Tuesday, April 26, 2016

தெறி படம் எப்டி பேபி ?சினிமா விமர்சனம்

மூன்று பாத்திரங்களில் விஜய் என்கிற மாதிரி ட்ரைலர்.. மேலும் ட்ரைலரில் சிறு குழந்தை குறித்தான காட்சிகள் நிச்சயம் படம் மீது லேசான நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது..  எதிர்பார்ப்பு நிறைவேறியதா?



கதை 

நேர்மையான போலிஸ் ஆபிசர்.. அவருக்கு சிக்கல் தரும் வில்லன்... எல்லா தமிழ் படம் போல் மனைவி வில்லனால் கொல்லப்பட.   குழந்தையுடன் ஒதுங்கி வாழ்கிறார் ஹீரோ. மீண்டும் வில்லன் என்ட்ரி.. ஹீரோ கிளை மாக்சில் வெற்றி பெற்றார் என்பதை சொல்லவேண்டுமா என்ன?

விஜய் மற்றும் பலர் 

விஜய்க்கு டைலர் மேட் பாத்திரம்.. காமெடி, செண்டிமெண்ட், காதல் அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார்.. 45 வயது என்றாலும் செம பிட் உடல் ...

குட்டி பெண் வயதுக்கு மீறிய ஓவர் பேச்சு. இந்த ஒரே காரணத்தால் ட்ரைலரில் ரசித்த மாதிரி - படத்தில் ரசிக்க முடியவில்லை;

சமந்தா குட்டி பாத்திரம் என்றாலும் கிடைத்த வாய்ப்பை அழகாய் செய்துள்ளார்.. விஜய்- சமந்தா காதல் காட்சிகள் கியூட்

காமெடி சற்று குறைவு தான். ராஜேந்திரன் - காமெடி மட்டுமல்லாது கேரக்டர் ரோலும் சேர்த்து செய்கிறார்..

சுனைனா வரும் 5 நிமிடம் நன்கு சிரிக்க வைக்கிறார்கள் (ப்ரதர்ர்ர்.....)

உதிரி பூக்கள் தந்த இயக்குனர் மகேந்திரன் வில்லனாக... ! வித்யாசமான புது வில்லன் என  எண்ணம் ஓகே; ஆனால் அவரது நடிப்பில் இயல்பை விட செயற்கை தன்மை சற்றே கூடுதல்



முதல் பாடலும், சமந்தாவுடனான ஓரிரு பாடல்களும் குட். மாறாக தேவா பாட்டு + குரல் விஜய்க்கு சுத்தமாய் பொருந்தலை  !

அட்லி

ராஜா ராணியில் சிக்சர் அடித்தவர் இங்கு பவுண்டரி அடித்து பாஸ் ஆகியுள்ளார்.

தேவையற்ற சம்பவங்கள் சிறிதும் இன்றி கதை எழுதிய விதம்.. சமூக அக்கறை சார்ந்த சில விஷயங்களை திரைக்கதையில் தொட்ட புத்திசாலித்தனம் ....விஜய் என்கிற மாஸ் ஹீரோவை மிக சரியாக பயன்படுத்திய விதம்.. இவற்றுக்கு ஷொட்டு

சத்ரியன் பாதிப்பில் கதை எழுதியது.. இரண்டாம் பாதியில் கொட்டாவி வர வைத்தது. அதிக பிரசங்கி குட்டி பெண்  மற்றும் எமி ஜாக்சன் - கெட் அப் இவை உறுத்தல்

படம் கமர்ஷியலாய் எப்படி ?? 

சொல்ல தேவையில்லை.. நிச்சயம் தெறி ஹிட் தான்.

தயாரிப்பாளர்- டிஸ்ட்ரி பியூட்டர் பிரச்சனையால் - காசி தியேட்டர் துவங்கி - மடிப்பாக்கம்,   தாம்பரம், செங்கல்பட்டு வரை படம் ரிலீஸ் ஆகலை; உண்மையில் இந்த ஏரியா மிக அதிக பணம் வர கூடிய ஏரியாவாம்.. இது நிச்சயம் படக்குழுவுக்கு ஒரு இழப்பு..

இன்னொரு பக்கம் இந்த ஊர் மக்கள் சென்னை தியேட்டர்கள் - மால்களில் சென்று தான் படம் பார்க்கணும் என்பதால் - மால் -களில் வார நாட்களும் படம் நிரம்பி விடுகிறது.. மேலும் முழு ஆண்டு விடுமுறையும் துவங்கி விட்டதால் - படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ்..

அட்லி மற்றும் விஜய்க்கு இன்னொரு ஹிட் படம்

தெறி பைனல் வெர்டிக்ட் - கத்திக்கு மேலே; துப்பாக்கிக்கு கீழே !

Saturday, April 23, 2016

திருச்செந்தூர் - ஒரு பயண அனுபவம்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று - திருச்செந்தூர். இந்தியாவின் தென் மேற்கு முனையில் இருக்கிறது.

முருகன் சூரனை வதம் செய்த இடம் - போரில் இந்த இடம் முழுதும் ரத்தத்தால் நனைந்தது என்பதால் - இவ்விடத்துக்கு செந்தூர் என்று பெயர் வந்தது. முருகனுக்காக திரு விகுதி சேர்ந்து திருச்செந்தூர் ஆனது

பெரிய கோவிலின் அருகிலேயே பீச் இருப்பது மிக அழகான சூழல். நிறைய ஓபன் ஸ்பேஸ் இருப்பதால் காற்று பிய்த்து கொண்டு அடிக்கிறது கோவில் பிரகாரத்தில் பீச்சை பார்த்த படி சுற்றி வருவதே இனிமையான அனுபவமாக இருக்கிறது
டாக்டர் வெங்கடப்பன், அவர் மகன் பிரகாஷ் உடன் கோவில் வெளியே 

அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் இரவு 9 மணி வரை திறந்திருக்கிறது. மதியம் நடை சாத்தப்படுவதே இல்லை !

சபரிமலை செல்லும் பக்தர்களில் - குறிப்பிட்ட பகுதியினர் பெருமளவில் வருவதால் மார்கழி, தை (டிசம்பர், ஜனவரி ) மாதங்களில் கூட்டம் மிக அதிகமாய் காணப்படுகிறது
*************
இந்த வீடியோவில் கோவில் மற்றும் பீச் காணலாம்:



நாங்கள் சென்ற நேரம் சென்னையிலிருந்து இன்னொரு உயர்நீதி மன்ற வழக்கறிஞர் குடும்பமும் வந்திருந்தனர். அவர்களோடு ஒரு ஆண் கிளியும் ! உயர் நீதி மன்றத்தில் மரம் வெட்டும்போது அதிலிருந்த பொந்திலிருந்து குட்டி கிளியாக எடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளனர். எவ்வளவு ஆசையாக அந்த குடும்பத்துடன் ஒட்டி கொண்டது அந்த கிளி ! ஏறக்குறைய குழந்தையை வைத்திருக்கும் படி தான் அதனை வைத்திருந்தனர். எந்த கூண்டும் இன்றி கைகளுக்குள்ளேயே வைத்திருந்தனர் அந்த கிளியை ! அவர்கள் சொன்னால் அவ்வளவு அழகாய் பேசுகிறது ! அவர்கள் சொன்னதும் எங்கள் ஒவ்வொருவரிடமும் வந்தது அக்கிளி. ஊரில் எங்கள் கிளிகளை விட்டு விட்டு போனதால் அந்த கிளியை பார்த்து மிக ஆசை, ஆசையாய் நாங்கள் மிக கொஞ்சினோம்



கோவில் உள்ளே செல்ல காத்திருக்கும் நேரத்தில் இந்த நிகழ்வை கண்டோம். சுற்றியள்ள இடங்களில் இருந்து நடைபயணமாக வருவார்கள் இல்லையா அப்படி கோவிலுக்கு வந்த ஒரு பெரிய பக்தர் கூட்டம் .. சாமியை பார்க்கும் முன்பு பூஜை செய்து கொண்டிருந்தது. சரியான துள்ளல் இசை, பக்தி பாட்டு என டெம்போ ஏற ஏற அங்கிருந்த ஒரு அம்மணி சாமி ஆடியது செம சுவாரஸ்யமாக இருந்தது வீடியோவில் பாருங்கள்



சபிக்கப்பட்ட தினமான - அந்த டிசம்பர் 26 கடல் சார்ந்த பகுதியான திருச்செந்தூரையும் தாக்கியிருக்கிறது. ஆனால் கோவில் இருந்த இடம் பீச்சிற்கு மிக அருகில் இருந்தும் கோவில் உள்ளே மட்டும் தண்ணீர் நுழையவே இல்லை ! கடல் உள்வாங்கி விட்டது !  " சுனாமி வென்ற முருகன் " என்று அதன் பின் அழைக்க துவங்கி விட்டனர் நம் மக்கள் !

இங்கு வழங்கப்படும் பன்னீர் இல்லை பிரசாதம் பிரபலமானது. ஒரு இலையில் திருநீரை வைத்து மடித்து பாடம் செய்யப்பட்டது போல் தருகிறார்கள். (எல்லா பக்தர்களுக்கும் இது தரப்படுவதில்லை. கோவிலில் வேலை செய்வோர் யாரேனும் தெரிந்தால் மட்டுமே வாங்க முடியும்)

குறிப்பிட்ட ஒரு மரத்திலிருந்து இந்த இலைகள் எடுக்கப்படுகின்றன. அவற்றின் 12 நரம்புகளும் தெளிவாக தெரிகிறது; இதனை முருகனின் பன்னிரு கரத்துடன் ஒப்பிட்டு பன்னிரு இலை என்று சொல்லப்பட்டு அதுவே பன்னீர் பிரசாதம் ஆகி விட்டது.



கோவிலின் உள்ளே தினம் குறைந்தது 300 பேருக்காவது அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் கோவிலில் இருந்து சற்று தொலைவில் " நகரத்தார் விடுதி" என்று சொல்லப்படும் இடத்தில் தினம் 100 பேருக்கு மிக தரமான உணவு அன்னதானம் தரப்படுகிறது. நகரத்தார் விடுதி இந்த பகுதியில் மிக பிரபலம் என்பதால் யாரை கேட்டாலும் அடையாளம் காட்டுவார்கள்

திருச்செந்தூர் நல்ல உணவிற்கு பெயர் போனது. இங்கு சரவண பவன் உட்பட நல்ல ஹோட்டல்கள் பல உண்டு.

குடந்தை அருகே உள்ள ஆலங்குடி குருஸ்தலம் - ஆக கருதப்படுவது போல, திருச்செந்தூர் அருகே உள்ளவர்கள் குரு பெயர்ச்சியின் போது பெரும் திரளாக இங்குள்ள குரு - சந்நிதியில் வந்து வணங்குகிறார்கள். கோவிலில் குருவிற்கு தனி (பெரிய) சந்நிதி உண்டு

இந்த கோவிலில் இரண்டு மூலவர் சந்நிதி உண்டு. ஒரு மூலவருக்கு கேரள முறைப்படி வழிபாடு நடக்கிறது. இன்னொரு மூலவருக்கு தமிழக முறைப்படி வழிபாடு தொடர்கிறது

முருகன் சந்நிதிக்கு அருகிலேயே உள்ள பஞ்சலிங்க குகையும் ( ரொம்ப குனிந்து ,வளைந்து செல்ல வேண்டும் )கோவிலுக்கு வெளியே உள்ள வள்ளி குகையும் பலரும் விரும்பி செல்லும் இடங்களாக உள்ளன.

திருச்செந்தூருக்கு அருகில் தான் சரவண பவன் ஓனர் கட்டிய வன திருப்பதி கோவிலும் உள்ளது நீங்கள் காரில் திருச்செந்தூர் செல்கிறீர்கள் என்றால் வழியில் வன திருப்பதிக்கும் ஒரு விசிட் அடிக்கலாம் !

Saturday, April 16, 2016

கோவா செல்வது குறித்த சில கேள்வி- பதில்கள் - FAQ

கோவா செல்ல சிறந்த மாதங்கள் எவை ?

வருடம் முழுதும் செல்லலாம் என்றாலும் மிக அதிக கூட்டம் இருப்பது டிசம்பர் 20 முதல் ஜனவரி 2  வரை. மிக சிறந்த சீசன்  என்பதுடன் கோவா திருவிழா அப்போது நடப்பதுவும்  காரணங்கள் ; ஆனால் அப்போது ரூம் வாடகை  பல மடங்கு அதிகமாக இருக்கும். (குறைந்தது 4-5 மடங்கு)

வெய்யிலில் அலைவது  பிரச்சனை இல்லை என்றால் ஏப்ரல் மாதம் ஓகே. வாடகை ஓரளவு குறைவு. சென்னை போல வெய்யில் .தெரிய வில்லை.

கோவாவில் முக்கிய மகிழ்சிகளில் ஒன்றான வாட்டர் ஸ்போர்ட்ஸ் . மழை காலங்களில் இருக்காது என்பதால் மே இறுதி வாரம் முதல் அக்டோபர்  வரை கோவா செல்வதை தவிர்ப்பது நல்லது.



கோவாவிற்கு  எப்படி பயணம் செல்லலாம் ?

சென்னையிலிருந்து ரயில், பஸ், கார் மூன்றுமே 16- 18 மணி நேர பயணம். நேரடியாக சென்னையிலிருந்து செல்லும் ரயில்  உள்ளது.

பெங்களூரில் இருந்து 12 மணி நேர பயணம். சிலர் பெங்களூர் வரை  ரயிலில் சென்று விட்டு பின் அங்கிருந்து காரில் பயணமாகிறார்கள். சென்னையிலிருந்து காரில் வந்த சிலரையும் பயணத்தில் சந்தித்தோம்

மிக சீக்கிரம் புக் செய்தால் விமானத்தில் ஓரளவு குறைந்த அளவு டிக்கெட்டில் பயணிக்கலாம்.

கோவாவில் தங்கும் இடங்கள் பற்றி...

கோவா வடக்கு மற்றும் தெற்கு கோவா என 2 பிரிவுகளை கொண்டது  என்பதையும்,தெற்கு கோவா பீச்கள் அமைதியானவை; வடக்கில் தான் கூட்டம் அதிகம்  என்பதையும் முன்பே ஓர் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

வடக்கு கோவாவில் தான் வாட்டர் ஸ்போர்ட்ஸ் போன்றவை இருக்கும் என்பதால் அங்குள்ள ஹோட்டல்களை  தேர்ந்தெடுப்பது நல்லது. குறிப்பாக கலங்கட் , பாகா - இந்த 2 பீச்சில் ஏதாவது  ஒரு பீச் நடந்து செல்லும் தூரத்தில் இருந்தால் மிக நல்லது !



கோவாவில் உள்ள அனைத்து பீச்களையும் பேருந்தில் சுற்றி பார்க்க இயலுமா ?

கோவாவில் பேருந்துகள் மிக குறைவு. பேருந்துகளை உள்ளூர் மக்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். டூரிஸ்ட்கள் எவரும் பேருந்தை பயன்படுத்துவதில்லை. முக்கிய காரணம் - நாம் செல்ல வேண்டிய பீச்- களுக்கு பேருந்துகள் செல்லாது.

நாம் தங்கும் ஹோட்டலிலேயே ஒரு நாள் டூர் நிறைய விதங்களில் இருக்கும். வடக்கு கோவாவில் உள்ள பீச்கள் ஒரு நாள், தெற்கு கோவாவிற்கு இன்னொரு நாள் என அழைத்து செல்வார்கள். இதிலும் செல்லலாம்.

அல்லது நாள் வாடகைக்கு கார் எடுத்து கொள்ளலாம். (First 8 hours - 1,500; after that For 1 hour Rs. 50 or 100)  மேலும் டூ வீலர்கள் வாடகைக்கு நிறையவே  கிடைக்கும். அனைத்து வித வாகனங்களை விட இது தான் செலவு குறைவு மற்றும் நேரம் பற்றி கவலைப்படாமல் சுற்றி வரலாம். அங்கிருக்கும் பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் டூ வீலர்களில் தான் சுற்றி வருகிறார்கள்.

கோவாவில் எத்தனை பீச்கள் உள்ளன? எத்தனை பார்க்க வேண்டும்?

24 பீச்கள் உள்ளதென நினைக்கிறேன் ; அனைத்தையும் பார்ப்பது மிக கடினமே.
2 நாளாவது தங்குவோர் குறைந்தது 5-6 பீச்சாவது பார்ப்பர்.

கலங்கட் மற்றும் பாகா இரண்டு இடங்களிலும் வாட்டர் ஸ்போர்ட்ஸ் இருக்கும். அவசியம் செல்ல வேண்டிய பீச்கள் இவை. மற்றபடி அவரவர் விருப்பம் பொறுத்து செல்ல வேண்டிய பீச்கள்  மாறுபடும்.உதாரணமாக தனிமை விரும்பிகள் தெற்கு கோவா பீச் விரும்பலாம். இன்னும் சிலரோ அங்கு போனால். என்னடா ஓன்னு இருக்கு - ஒரு ஆக்டிவிட்டியும் இல்லையே என்றும் நினைக்கலாம்..



பீச் எல்லாவற்றிலும் தண்ணீர் தான் இருக்க போகிறது. அப்புறம் என்ன வித்யாசம் ?

கோவாவில் இருப்பது அரேபியன் கடல் மட்டுமே. ஆனால் பார்க்கும் ஒரு பீச் போல இன்னொரு பீச் இருப்பதில்லை. முக்கிய காரணம் - அந்த பீச்சின் background & சுற்றுப்புறம் ; இது முழுக்க முழுக்க மாறும். ஒரு பீச்சின் பின்புறம் மலை இருந்து அழகு தரும். இன்னொன்றிலோ மரங்களே அந்த பீச்சிற்கு பேரழகை தந்து விடும். கோட்டை அருகே இருக்கும் பீச், கரை மிக மிக அருகே இருக்கும் பீச் என வெரைட்டி, வெரைட்டி யாக இருக்கும் கடற்கரைகள் !


கோவாவில் பீச்சை தவிர பார்க்க வேறு என்ன இருக்கிறது  ?

சர்ச்கள் ஏ..........ராளமாக உள்ளன. கிருத்துவர்கள் இவற்றை மிக விரும்புவர். பிற மதத்தினரும் கூட கட்டிட கலையை நிச்சயம்  ரசிக்கலாம்.

மேலும் படகில் செல்லும் க்ரூஸ் பயணம் தவற விடக்கூடாத ஒன்று. போலவே சூதாட்டம் நடக்கும் காசிநோவும் நிச்சயம் ஒரு விசிட் அடிக்க வேண்டும்.  பூக்கள்,மரங்கள் விரும்புவோர் இங்கிருக்கும் பார்ம்ஹவுஸ்க்கு அவசியம் செல்லலாம்.

எத்தனை நாள் ட்ரிப் சரியான ஒன்றாய் இருக்கும் ?

மிக குறைந்த பட்சம் 2 நாட்கள்.

3 அல்லது 4 நாட்கள் என்பது முக்கிய பீச்கள் மற்றும் இடங்கள் பார்க்க சரியான அளவாய் இருக்கும்



என்ன மொழி இங்கு பேச/ புரிந்து கொள்ளப்படுகிறது ?

கோவாவில் வாழ்வோர் பேசுவது கொங்கனி. (இதற்கு பேச்சு வடிவம் மட்டுமே உண்டு. எழுத்து வடிவம் கிடையாது ) அனைவரும் ஹிந்தி பேசுகிறார்கள். டிரைவர் மற்றும் ஹோட்டலில் உள்ளோர் ஓரளவு ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனால் தென் இந்தியர்கள் அளவு ஆங்கிலம் எதிர் பார்க்க முடியாது. ஆங்கிலத்தில் கடினப்பட்டே புரிந்து கொள்வர். அவர்கள் பேசுவதை நாமும் அவ்வாறே புரிந்து கொள்ள வேண்டும். நம்மில் யாருக்கேனும் ஹிந்தி தெரிந்தால் பிரச்சனையே இல்லை !

கோவாவில் சாப்பாடு எப்படி ?

நான் வெஜ் தான் அதிகம்  கிடைக்கும். மீன்  சார்ந்த அனைத்து வகை உணவுகளை சாப்பிட்டு பார்க்கலாம்.

ரொம்ப கஷ்டமான விஷயம் ப்ரேக் பாஸ்ட். காலையில் ஹோட்டல்களில் அநேகமாய் பிரெட் தான் உணவு. வெளிநாட்டவர்க்கு ஏற்ப இந்த ஏற்பாடு. சப்பாத்தி  கூட காலையில் கிடைப்பதில்லை. பிரெட் .. பிரெட் ... பிரெட்  தான் !

கோவாவில் யாரும் இட்லி மாவே அரைக்க மாட்டார்கள் போலும். இட்லி தோசை என்ற பேச்சே கிடையாது. போலவே பொங்கல், உப்புமா, கிச்சடி போன்றவையும் என்ன என்றே அவர்களுக்கு தெரியாது.  4-5 நாள் தினம் காலை பிரெட் சாபிட்டால் வெறுத்து போய் விடுகிறது !

கட்ட கடைசியில் - காலையில் பூரி கிடைப்பதை அறிந்து அதனை சாப்பிட்டோம் (மெனு கார்டில் பூரி என்றே இல்லை. வேறு பெயர் இருக்கிறது !)



கோவாவில் பர்ச்சேஸ் செய்ய வேண்டியவை எவை?

கோவாவின் சனிக்கிழமை மார்க்கெட்கள் தவற விடக்கூடாதவை. மாக்கீஸ் மற்றும் இண்டோ என 2 மார்க்கெட்கள் சனிக்கிழமை இயங்கும். இரண்டையும் அவசியம் சென்று பாருங்கள். பர்ச்சேஸ்ம் செய்யுங்கள். விலை 5 முதல் 10 மடங்கு அதிகம் சொல்வார்கள். கூசாமல் அவர்கள் சொல்கிற விலையில் 10- 20 % அளவு மட்டுமே பார்கெயின் செய்ய ஆரம்பியுங்கள். 20- 25 % விலைக்கு கண்டிப்பாக பொருட்களை தருவார்கள் !

கலை வேலைப்பாடுடன் கூடிய சிலைகள், பொம்மைகள் வாங்குவது உசிதம். துணி வகைகள் ரொம்ப சுமார். அவற்றை வாங்காதிருப்பது நல்லது

மேலும் முந்திரி பருப்பும் இங்கு நல்ல தரத்தில் ஓரளவு சரியான விலையில் கிடைக்கும்.
****************
முந்தைய பதிவுகள் :

கோவா பயணம் - புகைப்படங்கள் ஜாலி டிரைலர் 

கோவா..- ஜாலி பயணம் - முதல் பகுதி

கோவாவின் சிறந்த 2 பீச்களும், அற்புத பீச் விளையாட்டுகளும்

கோவா கப்பலில் ஒரு பயணம் 

Tuesday, April 12, 2016

தோழா & பிச்சைக்காரன்- சினிமா விமர்சனம்

தோழா - சினிமா விமர்சனம்

ஆங்கில படத்தை காப்பி அடித்து சொதப்பியவர்கள் தான் மிக அதிகம்; இங்கு ஆங்கில படத்தை நமக்கு ஒத்து போகும் வகையில் மிக சரியாக எடுத்துள்ளனர் !!

வீல் சேரிலேயே வாழ்க்கையை கழிக்கும் பணக்காரர் நாகார்ஜுனா - அவரை பார்த்து கொள்ள வரும் லோக்கல் திருடன் - கார்த்தி... இவர்களின் நட்பே தோழா..


கதை - திரைக்கதை அமைக்கப்பட்ட விதத்திற்கு தான் முதல் பாராட்டு; குறிப்பாக காமெடி நீக்கமற நிறைந்திருக்கிறது. சீரியஸ் - செண்டிமெண்ட் சீனை கூட சர்வ நிச்சயமாக காமெடியுடன் தான் முடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு  திரைக்கதை அமைத்துள்ளனர்.. சிற்சில லாஜிக் மீறல்கள் நிச்சயம் இருந்தாலும் காமெடி தான் அவற்றை மறக்கடிக்கிறது..

காஸ்டிங்.. ஜஸ்ட் பெர்பக்ட்... !! வீல் சேரில் இருக்கும் பணக்காரர் பாத்திரத்துக்கு நாகார்ஜுனா செம பொருத்தம். ரிச்னெஸ், இயலாமை இரண்டையும் துல்லியமாக பிரதி பலிக்கிறார்.. எப்போதும் புன்னகையுடன் இருக்கும் நாகார்ஜுனா பாத்திரம் அனைவரையும் கவர்ந்து விடும்.

நாகார்ஜுனா மாதிரி அனுபவம் வாய்ந்த நடிகர் முன்பு கார்த்திக்கும் - அட்டாகாசமான ரோல் தந்து அவரிடமும் நல்ல நடிப்பை பெற்றுள்ளனர். கார்த்தி பாத்திரத்தில் சில லாஜிக் மீறல்கள் இருப்பினும் (பணக்காரரை அவர் ஹாண்டில் செய்யும் விதம்  + தமன்னாவுடன் காதல்) - மொத்தத்தில் அந்த பாத்திரம் மற்றும் அவரது நடிப்பு - ரசிக்கும் விதமே உள்ளது.

தமன்னா விற்கு கதையில்  அதிக ஸ்கோப் இல்லை என்றாலும் - அவர் இல்லாவிடில் காட்சிகள் நிச்சயம் Dry ஆகி விடும்; எனவே அப்படி ஒரு பாத்திரம் அமைத்தது - திரைக்கதைக்கு உதவவே செய்கிறது..

படத்தை மிக அழகாக முடிக்கிறார்கள்.. Poetic !!

படம் ஒரு விஷயத்தை சொல்லாமல் சொல்கிறது..

நாகார்ஜுனாவிற்கு வாழ்வில் என்ன தேவை என அவருக்கே தெரியவில்லை.. அவருக்கு என்ன தேவை என புரிந்து கொண்ட ஒரு நண்பன் தான்  உரிமையுடன் அதை சரி செய்கிறான்..

போலவே, கார்த்தியின் வாழ்வில் எது முக்கியம்; அவருக்கு எது சந்தோஷம் தரும் என்கிற விஷயத்தை நாகார்ஜுனா தான் உணர்த்தி வேறு வழிக்கு திருப்புகிறார்..

நட்பின் பலத்தையும், வலுவையும் இதை விட அழகாக சொல்ல முடியாது.

தோழா.. அனைவருக்கு பிடித்தவன்.. அவசியம் பாருங்கள் !

தியேட்டர் நொறுக்ஸ் :

தஞ்சை சென்ற போது - அப்பாவிற்கு ரிலாக்சேஷன் ஆக இருக்கும் என படத்துக்கு அழைத்து சென்றோம்.. கூடவே 11 முதல் 20 வயது வரை உள்ள எங்க வீட்டு நெக்ஸ்ட் ஜெநரேஷன் பசங்க.. நால்வர்.. படம் ஆறு  பேருக்குமே மிக பிடித்திருந்தது..

ஜூபிடர் தியேட்டர்.. ஒரு காலத்தில் ரொம்ப சுமாராய் இருக்கும்; இப்போது ஏ. சி பொருத்தியதுடன் நல்ல சவுண்ட் சிஸ்டத்துடன் - தயக்கமின்றி படம் பாக்கிற வகையில் உள்ளது.. !!
**********
பிச்சைக்காரன் - விமர்சனம்

அட்டாகாசமான படம் ! மிக விதயாசமான கான்செப்ட்; செண்டிமெண்ட், காமெடி, நல்ல வசனம் என அனைத்தும் அசத்துகிறது.

உண்மையில் இது ஒரு மாஸ் ஹீரோவிற்கான கதை .. விஜய் ஆண்டனி நடித்து ஓடி விட்டது.. ஓகே. ஆனால்  10 வருடம் முன்பு ரஜினி நடித்திருந்தால் (இப்போது அவர் இந்த பாத்திரத்தில் நடிக்க முடியுமா தெரிய வில்லை ) - இப்படம் ரஜினியின் அண்ணாமலை, பாஷா உள்ளிட்ட ஆல் டைம் ஹிட் வரிசையில் சேர்ந்திருக்கும் !!


இதுவும் ஒரு பணக்காரரின் கதை தான். அம்மாவிற்காக 48 நாள் வேண்டுதலுடன் பிச்சை எடுக்கிறார்.. அந்த 48 நாள் அவர் சந்திக்கும் மனிதர்கள் + அனுபவங்கள், அந்த காலத்திலேயே வரும் ஒரு காதல், 48 நாள் முடியும் முன்னே அவர் தனது நிஜ பெயரை வெளிகாட்டியே தீர வேண்டி வரும் நிர்ப்பந்தம்.. என படு சுவாரஸ்யம்..

தமிழ் சினிமா நிறைய நேர் மற்றும் எதிர் நம்பிக்கைகள் கொண்டது; குறிப்பாக நெகடிவ் பெயரில் படம் எடுக்க மாட்டார்கள். ஆனால் அண்மையில் சில படங்கள் நெகடிவ் தலைப்புடன் வந்து நன்கு ஓடி உள்ளன.. இறுதி சுற்று மற்றும் பிச்சைக்காரன் (இப்படத்திற்கு இதை விட சிறந்த பெயர் இருக்க முடியாது !) இதுவே ஒரு ராசி என நினைத்து நிறைய படங்கள் இதே மாதிரி தலைப்பில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை !!

பிச்சைக்காரன.. நல்ல பீல் குட் மூவி.. தவற விடாதீர்கள் !
Related Posts Plugin for WordPress, Blogger...