Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Tuesday, January 1, 2013

பாண்டிச்சேரி ஆரோவில் & அரபிந்தோ ஆசிரமம் - அறியாத தகவல்கள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !


புத்தாண்டை - பாண்டிச்சேரி ஆரோவில் மற்றும் அரபிந்தோ ஆஷ்ரம் குறித்த நல்லதொரு விஷயத்துடன் துவங்கலாம்.

ஆரோவில்

பாண்டிச்சேரி டூரிசம் நடத்தும் ஒரு நாள் டூரின் ஓர் பகுதியாகத்தான் ஆரோவில் கண்டேன்.


முதலில் நுழைந்ததும் பெரிய தியேட்டர் மாதிரி இடத்தில் ஆரோவில் பற்றிய 15 நிமிட வீடியோ படம் காட்டினர்.


1968-ல் அன்னையால் இங்கு கட்டிடம் கட்டும் பணி துவக்கப்பட்டது துவக்க விழாவிற்கு 124 நாடுகளிலிருந்து மக்கள் வந்து கலந்து கொண்டனர் அத்தனை நாட்டு கற்களும் இங்கு அடித்தளம் அமைக்கும் போது பயன்படுத்தப்பட்டுள்ளது. 1971 -பிப்ரவரி - 21ல் இது பொது மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது

இங்கு எந்த ஒரு மதமும் பின்பற்றப்படவில்லை; இங்கு "Humanity " க்கு மட்டுமே மிக முக்கியத்துவம் தருவதாக சொல்லப்படுகிறது

ஆரோவில் இருக்கும் ஏரியா 3500 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. இங்கு 50,000 மக்கள் வாழ முடியுமாம்

மாத்ரி மந்திர் என்று சொல்லப்படும் தியான மண்டபம் தான் இதன் முக்கிய பகுதியாக இதன் soul -ஆக கருதப்படுகிறது. அதன் உள்ளே சூரிய ஒளி வரும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது அதன் சிறப்பு

இதன் உள்ளே அமர்ந்து தியானம் செய்ய தற்போது ஒரு நாள் முன்னர் வந்து விண்ணப்பம் தர வேண்டுமாம். பின் மறுநாள் வந்து தான் நேரில் காணவும் தியானம் செய்யவும் முடியும்

சிகப்பு மண்ணில் / சிகப்பு தரையில் தற்போது கட்டப்படுகிறது ஒரு ஆம்பி தியேட்டர்.
ஆம்பி தியேட்டர்
ஆரோவில் மற்றும் அரபிந்தோ ஆஷ்ரம் பல சிறு கைத்தொழில் வேலைகளை செய்கிறது இதில் அங்கிருக்கும் அனைவரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பின் அவை விற்பனைக்கு வருகிறது. இவர்களின் வருமானத்துக்கு இது ஒரு வகையில் வழி வகை செய்கிறது. மேலும் நிறைய டோனேஷன்களும் வரும் என்று நினைக்கிறேன்

மேலே உள்ள தகவல்கள் பெரும்பாலும் வீடியோ படம் மூலம் அறிய வந்தது. படம் பார்த்ததும் அடுத்து தான மண்டபம் பார்க்க செல்கிறோம். தியான மண்டபம் அருகே இருக்கும் பானியன் மரம் புகழ் பெற்றது. அதன் அருகே பல வித மலர்கள் அழகாக பூத்து குலுங்குகிறது. நாம் செல்லும் தூரம் முழுக்க பசுமை, பசுமை, பசுமை தான் !

வீடியோ பார்த்த இடத்திலிருந்து, 1 கிலோ மீட்டர் தூரத்தில் தியான மண்டபம் உள்ளது. வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மட்டும் அந்த ஒரு கிலோ மீட்டருக்கும் இலவச பேருந்து செல்கிறது என்றாலும், பாண்டிச்சேரி டூரிசம் நம்மை அந்த பஸ்ஸில் அழைத்து போய் விடுகிறார்கள் (நேரத்தை மிச்சப்படுத்த) ! பார்த்து முடித்ததும் மீண்டும் அதே பஸ்ஸில் வெளியில் கூட்டி வருகிறார்கள்

ஆரோவில்லில் எடுத்த சிறு வீடியோ இது :



******************
அரபிந்தோ ஆசிரமம் - ஒரு எளிய அறிமுகம்


அரபிந்தோ ஆசிரமம் பற்றி கேட்க கேட்க ஆச்சரியமாய் இருக்கிறது. அது ஒரு தனி உலகம். அந்த உலகின் சட்ட திட்டங்கள், நடைமுறைகள் இவை மிக வித்யாசமானவை. பல்லாயிரக்கணக்கான மக்கள் இதை பின்பற்றுகிறார்கள் என்று அறிந்து வியப்பு மேலிடுகிறது !


********
ரபிந்தோ அந்நிய ஆட்சி இருந்த போது சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். அப்போ அவரை கைது செய்து தனிமை சிறையில் அடைத்தனர். பின் மிக திறமையான வாதத்தால் அவர் வெளியே வந்தார் (இதிலும் டிவைன் இன்டர்வென்ஷன் உண்டு என நாங்கள் நம்புகிறோம்)


அன்னை முதலில் பிரான்சில் இருந்து ஒரு முறை இங்கு வந்து பார்த்து விட்டு திரும்ப போய் விட்டார் மறுமுறை வந்த பிறகு இந்த இடத்தை விட்டு கடைசி வரை அவர் அகலவில்லை

இங்குள்ள சமாதியில் முதலில் அரபிந்தோ அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார் அப்போதே மதர் காலத்துக்கு பின் அவரையும் அதே இடத்தில் புதைக்கவேண்டும் என்று திட்டமிட்டு அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்தது. இப்போது இதே சமாதியில் கீழே அரபிந்தோவும் அதன் மேல் அடுக்கில் மதரும் உள்ளனர்.

சமாதி தினம் இரு முறை பூக்களால் அலங்காரம் செய்யப்படுகிறது இந்த பூக்கள் ஆசிரமத்துக்கு இருக்கும் தோட்டங்களில் இருந்து தினம் கொண்டு வரப்படுகிறது. பூக்களின் கீழ் இருக்கும் மணல் பல நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டது

ஒவ்வொரு நாளும் பத்து முதல் பதினைந்து வகை வண்ண மலர்களை கொண்டு இந்த இடம் அலங்கரிக்கப்படுகிறது இதன் அருகில் அமர்ந்து பலர் தியானம் செய்கின்றனர் இங்கு முழு அமைதி நிலவுகிறது. சிலர் சமாதி மேல் தலை வைத்து பிரார்த்தனை செய்கின்றனர். சிலர் ஏனோ அழுகிற நிலையில் தங்கள் குறைகள் மற்றும் வருத்தங்களை மனதுக்குள் சொல்கிறார்கள்.

ஆரோவில்லின் புகழ் பெற்ற மரத்துக்கு அருகே

ஆஷ்ரமத்தில் கிட்டத்தட்ட 1200 வாலண்டியர்கள், இன்மேட்கள் உள்ளனர். வெளியிலிருந்து வந்து சேவை செய்து விட்டு சென்று விடுவோர் வாலண்டியர்கள். இங்கேயே தங்கி சேவை செய்வோர் இன்மேட். பொதுவாய் இன்மேட் ஆக ஒருவரை அங்கீகரிக்கும் முன் சில வருடங்கள் (ஐந்து !!) பார்த்து விட்டு தான் அப்புறம் அங்கீகரிக்கிறார்கள். இவர்களுக்கு எந்த சம்பளமும் கிடையாது. முழு நேரம் ஏதாவது வேளையில் இவர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இது தான் அன்னையின் விருப்பம் அன்னை யாரும் எப்போதும் சும்மா இருக்க கூடாது ஏதேனும் வேலையில் ஈடுபடனும் என்று கூறுவாராம். இங்கு தங்க ஒவ்வொருவர் செய்ய வேண்டியதும் அதுவே !

இன்மேட்களுக்கு தங்க வீடு தரப்படுகிறது. உணவு அனைவருக்கும் பொதுவான ஒரு இடத்தில் வழங்கப்படுகிறது ஒவ்வொருவருக்கும் நான்கு ஆடைகள் வருடத்துக்கு வழங்கப்படுகிறது. வீட்டுக்கு தேவையான சோப்பு உள்ளிட்ட மளிகை சாமான்கள், மருந்துகள் வழங்கப்படுகிறது. மற்றபடி பணம் (Stipend ) யாருக்கும் தருவதில்லை. பணமே இல்லாமல் தான் வாழ்க்கை நடத்தவேண்டும் . இது கிட்டத்தட்ட சந்நியாசி வாழ்க்கை தான் !

ஆஷ்ரமத்தில் பல வித சிறு தொழில்கள் உள்ளன. பேப்பர் வைத்து தயாரிக்கப்படும் கைவினை பொருட்கள் உள்ளிட்ட பல விஷயங்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இதிலிருந்து கிடைக்கும் லாபம் ஆஸ்ரமத்துக்கு சேர்கிறது

இதனை துவக்கியது அரபிந்தோ அவர்கள் என்றாலும் ஒரு நிலையில் அவர் தன்னை பின்னே கொண்டு சென்று, மதர் தான் இனி இதற்கு தலைமை என அறிவித்து விட்டார். அதன் பின் அவர் ஆங்காங்கு கைடன்ஸ் தருவதுடனும், மக்களை தினம் குறிப்பிட்ட நேரம் சந்திப்பதுடனும் நிறுத்தி கொண்டார்

மதர் இருந்த வரை மட்டும் தான் தலைவர் என்கிற பதவி இருந்தது இப்போது தனிப்பட்ட ரிலிஜியஸ் தலைவர் என்று யாரும் இல்லை. ஒரு தனி ட்ரஸ்ட் ஆஸ்ரமம் இயக்கங்களை கவனிக்கிறது. இது ஒரு மாதிரி உலகமாக இருக்க வேண்டும் என்பது மதரின் ஆசை. அதையே இன்றும் நடைமுறை படுத்துகிறார்கள்

இவர்களுக்கு பள்ளி, கல்லூரியும் உண்டு. இங்குள்ள கல்வி முறை வித்யாசமானது. ரெசிடென்ஷியல் பள்ளி மற்றும் வீட்டிலிருந்து வந்து போகும் வசதி இரண்டும் உண்டு. தங்கி படிப்பது எனில் ஐந்து அல்லது ஆறு வயதுக்கு மேல் தான். ஆறு வயது வரையாவது வீட்டில் பெற்றோருடன் தங்கி தான் பள்ளிக்கு வரணும். ஆசிரம பள்ளி டிசம்பரில் துவங்கி நவம்பரில் முடிகிறது. ஆண்டு விடுமுறை டிசம்பரில் தான் வருகிறது

இங்கு தேர்வு என்று எதுவும் யாருக்கும் கிடையாது ! பத்தாவது ப்ளஸ் டூ, கல்லூரியிலும் இதே நிலை தான் ! குறிப்பிட்ட சில நிறுவனங்கள் (பாண்டிச்சேரி யூனிவர்சிட்டி உட்பட) இந்த படிப்பை அங்கீகரிக்கின்றன. இங்கு படித்து பின் ஐ. ஐ. டி யில் படித்தோரும் உண்டு என்கிறார்கள்

எஞ்சினியரிங் மற்றும் டாக்டர் படிக்க வேண்டும் எனில், எட்டாவதுக்கு பின் வேறு பள்ளியில் சேர்ந்து பப்ளிக் தேர்வு எழுதி அப்புறம் செல்ல வேண்டும்,

மிக குறைவான மாணவர்களே இங்கு படிக்கிறார்கள். நான்கு மாணவர்க்கு ஒரு ஆசிரியர் என்கிற அளவில் மிக அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

உடற்பயிற்சி தான் மிக மிக முக்கியம் என்கிறார்கள். சனி ஞாயிறு கூட உடற்பயிற்சி வகுப்புகள் உண்டு ! இங்கு தங்கி படிக்க மிக குறைந்த கட்டணமே வாங்குகிறார்கள்.
  ******* ஆரோவில் மற்றும் அரபிந்தோ ஆசிரமம் இரண்டுமே ஒரே நிறுவனத்தின் கீழ் தான் வருகிறது. இவர்கள் வாழ்க்கையை நினைத்தால் ஆச்சரியமே மேலிடும் ! எந்த சம்பளமும் இல்லாமல், வாழ்க்கைக்கு தேவையான மிக குறைந்த வசதிகளுடன், மலர்ந்த முகத்துடன் வேலை செய்யும் அரபிந்தோ ஆசிரம சேவையாளர்களை பாண்டி செல்லும் போது அவசியம் சந்தியுங்கள் !

Sunday, November 25, 2012

இங்க்லீஷ் விங்க்லீஷ் தவற விடக்கூடாத ஒரு படம்

ங்க்லீஷ் விங்க்லீஷ் படம் வெளிவந்து சில மாதங்கள் கழித்து தான் பார்த்தேன். படம் பார்க்கும் முன் தனி விமர்சனம் எழுதும் எண்ணம் சுத்தமாய் இல்லை. அதிகபட்சம் வானவில்லில் நான்கு வரி எழுதலாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் பார்த்து முடித்ததும் இது நான்கு வரியில் எழுதக்கூடிய படமல்ல என்பது தெளிவாய் புரிந்து போனது.


கதை

கணவர், குழந்தைகள் மற்றும் மாமியாருடன் வசிக்கும் இந்திய பெண் - சஷியாக ஸ்ரீதேவி. பகுதி நேர வேலையாக லட்டு தயாரித்து வியாபாரம் செய்கிறார். கணவர், குழந்தைகள் உள்ளிட்டோர் அவரை சமைக்கவும், வீட்டு வேலை செய்யவுமே ஏற்றவர் எனக்கருதி, தங்களை அறியாமல் பல விதத்தில் காயப்படுத்துகின்றனர்.

அக்கா மகள் திருமணத்துக்கு உதவ தனியாக அமெரிக்கா செல்கிறார் ஸ்ரீதேவி. அங்கு அனைவரும் வேலைக்கு சென்ற பின் தனியே இருப்பது போர் அடிக்க ஆங்கில வகுப்புக்கு செல்ல துவங்குகிறார். திருமணத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா வரும் ஸ்ரீதேவியின் குடும்பம் அவளிடம் நடந்துள்ள மாறுதல்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.,

***
பிரபலமான நடிகர்கள் ஒரு பாத்திரத்தில் நடிப்பதில் மிக பெரிய பிரச்சனை: நாம் அவர்களை அந்த பிரபலமாக தான் பார்ப்போம். கமல் ஒரு பாத்திரத்தில் நடித்தால், நமக்கு கமல் என்பது நினைவில் இருந்து கொண்டே தான் இருக்கும். அதை தாண்டி அந்த பாத்திரத்தை நம் மனதில் பதிய வைப்பது பெரிய விஷயம்.

இப்படத்தில் போக போக நாம் ஸ்ரீதேவியை மறந்து விட்டு சஷியை ரசிக்க துவங்கி விடுகிறோம்.

பட துவக்கத்தில், க்ளோஸ் அப்பில் ஸ்ரீதேவியின் மூக்கு மிக உறுத்துகிறது. " சே ! ஸ்ரீதேவி ஏன் தான் தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கெடுத்து கொண்டாரோ " என்ற வருத்தம் கொஞ்ச நேரம் எட்டி பார்த்தவாறே உள்ளது.

ஹீரோ ஓரியண்ட்டட் படங்களில் கூட, நான்கு சண்டைகள், பாடல்கள், ஹீரோயினின் கிளாமர், நகைச்சுவை என பல விஷயங்கள் இருக்கும். இந்த படம் முழுக்க முழுக்க ஸ்ரீதேவி என்கிற தனி மனுஷியை மட்டுமே நம்பி சுழல்கிறது. அட்டகாசம் !

ஸ்ரீதேவியை தவிர இன்னொருவரை இந்த பாத்திரத்தில் நினைத்தே பார்க்க முடியவில்லை. என்னா performance!

- பள்ளியில் ஆசிரியருடன் பேசும்போது காட்டும் மரியாதை, தயக்கம்...
- ஆட்டோவில் பெண் கோபப்படுகையில் கண் கலங்குவது, சில நொடிகளில் அவளை பார்த்து சரியாவது
- ஆங்கிலம் சற்று கற்று கொண்டதும் நடக்கிற கம்பீர நடை
- கணவர் அலட்சியப்படுத்தும் போது கூனி குறுகும் முக பாவங்கள்
- ஆங்கிலம் கற்கும் மாணவர்களுடன் காட்டும் மகிழ்வான ஒட்டுதல்
- க்ளைமாக்சில் பேசும் அமைதியான, அழகான பேச்சு ..

என முழுக்க முழுக்க இது ஒரு ஸ்ரீதேவி படம் ! Comeback-ன்னா இப்படி தான் இருக்க வேண்டும். பிச்சு உதறிட்டார். அடுத்தடுத்து இவரை ஹீரோவின் அம்மா போன்ற பாத்திரத்தில் வீணடிக்காமல் இந்தி திரை உலகம் நல்ல பாத்திரங்கள் வழங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த பாராட்டு இயக்குனர் கௌரி ஷிண்டேவுக்கு (ஒளிப்பதிவாளர் பால்கியின் மனைவி). எனக்கு அவரிடம் மிக பிடித்த விஷயம் ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்து பார்த்து செதுக்கியுள்ளது தான் ! ஏழு வயது பையன் -ஏழு வயது பையன் செய்யும் வேலை தான் செய்கிறான். பன்னிரண்டு வயது பெண்ணின் மனநிலை -அவளது செயல்களை அப்படியே பிரதிபலிக்கிறார். ஸ்ரீதேவி கணவர் பாத்திரம் தான் போக போக சற்று நெகடிவ் ஷேட் அதிகமாகி, நாம் சற்று வெறுக்கிற அளவில் போகிறது என்றாலும், அந்த பாத்திரம் என்னையும் சேர்த்து ஒவ்வொரு ஆணின் பிரதிபலிப்பே.

அஜீத், ஸ்ரீதேவியுடன் இயக்குனர் கௌரி 

அஜித் வரும் காட்சிகளும் அழகாக உள்ளன. தல - தலயாகவே வந்து போகிறார். அமெரிக்காவில் இறங்கியதும் இம்மிக்ரேஷனில் " ஏன் அமெரிக்கா வந்தீர்கள்" கேட்க அஜீத் சொல்லும் பதில் : "ம்ம் உங்க எக்கானமியை சரி செய்ய வந்தேன்"

படத்தில் மிக மிக ரசிக்கும் பகுதி: ஸ்ரீதேவியின் ஆங்கில வகுப்பு காட்சிகள் தான்.

ஆங்கில வகுப்புக்கு தட்டு தடுமாறி வழி விசாரித்து வந்து சேரும் ஸ்ரீதேவி, முதல் நாள் வகுப்பில் அமரும் போது மற்றவர்கள் பேசும் உடைந்த ஆங்கிலத்தை கேட்டு மிக மகிழ்ச்சியாவது அழகு. அந்த நான்கு வாரத்தில் வெவ்வேறு பின்னணியிலிருந்து வரும் அவர்கள் அன்போடு பழகுவதும், வகுப்பு தோழர்கள் போல் கூத்தடிப்பதும் கவிதை போல காட்டியுள்ளார்.


இட்லிக்காக ஏங்கும் ராமமூர்த்தி, வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து பாத்திரங்களும் சுவாரஸ்யம்.

ஸ்ரீதேவி க்ளைமாக்சில் ஆங்கிலத்தில் பேச துவங்கும் போது, ஆங்கிலம் கற்று தந்த ஆசிரியரின் டென்ஷனை காட்டுவதும், முதலில் அவர் எழுந்து கை தட்டி விட்டு, " நீ பேசியதில் சில தவறு இருந்தது. " என சிறு கேப் விட்டு " ஆனால் நீ Distinction-ல் பாஸ் செய்து விட்டாய் " என முடிப்பது டைரக்டர் டச்.

ஸ்ரீதேவியை ஒரு தலையாய் காதலிக்கும் அந்த நபரின் பாத்திரம் சினிமாவிற்கு சற்று ரொமான்ஸ் தேவையென்பதால் சேர்க்கப்பட்டதாக தோன்றுகிறது . (நிஜத்தில் இத்தகைய காதல்கள் வராது என்று அர்த்தம் இல்லை)

மிக முக்கிய விஷயத்துக்கு வருவோம்

இந்த படம் சொல்ல வரும் விஷயம் : ஆங்கிலம் கற்பதன் அவசியத்தை அல்ல. ஒவ்வொரு குடும்பமும், குடும்ப தலைவியை எப்படி நடத்துகிறது என்பதை தான்.

யோசித்து பாருங்கள்: உங்கள் வீட்டில் இருக்கும் தலையணைகளில், மோசமான தலையணையை வைத்து தினம் தூங்குவது யார்? குடும்ப தலைவி என்று யாரை சொல்கிறோமோ அவர் தானே !

இங்கு தலையணை என்பது ஒரு குறியீட்டுக்கு தான் ! பல விஷயங்களுக்கும் இது பொருந்தும். ஸ்பெஷல் டிஷ் தயாராகும் போது அது அநேகமாய் காலியான பின், கடைசியில் மிக கொஞ்சமாய் அதை உண்பதில் துவங்கி, இன்னும் எத்தனையோ விஷயம் சொல்ல முடியும். (இந்த துயர்களை மறக்கத்தான் பெண்கள் நகைகளும், புடவையும் நிறைய வாங்குகிறார்களா என கேட்கிறார் அய்யாசாமி :)) )

ஒவ்வொரு குடும்ப தலைவியாலும் எந்த விஷயத்திலும் நமக்கு சமமாக வரமுடியும் என்பதை காட்ட, இப்பட இயக்குனர் எடுத்து கொண்ட ஒரு விஷயம் ஆங்கிலம். அவ்வளவு தான் ! ஆங்கிலம் பேசுவதில் தான் நான்கு வாரத்தில் ஒரு மாறுதலை காட்ட முடியும். சினிமாவிற்கும் ஆங்கிலம் பேசுவதில் உள்ள சிரமம் சுவாரஸ்யமாக இருக்கும். மற்றபடி பெண்களை நாம் எப்படி நடத்துகிறோம், அவர்கள் உணர்வுகளை எப்படி மதிக்கிறோம் என்பதை பற்றிய ஒரு பார்வையே இப்படம்.

இத்தகைய படம் பார்ப்பதால் யாரும் ஒரே நாளில் மாறி விடபோவதில்லை. எனினும் படம் பார்க்கும் ஆண்களில் எங்கோ யாரோ சற்று சிந்திக்க ஆரம்பித்தால் அதுவே ஒரு வெற்றி தானே !

படத்தின் கமர்ஷியல் வெற்றி பற்றிய தகவலுடன் இப்பதிவை முடிப்போம். 15 கோடிகளில் தயாரான இப்படம் 85 கோடிகளை வசூலித்து தந்துள்ளது. நல்ல படத்தை மக்கள் என்றும் கொண்டாடவார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம் !

இங்க்லீஷ் விங்க்லீஷ் - ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் அவசியம் பார்க்க வேண்டிய படம் ! தவற விடாதீர்கள் !

Thursday, November 15, 2012

சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ

ரையெல்லாம் செண்பகப்பூ .. சுஜாதாவின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்று. ஆனந்த விகடனில் தொடராக வந்து பின்னர் திரைப்படமாகவும் வந்தது. இப்படம் அவ்வப்போது டிவியில் போடுவர். துரதிர்ஷ்ட வசமாய் படம்  அப்படி  போடப்படும் போதெல்லாம், பாதியிலிருந்து தான் பார்ப்பேன்.  ப்போதும் முழுமையாய் பார்த்ததில்லை.


முன்பே இக்கதை படித்திருந்தாலும் இப்போது படிக்கையில் ஒரு வித்தியாச அனுபவம் கிடைத்தது. பொதுவாக ஒரு கதையை படிக்கும் போது நமக்கு அது மனதில் ஒரு சித்திரமாக விரியும். இந்த கதையை இப்போது படிக்கையில், யார் யார் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளனரோ அவர்களை உருவகபடுத்தியவாறு படிக்க முடிந்தது.

ஹீரோவாக பிரதாப், கிராமத்து பெண் வெள்ளியாக ஸ்ரீப்ரியா, பட்டண மங்கையாக சுமலதா, ஊர் கிழவியாக மனோரமா ஆகியோர் சினிமாவாக வந்தபோது நடித்திருந்தனர்
கதை

ஹீரோ கல்யாண ராமன் நாட்டுப்புற பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய திருநிலம் என்கிற கிராமத்துக்கு வருகிறான். அங்கு ஒரு பழைய ஜமீன் பங்களாவில் தங்கு ம் அவன் கிராமத்து பெண் வெள்ளியை நேசிக்கிறான். ஆனால் அவள் நேசிப்பதோ அவள் மாமன் மருத முத்துவை. (முக்கோண காதல் ஸ்டார்ட்டெட்)

அந்த கிராமத்துக்கு ஜமீனின் பேத்தியாக நாகரிக பெண் சினேகலதா வருகிறாள். கல்யாணராமன் தங்கும் அதே பங்களாவில் அவள் தங்க, பின் சில மர்மமான விஷயங்கள் நடக்கின்றன. பின் ஒரு கொலையும் நிகழ்கிறது.

அந்த கொலையை செய்தது யார், ஏன் கொன்றனர் , வெள்ளி யாரை மணந்தாள்..கல்யாணராமனையா.. மாமனையா போன்ற கேள்விகளை நாவலின் கடைசி அத்தியாயம் சொல்கிறது

****
பாசஞ்சர் போனால் போகிறது என திருநிலத்தில் நின்றது என முதல் வரியிலேயே புன்னகையுடன் நம்மை கதைக்குள் அழைத்து செல்கிறார் சுஜாதா. அடுத்த பாராக்களில் அவர் அந்த ரயில் நிலையத்தை விவரிக்கும் அழகு கதை எழுதுவோர் ஒவ்வொருவருக்கும் பால பாடம் ! சுஜாதா பல முறை சொல்லும் விஷயம் தான்.. டீடைலிங்.. எதையும் உற்று நோக்குதல். என்னை போன்ற ஆட்களுக்கு எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷன் தான் இதை வாசிக்கையில் கண்ணில் நிழலாடும்.

ஏராளமான பாத்திரங்கள். ஆனால் எந்த குழப்பமும் இல்லை. ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு தெளிவான ஸ்கெட்ச்/ குணாதிசயம் உள்ளது.

பல நாட்டுப்புற பாட்டுகள் கதையில் உபயோகம் செய்துள்ளார் சுஜாதா. கிராமத்து அனுபவம் இன்றியே, கிராமத்து கதையை தொட்ட சுஜாதாவின் தைரியம் வியக்க வைக்கிறது. அதனாலேயே ஹீரோவை சுஜாதா போல ஒரு நகரத்து மனிதனாக காண்பித்து, அவன் பார்வையில் கதை விரிவதாக வைத்து கொண்டார் போலும்.

கதை முடியும் போது வெள்ளியின் பாத்திரம் மனதில் பாரமாய் பதிகிறது. பெண்களுக்கு தங்கள் திருமணத்தில்,  நினைத்ததை பேசும் சுதந்திரம் கிராமங்களில் அவ்வளவு இல்லை தான்.

நாவல் 21 அத்தியாயங்கள் மட்டுமே. வார தொடராக வந்ததால் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு செம சுவாரஸ்ய இடத்தில் கதையை நிறுத்துகிறார்.

சமீபத்தில் புயல் அடித்த நாளன்று டிவி & இணையம் இல்லாததால் இப்புத்தகத்தை கையிலெடுத்தேன். வழக்கம் போல் ஏக் தம் தான்.

நாட்டு புற பாட்டுகள் வரும் இடங்கள் தான் சற்று தொய்வு. மற்றபடி மிக சுவாரஸ்யமாக வழுக்கி கொண்டு ஓடுகிறது கதை.

சினிமாவாக வந்தபோது பெரும் தோல்வியை சந்தித்தது. அது பற்றி கூட சுஜாதா எழுதிய நியாபகம். நண்பர் பாலஹனுமான் போன்றோர் அதையும் நினைவு வைத்திருக்க கூடும் !

தல-யின் இந்த புத்தகத்தை வாய்ப்பு கிடைத்தால் அவசியம் வாசியுங்கள் !

***
நூலின் பெயர்: கரையெல்லாம் செண்பகப்பூ
ஆசிரியர்: சுஜாதா
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 216
விலை: ரூ 100

Tuesday, November 13, 2012

தீபாவளி -தொலைகாட்சி நிகழ்ச்சி லிஸ்ட்: எதை பார்க்கலாம்?

ல பண்டிகைகளிலும், சாப்பாடு வேலையில் முடிந்த அளவு சிறு உதவி பண்ணிட்டு, சாமி கும்பிட்டு டிவி முன் செட்டில் ஆகும் சராசரி சென்னைக்காரன் நான். ஆனால் தீபாவளியன்று  அக்கம் பக்கம் + உறவினர் வீடுகளுக்கு செல்வதிலும், குழந்தையுடன் சேர்ந்து வெடி வெடிப்பதிலுமே மிக அதிக நேரம் செலவாகும். மிச்ச நேரம் தான் டிவி.

இருப்பினும் முக்கிய தமிழ் சானலில் என்ன படம் என அறிய  பலரும் வீடுதிரும்பலை நாடுவதால், இவ்வருட நிகழ்சிகள் பட்டியல் இதோ:

** புது படங்கள் என்றால், விஜய்யில் நண்பனும் சன்னில் மங்காத்தாவும் மாலை நேரம் நேருக்கு நேர் மோதுகின்றன.

## தவிர மாதவன் ஆரியா நடித்த வேட்டை விஜய்யிலும் விண்ணை தாண்டி வருவாயா கலைஞரிலும் வருகிறது

** அனைத்து சானலிலும் துப்பாக்கி விஜய் மற்றும் முருகதாஸ் பேட்டி நிச்சயம் இருக்கு.

## வெளிவர உள்ள நீர்ப்பறவை,கும்கி படம் குறித்த சிறப்பு நிகழ்சிகள் உண்டு. சன்னில் சாலமன் பாப்பையா, கலைஞரில் லியோனி பேட்டிகள் இல்லாமல் எந்த பண்டிகையும் கொண்டாடுவதே இல்லை !

  இவரு சும்மா போஸ்  குடுக்குறாரு.  இந்த பெரிய சரத்தின்  நிஜ வீடியோ இங்கு ....      
(மேலே படத்தில் உள்ளவர் செருப்பு போடாதது தவறு; செருப்பு அணிந்தே வெடி வெடிக்கவும்  )



************

லிஸ்ட் இங்கே மஞ்சள் ஹைலைட் டிவி அருகே இருந்தால் மட்டும் பார்க்க எண்ணியுள்ள நிகழ்சிகள்

கலைஞர் டிவி 

8 AM  -நகைச்சுவை நடிகர் பாண்டு குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சி 
8. 30 AM  - நீர்ப்பறவை திரைப்படம் ஒரு பார்வை  
9 AM  - லியோனி சிறப்பு பட்டிமன்றம் 
10. 30 AM  - விண்ணை தாண்டி வருவாயா - படம் 
2. 30 P  - கும்கி படம் ஒரு பார்வை 
3 P M  - டிஜிட்டல் சினிமா பற்றி தயாரிப்பாளர்கள் பேசுகிறார்கள் 
3. 30 P M  -சத்திரம் பேருந்து நிலையம் -படம் ஒரு பார்வை 
4 P M  -தாய் வீடு - நாடக மேடை அனுபவம் பற்றி நடிகர்கள் 
4. 30 P  - கும்பகோணத்தில் சந்தானம் 
5 P M  - பையா திரைப்படம் 
9 P M  - இசை அமைப்பாளர்  GV பிரகாஷ் குமாருடன் நேர்காணல்  
9. 30 P  - அம்மாவின் கைப்பேசி படம் பற்றி தங்கர் பச்சான் 
10 P M  - சிறப்பு இன்னிசை மழை- சீர்காழி சிவசிதம்பரம் -பேட்டி  காண்கிறார் அப்துல் ஹமீது 

சன்  டிவி

சினிமா தியேட்டரில் போடுற மாதிரி மூணு ஷோ சினிமா.. அதில் போக்கிரி, காளை என மிக பழைய படங்கள் போடுறது ....என்னத்த சொல்றது ! மாலை ஆறு மணிக்கு மங்காத்தா வருவது தான் இவர்களின் மிக பெரிய நிகழ்ச்சி. மற்றபடி சொல்லிக்குற மாதிரி எதுவும் இல்லை

8 AM  -  சந்தானம் -பவர் ஸ்டார் தங்கள் புது படம் பற்றி பேட்டி  
8. 30 AM  - காமெடி பட்டாசு (கருணாஸ்- பாண்டு கலந்து கொள்ளும் நிகழ்ச்சி) 
9 .30 AM  -சாலமன் பாப்பையா பட்டிமன்றம் (பிறருக்கு உதவும் மனப்பான்மை அதிகம் இருப்பது இளமையிலா.. முதுமையிலா?)
11 AM  -  போக்கிரி படம் 
2. 30 P  - சிம்பு நடித்த காளை படம் (ஐயய்யோ ! கொல்றாங்களே !)
6 P M  - மங்காத்தா 
10 P M  - Cradle to the Grave - சினிமா 

ஜெயா டிவி

காலை மலர்: ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி
பேராசிரியர் ஞானசம்பந்தர் தலைமையில் பட்டிமன்றம்
11 AM - ஏ. ஆர் ரகுமான் பேட்டி: ரோஜா முதல் ராக் ஸ்டார் வரை
புது  படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள் 
சந்தானம் பேட்டி 
டிரம்ஸ் சிவமணி பேட்டி 

விஜய் டிவி

7.30 AM : நடிகர் சிவகுமாருடன் நேருக்கு நேர்

9 AM துப்பாக்கி பற்றி விஜய் மற்றும் முருகதாஸ் பேட்டி

11 AM : வேட்டை திரைப்படம்

4 PM : விஜய் பற்றி ஷோபா சந்திரசேகர் பேசுகிறார்

4.30 PM : அன்னை இல்லத்தில் கும்கி டீம்

5 PM : அலெக்ஸ் பாண்டியன் திரைப்படம் ஒரு பார்வை

5.30 PM : கமல்- ஹாலிவுட் நடிகர் ஆங் லீ கலந்துரையாடல் (தெளிவா புரியும். அவசியம் பார்த்து பயன்பெறுக :)

6 AM : நண்பன் திரைப்படம்

***
பட்டாசு பத்திரமாய் வெடிக்க சில குறிப்புகள் :

## பட்டாசுகளை ரொம்ப அருகில் சென்று வெடிப்பதை தவிர்க்கவும்

**  ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து கொண்டு கம்பி மத்தாப்பு போன்றவற்றை எரித்து முடித்த பின் அதில் போடவும். காலில் சூடான மத்தாப்பு பட்டு புண்ணாகாமல் இருக்க இது உதவும்

##  குழந்தைகள் வெடி வெடிக்கும் போது அருகில் பெரியவர் ஒருவராவது இருந்து பார்த்து கொள்வது நல்லது

** கம்பி மத்தாப்பை முகத்திற்கு அருகில் வைத்து சுற்ற வேண்டாம்.

##  குழந்தைகளுக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மெல்லிய சிந்தடிக் உடைகள் போடுவதை தவிர்க்கவும். திக்கான காட்டன் உடைகள் அணிவிப்பதே நல்லது

****
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !

Sunday, November 11, 2012

காசு குடுத்து படம் பார்த்து பயப்படணுமா? பீட்சா விமர்சனம்

ய்யாசாமிக்கு பொதுவா த்ரில்லர் படங்கள் என்றால் கொஞ்சம் அலர்ஜி. கல்லூரி காலம் முதல் எந்த படமும் நண்பர்கள் கூட்டமாய் பார்க்க செல்லும்போது, த்ரில்லர் படம் என்றால் அய்யாசாமி எஸ் ஆகிடுவார் " காசு குடுத்து, பயந்துட்டு வரணுமா? போங்கடா போக்கத்த பயலுகளா" என திட்டுவார்.

அப்படிப்பட்டவரின் மனைவிக்கு த்ரில்லர் படங்கள் என்றால் உயிர் ! (பேய்க்கு பேய் படம் பிடிப்பதில் ஆச்சரியம் இல்லைன்னு முணுமுணுப்பார் அய்யாசாமி) ஒருவிதத்தில் கணவன்-மனைவிக்கு மாறுபட்ட ரசனை இருப்பது நல்லது தான் ! அய்யாசாமிக்காக அவர் மனைவி காமெடி படம் பார்க்க ஆரம்பித்து விட்டார். அவருக்காக இவர் த்ரில்லர் பார்க்க ஆரம்பித்தார்.

அய்யாசாமிக்கும் ஒரு பேய் படம் பிடித்தது என்றால் அது "ஈரம்" தான். மிக அழகான மேக்கிங் சுவாரஸ்ய நேரேஷன் இவற்றால் எப்போதும் ரசிக்கும் படம் அது.

சரி பீட்சாவுக்கு வருவோம். பீட்சா பற்றிய அய்யாசாமியின் விமர்சனம் இதோ (கதை சொல்லப்படலை; பயம் வேண்டாம்)

*********

எல்லாரும் ஆஹா ஓஹோன்னு சொல்றாங்களேன்னு தான் பீட்சா பார்த்தோம். நிறைய விமர்சனம் இதுக்கு முன்னால படிச்சாச்சு. எல்லாரும் சொல்லி வச்சிகிட்டாப்புல " பீட்சா டெலிவரி பண்ண போற ஹீரோ ஒரு பேய் பங்களாவுல மாட்டிக்குராறு. அப்புறம் என்னா நடக்குதுங்கறது தான் கதை"ன்னு மட்டும் தான் சொன்னாங்க

படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் ரம்யா நம்பீசன் மற்றும் விஜய் சேதுபதி பார்ட் தான் வந்தது. எல்லாரும் என்னாப்பா இதுன்னு முணுமுணுதுக்கிட்டு இருந்தாங்க (அவங்களுக்கு உடனே பயப்பட்டாகனுமாம் !)

ஆனா இந்த பார்ட் வந்தப்போ ஐ வாஸ் வெரி ஹாப்பி. காரணம்......... ஹீ ஹீ ரம்யா நம்பீசன் தான். அம்மணி அழகா இருக்காங்க. நல்லா நடிக்கவும் தெரியுது. இயக்குனர்கள் எல்லாம் நல்ல நல்ல படமா வாய்ப்பு குடுத்து, இவங்களை அடுத்த அனுஷ்கா ஆக்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்

ரம்யாக்கு சின்ன பாத்திரம் ; முழுக்க முழுக்க படத்தை தாங்குவது விஜய் சேதுபதி தான் என்றாலும், டைட்டிலில் இரண்டு பேர் பேரும் ஒண்ணாவே போட்டாங்க.

விஜய் சேதுபதி ரொம்ப அருமையா நடிச்சிருக்கார். அந்த பங்களாவில் மாட்டி கொள்வது அவரல்ல; படம் பார்க்கும் மக்கள் ஒவ்வொருவரும் தான் என்கிற அளவில் அவரும் , இயக்குனர், ஒளிப்பதிவாளர் கூட்டணி உழைச்சிருக்கு.

பேய் பங்களா பார்ட் வந்தவுடனே சரியா அஞ்சு மினிட்டுக்கு ஒரு தடவை நம்மை அலறவைக்கிறாங்க. இடைவேளைக்கு அப்புறம் வர்ற அரைமணி நேரம், நிமிஷத்துக்கு நிமிஷம் மக்களை அலறவிடுறாங்க. நல்லாருங்கப்பா !

சில பேரு கண்ணை மூடிகிட்டே பாதி படம் பாக்குறாங்க ! (நான் இல்ல !) 

மிக அதிக பாராட்டுகள் சேரவேண்டியது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூக்கு தான். பாக்குறதுக்கு சிம்பு தம்பி குறளரசன் மாதிரி இருக்கும் இவர் அழகான திரைக்கதை உத்தியால் கலக்கிட்டார்.

கருப்பு சட்டை போட்டவர் தான் இயக்குனர் 
படத்தில் தேவையில்லாமல் ஒரு காட்சியும் இல்லை. பாடல்கள் ரெண்டு மூணு தான் இருக்கு. ஆனால் எதுவும் மனதில் தங்கலை என்பது மைனஸ். படம் பார்த்து முடித்ததும் ஆள் ஆளுக்கு " அது எப்படி? இது எப்படி?" என லாஜிக் மிஸ்டேக் நிறைய பேசுகிறார்கள். ஆனால் பாக்கும்போது கட்டி போட்டுடுறாங்க நம்மளை.

எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பாராத படம் வருவது தான் வித்யாசமே. அந்த விதத்தில் இப்படம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகி, படத்தின் பட்ஜெட்டை விட ரெண்டு மூன்று மடங்கு சம்பாதித்து விட்டது இன்னும் கூட சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது.

படம் முடியும் போது மனைவி மற்றும் என் பெண்ணுக்கு ஒரு வித ஏமாற்றம் வந்தாலும் கூட, படம் பார்க்கும் போது அவர்களுக்கும் இருந்த த்ரில் பீலிங் செம !

கார்த்திக் சுப்புராஜ் என்ற இளைஞரின் மிக வித்தியாச முயற்சிக்காகவே இந்த பீட்சாவை அவசியம் பாருங்க !

ஆண்டி க்ளைமாக்ஸ் :

இந்த படத்தை நான் பயமின்றி பார்த்தேன் காரணம் சொன்னா நீங்களே  பரிதாபப்படுவீங்க. 

ப்ரேம்னு என் நண்பன்.... காலேஜ் நாளில் இருந்தே, அவனுக்கு ஒரு ரகசியமும் தங்காது.சமீபத்தில்  அவனோடு காரில் போய் கொண்டிருக்கும்போது பீட்சா பற்றி பேச்சு வர, டபக்குன்னு ஒரே நிமிஷத்தில் சஸ்பென்சை உடைச்சிட்டான் ! " நான் வேணாம்டா ! வேணாம்டா" என சொல்ல, கதற கதற மேட்டரை டபக்குன்னு சொல்லிட்டான்... படுபாவி !

அவன் என்ன சொன்னான்னு சொல்லவா? 

அலோ ..அலோ ஏங்க விண்டோவை க்ளோஸ் பண்ணிட்டு ஓடுறீங்க நில்லுங்க ! நில்லுங்க !

****
சமீபத்து பதிவு: போடா போடி பாட்டு  ப்புடி: இங்கே

Wednesday, November 7, 2012

வானவில்: துப்பாக்கி- ஓவியா- கேரட் ஜூஸ்

ஆறுவகை நண்பர்கள்

டைம்ஸ் ஆப் இந்தியாவில் சில சுவாரஸ்ய சமாச்சாரங்கள் வரும். அப்படி வாசித்த ஒன்று ... நம் ஒவ்வொருவருக்கும் தேவை - ஆறு நண்பர்கள் ! வேறு விதமாய் சொல்லணும் என்றால் ஆறு விதமான நண்பர்கள் கொண்ட குழு !

எதற்கும் டென்ஷன் ஆகாத ஒரு நண்பர், உங்களை பற்றி உங்களை விட அதிகம் தெரிந்த ஒருவர், எதிலும் தைரியமாய் இறங்கி பார்க்கும் நண்பர், நீங்கள் எப்போது கஷ்டம் என்றாலும் உடனே ஓடி வர ஒரு நண்பர் இப்படி வெவ்வேறு வித நண்பர்கள் ஒருவருக்கு இருப்பதே ஒரு மனிதனை முழு மனிதனாகவும் அவன் வாழ்க்கையை சுவாரஸ்யமாகவும் ஆக்கும் என்கிறது இந்த ஆராய்ச்சி.

உங்கள் நண்பர்கள் இதில் எந்தெந்த கேட்டகரியில் வருவார்கள் என முடிந்தால் யோசித்து பாருங்கள்.

அழகு கார்னர்

சில பேருக்கு கொஞ்சம் மேக் அப் போட்டாலே பார்க்க ரொம்ப அழகா தெரிவாங்க.

தண்ணீர் தர மறுக்கும் கேரளம்,  தமிழகத்துக்கு தந்த கொடைகளில் இவரும் ஒருவர் !

சந்தித்த நபர்

மடிப்பாக்கத்தில் ஒரு இன்டர்நெட் சென்டருக்கு சென்றிருந்தேன். கடையில் இருந்தவர் ஐம்பது வயது மதிக்கத்தக்கவர். பிரிண்ட் அவுட் எடுக்கணும் என்றதும், "எனக்கு எப்படி செய்யணும் என தெரியாது நீங்களே செஞ்சிக்கனும்" என்றார். அப்புறம் பார்த்தால் கணினியை அல்லது பிரிண்டரை ஆன் செய்யவும் அவருக்கு தெரியலை. வேலை முடிந்து கிளம்பும் போது மழை பெய்ய சற்று காத்திருக்க வேண்டியதாயிற்று.

அவருக்கு கணினி பற்றி தான் தெரியலையே ஒழிய மற்ற உலக விஷயங்கள் செம அறிவு ! " தென் சென்னை, தென் சென்னைன்னு சும்மா லேண்ட் விலை ஏத்திட்டாங்க சார். ஒரு டிரையிநேஜ் கனக்ஷன் தர எவ்ளோ வருஷம் ஆகுது பாருங்க ! தலைக்கு மேலே ஈ. பி ஒயர் போனா அது சிட்டியே இல்லை சார். கிண்டி எல்லாம் பாருங்க ஒயர் எல்லாம் தரைக்கு கீழே தான் போகும்" என்றார்.

தன் பையனுடைய கடை இது என்றும் அவன் இல்லாத நேரம் மட்டுமே நான் இருப்பேன்" என்றும் சொன்னவர் பேசிய மற்ற விஷயங்களில் சென்னை பற்றி நிறையவே அறிந்து கொள்ள முடிந்தது !

டேல் கார்நிஜி சொன்னமாதிரி  " Every man I meet is in someway my superior and I can learn from him".

எதிர்பார்க்கும் படம்: துப்பாக்கி

விஜய் படத்தை எதிர்பார்க்கும் படம் என்று சொல்வதா என்று கிண்டல் செய்யாதீர்கள் ! சிறு சரிவுக்கு பின் விஜய் மீண்டுவிட்டார் என்று தான் சொல்லணும். காவலன், வேலாயுதம், நண்பன் என  ஹாட்ரிக்  அடிச்சுட்டார்.  முருகதாஸ் எனக்கு ஓரளவு பிடித்த இயக்குனர் (ஏழாம் அறிவு சொதப்பலை விடுங்கள்);

கடந்த ஒரு வாரமாய் ஆபிஸ் ஜிம்மில் விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் செம விவாதம்.

"எங்க அஜித் வரலாறுல லேடி மாதிரி நடிச்சாரே ; உங்க ஆளால முடியுமா? "

" அட விடுப்பா.. அது அவருக்கு நேச்சுரலா வந்துடுச்சு" - ஒரு சாம்பிள் !

படம் வரும் வெள்ளி ரிலீசா, தீபாவளிக்கு தான் வருகிறதா என்பதில் ஏகப்பட்ட குழப்பம். வெள்ளியன்று வந்தால் மாலை காட்சியே படம் பார்க்க ஜிம் நண்பர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்...எனக்கும் சேர்த்து. (யாரது ஐயய்யோன்னு கத்துனது. நோ நோ அப்படில்லாம் கத்தப்படாது !)

பாலோ அப் :மடிப்பாக்கம் கொலை வழக்கு


மடிப்பாக்கம் நகை கடையில் பகலில் நிகழ்ந்த கொலை/ கொள்ளை பற்றி இங்கு எழுதியிருந்தோம் அல்லவா? அந்த வழக்கு துப்பு துலக்கப்பட்டு விட்டது

அலி மற்றும் தினேஷ் என்கிற இரு இளைஞர்கள் தான் இதனை செய்துள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். அலியின் வீட்டில் நகைகள் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இறந்த சிறுவனின் ரத்தக்கறை கூட இருந்ததாம் :((

இவர்கள் இருவரும் அறுபது முறைக்கு மேல் கடைக்கு அடகு வைக்கிற மாதிரி வந்து சென்றனராம். கடை முதலாளிக்கு நன்கு அறிமுகம் ஆன இவர்களுக்கு கஞ்சா பழக்கமும் உண்டு என கூறப்படுகிறது.

விரைந்து நடவடிக்கை எடுத்து கண்டு பிடித்துள்ளது போலிஸ். ஐந்து கிலோ நகையும் அப்படியே கிடைத்து விட்டது ..ஆனால்... போன உயிர் போனது தான். அந்த சிறுவனை இழந்து விட்டோம் :(

போஸ்டர் / QUOTE கார்னர்



அய்யாசாமி தயாரித்த கேரட் ஜூஸ்

"கேரட் ஜூஸ் செய்வது ரொம்ப ஈஸிங்க. கேரட் தோலை லேசா சீவி எடுத்துடுங்க. துண்டு துண்டா நறுக்கிக்கோங்க. காய்கறிக்கு நறுக்கிற மாதிரி ஒரே சீரா நறுக்கணும்னு இல்லை. மிக்சியில் தானே போட போறோம் ? நறுக்கிய கேரட்டை பில்டர் இருக்குற மிக்சியில் போட்டு நல்லா அரைக்கணும்.

ஒரு நிமிஷம் போல அரைச்சிட்டு, அப்புறம் கொஞ்சம் தண்ணி ஊற்றி மறுபடி அரைங்க.உடனே குடிக்கிறதா இருந்தா அத்தோட கொஞ்சம் பால் சேத்துக்கலாம். ஜூசை ஸ்கூல் அல்லது ஆபிஸ் எடுத்து போறதா இருந்தா பால் சேர்க்க வேண்டாம் (ஜூஸ் கெட்டு போயிடும் ); லேசா தேன் ஓரிரு சொட்டு சேர்த்தா கேரட் ஜூஸ் ரெடி !

அடிக்கடி இப்படி கேரட் ஜூஸ் செஞ்சு குடிச்சா, கண் பிரச்சனைகள் வராது அத்தோட கலர் அதிகமாகி சும்மா தகதகன்னு மின்னுவீங்க..ம்ம்ம்ம் !" -

Tuesday, November 6, 2012

தமிழேண்டா..! 25 பொது குணங்கள் !

மிழேண்டா என்கிற தலைப்பில் அவ்வப்போது முகநூலில் பகிர்ந்தவற்றின் தொகுப்பு இது.

எல்லாமும்,எல்லார்க்கும் பொருந்தாது என்பதோடு "இங்கு குறிப்பிடுபவை யாவும் கற்பனையே; யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் சொல்லவில்லை" என்பதையும் சொல்லி "கொல்ல" ஆசைப்படுகிறேன்.

சொல்லப்போனால் இவை ஐயாசாமியின் குணங்கள் என வச்சிக்குங்களேன் (சைபர் கிரைம் எப்படி எல்லாம் மிரட்டுதய்யா !)

****
தமிழேண்டா

1. அரை கிரவுண்டு நிலம் வாங்கி தனி வீடு கட்டி வாழ விரும்புவான் சென்னை தமிழன் !
###

2. மழை வந்தால் சாலையின் நடு சென்டரில் நடப்பது சென்னை தமிழனின் வழக்கம் !

###

3. வெள்ளிக்கிழமை தலைக்கு குளித்து, கூடவே கொஞ்சம் பூ வைத்து கொண்டு வந்தால் தமிழச்சியாக ஏற்றுக் கொள்வோம் !

###

4.  தெருவில் இருக்கும் யாரோ ஒருவரின் காலி ப்ளாட்டை குப்பை கொட்ட பயன்படுத்தினால் நீங்கள் தமிழர் தான் !

###

5. மனைவிக்கு அடங்குபவனும், பயப்படுபவனும் தான் எங்கள் தமிழன் !

###

6. ஆஸ்பத்திரிக்கு வரும்போதும், ஆபிசுக்கு லீவு போட்டோமே என குற்ற உணர்வுடன் அமர்ந்திருப்பான் தமிழன் !

###

7. சுஜாதா எழுத்து, ரஜினி படம் இரண்டில் ஒன்றேனும் பிடிக்கும் தமிழனுக்கு !

###

8. வருடத்துக்கொரு முறை கனவுக்கன்னியை மாற்றி விடுவான் தமிழன் !

###

9. தெருவில் எந்த கோயிலை பார்த்தாலும் கன்னத்தில் போட்டு கொள்பவரை பார்த்தால், அவர் தமிழர் என அடித்து சொல்லலாம்.

###

10. ஹோட்டலில் பார்சல் வாங்கும் போது "எக்ஸ்ட்ரா சாம்பார் தாங்க " என கூச்சமின்றி கேட்டால், அவன் நம்ம இனம் !

###

11. உங்கள் சம்பாத்தியத்தில் குறைந்தது 25 % -- 50 % சேமித்தால், நீங்கள் தமிழர் தான் !

###

12. ஷேர் ஆட்டோவில் பக்கத்தில் பெண் இருந்தால், கிளுகிளுப்போடு அமர்ந்திருப்பான் சென்னை தமிழன்.

###

13. திருட்டு வீ.சி.டியில் ஏற்கனவே பார்த்த படத்தை, "உலக தொலைக்காட்சிகளில் முதன்முறையாக" இரண்டாம் முறை பார்த்து ரசிப்பான் எங்கள் தமிழன் .

###

14. ஒருநாள் சீரியல் பார்க்காவிடில் "என்ன ஆச்சு?" என்று பார்த்த யாரிடமாவது கேட்டால் தான் தூக்கம் வரும் பல தமிழருக்கு.

###
15. பாஸுக்கு சோப்பு   போடுவது தன் கடமைகளில் ஒன்று என தெளிவாய் உணர்ந்தவன் தமிழன் .
###

16. தன் திருமணத்துக்கு வந்த சுவர் கடிகாரத்தையும், ஹாட் பேக்கையும் அப்படியே பேக் செய்து வேறு திருமணத்தில் பரிசளிக்கும் புத்திசாலியாக்கும் எங்க தமிழன் !


###

17. ஒன்வே-யிலும், ராங் சைடிலும் வண்டி ஓட்டி செல்வது தமிழர் பண்பாடு.

###

18. குழந்தையை டாடி, மம்மி என்று கூப்பிடவே சொல்லித் தருவான் மறத்தமிழன் .

###

19. கர்சீப்பை கன்னா பின்னாவென்று சுருட்டி இடது உள்ளங்கைக்குள் வைத்திருந்தால், நீங்கள் தமிழச்சி தான்.

###

20. சாவு ஊர்வலத்தில் சரக்கடித்து விட்டு யாராவது ஆடாவிட்டால், இறந்த தமிழனின் ஆன்மா சாந்தியடையாது

####

21. மொய் கவரை கண்டுபிடித்தவன் தமிழன்.

####

22. தன் குழந்தையை " சாப்ட்வேர் இஞ்சினியர் ஆக்கி கை நிறைய சம்பாதிக்க வைக்கணும்" என்பது, பல தமிழரின் சிலிர்க்க வைக்கும் நேயர் விருப்பம்.

####

23. தீபாவளிக்கும், புது வருடத்துக்கும் காலையில் கோவில் சென்று, பின் டிவி முன் செட்டில் ஆகிடுவான் நம்ம ஆளு !
####

24. தப்பே செய்யாவிட்டாலும் எங்கு போலீஸை பார்த்தாலும் உதறல் எடுக்கும் எங்க தமிழருக்கு !

####

25. எந்த குழந்தையை பார்த்தாலும், "கணக்கு பாடம்தான் மிக முக்கியம்" என சொல்வது தமிழனின் வழக்கம்.


****
நான் ஏதும் தவற விட்டிருந்தால் சொல்லுங்கங்கங்க !

Sunday, November 4, 2012

துப்பாக்கி: ஒருவரி கதை + பாடல்கள் எப்படி?

விஜய்யின் தீபாவளி ரிலீஸ் துப்பாக்கி. குங்குமம் பத்திரிக்கையில் இப்படத்தின் கதை என்ன என்று கேட்க, விஜய் இப்படி பதில் சொல்லியிருந்தார். " படத்தில் நான் ஒரு ராணுவ வீரன். விடுமுறையில் சொந்த ஊருக்கு வருகிறேன். நான் திரும்ப ராணுவத்துக்கு போவதற்குள் நடக்கும் சம்பவங்களே துப்பாக்கி படத்தின் கதை".

சரி ...படத்தின் பாடல்கள் எப்படி என்று பார்ப்போம்.
***
பாடல் ஒவ்வொன்றையும் ஐந்து, ஆறு முறை கேட்ட பின் தான் எழுதுகிறேன்.

A.R. முருகதாஸ் பொதுவாய் தன் கதைக்கு முக்கியத்துவம் தந்து அதற்கு தகுந்த படி ஹீரோ பார்ப்பார். இம்முறை விஜய்க்காகவே தான் கதை முதல் பாட்டு வரை வடிவமைத்த மாதிரி தோன்றுகிறது.


குட்டி புலி கூட்டம் டிபிக்கல் விஜய் பாட்டு. இந்த பாட்டை நீங்கள் எப்போது முதன் முறையாக கேட்டாலும் " இது விஜய் படத்து பாட்டு" என்று எளிதாய் சொல்லி விடுவீர்கள். வேட்டைக்காரன், கில்லி என எத்தனையோ படங்களில் கேட்ட விஜய் பாடலை நினைவு படுத்துது. காலை மடித்து உட்கார்ந்து, உட்கார்ந்து ஆடும் விஜய்யின் ஸ்பெஷல் டான்சை இந்த பாட்டிற்கு எதிர்பார்க்கலாம்.

துறு துறுன்னு இருந்திடு இருந்திடு துறு பிடிக்காமலே இருந்திட பறந்திடு என மெசேஜ் சொல்லவும் மறக்க வில்லை. விஜய் ரசிகர்கள் தவிர்த்து மற்றவர்கள் திரும்ப திரும்ப கேட்கிற அளவில் இந்த பாட்டு இல்லை என்பது சற்று வருத்தமே !

கூகிள் கூகிள் என்கிற பாட்டு - ஆண்ட்ரியா மற்றும் விஜய் பாடியுள்ளனர். கூகிள், யாகூ, சாட்டிங், யூ டியூப் என முழுக்க முழுக்க இணைய வார்த்தைகளை போட்டு எழுதப்பட்ட பாடல் (மதன் கார்க்கி). பாட்டின் துவக்கம் கேட்சி ஆக இருப்பதால் இந்த பாட்டு ஹிட் ஆகி உள்ளதாக அறிகிறேன்.

பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் கிண்டலடித்து பாடும் பாடல். பிரச்சனை என்னவென்றால் பாடல் வரிகள் புரியாத மாதிரி இசை முழுதும் டாமினேட் செய்து விடுகிறது

கிட்ட வந்து நான் பேசும் போதோ
twitterகுள்ள மூழ்கிடுவான்
இச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தந்தா
நச்சுன்னு ட்வீட்டா போட்டுடுவான்

என்றெல்லாம் வரிகள் இருக்கு என்பதை மதன் கார்க்கி தன் தளத்தில் பாடல்களை பகிர்ந்த போது தான் தெரிந்து கொள்ள முடிந்தது. நிச்சயம் பாட்டு கேட்கும் போது இந்த வரிகள் புரியவே இல்லை.

போய் வரவா என்பது மிக மிக மெதுவான மெலடி. உறவுகள் பிரிவதை அடிப்படையாய் வைத்து வருகிற பாட்டு. கொஞ்சம் முயன்றிருந்தால் முஸ்தபா முஸ்தபா போல கல்லூரி கடைசி நாட்களில் ஒலிக்கும் பாடலாய் வந்திருக்கலாம். மிக மெதுவான பாடல் என்பதால் அதற்கு சற்று வாய்ப்பில்லை என்றே சொல்லணும். கேட்க கேட்க இந்த பாட்டு ஓரளவு பிடிக்கலாம்

"வெண்ணிலவே " என்கிற பாட்டு "ஆஜா ஆஜா " என ஹிந்தியில் துவங்குகிறது. பின் அப்படியே ஒரு பல்டி அடித்து

வெண்ணிலவே தரையில் உதித்தாள்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாள்

என்று மெலடியாய் போகிறது. ஹரிஹரன் மற்றும் பம்பாய் ஜெயஸ்ரீ பாடிய இந்த பாட்டு மிக மெதுவாய் போனாலும் ரசிக்க கூடிய மெலடி. இந்த பாட்டு மழையில் ஒலிக்குமோ என்னவோ ! நடு நடுவே ஒற்றை மழைத்துளி கொட்டும் சத்தம் வந்து கொண்டே இருக்கிறது.

இவை தவிர அலைக்கா லைக்கா என்கிற பாட்டும் அண்டார்டிகா என்கிற பாட்டும் கூட ஆல்பத்தில் உள்ளன. இவை இரண்டும் நான்கைந்து முறை கேட்டும் ஈர்க்க வில்லை. படம் பார்த்த பின் எண்ணம் மாறுமோ என்னவோ தெரியலை.

பட விமர்சனம் எழுதும் போது முடிக்கிற மாதிரி தான் இந்த பாடல் விமர்சனத்தையும் முடிக்க வேண்டியிருக்கிறது.

துப்பாக்கி பாடல்கள்.. "Strictly for Vijay Fans " !

Monday, October 15, 2012

தொல்லை காட்சி: ஆட்டோகிராபும், கோல்ட் கேசினோவும்

ஜெயா டிவியில் ஆட்டோகிராப்

ஜெயா டிவி நிகழ்ச்சியின் ஆட்டோகிராபில் மிக பெரும் வெற்றி இயக்குனரான எஸ். பி.முத்துராமன் வந்து பேசினார். ரஜினி, கமலின் பல ஹிட் படங்களின் இயக்குனர். ஏ. வி. எம் முக்கு ஆஸ்தான இயக்குனர். இவரை பல வருடம் முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சந்தித்து பேசினோம். மிக எளிமையானவர். நாங்கள் கேட்டே கேள்விகளுக்கு பொறுமையாய் பதில் தந்தார்.

இந்த நிகழ்ச்சியில் சில படங்களை அவர் ஒரு மாசத்தில் எடுத்து முடித்ததும், மனைவி இறந்த செய்தி வந்த பின் கூட ஷூட்டிங் முடித்து விட்டே வீட்டுக்கு சென்றார் போன்ற தகவல்களும் தெரிய வந்தன.

ரோடு இருக்கு; பார்க்கு இருக்கு

தினமும் காலையில் விஜய் டிவியிலும் அப்புறம் ராஜ் உள்ளிட்ட பிற டிவிக்களிலும் ரியல் எஸ்டேட் காரர்கள் நிலத்தை விற்க விளம்பரதாரர் நிகழ்ச்சிகள் போடுறாங்க. பாத்துருக்கீங்களா? ஊரில உள்ள பல சின்னத்திரை நட்சத்திரங்களையும் கூட்டி வந்து " இதை விட சிறந்த இடம்; சீப்பான இடம் உலகிலேயே இல்லை" என பேச வைப்பாங்க. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் பார்த்தா அடுத்து இன்னொரு நிகழ்ச்சி ஆரம்பிக்கும். அதிலும் அதே ஆட்கள் வந்து " இது தான் சிறந்த இடம்; மறக்காம வாங்குங்க" அப்படின்னு சொல்லுவாங்க !

ரோடு இருக்கு; பார்க்கு இருக்கு என சொன்னாலும் அவையெல்லாம் ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட செட்டிங் என்பது நன்கு தெரிகிறது. இது தெரியாமல் எத்தனை பேர் நம்பி வாங்கி ஏமாறுகிறார்களோ !!

சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலை

ராஜ் டிஜிடல் பிளஸ் மற்றும் வின் டிவி உள்ளிட்ட பல சானல்களில் "சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலை " என்று சொல்லி ஒருவர் வந்து பேசோ பேசுன்னு பேசிக்கிட்டிருப்பார். ஒரு முறை என்ன தான் அப்படி சொல்றார்னு பார்த்தேன்.

"இளைஞர்களுக்கு கெட்ட பழக்கம் சொல்லி தருவதே நண்பர்கள் தான். அதனால் நண்பர்களே வச்சிக்காதீங்க (!!!??). உங்களுக்கு 'முடியாம போகும்போது' நண்பர்கள் வந்து உதவி செய்ய போவதில்லை" என்றார் ! மேலும் ஆண்மை குறைவுக்கு ஒரே தீர்வு இந்தியாவிலேயே தங்கள் நிறுவனத்தில் தான் கிடைப்பதாகவும், இளைஞர்கள் நண்பர்களிடம் இது பற்றி பேசாமல் தங்களை வந்து நாடுங்கள் என்றும் சொல்லி கொண்டிருந்தார்.

இளைஞர்கள் மனதில் பயத்தை விதைத்து, அதை வைத்து வியாபாரம் செய்றாங்க ! ஹும் :((

புது நிகழ்ச்சி : ராஜ் டிவியில் கோல்ட் கேசினோ


சுகாசினி நடத்தும் புது நிகழ்ச்சி இது. கவுன் பனேகா க்ரோர்பதி ஸ்டைல் தான். வேறொண்ணும் இல்லை ! பத்து கேள்விகள்.. ஒவ்வொன்றுக்கும் நான்கு ஆப்ஷன்ஸ் தந்து, சரியான விடை தேர்ந்தெடுக்கணும். என்ன ஒன்று தப்பாய் சொன்னாலும் தொடர்ந்து ஆட விடுகிறார்கள். தருமி சொல்ற மாதிரி " எவ்வளவு பிழை இருக்கோ அதற்கு தகுந்த மாதிரி பரிசில் குறைத்து கொள்ளுங்களேன்" தான் !

ஆனால் அதிகப்படியான ரூல்ஸ் சொல்லி குழப்பி தள்றாங்க. முதல்லே தங்க காயின் தருகிறார்கள். கடைசியில் ஜெயித்த பின் கடனை திருப்பி தாங்க என்கிறார்கள். ஒரே குஷ்டமப்பா சே கஷ்டமப்பா !

முரசு, சன் லைப் டிவிக்கள்

சன் மியூசிக் வகை சானல்கள் அநேகமாய் புது பாடல்களையே ஒளிபரப்பும் நிலையில் பழைய பாடல்களுக்கென்றே " முரசு" என ஒரு சானலை துவக்கியது கலைஞர் டிவி குழுமம். பழைய பாடல் விரும்பிகள் அதனை இரு கரம் நீட்டி வரவேற்க, இப்போது சன் டிவியும் சன் லைப் என ஒரு சானலை துவக்கி விட்டது. பழைய பாடல் விரும்பிகளுக்கு இப்போதெல்லாம் கொண்டாட்டம் தான் !

சீரியல் பக்கம் – மண்வாசனை

ராஜ் டிவியில் வெளிவரும் டப் ஆன சீரியல் ! பத்து வயசுக்குள்ளயே கல்யாணம் ஆன ஒரு சிறுமியின் கதை. பெயர் தான் ஆனந்தி. ஆனால் அவள் காண்பதோ அனைத்தும் கஷ்டங்களே ! எல்லாருக்கும் மாமியார் கொடுமை என்றால் இவருக்கு கணவரின் பாட்டி கொடுமை !

நம் வீட்டில் இதை பார்க்கிறாங்க. வீட்டுக்கு வரும்போது இந்த சீரியல் நடந்துகிட்டு இருக்கும். ஒரே அழுகை சத்தமா இருக்கும் ! நான் அங்கிருந்து ஓடிடுவேன்

சூப்பர் சிங்கர் இறுதி போட்டி 

ஒய்ல்ட் கார்ட் சென்று சொல்லியே இரண்டு வாரம் இழு இழு என இழுத்து ஆஜித் மற்றும் யாழினி இருவரும் பைனல் செல்வதாக அறிவித்தனர்.

இந்த வாரத்தின் ஹை லைட் அனு என்கிற சிறுமி மற்றும் அவள் தாயுடன் அவர்கள் பாட்டி போனில் பேசியது தான். அனு தாய் காதல் திருமணம் செய்ததால் 19 வருடமாய் பேசாமல் இருந்தவர், விஜய் டிவி முயற்சியால் பேசினார். அப்புறமென்ன ஒரே அழுகை மயம் தான் !

ரக்சிதா பைனல் செல்லாததில் சிறு வருத்தமே. இருப்பினும் எப்படியும் அவள் ஒரு நல்ல பாடகியாக நிச்சயம் வருவாள் என நினைக்கிறேன். 

Sunday, September 23, 2012

என் விகடனில் எங்க ஊர் நீடாமங்கலம் !

ன் விகடனில் எங்கள் ஊர் பற்றி வந்திருப்பதாக நண்பன் தேவா லிங்க் அனுப்பியதும் சென்று பார்த்து மிக, மிக மகிழ்ந்தேன். ஒளிப்பதிவாளர் கோபிநாத் பற்றி ஏற்கனவே இங்கு ஒரு பதிவில் சொல்லியிருக்கேன்.


பொதுவாய் எந்த பதிவும் காப்பி பேஸ்ட் செய்யாதவன் இந்த முறை விகடனுக்கு நன்றி போட்டு விட்டு அப்படியே போட காரணம், பதிவு எங்கள் ஊரை பற்றியது. நண்பர்களில் பலரும் நீடாமங்கலம் வந்து, எங்கள் வீட்டில் தங்கி, கடையில் என்னோடு அமர்ந்து அரட்டை அடித்தவர்கள். அவர்களில் நிறைய பேர் வீடுதிரும்பல் வாசிக்கிறார்கள். கீழே உள்ள படங்களில் உள்ள கமன்ட் மட்டுமே நான் போட்டது !
*********

காவிரியு்ம் அம்சவள்ளியும் என் முக்கியமான தோழிகள்!''

தமிழ்த் திரை உலகில் கமர்ஷியல் சினிமாக்களின் 'கில்லி’ ஒளிப்பதிவாளர் எஸ்.கோபிநாத், தன்னுடைய சொந்த ஊரான நீடாமங்கலம் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.



''இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு புண்ணிய பூமி நீடாமங்கலம். ஏனெனில், வடக்கே வெண்ணாறு, தெற்கே கோரையாறு, மேற்கே பாமணியாறு என ஊரின் மூன்று பக்கமும் மூன்று அழகான ஆற்றங்கரைகள் அமைந்து இருக்கும். அந்த மூன்று ஆறுகளும் பிரியும் இடம் 'மூணார் தலைப்பு’ என வழங்கப்பட்டது. சங்க காலத்தில் இந்த ஊர் 'நீடூர்’ என்றும் 'நீராடும் மங்கலம்’ என்றும் அழைக்கப்பட்டு இருக்கிறது. 'நீராடும் மங்கலம்’ என்பதே காலப்போக்கில் மருவி 'நீடாமங்கலம்’ என நிலைத்துவிட்டது.

இது ஒரு புண்ணியஸ்தலமும்கூட. இங்கே உள்ள காசி விஸ்வநாதர் கோயிலும் சந்தான ராமசாமி கோயிலும் மிகவும் பிரசித்திப் பெற்றவை. கி.பி 18-ம் நூற்றாண்டில் தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டபோது, அரசன் சிம்கானின் மனைவி யமுனாம்பாளுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அவள் இங்கேவந்து சந்தான ராமசாமி கோயில் குளத்தில் குளித்துப் புண்ணியம் அடைந்து, குழந்தை வரம் பெற்றாள். அன்று முதல் சந்தான ராமசாமி கோயில் குழந்தை இல்லாதவர்களின் குறைதீர்க்கும் கோயிலாக இருந்துவருகிறது. அப்போதைய காலகட்டத்தில் நீடாமங்கலத்துக்கு 'யமுனாம்பாள்புரம்’ என்றும் ஒரு பெயர் இருந்திருக்கிறது.


ஒளிப்பதிவாளர் கோபிநாத் வீடு. இதே தெருவில் 15 வீடு தள்ளி எங்க வீடு

நீடாமங்கலத்தில் எங்கள் குடும்பம் பாரம்பரியப் பெருமையைக்கொண்டது. பரம்பரை பரம்பரையாக நாங்கள் மளிகைக் கடை நடத்திவருபவர்கள். 'எஸ்.கே.வி.ஜி.எஸ். அண்ட் சன்ஸ் மளிகை’ என்றால் நீடாமங்கலத்துக்காரர்கள் எல்லோருக்கும் தெரியும். இப்போதும் அந்த மளிகைக் கடையை என் தம்பி நடத்திவருகிறார். அது மட்டும் இல்லாமல், பல ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்த்து நெல் சாகுபடிச் செய்த குடும்பம் எங்களுடையது.



எனது அண்ணன்கள், அக்கா, ஒளிப்பதிவாளர் கோபிநாத் படித்த LVS பள்ளி

நீடாமங்கலம் எல்.வி.எஸ். நடுநிலைப் பள்ளியில்தான் நான் என்னுடைய ஆரம்பக் கல்வியைக் கற்றேன். அப்போது நான் மிகவும் சேட்டைக்காரனாக இருப்பேன். ஆசிரியர்களிடம் அடிவாங்காத நாளே இல்லை. நானே குச்சி ஒடித்துக் கொண்டுவந்து கொடுத்து அடி வாங்குவேன். அந்தப் பள்ளியில் அடிபட்டுக் கற்றுக்கொண்ட நேரந்தவறாமை, சுய ஒழுக்கம் போன்ற பல நல்ல பழக்கங்களை இன்றும் என் வாழ்வில் கடைப்பிடித்துவருகிறேன். என் பள்ளியையும் ஆசிரியர்கள் ராஜகோபால், பழனிவேல் போன்றவர்களையும் என்னால் என்றுமே மறக்கமுடியாது.

பெரியார் சிலையும் எங்க மண்ணின் மக்களும்

ஆறாவது படிக்கும்போது அடிக்கடி தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க ஆரம்பித்தேன். அப்பாவுக்குத் தெரியாமல்தான் செல்வேன். ஆனால், 'நடுத்தம்பி படம் பார்க்க வந்திருக்கு’ என அப்பாவிடம் யாராவது தகவல் சொல்லிவிடுவார்கள். படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே வீட்டில் இருந்து ஆட்கள் வந்து என்னைக் கூட்டிப்போய்விடுவார்கள். போனதும் பெல்டாலேயே பின்னி எடுப்பார் என் அப்பா. ஆனாலும் மறுநாள் எப்படியாவது அந்தப் படத்தை பார்த்துவிடுவேன். அந்தவகையில் நான் படம் பார்த்த எங்கள் ஊர் தியேட்டர்களான காவிரியும் அம்சவள்ளியும் எனக்கு முக்கியமான தோழிகள். நான் ஒளிப்பதிவு செய்த முதல் படமான 'தில்’ ஒரு மாதம் காவிரி திரையரங்கில் ஓடியது. நாம் படம் பார்த்து வளர்ந்த திரையரங்கில் நாம் எடுத்தத் திரைப்படத்தை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என நினைத்தேன். ஆனால், அது முடியாமலே போய்விட்டது. நாளடைவில் அந்தத் திரையரங்கு மூடப்பட்டுவிட்டதில் எனக்கு நிறையவே வருத்தம் உண்டு.  

பத்தாவது படிக்கும்போதே என் வாழ்க்கை சினிமாதான், அதிலும் குறிப்பாக ஒளிப்பதிவுத் துறைதான் என்பதை முடிவு செய்துவிட்டதால் அதன்பிறகு நான் சரியாகப் படிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பில் பார்டரில் பாஸ் செய்துவிட்டு தரமணி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேரத் தயாரானேன். ஆனால், என்னை வலுக்கட்டாயமாக திருச்சி ஜோசப் கல்லூரியில் சேர்த்தனர். அதன்பிறகு மீண்டும் இன்ஸ்டிட்யூட்டில் சேர, ஆரம்பக்கட்டத் தேர்வுகள் முடித்து மறுநாள் சேர்க்கைக்காகத் தயாரான நிலையில் அம்மாவிடம் இருந்து போன் வந்தது, அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை என. உடனே ஊருக்குக் கிளம்பி வந்தவன்தான்... ஐந்து ஆண்டுகள் தீவிரமாக விவசாயம் பார்த்துக்கொண்டே அப்பாவையும் கவனித்துக்கொண்டேன். அதன்பிறகு நேரடியாகவே சினிமாவில் நுழைந்தேன்
எங்க ஊரில் டிராபிக் ஜாம் ! ஆட்டோ எல்லாம் எங்க ஊரில் ஓடுது பாருங்க  !

என் பால்ய கால நண்பர்களில் குமரன், மோகன், நடராஜா, சிவநேசன், குபேந்திரன் இவர்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவர்கள். அதேபோல், கவிஞர் ரவிசுப்ரமணியத்தை அடிக்கடி கும்பகோணத்துக்குச் சென்று சந்தித்து இலக்கியம் பற்றி பேசிவருவேன். என் இலக்கிய ஆர்வத்தைச் செம்மைப்படுத்தியவர் அவர். அவரோடு சேர்ந்து இலக்கிய கூட்டங்களுக்குச் செல்வேன். பொதுவாகவே, மிகவும் கண்டிப்பான என் அப்பா இது போன்ற விஷயங்களுக்கு எனக்கு நிறைய சுதந்திரம் தந்தார்.

இந்த ரயில்வே ஸ்டேஷனில் எங்கள் நண்பர் குழு செய்த வாலுத்தனங்கள் கொஞ்ச நஞ்சமா? 

நீடாமங்கலத்தில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு விஷயம் ரயில்வே ஸ்டேஷன். சுற்றி இருக்கும் தஞ்சை, திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம் போன்ற முக்கிய ஊர்களுக்கு இதுதான் மையப் புள்ளி. இங்கு இருந்து அந்த ஊர்களுக்கு எளிதாக ரயிலிலோ, பேருந்திலோ சென்றுவிடலாம்.

என்னைப் பொறுத்தவரை நீடாமங்கலம் ஒரு ராசியான ஊர். இங்கு இருந்து புறப்பட்டவர்கள் யாருமே சோடை போனது இல்லை. இசைக் கலைஞர்கள் 'தவில்’ மீனாட்சி சுந்தரம், நீலகண்ட சாஸ்திரிகள், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி இப்படி எல்லோருமே நீடாமங்கலம் தந்த பரிசுகள். அந்த வகையில் எனக்கும் நீடாமங்கலத்துக்கும் உறவு இருக்கிறது என்பதில் எனக்கு மிகவும் பெருமைதான்!''

- உ.அருண்குமார்

படங்கள்: கே.குணசீலன்
***********
நன்றி : என் விகடன் -திருச்சி பதிப்பு
************
தொடர்புடைய பதிவு :


சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா?

Saturday, September 15, 2012

பரபரப்பான காந்தி கொலை வழக்கு - ஒரு பார்வை

என்.சொக்கன் எழுதிய மகாத்மா காந்தி கொலை வழக்கு என்கிற புத்தகம் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


பொதுவாய் எல்லோரும் மகாத்மா வாழ்க்கையை தான் அறிவோம். அவரை கொன்றது கோட்சே என்று அறிந்தாலும், கோட்சே உடன் இன்னொருவரும் தூக்கில் இடப்பட்டார் என்பதும் அவர் பெயர் என்ன என்பதும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

வரலாற்றின் கருப்பு பக்கங்களை சொல்லும் இந்த புத்தகத்திலிருந்து சில தகவல்கள் :

* ஜனவரி 30, 1948 - அன்று காந்தி கொல்லப்படுவதற்கு இருபது நாளுக்கு முன்பே கோட்சே உள்ளிட்ட குழு காந்தியை அதே இடத்தில் கொல்ல முயன்றுள்ளது. கையெறி குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடும் போது மதன்லால் என்கிற நபர் மட்டும் மாட்டிக்கொள்ள மற்றவர்கள் தப்பி விட்டனர். போலிஸ் மதன்லாலிடம் விசாரித்த போது அவர் நான்கைந்து பேர் சேர்ந்து காந்தியை கொல்ல திட்டம் தீட்டியதை சொல்லி விட்டார். ஆனால் டில்லி போலிஸ் மற்றும் மும்பை போலிஸ் மிக தீவிரமாக இயங்கி குற்றவாளிகளை அடுத்த பத்து நாளைக்குள் பிடிக்க தவறி விட்டது.

* காந்தி உயிருக்கு ஆபத்து என்று அறிந்து அவருக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று போலிஸ் சொன்னதை காந்தி ஏற்கவில்லை. சரியான பாது காப்பு இருந்தால் காந்தி கொல்லப்பட்டிருக்க மாட்டார் என்றும் இதனால் காந்தியை கொன்றது காந்தியே தான் என்று ஒரு கருத்தும் உண்டு; இதே பெயரில் (காந்தியை கொன்றது காந்தியே தான்) ஒரு புத்தகமும் வெளிவந்துள்ளது !

* பாகிஸ்தான் பிரிந்த போது அவர்களுக்கு நம்மிடம் இருக்கும் பணத்தில் 75 கோடி தருவதாக ஒப்பு கொள்கிறார்கள் . அதன் படி முதலில் 20 கோடி தந்தாலும், மீதம் 55 கோடி இந்தியா தரவில்லை. காரணம் அதற்குள் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பிரச்சனை வந்து விட்டது. ஆனால் இது தெரிந்து காந்தி கோபிக்க, பின் இந்திய அரசு அந்த பணத்தை பாகிஸ்தானுக்கு தந்து விட்டது. ஏற்கனவே காந்தி முஸ்லீம்களுக்கு ஆதரவாக உள்ளார் என்று எண்ணியிருந்த கோட்சே குழுவுக்கு இது பெரும் கோபத்தை தந்து விட்டது

* கோட்சே முதலில் காந்தியின் கொள்கைகளை விரும்பிய மனிதனாக இருந்தார் என்று அறிய ஆச்சரியமாக உள்ளது. பின் ஹிந்து கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு சாவர்கர் என்கிற நபரின் follower ஆகிவிட்டார் கோட்சே.

* நாராயண ஆப்தே மற்றும் விஷ்ணு கார்கரே ஆகிய இருவரும் கோட்சே காந்தியை சுட்ட போது அவர் உடன் இருந்த நபர்கள். இதில் நாராயண ஆப்தேக்கு தூக்கு கிடைத்தது. கார்கரே உள்ளிட்ட பலருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது

* சுதந்திரத்துக்கு முன்பும் ஒரு முறை கோட்சே காந்தியை கத்தியால் குத்தி கொல்ல முயன்றுள்ளார். கூட்டத்தில் இது நிகழ, பலரும் சேர்ந்து காப்பாற்றி விட்டனர். காந்தி அப்போது " அந்த மனிதரை எதுவும் செய்யாதீர்கள். விட்டு விடுங்கள். அவரை என்னுடன் எட்டு நாட்கள் வந்து தங்க சொல்லுங்கள். அவரது கருத்தை நான் அறிய விரும்புகிறேன்" என்றார். கோட்சே அவருடன் தங்குவதை (அப்போதும் கொல்ல முயற்சிப்பார் என்பதால்) மக்கள் யாரும் விரும்ப வில்லை.

* காந்தியை கொல்ல வாங்கிய துப்பாக்கி பற்றி பெரிய கதையே விரிகிறது. முதலில் ஒரு துப்பாக்கி வாங்கி அது திருப்தி இன்றி அப்புறம் இத்தாலிய துப்பாக்கி ஐநூறு ரூபாய்க்கு வாங்கி, அதை வைத்து தான் காந்தியை சுட்டுள்ளனர்.

* காந்தியை கொல்ல ஒரு நாளுக்கு முன் கோட்சே தன்னுடன் இருக்கும் கார்கரே மற்றும் ஆப்தேக்கு ஒரு கடிதம் எழுதி அவர்கள் ஊரான மகாராஷ்டிராவுக்கு அனுப்புகிறார். காரணம் அவர்கள் தன்னுடன் இல்லை; ஊரில் இருந்தார்கள் என்று நிரூபிக்க ! வழக்கு நடக்கும் போதும் " நான் தான் கொன்றேன்; அவர்கள் உடன் இல்லை" என கோட்சே வாதிட்டாலும், போலிஸ் ஆதாரத்துடன் அவர்களும் உடன் இருந்தததை நிரூபிக்கிறது.
* காந்தியை கொல்ல போகும் முன் முதலில் பர்தா அணிந்து போகலாம் என புது பர்தா வாங்கி முயன்றுள்ளனர். பின் அது சரியாக இல்லை என கோட்சே கூறி ராணுவ வீரன் போன்ற உடை அணிந்து சென்றுள்ளனர். கொல்லும் முன் கோட்சே உப்பு கடலை சாப்பிட ஆசைப்பட, பல இடத்தில் கிடைக்காமல் கடைசியாய் அவருக்கு உப்பு கடலை வாங்கி தந்துள்ளனர் அவருடன் இருந்தவர்கள்.


* குறிப்பிட்ட தினத்தன்று காந்தி பிரார்த்தனை கூட்டத்துக்கு வரும் போது கோட்சே சுட வேண்டும் என்று காத்திருக்க, காந்தி உள்துறை அமைச்சர் பட்டேலுடன் தீவிர ஆலோசனையில் இருந்துள்ளார். பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அப்போது ஏதோ கருத்து வேறுபாடு. அது பற்றி காந்தியிடம் பேசியுள்ளார் பட்டேல். பட்டேலுடன் பேசியதில் பிரார்த்தனை கூட்டத்துக்கு நேரமாகி விட்டது என்று அவசரமாக குறுக்கு வழியில் காந்தி சென்றுள்ளார். காந்தியை மேடையில் வைத்து தான் சுட கோட்சே எண்ணியுள்ளார். ஆனால் காந்தி வழக்கமாய் செல்லும் வழியை விடுத்து, கோட்சே நின்ற இடம் வழியே செல்ல, அங்கேயே அவரை சுட்டார் கோட்சே. மூன்று குண்டுகள் மகாத்மா மார்பை துளைக்க அங்கேயே இறந்து விட்டார். சுட்ட கோட்சே கைகளை தூக்கியவாறு, " போலிஸ்" போலிஸ்" என்று கத்தியுள்ளார். மக்கள் வந்து அடித்து விடுவார்களே என்று தான் அவர் போலிசை அழைத்துள்ளார்.

* காந்தி இறந்த அன்று ரேடியோவில் காந்தியை ஒரு இந்து சுட்டு கொன்றார் என்று திரும்ப திரும்ப அறிவித்துள்ளனர். அந்த நேரம் இந்து- முஸ்லீம் பிரச்சனை பற்றி எரிந்து கொண்டிருக்க, காந்தியை ஒரு முஸ்லீம் கொன்றார் என்று மக்கள் நினைத்தால் பிரச்சனை பெரிதாகுமே என்று தான் இப்படி அறிவித்துள்ளனர்.

* இந்த வழக்கு 1948 மே மாதம் துவங்கி தொடர்ந்து நடந்து, 7 மாதங்களில் (1948 டிசம்பர் 30-ல்) முதல் தீர்ப்பு வருகிறது. இதற்கு மேல்முறையீடு செய்யப்பட்டு அது சிம்லாவில் நடக்கிறது. அங்கு பிப்ரவரி 10, 1949-ல் தீர்ப்பு வெளிவருகிறது. கோட்சே மற்றும் ஆப்தே நவம்பர் 15, 1949ல் தூக்கில் போடப்படுகின்றனர். அவர்களை தூக்கில் போடுவதை காந்தி குடும்பத்தினரே எதிர்த்தனர்.

* காந்தியை கொன்ற காரணம் என கோட்சே கோர்ட்டில் ஐந்து மணி நேரம் பேசியது "May it please your honour " என்று புத்தகமாக வெளிவந்துள்ளது. கோர்ட்டில் அன்று கோட்சே பேச்சை கேட்டவர்கள் கண்ணீர் விட்டு அழுததாகவும், கோட்சேயை விடுதலை செய்ய வேண்டும் என்று பலரும் கூறுமளவு கோட்சே பேச்சு இருந்ததாகவும் நீதிபதியே தீர்ப்பில் கூறுகிறார்.

****
சில பகுதிகளை தேவைக்கதிகமாக நீட்டி கொண்டே செல்வது, பல்வேறு மனிதர்களின் பெயர்கள் அவர்கள் பற்றிய தகவல்கள் நமக்கு குழப்புவது .... இப்படி சிற்சில குறைகள் இருந்தாலும் வரலாற்றின் மேல் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது !
****

வல்லமை இணைய இதழின் சுதந்திர தின சிறப்பிதழில் வெளியான கட்டுரை

Wednesday, August 22, 2012

சென்னை பதிவர் மாநாடு - காமெடி போட்டோக்கள்

சென்னையில் ஆகஸ்ட் 26 நடக்கவுள்ள பதிவர் மாநாட்டுக்காக ஒவ்வொரு வாரமும் பதிவர்கள் கூடி கும்மி அடித்த போது எடுத்த புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்காக.

முன்குறிப்பு: இந்த படங்கள் வெவ்வேறு ப்ளாகுகளில் இருந்து சுடப்பட்டவை !

கும்புட சொல்லி போட்டோ புடிக்கிறாங்க. நம்மளை வச்சு என்னென்ன காமெடி பண்ண 
போறாய்ங்களோ? 

இதுவரை பேசுனதை வச்சு ஏதாவது கேள்வி கேட்டுப்புடாதீங்க.  நான் நாளைக்கு பதிவுக்கு டெர்ரர் தலைப்பு யோசிச்சிங் -கவிதை வீதி சவுந்தர்  


" பதிவர் எனப்படுவது யாதெனின்"னு குங்குமம் புக்கிலே கட்டுரை எழுதிடலாமா? - லதானந்த்
"பின்னாடி முடி விட்டுருக்கவர் என் தம்பி பிலாசபி பிரபாகர் ; நான் அவரு அண்ணன் . முன்பக்கம் முடி வளப்பேன்". -மெட்ராஸ்பவன் சிவகுமார்
"கல்யாணம் நிச்சயம் ஆனவுடனே என் கிட்டே வா;  மனைவியை  சமாளிக்க  நூறு  வழின்னு  என்கிட்டே புக்கிருக்கு; சொல்லி தாரேன்"-   சீனுவுக்கு அட்வைஸ்  செய்யும் பாலகணேஷ்

ஒரு பதிவர் வந்து பார்த்தாலே நாலு பக்கத்துக்கு  எழுதுவாங்க. நூறு பேருக்கு மேலே வர்றாங்களாம். நம்ம பத்தி என்னென்ன எழுதுவானுங்களோ? ஆகஸ்ட் 26 -க்காக காத்திருக்கும் மண்டபம்

"அனுஷ்காவுக்கு நீங்க தான் ஜோடி" -ன்னு ஜெயகுமார் சென்னைபித்தன் ஐயாவிடம் சொல்லிருப்பாரோ?!
முக்கியப்புள்ளி,முக்கியப்புள்ளின்னு சொல்றாங்களே இந்த மூணு பேருதாங்க அது !
"வெயிட்டான பதவி தர்றேன்னு சொல்லி கூட்டி வந்தாங்க. சீட்  தான் வெயிட்டா கிடைச்சுது"
- ஆரூர் மூனா செந்தில் 
###############
ஆகஸ்ட் 26 விழாவிற்கு வருவோர் பட்டியல் இங்கே காணலாம் 
###############

பெங்களூரிலிருந்து : மோகன் குமார் 
Related Posts Plugin for WordPress, Blogger...