தது அட்டகாசம் ! சேவாக எந்த மேட்ச் ஆடினாலும், அவர் அவுட் ஆகும் வரை போர் அடிக்காமல் நிச்சயம் பார்க்கலாம்.  ஒரு நாள் போட்டியில் 219 ரன்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல. இன்னொரு நல்ல ஓபனிங் பேட்ஸ்மனால் மட்டுமே இந்த சாதனையை முறியடிக்க முடியும்.

சேவாகின் அந்த ஆட்டத்தை பலரும் ரிச்சர்ட்ஸ் உடன் ஒப்பிடுகிறார்கள். ஆம். தவறே இல்லை. ரிச்சர்ட்ஸ் சேவாக் இருவருமே King of Entertainment  தான் !

போஸ்டர் கார்னர்


உங்களில் யாரும் ஆக வேண்டாம் பிரபு தேவா

விஜய் டிவியில் " உங்களில் யார் பிரபு தேவா- சீசன் டூ" ஆரம்பிக்கிறது. இதற்கான விளம்பரம் அடிக்கடி வருகிறது. அந்த பாட்டில் " உங்களில் யார் பிரபு தேவா?" என அடிக்கடி கேட்கும் போதே கடுப்பாக வருகிறது. அவர்கள் நினைப்பது, பிரபு தேவா மாதிரி அடுத்த டான்சர் யார் என்கிற அர்த்தத்தில். ஆனால் பிரபு தேவா என்றால் இப்போது நினைவுக்கு வருவது.. காதலித்து ஒரு பெண்ணை மணந்து கொண்டு, மூன்று குழந்தைகள் பெற்ற பின், அவரை ஒதுக்கி விட்டு, ஒரு நடிகையின் பின் போனது தான். இவர் தான் நமக்கு ஒரு Idol-ஆ? இவரை போல் தான் பிறரும் ஆகணுமா? டான்சர்கள் பிரபு தேவா மாதிரி நன்கு ஆடட்டும். ஆனால் அவரை போல் ஒரு குடும்பத்தை அழிக்க கூடாது என நினைவில் வைத்து கொள்ள வேண்டும். பெண்களின் கண்ணீருக்கு நிச்சயம் எந்த ஒரு மனிதரும் ஒரு நாள் விலை கொடுத்து தான் ஆக வேண்டும் !!

புத்தாண்டு சிறப்பு பதிவுகள்

நம் ப்ளாகில் 2011ஆம் ஆண்டு முடிவதை ஒட்டி பல பதிவுகள் தயாராகி வருகின்றன. சினிமா, பதிவுலகம் என பலவற்றிலும் இந்த ஆண்டை திரும்பி பார்க்கிற பதிவுகள் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு வெளியாகும். 

Saturday, December 10, 2011

வடிவேலு காமெடி:அசத்தல் சீன்கள்- டயலாக் & வீடியோ

வடிவேலு காமெடி சீன்களில் குறிப்பிட்ட சில பார்த்தால் விழுந்து விழுந்து சிரிக்கலாம். அப்படி எப்போது பார்த்தாலும் சிரிக்கும் சில காட்சிகளை இங்கே வீடியோவுடன் பகிர்ந்துள்ளேன்.

**
நேசம் புதுசு

இந்த படம் பெயர் சொன்னால் யாருக்கும் தெரியாது. ஆனால் இதில் ஒரு டயலாக் சொன்னால் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிஞ்சிடும் " பொண்ணை கைய பிடிச்சு இழுத்தியா?"

வடிவேலு மிக அதிக மக்களுக்கு ரீச் ஆனது இந்த காமெடியில் தான் என நினைக்கிறேன்தலை நகரம்

"ஒன்னு.. ரெண்டு.. மூணு"

"என்னமோ மூணு அடிக்கு மேலே அடிச்சா திருப்பி அடிக்கிற மாதிரி என்னுறே"

"ஏன்யா.. வர்றவன் போறவன் எல்லாம் ஆளுக்கு எதோ கொஞ்சம் அடிச்சா பரவாயில்ல.. .. இந்த உடம்பு எவ்வளவு அடி தாங்கும்னு நான் கணக்கு வச்சிக்க வேணாமா பெரிய பெரிய ரவ்டியால்லாம் என்னை அடிச்சிட்டு அவன் கை அடிஞ்சு போய் கெடக்குறான் ............என்ன கிளம்பிட்டீங்க? "

"ச்சே .. உன்னை யார்டா அடிப்பா?"

" இப்ப தான் புரிஞ்சுதா late pick up -டா நீ. "

****

"நான் ஜெயிலுக்கு போறேன்.. ஜெயிலுக்கு போறேன் .. ஜெயிலுக்கு போறேன்.. நானும் பெரிய ரவுடி"

****
"பாடி ஸ்டிராங்கு... ஆனா பேஸ்மெண்டு வீக்கு"


***********
மனதை திருடி விட்டாய்

" Sing in the rain.. I am swaing in the rain"


" துபைய்ல்லேந்து என் தம்பி மார்க் போன் பண்ணான்.. business-ல after all 20 crores loss-ஆம்….ஏய்.. Money comes today.. Goes tomorrow -யா"

********
போக்கிரி:

(டீ கடையில்) " முடிஞ்சுருசிள்ள.. எல்லோரும் போயிடுங்க.. ஒருத்தரும் நிக்க கூடாது.."

"Be careful………..

"…...ஏய்"

"நான் என்னை சொன்னேன்"


*******************
மருதமலை

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத காமெடி இது. எனக்கு மிக பிடித்தது வடிவேலுக்கு ஹீரோ மாதிரி தரும் Introduction சீன். அப்புறம் ஒரு அடியாள் வடிவேலுவிடம் போலிஸ் ஸ்டேஷன் வந்து "என்னை நியாபகம் இல்லை? நான் உங்களை அடிச்சிருக்கேனே? " என பேசும் சீன். Hilarious !!தொட்டால் பூ மலரும்

" ஏன்யா வண்டிய இப்படி உருட்டுரே?"

" Traffic-ல மெதுவா தான் தம்பி போவோணும்"

" Traffic-ஆ? Road-யே காலியா கிடக்குது.. "

"நான் நேத்து நடந்ததை சொன்னேன்".

"நல்லா நடந்துச்சு.. பாத்து ஓட்டு"

"ஒரே பனி மூட்டமால்ல இருக்குது"

" பனி மூட்டமா? பங்குனி வெயில் பல்லை இளிசிடு அடிக்குது.. நீ வேற"

"தம்பி.. நீங்க MGR மாதிரி தக தக-ன்னு இருக்கீங்க... "

"MGR மாதிரியா? MGR-ஐ முன்ன பின்ன பாத்துறுகியா நீ?"

" பொதுவா சொன்னேன் "

.." தம்பி ஆ வுண்ணா மாநாடு-ன்னு கூட்டம் கூட்டமாள்ள கிளம்பிடுராங்கே.."

" மாநாடா?"

"அதோ ஒரு கூட்டமே மஞ்சள் கொடியோட வருதே"..

"யோவ் அது Lorry-யா"

" Lorry-யா????"

"தம்பி.. லாரி போயிடுச்சா.. நாம போகலாமா"***
அரசியலால் ஒதுங்கி இருக்கும் வைகை புயல் மீண்டும்
வீசி நம்மை மகிழ்விக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு !

Friday, December 9, 2011

எழுத்தாளர் சுஜாதாவின் சொர்க்கத்தீவு

சொர்க்க தீவு என்கிற சுஜாதா நாவல் சமீபத்தில் (மீண்டும்) வாசித்தேன். சுஜாதாவின் எழுத்துக்கள் என்றும் இளமையானவை. சொர்க்க தீவும் இதே விதம் தான்.

கதை


அய்யங்கார் என்கிற சென்னையை சேர்ந்த கணினி இஞ்சினீயர் சில நபர்களால் நைச்சியமாக பேசி, தனி விமானத்தில் கடத்தப்படுகிறார். அவரை கடத்தி, வெளி உலகத்துக்கு தெரியாத ஒரு தனி நாட்டிற்கு அழைத்து செல்கிறார்கள். அந்த நாட்டை நிர்வகிக்கும் சத்யா என்கிற நபரை அவர் சந்திக்கிறார். அவர் தங்கள் கணினி வேலை செய்ய வில்லை என்றும் அதை சரி செய்யவே அவரை அழைத்து வந்ததாகவும் சொல்கிறார். அய்யங்காருக்கு தன்னை கடத்தி வந்ததில் கோபம் இருந்தாலும் தனக்கு நன்கு தெரிந்த கணினி சரி செய்யும் வேலை என்பதாலும் தப்பி செல்ல வேறு வழி இல்லாததாலும் ஒப்பு கொள்கிறார்.

அந்த நாட்டில் பல விஷயங்கள் விநோதமாக உள்ளன. அவர்கள் தமிழ் பேசுகிறார்கள் எனினும் பல வார்த்தைகளுக்கு அவர்களுக்கு அர்த்தம் புரிய வில்லை. உதாரணமாய் செக்ஸ், அப்பா, அம்மா போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு தெரியவில்லை !

ஒரு நாள் அய்யங்கார் தங்கிய அறைக்கு ஒரு போன் வருகிறது. அதில் ஒரு குரல் "அவர்கள் சொல்வதை செய்யாதே" என கூறுகிறது. அப்படி பேசிய நபரை ஒரு நாள் பீச்சில் இரவில் சந்திக்கிறார் அய்யங்கார். கெளதம் என்னும் அந்த நபர் "சத்யா அனைவருக்கும் மருந்து கொடுத்து உணர்வுகளை மறக்கடிப்பதாகவும், தனக்கு குடுக்கும் மருந்தில் தவறிருந்ததால் தன் உணர்வுகள் விழித்து கொண்டன என்றும் சொல்கிறார். மேலும் இயற்கைக்கு மாறாக இவர்கள் செய்வது தவறு என்றும் அய்யங்கார் கணினியை ரிப்பேர் செய்து விட்டால், மனிதர்கள் விழித்து கொள்வார்கள் என்றும் கூறுகிறார். ஆனால் இப்படி சில நபர்கள் இருப்பது சத்யாவிற்கு தெரிய வர அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். அய்யங்கார் கணினியை சரி செய்து விட்டு சென்னை கிளம்புகிறார். விமானத்தில் இருக்கும் போது கடைசியாக கதை வாசிக்கும் நமக்கு மட்டும் இப்படி சொல்கிறார்

"நான் கணினியில் ஒரு லேபிளை மாற்றி விட்டேன். அதனால் அனைத்து மக்களுக்கும் கொடுக்கிற மருந்து அடுத்த ஒரு மாதம் வேலை செய்யாது. அனைவரும் விழித்து கொள்வார்கள்" என்று!

வழக்கமான சுஜாதா கதை போல், அந்த விழிப்புணர்வு நிச்சயம் நடக்குமா, சத்யா அதை கண்டுபிடித்து சரி செய்துவிடுவாரா என்கிற யோசனையுடனும், கேள்விகளுடனும் கதையை முடிக்கிறோம் நாம்.
********
கதை எழுதப்பட்ட வருடம் 1971 ! இதை படிக்கும் மனிதர்களில் பலரும் அப்போது பிறந்திருக்க கூட மாட்டார்கள் ! அப்போதே கணினி பற்றி இவ்வளவு விரிவாகவும், கணினி ஆட்சி செய்ய போகிறது என்றும் எழுதி உள்ளார் சுஜாதா !

புத்தகத்தை கையில் எடுத்தால் அடுத்த ஓரிரு மணி நேரம் நம் அனைத்து கவலைகளையும் மறந்து விட்டு வாசித்து முடித்து விட்டு தான் கீழே வைக்கும் விதத்தில் எழுத பட்டுள்ளது.

சுஜாதா எல்லா புத்தகத்திலும் முன்னுரை அல்லது விளக்கம் தருபவரில்லை. ஆனால் முன்னுரையில் , புத்தகம் வெளி வந்த போது பலரும் ஆங்கில நாவல்களில் இருந்து எடுக்க பட்டதாக சொன்னதாகவும், அது எப்படி உண்மை இல்லை என்றும் சொல்கிறார். மேலும் தான் எழுதிய முதல் சயின்ஸ் பிக்ஷன் கதை இது தான் என்கிறார்.

அய்யங்கார் என்கிற கணினி இஞ்சினியர் பாத்திரத்துக்கு நான் சுஜாதாவை தான் கற்பனை செய்து கொண்டேன். இப்படி நினைக்க ரொம்ப வேடிக்கையாக இருந்தது.

நாவலில் சில சுவாரஸ்யங்கள்:

அந்த நாட்டில் வாழும் எல்லோருக்கும் இரு எழுத்து பெயர்கள் தான். சத்யா என்கிற தலைவருக்கு மட்டுமே மூன்றெழுத்து பெயர். இவர்களை எதிர்க்கும் புரட்சி காரர்கள் முதலில் செய்வது தங்கள் பெயரை நான்கெழுத்தாக மாற்றி கொள்வது தான் ! எதிர்ப்பை காட்ட ஒரு குறியீடு !

பிறப்பு, இறப்பு இரண்டையுமே அங்கு கண்ட்ரோல் செய்கிறார்கள். இயல்பான செக்ஸ் கிடையாது. மனிதர்களின் உணர்வுகள் மழுங்கடிக்க படுவதால் அந்த ஆசை அவர்களுக்கு இல்லை. 54 வயதானால் மனிதர்களை கொன்று விடுகிறார்கள். (நமக்கும் தூக்கி வாரி போடும் இடம் இது !)

உள் வட்டம், வெளி வட்டம் என இரு பிரிவுகள் உண்டு. சத்யா மற்றும் அவரை சார்ந்தவர்கள் உள் வட்டம். இவர்கள் புகைக்கலாம். பெண்களுடன் உடலுறவு வைத்து கொள்ளலாம். (நம்ம ஊர் அரசியல் வாதிகள் வழக்கில் கைதாகும் வரை மற்ற எந்த சட்டங்களுக்கும் உட்படாமல் இருப்பார்களே அந்த மாதிரி !!) மற்ற மக்கள் எல்லாரும் வெளி வட்டம். உள் வட்ட ஆண்கள் பிற பெண்களை தங்களுக்கு வேண்டிய படி உபயோகிக்கிறார்கள். இது குறித்து எந்த உணர்வும் இன்றி அந்த பெண்கள் சம்மதிக்கிறார்கள் !

பல இடங்கள் சுஜாதா முத்திரையுடன் வாய் விட்டு சிரிக்கும்படி இருந்தது. ஆனால் அதை இங்கே சொன்னால் நன்றாக இராது . கதையுடன் சேர்த்து படிக்க தான் சுவாரஸ்யமே !

இந்த கதையை சிலர் சினிமாவாக எடுக்க விரும்பினர் என்று சுஜாதா சொன்ன நியாபகம் ! நல்ல வேளை படமாக வில்லை !

வாய்ப்பு கிடைத்தால் இந்த வித்தியாச கதையை வாசித்து பாருங்கள் !!

திண்ணை நவம்பர் 28 தேதியிட்ட இதழில் வெளியானது. 

Wednesday, December 7, 2011

ஒஸ்தி-யின் ஒரிஜினல் -டபாங் (ஹிந்தி ) விமர்சனம்சமீபத்தில் சல்மான் கான் நடித்த டபாங்க் பார்த்தேன். இதுவே தமிழில் சிம்பு நடித்து "ஒஸ்தி" யாக வர போகிறது ! டபாங்க் படம் அருவா புகழ் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அச்சு அசல் மசாலா தமிழ் படம் பார்த்த மாதிரியே இருந்தது. திரைக்கதை, வசனம், சண்டை காட்சிகள் என அனைத்தும் அப்படியே ஒஸ்தியில் உபயோகிப்பார்கள் என்பது சர்வ நிச்சயம்.

கதை

ஹீரோ சிறுவனாக உள்ளதிலிருந்து படம் துவங்குகிறது. சல்மானின் தந்தை இறந்த பின், தாய் மறுமணம் செய்து கொள்கிறார். புது தந்தை மற்றும் தம்பியை சிறுவன் சல்மான் மனம் ஏற்று கொள்ள வில்லை. அவர்களை முழுவதுமாய் வெறுக்கிறான். சல்மான் வளர்ந்து போலிஸ் ஆக, தம்பியோ வெட்டியாய் ஊர் சுற்றுகிறார். லோகல் அரசியல் வாதி சல்மான் தாயாரை கொல்ல (அவர் தான் கொன்றார் என கிளை மாக்சில் தான் தெரிகிறது), ஹீரோ எப்படி பழி வாங்கினார், தந்தை மற்றும் தம்பியுடன் எப்படி இணைந்தார் என்பதே மீதி கதை. இதனிடையே அண்ணன்-தம்பி இருவருக்கும் தனித்தனி காதல் டிராக், கொள்ளையனிடம் கொள்ளை அடிக்கும் சல்மான், அவரிடம் இருந்து பணத்தை லவட்டும் அவர் தம்பி.. என கிளை கதைகள் ..

பொதுவாய் இந்தி படங்கள் சற்று பெரிய படங்களாய், அதிக நேரம் ஓடுவதாய் இருக்கும். இந்த படமோ சின்ன படம். ரெண்டு மணி நேரத்திற்கு மிக சில நிமிடங்கள் மட்டுமே கூடுதல் !

வித்யாசமாக எதுவும் இல்லா விட்டாலும் மசாலா படம் என்பதால் ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்றது. செம கலக்ஷன் ! 42 கோடியில் தயாரிக்க பட்டு, 213 கோடி சம்பாதித்ததாக விக்கிபீடியா சொல்கிறது. Best Popular Film Providing Wholesome Entertainment என்கிற கேட்டகரியில் தேசிய விருது கூட கிடைத்தது ! தவிர பிலிம் பேர் விருதுகளில் எக்கச்சக்கமாய் விருதுகளை அள்ளியது !

சல்மான் நல்லதும் கெட்டதும் கலந்த போலிஸ் பாத்திரம்.. இத்தகைய பாத்திரங்கள் சீயான் விக்ரம் நடிச்சு சாமியிலேயே நாம் பார்த்துட்டோம். கூலிங் க்ளாசை சட்டை காலரின் பின்னே மாட்டி கொள்கிறார் (ஸ்டெயில்!) சண்டை, டான்ஸ் என ஹீரோ என்னென்ன செய்யணுமோ செவ்வனே செய்கிறார் !

ஹிந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா ஹீரோயினாக இப்படத்தில் அறிமுகம் ஆனார். முதல் படம் என்கிற விதத்தில், நல்ல நடிப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

டிம்பிள் கபாடியா தான் அம்மா ! பாபியில் பார்த்த டிம்பிளா இது ! ம்ம் காலத்தின் கோலம் !

அநேகமாய் ஹிந்தியில் தாரே ஜமீன் பர், மை நேம் இஸ் கான் போன்ற
நல்ல படங்கள் தான் தேர்ந்தெடுத்து பார்ப்போம்.இப்படி ஒரு மசாலா படம் பார்த்தது.. வித்யாசமாக இருந்தது. இதே மாதிரி கெட்ட போலிஸ் கதைகள் நாம் ஏற்கனவே நிறைய பார்த்ததால், தமிழில் எந்த அளவு ஹிட்டாகும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

சல்மான் நடித்த ரோலில் சிம்பு நடிப்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. மற்ற ரோல்களை பொறுத்தவரை, ஹீரோயினாக ரிச்சா (மயக்கம் என்ன?) தம்பி ரோலில் ஜித்தன் ரமேஷ், அவர் ஜோடியாக சரண்யா மோகன் ஆகியோர் நடிக்க, இந்தி வில்லன் சோனு அதே பாத்திரத்தை தமிழிலும் செய்து ஹீரோவிடம் அடி வாங்கி பறந்து பறந்து கீழே விழ போகிறார்.

டிரைலர் பார்த்த வரை ஒரிஜினலுக்கு மிக உண்மையாக தான் எடுத்துள்ளது தெரிகிறது. ஹிந்தி காரர்கள் உடை உடுத்துவது நம்மை விட சற்று வித்தியாச படும். ஆனால் தமிழில் ஹீரோயின் உடைகளில் கூட ஹிந்தி போலவே இருக்கணுமா என்ன?

இயக்குனர் தரணிக்கு இது இன்னொரு "தூளா" அல்லது "குருவியா" என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும் !

டிஸ்கி: படம் பார்த்து போதே இந்த பதிவு எழுதப்பட்டு  Draft-ல் தூங்கி கொண்டிருந்தது. நாளை ஒஸ்தி படம் ரிலீஸ் என்பதால் இதற்கு மேல் தாமதம் வேண்டாம் என இன்று பதிவு வெளியிடப்பட்டு விட்டது !
Related Posts Plugin for WordPress, Blogger...