Tuesday, May 31, 2016

சென்னையில் பி.காம் அட்மிஷன் + சிறந்த 10 கல்லூரிகள் : ஒரு பார்வை

ங்கள் பெண் இவ்வருடம் + 2 முடித்து விட்டு கல்லூரியில் சேர்கிறார். எனவே அவருக்காக சென்னை கல்லூரிகள் பற்றி நிறைய தகவல்கள் விசாரித்தேன்.. அது பற்றிய ஒரு குறிப்பு..

லயோ...லா !!

உண்மையில் இப்போது சென்னை கல்லூரிகளில் பி.காம் சீட் கிடைப்பது தான் மிக கடினம்... !! கல்லூரிகளில் பி. எஸ். சி படிப்பிற்கான கவுண்ட்டர்கள் கூட்டமே இன்றி இருக்க, பி.காம்க்கு மட்டும் பல்வேறு கவுண்ட்டர்கள்.. !!ஒவ்வொன்றிலும் கூட்டம் அம்முகிறது..

+ 2 வில் கணிதம். பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி படித்த மாணவர்கள் பெரும்பாலும் பணம் தந்தாவது இஞ்சினியரிங் சேர்ந்து விடுகிறார்கள். எனவே பி. எஸ். சி - Physics, Chemistry போன்ற படிப்புகளுக்கு கூட்டம் மிக குறைவாக உள்ளது.. அதே நேரம்  + 2 வில் காமர்ஸ், அக்கவுண்ட்ஸ் படித்த மாணவர்கள் விரும்பும் ஒரே படிப்பாக பி. காம் இருக்கிறது.

உங்கள் மகன்/ மகள் அல்லது நெருங்கிய உறவினர் மகன்/ மகள்க்கு பி. காம் சீட் வேண்டுமென்றால் நீங்கள் செய்ய வேண்டியது:

1. தேர்வு முடிவு வர சில வாரங்கள் முன்னரே பல கல்லூரிகளில் அப்ளிகேஷன் தர துவங்கி விடுகிறார்கள். முடிந்தால் முன்பே அவற்றில் சில வாங்கி - மதிப்பெண் தவிர மற்ற விஷயங்கள் எழுதி வைத்து விடுவது நல்லது.

2. ரிசல்ட் வந்ததும், கணினியில் தெரியும் மார்க் சீட் பிரிண்ட் எடுத்து கொண்டு உடனடியாய் நீங்கள் சேர வேண்டிய கல்லூரியை அணுகி அப்ளிகேஷன் தந்து விடவும். காரணம் பல கல்லூரிகள் - அப்ளிகேஷன் வருகிற வரிசையிலேயே அட்மிஷன்  போடுகிறார்கள். அந்த கல்லூரியில் பி. காம்  படிப்புக்கு 100 சீட் என்றால் முதல் நாளே 1000 பேர் அப்ளிகேஷன் தருகிறார்கள். அதில் முதல் 100 மார்க் எடுத்தோருக்கு முதல் லிஸ்ட் தேர்வு என + 2 தேர்வு முடிவு வந்த மறு நாளே பல பெரிய கல்லூரிகள் வெளியிட துவங்கி விடுகின்றன.

வனம் போன்ற MCC வளாகம் 

தேர்வு முடிவு வெளிவந்து மறு நாள் சென்றாலே, அந்த கல்லூரியின் முதல் லிஸ்ட் வெளியாகி இருக்கும் !! அதில் சில பேர் சேராமல் போவார்கள்; எனவே அடுத்த லிஸ்ட் வெளியாகும்..

நாங்கள் சில காரணங்களால் 3 நாள் கழித்து தான் கல்லூரிகளை அணுகினோம்; அதற்குள் பல கல்லூரிகளில் முதல் 2 லிஸ்ட் முடிவுகள் வெளியாகி விட்டது...!!

3. நீங்கள் ஒரு வேளை முன்பே அப்ளிகேஷன் வாங்கி வைத்திரா விடில், உங்கள் மகன்/ மகளின் 10ஆம் வகுப்பு மார்க் சீட் ,  + 2 மார்க் சீட், சாதி சர்டிபிகேட், அவனது பெயர் உள்ள ரேஷன் கார்ட் காப்பி இவற்றின் நகல்களை எடுத்து கொண்டு ரிசல்ட் வரும் நாளே கல்லூரியை அணுகி விடுங்கள். அப்ளிகேஷன் எளிமையாக தான் இருக்கும். வாங்கி அங்கேயே பில் செய்து கொடுத்து விட்டு வந்து விடலாம்.

4. கொடுக்கிற அப்ளிகேஷன்களை உடனடியே பார்த்து விட்டு அநேகமாய் மறு நாளே பல கல்லூரிகள் தேர்வான மாணவர்களுக்கு SMS மற்றும் மெயில் அனுப்பி விடுகிறார்கள். அதுவும் அந்த SMS /மெயில் வந்த மறு நாளே பணம் கட்டி சேர வேண்டும் என்ற ரீதியில் தான் அனைத்து கல்லூரிகளும் பணிக்கின்றன. நீங்கள் முடிவு செய்ய நேரம் தருவதே இல்லை.

நீங்கள் குறிப்பிட்ட தேதியில் சென்று " கல்லூரியில் சேர - பணம் கட்ட நேரம் கொடுங்க" என்று கேட்டால் அவர்கள் - தருவதே இல்லை; அதிக பட்சம் சில நேரங்களில் ஒரு நாள் அவகாசம் தரலாம்; அதற்கே நீங்கள் போராட வேண்டும்.

ஸ்டெல்லா மாரிஸ்.. இங்கு படித்து முடிப்பதை மிக மிக பெருமையாக கருதுகிறார்கள் !

எனவே இந்த கல்லூரியில் சேரலாமா என்று முடிவெடுக்க வேண்டியது அவசியம். அதற்கு அவகாசமும் குறைவாகவே இருக்கும். மற்ற கல்லூரியில் இடம் கிடைக்குமா என்பதும் தெரியாத நிலையில் - இந்த நாள் சென்று பீஸ் கட்டா விடில் - இந்த சீட்டும் போய் விடும் என்கிற டென்ஷன் வேறு..

5. பெரும் கல்லூரிகளில் ஒரு செமஸ்டர் பீஸ் 25,000 முதல் 30,000 வரை ஆகிறது. இந்த பணத்தை தயாராய் வைதிருப்பதும்   அவசியம். முன்பே சொன்னது போல் முதல் நாள் அப்ளிகேஷன் தந்தால் ஓரிரு நாளில் செலக்ஷன் லிஸ்ட் வந்து விடும்; மறு நாளே நேரில் வந்து கவுன்சலிங் முடித்து பணம் கட்ட சொல்வார்கள்.. எனவே இந்த பணம் புரட்ட அதிக அவகாசம் இருக்காது.. எனவே பணம் தயாராய் இருப்பது அவசியம்..

6. அனைத்து கல்லூரிகளிலும் மொத்த மதிப்பெண்ணை கணக்கில் எடுப்பதில்லை; காமர்ஸ், அக்கவுண்டன்சி, எக்கனாமிக்ஸ், வணிக கணிதம் (அல்லது ) கணினி அறிவியல் - ஆகிய முக்கிய படிப்பில் என்ன மார்க் எடுத்தார்களோ அதன் அடிப்படையில் தான் அட்மிஷன் தரப்படுகிறது

7. சிறந்த பெண்கள் கல்லூரிகளான ஸ்டெல்லா மாரிஸ்  கல்லூரி, MOP வைஷ்ணவா போன்றவற்றில் முதல் லிஸ்ட் டில் - 4 பாடங்களிலும் 200 மார்க் எடுத்தோருக்கு தான் சீட் கிடைக்கிறது !! நம்ப சிரமமாய் தான் இருக்கும்.. நினைத்து பாருங்கள் .. 800க்கு 800.. மிக மிக குறைந்த பட்சம் 799 மார்க்குடன் முதல் லிஸ்ட் நின்று விடுகிறது !

விமன்ஸ் கிறித்துவ கல்லூரி, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி போன்ற கிருத்துவ கல்லூரிகளில் 25% கிருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. எனவே இந்த கல்லூரிகளில் கிருத்துவ மாணவிகளில் பலருக்கு முதல் லிஸ்ட்டில் 790 அல்லது 780 மார்க் வரை கூட சீட் கிடைக்க வாய்ப்ப்புண்டு

8. எத்திராஜ், விமன் கிறிஸ்டியன் கல்லூரி போன்ற பல கல்லூரிகளில் Aided மற்றும் செல்ப் பைனான்சிங்க் என்ற 2 பிரிவும் இருக்கிறது; Aided க்கு பீஸ் நிச்சயம் குறைவு; ஆனால் சீட் கிடைப்பது இன்னும் சிரமமாக இருக்கிறது; அநேகமாய் 4 பாடத்திலும் சேர்த்து 800 அல்லது 799 வாங்கினால் தான் அங்கு வாய்ப்பு.

எத்திராஜ்  கல்லூரி 
9. இட ஒதுக்கீடு முறை கல்லூரிகளில் பின்பற்றப்படுகிறது; இதனால் குறைந்த பட்சம் SC மற்றும் MBC மாணவ மாணவிகள் பயன் பெறுகிறார்கள். FC பிரிவினர் பாடு பெரும் திண்டாட்டம் என்றால், BC அதற்கடுத்து வருவதால்  அவர்களுக்கு சீட் கிடைப்பதும் சிரமமாகவே இருக்கிறது !

10. நிறைவாக..

அவசியம் 3 அல்லது 4 கல்லூரிகளில் அப்ளை செய்யுங்கள்; எந்தெந்த கல்லூரியில் சென்ற வருடம் என்ன கட் ஆப் - இந்த வருட கட் ஆப் என்னவாக இருக்கும் என்கிற விபரங்களை முன் கூட்டியே சேகரியுங்கள்.

நிச்சயம் ஏதேனும் ஒரு கல்லூரியிலிருந்து அழைப்பு வரும். ஆனால் மனித மனமே - எங்கு கிடைக்கிறதோ அதை பெரிதாய் நினைக்க மாட்டோம்; எங்கு கிடைக்கலையோ அதற்கு தான் ஏங்கும். அதே நேரம் இந்த வாய்ப்பையும் தவற விட்டால் என்ன ஆவது என்கிற கேள்வியும் உள்ள நிலையில் சரியான முடிவு எடுப்பது மிக அவசியம் !!

2013 ல் இந்தியா டுடே சர்வேயில் காமர்ஸ் படிக்க சென்னையில் சிறந்த கல்லூரிகள் என பரிந்துரைத்தவை இவை; அநேகமாய் இது சம்பந்தமாய் நடந்த இன்னும் சில சர்வேக்களும் கூட இந்த கல்லூரிகளை தான் சொல்கிறது:ANK
NAME OF THE COLLEGE
1.Loyola College

2.Madras Christian College(MCC)

3.Stella Maris College

4.Ethiraj College for Women

5.MOP Vaishnav College for women

6.D.G Vaishnav College

7.Women’s Christian College

8.Presidency College

9.Vivekananda College

10.Meenakshi College for Women
******
அண்மை பதிவுகள்:

தொல்லைகாட்சி: ஐ.பி.எல் பைனல்-அச்சம் தவிர் 

இது நம்ம ஆளு.. தப்பிச்சுக்குங்க சகோ ! சினிமா விமர்சனம்

Monday, May 30, 2016

தொல்லைகாட்சி: ஐ.பி.எல் பைனல்-அச்சம் தவிர்

ஓவர் அழுகாச்சி இன் கிங்க்ஸ் ஆப் டான்ஸ் 

பொதுவாய் விஜய் டிவி என்றாலே நெஞ்சை நக்கும் செண்டிமெண்டுக்கு நிறைய வாய்ப்பளிப்பார்கள் ...இம்முறை  கிங்க்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியிலும் அது தொடர்ந்தது.

கற்பழிக்கப்பட்ட பெண்ணின் மனநிலை, புற்று நோயால் இறப்பவரின் கடைசி நாட்கள் போன்ற காட்சிகளை வைத்து அனைத்து டான்சும் அமைத்திருந்தனர். 2 கான்செப்ட் பார்த்ததுமே - இது வேலைக்காகாது என   எகிறி விட்டேன்..

ஐ.பி. எல் கார்னர் 

ஐ.பி. எல் பைனலில் எனது அபிமான கோலி & டீ வில்லியர்ஸ் - இடம் பெற்ற  பெங்களூரு தோற்றது சற்று வருத்தமே. ஆனால் "May the better team win " என்ற சொல்லுக்கேற்ப, அன்று நன்கு ஆடியது ஹைதராபாத் தான். டி 20 - பேட்ஸ் மேன்கள் ஆட்டம்.. அடித்து ஆட கூடிய நல்ல வீரர்கள் இருக்கும் அணி வெல்லும் என்பதற்கு மாறாக - நல்ல பவுலர்கள் உள்ள அணி வென்றுள்ளது.. கோலியின் ஆட்டம் இந்த ஐ. பி.எல்முழுவதுமே மிக சிறப்பு; இந்த முறை அவர் அடித்த ரிக்கார்ட் நிச்சயம் கொஞ்ச வருஷம் யாராலும் பீட்  செய்ய முடியாது; 3 முறை பைனல் வந்து - ஓர் முறையும் கோப்பை வெல்லாமல் தென் ஆப்ரிக்கா போல காட்சியளிக்கிறது பெங்களூரு !

புது நிகழ்ச்சி : அச்சம் தவிர் 

விஜய் டிவியில் வர இருக்கும் புது நிகழ்ச்சி அச்சம் தவிர்.. அவ்வப்போது அட்வென்ச்சர் சீரிஸில் டிவி நட்சத்திரங்களை வைத்து விஜய் டிவி செய்யும் அதே நிகழ்ச்சி தான் இப்போது புது பெயரில்.. இம்முறை சோனியா அகர்வாலும் விஜயம்..

தொடர்ந்து பார்ப்பதில்லை; அவ்வப்போது சானல் மாற்றும் போது நிறுத்தி சற்று பார்க்க காரணம் - ஹீ ஹீ அழகான பெண்கள் தான்..

டிவியில் பார்த்த படம்: மைக்கேல் மதன காம ராஜன்

மைக்கேல் மதன காம ராஜன் ரிலீஸ் ஆன 1991ல் சட்ட கல்லூரி நண்பர்களுடன் படம் பார்த்தோம்.. யாருக்குமே படம் பிடிக்கலை !! என்ன படம்டா இது.. ரொம்ப செயற்கையா இருக்கு என பேசிக்கொண்டு வந்தோம்.. அந்த படம் 25 ஆண்டுகள் கழித்தும் லட்சகணக்கான பேரால் ரசிக்கப்படும் என நிச்சயம் நினைக்க வில்லை ..

போர் அடித்த சனிக்கிழமை மதியம்..இன்னொரு முறை ஜெயா டிவியில் பார்த்த போது வியந்த விஷயம் கமல் தான் !

இடைவேளைக்கு பின் 4 பாத்திரமும் மீசை இல்லாமல் கண்ணாடி போட்டுக்  கொண்டு ஒரே மாதிரி இருப்பார்கள்.. ஆனால் அவர்கள் ஒரு வரி பேசினாலே அது எந்த பாத்திரம் என நமக்கு தெரிந்து விடும்.  கமல் அந்தந்த பாத்திரத்தையும் அத்துணை அற்புதமாக செய்திருப்பார்.. இப்போது பார்க்கும் போதும் கூட ஆங்காங்கு வரும் சீரியஸ்நெஸ்சை தவிர்த்து காமெடி இன்னும் கூட்டியிருக்கலாம் என்றே தோன்றியது..

கமலின் சிறந்த படங்கள் பட்டியலில் நிச்சயம் இடம் பெறும்  மைக்கேல் மதன காம ராஜன் !

அழகு கார்னர்



நின்று போன நல்ல நிகழ்ச்சிகள் 

தொலைக்காட்சியில் விரும்பி பார்க்கிற நல்ல நிகழ்ச்சிகள் இருப்பதே அரிது தான். தொடர்ந்து பார்த்து தற்போது நின்று போன நல்ல நிகழ்ச்சிகள் சில ..

தினமும் விஜய் டிவியில் வரும் சூப்பர் சிங்கர்

ஞாயிறு கலைஞர் டிவியில் வரும் நாளைய இயக்குனர்

மக்கள் டிவி யில் மறு ஒளிபரப்பாகி வந்த பாலு மகேந்திராவின் கதை நேரம்

விஜய் டிவி யில் தவறாமல் பார்த்து வந்த மகா பாரதம்

இப்படி நல்ல நிகழ்சிகள் பல முடிந்து - சானல் உலகம் சற்றல்ல நிறையவே போர் அடிக்கிறது..

விஜய் டிவி புதிதாய் துவங்கும் சில நிகழ்சிகளாவது சற்று சுவாரஸ்யம் தருகிறதா என பார்க்கலாம் !
*****
அண்மை பதிவுகள்:

இது நம்ம ஆளு.. தப்பிச்சுக்குங்க சகோ ! சினிமா விமர்சனம்

சென்னையில் பி.காம் அட்மிஷன் + சிறந்த 10 கல்லூரிகள் : ஒரு பார்வை 

Sunday, May 29, 2016

இது நம்ம ஆளு.. தப்பிச்சுக்குங்க சகோ ! சினிமா விமர்சனம்

பாக்க்யராஜின் இது நம்ம ஆளு 90 களில் ரிலீஸ் ஆகி நிறுத்தவே முடியாமல் ஓடி தள்ளியது. அதே பெயரில் இப்போது சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடித்த படம்..

முதலில் இந்த படம் ரிலீஸ் ஆகியதே மாபெரும் ஆச்சரியம்..  பட தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் சண்டை; மியூசிக் டைரக்டர் மற்றும் நடிகர் - இயக்குனரோடு சண்டை.. இந்த நிலையில் எதோ ஒரு விதமாக ரிலீஸ் ஆனது படம்.

கணினி துறையில் டீம் லீடர் ஆக இருக்கும் சிம்பு நயன்தாராவை பெண் பார்க்க செல்கிறார்... பார்த்த மாத்திரத்தில் பிடித்து போகிறது.. அண்ணாச்சிக்கு பழைய காதல் இருப்பது தெரிய வருகிறது ...... குடும்பத்தாருக்குள் வரும் பிரச்சனைகள் இவற்றை மீறி நயன்தாராவை கை பிடித்தாரா என்பதே கதை

இப்படி ஒரு படம் ஆரம்பித்து பார்த்ததே இல்லை; குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் என்பதால் படம் துவங்கும் முன் அதையே சில நிமிடத்துக்கு காட்டி எரிச்சல் ஊட்டுகிறார்கள்..

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் சாப்ட்வேர் துறையில் பணி புரிவோர் பற்றி சொல்லும் விஷயங்கள் அவர்களையும் கூட சிரித்து ரசிக்க வைக்கும்..

சிம்பு சாப்ட்வேர் இஞ்சினியர் பாத்திரத்துக்கு நன்கு பொருந்துகிறார். ரொமான்ஸ்.. டான்ஸ்.. காமெடி என எளிதான பாத்திரம்..

நயன்தாராவா இது !! சில வருடங்கள் முன் நடந்த படப்பிடிப்பு என்பது தெளிவாய் நயன் பருமனாய் இருப்பதை பார்த்தாலே தெரிகிறது.. மிக சுமாரான பாத்திரம் மற்றும் நடிப்பு.. சிம்பு- நயன் நிஜ வாழ்க்கை பழைய காதல் தரும் சுவாரஸ்யம் மட்டுமே தொடர்ந்து காண வைக்கிறது 



இது நம்ம ஆளு "ஆண்ட்ரியா" தான்.. !! அம்மணி என்னா அழகு.. !! இன்னும் கொஞ்சம் நேரம் வர மாட்டாரா என ஏங்க வைத்து  அடிக்கடி காணாமல் போய் விடுகிறார்.. 

சிம்புவின் நண்பன் + டூ வீலர் டிரைவராக வந்து படத்தை கொஞ்சமேனும் காப்பாற்றுவது சூரி .. !

படத்தில் எல்லாரும் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சினிமா என்பது ஒரு விஷுவல் மீடியம் என  நியாபகம்...

இயக்குனர் பாண்டிராஜை எந்த விதத்தில் சேர்ப்பது? பசங்க. பசங்க -2 என நல்ல படம் எடுப்பவர் தான் இம்மாதிரி படங்களையும் எடுக்கிறார் ! ஒப்புக் கொண்டோம்.. முடித்து விடுவோம் என  ஏனோ தானோவென்று  வந்திருக்கிறது படம்.. சுவாரஸ்யம் இல்லாத கதை - பிற்பகுதி திரைக்கதை தாலாட்டுகிறது !

நிஜ வாழ்க்கையில் நயனை மணக்க முடியாத ஏக்கம் தீர, படத்தில் சிம்பு நயனுக்கு பல முறை தாலி கட்டுகிறார் :)




இது நம்ம ஆளு என்பதற்கு பதில் இது நம்ம போனு என பெயர் வைத்திருக்கலாம். 130 நிமிட படத்தில் 110 நிமிடம் போனில் பேசுகிறார்கள். மீதி 20 நிமிடம் பாட்டு பாடுகிறார்கள். முடியல !!

இடைவேளைக்கு பின் அவ்வளவு சத்தத்திலும் தூங்கி விட்டேன்.. படம் அவ்வளவு சுராவஸ்யம் !

இது நம்ம ஆளு.. தயவு செஞ்சு தப்பிச்சுக்குங்க சகோ ! அவ்ளோ தான் சொல்ல முடியும் !!



Saturday, May 28, 2016

ஜாலியான சிம்லா பயணம்- எங்கள் ஹோட்டல் + குப்ரி + கிரீன்வேலி

சிம்லா சென்று இறங்கியதும் போர்ட்டர்கள் போல் உள்ள கமிஷன் ஏஜண்டுகள் நம்மை மொய்க்கிறார்கள். "ரூம் வேணுமா?" என கேட்டு ! ரூம் போட்டாச்சு என்று சொன்னாலும் ஹோட்டல் பேர் கேட்டு விட்டு " அங்கேயா ரூம் போட்டுருக்கீங்க? அது வேஸ்ட். ரொம்ப தூரம் இருக்கு " என்று நம் மனதை கலைக்க பார்க்கின்றனர். " நல்ல ஹோட்டலுக்கு நான் கூட்டி போகிறேன் " என்று மொய்க்கிற இவர்களை தவிர்த்து விட்டு வெளியே வந்தால் அரசாங்கமே ஆட்களை நியமித்து காருக்கு குறிப்பிட்ட தொகை மட்டும் தந்து உங்கள் ஹோட்டலில் இறக்கி விட வழி செய்துள்ளது.

சிம்லாவில் உள்ள ஒரு அரசாங்க அலுவலகம்

சிம்லா முழுதும் ஆட்டோக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இங்கு நீங்கள் ஆட்டோவை பார்க்கவே முடியாது. இதனால் எங்கு போனாலும் காரில் தான் போகணும். காருக்கு குறைந்தது (Minimum amount) நூறு ரூபாய் வாங்குகிறார்கள். 

சிம்லாவில் லோக்கல் டூர் ட்ரிப் அடிக்க ஹிமாச்சல் டூரிசமே ஏற்பாடு செய்கிறது. ஒரு நாளில் குப்ரி மற்றும் செயில் பேலஸ் ஆகிய இடங்களை இவர்கள் சுற்றி காட்டுகிறார்கள். அப்படி ஒரு நாள் டூரில் தான் நாங்கள் சிம்லாவின் இடங்களை சுற்றி பார்த்தோம்.

சிம்லாவில் நாங்கள் பார்த்த சில இடங்களை ஒவ்வொன்றாய் பார்ப்போம்

குப்ரி

                            

குப்ரி என்ற இந்த இடம் சிம்லா சென்ற பலரும் செல்வார்கள். உண்மையில் இங்கு பெரிதாய் ஒன்றுமில்லை. குதிரைகள் நிறைய இருக்கும் மலைப்பாங்கான இடம் அவ்வளவு தான்.

குப்ரி யை நெருங்கும் போதே ஏராள குதிரைகள் இருப்பதை கண்கள் மட்டுமல்ல மூக்கும் காட்டி கொடுத்து விடுகிறது (கப்பு தான் !)

குப்ரியில் சில பஸ்கள் மேலே வரை செல்லும். சில பஸ்களோ குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி விட்டு அதன் பின் குதிரையில் போக சொல்வர். உண்மையில் பஸ் மேலே ஏறும் வரை அனுமதியும் வசதியும் உள்ளது. ஆனால் குதிரை காரர்களுக்கு வருமானம் வேண்டும் என்கிற "ஒப்பந்தத்தில்" தான் இப்படி பாதியில் பஸ்ஸை நிறுத்துவது. குதிரை மேல் ஏறி போவதில் விசேஷமா ஏதும் இல்லை !  குதிரை சவாரி செய்வது எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதை தவிர.

குப்ரி கடல் மட்டத்திலிருந்து 8500 அடி உயரத்தில் உள்ளது

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம் இங்கு தான் கையெழுத்தானது 
இந்தியா பாகிஸ்தான் இடையே 1971-ல் போர் நடந்தது. 1972-ல் போர் நிறுத்தம் நிகழும் போது இங்கு தான் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திராவும் பாகிஸ்தான் அதிபரும் இங்கு கையெழுத்திட்டனர்.

உள்ளே சிறு கார்டன் மற்றும் மேற்சொன்ன சரித்திர பிரசத்தி பெற்ற இடத்தை காண டிக்கெட் ஐந்து ரூபாய்க்கு வாங்குகிறார்கள்.

இந்த இடத்தில் எடுத்த வீடியோ இதோ



சிறுவர்கள் விளையாட கம்பியூட்டர் கேம்ஸ் இங்கு உள்ளன.

                                           


இங்கு ஒரு Zoo கட்டி கொண்டுள்ளனராம்.விரைவில் திறக்க படலாம்

இங்கு இந்த இடதிற்கென சிறப்பு மிக்க சில பழங்கள் விற்கப்படுகின்றன. அவற்றின் பெயர்கள்: செர்ரி, ஆப்ரிகார்ட், காபல் ஆகியவை. இதோ இந்த படத்தில் அந்த பழங்களை பாருங்கள்

                       

சைனாவிலிருந்து நிறைய பொருட்கள் இங்கு கொண்டு வந்து விற்கப்படுகின்றன.


சைனா பசார் என்ற பெயரில் கடைகள் உள்ளன. கீ செயின் கிளிப் போன்ற சமாச்சாரங்கள் இங்கு வாங்கினர். இந்த இடம் சிம்லாவிலிருந்து மலை மேல் உள்ளதால், நாம் பொருட்களை சிம்லாவில் வாங்குவதே புத்தி சாலிதனம். இங்கு சிம்லாவை விட விலை அதிகம் இருக்க வாய்ப்பு அதிகம்

குப்ரியில் நின்ற போது எங்கள் பஸ்ஸில் வந்த ஒரு இளம் ஜோடி பாரில் சென்று புகுந்தது. பின் நிதானமாக, தாமதமாக வந்து சேர்ந்தது. பெண்ணுக்கு அப்புறம் வழியெல்லாம் வாந்தி ! மலை பிரதேசத்தில் நல்ல நேரத்திலயே குமட்டும் ! இதில் ஆல்கஹால் வேறு சாப்பிட்டால் என்ன ஆவது?

நாங்கள் லோக்கல் டூர் சென்ற பஸ் 

குப்ரி செல்லும் வழியில் கிரீன் வேலி என்கிற இடம் உள்ளது. முழுக்க மரங்கள் சூழ்ந்து பச்சையாக இருப்பதால் இந்த பெயர்.


இங்குள்ள மரங்களின் பெயர் தேவதார் மரங்கள் என்பதாகும்.
இங்கு எடுத்த வீடியோ:


சிம்லா முழுவதுமே "Yak " என்று சொல்லப்படுகிற இந்த மிருகம் மிக பேமஸ். பல இடங்களிலும் இது நிற்கும். இதன் மீது அமர்ந்து போட்டோ எடுத்து கொள்ள பலரும் விரும்புவார்கள். அப்படி ஏறி போட்டோ எடுக்க ஒரு ரேட், வீடியோ எடுக்க ஒரு ரேட். அதன் மீது அமர்ந்து ரவுண்ட அடிக்க தனி காசு.



மேலே நாம் எடுத்த போட்டோ மற்றும் வீடியோ இதோ:


ஹோட்டல் சுக் சாகர்

நாங்கள் தங்கிய ஹோட்டலை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். ஹோட்டல் சுக் சாகர் !

Rs. 1400 முதல் இரண்டு பெட் ரூம் அறைகள் கிடைக்கிறது. நிச்சயம் ஒரு டீசன்ட் ஹோட்டல். உணவும் நன்கு உள்ளது. புபே விலை இருநூறு ரூபாய். இது அதிகம் என நினைத்தால், உணவுகள் ஆர்டர் செய்து சாப்பிடலாம். ஒரு நாள் புபேயும் மறுநாள் ஆர்டர் செய்தும் சாப்பிட்டோம், ஆர்டர் செய்து சாப்பிடுவது சீப்பாக உள்ளது. சப்பாத்தி மற்றும் அதற்கான சைட் டிஷ் மிக அருமை


இரண்டு சீக்கியர்கள் தான் இதற்கு ஓனர்கள். இருவரும் எப்போதும் ஹோட்டலில் இருந்து வியாபாரத்தையும் வாடிக்கையாளர்களையும் கவனிக்கிறார்கள். இதனாலேயே ஹோட்டல் நிர்வாகம் நன்கு உள்ளது. இரவு பத்தரை, பதினோரு மணி வரை இருந்து விட்டு அப்புறம் தான் கிளம்புகிறார்கள்.

புபேயில் சாப்பிடும் போது, இவர்களில் ஒருவர் வந்து " வேறு ஏதும் வேணுமா?" என பல முறை நம்மிடம் கேட்டு உபசரித்தார்.

ஐஸ்கிரீம் குறிப்பாய் மில்க் கிரீம் செம சூப்பராக இருந்தது.

இந்த சீக்கியர்களிடம் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தேன்

" நீங்க தான் ஓனரா சார்?" என்றதும், "கடவுள் தான் ஓனர். நாங்க அவரோட வேலை காரர்கள்" என்றார் செண்டிமென்ட்டாய்"..!

Wednesday, May 25, 2016

வானவில்-டீ வில்லியர்ஸ்- புதிய நியமம்-பெட்ரோல் பங்க் ஏமாற்று வேலை

பார்த்த படம்: புதிய நியமம் (மலையாளம்) 

இரண்டே கால் மணி நேர படத்தில் - 2 மணி நேரம் ஹீரோயினுக்கு தான் முழு ஸ்கோப்;  கடைசி 15 நிமிடம் தான் உங்களுக்கு என்றால் எந்த சூப்பர் ஸ்டார் ஒத்து கொள்வார்? மம்மூட்டி ஒத்து கொண்டுள்ளார்..!!

முழுக்க முழுக்க பெண்ணிய படம் என்ற ரீதியில் சென்று, அந்த கடைசி 15 நிமிடத்தில் இது ஹீரோவின் படம் தான் என ஜம்மென்று முடிகிறது.



ஒரு அழகிய குடும்பம்.. அந்த குடும்ப பெண்களிடம் விளையாடும் இளைஞர்(கள்).. அதை களையெடுக்கும் ஹீரோ என அப்படியே த்ரிஷ்யம் பாணி கதை.ஆனால் திரைக்கதை முற்றிலும் வேறானது..

முதல் பாதி மிக மெதுவாய் நகர்கிறது..நயன்தாராவின் அமைதிக்கு பின் எதோ ஒரு பயங்கரம் ஒளிந்திருப்பது புரிகிறது.. அதற்கான காரணம் இடைவேளைக்கு பின் தான் தெரிகிறது.. இரண்டாம் பாதி நிச்சயம் சுவாரஸ்யம்..

நயன்தாரா அசத்தல்.. !! மம்மூட்டி ஏன் இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொண்டாரோ என்ற கேள்வி கடைசி வரை உறுத்த, அது படம் முடியும் போது சரியானது..

த்ரில்லர் கதை ரசிப்பவர்கள் நிச்சயம் ஒரு முறை காணலாம்.. !

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே - இந்திய அணி டீம் செலக்ஷன் 

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே டூருக்கு இந்திய அணி தேர்வாகியுள்ளது. அஷ்வின், ஜடேஜா போன்ற ரெகுலராய் ஆடும் வீரர்களுக்கு ஓய்வு..

ஒரு நாள் மற்றும் 20-20 ல் தோணி தவிர மற்ற அனைவரும் -  டீமில் இதுவரை இல்லாதவர்கள்.... இவ்வளவு புது நபர்களை சேர்த்தும் முக்கியமான சிலரை சேர்க்க வில்லை என ஏகப்பட்ட குரல்கள் !!

ஐ. பி. எல் ஆட்டம் அவசியம் கணக்கில் எடுத்து தான் அணி தேர்வாகியுள்ளது.. அதில் ஏராள இண்டர்நேஷனல் வீர்கள் ஆடுகிறார்களே.. அந்த ஆட்டத்தை எப்படி கணக்கில் எடுக்காமல் இருக்க முடியும் என தேர்வாளர்கள் சொன்னாலும் இந்த முறை - ஐ. பி எல்லில் மிக நன்கு ஆடிய ரிஷப் பாண்ட், க்ருனால் பாண்ட்யா போன்ற சில வீரர்களை சேர்க்காதது வருத்தமே. இத்தனைக்கும் 15 பேர் கொண்ட அணியில் 10க்கும் மேற்பட்டோர் புதிதாய் ஆடுபவர்கள்.. ஐ. பி. எல்லில் சொதப்பிய சிலருக்கு வாய்ப்பளித்து விட்டு, நன்கு ஆடிய வீரர்களை விடுவது.. இன்னமும் டீம் செலக்ஷனில் உள்ள ரீஜனல் அரசியலையே காட்டுகிறது !

அம்மாவின் அமைச்சர்கள்

அம்மாவின் அமைச்சர் பட்டியலில் இம்முறை ஒரு சின்ன வித்யாசம்.. ஏராள பெயர்கள் நமக்கு தெரிந்திருக்காது. சில பெயர்கள் நமக்கு கொஞ்சம் பரிச்சயம் ஆகியிருக்கிறது.. (சென்ற முறை அமைச்சராக இருந்து மீண்டும் இம்முறை வந்தவர்கள்)

130 சீட்டுகள் .. 33 அமைச்சர்கள்.. நான்கு MLA வில் ஒருவர் மந்திரி !!!! பதவி கிடைக்காதவர்கள் வருந்த தேவையே இல்லை.. சுழற்சி முறையில் சிலர் தூக்கியெறியப்பட, நிச்சயம் இன்னும் பலருக்கு வாய்ப்பு கிட்டும்..

அம்மாவின் வாக்குறுதிகள் சில நிறைவேற்றப்படுகிறது.. டாஸ்மார்க் நேர குறைப்பில் பெரிய மாறுதல் (Impact) இருக்க போவதில்லை; 500 கடைகள் மூடல் நல்ல முடிவு.. கொஞ்சம் கொஞ்சமாக நிறைய கடைகள் மூடினால் மிக நல்லது !

அழகு கார்னர் 

அம்மணி (வாணி போஜன்) டிவி சீரியலில் மட்டுமே நடிக்கிறார் ;  நிச்சயம் சினிமாவில் வளம் வரலாம்; என்ன தயக்கமோ??



பெட்ரோல் பங்க் : இப்படியும் ஏமாத்துறாங்க !!

அண்மையில் வடபழனியிலிருந்து அசோக் நகர் வருகையில் வடபழனி சிக்னல் தாண்டியதும் இடது புறம் உள்ளஒரு சின்ன பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டேன். (அநேகமாய் ஷெல் அல்லது மிக நல்ல பங்க்கில் மட்டுமே  போடுவேன்; பெட்ரோல் தீருமோ என்ற ஐயத்தில்  சிறு பங்க் சென்றேன்).

200 ரூபாய் பெட்ரோல் போட சொன்னேன். போட்டு முடித்து விட்டார். பின்னே அமர்ந்திருந்த பெண்.. " அப்பா அங்கே பாரு.. 20 ரூபாய்க்கு தான் போட்டிருக்கார்" என சொல்ல, நானும் உற்று கவனித்து அதிர்ந்தேன்.. !

எவ்வளவு ரூபாய்க்கு பெட்ரோல் என அழுத்தும் போது பைசாவிற்கும் சேர்த்து நிறைய சைபர் போடுகிறார்கள். எனவே 200 ரூபாய் அழுத்தி விட்டார் என நினைத்திருந்தேன்.. இப்போது தான் போட்டது 20 ரூபாய்க்கு என தெரிகிறது.. பெட்ரோல் போட்ட நபரிடம் கேட்க, " அட .. 20 ரூபாயா .. கவனிக்கலை சார்" என மீண்டும் 180 ரூபாய்க்கு போட்டார்.. !!

எத்தனை பேருக்கு இப்படி ஏமாற்றுகிறார்களோ !! தேவை கவனம் !!

போஸ்ட்டர் கார்னர்



ஐ.பி. எல் கார்னர் 

பெங்களூரு Vs குஜராத் ப்ளே ஆப் மேட்ச் - முதலில் சாதாரணமாய் துவங்கி பின் அதிரடியானது...

வெறும் 158 ரன் சேசிங்; பெங்களூரு ஊதி தள்ளிடுவாங்க என நினைத்தால் - 26 ரன் எடுப்பதற்குள் 5 பேர் அவுட்.. இப்போ 20-20 ல் பல டீம் குறைவான பேட்ஸ் மேன் - நிறைய பவுலர் உடன் விளையாடுகிறார்கள்.. எனவே  கடைசியில் இருப்போர் பவுலர்கள் தான்.. டீ வில்லியர்ஸ் மட்டும் இருந்தார்..

பின்னிக்கும் ஒரு மோசமான LBW அவுட் கிடைக்க, நிச்சயம் பெங்களூரு கதை முடிந்தது என நினைத்தேன்.. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு ரன்னாய் எடுத்து கடைசி 5 ஓவர் வரும்போது விஸ்வரூபம் எடுத்தார் டீ வில்லியர்ஸ் !

வேக பந்து வீச்சாளர் அவுட் சைட் ஆப் ஸ்டாம்ப் வீசும் பந்தை மிட் விக்கெட்டில் சிக்ஸ் அடிக்கிறார்.. அடுத்து பந்து காலுக்கு நேரே லெக் ஸ்டாம்பில் போட்டால் திரும்பி ரிவர்ஸ் சுவீப்பில் பாயிண்டில் பவுண்டரி அடிக்கிறார்.. இந்த ஆள் மனுஷனே கிடையாது !! ரணகளம் !

நான் டீ வில்லியர்ஸ் ரசிகன் என்பதால் - இந்த இன்னிங்க்ஸ் கொண்டாட்டமாய் இருந்தது..

டீ வில்லியர்ஸ் பற்றி அண்மையில் கோலி சொன்னது: "அவர் உலகிலேயே சிறந்த வீரர்; அதை விட முக்கியமாய் அவர் மிக சிறந்த மனிதர்; அணியில் ஒவ்வொருவருக்கும் அவரை போல உதவ யாராலும் முடியாது !"

டீ வில்லியர்ஸ் .......................தல.. நிஜமா நீ பெரிய மனுஷன் யா !

Tuesday, May 24, 2016

சித்த மருத்துவ டாக்டர் படிப்பு - BSMS : படிப்பும் வேலை வாய்ப்பும்

ருத்துவர் ஆக வேண்டுமென்பது பலரின் கனவு. அரசு மருத்துவ கல்லூரியில் MBBS அனைவருக்கும் கிடைப்பது மிகவும் சிரமம். நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தை போதிக்கும் BSMS என்னும் நான்கரை வருட சித்தா டாக்டர் படிப்பை பற்றி சில முக்கிய தகல்வல்கள்..

+ 2 வில் என்ன க்ரூப் படித்தவர்கள் சேரலாம்? 

+ 2 வில் கணிதம்/ இயற்பியல் / வேதியல் / உயிரியல் படித்த மாணவர்கள்  அல்லது இயற்பியல், வேதியல், தாவரவியல்/ விலங்கியல் என சயின்ஸ் க்ரூப் படித்தவர்கள் படிக்கலாம். உயிரியல் படிப்பு படித்திருப்பது மிக அவசியம்.

சில பள்ளிகளில் "சித்தா க்ரூப்" என ஒன்றிருக்கும். இவர்களும் இந்த படிப்பில் சேரமுடியும்



அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் எங்குள்ளன? 

அரசு சித்தா கல்லூரிகள் சென்னை மற்றும் பாளையங்கோட்டை (திருநெல்வேலி அருகே)  உள்ளன.

தனியார் கல்லூரிகள் சென்னை, ஸ்ரீ பெரும்புதூர், சேலம், கோயம்புதூர், கன்யாகுமரி போன்ற ஊர்களில் தனியார் கல்லூரிகள் உள்ளன. இங்கு பாதி சீட்டுகள் மெரிட்டிலும்,  மீதம் பாதி மேனேஜ்மெண்ட் கோட்டாவில் வழங்கப்படுகிறது.

பிளஸ் டூவில் என்ன மார்க் வாங்கியிருந்தால் இதில் சேர முடியும்?  

இயற்பியல், வேதியல், உயிரியல் பாடங்களில் எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு கல்லூரி மற்றும் தனியாரில் மெரிட் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

 மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர சில - பல லட்சங்கள் வாங்கப்படுகிறது.. தற்சமயம் என்ன அளவு என்பதை விசாரித்து தெரிந்து கொள்ளவும்..



எத்தனை வருட படிப்பு? 

நான்கரை வருட படிப்பு இது. மேலும் 1 வருடம் ஹவுஸ் சர்ஜன்சி என முடிக்க ஐந்தரை வருடங்கள் ஆகும்.

நான்கரை வருட படிப்பில் பாடங்கள் பாதி  தமிழிலும், பாதி ஆங்கிலத்திலும் இருக்கும். எனவே தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள் - கல்லூரி படிப்பு என்றாலே முழுக்க ஆங்கிலத்தில் இருக்குமே என்ற பயம் இன்றி சேரலாம்.



10th , 12 th இரண்டிலுமே தமிழ் பாடம் படிக்காமல் ஹிந்தி அல்லது பிரெஞ்ச்சு பாடம் படித்திருந்தால் - முதல் ஆண்டு  பிற தேர்வுகளுடன் சேர்த்து தமிழ் பரீட்சை ஒன்றை எழுத வேண்டும்.

இந்த படிப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி ?

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 200 முதல் 300 சித்தா டாக்டர்கள் வெளி வருகிறார்கள்.

அரசு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு பணிக்கு தேர்வு மற்றும் இன்டர் வியூ நடத்துகிறது. இதில் 50 முதல் அதிக பட்சம் 100 பேர் தேர்வாவார்கள். 3 ஆண்டுகளில் 600-700 படிப்பை முடித்தால் அதில் 50 முதல் 100 பேருக்கு மட்டுமே கடும் போட்டிக்கிடையே அரசு பணி கிடைக்கிறது.

மீதம் உள்ளோர் தனி ப்ராக்டிஸ் தான் செய்கிறார்கள். கல்லூரியில் படிக்கும்போது ஆர்வமாய் படித்து, கடின உழைப்பு செய்தவர்கள் - ப்ராக்டிஸ்சில் நிச்சயம் நன்கு செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது

இன்னொருவரை நம்பியில்லாமல் தனியாக தனது சொந்த காலில் நிற்பது பெருமை தானே ?

சித்த மருத்துவர்கள் வெளிநாட்டில் வேலை செய்கிறார்களா? இந்த படிப்புக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு எப்படி? 

மிக குறைந்த சதவீதத்தினரே வெளி நாட்டில் வேலை செய்கிறார்கள். இந்த படிப்பு மிக அதிகம் தமிழகம் மற்றும் இந்தியாவில் தான் பயன் படுகிறது.

சிலர் சித்த மருத்துவம் முடித்த பின் - மேற்படிப்பு - வேறு படித்து விட்டு   வெளி நாடு செல்கிறார்கள்.

சித்தர்கள் கண்டெடுத்த அற்புத மருத்துவ முறை இது; இது தமிழகத்திற்கே உரித்தான படிப்பு. கடின உழைப்பும் ஆர்வமும் உள்ள மாணவர்கள் அவசியம் படித்து பயன் பெறலாம்.

எங்கெங்கு சித்தா கல்லூரிகள் உள்ளன, அவற்றின் முகவரி, மொத்த சீட்டுகள் எண்ணிக்கை அறிய: 

தமிழ்நாடு MGR யூனிவர்சிட்டி இணையம் 

காரியர் வெப் இணையம்  



Sunday, May 22, 2016

பத்மநாபபுரம் பேலஸ்- படம் + வீடியோவுடன் ஒரு பார்வை

நாகர்கோவில் செல்லும் சுற்றுலா பயணிகள் அவசியம் செல்லும் இடங்களில் ஒன்று - பத்மநாபபுரம் அரண்மனை. ஆறரை ஏக்கர் பரப்பில் அசத்துகிறது. நாகர்கோவில் அருகே இருந்தாலும் கேரள அரசாங்கத்தின் பராமரிப்பில் உள்ளது இந்த அரண்மனை



அரசர் பயன்படுத்திய 167 அறைகள் இங்குள்ளன அவற்றில் இப்போது 120 மட்டுமே நாம் பார்க்க திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு மிக்க சில அறைகள் பற்றி இப்பதிவில் காணலாம்.



சென்று வந்து பல மாதங்கள் கழித்து எழுதுவதால் படம் மற்றும் வீடியோ சற்று அதிகமாக இருக்கும் பொறுத்தருள்க !

பூ முகம்





ராஜா தன்னை காண வரும் வி. ஐ பி -களை இந்த இடத்தில் தான் சந்திப்பாராம்.

இங்குள்ள குதிரைக்காரன் விளக்கு - எந்த பக்கம் வெளிச்சம் இல்லையோ - அந்த பக்கம் தானாகவே திரும்பி கொள்ளும் விதத்தில் உள்ளது சிறப்பு



அரசருக்கு வந்த Wooden க்ரீட்டிங்க் கார்டுகள் பார்வைக்கு இங்கு வைத்துள்ளனர். இன்றைக்கும் ஜம்மென்று இருக்கும் நாற்காலிகள் சைனாவில் இருந்து வந்த வியாபாரிகள் அரசருக்கு பரிசாய் தந்தவையாம்

அறையின் மேல் பக்கம் -90 வித மலர்கள் - கற்களில் செதுக்கப்பட்டுள்ளது - ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்..



அரசசபை


நடுவில் அரசரும் இரு புறமும் அமைச்சர்களும் அமர்ந்திருந்த இந்த இடத்தில் செம குளுமையாக உள்ளது. குளிரூட்டப்பட்ட அறை போல மூலிகைகள் வைத்தே இந்த இடத்தை ராஜா காலத்தில் குளிர வைப்பார்களாம்

அரண்மனை முழுதுமே மின்சாரம் இல்லை. அந்த காலத்தில் இருந்த நிலையிலேயே -அரண்மனையை வைத்து - ஆனால் மிக அழகாக மெயின்டெயின் செய்கிறார்கள்

அன்னதான சாலை

2 அடுக்குகளில் (2 Floor ) இருக்கிறது அன்ன தான சாலை. ஒவ்வொரு தளத்திலும் 1000 பேர் அமர்ந்து உணவு உண்ண முடியும். இன்றைக்கு அன்றைய நாளின் நினைவாக அன்றைய அடுப்புகளும், ஊறுகாய் வைக்க பயன்படுத்திய ராட்ஸச ஜார்களும் இருக்கின்றன . மிக பெரிய அன்னதான சாலை நம்மை பிரமிக்க வைக்கிறது

ராஜாவின் அந்தரங்க அறைகள்

ராஜாவின் படுக்கை அறை , தியானம் செய்யும் இடம், பூஜை அறை போன்றவை பொதுமக்கள் பார்வைக்கு தற்போது அனுமதி இல்லை.

உப்பரிகை மாளிகை

அரண்மனையில் மிக உயரமான இடம் இது தான். 16-ஆம் நூற்றாண்டில் செய்த கட்டில் இன்னும் அங்கு உள்ளது. அரசர் கழட்டி வைக்கும் கிரீடம் வாள் உள்ளிட்டவை இங்கு நினைவுக்காக வைக்கப்பட்டுள்ளது




விருந்தினர் மாளிகை

இந்த இடம் முழுக்க முழுக்க வெளிநாட்டு விருந்தினர்கள் தங்குவதற்காக தயார் செய்யப்பட்டுள்ளது. 2 படுக்கை அறைகள், 2 பால்கனி கொண்ட இந்த அறைக்கு வெளியே அரண்மனையில் ஒரு வாயிலும் - பொதுமக்கள் வசிக்கும் தெருவும் உள்ளது. அது பற்றி விசாரித்தால், வெளிநாட்டினர் - அரண்மனையின் பின் வாயில் வழியே தான் உள்ளே வர முடியும் என்றும் - முன் பக்கம் வழியே அவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் சொல்கிறார்கள் !




அரண்மனை கட்ட மண் தோண்டி எடுத்த பின், காலியாய் கிடந்த இடத்தில் குளம் கட்டப்பட்டதாம் !



இந்த இடத்தின் அருகே சரஸ்வதி தேவிக்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. இதனை கட்ட சேரன், சோழன் பாண்டியன் மூவரும் - பல பொருட்கள் மூலம் - தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர்



120 அறைகளை பொறுமையாய் பார்வையிட - அரை நாளாகும் ! ஆனால் பெரும்பாலான மக்கள் ஓரிரு மணி நேரத்தில் அவசரமாய் பார்த்து விட்டு செல்கிற படி தான் ஆகிறது !

அங்கிருக்கும் ஊழியர்கள் மிக பொறுமையாகவே அனைத்தும் விளக்குகிறார்கள். நீங்கள் சென்றால் குறைந்தது 3 அல்லது 4 மணி நேரம் செலவிடுகிற மாதிரி திட்டமிட்டு செல்லுங்கள்.. அரண்மனையின் அழகை அப்போது தான் முழுதாய் ரசிக்க இயலும் . 

Saturday, May 21, 2016

வைகோ - ஒரு சீரியஸ் பார்வை + ஜாலி மீம்ஸ்

வை.கோபால்சாமி... இந்த பெயரை முதலில் நான் கேள்விபட்டது 80 களின் இறுதியில்.. திருச்சி சட்ட கல்லூரியில் முதலாண்டு படிக்கையில் - தி.மு.க மாநில மாநாடு நடந்தது. அதில் வைகோ உரையை கேட்கவே நண்பர்கள் பலரும் சென்றனர்.. கேட்டு விட்டு வந்து " என்ன பேச்சு..!!!! உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சு" என புளகாங்கிதம் அடைந்தனர்..

ஈழ மக்களுக்காக கள்ள தோனியில் இலங்கை சென்றபோது " மனுஷ்னன்னா இவர் தான்யா மனுஷன். என்ன ஒரு தமிழ் உணர்வு... வாழ்க்கையையே ரிஸ்க் எடுத்து போயிருக்கார் பாரு.. " என பேசிக்கொண்டோம்..

அடுத்து வைகோ பற்றி முக்கிய பேச்சு வந்தது அவர் தி.மு. க  விட்டு வெளியே வந்த போது.. பொது வெளியில் வைக்கோவின் கண்ணீர் - அப்போது தான் பார்த்தேன்.. நெகிழ்வாக, வருத்தமாக இருந்தது.. தி.மு.க மீது சற்று கோபமாகவும்.. !



அடுத்தடுத்த தேர்தல்களில் அவர் அணி மாறி, மாறி -கூட்டணி அமைத்த போது கூட " அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா" என்று தான் இருந்தேன்..

2002ல் பொடா சட்டத்தின் கீழ் 18 மாதங்கள் ஜெ அவரை சிறை வைத்த போது அவர் மீது பெரும் வெறுப்பு இருந்தது.. தேவையே இன்றி வைகோவை சிறை வைக்கிறார்கள் என்று..!

தி,முக விலிருந்து வெளியேறிய பின் தள்ளியே இருந்த கலைஞர் அவரை சிறையில் சில முறை சென்று சந்திக்கிறார்.. " கலைஞர் தான் என்றைக்கும் எனது அண்ணன்; இனி வாழ்நாளில் என்றைக்கும் அவரை எதிர்க்க மாட்டேன்" என்று உருகினார் வைகோ

சிறையை விட்டு வெளி வந்து 2006 தேர்தலில் அ.தி.மு.க வை எதிர்த்து தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார்.   தி.மு.க குறிப்பிட்ட சீட்டுகள் தர, அதை விட 2 சீட்டுகள் அதிகம் தருகிறார் என்று காரணம் காட்டி அ.தி.மு.க விடம் சேர்ந்தார் வைகோ.

வைகோ மீதிருந்த நம்பிக்கை சுத்தமாக எனக்கு தளர்ந்தது அந்த சந்தர்ப்பத்தில் தான் ! சற்று முன்பு வரை தன்னை  சிறை வைத்த / அந்த முறை மிக மோசமான ஆட்சி தந்த அ.தி.மு.க வுடன் கூட்டணி சேர்கிறார்.. !! 2 சீட்டுக்காக கொள்கையை மாற்றி கொள்கிறார் எனில் உண்மையில் இவருக்கு கொள்கை என ஒன்றும் இல்லை; இவர் அரசியலில் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று நான் உணர்ந்த நாள் அது; அன்று முதல் இன்று வரை எனது அந்த நம்பிக்கையை தொடர்ந்து காப்பாற்றி வருகிறார் வைகோ

கடந்த 15 ஆண்டுகளில் சட்ட மன்ற தேர்தலில் எந்த கட்சி ஜெயிக்கும் என தெரிந்து கொள்ள அதிகம் சிரமப்பட தேவையில்லை; வைகோ எந்த அணியில் இருக்கிறாரோ அந்த அணி தோற்கும்; அதற்கு எதிர் அணி ஜெயிக்கும். MGR க்கு பின் ஒவ்வொரு தேர்தலிலும் Anti incumbency அலை தான் அடித்து கொண்டிருந்தது. மேலும் தி.மு.க ஆளும் கட்சி என்றால் சிறு கட்சிகள் அனைத்தும் அதி.மு.க வுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளும்; வெல்லும்; இதுவே அ .தி.மு.க  ஆளும் கட்சி என்றால் தி.மு.க வுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்து அந்த அணி வெற்றி கொள்ளும்..

ஆனால் இந்த அரசியல் காமன் சென்ஸ் சிறிதும் இன்றி ஒவ்வொரு முறையும் தோற்கும் அணியுடன் தான் கை கோர்ப்பார் வைகோ.

தங்கள் கட்சி சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடாது என சென்ற முறை (2011) முடிவெடுத்ததெல்லாம் - அரசியல் தற்கொலைக்கு சமம், இம்முறை தி.மு.க வந்து விடக்கூடாது என தீவிரமாக இருந்தார் வைகோ. இதன் பின்னணியில் ஜெ இருந்தார் என பலரும் சொல்வது உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே கருதுகிறேன்.

தங்கள் அணிக்கு விஜய் காந்த் முதல்வர் வேட்பாளர் என அறிவித்தது அவர் தி.முக பக்கம் சென்று விட கூடாது என்ற despareteness என்பது வெளிப்படை

சட்ட மன்ற தேர்தல் என வரும்போது ஆளும் கட்சி எப்படி ஆட்சி நடத்தியது,  அதில் உள்ள குறைகள் என்ன என்பது தான் எதிரில் நிற்கும் கட்சிக்கு முக்கிய பேசு பொருளாக இருக்கும்.இம்முறை வைகோ தி.முக மீது தான் மிக கடுமையான தாக்குதலில் இருந்தார். குறிப்பாக கலைஞரை சாதிய ரீதியில் பேசியது - 2006ல்  தன்னை சிறை வைத்த சுவடு மறையும் முன் அ தி.முக வுடன் கூட்டணி வைத்ததற்கு ஒப்பான தவறு..

நிற்க. வைகோவிற்கென்று எந்த ஒட்டு வங்கியும் இல்லை- வாழ் நாளில்  முதல்வர் ஆக போவதில்லை -அவர் 1 அல்லது 2 சதவீத ஓட்டுகளை கொண்ட ஒரு மிக சிறு கட்சியின் தலைவர்; அதை உணர்ந்து ஏதேனும் ஒரு பெரும் கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பது மட்டுமே அவரது கட்சியை, தொண்டர்களை கொஞ்சமாவது உயிர்ப்புடன் வைக்கும்..

******
சீரியஸ் டாபிக் முடிந்து ஜாலி பகுதிக்கு வருவோம்..

இம்முறை தேர்தலில் வென்ற ஜெ வை விட, தோற்ற கலைஞரை  விட - வைகோ பற்றி மீம்ஸ்கள் தான் மிக அதிகம்.. அவற்றில் சில மட்டும் இங்கு..


















தொடர்புடைய பதிவு

வானவில் :அ.தி.மு. க வெற்றி- ஒரு பார்வை 

Friday, May 20, 2016

வானவில் :அ.தி.மு. க வெற்றி- ஒரு பார்வை+ சச்சினை விஞ்சும் கோலி

அ.தி.மு. க வெற்றியும் தி.மு.க தோல்வியும் 

எம். ஜி. ஆருக்கு பிறகு - ஆட்சியில் இருந்தவாறு தேர்தலை சந்தித்து  -வென்ற முதல்வராக - ஜெயலலிதா ... !! சென்ற முறை ஆட்சிக்கு வந்த பின் செய்த கடும் விலை வாசி ஏற்றம், 2015- வெள்ள பிரச்னையை மிக மோசமாக கையாண்டது, அணுக முடியாத முதல்வராக இருப்பது, லஞ்ச -ஊழலின் அளவுகளை ஏராளமாய் உயர்த்தியது போன்ற விஷயங்களை தாண்டி அ.தி.மு. க வெல்ல என்ன காரணம்?

தமிழகத்தின் தனிப்பெரும் கட்சி அ.தி.மு. க தான். தி.மு. க வை விட எப்பவும் 5% கூடுதல் வாக்கு வங்கி அதற்கு உண்டு.... பதிவாகும் மொத்த வாக்குகளில்குறைந்த பட்சம் 30 சதவீதம் தி.மு. க விற்கும், 35 சதவீதம் அ.தி.மு. க விற்கும் கிடைப்பது அநேகமாய் மாறாது. தி.மு. க - சிறு கட்சிகள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள்  மூலம் தான் அந்த சதவீத வித்யாசத்தை தாண்ட முடியும்...அம்மா எதிர் கட்சியாகி தேர்தலை சந்திக்கும் ஒவ்வொரு பொழுதும் பா.ம. க உள்ளிட்ட அனைத்து குட்டி கட்சிகளையும் சேர்த்து கொண்டு தான் தேர்தலை சந்தித்து வெல்வார். தி.மு,க இதற்கு முன்பு செய்து வந்ததும் அது தான். இம்முறை எவ்வளவு முயன்றும் தே .மு.தி. க அவர்கள் பக்கம் வரவில்லை.( வைகோவின் கைங்கர்யம் ! )  கம்மியூனிஸ்ட், பா. ம. க போன்ற கட்சிகளை கொண்ட வர ஸ்டாலின் முயலவில்லை.

ஸ்டாலினை விடுத்து கலைஞரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது அடுத்த பெரும் தவறு. புதிதாய் வாக்களிக்கும் இளைஞர்கள் ஓட்டு இதனால் தவறியது. குறிப்பாக முதல் முறை வாக்களிக்கும் இளம் பெண்கள் - பெண் என்பதாலும், கலைஞருடன் ஒப்பிட்டு இளையவர் என்பதாலும் அம்மாவை சப்போர்ட் செய்தனர்..

தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல அம்மா இம்முறையாவது ஏதேனும் செய்வாரா? குறைந்த பட்சம் அதிகாரிகளேனும் அணுகும் முதல்வர் ஆனால் தான் - தமிழகத்தில் ஏதேனும் சிறு மாற்றம் சாத்தியம். அதற்கான வாய்ப்பு மிக குறைவே :(

உண்மையில் தி.மு. க மற்றும் அ.தி.மு. க- இரண்டு ஆட்சிக்கும் அதிக வித்யாசங்கள் இல்லை; நிச்சயம் இவற்றிற்கு ஒரு மாற்று தேவை தான். ஆனால் அந்த மாற்று - என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசும் விஜய் காந்த் அல்ல.. சாதி அரசியல் செய்யும் அன்புமணியும் அல்ல.. என்றைக்கு அந்த நல் மாற்றம் நிகழுமோ தெரிய வில்லை..

பார்த்த படம் : என்னே நிண்டெ மொய்தீன் (மலையாளம்) 

"உனது பிரியமான மொய்தீன்" என்பது தலைப்புக்கான அர்த்தம்.

1960-70 களில் நிகழ்ந்த ஒரு நிஜ காதல் கதை.

மொய்தீன் &காஞ்சனமாலா -முஸ்லீம் மற்றும் இந்து காதல் ஜோடி.. வெவ்வேறு மதம் என்பதால் இரண்டு குடும்பத்தாரும் காதலை எதிர்க்கின்றனர்.. காஞ்சனமாலா வீட்டுக்குள்ளேயே சிறை வைக்கப்படுகிறார்.. தனது சகோதரிகள் திருமணம் ஆன பின் - வீட்டை விட்டு வெளியேறி மொய்தீனை மணம் முடிப்பேன் என்கிறார் காஞ்சனமாலா ..

இருவருக்கும் வயது 40 ஐ தாண்டிய பின்னும் குடும்பத்தினர் மனம் மாறவில்லை; ஒவ்வொரு முறை காஞ்சனமாலா வீட்டை விட்டு வெளியேற எண்ணும் போதும் ஏதோ ஒரு விபரீதம் நடக்கிறது..

இறுதியில் மொய்தீன் - ஒரு பெரும் படகு விபத்தில் சிறுவர்களை காப்பாற்றி விட்டு இறந்து விட, காஞ்சனமாலா - மொய்தீன் வீட்டுக்கு மகளாக குடியேறுகிறார்..(நிஜ காஞ்சனமாலா இன்னமும் இருக்கிறாராம்!)

நடந்த சம்பவம் என்பதால்.. அதை ஒட்டியே கதை செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்,,

மரோ சரித்ரா போன்ற துயர காதல் காவியம்.. சிறந்த மலையாள படம் என்கிற தேசிய விருதும் பல்வேறு மாநில விருதும் தட்டி சென்ற படம்..

மிக மெதுவாய் செல்கிறது.. சில நேரம் தேவையற்ற detailing .. அதனால் இழுப்பது என்கிற ஒரு குறை தவிர நிச்சயம் ரசிக்கத்தக்க- மனதை பாதிக்கும் ஒரு படம்..

ஹெல்த் பக்கம்: 

சோடா குடிப்பது ஜீரணத்துக்கு பலன் தருமா ?

டாக்டரை கேளுங்கள் பகுதியில் டிவியில் கேட்ட விஷயம் இது:

சோடா குடித்த பின் - அடைத்து வைக்கப்பட்ட காற்று உள்ளே சென்று குடித்தவருக்கு ஏப்பம் வர வைக்கிறது; மற்றபடி ஜீரணத்துக்கு உதவுவதில்லை. ஜீரண பிரச்சனை என்றால் சோடா குடிப்பதை விட ஜெலூசில் போன்ற அன்டாசிட் சாப்பிடலாம்..

அழகு கார்னர் 



ஒரு  அனுபவம் :  சார்.. உங்க போன் நம்பர் சொல்ல முடியுமா?  

அண்மையில் வேளச்சேரி PVR தியேட்டரில் உள்ளே நுழையும் போது - நம்மை 2 நபர்கள் அணுகி " சார் லக்கி டிரா வச்சிருக்கோம்; உங்க டீடைல்ஸ் சொல்லுங்க; பரிசு கிடைக்கும்" என்றனர்..

ஒரு பேப்பரை கையில் வைத்து கொண்டு " உங்க பேர்; போன் நம்பர் சொல்லுங்க"

சில நொடி யோசித்து விட்டு - "அந்த பேப்பரை கொடுங்க" என்றேன்.. சற்று தயக்கத்துடன் கொடுத்தனர்.. பார்த்தால் எதோ ஒரு ரிசார்ட் கம்பனி - தங்கள் கிளப்புக்கு ஆட்கள் பிடிக்க இந்த வேலை செய்கிறார்கள் என்று புரிந்தது

அடுத்து " சார் உங்களுக்கு லக்கி டிராவில் பரிசு விழுந்திருக்கு"  என போன் வரும்.. சென்றால்.. ஒரு லட்சம் ஸ்கீமை 10,000 க்கு தர்றோம் என்று தலையில் கட்டுவார்கள்..

எனக்கு ரொம்ப கடுப்பான விஷயம்.. PVR காரர்கள் ஸ்க்ரீனுக்கு உள்ளே நுழையும் இடத்தில் இவர்களை அனுமதித்தது தான் ! மால் என்றால் கூட பரவாயில்லை.. இங்கு தியேட்டரில் ஒவ்வொரு ஸ்க்ரீன் முன்பும் நின்று இப்படி வாங்கும்போது தியேட்டர் காரர்கள் தான் செய்கிறார்கள் என மக்கள் டீடைல்ஸ் தரவும், பின் ஏமாறவும் வாய்ப்புகள் அதிகம்..

இது குறித்து PVR க்கு ஒரு மெயில்/ கம்பிலேயின்ட் அனுப்பியுள்ளேன்..

நமது தகவல்களை தரும் முன் எச்சரிக்கை மிக அவசியம் !!

கவிதை பக்கம் 

சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச் செல்லும்
புகையைப் போல
என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே ! - ஆத்மா நாம்

ஐ. பி. எல் கார்னர் 

சுவாரஸ்ய கட்டத்தை எட்டியுள்ளது ஐ. பி. எல்!!

6 அணிகள் - முதல் 4 இடத்திற்கு கடும் போட்டியிடுகின்றன. எனக்கு பிடித்தமான வீரர்கள் கோலி மற்றும் டீ வில்லியர்ஸ்  இருப்பதால் பெங்களூருவை சப்போர்ட் செய்து வருகிறேன். கடைசி மேட்ச் ஆன டில்லியை ஜெயித்தால் - மிக அதிக ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு நிச்சயம் ப்ளே ஆப் உள்ளே நுழைந்து விடும்...!

ஹைதராபாத் மற்றும் குஜராத் நிச்சயம் ப்ளே ஆப் செல்லும் என நினைக்கிறேன்.. டில்லி, கொல்கத்தா, மும்பை மூன்றும் மற்ற ஒரு இடத்துக்கு போராடும்..

கையில் 6 தையலுடன் கோலி அடித்த செஞ்சுரி அமர்க்களம் !!சச்சினின் சாதனைகளை விஞ்ச எந்த வீரரும் வர முடியாது என நினைத்திருந்தேன். கோலியின் இந்த பார்ம் 4-5 ஆண்டுகள் தொடர்ந்தால் சச்சினின்  சில பெரிய சாதனைகள் வீழும் !! அப்படி வீ ழ்த்துவது ஒரு இந்தியர் என்ற வகையில் ... மகிழ்ச்சி !!

Tuesday, May 17, 2016

தொல்லைகாட்சி: அர்விந்த் சுவாமி- சரவணா விளம்பரம்- கிங்க்ஸ் ஆப் டான்ஸ்

தொல்லை காட்சி- நம் வீடுதிரும்பலில் முன்பு வாரா வாரம் திங்கள் வெளியாகும். நண்பர்கள் மிக அதிகம் வாசித்த ஒரு பகுதி இது..

தொடர்ந்து வெளியாகுமா அல்லது வானவில்லில் மட்டுமே சில பகுதிகள் வருமா என நிச்சயமாய் சொல்ல முடிய வில்லை..

இப்போதைக்கு நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும்.. தொல்லை காட்சி

டிவி கார்னர் : கிங்க்ஸ் ஆப் டான்ஸ்

விஜய் டிவி எப்போதும் ஒரு டான்ஸ் ஷோ நடத்தும். இதற்கு முன் டிவியில் நடிப்போரை வைத்தே மிக அதிக ஜோடி டான்ஸ் ஷோக்கள் நடத்தின. இம்முறை டான்ஸ் குழுக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி.. கிங்க்ஸ் ஆப் டான்ஸ் என்கிற பெயரில் வருகிறது.



எல்லோரும் டான்சர்கள் என்பதால் - சில நடனங்கள் மிக அருமை !

நடுவர்களாக (அழகு) ப்ரியாமணி மற்றும் டான்ஸ் மாஸ்டர் கல்யாண் . இந்த வாரம் நடிகை ராதா மறுவிஜயம்.

கொஞ்ச நாள் நமது பேவரைட் விஜய் டிவி ப்ரியா தொகுத்து வழங்கி கொண்டிருந்தார்; தற்சமயம் அவர் வருவதில்லை என்பது சோகமான விஷயம் :(

ராஜ் டிவி முதல்வன் விருதுகள்

ஒவ்வொரு வருடமும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் சில இடங்கள் வாங்கும் மாணவர்களுக்கு ராஜ் டிவி சென்னைக்கு அழைத்து விருது தந்து பாராட்டுகிறது. நம்ம ஸ்ரீநாத் கூட இப்படி விருது வாங்கியிருக்கிறார் !

இவ்வருடம் பரிசு வாங்க வந்த அனைவரையும் ராஜ் டிவி க்கு அழைத்து சென்று அங்கு நியூஸ் எப்படி தயார் ஆகிறது, எப்படி எடிட் ஆகிறது என முழுவதும் ஒரு நாள் காண்பித்துள்ளனர். டிவி சானல் உள்ளே சென்று பார்த்த excitement உடன் பேசினார் அந்த மாணவ, மாணவிகள்.

பெரும்பாலும் மொக்கை போட்டாலும் ராஜ் டிவி வருடா வருடம் செய்யும் நல்ல காரியம் இந்த முதல்வன் விருதுகள் !

நீயா நானா 

வர வர  நீயா நானா ரொம்பவும் களை இழந்து விட்டது. இந்த வாரம் பெரிய சைஸ் பைக் வைத்திருக்கும் இளைஞர்கள் ஒரு பக்கம்- அவர்கள் பெற்றோர் மறு பக்கம் என பேசினர்.

கோட் போடாமல் - சாதா சட்டை- பேண்ட்டில் கோபி  !!  அதுவே பார்ப்பது நீயா நானாவா என சந்தேகம் கொள்ள வைத்தது...

தொடர்ந்து வாரா வாரம் பார்ப்பதில்லை.. வைக்கிற சில நேரமும் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை.. நீயா நானா டீம் விழித்து கொண்டு - வேலை செய்வது நல்லது !

ஐ. பி. எல் கார்னர் 

RCB Vs குஜராத் லயன்ஸ் மேட்சில் டீ வில்லியர்ஸ் & கோலி உரித்து எடுத்தனர்.. பந்துக்கு பந்து 4, 6 என அடித்தது கண் கொள்ளா காட்சி. 20-20 என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். 14 மே அன்று நடந்த இந்த மேட்ச் ஹை லைட்ஸ் - குறிப்பாக RCB பேட்டிங் கீழே உள்ள லிங்க் மூலம் காணுங்கள்..

http://www.iplt20.com/videos/media/id/4893673025001/m44-rcb-vs-gl-match-highlights

இருப்பதிலேயே மட்டமான டீமாய் தோனியின் புனே மாறி போனது  வருத்தமே.குறிப்பாக நல்ல கிரவுண்டில் 138 ரன் எடுக்க முடியாமல் 4 ரன்னில் தோற்றார்கள்.. 4 நல்ல வீரர்கள் - இஞ்சுரியால்  இல்லாமல் போனது எல்லாம் இருக்கட்டும்.. அவர்கள் இருந்த போதும் கூட புனே சரியாக ஆட வில்லை என்பதே உண்மை.

கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு , டில்லி. மும்பை இவற்றில் 4 டீம் Play off செல்ல கூடும்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி 

மீண்டும் விஜய் டிவி யில் துவங்குகிறது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி . இம்முறை நடத்துபவர் அரவிந்த் சாமி !  இளைஞர்கள், பெண்கள் இருவரையும் நிகழ்ச்சி பார்க்க வைக்க இவர் ஒரு மிகசரியான சாய்ஸ்  !



தனியாய் HR payroll நிறுவனமும் நடத்திவரும் அர்விந்த் சுவாமிக்கு நிச்சயம் ஓரளவு பொது அறிவு இருக்கும் என்றும் நம்பலாம். மனிதர் ஜென்டில் ஆக நடந்து கொள்வது, மென்மையாக பேசுவது என நிச்சயம் கவருவார்..

சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் விளம்பரம் 

தமன்னா மற்றும் ஹன்ஷிகாவுடன் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் வரும் விளம்பரம் பற்றி கிண்டலடித்து ஏராளமானோர் எழுதி விட்டனர்... இன்னொரு பக்கம் உழைப்பால் உயர்ந்தவர் வருவது தப்பா?  அழகாய் இருப்பவர்கள் மட்டும் தான் நடிக்கணுமா என்று கொந்தளிக்கும் சமூக போராளிகள் இன்னொரு பக்கம் .. 

இதற்கு நடுவில் இந்த விளம்பரத்துக்கு தேவைக்கு அதிகமான கவனம் கிடைத்து விட்டது.. அண்மையில் கொரட்டூர் செல்லும்போது வார நாளின் மதிய பொழுதில்  - இந்த புது கடைக்கு வெளியே  மாபெரும் ட்ராபிக் ஜாம். உள்ளே மக்கள் கூட்டம் அலை மோதுகிறது... 

நிற்க. விளம்பரத்திற்கு மீண்டும் வருவோம்... எனது ஒரு ரூபாய் கருத்து: விளம்பரத்தில் இவர் தான் நடிக்கணும் என்றில்லை; ஆனால் கொஞ்சமாவது நடிக்க தெரியனும்; முக பாவம்???? ஹூம்.. நடிப்பில் பவர் ஸ்டார் வகையறா ஆளாக  இருக்கிறார் இந்த சரவணன்....

அந்த விளம்பரம் டிவி யில் வரும்போது தமன்னா, ஹன்ஷிகாவை விட நாம் அந்த ஆணை தான் அதிகம் கவனிக்கிறோம்.. இல்லையா??

****
அண்மை பதிவு: 

சென்னையின் தீம் பார்க்குகள்: எது ஓகே? எது நாட் ஓகே?

Monday, May 16, 2016

மிக வித்யாசமான தேர்தல் 2016 : ஒரு பார்வை

1980 முதல் தமிழக தேர்தலை கவனித்து வருகிறேன்.. 1980 ல் ஆரம்ப பள்ளியில் படித்தபோது - நினைவு தெரிந்து நடந்த முதல்  தேர்தல் துவங்கி இன்று வரை ஏராள தேர்தல்கள் பார்த்திருந்தாலும் இம்முறை நடக்கும் தேர்தல் மிக மிக வித்யாசமான முறையில் இருக்கிறது... காரணங்கள்....



1. எந்த சுவர்களிலும் வேட்பாளர் பெயர் - சின்னம் வரையப்படாமல் நடந்த முதல் தேர்தல் .. கொஞ்சம் கொஞ்சமாக இது குறைந்து வந்தது எனினும் இம்முறை சுத்தமாக எங்கும் பெயர்- சின்னம் வரையப்பட வில்லை.. குறைந்த பட்சம் சென்னையில் இப்படியாக தான் இருக்கிறது நிலைமை..

2. வீடுகளுக்க்கு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தரும் பிட் நோட்டிஸ் கூட இம்முறை தரப்படவில்லை; இதனால் நமது தொகுதியில் யார் வேட்பாளர் என்பதே தெரியாமல் போய் விட்டது.

ஒரு நாளைக்கு முன்பு தேர்தல் கமிஷன் வெப் சைட்டை திறந்து தான் இம்முறை யார் யார் வேட்பாளர்கள் என்பதை தெரிந்து கொண்டேன். மேலும் அவர்கள் என்ன படித்துள்ளனர், எவ்வளவு சொத்து என்கிற விபரமும் அறிய முடிகிறது.

இதில் தி.மு.க, அ.தி. மு. க - 2 கட்சிகளுக்கு தான் பெரும் நலன் கிடைக்கும். அவை தான் மக்களிடம் நன்கு எஸ்டாப்ளிஷ்  ஆன கட்சிகள்.. வேட்பாளர்- அவர்தம் கட்சி விபரங்கள் தெரியாத நிலையில் - ஏற்கனவே நன்கு பிரபலமான இந்த 2 கட்சிகளுக்கு தான் மிக அதிக ஓட்டுகள் சென்று சேரும்..

சுவர் விளம்பரம் மற்றும் பிட் நோட்டிஸ் தடுப்பது பல நல்ல விளைவுகளை தந்தாலும், எல்லாரும் தேர்தல் கமிஷன் வெப் சைட்டை பார்த்து என்னென்ன வேட்பாளர் என தெரிந்து கொள்ள முடியாதே !! நம் நாட்டில் இணையத்தை பயன் படுத்துவோரே மிக குறைவு தான்...

http://myneta.info/

இந்த வெப் சைட் சென்று தமிழ் நாடு தேர்ந்தெடுத்து பின் உங்கள் மாவட்டம் தேர்ந்தெடுங்கள். உங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளும் தெரியும். அதில் உங்கள் தொகுதியை க்ளிக் செய்தால் - உங்கள் தொகுதி வேட்பாளர்கள் - பெயர்- கட்சி- அவர்கள் பின்னணி- படிப்பு மற்றும் சொத்து விபரம் தெரிய வரும்.

3. உண்மையில் கட்சிகளின் உழைப்பை விட மிக அதிகம் உழைத்து தேர்தல் கமிஷனும் - அவர்கள் டீமும் தான். வாய்ப்பிருந்தால் அவர்களுக்கே கூட வாக்களிக்கலாம் :) அவ்வளவு அற்புதமான உழைப்பு.. 100% வாக்கு பதிவு என்ற கடினமான இலக்குடன் - பால் கவர் துவங்கி, டிவி - ரேடியோ விளம்பரங்கள் என பல்வேறு விதத்தில் அவர்கள் வாக்களிக்க சொன்ன விதம் அருமை !!

4. ஜெ, கலைஞர், ஸ்டாலின், விஜய் காந்த் என்ற தலைவர்களை வைத்து கட்சிகள் ஆங்காங்கு மீட்டிங் போட்டதுடன் சரி.. அதற்கு வந்த கூட்டம் அனைத்தும் "கூட்டி வரப்பட்ட" கூட்டமே. எங்கள் ஏரியாவிற்கு பக்கத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அதற்கு அரை கிலோ மீட்டர் தள்ளி ஏராள வாகனங்கள் - மீட்டிங்  முடிந்ததும் - அவர்கள் அனைவரும் வந்து கூட்டம் கூட்டமாக அந்த லாரிகளில் ஏறி சென்றனர்.. அடுத்த நாள் வேறு மீட்டிங்.. வேறு கூட்டம்..

  5. வாக்குக்கு பணம் கொடுப்பதை தேர்தல் கமிஷன் முடிந்தவரை முடக்க பார்த்தது. முழுமையாய் தடை செய்ய முடிய வில்லை என்பது தான் உண்மை. ஆயினும் வழக்கமான அளவு பண புழக்கம் இல்லை என்றும் ,தேர்தல் கமிஷன் நடவடிக்கை தான் காரணம் என்றும் பல நண்பர்களும் கூறினர்..

**************
தேர்தல் நாளான இன்று - நள்ளிரவில் சென்னையில் மழை பெய்தமையால் காலை வெய்யில் சற்று குறைவாய் இருந்தது.
மடிப்பாக்கத்தில் காலை 7.15 மணிக்கு வாக்கு பதிவு 

நானும் மனைவியும் காலை 7.15க்கெல்லாம் வாக்களிக்க சென்று விட்டோம். அப்போதே மிக நல்ல கூட்டம்.
நம்ம வீட்டம்மணி எனக்கு முன்பாக வாக்களிக்கிறார் 

எவ்வளவு கூட்டம் இருப்பினும் 5 முதல் 15 நிமிடத்திற்குள் வாக்களித்து விடலாம்..

வாக்களிக்கும் முன்...

இம்முறை வாக்காளர் சீட்டு  ( பூத் ஸ்லிப்) கூட கட்சிகள் தர அனுமதியில்லை; தேர்தல் ஆணையம் தான் அணைத்து வீடுகளிலும் தந்துள்ளது. அந்த பூத் ஸ்லிப்  உங்கள் வீட்டுக்கு வந்து விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை; அந்த சீட்டுடன் - வாக்காளர் அடையாள அட்டை, டிரைவின் லைசன்ஸ், ஆதார் கார்ட், ரேஷன் கார்ட் போன்ற எந்த அடையாள அட்டையை எடுத்து சென்றும் வாக்களித்து விடலாம்,,

பூத் ஸ்லிப்  உங்கள் இல்லத்திற்கு/ உங்கள் கைக்கு வராத பட்சம்.. 

உங்கள் வீட்டுக்கருகே இருக்கும் வாக்கு சாவடிக்கு அவசியம் செல்லுங்கள். அங்கு குறிப்பிட்ட பள்ளி/ கல்லூரிக்கு முன்பே ஏராள வாலண்டியர்கள் வாக்காளர் விபரங்களுடன் அமர்ந்துள்ளனர். அதில் உங்களது வாக்காளர் எண் என்ன - பூத் எண் எது என தெரிந்து கொள்ளுங்கள். இப்படி பூத் நம்பர் மற்றும் வாக்காளர் வரிசை எண் - இரண்டும் தெரிந்தாலே - வாக்காளர் சீட்டு இல்லா விடினும் தாரளமாக வாக்களிக்கலாம்..

வாக்களிப்போரில் பாதி பேர் தான் பூத் ஸ்லிப் வைத்துள்ளனர்.மீதம் உள்ளோர் வாக்கு சாவடிக்கு சென்று தான்  வாக்காளர் எண் & பூத் எண் எது என தெரிந்து கொண்டு - வாக்களிக்கிறார்கள். எனவே பூத் ஸ்லிப் இல்லாவிடினும் - உங்கள் பெயர் வாக்காளர் லிஸ்ட்டில் இருந்தால் நிச்சயம் வாக்களிக்கலாம்.

உங்கள் பெயர் வாக்காளர் லிஸ்ட்டில் உள்ளதா என அறிய இந்த ஸ்டெப்களை பயன்படுத்துங்கள்:



அவசியம் வாக்களியுங்கள்... இந்த கறை நல்லது !

அண்மை பதிவு: 

சென்னையின் தீம் பார்க்குகள்: எது ஓகே? எது நாட் ஓகே?

Related Posts Plugin for WordPress, Blogger...