Showing posts with label யுடான்ஸ் ஸ்டார் வாரம். Show all posts
Showing posts with label யுடான்ஸ் ஸ்டார் வாரம். Show all posts

Sunday, November 13, 2011

வேலாயுதம் வெற்றிப் படமா?


வேலாயுதம் இந்த வார இறுதியில் தான் பார்க்க முடிந்தது. படம் குறித்து சுருக்கமான ஒரு பார்வை.

ரஜினி, விஜய் போன்றோருக்கு ஒரு ராசி உண்டு. அவர்கள் நடித்த படம் சுமாராக இருந்தாலே ஓரளவு ஓடி விடும். மிக மொக்கையாக இருந்தால் தான் (அதிசய பிறவி - ரஜினிக்கு, சுறா - விஜய்க்கு) அவை தோல்வி படமாகும். எனவே இவர்களிடம் எதிர்பார்ப்பது ஆவரேஜ் (மசாலா) படம் தான்.

விஜய் படங்களில் வேலாயுதம் - Above Average படம் என முதலிலேயே சொல்லி விடுகிறேன். ஆசாத் பட தழுவல் என்றாலும் திரைக்கதை பெருமளவு சுவாரஸ்யமாக உள்ளது. படத்தின் முக்கிய ஆட்கள் பற்றி சற்று பார்ப்போம்.

விஜய்: : காவலனிலும் விஜயை நிச்சயம் ரசிக்க முடிந்தது. அடுத்து வேலாயுதம். இந்த வருடம் விஜய்க்கு நிச்சயம் நல்ல வருடமாக அமைந்து விட்டது. அடுத்து நண்பன், கெளதம் மேனன் படம் என அவருக்கு ஏறுமுகம் தான் என்று நம்புகிறேன்.

இந்த படத்தில் விஜய்க்கு லட்டு மாதிரி கேரக்டர். காமெடி, டான்ஸ், சண்டை, எமோஷன் என tailor made ! நிச்சயம் அவரது ஸ்க்ரீன் presence அசத்துகிறது. எனக்கு ஒரே பயம் திருப்பாச்சி, வேலாயுதம் என தங்கச்சி செண்டிமெண்ட் படங்கள் நன்கு ஓடுகிறது என அவர் மீண்டும் இன்னொரு படம் இதே மாதிரி செய்ய கூடாதே என்பது தான். (முடியாதுடா சாமி!!)

ஹன்சிகா: சின்ன வயது குஷ்பூவை நிச்சயம் நினைவு படுத்துகிறார் ! ஆனால் நடிப்பு.. சுத்தமா வரலை. ஓரிரு சுற்று குண்டாக ஆனால் நமீதா ரேஞ்சுக்கு வரும் ஆபத்தும் உள்ளது.

ஜெனிலியா: வழக்கமாக அரை லூசு பாத்திரத்தில் வருவார். இம்முறை சற்று அறிவை உபயோகிக்கும் பாத்திரம். ஒண்ணரை பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதோடு விஜயை ஒன் சைடா காதலிக்கிறார்.

சந்தானம்: சமீபத்தில் எனக்கு மிக பிடித்த காமெடியன். ஆனால் இந்த படத்தில் வழக்கமான அளவு சிரிப்பு வெடி இல்லை. அப்பாவை செருப்பால் அடிப்பது காமெடியா சந்தானம்? அப்புறம் "புர்" விடுவதை வைத்து சிரிக்க வைக்க முயல்கிறார். சிறுத்தை படம் மாதிரி கலக்கணும் பாஸ் !!

சரண்யா மோகன்: டிபிகல் தங்கச்சி. படம் முழுதும் சொல்லி கொள்கிற மாதிரி ஏதும் இல்லா விடினும், கடைசி காட்சியில் இவர் செய்யும் காரியம் இவரை நம் மனதில் இடம் பிடிக்க வைத்து விடுகிறது. (இவரும் விஜயும் சேர்ந்து செய்யும் லூட்டிகள் சந்தானம் காமெடியை விட நன்கு எடுபடுகிறது)

ஷாயாஜி ஷிண்டே: பாரதியாக நடித்தவர் வழக்கமா மோசமான அரசியல் வாதியா வருவார். (தூள் படத்தில் துவங்கியது). அதிசயமா இந்த படத்தில் போலிஸ் உயர் அதிகாரியா வர்றார். அதுவும் நல்ல போலிஸ்!! தீவிர வாதிகள் முஸ்லீம்கள் என்று காட்டுவதால் அதை பேலன்ஸ் செய்ய இவரும் முஸ்லீம் என இறப்பதற்கு அரை நிமிடம் முன் நமக்கு தெரியப்படுத்துகிறார்கள்.

ராகவ்: நஞ்சுபுரம் படத்தில் இப்போ தான் ஹீரோவா நடித்தவர் துக்குநியூண்டு கேரக்டரில் விஜயின் புகழ் பாடுபவராக வருகிறார். ஏன் ராகவ்?

இனி இசை மட்டும் இயக்கம் பற்றி..

விஜய் ஆண்டனி : எப்படி இவ்ளோ அருமையா பாட்டு போட்டார்னு தெரியலை. அதுவும் படத்தோடு சேர்த்து பார்க்கும் போது நல்லாவே இருக்கு. பல பாட்டுகள் திடீர்னு வராமல் அதுக்குன்னு ஒரு சூழல் .....அப்புறம் வருது. (காவலனில் கூட பாடல்கள் படத்தோடு இயைந்து வந்தது குறிப்பிட தக்கது)

இயக்குனர் ராஜா.
என்ன தான் இருந்தாலும் கதை, திரைக்கதை என இவர் தன் பெயர் போட்டது கொஞ்சம் ஓவர் தான்.

படத்தை மிக சுவாரஸ்யமாக கொண்டு சென்றது, தேவையில்லாத காட்சிகள் என எதுவும் இல்லாதது, விஜய்க்கு ஏற்ற படம் செய்தது என பல விஷயங்களில் பாராட்டு பெறுகிறார். பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தும் அனைவரையும் திறமையாக கையாண்டுள்ளார்.

தங்கையை கொன்றவனை ஹீரோ கொல்லும் காட்சியில், தன் தங்கை எப்படி இறந்தாள் என்பதை நினைத்து நினைத்து பார்த்து, வில்லனை கொல்வது இது வரை தமிழ் சினிமா பார்க்காத "புதுமையான" காட்சி. :))) ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

மொத்தத்தில் : நிச்சயம் சுவாரஸ்யமான என்டர்டெயிநிங் படம்: Go for it !!

டிஸ்கி: இன்றுடன் உடான்ஸ் ஸ்டார் வாரம் முடிகிறது. !! வாரம் முழுதும் நண்பர்களின் ஆதரவுக்கு நன்றியும் அன்பும்...மோகன் குமார் 

Saturday, November 12, 2011

வாங்க முன்னேறி பார்க்கலாம் : நட்பு - நெட்வொர்க்கிங்

முன்பு வாங்க முன்னேறி பார்க்கலாம் என்கிற தொடர் ப்ளாகில் எழுதி வந்தேன். அதற்கு என்ன ஆயிற்று என சில நண்பர்கள் விசாரிக்கிறார்கள். (யாருன்னுல்லாம் கேட்க கூடாது. ரைட்டா ?)

ப்ளாகில் தான் அது தொடர வில்லையே ஒழிய அதன் பின் பத்துக்கும் மேற்பட்ட பகுதிகள் எழுதி, அவை பிரசுரம் ஆகாமல் பத்திரமாக என்னிடமே உள்ளது. வாங்க முன்னேறி பார்க்கலாம் நேரடியாக புத்தகமாக வெளியிட ஐடியா. வெளியிடாமல் உள்ளதில் ஒரு பகுதி இதோ உங்கள் பார்வைக்கு ..
**
மெரிக்காவில் சாப்ட்வேர் துறையில், மார்கெட்டிங் பிரிவில் இருக்கும் இந்தியர்கள், வார நாட்களில் பகல் நேரத்தில் அலுவலகம் செல்லாமல் கூட கோல்ப் ஆட செல்வார்கள்.. ஏன் தெரியுமா? யோசியுங்கள்.. விடை பின்னர்...

**
பெப்சி நிறுவனத்தின் தலைவரான இந்திரா நூயி தன் வெற்றிக்கான முக்கிய காரணமாக சொல்வது எதை தெரியுமா? நெட்வொர்க்கிங் !!  தமிழில் சொல்ல வேண்டுமானால், தனது துறையை சார்ந்த பலரை தெரிந்து வைத்திருப்பதும், நண்பர்களாய் கொள்வதும்.. 
This is Bloggers Network !!
 முன்னேற வேண்டும் என்பது தனி மனிதனின் எண்ணம்/ ஆசை,  ஆயினும், ஒவ்வொரு கட்டத்திலும் அவன் முன்னேற, பல்வேறு மனிதர்களின் உதவியும் அவசியம் தேவைப்படுகிறது. 

ஒரு உதாரணம் எடுத்து கொள்வோம். ஒரு நிறுவனத்தில் தற்சமயம் வேலை பார்க்கும் ஒருவர் சுயமாக தொழில் தொடங்குவதை தன் லட்சியமாக கொண்டுள்ளார். இதற்கு இவர் என்னென்னெவெல்லாம் செய்ய வேண்டும்? முதலில் நிறுவனத்திற்கான நிதி (Capital) திரட்ட வேண்டும். இதற்கு தன்னிடமுள்ள பணம் தவிர நண்பர்கள் மற்றும் உறவினர்களை நாடலாம். அல்லது வங்கிகள், தனியார் நிறுவனங்களை அணுகலாம். அடுத்து நிறுவனத்திற்கு தேவையான அனுமதி (License) பெறுதல், உபகரணங்கள் வாங்குதல், இடம் முடிவு செய்தல், ஊழியர்களை தேர்ந்தெடுத்தல் என ஒவ்வொரு கட்டத்திலும் அது சம்பந்தப்பட்ட நபர்களின் வழிகாட்டலும் உதவியும் தேவைப்படுகிறது. 

இவை அனைத்திற்கும், அந்த நபர் துவக்கத்திலிருந்தே இது சம்பந்தப்பட்ட நபர்களுடன் நட்பை வளர்த்திட வேண்டும். மேலும் நிறுவனம் தொடங்கிய பின்னும் அதனை வெற்றிகரமாய் நடத்திட பல்வேறு மனிதர்களின் உறவு தேவைப்படவே செய்கிறது. 

 கவிஞர் வைரமுத்து சொல்லுவார்: "உன்னை விட பெரிய மனிதரை சந்திக்க வேண்டுமெனில் அதிகாலையிலேயே அவர் இல்லம் சென்று விடு; சற்று தாமதமாக சென்றால், அவர் தன்னை விட பெரிய மனிதரை காண சென்றிருப்பார்". 

இப்போதெல்லாம் இதில் ஒரு சிறிய மாற்றம். இன்றைக்கு யாரும் யாரையும் வீட்டுக்கு தேடி சென்று பார்ப்பது இல்லை ! மொபைல்
மற்றும் இணையமுமே இன்று பாதி வேலையை எளிதில் முடிக்க உதவுகிறது.

முன்பெல்லாம் ஒவ்வொரு மனிதருக்கும் நெருங்கிய நண்பர்கள் என்றால் "நான்கைந்து பேர்" என்றிருந்தது. இன்று ஒவ்வொருவருக்கும் ஏறக்குறைய நூறு நண்பர்கள் உள்ளனர். ( பேஸ்புக் நண்பர்கள் எண்ணிக்கையை வைத்து இதை சொல்லவில்லை.  பள்ளி காலத்து நண்பர்கள், கல்லூரியில் உடன் படித்தவர்கள், வெவ்வேறு நிறுவனங்களில் நாம் பணி புரிந்த போது, உடன் பணியாற்றியவர்கள், நம் நண்பர்கள் மூலம் நமக்கு நட்பானவர்கள்.. இப்படி தொடர்ந்து தொடர்பில் இருக்கும் நண்பர்கள்...)

தற்போது இணையத்தின் வளர்ச்சியால் இ மெயில் மூலம் ஒரே மெயிலில் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு தகவலை கூறி விட முடிகிறது. லின்குட் இன்,  பேஸ்புக் இவற்றின் மூலமும் புது புது நட்புகள் பெறுவதும் அவற்றை வளர்ப்பதும் முடிகிறது. எனினும் இவற்றை நாம் எப்படி பயன் படுத்துகிறோம் என்பதும் முக்கியம். பெரும்பாலானோர் இணையத்தை "ஜோக்" அடிக்கவும், வீடியோக்களை பகிரவும் மட்டுமே பயன் படுத்துகிறார்கள். ஆனால் இணையத்தை தங்கள் இலக்கை அடைய சரியாக பயன் படுத்துவோரும் இருக்கவே செய்கிறார்கள். 

ஒரு அரசாங்க அலுவலத்தில் பெரிய அதிகாரியை சந்திக்க அடிக்கடி நீங்கள் செல்கிறீர்கள் என்றால் அந்த அதிகாரியிடம் மட்டுமல்ல அங்குள்ள கிளார்க், பியூன் என அனைவரிடமும் நட்பை வளர்ப்பது அவசியம். நீங்கள் நட்பாயிருந்தால் பியூன்கூட உங்களுக்கு பயனுள்ள தகவலை கூறக்கூடும்.
அரசு அலுவலகம் போன்ற இடங்களுக்கு செல்கையில் நம் வேலை மட்டுமே குறி என்றில்லாமல் அனைவரையும் பார்த்து நட்புடன் புன்னகைப்பதும், பேசுவதும் பல விதத்திலும் பயனளிக்கும். 
**
நம் நண்பர்களுக்கு மட்டுமல்ல, நம்மை விட பெரிய மனிதர்களுக்கு "புத்தாண்டு வாழ்த்து"சொல்வதை நாம் எல்லாருமே செய்கிறோம். ஆயினும் அவர்களின் பிறந்த நாளை தெரிந்து கொண்டு அதற்கு வாழ்த்து சொல்லுங்கள். புத்தாண்டிற்கு வாழ்த்து சொல்வோர் நூறு பேர் எனில் பிறந்த நாளில் வாழ்த்துவோர் நான்கைந்து பேர் தான் இருப்பர். 

தொடர்புகளை வளர்ப்பது "நம் முன்னேற்றத்திற்க்காக" என்ற சுய நலத்துடன் மட்டுமே இருக்க கூடாது. நம் துறை சார்ந்த அறிவை வளர்க்கவும், நமக்கு தெரிந்த வேறு யாருக்கோ உதவி கேட்டும் கூட நாம் அவர்களை நாடக்கூடும். குறிப்பாய் நம் துறை சார்ந்த அறிவை வளர்க்க புது புது நட்புகள் நிச்சயம் உதவுகிறது. சட்டம் சார்ந்த அனைத்து புது தகவல்களையும் எனக்கு உடனுக்குடன் மெயில் மூலம் சொல்லும் நண்பர்கள் அனைவரும், இதுவரை நான் நேரில் பார்த்திராத, இணையம் மூலம் நட்பானவர்களே. 

நம் துறை சார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரே க்ருப் மெயில் உருவாக்கி, அவர்களுக்கு புது புது தகவல்களை பரிமாறி வரலாம். தினம் தினம் மெயில் அனுப்பி போரடிக்காமல் வாரம் ஓரிருமுறை முக்கிய தகவல்களை மட்டும் இவ்வாறு அனுப்புவது நலம். 

துவக்கத்தில் கேட்ட கோல்ப் பற்றிய கேள்விக்கான விடை:

அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களின் MD மற்றும் CEOக்கள் பகலில் கோல்ப் ஆடுவார்கள். (ஆம் ! பகலில்!!) இவர்கள் அறிமுகமும் அதன் மூலம் கம்பனிக்கு ஆர்டரும் கிடைக்குமிடம் கோல்ப் மைதானம் தான். இதனால் தான் தங்கள் பாசுக்கு தெரிந்தே பல மார்கெடிங் மேனஜர்கள் பகலில் கோல்ப் ஆட செல்கிறார்கள் ! Networking !!

நான் வேலை பார்த்த நிறுவனமொன்றில், ஒவ்வொரு துறையின் தலைவரும் (Head of the Department) மாதம் ஒரு முறை, தன் துறை சார்ந்த வேறு ஒரு நிறுவனத்தில் பணி புரியும் நபருடன் (Peer in the same profession) ஓட்டலில் உணவருந்தலாம். இதற்கான செலவை நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். இத்தகைய சந்திப்பினால் புது தகவல்கள் கிடைக்கும், ஊழியரின் அறிவு வளரும், இது நிறுவன வளர்ச்சிக்கு உதவும் என்பதால் இந்த ஏற்பாடு. அங்கிருந்த போது எனக்கு வந்த  இப்பழக்கம் அங்கிருந்து விலகிய பின்னும் தொடர்கிறது. மாதம் ஒரு முறை துறை சார்ந்த ஒரு நபரை ஓட்டலிலோ அவர் அலுவலகத்திலோ சந்திப்பதை இன்றும் தொடர்கிறேன். இது பல்வேறு விதங்களில் பயனளிக்கிறது. 

மேலும் புது நட்புகளை அடைய நிறைய மீட்டிங்குகளுக்கு (Seminar, Conference, etc) செல்வதும், அப்போது சந்திக்கும் நபர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்வதும் கூட மிகுந்த பயன் தரும்.  
**
உதவுவது ஒரு வழி பாதையன்று. நண்பர்களிடம் நாம் மட்டுமே உதவி கேட்கவேண்டும் என்றில்லை. அவர்களும் கூட தங்களுக்கோ, தங்களுக்கு வேண்டியவருக்கோ உங்களிடம் உதவிகள் கேட்க கூடும்.

அடுத்த முறை ஏதேனும் மீட்டிங் செல்லும் போது உங்கள் அருகிலிருப்பவரிடம் நீங்களே அறிமுகம் செய்து கொண்டு கை குலுக்குங்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு அந்த கையும் கூட ஓர் நாள் உதவ கூடும் !! 
***
வாங்க முன்னேறி பார்க்கலாம் முழுமையாக வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Friday, November 11, 2011

11-11-11 பற்றி 11 பதிவர்கள் ...

11/11/11....இந்த நாளுக்கு தான் என்னா பில்ட் அப்! இந்த தேதியில் தான் பிள்ளை பெற்று கொள்ள வேண்டுமென உலக அழகி ஐஸ்வர்யா ராய் இன்று பிள்ளை பெற்று கொள்கிறார் என்றால் பாருங்களேன் !

என்னை பொறுத்த வரை ஞாபகத்தில் இருக்கும் படி இன்று செய்த விஷயங்கள் இரண்டு.

1. அலுவலகத்தில் இன்று நடக்கும் ரத்த தான முகாமில் Blood donate செய்தது.

2. 11 /11 /11 பற்றிய இந்த பதிவை, 11 /11 /11 - 11.11-க்கு வெளியிட்டது. :)))

நமது பதிவர் நண்பர்கள் 11 பேரிடம் இது பற்றி கேட்ட போது அவர்கள் சொன்னது இதோ:

கேபிள் சங்கர்
11 பேரில் இவர் படம் தான் ஈசியா கிடைக்குது !!
11-11-11 என்ற இந்த சீக்வென்ஸ்.. ஆச்சர்யமான, எப்போதாவது நிகழ்கிற ஒன்று தான். வெளிநாட்டில் இம்மாதிரியான தேதிகளுக்கு, நாட்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்யத்துவத்தின் காரணம் வேறு. அன்றைக்கு பிறந்த குழந்தைகள் உலகிலேயே தனித்து அறியப்படுவார்கள். அப்படி அறியப்பட வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள். என் வாழ்க்கையில் இன்றைக்கு ஏதாவது ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்தாலே ஒழிய, என்னை பொருத்தவரை 11-11-11 மற்றுமொரு நாளே..

ரேகா ராகவன்

11-11-11 இந்த தேதியைப் பற்றி நினைக்கும்போது என்னால் 10-10-10 என்ற தேதியையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் அது என் அப்பா பிறந்த நாள். உலகெங்கிலும் உள்ள கர்ப்பிணிகள் இன்று அதாவது 11-11-11 தங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களாம். ஏனெனில் இது ஒரு சிறப்பு தினம் என்பதால். அந்த காலத்தில் இப்படியெல்லாம் நினைத்திருப்பார்களா என்பது தெரியாது. உலகில் எங்காவது இன்று பிறக்கும் குழந்தையின் கையிலோ காலிலோ கூடுதலாக ஒரு விரலோடு பிறந்தால் அது 11-11-11 அன்று 11 விரல்களோடு பிறந்த குழந்தை என்று கூடுதல் கவனத்தோடு கொண்டாடப்பட வாய்ப்புண்டு. பணக்காரர்களுக்கும் நடுத்தர வர்கத்தினர்களுக்கும் வேண்டுமானால் இன்று ஒரு மாறுப்பட்ட நாளாகத் தோன்றலாம், ஆனால் வீதியில், குடிசையில்,கிராமங்களில் அடுத்த வேலை உணவுக்கு என்ன செய்வது என்று கவலையோடிருக்கும் ஏழைகளுக்கு இது மற்றுமொரு நாளே!

பெஸ்கி

இதற்கடுத்து 12/12/12 அன்று தான் இது போல விசேஷ நாள் வரும். இந்த தலை முறை மக்கள் தான் இந்த இரு நாளையும் பார்க்க முடியும். அடுத்த முறை நூறு ஆண்டுகள் கழித்து இது போல வரும் போது நாம் யாரும் இருக்க போவதில்லை.

ரகு

ஒன்று க‌வ‌னித்தீர்க‌ளா? அடுத்த‌ வ‌ருட‌ம் டிச‌ம்ப‌ர் 12ம் தேதி வ‌ந்தால், 01/01/01 முத‌ல் 02 /02 /௦02, 03/03 / 03 என 12/12/12 வ‌ரை நாம் க‌ட‌ந்து வ‌ந்திருப்போம். நாளை நான் செய்ய‌ நினைப்ப‌து ஒன்றே ஒன்றுதான். காலை 11 ம‌ணி 11 நிமிட‌ங்க‌ள் 11 நொடிக‌ளை எப்ப‌டியாவ‌து மொபைல் கேம‌ராவில் சிக்க‌வைக்க‌ வேண்டும். ஒரு சூப்ப‌ரான‌ Palindrome கிடைக்கும்.

மிடில் கிளாஸ் மாதவி

அன்றும் வழக்கம் போலவே சூரியன் உதிக்கும்; வழக்கம் போலவே வேலைகளைப் பார்க்க வேண்டியதுதான்! அன்றைய தினம் குழந்தை பெற விரும்பக் காரணம், பிறந்த நாளை மறக்காமல் இருப்பதற்காக இருக்கலாம்!! :-)) (வாலண்டைன்ஸ் டேவில் கல்யாணம் செய்து கொள்வது போல!!)

சரவண குமரன்

எனக்கு அந்த தேதியுள் ஒரு ‘டபுள் பட்டை நாமம்’ - ஒரு குறியீடாக புலப்படுவதால், ஜாக்கிரதையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. :-)

ஆதிமனிதன்

11/11/11 என்று தேதியை எழுதுவதற்கு வேண்டுமானால் பார்க்க வித்தியாசமாகவும் தனித்தும் தெரியும். அவ்வளவுதான். அதை தவிர அன்று பெரிதாக கொண்டாடுவதற்கு வேறு ஒன்றும் இல்லை. அதே போல் இந்த நாளெல்லாம் நினைத்து பார்த்து கொண்டாடுவதற்கு நம்மை போல் போன்றோர்களுக்கு தான் நேரம் இருக்கிறது. இல்லாதவர்களுக்கு எல்லா நாளும் கஷ்ட நாளே. மேலும் எங்களை பொறுத்தவரை அது ஒரு long weekend விடுமுறை நாள். ஆதலால் வழக்கம் போல் எங்கு செல்லலாம் என்ன செய்யலாம் என்று மட்டும் தான் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பெயர் சொல்ல விருப்பமில்லை

போன வருஷம் தான் இப்படி ஒரு நாளை சொல்லி இது நூறு வருஷத்துக்கு ஒரு முறை தான் வரும்னாங்க. அது 20/10/ 2010 என நினைக்கிறேன். இப்போ இதா?

இன்னும் ஒன்பது நாள் வெயிட் செய்தால் 20/11/2011 வருமில்லையா? அன்று இரவு 20.21-க்கு பார்த்தால் 20/11/2011 - 20.11 hours என்று வரும். அதை கொண்டாடினாலாவது ஒரு அர்த்தம் இருக்கு.

என்னை பொறுத்த வரை எல்லா நாளுமே திரும்ப வராத விசேஷ நாள் தான். பிறருக்கு உதவ எல்லா நாளுமே ஏற்ற நாள் தான்.

ராஜூ

உங்களை அடையாளப் படுத்த மோகன் என்றும் என்னை அடையாளப் படுத்த ராஜு என்றும் பெயர் வைத்ததைப் போல, அந்த நாளை குறிப்பிட , 11-11-11 என்பது ஒரு அடையாளம் அவ்வளவே . மற்றபடி , அன்றைக்கும் வாயாலேயே சாப்பிட்டு , காலாலேயே தான் நடப்பேன்.

வெங்கட் நாகராஜ்

11/11/11 - தேதி நான் வித்தியாசமாய் ஒன்றும் செய்யப்போவதில்லை. ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒரு முறை இது போல முதல் பன்னிரண்டு வருடங்களில் வரும். நூறு வருடங்களுக்கு ஒரு முறை தான் வரும் என்பது தவிர வேறு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

அதற்காக இயற்கைக்கு மாறாக அறுவை சிகிச்சை செய்து அன்று குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணுவதெல்லாம் தேவையில்லாதது என்பது என் எண்ணம்.

மக்கள் என்ன செய்யப்போகிறார்களோ இல்லையோ, இந்த மீடியாக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து இதைப் பெரிய விஷயமாக்கி விடுகிறார்கள் ! நாளை தில்லியில் கிட்டத்தட்ட 30,000 கல்யாணங்கள் நடக்கப்போகிறது எனச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் !!!!

ராமலக்ஷ்மி

எங்கள் ஃபைனான்சியல் அட்வைசர் அவ்வப்போது வாழ்த்துக் குறுஞ்செய்திகள் அனுப்பியபடி இருப்பார், தன் சேவையை கஸ்டமர்களுக்கு அடிக்கடி நினைவுறுத்தும் விதமாக. இன்று அவர் அனுப்பியிருந்த செய்தி: “11.11.11.11.11.11. இனி நம் வாழ்வில் கிடைக்க வாய்ப்பில்லாத தருணம். கொண்டாடுங்கள் அதை”. கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த மகனிடம் அதை வாசித்துக் காட்டி, “இப்படி ஒரு தருணத்தை உருவாக்க ரொம்ப வசதியாய் ஆண்டில் இருந்த 20-யை உருகி விட்டார்கள் பார்” என்றேன். அதற்கு அவன் “அதை விடுங்கள். எந்த நொடியுமே வாழ்வில் திரும்பி வராத பொக்கிஷம்தான்” என்றான். சரிதானே:)? எல்லா நொடியையும் போற்றுவோம்!

இந்த வார பதிவுகள் சில:


சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா?

எஸ். ராமகிருஷ்ணன் சந்திப்பு படங்களுடன்

ஏழாம் அறிவு சறுக்கியது ஏன்?

Thursday, November 10, 2011

சொர்க்கமே என்றாலும்,நம்மூரை போல வருமா?

எங்கள் ஊர் நீடாமங்கலம் பற்றிய சிறு பதிவு இது. எங்கள் ஊர், அதன் வித்தியாச மனிதர்கள், இனிய நினைவுகள் பற்றி எழுத எவ்வளவோ உள்ளது. இப்போதைக்கு சில இடங்கள் மட்டும் அறிமுகம்..




நீடாமங்கலத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மூணாம் தலைப்பு. வெண்ணாறு என்கிற பெரிய ஆறு கோரையாறு, பாமனியாறு மற்றும் சிறிய வெண்ணாறு என மூன்றாக இங்கு பிரித்து விடப்படுகிறது. ஒரு மினி டேம் போல் இருக்கும் இந்த நீர் தேக்கம் பார்க்க மிக இனிமையாக இருக்கும். சுற்றிலும் முழுக்க முழுக்க கிராமம்.

சின்ன வயதில் காணும் பொங்கல் அன்று இங்கு கூட்டம் கூட்டமாய் மக்கள் மாட்டு வண்டி கட்டி கொண்டு வருவார்கள்.  சில ஆண்டுகள் முன் எங்கள் குடும்பத்தினர் பலருடன் காணும் பொங்கல் அன்று  மூணாம் தலைப்பு சென்ற போது கூட்டமே இல்லை. மக்கள் டிவி முன் தங்களை மெய் மறந்து விட்டனர்.


இந்த முறை தீடீரென முடிவு செய்து ஒரு நாள் மாலை கிளம்பி மூணாம் தலைப்பு சென்றோம். மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனம் பார்க்க மிக ரம்மியமாக இருந்தது. ஆறுகளில் தண்ணீர் நிறையவே இருந்தது. இருந்த கொஞ்ச நேரம் ரொம்ப அற்புதமாக இருந்தது. இருட்டி விட்டதால் விரைவில் கிளம்ப வேண்டியதாயிற்று. மூணாம் தலைப்பில் எடுத்த வீடியோ இதோ  




 
எங்கள் ஊரில் கோயில்கள் பலவும் ரொம்பவே விசேஷம். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கோயில் சந்தான ராமசாமி கோயில். குழந்தை வரம் தரும் கடவுள் என இந்த கோயில் மிக பிரபலம். அதி காலை தம்பதியர் சேர்ந்து வந்து வணங்கினால் குட்டி கிருஷ்ணனை மடியில் வைத்து பூஜை செய்வார்கள்.

இந்த கோயிலில் இம்முறை கொலு வைத்திருந்தனர். சாமி பார்க்க மாலை நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குழுமி இருந்தது ஆச்சரியமாய் இருந்தது. பூஜை முடிந்து கொலு இருப்பதால் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர். அனைவரையும் தரையில் அமர சொல்லி பந்தியில் பரிமாறுவது போல் இலை போட்டு பிரசாதம் பரிமாறினர் !

கீழே உள்ள வீடியோ சில ஆண்டுகள் முன் இந்த சந்தான ராமர் கோயில் வெளியே எடுத்தது. இதில் கோயிலின் குளம், மண்டபம், தேர்,  பாம்பு பொம்மை வாய் அருகே அமர்ந்திருக்கும் ஆடு, நொங்கு வெட்டும் ஆள், எங்க ஊரின் தெருக்கள் இவற்றை பார்க்கலாம்  



ராமர் கோயிலில் இருந்து கொஞ்ச தூரத்தில் உள்ளது சிவன் கோவில். இங்கு எடுத்த சில படங்கள் இதோ


சிவன் கோவில்: சற்று உடைந்த நிலையில் சிலைகள்

 சிவன் கோவில் கொலு

************* 
என் பெண் சின்னவளாய் இருக்கும் வரை நீடாமங்கலம் சென்றால் போர் செட்டில் குளிப்பது தான் வழக்கம். செம ஜாலியாக நீண்ட நேரம் குளித்து விட்டு வருவோம். இம்முறை காலை நேரத்தில் போர் செட் ஓடாது என்றதால் போக வில்லை. இந்த படம் சில வருடங்களுக்கு முன் எடுத்தது

ஊருக்கு சென்ற முதல் நாள் காலை பெண்ணுடன் ஊரை சுற்றி ஒரு ரவுண்டு நடந்து வந்தேன். அப்போதே பல ஹோட்டல்களில் புரோட்டாவிற்கு மாவு பிசைய ஆரம்பித்திருந்தனர். " இவ்ளோ காலையிலேயேவா?" என என் பெண் ஆச்சரியப்பட்டாள். இப்படியான ஒரு சூழலில் இருந்ததாலோ என்னவோ நமக்கு பரோட்டா ரொம்ப பிடித்து போய் விட்டது. பரோட்டா போடும் வீடியோ ஒன்று இதோ உங்கள் பார்வைக்கு


எங்கள் ஊரின் பிரபலமான இனிப்பு கடை SMT சுவீட்ஸ் ! சென்னையில் கூட இவ்வளவு அருமையான இனிப்புகள் கிடைக்காது. மிக ரீசனபில் விலையில் அல்வா, அசோகா போன்றவை சாப்பிடவாவது நீங்கள் எங்கள் ஊருக்கு ஒரு முறை வரலாம் !

குரு ஸ்தலமான ஆலங்குடிக்கு மிக அருகில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது எங்கள் ஊர் ! நீங்கள் ஆலங்குடி அல்லது கும்பகோணம் வந்தால் அப்படியே எங்கள் ஊருக்கும் வாருங்கள். எங்கள் இல்லத்தில் அம்மா- அப்பாவையும் அவசியம் சந்தியுங்கள் !

இந்த வார பதிவுகள் சில:


எஸ். ராமகிருஷ்ணன் சந்திப்பு படங்களுடன்

ஏழாம் அறிவு சறுக்கியது ஏன்?

ஜென் கதைகள்

நீங்கள் ஜென் கதைகள் வாசித்திருக்கிறீர்களா?

ஜென் கதை அளவில் மிக சிறியது. சில நேரம் அதில் கதை ஏதும் இல்லாத மாதிரி கூட தோன்றும்.. ஆனால் அந்த கதை உங்கள் மனதின் ஓரத்தில் எங்கோ தங்கி விட்டு, பிறகு உங்களுக்கு நடக்கும் எதோ ஒரு அனுபவத்தில் கதையின் அர்த்தம் சட்டென்று புரியும். மேலும், இக் கதைகள் அவரவர்க்கும் வெவ்வேறு அர்த்தங்களும் தரக்கூடும்!

ப்ளாக் எழுத ஆரம்பித்த புதிதில் தமிழ் மணம், இன்ட்லி என எதிலும் இணைக்காமல், Followers பட்டையும் இல்லாத போது எழுதிய பதிவு இது. ஆனால் இந்த பதிவிற்கு ஒரு சிறப்பு உண்டு. இப்படி எப்போதோ எழுதிய ஒரு பதிவு தினம்தோறும் சில பேராலாவது இன்றும் வாசிக்க படுகிறது. இது வரை 1200 பேருக்கு மேல் வாசித்த பதிவு இது !  எப்போதும் மிக அதிக பேர் வாசித்த பதிவுகளில் டாப் டென்னில் இருக்கும் ! இதற்கு முக்கிய காரணம் ஜென் கதைகள் வாசிக்கும் ஆர்வம் உள்ளோர் கூகிளில் தேடி விட்டு அங்கிருந்து ரீ-டைரக்ட் ஆகி இங்கு வருவது தான் !!

எனக்கு மிக பிடித்த 3 ஜென் கதைகள் முதலிலும், அவை என்ன உணர்த்தின என பின்பும் தருகிறேன்..

ஜென் கதை - 1

ஜென் குருவை பார்க்க ஒருவர் வந்தார்.. குரு, "நாம முன்பே பார்த்திருக்கோமா?' என்றார்... "ஆம்" என்றார் வந்தவர்.. " அப்படியா? அப்படின்னா வாங்க டீ சாப்பிடலாம்" என்றார் குரு...

அடுத்து இன்னொருவர் வந்தார். அவரிடமும் குரு, "நாம முன்பே பார்த்திருக்கோமா?' என்றார்... "இல்லை" என்றார் இப்போது வந்தவர்.. " அப்படியா? அப்படின்னா வாங்க டீ சாப்பிடலாம்" என்றார் குரு...

ஜென் கதை -2

ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான்... ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது.. அப்போது மல்யுத்த வீரன் டீ கடை காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்... அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லா விடில் அது பெரும் அவமானம்.. எனவே டீ கடை காரன் ஒப்பு கொண்டான்.

ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான்.. அறிவுரைக்காக ஒரு ஜென் துறவியை நாடினான்..

அவனது கதை முழுதும் கேட்ட அவர், " சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன" என்று கேட்டார். " 30 நாட்கள்" என்றான் அவன். " இப்போது நீ என்ன செய்கிறாய்?" என்று பின்பு கேட்டார். " டீ ஆற்றுகிறேன்" என்றான் அவன்.. " அதையே தொடர்ந்து செய்" என்றார் அவர்..

ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரன்.. " இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று" என்றார் ஜென் துறவி..

இரண்டு வாரம் ஆனது.. அப்போதும் அதே அறிவுரை..

போட்டி நாள் அருகில் வந்து விட்டது.. டீ கடை காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம், " நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.. "போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு" என்றார் துறவி...

மல்ல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.. "வா.. முதலில் டீ சாப்பிடு" என்றான் கடை காரன். "சரி" என்று அமர்ந்தான் வீரன்... டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான்.. இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான் இப்போது என்ன ஒரு வேகம்! ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால், போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணுகிறான்.. போட்டியே வேண்டாம் என சென்று விடுகிறான்..

ஜென் கதை -3

சிறுவன் ஒருவன் சிறிய குருவி ஒன்றினைப் பிடித்து தனக்கு பின்புறம் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டான். ஜென் குருவிடம் அவன், "குருவே, என்னுடைய கைக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா?" என்று கேட்டான். குரு "இறந்து விட்டது" என்று கூறினால் தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை சுதந்திரமாக பறக்க விட்டு விடுவது, அப்படி இல்லாமல் குரு "உயிருடன் உள்ளது" என்று கூறினால் தன்னுடைய கைகளால் குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது என்று மனதிற்குள் முடிவெடுத்தான்.

ஜென் ஆசிரியர், "இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

கதை - 1 உணர்த்தியது


நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் இருவரையும் ஒரே விதமாய் நடத்த வேண்டும் என்பதே இந்த கதை சொல்லும் செய்தி என கருதுகிறேன்..

கதை - 2 உணர்த்தியது

அநேகமாய் இந்த கதைக்கு விளக்கம் தேவை இல்லை.. எனினும் சில வரிகள்.. நாம் செய்யும் செயலையே ஈடுபாடோடு செய்யும் போது அந்த செயலும், நாமும் ஒரு உன்னத நிலையை எட்டுகிறோம்.. (ஜென் கதைகளில் டீ சாப்பிடுவது அடிக்கடி நிகழும்.. ஜப்பானில் இன்றைக்கும் டீ சாப்பிடும் திரு விழா என்றே ஒரு விழா உண்டு.. இதில் ஒவ்வொரு மிடக்கும் நிதானமாய், மகிழ்ச்சியாய் அனைவரும் டீ அருந்தி கொண்டாடுவர்.. வாழ்க்கையை இவ்வாறு துளி துளி ஆக enjoy - செய்ய வேண்டும் என்கிறது ஜென் ...)

கதை 3 - உணர்த்தியது

அந்த குருவி நம் வாழ்க்கையையும், அந்த சிறுவன் நம்மையும் எனக்கு உணர்த்துகிறது ! நம் வாழ்க்கையை அழிப்பதும், சிறக்க வைப்பதும் நம் கையில் தானே உள்ளது!!

இந்த வார பதிவுகள் சில:


சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா?

எஸ். ராமகிருஷ்ணன் சந்திப்பு படங்களுடன்

ஏழாம் அறிவு சறுக்கியது ஏன்?

Wednesday, November 9, 2011

எஸ். ராமகிருஷ்ணன் சந்திப்பு- 2-ம் பாகம் - படங்களுடன்

முதல் பாகம் இங்கே 


விகடனில் எழுத துவங்கிய பின் தான் நீங்கள் நிறைய பேரால் அறியப்பட்டீர்கள் இல்லையா?

நான் பல வருடங்களுக்கு முன்பு விகடனில் மாணவ நிருபர் ஆக தேர்வு செய்யப்பட்டவன். ஆனால் அந்த காலத்தில் விகடனில் அதிகம் எழுத வில்லை. எழுத தோன்ற வில்லை. எதுவாய் இருந்தாலும் என் உள் உணர்வு சொல்ல வேண்டும். அப்போது தான் செய்வேன். செய்ய வேண்டும் என்பதற்காக எதையும் செய்வதில்லை.

ஒவ்வொருவருக்குமே இந்த உள்ளுணர்வு எப்போதும் சரியான படி வழி நடத்துகிறது. ஆனால் பலரும் அதன் பேச்சை கேட்காமலே கடந்து போய் விடுகிறோம்

ரொம்ப காலம் கழித்து என்னை நானே எழுத்தாளன் ஆக உறுதி செய்து கொண்ட பிறகு விகடனில் இருந்து எழுத சொல்லி கேட்டார்கள். அதன் பின் எழுத ஆரம்பித்த பிறகு நிறைய பேரை நான் சென்று சேர்ந்தேன்.

விகடனில் எழுதுவதற்கும் பிற சிறு பத்திரிக்கைகளில் எழுதுவதற்கும் நிச்சயம் நிறைய வித்தியாசம் உண்டு. விகடனில் அனைவருக்கும் நடந்த அனுபவங்களையே எழுதுவேன். "அடடா இப்படி நமக்கும் நடந்ததே !" என வாசிப்பவர் உணர வேண்டும். சிறு பத்திரிக்கைகள் வாசிப்பவர்கள் இன்னும் நிறைய யோசிப்பவர்கள். சில விஷயங்களை பூடகமாக சொன்னால் கூட அவர்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடியும்.

இப்படி சிறு பத்திரிக்கைக்கும், வெகு ஜன பத்திரிக்கைக்கும் எழுத்து சற்று மாறுபடவே செய்கிறது.
எஸ். ரா வுடன் தேவா
ப்ளாக் வாசிக்கிறீர்களா? ..

நான் ப்ளாக் அதிகம் வாசிப்பதில்லை. எழுதுவோரில் குறைந்தது பத்து சதவீதமேனும் மிக நன்றாக எழுதுகிறார்கள். அவை அனைத்தும் படிக்க நிறைய நேரம் செலவாகும். யாரேனும் குறிப்பிடத்தக்க லிங்க் அனுப்பினால் வாசிப்பேன். இணையம் பக்கம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே செல்வது என வைத்திருக்கிறேன். இந்த நேரமும் கூட உலகம் முழுதும் உள்ள எழுத்தாளர் சங்கம் (யாஹூ குருப் போல) உள்ளிட்ட விஷயங்களில் செலவாகி விடுகிறது.

உலக எழுத்தாளர்களுடன் இப்படி உரையாடுவது மிக பயனுள்ளதாக உள்ளது. மற்ற நாடுகள் பற்றி அறிய முடிகிறது. அவர்களில் யார் இந்தியா வந்தாலும் சந்திக்கிறோம். நாங்கள் சென்றால் அவர்களை பார்க்கிறோம். உலக எழுத்தாளர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் இணையத்திற்கு வரவழைத்து அந்த நேரத்தில் வாசகர்களை வேண்டிய கேள்விகள் கேட்கலாம் என சொல்லும் யோசனை அவர்களுக்கு உள்ளது. இப்படி அனைத்து நாட்டு எழுத்தாளர்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில பேச கிடைப்பது ரொம்ப அபூர்வம். அனைவரும் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

 சினிமாவில் வசனம் திரைக்கதை இவற்றில் ஈடு படுகிறீர்களே . இயக்குனர் ஆகும் எண்ணம் உள்ளதா?

உள்ளது. ஆனால் அந்த எண்ணம் இன்னும் தீவிரமாக வில்லை. அது குறித்து சில வாய்ப்புகள் கூட எட்டி பார்த்தது. ஆனால் என்னிடம் உள்ள பழக்கம் தான் இதிலும் தொடர்ந்தது. எனக்கு தீவிரமாய் செய்ய தோன்றாமல் வாய்ப்பு வருகிறது என்பதற்காக அதனை செய்ய விரும்ப வில்லை. அப்படி செய்தால் அது சிறப்பாக இருக்காது. இன்னும் சில ஆண்டுகளில் எனக்கே படம் இயக்க வேண்டும் என்கிற எண்ணம் தீவிரமானால் நான் படம் இயக்கலாம்.

அப்போது மீண்டும் வாய்ப்பு வருமா என நீங்கள் கேட்கலாம். வரும். வர வைக்க வேண்டும். இன்னும் சொல்ல போனால் வாழ்க்கையில் வாய்ப்பு எப்போதும் ஒரு முறை தான் வரும், அதனை தவற விட்டு விட்டால் அவ்வளவு தான் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாய்ப்புகள் ஒரு cycle-ல் மீண்டும் மீண்டும் வரும். காத்திருக்க வேண்டும். சில நேரம் வாய்ப்பு வருகிறது என்பதை நாம் உணராமல் கூட போய் விடுவோம். அது போலன்றி விழிப்புடன் கவனித்தால் மறுபடி வாய்ப்பு வருவது தெரியும்

முதல் வரிசை முழுதும் அவர் எழுதிய புத்தகங்கள் அடுத்த வரிசையில் உலக படங்கள் டீவீடி 
 எழுதுவதற்கு அடிப்படையில் என்ன தேவை என நினைக்கிறீர்கள்?


உங்களுக்கு தெரியாத, நீங்கள் இது வரை சந்திக்காத புது மனிதர்களை சந்தியுங்கள். அப்போது தான் உங்கள் அறிவும் உலகமும் விரிவடையும். அவர்கள் உங்கள் தொழில் சார்ந்தவர்களாக இருக்க கூடாது. முற்றிலும் புதியவர்களாக பயணத்தில் சந்திப்பவர்கள் போல் இருக்க வேண்டும். இப்படி புது மனிதர்கள் ஐந்து பேரையாவது மாதா மாதம் சந்தித்தால், வாழ்வில் நிறைய விஷயங்கள் தெரிய வரும். உங்கள் Perception விரிவடையும்.

ஆனால் உண்மையில் நம்மில் பலர் என்ன செய்கிறோம்? நம் துறையை சேர்ந்த பலரை நமக்கு முக நூலிலும் மற்ற விதமாகவும் நண்பர்களாக்கி கொள்கிறோம். அவர்களில் யாராவது நமக்கு தேவை படும் போது உதவுவார்கள் என நினைக்கிறோம். அவர்களும் இப்படியே தான் நினைக்கிறார்கள்.

உண்மையில் வாழ்க்கையில் ஐந்து பேர் தான் உங்கள் நெருக்கதிற்குரியவர்களாக இருக்க முடியும் என மனவியல் அறிஞர்கள் கூறி உள்ளனர். இந்த ஐந்து பேருடன் நீங்கள் நல்ல உறவும், நெருக்கமும் maintain செய்தால் அதுவே போதுமானது.


அறையில் காந்தி, பாரதி படங்கள் 
மிக நெருங்கிய உறவு என்பது நீண்ட நாள் பழகியதால் மட்டுமே வரும். புதிதாய் தெரிந்தவர்களுடன் சில விஷயங்கள் பேசினாலும் நம்மை பற்றி நன்கு அறிந்தவர்கள், நமது நெடு நாள் நண்பர்களாக தான் இருப்பார்கள். அவர்கள் உங்களை பல்வேறு சூழ் நிலைகளில் பார்த்திருப்பார்கள். நீங்கள் நல்ல நிலையிலும், பிரச்சனை வரும் போதும் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும். அத்தனையும் தாண்டி நிலைக்கும் நட்பே சிறந்தது.

மிடில் கிளாஸ் மனம் தான் வாங்கிய பொருள்கள் அனைத்தையும் முழுமையாக பயன்படுத்த (Utility ) நினைக்கிறது. பணக்காரர்கள் அப்படியல்ல. அவர்கள் செலவு செய்வதற்காகவே (Status ) பொருட்களை வாங்குகிறார்கள். எனக்கு தெரிந்த ஒரு நண்பர் இல்லத்தில் நீச்சல் குளம் உள்ளது. ஆனால் அதை அவர் பயன் படுத்துவதில்லை. ஏன் என்று கேட்டால், "என் வீட்டில் நீச்சல் குளம் உள்ளது என எல்லாருக்கும் தெரிய வேண்டும், அதற்காக தான் உள்ளது. அதில் நான் குளிக்கணும் என அவசியமில்லை" என்கிறார். போலவே அவர் ஐந்து கார் வைத்திருக்கிறார். அதில் ஒன்றில் தான் அவர் போகிறார். குறிப்பிட்ட விலை உயர்ந்த காரை எடுப்பதே இல்லை. அதை எங்கு எடுத்து போக வேண்டுமென அவருக்கு தெரியும் !

முன்பெல்லாம் ஒரு நல்ல வேலை, வீடு, கார் இன்னும் பிற வசதிகள் என வாழ்க்கையில் செட்டில் ஆக குறைந்தது 15 அல்லது 20 ஆண்டுகள் ஆனது. ஆனால் இன்று 5 ஆண்டுகளில் வீடு, கார் என அனைத்தையும் ஒருவர் பெற்று விடுகிறார். ஆனால் பிரச்சனை என்னவென்றால் அதன் பிறகு என்ன செய்வதென அவருக்கு புரிய வில்லை. " ஏதோ வேலைக்கு போயிட்டு வர்றேன். வாழ்க்கையில் ஒன்னும் பிடிப்பு இல்லையே " என்கிறார்கள். செய்யும் வேலை வாழ்க்கை முழுக்க சுவாரஸ்யம் தருவதாக அவர்களுக்கு இல்லை. இங்கு தான் இலக்கியம் அவனுக்கு தேவை படுகிறது. அவனுக்கு சற்று ஆறுதலாகவும் தெளிவையும் தர இலக்கியம் உதவினால் அதுவே அவனுக்கு பெரிய உதவி

ஒவ்வொரு மனிதனின் வலி, அவன் தோல்வி அதிலிருந்து அவன் எப்படி மீள்கிறான் என்பது தான் என் எழுத்தில் உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் இது தான் தேவை என நான் நினைக்கிறேன்

****
நவம்பர் மாதத்தில் ஒரு வாரம் உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் பற்றி தான் பேச உள்ளதாகவும், முடிந்தால் இதனை ஒவ்வோர் ஆண்டும் மற்றவர்களை பேச சொல்லி தொடரும் எண்ணம் உள்ளதாகவும் சொன்னார்.

இப்படி நாங்கள் பேசி கொண்டிருந்ததில் இரண்டு மணி நேரம் போனதே தெரிய வில்லை. நடுவில் அற்புதமான காபி குடுத்த அவர் மனைவி நாங்கள் கிளம்பி விடுவோம் என நினைத்தோ என்னவோ, " பையனை கிளாசில் இருந்து கூட்டி வருகிறேன் " என எங்களிடம் சொல்லி சென்றார். அவர் சென்று விட்டு ஒரு மணி நேரம் கழித்து வந்த போதும் எங்கள் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது.

எஸ். ராவிடம் புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்று சொன்னோம். அது வரை கைலியில் அமர்ந்து பேசியவர் உள்ளே சென்று சட்டை, பேன்ட் போட்டு வந்தார். அவர் உதவியாளர் எங்கள் மூவரையும் சேர்த்து புகை படம் எடுத்தார். நாங்கள் கொண்டு சென்ற புத்தகங்கள் இரண்டை அவரிடம் தர, பார்த்து விட்டு "இரண்டும் நல்ல புத்தகங்கள்; ஏற்கனவே வாசித்துள்ளேன்" என பெற்று கொண்டார். எங்கள் இருவருக்கும் ஆளுக்கு ஒரு புத்தகம் தன் கையெழுத்துடன் தந்தார். "மிக்க அன்புடன்" என புத்தகத்தில் எழுதி கையெழுத்திட்டார். மெயிலிலும் அப்படி தான் எழுதுகிறார். அவை வெறும் வார்த்தைகள் அல்ல, உண்மையான எஸ். ரா வும் அப்படி தான் என புரிந்தது.

நிச்சயம் மீண்டும் சந்திப்போம் என்று கூறி விட்டு கிளம்பினோம். "முன் பின் தெரியாத நபர்கள் என்னை காண வந்தால் நான் கூட இரண்டு மணி நேரம் செலவழிக்க மாட்டேன். இத்தனை பெரிய மனிதர் எவ்வளவோ வேலைக்கு நடுவே நம்முடன் இவ்வளவு நேரம் செலவிட்டது பெரிய விஷயம் தேவா" என்றேன் நான். தேவா புன்னகைத்தான்.                                                           (முற்றும்) 

அலுவலகத்தில் நல்ல பேர் வாங்குவது எப்படி ??

அலுவலகத்தில் நல்ல பேர் வாங்க என்ன செய்ய வேண்டும்? இது அனைவரும் அறிய விரும்பும் விஷயம் தான். இதனை மையமாக வைத்து ஒரு புத்தகம் வெளியாகியுள்ளது. புத்தகத்தின் பெயர் : "ஆபிஸ் கைடு " கிழக்கு பதிப்பகம் வெளியீடு.

"நரகத்துக்கான எல்லா அம்சங்களும் பொருந்தி இருக்க கூடியது ஒரு நிறுவனம். ஆயினும் அதை சொர்க்கமாக மாற்றி கொள்வது கடினம் இல்லை; அதை சொல்லி குடுப்பதே புத்தகத்தின் வேலை" என்று முதல் அத்தியாயத்தில் பில்ட் அப் பயங்கரமாக தான் உள்ளது. அதை புத்தகம் பூர்த்தி செய்ததா என்றால் ஓரளவுக்கு மட்டுமே என்று தான் சொல்லவேண்டும்.

நூல் ஆசிரியர் சாது ஸ்ரீராம் டால்மியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். 40 வயது இளைஞர். கம்பனி நிர்வாகம், மனித வள மேலாண்மை முதலிய விஷயங்களில் ஆர்வம் காட்டும் இவரின் மற்றொரு பிரபல புத்தகம் " பெரிய பிரச்சனை.. சின்ன தீர்வு"

ஆபிஸ் கைடு நூல் பதினைந்து அத்தியாயங்கள் கொண்டது. அநேகமாய் ஒவ்வொன்றிலும் ஓரிரு கதைகள் சொல்லப்பட நடுவில் சில கருத்துகளும் சொல்ல படுகின்றன. (ஆம் கதைகளுக்கு இடையே கொஞ்சமாய் கருத்துகள் !!) அதிலும் போக போக நிறைய விலங்குகள் கதைகளாக வாசிக்க, வாசிக்க, நாம் படிப்பது பஞ்ச தந்திர கதை புத்தகமோ என்கிற ஐயம் வந்து விடுகிறது. கதைகள் சற்று குறைவாய் உபயோகித்திருக்கலாம் என்பதோடு, அவை நமக்கு நெருக்கமாக நிஜ வாழ்க்கைக்கு அருகாமையில் இருந்திருக்கலாம் !!

இந்த நூல் பெருமளவு ஒரு மானேஜருக்கு அறிவுரை சொல்கிற விதமாகவே உள்ளது. மானேஜர் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு தகவல் சற்று குறைவே.

ஒவ்வொரு மானேஜரும் தன்னிடம் வேலை பார்ப்போரிடம் என்ன எதிர்பார்க்கிறார் என இவ்வாறு சொல்கிறார்:

1. தன்னிடம் பேசும்போது அளவுக்கு மீறி பேசக்கூடாது. தேவையானவை மட்டுமே பேச வேண்டும்

2. நேரடியாக கேட்காத பட்சத்தில் ஆலோசனைகள் சொல்லக்கூடாது

3. செய்வது சாதாரணமான விஷயமாக இருந்தாலும் தன்னிடம் அனுமதி பெற்றபிறகே செய்யவேண்டும்

4. தன்னிடம் பேசிய விஷயங்களை வெளியில் சொல்ல கூடாது

5. தான் எடுக்கும் முடிவுகளை, தன்னிடம் வேலை செய்வோர் பின்பற்ற வேண்டும்

போலவே நல்ல ஒரு மேனஜர் என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆங்காங்கு சொல்லப்பட்டவையில் சில:

1. நிறுவனம் நம்முடையது என்கிற எண்ணத்தை ஊழியர் மனத்தில் ஆழமாக விதைக்க வேண்டும்.

2. ஒவ்வொருவர் பணியும் நிறுவனத்துக்கு முக்கியம் என்கிற எண்ணத்தை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும்.

3. எல்லா பணிகளையும் தானே இழுத்து போட்டு செய்ய கூடாது. சரியான விஷயங்களை பிறருக்கு delegate செய்ய வேண்டும்.

4. சரியான முறையில் communicate செய்ய வேண்டும். பல நேரம் கீழே வேலை செய்வோர் சரியாக ஒரு வேலை செய்யாததன் காரணம் மேனஜர் சரியாக தகவல் சொல்லாதது தான்.

5. ஊழியர்களை நல்ல முறையில் பாராட்ட வேண்டும். ஊக்குவிக்க வேண்டும். சில புதிய முயற்சிகள் செய்து தோற்றால் கூட அவர்களை பாராட்டுவது அவசியம்

6. அலுவலகத்தில் மாறுதல்கள் நிகழும் போது எதனால் அது நிகழ்கிறது என தெளிவாக சொல்லி புரிய வைக்க வேண்டும்.

எந்தெந்த விஷயங்களை பிறருக்கு delegate செய்யலாம் என்பது குறித்து ஒரு அத்தியாயம் பேசுகிறது. மற்றொரு அத்தியாயம் பணி உயர்வு குறித்து ..விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி பிறிதோர் அத்தியாயம். ..

இப்படி நல்லதொரு concept இருந்தாலும் தமிழ் சினிமா பாணியில் சொல்ல வேண்டுமாயின் "திரைக்கதை" சரியில்லாமல் புத்தகம் திண்டாடுகிறது.

"எதற்கு முக்கியத்துவம் தருகிறோமோ அது வளருகிறது" என்கிற ஒரு பெரிய விஷயத்தை போகிற போக்கில் இரண்டு கதைகளுக்கு நடுவே ஒரு வரியாக சொல்லி செல்கிறார். உண்மையில் இந்த புத்தகத்துக்கும் அது பொருந்துகிறது ! நூல் ஆசிரியர் முக்கியத்துவம் தந்தது கதைகளுக்கா, கருத்துகளுக்கா என்றால் கதைகளுக்கே என்று சொல்ல வேண்டியுள்ளது.



அலுவலகத்தில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து ஒரு நூல் என்கிற கான்செப்ட் நிச்சயமாக வரவேற்கப்படவேண்டிய ஒன்று. ஆனாலும் சாது ஸ்ரீராம் , " உங்க கிட்டயிருந்து நாங்க இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம் !"

நூலின் பெயர்: : "ஆபிஸ் கைடு"
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
ஆசிரியர்: சாது ஸ்ரீராம்
விலை: ரூ. 60

திண்ணை அக்டோபர் 23, 2011 தேதியிட்ட இதழில் வெளியான புத்தக விமர்சனம் 

Tuesday, November 8, 2011

ஏழாம் அறிவு சறுக்கியது ஏன் ?



இணையத்தில் துவைத்து காய போடப்பட்ட பின் தான் ஏழாம் அறிவு படம் பார்த்தேன். கதை போன்ற தகவல்கள் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. எனவே நேரடியே மற்ற விஷயங்களுக்கு...

எது நன்றாக இருந்தது?

நிச்சயம் ஒரு வித்யாசமான கதை களம். இத்தகைய வித்யாசமான கதைகள் வருவதே அரிது தான். அந்த வகையில் நிச்சயம் இந்த படம் வரவேற்கபட வேண்டிய ஒன்று.

சூர்யாவின் அர்ப்பணிப்பு போதி தர்மரில் நன்கு தெரிகிறது. உடலை (6 packs!!) என்னமாய் வைத்திருக்கிறார் !! ஆனால் சர்க்கஸ் கலைஞராக முதல் பாடலில் மட்டும் தான் கொஞ்சமாக ஏதோ செய்கிறார். அதன் பின் டென்ட் அருகே தான் சூர்யாவை பார்க்க முடிகிறது சர்க்கஸ் உள்ளே அல்ல.

ஸ்ருதி போட்டோக்களில் பார்க்கும் போது எனக்கு அவ்வளவாக ஈர்க்க வில்லை. அவரது அம்மா சரிகாவை பார்க்கிற மாதிரியே இருந்தது. ஆனால் படத்தில் நன்கு நடித்துள்ளார். சொல்ல போனால் படத்தில் அதிகம் பேசுவது இவர் தான். நடுவில் வரும் இரண்டு மணி  நேரத்திற்கு சூர்யாவை விட இவருக்கே அதிக வாய்ப்பு. ஒரு சில இடங்களில் தமிழ் சற்று இடறினாலும் பெருமளவு சரியாக செய்துள்ளார். நல்லதோர் புது வரவு.

யம்மா யம்மா, இன்னும் என்ன தோழா உள்ளிட்ட பாடல்களுக்காக ஹாரிஸ் ஜெயராஜுக்கு பாராட்டு. ஆனால் சில பாடல்கள் காப்பி அடித்தது ஏனோ?

இனி படம் சறுக்கியது எங்கே என பார்ப்போம்:

படம் துவங்கியதும் பின்னணியில் ஒலிக்கிற குரல் இருக்கிறதே ! எங்கிருந்து தான் பிடித்தார்களோ? "பீகாரில் வெள்ளம்" என முன்பெல்லாம் திரை அரங்குகளில் படம் துவங்கு முன் நியூஸ் ரீல் ஓட்டுவார்கள். அதே மாதிரி குரல் உள்ள நபரை கூட்டி வந்து, அதே தொனியில் பேச வைத்திருக்கிறார்கள். இது அந்த காலத்து டாக்குமெண்டரி பார்க்கும் உணர்வையே தருகிறது. போதி தர்மருக்காக உழைத்த அவ்வளவு உழைப்பையும் இந்த குரலால் கெடுத்து விட்டார்கள். அதிலும் அந்த குரல் அதே தொனியில் முதல் இருபது நிமிடமும் பேசி கொண்டே இருக்கிறது.

போதி தர்மர் போர்ஷன் முதலில் வந்திருக்க கூடாது. அவர் பற்றி எதிர்பார்ப்பை ஏற்றி சென்று பின்னர், பிளாஷ் பேக் ஆக வந்திருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பின்னணி குரல் சூர்யா அல்லது ஸ்ருதி பேசியிருக்கலாம்.

முதலில் தான் போதி தர்மர் போர்ஷன் வரணும் என்றால் கமல், பார்த்திபன் போன்ற நமக்கு தெரிந்த குரலில் யாரையாவது பேச வைத்திருக்கலாம். This is a big let down.

அடுத்து என்னை வெறுக்கடித்தது வில்லன் குறித்த பகுதிகள். அவர் ஒரு சில வினாடி பார்த்தாலே அனைவரும் அவரது கண்ட்ரோலில் வருவார்கள் என்பது மிக பெரிய ரீல். அதுவும் ஒரு நிமிடத்தில் பத்து பதினைந்து பேர் அவர் பார்த்ததுமே அவர் "நினைக்கிற மாதிரி" செய்வதெல்லாம் சாரி ரொம்ப ஓவர். ஹிப்னாடிசம் பற்றி அனைவரும் அறிந்த விஷயம் ஒருவரை ஹிப்னாடிஸ் செய்ய குறைந்தது ஓரிரு நிமிடங்கள் ஆகும் என்பது !! இப்படியா ஓவராக காண்பிப்பது?

க்ளைமாக்ஸ் தவிர்த்து ஹீரோ அரவிந்துக்கு (சூர்யா) பாட்டு பாடுவதையும் ஸ்ருதி வண்டி பின்னே உட்கார்ந்து போவதையும் தவிர வேறு எந்த வேலையும் இல்லை. படம் முழுதும் வில்லனின் டாமினேஷன் தான். இப்படி ஹீரோவை முக்கால் வாசி படம் டம்மி ஆக்கியது சாதாரண ரசிகனுக்கு எப்படி ஏற்புடையதாகும் என தெரிய வில்லை.

இறுதியாக படக்குழுவினர் இந்த படத்துக்கு தந்த பேட்டிகளும், ஓவர் பில்ட் அப்பும் தான் நிறைய எதிர் மறை விமர்சனங்கள் வர காரணமாக அமைந்து விட்டது.

இவ்வளவு குறைகள் கூறினாலும் கூட ஏழாம் அறிவு தவிர்க்க பட வேண்டிய படம் அல்ல. வித்யாசமான கதை களம் என்பதால் ஒரு முறை பார்க்க கூடிய படம் என்று தான் சொல்ல வேண்டும்.

விகடனில் இந்த வருடத்தின் இரண்டாவது அதிக மதிப்பெண் பெற்ற படம் (48/100) ஏழாம் அறிவு என்பது ஒரு ஆச்சரியமான தகவல் !

இந்த வார பதிவுகள் சில:

சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா?

எஸ். ராமகிருஷ்ணன் சந்திப்பு படங்களுடன்

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் -ஓர் சந்திப்பு

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்தது குறித்து சொல்லும் முன் சிறு முன் கதை சுருக்கம் பார்த்து விடலாம்.

 நண்பன் தேவா ஒரு முறை எஸ். ரா அவர்களுக்கு மெயில் அனுப்பியிருக்கிறான். அதில் பூமா. ஈஸ்வரமூர்த்தி என்கிற எழுத்தாளர் குறித்து விசாரித்து "அவர் ஏன் இப்போது எழுதுவதில்லை? " என கேட்டிருக்கிறான். அவரிடமிருந்து அந்த எழுத்தாளர் தற்போது என்ன செய்கிறார் என்ற விபரத்துடன் மெயில் வர தேவாவிற்கு ஆச்சரியம் !! மேலும் தன் கடிதத்தில் சென்னை வரும் போது தங்களை சந்திக்கலாமா என தேவா கேட்க அவசியம் சந்திக்கலாம் என தன் இல்ல போன் நம்பர் தந்துள்ளார். இம்முறை சென்னை வந்த தேவா, அவருக்கு தொலை பேச, கடந்த அக்டோபர் 16 அன்று காலை 10.30 க்கு அவர் இல்லத்தில் சந்திக்க முடிவானது.

அவர் இல்லம் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பை அடைந்தோம். D-1 என்பது அவரது வீட்டு எண். D ப்ளாக் அடைந்தால், கீழே இருக்கும் முதல் வீடு பூட்டியிருந்தது. (அது தான் D-1 ஆக இருக்கும் என நாங்கள் நினைத்தோம்). "என்ன அண்ணே இந்த எழுத்தாளரும் உங்களை பீர் அடிக்க வச்சிடுவார் போல இருக்கே" என்றான் தேவா. (பால குமாரன் சந்தித்த முன் அனுபவம்).

இந்த சந்திப்பிற்கு கிளம்பி செல்லும் போது பல முறை எனக்கு பால குமாரனை பார்த்த சம்பவம் நினைவில் வந்து கொண்டே தான் இருந்தது. அதனோடு பல விஷயம் ஒப்பிட்டவாறு இருந்தேன். அப்போது நான் வெளியூரில் இருந்து சென்னைவந்திருந்தேன். சென்னையில் இருந்த நண்பன் நந்து என்னுடன் பால குமாரனை பார்க்க வந்தான்.இம்முறை வெளியூரில் இருக்கும் தேவா சென்னைக்கு வர, இங்கிருக்கும் நான் உடன் செல்கிறேன். இப்படி பல ஒப்பீடுகள் மனசுக்குள் !!

அவர் வீடு மாடியில் இருந்தது. வீடு திறந்திருப்பதை பார்த்து சற்று நிம்மதி. அவர் மனைவி எங்களை நேராக அவர் அறைக்கு அழைத்து சென்றார். கணினியில் அவர் தட்டச்சு செய்து கொண்டிருந்தார். "உட்காருங்க. ரெண்டு நிமிஷம்" என சொல்லிவிட்டு கணினியில் வேலையை தொடர்ந்தார். அமர்ந்து சுற்றிலும் கவனித்தோம். அதை அவர் அறை என்பதா அல்லது நூலகம் என்பதா?


சுற்றி இருந்த ஷெல்ப்கள் முழுக்க புத்தகங்கள் நிறைத்திருந்தது. ஒரு அலமாரியில் ஒரு வரிசை முழுதும் அவர் எழுதிய புத்தகங்கள். சிறிய அறையில் சுவர் முழுதும் ஆங்காங்கு சில படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. புத்தர், பாரதி ஆகியோரின் படங்கள் / சிலைகள் நிறையவே இருந்தது. ஒரு சில காந்தி படங்களும் ஒரு பெரியார் படமும் கூட காண முடிந்தது.

இன்னமும் கூகிள் Transliterator மூலம் தமிழில் டைப் அடிக்கும் எனக்கு அவர் வேர்ட் டாகுமெண்ட்டில் நேரடியாக தமிழில் டைப் செய்து கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அதை விட ஆச்சரியம் கூகிள் மெயிலில் பதில் அனுப்பும் போது கூட "ரிப்ளை" அழுத்தி விட்டு நேரடியாக டைப் அடிக்க, மெயில் தமிழில் டைப் ஆனது!!

அந்த அறையில் அவர் ஒரு தாளில் முடிக்க வேண்டிய வேலைகள் என எழுதி ஒட்டியிருந்தார். கிட்டத்தட்ட 15 வேலைகள் அதில் இருந்தன. அவை அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு எங்களுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் செலவிட்டார்.

இங்கு தருபவை அவர் பேசியதை நாங்கள் புரிந்து கொண்ட அளவில் தான் தரப்பட்டுள்ளது ! எங்கள் புரிதலில் சிறிது தவறு இருந்தால் அது எங்கள் தவறே.

ஆங்காங்கு நாங்கள் கேட்ட கேள்விகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

****

எழுத்தாளர்கள் பலருக்கு சொந்த வாழ்க்கை கொடுமையான ஒன்றாக இருந்திருக்கிறது. அவர்களுக்கு எழுத்து மட்டுமே ஆறுதலான ஒன்றாக, சந்தோஷம் தருவதாக இருந்திருக்கிறது. எனக்கு அப்படி இல்லை. குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை இவற்றில் எனக்கு எந்த பிரச்னையும் இருந்ததில்லை. என் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோரும் நான் எழுத்தாளன் ஆவதை எப்போதும் தடை செய்ய வில்லை.

எழுத்தாளர் ஆக இருந்தும் நன்கு பேசவும் செய்கிறீர்களே எப்படி?

பள்ளி பருவம் முதலே மேடைகளில் பேசி வருகிறேன். படிப்பில் எப்போதும் முதல் சில இடத்தில் வரும் மாணவனாக இருந்தேன்.  படிப்பு முழுதும் மெரிட் ஸ்காலர்ஷிப்பில் தான் படித்தேன். அப்பாவிற்கு செலவே வைக்க வில்லை. (இந்த செய்தி எனக்கும் தேவாவுக்கும் ஆச்சரியமாக இருந்தது. இப்படி ரொம்ப படிப்ஸ் ஆக உள்ளவர்கள் வேலை, சம்பளம் போன்றவற்றில் தான் கவனம் வைப்பார்கள்.முழு நேர எழுத்தாளன் என தானே தேர்வு செய்வது அரிது).

எஸ். ரா வின் புத்தக கலக் ஷனை பார்வையிடும் தேவா
எந்த ஒரு விஷயத்திலும் முன்னால் தான் இருக்க வேண்டும் என நினைப்பேன். ஆசிரியர்கள் எதற்காவது கூப்பிட்டால் முதல் ஆளாய் போய் நிற்பேன். இதனால் அவர்கள் என்னை எல்லா போட்டிக்கும் அனுப்பினார்கள. பேச்சு போட்டியில் தமிழகம் முழுமைக்கும் நடந்த போட்டிகளில் பரிசு வாங்கியுள்ளேன். இது நிறைய படிக்கவும், நிறைய பேரை சந்திக்கவும் தெரிந்து கொள்ளவும் உதவியது.

படிப்பில் ஒரு குறிப்பிட்ட தூரம் சென்ற பின் தான் படித்து நான் ஏதும் செய்ய போவதில்லை என உணர்ந்தேன். கிட்டத்தட்ட Ph.D முடிக்கும் தருவாயில் தான் எனது வாழ்க்கை எழுத்தாளனாக தான் இருக்க போகிறது என உணர்ந்தேன். அதுவரை படித்து பெற்ற அத்தனை Certificate-களையும் என் தந்தையிடம் கொண்டு சென்று குடுத்து விட்டேன். எனது படிப்பை வைத்து மனிதர்கள் என்னை பார்த்தால் அதை வைத்தே எனக்கு மரியாதை தருகிறார்கள். என் படிப்பை விடுத்து ஒரு   சாதாரண மனிதனாக அவர்கள் என்னிடம் பழக வேண்டும் என நினைத்தேன். என் வாழ்க்கையில் இருந்து எழுத விஷயங்கள் அதிகம் இல்லாததால் நான் சந்திக்கும் மனிதர்களும் அவர்களின்  வாழ்க்கையும் தான் எனக்கு எழுத பின் புலமாக இருந்தது. நான் நிறைய பயணம் செய்யவும் இதுவே காரணம்.

எங்கள் வீட்டில் உடன் பிறந்தோர் ஒவ்வொருவரும் தங்கள் வழியை தாங்களே தேர்ந்தெடுத்தனர். அது பற்றி யாரும் தடை சொல்வதில்லை. ரெண்டு விஷயம் மட்டும் கேட்பார்கள். "எழுத்தாளன் ஆக, குறிப்பிட்ட காலத்திற்குள் உன்னை establish செய்ய முடியா விட்டால், அதை விட்டு வேறு ஏதும் விஷயத்துக்கு சென்று விட வேண்டும் " அடுத்தது. "உனக்கு இதற்கு நாங்கள் எந்த விதத்தில் உதவுவது?" அவ்வளவு தான் !! எனது முதல் கதை பிரசுரம் ஆகி அதற்கு ஒரு விருது கிடைத்தது. உடனேயே எனக்கு எழுத்தாளன் ஆக திறமை இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு, அதன் பின் எந்த கேள்வியும் கேட்க வில்லை.
 
பள்ளி மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடுகிறீர்களே?

ஆம். ஆறு முதல் பன்னிரண்டு வரை வயதுள்ள மாணவர்களை சந்தித்து கதை சொல்வது, அவர்களை கதை சொல்ல வைப்பது என்னுடைய வழக்கம். அதற்கு மேல் உள்ள மாணவர்களிடம் சொன்னால் அவர்கள் கதையை கதையாக பார்க்காமல் லாஜிக் கேட்பார்கள்.

உலகின் எந்த விஷயத்தையும் கதையின் மூலம் சொல்லலாம். அது அறிவியலின் எந்த விஷயமாக இருக்கட்டும்,வேறு எந்த பாடமாகட்டும் கதை மூலம் சொன்னால் அவர்கள் அதை எளிதில் நினைவில் வைத்து கொள்வார்கள். இதனை அடிப்படையாக வைத்து நானும் என் மகனும் சேர்ந்து சிறுவர்களுக்கு ஒரு கதை தொகுப்பே எழுதி இருக்கிறோம். (அந்த எட்டு புத்தகங்களை எடுத்து எங்களிடம் காட்டுகிறார்)

திருச்சியில் உள்ள எஸ். ஆர். வி பள்ளியில் அதன் ஆசிரியர்களுக்கு இந்த பாடமுறை பற்றி தொடர்ந்து சொல்லி தருகிறேன். பொதுவாக படிப்பிறகே முக்கியத்துவம் பள்ளி தான் அது எனினும், எப்படியோ இந்த முறையை அனுமதித்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் குறைந்தது பத்து நாட்கள் அந்த ஆசிரியர்களுடன் செலவிடுகிறேன்.
 
எஸ். ரா..... அவரது அறையில் அவரது கணினி முன்பு

நான் மட்டுமல்ல இந்தியாவில் சிறந்த பல்வேறு expert-களும் ஆசிரியர்களுக்கு அந்த பத்து நாட்கள் வந்து பயிற்சி தருகிறார்கள். இதனால் அந்த ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் மிக சிறந்து விளங்குகிறார்கள். எளிதாக பாடம் எடுப்பதன் அனைத்து டெக்னிக்குகளும் அவர்களுக்கு தெரிந்து விடுகிறது. பாடம் என்பது சுமையான விஷயமாக இல்லாமல் சுவாரஸ்யமான ஒன்றாக மாணவர்களுக்கு மாறி விடுகிறது.

கோடை விடுமுறை நேரம் பொதுவாக நாற்பது நாளைக்கு எந்த வேலையும் எடுத்து கொள்வதில்லை. கதை வசனம் எழுதும் படங்களுக்கும் முன்னரே எழுதி குடுத்து விட்டு, இந்த மாதத்தில் இருக்க மாட்டேன் என சொல்லி விடுவேன். அந்த ஒரு மாதம் குடும்பத்துடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களை பார்க்க செல்வோம். அப்போது இது மாதிரி பள்ளி வேலைகள் கொஞ்சம் செய்வதுண்டு.

எஸ். ஆர். வி பள்ளி எழுத்தாளர்களை, மாணவர்கள் நூல்கள் வாசிப்பதை எப்போதும் ஊக்குவிக்கிறது. வருடா வருடம் எழுத்தாளர் ஒருவருக்கு விருது வழங்குகிறது. மேலும் வருடம் ஒரு முறை பள்ளி வளாகத்தில் புத்தக கண்காட்சி நடத்துகிறது. குறைந்தது லட்ச ரூபாய்க்கு மேல் மாணவர்களே புத்தகம் வாங்குகிறார்கள்

நீங்கள் எதிர் காலத்தில் என்ன நிகழும் (Futuristic) என எழுதினால் என்ன
என்கிற  தேவாவின் கேள்விக்கு

நான் எப்போதும் கடந்த காலம் பற்றியே எழுதுகிறேன். நடந்து முடிந்த நிகழ்வு என்பது தான் என் எழுத்துக்கு அடி நாதமாக உள்ளது. Futuristic ஆக என்னால் எழுத முடியாது .

அடுத்த பகுதியில்

விகடனில் எழுதிய பின் கிடைத்த வெளிச்சம்

ப்ளாக் வாசிக்கிறீர்களா?

சினிமா இயக்குவீர்களா?

ஐந்து வருடத்தில் பணக்காரர் ஆகும் மனிதர்கள்...

இன்னும் பல விஷயங்கள் மனம் திறந்து பேசுகிறார் எஸ். ரா

Monday, November 7, 2011

கமல் அசத்திய 10 படங்கள்: பிறந்த நாள் சிறப்பு பதிவு

கமலின் பிறந்த நாளை முன்னிட்டு இதோ ஓர் சிறப்பு (மீள்)பதிவு: 


***** 
களத்தூர் கண்ணம்மாவில் 1960-ல் அறிமுகம் ஆன கமல் அடுத்த மூன்று வருடங்களில் ஐந்து படங்களில் மட்டும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் . பின் ஏழு வருடங்கள் கழித்து 1970-ல் ஜெய்சங்கர் நடித்த மாணவனில் ஒரு பாட்டுக்கு ஆடியவர்,   1973  முதல் (அரங்கேற்றம்) -  இன்று வரை தொடர்ந்து நடித்து கொண்டுள்ளார். இதில் குறிப்பிட்ட பத்து படங்களை பட்டியலிடுவது சற்று சிரமான காரியம் தான்.

இந்த படங்கள் நடிப்புக்காக மட்டுமல்லாது இன்னும் பல காரணங்களால் பலரது நெஞ்சில் நிற்பவை. 

1. சலங்கை ஒலி (சாகர சங்கமம்) 

கமலின் படங்களில் எனது All time favourite.  இந்த படத்திற்கு பின் தான் கமலை ரசிக்க ஆரம்பித்தேன். படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே வயதான கமல் ஷைலஜாவிற்கு அத்தனை வகை நடனங்களையும் ஆடி காட்டுவார்.. அதில் துவங்கி கமலின் கேரக்டர் மீதான பிரமிப்பு கடைசி காட்சி வரை நீடிக்கும். ஒரு காட்சியில் கமல் வழக்கம் போல் குடித்து விட்டு, தான் தங்கியிருக்கும் நண்பன் சரத் பாபு வீட்டுக்கு வருவார். கிருஷ்ண ஜெயந்தி என வாசலிலிருந்து கிருஷ்ணர் கால் வரைந்திருக்க,  உள்ளே வர மனம் இன்றி வாசலிலேயே அமர்ந்து விடுவார். அழகான காட்சி இது. போலவே எத்தனை முறை பார்த்தாலும் " தகிட ததிமி" பாடலில் ஜெய பிரதா நெற்றியில் குங்குமம் வைக்கும் காட்சி.. கிளாசிக்.  

2. நாயகன்

கமலின் சிறந்த படங்கள் பட்டியலிடும் எவரும் தவற விட முடியாத படம் . ஒரு மனிதனின் வாழ்க்கையை மிக இளம் வயது முதல் இறப்பு வரை சொன்னது. கமல் வழக்கமான நடிப்பிலிருந்து பெரிதும் வேறு பட்ட நடிப்பை இந்த படத்தில் காணலாம். ஒவ்வொரு வயது மாறும் போதும் கெட் அப் மாற்றி மேனரிசம் மாற்றி அற்புதமாய் நடித்திருப்பார். மணி ரத்னம் இயக்கம் , இளைய ராஜா இசை, PC  ஸ்ரீராம் ஒளிப்பதிவு என அனைத்தும் சேர்ந்து இந்த படத்தை எங்கோ கொண்டு சென்று விட்டது. கமலுக்கு இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மிக பொருத்தமே. 

படத்தில் எனக்கு பிடித்த காட்சி: இவர் மகன் நிழல்கள் ரவி, இவரை போலவே தாதாவாக மாறும் போது, கமல் அவரிடம் " நாயக்கரே வெத்திலை எடுத்துக்குங்க" என்பார்.  நிழல்கள் ரவி வெட்கத்தோடு வெற்றிலை எடுத்து கொள்வார். திரை கதை, நடிப்பு அனைத்தும் அசத்திய இடம் இது.  

3. அபூர்வ சகோதரர்கள்

ஒரு சிறந்த மசாலா & entertaining படம் என்றால் இதனை சொல்லலாம். அப்பாவை கொன்றவரை பழி வாங்கும் சாதாரண கதை. ஆனால் இது வரை இந்த படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் ( குறைந்தது நான்கு) .. ஆயினும் அலுக்கவே அலுக்காத படம் இது. குள்ள கமலுக்காக எடுத்த முயற்சிகள், உழைப்பு, அந்த கேரக்டரில் தெரிந்த புத்திசாலித்தனம் (நன்கு யோசியுங்கள் : குள்ள கமல் தான் Actual ஹீரோ; இன்னொரு கமல் பெரும்பாலும் பாட்டுக்கு தான் பயன் பட்டிருப்பார்) கிட்ட தட்ட நிறைவு பகுதியில் வந்தாலும் மறக்கவே முடியாத ஜனகராஜ் காமெடி.  கமலின் படங்களில் செமையாய் ஹிட் ஆகி ஓடிய படங்களில் இதுவும் ஒன்று.

4. தேவர் மகன் 

இந்த படத்தை கமலின் நடிப்பு என்பதற்காக இல்லாமல் கமலின் சிறந்த திரைக்கதை, எழுத்தாற்றல் இதற்காக பிடிக்கும். கதையில், அவசியம் இல்லாமல்  எந்த காட்சியும் இருக்காது.  சிவாஜி,  ரேவதி போன்றோர் நடிப்பில் அசத்தினர். கமல் மிக underplay செய்த படம் என சொல்லலாம். வன்முறை வேண்டாம் என வலியுடன் சொன்ன படம்.

5. இந்தியன் 

இந்தியன் தாத்தா ஹீரோ. படத்தில் ரெண்டு ஹீரோயின்களுடன் பெரும்பாலான டூயட் பாடும் சின்ன கமல் தான் வில்லன். இறுதியில் இந்த சின்ன கமலை தந்தையே கொல்கிறார். எத்தனை முரண்கள் பாருங்கள். ஷங்கர் மிக அழகாய் பேக்கேஜ் செய்த படம். கதை, காமெடி, நடிப்பு, பாட்டு என அனைத்தும் சேர்ந்து இப்படி ஒரு படம் அமைவது ரொம்ப கடினம். ஷங்கர் மற்றும் கமல் இருவருக்காகவும் ரசித்த படம் இது. 

6. 16 வயதினிலே 

கமல், ஸ்ரீதேவி ரஜினி மூவரையும் மிக வேறுபட்ட முறையில் பாரதி ராஜா காட்டிய படம். அதிலும் அழகான கமலை எவ்வளவு அசிங்கமாய் காட்டியிருப்பார் !! வெற்றிலை ஒழுகும் வாயும், நடையும், தலை முடியும் இன்னும் மறக்க முடிய வில்லை. பாடல்களும் பின்னணி இசையும் .. ராஜா ராஜா தான்!!

ஆனந்த விகடன் இத்தனை வருட விமர்சனங்களில் இது வரை அதிக மதிப்பெண் தந்தது 16வயதினிலேக்கு தான்; இது வரை எந்த படமும் அதனை முந்த வில்லை. இந்த ஒரு தகவலே போதும் இந்த படம் பற்றி சொல்ல. 

7. மகா நதி 

நிஜத்திற்கு மிக அருகே இருக்கும் ஒரு கதை. யாருக்கு வேண்டுமானாலும் இப்படி நடக்கலாம். இன்றும் நடந்து கொண்டு தானிருக்கிறது.  இது தான் இந்த படத்தோடு நம்மை ஒன்ற வைத்தது. 

இந்த படத்தில் அந்த குழந்தைகள் இருவரும் பிரிந்து ஆளுக்கு ஒரு விதமாய் கஷ்ட படுவதும், குறிப்பாய் பெண்ணை மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் கமல் கண்டெடுத்து கூட்டி வருவதும் நம் மனதில் ஆழமாய் தழும்பை ஏற்படுத்தி போயின. 

" ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் பேரும் ஒரு கெட்டவனுக்கும் கிடைக்குதே ஏன்" என்ற கமலின் கேள்விக்கு இன்னமும் நம்மிடம் பதில் இல்லை..( படம் வந்து 20 ஆண்டுகள் ஆகிறது!!)

8. பேசும்  படம் 

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இந்த படம் நிச்சயம் ஒரு மைல் கல் தான். வசனங்களே இன்றி ஒரு படம்!! யப்பா நினைக்கவே ஆச்சரியமாய் இருக்கும் இந்த ஐடியாவை நிஜமாக்க நிறைய தைரியம் வேண்டும். அது இயக்குநர்க்கும் கமலுக்கும் இருந்தது. படத்தில் யாரும் வேண்டுமென்றே  பேசாமல் இருக்க வில்லை. காட்சி அமைப்புகள் அப்படி இருக்கும். சில காட்சிகள் மனிதர்கள் பேசினாலும் அது தூர இருக்கும் ஹீரோவுக்கு கேட்காது. இப்படி போகும் படம். 

அமலா மிக மிக அழகாய் இருந்த காலம் அது. படத்தில் வசனம் தான் இல்லையே ஒழிய சத்தங்கள் நிறைய உண்டு (குறிப்பாய் கமல் குடியிருக்கும் ரூமுக்கு அருகே உள்ள சினிமா தியேட்டர் சத்தம்).  நீங்கள்  இதுவரை பார்க்கா விடில் இந்த கிளாசிக் படத்தை அவசியம் ஒரு முறை பாருங்கள். படம் முழுதும் சிரித்து விட்டு இறுதியில் மனம் கனத்து போகும்.   

9. தசாவதாரம் 

ஒரு முறை பார்த்தால் புரியாத படம். குறைந்தது ரெண்டு முறை பார்த்தால் ஓரளவு புரியும். தனிபட்ட முறையில் எனக்கு கமலை விட அவரது மேக் அப் தான் துருத்தி கொண்டு தெரிந்தது. என்றாலும் கமல் மிக அதிகம் உழைத்த, அதே சமயம் கமர்சியல் வெற்றியும் பெற்ற படம் என்பதால் இந்த லிஸ்டில் சேர்த்துள்ளேன். 

10. அன்பே சிவம் 

இந்த படத்தின் கரு அற்புதம். லியோ டால்ஸ்டாய் சொன்ன மாதிரி " பக்கத்தில் உள்ளவனை நேசி; அது தான் அவசியமானது. மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம் தான்" என்பதே இந்த படத்தின் அடி நாதமாயிருந்தது. கமல் விபத்தில் சிக்கி முகம் விகாரமாக காரணமான நாய் மீது கமல் சிறிதும் கோப படாமல் மிகுந்த அன்பு காட்டுவார். கமல் -மாதவன் இடையே நடக்கும் சில உரையாடல்கள் அசத்தும்!  டைட்டிலில் இயக்கம் சுந்தர். சி என போட்டார்கள் :)))

முகத்தை மறைக்கும் கண்ணாடி போட்டாலும் கமல் நடிப்பிலும் திரை
கதையிலும் மனதை நெகிழ்த்தினார். அன்பு தான் கடவுள் என்று சொல்லிய அருமையான படம்.

விடு பட்ட படங்கள் பட்டியலில் குறிப்பிடத்தக்கவை : 

மைக்கேல்  மதன  காமராஜன் 
மூன்றாம் பிறை 
சிப்பிக்குள் முத்து
ஏக் துஜே கேலியே (மரோ சரித்ரா) 
பஞ்சதந்திரம் 

கமலின் எந்த படம் உங்களை ரொம்ப கவர்ந்தது? இந்த பட்டியலில் இருந்தாலும் , இதை தாண்டி இருந்தாலும் பகிருங்கள்!  நன்றி !!

வானவில்: அரசு பள்ளிக்கு பதிவர்கள் உதவி- யுடான்ஸ் ஸ்டார்

யுடான்ஸ் ஸ்டார் 

சமீபத்தில் துவக்கப்பட்டு, அனைவரும் ஆச்சரிய படும் விதத்தில் மிக விரைவாக வளர்ந்து வரும் யு டான்ஸ் திரட்டியின் இந்த வார ஸ்டார் அடியேன் தான் !! நண்பர் கேபிள் சங்கருக்கு நன்றி !! 

இந்த வாரம் முழுதும் தினம் ஒரு பதிவாவது நமது ப்ளாகில் வெளியாகும். ஒரு சில நாட்கள் மட்டும் ரெண்டு பதிவுகள் வரலாம் !! எஸ். ராமகிருஷ்ணன் சந்திப்பு, எங்க ஊர் நீடாமங்கலம் பற்றி படங்கள், வீடியோவுடன் கூடிய பதிவு என நிறைய சுவாரஸ்யமான பதிவுகள் தயாராக உள்ளது. வழக்கம் போல் வாசித்து ஊக்குவியுங்கள் ! உங்கள் ஊக்கம் தான் நிறைய எழுத வைக்கும் !


பார்த்த படம் : ரா ஒன்

எந்திரன் மற்றும் டெர்மினேட்டர் சேர்ந்து செய்த கலவை இந்த ரா ஒன். துரதிஷ்ட வசமாக அந்த ரெண்டு படங்களிலும் இருந்த சுவாரஸ்யம் மிஸ்ஸிங் ! வீடியோ கேம் பார்க்கிற உணர்வையே படம் தருகிறது. ஆனால் வீடியோ கேம் விளையாடும் school going பசங்களும் இதனை பார்த்து விட்டு "மொக்கை படம்" என்கிறார்கள். எந்த வித Emotional attachment-ம் படத்தில் வர வில்லை.

மிக அதிக விளம்பரத்தால் நல்ல ஓபனிங் கிடைக்க, ஷாரூக் சற்று காசு பார்த்து விட்டாலும் இது அவரது சிறந்த படங்கள் லிஸ்டில் நிச்சயம் சேராது ! DVD-ல் பார்த்து கூட நேரத்தை வீணாக்க வேண்டாம் !

புழுதிவாக்கம் அரசு பள்ளி- அப்டேட்

புழுதிவாக்கம் அரசு பள்ளிக்கு சமீபத்தில் நண்பர்கள் சேர்ந்து லவுட் ஸ்பீக்கர் வாங்கி தந்தோம். இதனை புதிதாக கட்டப்பட்டுள்ள மேடையின் இரு புறமும் கட்டி இப்போது பிரேயர், மேடை அருகே நடக்கிறது.

பள்ளியில் பாடம் எடுக்க கணினி ஆசிரியர் வேண்டும் என கேட்டிருந்தேன் அல்லவா? பதிவர் விதூஷ் அவர்களின் சகோதரர் தற்போது அந்த பள்ளியில் +2 மாணவர்களுக்கு Computer Science பாடம் எடுத்து வருகிறார்.

சமீபத்தில் பள்ளிக்கு விதூஷ், அவர் தம்பி மற்றும் நான் சென்றிருந்தோம். ப்ரேயரில் எங்களை அறிமுகபடுத்தி பேச சொன்னார் தலைமை ஆசிரியர். விதூஷ் முதன் முறையாக இந்த பள்ளியை இப்போது தான் பார்க்கிறார்.
மாணவ, மாணவிகளின் ஏழ்மை நிலையும், படிப்பில் அவர்கள் ஆர்வமும் பார்த்து விட்டு இந்த பள்ளி மாணவர்களுக்கு வேறு எந்த விதத்திலெல்லாம் உதவ முடியுமோ நிச்சயம் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

பெட்ரோல் விலை ஏற்றம்

கடந்த ஓராண்டில் பதினோரு முறை பெட்ரோல் விலை ஏறி உள்ளது !! இது மத்திய அரசின் மிக மோசமான செயல் என்று நினைக்கிறேன். ஒரேயடியாக ஏற்றினால் எதிர்ப்பு வருமென கொஞ்சம் கொஞ்சமாக ஏற்ற, முதலிலேயே திட்டமிட்டு செய்துள்ளது மத்திய அரசு ! வேறு எந்த விஷயத்திலும் செயல்படாத இந்த அரசு இதில் மட்டும் தொடர்ந்து இயங்கி வந்துள்ளது !

பெட்ரோல் விலை ஏற்றத்தால் தான் மற்ற விலை வாசி மிக உயர்ந்துள்ளது. சாதாரண ஆட்டோ ஓட்டுனர்கள், மாத பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தும் டூ வீலர் காரர்கள், மின்சார பற்றாக்குறையால் ஜெனரேட்டர் வைத்து ஓட்டும் கம்பனிகள் என ஏராளமான நிறுவனங்கள், மனிதர்கள் பாதிக்கப்பட்டு விட்டனர். இது பற்றி எந்த கவலையும் இந்த அரசுக்கு இல்லை.

உலகின் பிற நாடுகளை விட நாம் தான் பெட்ரோலுக்கு அதிக விலை குடுக்கிறோம். நமது பெட்ரோல் விலையில் மிக அதிக அளவு அரசுக்கு வரியாக தான் செல்கிறது. இந்த அரசுக்கு சம்பாதிக்க வேறு வழி இல்லையா? இந்த அரசு தோற்கடிக்க பட வேண்டிய அரசு என்பதற்கு இது மட்டுமன்றி இன்னும் எத்தனையோ காரணங்கள் உண்டு. ஆனால் இதற்கு மாற்றான பீ.ஜே.பி வலுவாய் இல்லை என்பது தான் சோகமான உண்மை ! நம் நாடு எப்போது தான் ஒழுங்கான வழியில் போகுமோ ?

சென்னை ஸ்பெஷல்: சரவணபவன் பரிமாறும் விருந்து


சமீபத்தில் நண்பர் ஒருவர் வீட்டுக்கு கிரகப்ரவேசதிற்கு சென்ற போது சரவணபவனிலிருந்து வந்து உணவு பரிமாறினார்கள். சரவணபவன் சுவை & குவாலிட்டி பற்றி சொல்லவே வேண்டாம். என்ன வேண்டும், என்ன வேண்டும், என மறுபடி மறுபடி கேட்டு பரிமாறியது அருமையாக இருந்தது. சாப்பிடும் இடத்தில விழாவை ஏற்பாடு செய்தவர்கள் இருக்கணும் என்கிற அவசியமே இல்லை ! நிச்சயம் அவர்களே விருந்தினர்களை நன்கு கவனித்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அங்கேயே (மொட்டை மாடி) அடுப்பு வைத்து சுட சுட தோசை, வடை செய்து தந்தனர். காபியும் (அடடா ! என்ன சுவை !) சுட சுட அங்கேயே போட்டு தந்தனர். 

குறைந்தது நூறு பேர் என்றால் அவர்களே சாப்பாடு கொண்டு வந்து, பரிமாறியும் உதவுவார்களாம் ! ஐம்பதுக்கு மேல் என்றால், டெலிவரி மட்டும் உண்டாம். (நோ பரிமாறல்!) ஐம்பதுக்கு குறைவெனில் டெலிவரியும் இல்லை. இவை அனைத்தும் தி. நகர் சரவண பவனிலிருந்து மட்டுமே வருமாம். உங்கள் வீட்டுக்கருகே வேறு சரவண பவன் இருந்தாலும், தி. நகரிலிருந்து தான் வரும்) . சைதாப்பேட்டை வரை எனில் லோக்கல் எனவும் அது தாண்டினால், அதற்கு தனியாக டெலிவரி சார்ஜும் வசூலிக்கிறார்கள். செலவு என்று பார்த்தால், அதிகமாகும் தான் ! ஆயினும் மேலே சொன்ன குவாலிட்டி & சர்விசுக்காக ஒரு முறை முயற்சித்து பார்க்கலாம் !

ஆனந்த் எஸ்.எம்.எஸ் கார்னர்

Happiness is a perfume, you cannot spread it on others without getting a few drops on yourself. So always be happy to make others happy.

அய்யாசாமியும் இளம் பெண்ணும்

அய்யாசாமிக்கு அலுவலகத்தில் தனி கேபின் உண்டு (இத பாருடா!!) அடுத்தடுத்து கேபின்கள் வரிசையாய் இருப்பதால் புதிதாய் வருவோருக்கு எந்த ரூமில் நுழைவது என சற்று குழப்பமாய் இருக்கும். அய்யாசாமி தன் கேபினில் தேமேன்னு உட்கார்ந்திருக்கும் போது திடீருன்னு ஒரு அழகிய பெண் அவரது கேபின் கதவை திறந்து கொண்டு நுழைந்தார். உள்ளே உள்ள அய்யாசாமியை பார்த்து ஷாக் ஆகி "சாரி" சொல்ல, அய்யா சாமி "நீங்க வந்ததுக்கு நான் தான் தேங்க்ஸ் சொல்லணும்" என நினைத்தாலும், "இட்ஸ் ஓகே " என்றார் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில். இப்படி "சாரி"யும் "இட்ஸ் ஓகே "யும் அடுத்து வந்த நாட்களில் தினம் சில முறையாவது நடந்தது. பொண்ணு அடுத்த கேபினில் தன் தோழிகளுடன் அமர்ந்து ஆடிட் செய்யும் ஆடிட்டர் ! வந்த புதிது என்பதால் சரியான கேபின் புரியாமல் இந்த குழப்பம் ! இப்போதெல்லாம் அந்த பெண் தெளிவடைந்து அய்யா சாமியை கண்ணாடி வழியே ஓரக்கண்ணால் பார்த்த படி கதவை திறக்காமல் சென்று விடுகிறார். இதில் அய்யா சாமி கொஞ்சம் அப்செட் தான் !

**
இஸ்லாமிய நண்பர்களுக்கு பக்ரீத் வாழ்த்துகள் !

கமலின் ரசிகர்களுக்கு கமல் பிறந்த தின வாழ்த்துகள் !!
Related Posts Plugin for WordPress, Blogger...