Tuesday, July 31, 2012

தாஜ்மஹால்-அறியாத தகவல்-பார்க்காத படங்கள்-நேரடி அனுபவம்





மும்தாஜ் 1631-ல் இறந்ததும், அடுத்த வருடமே தாஜ் மகாலை கட்டும் முயற்சியில் இறங்கி விட்டார் ஷாஜஹான். 22 வருடங்கள் கட்டப்பட்டு 1653-ல் முடிக்கப்பட்டுள்ளது தாஜ்மஹால். ஒரு நாளைக்கு 20,000 பேர் கட்டிட வேலை பார்த்தனராம். அப்போது ஆன செலவு இருபது கோடி (அப்போது தங்கம் விலை ஒரு பவுனுக்கு 15 ரூபாய்)

தாஜ்மஹாலில் இருந்து சில விலை உயர்ந்த பொருட்களை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் லார்ட் பெனெடிக்ட் எடுத்து சென்று விட்டாராம். ஆனால் அதன் பின் வந்த லார்ட் கர்சன் அவற்றை இங்கு கொண்டு வந்து வைத்ததுடன் அதற்கு பிராயச்சித்தமாக விலை உயர்ந்த சாண்ட்லியர்கள் இங்கு வைத்தாராம் !

அசநாம் கான் என்கிற சிறந்த, திறமையான மனிதர் இங்குள்ள சுவர்களில் caligraphy முறையில் எழுதி உள்ளார்.


Caligraphy writing

கீழிருந்து மேலே பார்த்தாலும் கீழே உள்ள எழுத்துக்கள் எந்த சைசில் தெரிகிறதோ அதே அளவு சைசில் மேலே உள்ள எழுத்துக்களும் தெரியும். அதற்கு தகுந்த மாதிரி கீழே சின்னதாயும் மேலே பெரிதாயும் எழுதி உள்ளார்.


சாய்வான tomb-களை பாருங்கள்
தாஜ் அருகே இருக்கும் Tombs- ஒரு வேளை சாய்ந்து விழுந்தால் கூட அது தாஜ் கட்டிடம் மீது விழாத படி அமைக்க பட்டுள்ளது. தாஜுக்கு எந்த பாதிப்பும் வர கூடாது என எவ்வளவு பார்த்து பார்த்து செய்துள்ளனர் பாருங்கள் !

தாஜ்மஹாலில் என்னென்ன வசதி உண்டு என்று இந்த பலகை சொல்கிறது


தாஜ்மஹாலில் தடை செய்யப்பட்டவை இவை



தாஜ் மஹால் உள்ளேயே தனக்கும் கல்லறை வேண்டும் என்று இடம் ஒதுக்கி இருந்தார் ஷாஜகான். ஆனால் அவர் மகன் ஒளரங்கசீப் இதற்கெல்லாம் தனி இடம் மற்றும் செலவு செய்ய முடியாது என மும்தாஜ் அருகேயே தந்தை ஷாஜஹானையும் புதைத்து விட்டார். இப்போது கணவன்- மனைவி இருவரையும் புதைத்த இடத்தை அருகருகே நாம் பார்க்கலாம்.

இருவரும் புதைக்க பட்ட இடம் அருகே புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவா சொல்லியபடியே இருந்தபோதும் வேறு சிலர் எடுப்பதை பார்த்து நான் படம் எடுத்து விட்டேன். இருளில் எங்கிருந்தோ ஓடி வந்து என்னை பிடித்து விட்டார். இனி எடுக்கலை என்று சாரி சொன்னபின் விட்டார்.

நிறைய பிளாஷ் அடிப்பதால் அந்த இடத்தின் இயற்கை அழகு கெட்டு விடும் என்று  உயர் நீதி மன்றம் இந்த ஆணை பிறப்பித்துள்ளது.

**********
தாஜ் மஹால் குறித்த BBC -யின் அரிய வீடியோ - நண்பர் தாஸ் பகிர்ந்தது இங்குள்ளது. 45 நிமிடம் ஓடும் இந்த வீடியோ. நேரம் இருக்கும் போது பாருங்கள்.



தாஜ்மஹாலுக்கு வந்த போது டயனா தனியாக படம் எடுத்து கொண்டார். "Symbol of love" -ல் தனியாக படம் எடுத்து கொண்டார் பாவம் டயானா.. " என பத்திரிக்கைகள் எழுதின.

ஒரு புகைப்பட கண்காட்சி இங்குள்ளது. அதில் உலக தலைவர்கள் பலரும் இங்கு வந்த போது எடுக்கப்பட்ட படங்கள் உள்ளன.

தாஜுக்கு நூறு மீட்டர் தூரத்துக்கு எந்த பில்டிங் கட்டவும் அனுமதி இல்லை.

பாட்டரி காருக்கு மாற்று இந்த குதிரை வண்டி


தாஜ் இருக்கும் அதே சாலையில் தொழு நோய் ஆராய்ச்சி நிலையம் ஒன்று உள்ளது. தாஜ் உள்ள சாலையில் எடுத்த வீடியோ பாருங்கள்



வெளியே வந்ததும், நாம் தமிழர்கள் என தெரிந்து கொண்டு அங்குள்ள கடைகளில் உள்ளோர் தமிழில் பேசுகிறார்கள். "வாங்க. தண்ணி பாட்டில் இருக்கு" என்று கூப்பிட்டது ஆச்சரியமாய் இருந்தது (வட நாட்டினர் ஆங்கிலமே பேச மாட்டார்கள் இதில் தமிழ் எப்படி?)

தாஜ் பார்த்து விட்டு இறங்கும் படிகள் 

தாஜ் முன்பு இரவுகளிலும் பார்க்க அனுமதிக்க பட்டது. இப்போது பௌர்ணமிக்கு சில நாட்கள் முன்பு மட்டும் இரவில் பார்க்க அனுமதிக்கிறார்கள். அப்போதும் சற்று தூர இருந்து அழகை மட்டும் தான் ரசிக்க முடியும். உள்ளே போக முடியாது போலும்.



தாஜ் அருகே ஒரு அம்மா- அப்பா தமிழில் பேசி கொண்டது:

"நல்லா பாத்துக்கடா தாஜ்மஹாலை. மறுபடி பாக்க முடியாது" - இது அம்மா

" அவன் டில்லி வரும்போது பார்ப்பான்" -அப்பா

" டில்லிக்கு எப்பங்க வர போறான்"

" அவன் ஐ.எ. எஸ் படிப்பான் இல்லை.. அப்ப இண்டர்வியூவுக்கு டில்லி தான் வருவான்"

இவர்கள் இவற்றை சொன்ன பையனுக்கு வயது 8 !

****

ஆக்ரா பயணம் முடிந்தது. அடுத்து சிம்லா !

அடுத்த பதிவில்.. சிம்லா செல்லும் அட்டகாசமான குகை ரயிலில் (வித்தியாச அனுபவத்துடன்) பயணமாவோம்  வாருங்கள் !

Monday, July 30, 2012

மக்கள் தொலைக்காட்சி: எனது ஷூட்டிங் சுவாரஸ்யங்கள்

லைப்பதிவு துவங்கி எதை ஒழுங்கா செய்கிறோமோ இல்லையா, பதிவுக்கு தலைப்பு வைக்க நல்லா கத்துக்கிட்டுருக்கோம். எப்படின்னு கேக்குறீங்களா? தலைப்பை வச்சே நீங்கள் உள்ளே வந்தீங்க பாருங்க ! அதான் ! :))
**********
திரு. தேவன் அவர்களுடன்

மக்கள் தொலைக்காட்சி எப்போதும் வித்தியாச நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்கள் இல்லாமலே அனைத்து நிகழ்ச்சிகளும் வழங்குவது பெரிய விஷயம்.

சினிமா அரசியல் இரண்டும் அதிகம் இல்லாததாலேயே இலக்கியத்துக்கு முக்கிய துவம் தருகிறார்கள் என்று எண்ணுகிறேன்.

காலை வணக்கம் என்ற பகுதி (சன்னின் வணக்கம் தமிழகம் போல) வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 டு 9 ஒளிபரப்பாகிறது. இதில் நான்கு செக்மண்டுகள் உள்ளன. அதில் ஒன்று "நான் படித்த புத்தகம்".

தான் படித்த புத்தகம் ஒன்றை பற்றி ஒருவர் பகிர்ந்து கொள்வார். இதில் கிழக்கு பதிப்பகம் பத்ரி, சோம.வள்ளியப்பன் போன்றோர் பேசினர். தற்சமயம் பிரபல பதிவர் கேபிள் சங்கர் பேசி வருகிறார்.

கேபிள் சங்கர் சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம், பாலகுமாரனின் மெர்குரி பூக்கள், அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள் ஆகிய புத்தகங்கள் பற்றி பேசி உள்ளார். கேபிள் பேசியது இன்று (திங்கள் காலை) வரை ஒளி பரப்பாகிறது.

அதற்கு மறு நாள் செவ்வாய் முதல் அடுத்த சில நாட்களுக்கு வீடுதிரும்பல் மோகன் குமார் பேசிய " நான் படித்த புத்தகம்" ஒளி பரப்பாக உள்ளது.

இந்த ஷூட்டிங்கில் நடந்த சில சுவாரஸ்யங்களை பகிர்கிறேன்
***
காலை வணக்கம் பகுதிக்கு இன் சார்ஜ் ஆக உள்ளவர் திரு. தேவன். தொலை பேசியில் பேசும்போது ஷூட்டிங் வீட்டிலேயே வைத்து கொள்ளலாமா என்றனர். நான் தான் வேண்டாம் என்று கூறி விட்டேன். ஏற்கனவே எழுத்து, ப்ளாக்னு சுத்துறான்னு வீட்டிலே"நல்ல" பேரு. இதில் வீட்டுக்கு வந்து ஷூட் செய்தா விளைவுகள் என்ன ஆகும்?

நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டூடியோ வந்துடுங்க என்றார் தேவன்.
குறிப்பிட்ட நாள் மதியம் நான்கு மணி அளவில் ஸ்டூடியோ அடைந்தேன். ரிசப்ஷனில் ஓரிரு நிமிடங்கள் காத்திருக்க, ஒருவர் வந்து என்னை ஸ்டூடியோவிற்கு வெளியே உள்ள தெருவிற்கு அழைத்து சென்றார்.பார்த்தால் அங்கு ஷூட்டிங் நடக்கிறது ! 

அந்த தெருவில் ஒரு வீட்டுக்கு வெளியே ஒரு அழகிய மரம். அருகே கொஞ்சம் புல்வெளி . இங்கேயே அமர்ந்து  ஷூட் பண்ணிடலாம் என்றனர். வண்டி ஓட்டி வந்ததுக்கு கொஞ்சம் மூச்சு விட்டுக்குறேன் என்று சொல்லி விட்டு சில நிமிடங்களில் தயார் ஆனோம்.

நானும் விஜய், சன் போன்ற டிவி க்களில் பேசியிருக்கேன். பொதுவாவே ஷூட்டிங் என்றால் தாமதமாகும். இங்கு நேர் எதிர். நம்மை அதிகம் காத்திருக்க வைக்காமல் செம வேகமாக முடிக்கிறார்கள்.

முதலாவதாக பேசியது புளிய மரத்தின் கதை புத்தக விமர்சனம். பத்து நிமிடம் போல் பேசுங்கள் என்று கூறியிருந்தனர். நான் பேசி கொண்டிருக்கும் போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு வேறு போன் வருகிறது. பின் எதோ சைகை செய்கிறார். இதையெல்லாம் பார்த்து விட்டு நாம் அதிகம் பேசுறோம் போல என விரைவாய் பேசி முடித்து விட்டேன்.

அப்புறம் நெருங்கி வந்த தேவன்  சொன்னார் " பத்து நிமிஷமாவது வரணும். நாங்க எடிட் வேற பண்ணனும் இல்லையா? இன்னும் ரெண்டு நிமிஷம் பேசுங்க" என சொல்லிவிட்டு அந்த கதையின் முக்கிய பகுதிகள் சில சொல்லி இது பற்றி கூட பேசுங்க என்றார். எனக்கு அவர் புளிய மரத்தின் கதை படித்தார் என்பதும், அதன் முக்கிய பகுதிகள் இன்னும் சரியாய் நினைவு வைத்துள்ளாரே என ஆச்சரியமாய் இருந்தது. 

"நீங்க பாட்டுக்கு பேசுங்க; நேரம் ஆகிடுச்சுன்னா மட்டும் காமிரா பின்னாடி நான் இப்படி சைகை காட்டுவேன் (ஒரு விரலால் சுற்றி காட்டுகிறார்) அப்படி காட்டுனா அடுத்த ஒரு நிமிஷத்தில் பேசி முடிச்சுடுங்க" என்றார் தேவன் . அதன் பின் அதை பிடிச்சுக்கிட்டேன் 

அடுத்து பேசியது " மதுரை நினைவுகள்". "சட்டை மாத்திக்குறேன் சார் "என்றால் " லைட் போயிடும்; சீக்கிரம் பேசிடுங்க" என்றார். இப்போ அங்கேயே உள்ள இன்னொரு இடம். போன தடவை உட்கார்ந்து பேசுனீங்க. இந்த முறை நின்னுகிட்டு பேசுங்க என்றார். புல்வெளியில் நின்றபடி என்றவுடன், வைரமுத்து ரேஞ்சுக்கு மனசில் பீலிங் விட்டு, நடந்துகிட்டு பேசலாம் என்றால், லேசாய் நகர்ந்தாலே : நகராதீங்க. நகராதீங்க. ப்ரேம் டைட் கிளோஸ் அப் வச்சிருக்கேன். லேசா நகர்ந்தாலே ப்ரேமை விட்டு வெளியே வந்துடுவீங்க என்றனர்.

சரின்னு நின்னுகிட்டு அசையாம பேசியாச்சு. ரொம்ப அருமையான புத்தகமா இருக்கே; நான் எப்படி படிக்காம போனேன்?" என்று தேவன் திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருந்தார்.  

மூன்றாவது புத்தகம் சட்டை மாற்றினால் மட்டுமே படிப்பேன் என அடம் பிடித்து விட்டேன். "சார் பாக்குற பிரண்ட்ஸ் ஏன்யா தினம் ஒரே சட்டையில வந்தே; வேற சட்டையே இல்லையான்னு
கேப்பாங்க சார் " என்றபடி ரோடிலேயே சட்டை மாற்றியாச்சு  . 
"சீக்கிரம் போட்டோ எடுங்க. கார் சொந்தாக்காரர் வந்துட போறார் "  

அடுத்தடுத்து புத்தகம் பற்றி பேசுவதில் ஒரு சிரமம் உண்டு. நாம் ஒரு புத்தகம் பற்றியும் அதன் முக்கிய  பகுதிகளையும் நினைவில் கொள்வதே சற்று கடினம். ஷூட்டிங் எடுக்கும் நேரம் எந்த புத்தகம் பற்றி பேசுகிறோமோ அதற்கு தான் தயார் ஆவோம். அடுத்து உடனே சுவிட்ச் போட்ட மாதிரி அடுத்தது பேசுவது சிரமமே. 

நான் கையில் குறிப்புகள் காகிதம் வைத்திருந்தேன். மேலும் ஒவ்வொரு புத்தகம் பேசுமுன்னும் சற்று நேரம் கேட்டு வாங்கி படித்து கொண்டேன் 

அடுத்து பேசிய ராபின் ஷர்மாவின் "The Monk who sold his Ferrari " பற்றி பேசிய போது, அந்த தெருவில் இருக்கும்  ஒருசிலர்    நின்று பேசுவதை வேடிக்கை பார்க்க துவங்கி விட்டார்கள். மேடை பேச்சு எனில் பேசி விடலாம். அப்போது மக்கள் பார்ப்பது வேறு. இந்த மாதிரி நேரத்தில் மக்கள் நின்று பேசுவதை கேட்க கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டுற மாதிரி இருந்தது.  எப்படியோ பேசியாச்சு !

பேசி முடித்த பின் மக்கள் தொலைக்காட்சி உள்ளே வந்தோம். அங்கு இன்னும் சில பணியாளர்களை சந்தித்து பேசினோம். மக்கள் தொலைக் காட்சியில் நம் ப்ளாகை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் பலர் உள்ளனர். தேவன் இணையம் பக்கம் அதிகம் வராதவர். ஆனால் வீடுதிரும்பல் பற்றியும் நான் நீடாமங்கலத்தை சேர்ந்தவன் என்றும் அங்குள்ள நண்பர்கள் கூறியுள்ளனர். போலவே முதல் முறை இங்கு " மக்கள் தொலை காட்சியில் பேசுகிறேன்" என்று போட்டு அடுத்த சில மணி நேரத்தில் போன் செய்த தேவன், " அந்த பகுதி பேரு : நான் படித்த புத்தகம்" நீங்க பதிவில வேற பேரு போட்டுட்டீங்களாமே; மாத்திடுங்க" என்றார்.

இன்னும் நான்கைந்து புத்தகத்துக்கான குறிப்புகள் தயாரா இருக்கு. வியாழன் அலுவலகத்தில் போர்டு மீட்டிங் இருப்பதால் திங்கள் முதல் வியாழன் வரை வரமுடியாது என்று கூறி உள்ளேன். அடுத்த வார இறுதியில் மீதம் புத்தகங்கள் குறித்தும் பேசும் ஷூட்டிங் நடக்கக்கூடும் !

இந்த " நான் படித்த புத்தகம்" பகுதியில் பேச விருப்பமுள்ளோர் எனக்கு மெயில் அனுப்பி கேட்டால் தேவன் அவர்களின் தொலைபேசி எண் தருகிறேன். (பொது வெளியில் பகிர வேண்டாமே என்றுதான்) காலை வணக்கத்தில் மற்ற அனைத்து பகுதிகளிலும் ஆண்களே பேசுவதால், இந்த பகுதியிலாவது ஒரு பெண் பேசினால் நன்றாயிருக்கும் என்பதால், பெண்களுக்கு முன்னுரிமை ! ஆண்களும் பேசலாம் !

சரி முக்கிய விஷயத்தை மறந்துட போறீங்க. நாளை காலை ஜூலை 31  செவ்வாய் முதல் மிக சரியா 8 .45-க்கு " நான் படித்த புத்தகம்" நிகழ்ச்சியில் பேசுகிறேன். அடுத்த சில நாட்களுக்கு இதே நேரத்தில் நிகழ்ச்சி தொடரும். பார்த்து, உங்கள் கருத்தை அவசியம் பகிருங்கள் !

எங்கள் கேபிளில் மக்கள் தொலை காட்சி வரவில்லை என்று பின்னூட்டத்தில் சொன்ன நண்பர்களுக்கு :
இந்த லிங்கில் இணையத்தில் நிகழ்ச்சியை பார்க்கலாம்

http://www.istream.com/livetv/31/Makkal-TV

நிகழ்ச்சி நேரம் தவிர அதன் பின்னும் கூட இந்த லிங்கில் - Recorded programs பார்க்கலாம் என அறிகிறேன்
தப்பி தவறி நீங்க பார்க்காட்டா அய்யாசாமி அதை ரிக்கார்ட் பண்ணி, வீடியோவை இங்கே வேற போடுவார். இந்த வம்பு வேணாம்னா, நல்ல பிள்ளையா நிகழ்ச்சியை பார்த்துடுங்க ! :))

Sunday, July 29, 2012

வேளச்சேரி:சூப்பர் ஸ்நாக்ஸ் கடை+ இப்டியும் புட்டு சாப்பிடலாம் !

வேளச்சேரியில் குருநானக் கல்லூரிக்கு அடுத்து ஐ.ஐ.டியின் பின்புற கேட் உள்ளது. இதற்கு அருகில் உள்ளது சுப்ரீம் பேக்கரி. இங்கு மாலை வேளையில் பல முறை ஸ்நாக்ஸ் சாப்பிட்டுள்ளேன். எப்போதும் மாலையில் மட்டும் கூட்டம் அம்மும்.


பேக்கரிக்கு வெளியில் பெயர் இல்லாமல் ரோடு சைடு கடை போல் உள்ளது இந்த சின்ன ஸ்நாக்ஸ் கடை. மேலே உள்ள போட்டோவில் கடை போர்டுக்கு கீழே இடது புறத்தில் இரண்டு விளக்கு எரிகிறது பாருங்கள் ! அதுதான் நான் சொல்லும் கடை !

இம்முறை கடைக்கு பெயரே இல்லையே என்று விசாரிக்க, அப்புறம் தான் சொன்னார்கள் " பேக்கரி காரர்கள் தான் இதையும் நடத்துகிறார்கள்" என்று.

பேக்கரிக்குள் பல வித பேக்கரி ஐட்டம் மற்றும் ஸ்நாக்ஸ் கிடைக்கிறது. இங்கு கூட அதிக கூட்டம் வருகிற மாதிரி தெரியலை. ஆனால் மாலை மட்டும் திறக்கும் இந்த ஸ்நாக்ஸ் கடைக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கூட்டம் வருமோ?



போண்டா, வாழைக்காய் பஜ்ஜி, சமோசா என அனைத்தும் சுட சுட தயாராகி, சூடு முழுக்க ஆறும் முன்பே காலியும் ஆகி விடுவதை அங்கு பத்து நிமிடம் நின்றாலே நீங்கள் கவனிக்கலாம்.

நான் இங்கு விரும்பி சாப்பிடுவது பஜ்ஜி மற்றும் போளி தான். எப்போதும் ஏதாவது 1 வகை பஜ்ஜி , தேங்காய் அல்லது பருப்பு போளி ஒன்று சாப்பிட்டு விட்டு கிளம்பிடுவேன்.

முக்கியமான விஷயம் விலை தான்: போண்டா, வடை உள்ளிட்ட கார உணவுகள் எல்லாமே ஒன்று ஐந்து ரூபாய் தான் ! பருப்பு அல்லது தேங்காய் போளி ஆறு ரூபாய் ! ஒரு காரம் ஒரு இனிப்பு 11 ரூபாய்க்குள் சாப்பிட்டு மாலை ஸ்நாக்சை முடித்து விடலாம் !

இங்கு சாப்பிடுவதை விட, வீட்டுக்கு பார்சல் வாங்கி போவது தான் அதிகமாக உள்ளது !


சில பேர் ஒரே ஒரு போண்டா அல்லது வேறு ஒரு காரம் மட்டும் சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள். ஐந்து ரூபாய்க்கு சுட சுட அருமையான போண்டா, செவ்வக வடிவ அழகிய கிண்ணத்தில் தேங்காய் சட்னியுடன் ஐந்து ரூபாய்க்கு தந்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள்?

இன்னொரு விஷயம்: நீங்கள் என்னென்ன சாப்பிட்டீர்கள் என அவர்கள் கணக்கு வைத்து கொள்வதில்லை: நீங்களாக சொல்லும் கணக்கு தான். போலவே இருக்கும் கூட்டத்தில் சாப்பிட்டு விட்டு காசு தாராமல் போனால் கூட கேட்பார் இல்லை ( அனுபவமா என கேட்காதீர்கள் ! சாப்பாடு விஷயத்தில் ஏமாற்ற கூடாது என்பது நம்ம பாலிசி)

வேளச்சேரி பக்கம் மாலை நேரம் வந்தால் இந்த கடையில் ஒரு முறை நிச்சயம் சாப்பிட முயலுங்கள் !
***********
இப்படியும் கூட புட்டு சாப்பிடலாம் !

உணவு குறித்த பதிவு என்பதாலும், முழுமையான சாப்பாட்டு கடை அறிமுகப்படுத்தாமல், ஸ்நாக்ஸ் கடை அறிமுகம் செய்ததாலும் அடிஷனல் ஆக இதை பகிர்கிறேன்.


புட்டு சாப்பிட பிடிக்குமா உங்களுக்கு? நான் சொல்வது குழாய் புட்டு அல்ல; வெள்ளையாய் உதிரி உதிரியாய் இருக்குமே.. வீட்டில் செய்வார்கள.. அந்த புட்டு. சர்க்கரை, நெய் எல்லாம் போட்டு இதை செய்வார்கள். ஆனாலும் கொஞ்சம் சாப்பிட்டதும் திகட்டிடும்; அதனால் தனியே புட்டை மட்டும் சாப்பிடுவது சற்று சிரமம். எங்கம்மா எனக்கு சொல்லி கொடுத்த இந்த வழியை கேட்டால், திகட்டுதுன்னு சொல்லாம புட்டை ஒரு பிடி பிடிப்பீங்க.

முதல் ரவுண்டு

இரண்டு கரண்டி புட்டு எடுத்து தட்டில் போட்டுக்குங்க. அப்புறம் இரண்டு கரண்டி சுட வைத்த பால் அது மேலே ஊத்திக்குங்க. நல்லா பால் சாதத்துக்கு பிசையிற மாதிரி பிசைங்க. இப்போ சாப்பிட்டு பாருங்க..பஞ்சாமிர்தம் மாதிரி சூப்பரா இருக்கும் !

நெக்ஸ்ட் ரவுண்டு

மறுபடி இரண்டு கரண்டி புட்டு. ஆனால் இம்முறை பால் இல்லை. நல்லெண்ணெய் சில ஸ்பூன் ஊத்திக்குங்க.

பக்கத்தில் மனைவி நின்னுகிட்டு " கருமம் ! கருமம் ! அதிலே நெய் வேற போட்டிருக்கு ஏன் எண்ணை ஊத்தி சாப்பிடுறீங்க?" ன்னு கேள்வி கேப்பாங்க. மாமியார் கற்று தந்த பழக்கத்தை கேள்வி கேட்டா தானே மாட்டு பொண்ணுக்கு அழகு ! அதெல்லாம் கண்டுக்காதீங்க. உங்க காரியத்தில் மட்டுமே கண்ணா இருக்கணும்.

புட்டின் மேல் நல்லெண்ணெய் நிறையவும் ஊத்தாம, கொஞ்சமாவும் ஊத்தாம சரியா ஊத்தணும். பிசையும் போது வெள்ளை கலர் சற்று மாறி எண்ணையின் நிறம் லேசா வரும். இப்ப, நம்ம புட் தயார் ஆயிடுச்சு. மறுபடி ஆரம்பிங்க வேட்டையை !
அப்புறம்?

அப்புறமென்ன.. மறுபடி பால் போட்டு ஒரு ரவுண்டு. அப்புறம் எண்ணை ஊற்றி இன்னொரு ரவுண்டு.. இப்படியே உங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ வெளுத்து கட்டுங்க பாஸ் !

மனைவி, குழந்தை எல்லாம் இந்த மெதட்களை எவ்வளவோ கிண்டல் பண்ணாலும் நான் இப்படி தான் பல வருஷமா கண்டினியூ பண்ணிக்கிட்டு இருக்கேன்.

பின்னே? வெக்கம், மானம்லாம் பாத்தா நாக்கோட பொழப்பு நடக்குமா ? சொல்லுங்க !
****
டிஸ்கி: மக்கள் தொலை காட்சியின் காலை வணக்கம் பகுதியில் "நான் படித்த புத்தகம் " என்கிற பகுதியில் பேசியுள்ளேன். தமிழின் சில சிறந்த புத்தகங்கள் குறித்து வருகிற செவ்வாய் கிழமை துவங்கி ஒவ்வொரு நாளும் காலை சரியாக 8.45 க்கு பத்து நிமிடம் இது ஒளிபரப்பாகும். பார்க்க முயலுங்கள் நன்றி !
*********
உங்கள் ஆதரவால் இது தொடர்ந்து ஏழாவது வாரம். ...ஓடும் வரை ஓடும் ! நிரந்தரமல்ல என அறிவேன். பிற்காலத்தில் பார்த்து மகிழ மட்டுமே இங்கு பதிந்து வைக்கிறேன்

இதற்கு காரணமான அனைத்து நண்பர்களுக்கும் நெகிழ்வான நன்றி !


தமிழின் முன்னணி வலைப்பதிவுகள்
RSS feed -



      புதுப்பிக்கப்பட்ட நாள் : 2012-07-29      
வலைப்பதிவுகளின் முன்னணி பட்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வெளியிடப்படும். கடந்த ஏழு நாட்களில் வலைப்பதிவுகள் வாசகர்களிடம் பெற்ற பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாக கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும்

Saturday, July 28, 2012

தமிழில் அரிதாக ஒரு பெண் கவிஞர் : கல்பனா

சென்னை எம். சி. சி. கல்லூரியில் தமிழ் துறை சார்பில் நடந்த "வனம்" கவிதை பட்டறை மூலம் உருவான கவிஞர்களில் ஒருவர் கல்பனா. கல்லூரியில் படிக்கும் போதே " பார்வையிலிருந்து சொல்லுக்கு" என்கிற அவரின் இந்த கவிதை தொகுப்பு வெளியாகி விட்டது. அவரின் இந்த புத்தகம் குறித்த பார்வையே இக்கட்டுரை .

மரங்கள் சூழ்ந்த கிறித்துவ கல்லூரி வளாகம்

இந்த புத்தகம் எழுதிய கவிஞரை சில முறை எம்.சி.சி கல்லூரியில் வனம் கவியரங்கில் சந்தித்துள்ளேன். முதல் முறை அவரை சந்திக்கும் முன்னே அவரின் இந்த கவிதை தொகுப்பை வாசித்திருக்க, அவரை பார்த்ததும் அவரது கவிதை வரிகளில் ஒன்றை நினைவு கூர்ந்தேன். அந்த வரிகள் " என் தலையணையை யாரேனும் எடுத்தால் கோபம் வருகிறது !" பெண்களுக்கே உண்டான possesiveness இந்த வரிகளில் எப்படி வெளிப்படுகிறது பாருங்கள் !

"மேய்ந்து திரும்பி வரும் மாடு " என்பது ஒரு கவிதை தலைப்பு. மேய்ச்சலுக்கு போகும் மாடு மாலை திரும்ப நேரமானால் கோபம் வருவதை பற்றி பேசுகிறது. உள்ளே சொல்லப்படுவது கல்லூரி செல்லும் பெண் வீடு திரும்ப தாமதமானால் வீட்டார் கோபிப்பதை தான் !

சென்னை வாழ்க்கை பற்றி " எறும்பை கூட மிதிக்க விரும்பாதவள் நான். ரயிலில் பலரை மிதித்தால் தான் இறங்கு முடிகிறது " என சொல்லி செல்கிறார்

கனவில் வருவாய்
எண்ணி படுத்தேன்
தூக்கமே வரவில்லை

இத்தகைய மீரா டைப் காதல் கவிதைகள் ஆங்காங்கு காண முடிகிறது
இன்னொரு கவிதையை பாருங்கள்

இருபுறமும் வழி நெடுக சாக்கடை
எப்புலனுக்கும் இசைவின்றி
முகம் சுளிக்க வேண்டும்
திறந்தவை நம்மை
கவனமாய் இருக்க செய்யும்
மூடிய சாக்கடைகளே ஆபத்தானவை
மூடியது போலுள்ளவை

இங்கு சாக்கடை ஒரு உவமையாக தான் பயன்படுத்த பட்டுள்ளது என்பதை வாசிக்கிற எவராலும் உணர முடியும்.

பார்வையிலிருந்து சொல்லுக்கு எனும் தலைப்பு கவிதை ஒரு பெண் போனில் பேசுவதை குடும்பம் எப்படி உன்னிப்பாய் கவனிக்கிறது, யாரிடம் பேசினாய், என்ன பேசினாய் என கேள்வி கேட்கிறது என்பது பற்றி வலியுடன் பகிர்கிறது.

கல்லூரியில் ஆட்டோகிராப் வாங்கும் கடைசி தினம் குறித்த கவிதையில் கல்லூரி இறுதி நாளில் பலருக்கும் இருக்கும் உணர்வுகளை பதிவு செய்கிறார்.

காதல் கடிதம் தந்து "செருப்பு பிஞ்சிடும்" என வசவு வாங்கியவன், ஒரு நாள் தன் தவறு உணர்ந்து, உண்மையாய் மன்னிப்பு கேட்டு விட்டு பதிலுக்கு காத்திராமல் நகர்ந்து செல்லும் போது மதிப்பில் உயர்வதை எளிய வார்த்தைகளில் பதிவு செய்துள்ளார்.

தந்தை போல மதிக்கும் பேராசிரியருக்கு பரிசு தர வேண்டுமென எடுத்து சென்று, பயத்தால் தராமலே திரும்பும் தயக்கத்தை இன்னொரு கவிதை சொல்கிறது.

" எப்படி நடப்பது உங்கள் செருப்பணிந்து ? " என தங்கள் வழிக்கு வர சொல்லி வறுபுறுத்தும் குடும்பத்தாரை கவிதையில் கேட்கும் கேள்வி செம சூடு !

இப்புத்தகத்தின் சிறப்பே பதினெட்டு-இருபது வயது பெண்ணின் உணர்வுகளை, எண்ணங்களை, வலியை, சமூகத்தின் பார்வையை, வீட்டார் கேட்கும் கேள்விகளை ஒரு சித்திரம் போல் வரைந்து காட்டியிருப்பது தான்.

இத்தகைய நல்ல கவிஞர்களை உருவாக்கிய எம். சி. சி. யின் "வனம்" கவிதை பட்டறை உண்மையில் பாராட்ட பட வேண்டிய ஒன்று !
முடிக்கும் போது தோன்றும் கேள்வி: கல்பனா: இன்றைக்கு எங்கே இருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? கவிதை மனது இன்னும் உங்களிடம் உள்ளதா? கணவன், குழந்தைகள், சமையல் இவற்றின் இடையே தொலைந்து போனதா?
****
கல்பனா எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. இன்னும் கவிதை மனதை அவர் தொலைக்காமல் இருந்தால் மகிழ்ச்சி.

வாய்ப்பு கிடைத்தால் இந்த புத்தகத்தை வாசியுங்கள். கவிதையை ரசிக்கும் எவருக்கும் இப்புத்தகம் பிடிக்கும் !
****
டிஸ்கி:  நண்பர்களே, மக்கள் தொலை காட்சியின் காலை வணக்கம் பகுதியில் "புத்தகம் அறிமுகம்" என்கிற பக்கத்தில் பேசியுள்ளேன். தமிழின் சில சிறந்த புத்தகங்கள் குறித்து ஒவ்வொரு நாளும் காலை சரியாக  8.45 க்கு பத்து நிமிடம் இது ஒளிபரப்பாகும். வரும் செவ்வாய் அல்லது புதன் முதல் தினமும்  காலை 8.45 க்கு மக்கள் தொலை காட்சியில் இது ஒளி பரப்பாகும். நிகழ்ச்சி துவங்கும் சரியான நாள்  தெரிந்த பின் மீண்டும் பகிர்கிறேன். பார்க்க முயலுங்கள் நன்றி !

Friday, July 27, 2012

நீயாநானாவில் 'இளையநிலா'- வீடியோ+விமர்சனம்

நீயா நானா பற்றி இங்கு திட்டி எழுதிய மை இன்னும் காயவில்லை. அதற்குள் அதே நிகழ்ச்சி பற்றி இன்னொரு பதிவா என தயங்கினாலும், இதை விட நல்லதொரு நீயா நானா எபிசொட் கிடைப்பது கடினம் ;
நீயா நானாவில் குறை இருக்கும் போது சுட்டி காட்டும் நாம், அதில் ரசிக்கும் படி ஒரு நல்ல விஷயம் நடந்தால் பாராட்டுவது தானே முறை !

நிகழ்ச்சி பார்க்க தவறியவர்கள் பார்த்து ரசிக்கவே இங்கு முழு வீடியோவோடு பகிர்கிறேன்.

எண்பதுகளில் வெளிவந்த திரைப்பட பாடல்கள் - குறிப்பாய் இளையராஜா பாடல்கள் உங்களுக்குள் என்னென்ன பாதிப்பை
ஏற்படுத்தியது என்பதே தலைப்பு. இதற்கான டிரைலர் இரண்டு நாட்களாய் போடும்போதே இது நிச்சயம் நல்ல எபிசொட் ஆக இருக்க போகிறது என அலுவலகத்திலும் இன்னும் பிற நண்பர்களும் பேசி கொண்டோம். நிகழ்ச்சி ஏமாற்றவில்லை. Simply superb !!

வழக்கமாய் இரு அணியினரும் எதிர் கருத்து கொண்ட அணியாய் இருப்பார்கள். இங்கு அனைவருக்கும் ஒரே வித உணர்வு தான். இசை !!

நிகழ்ச்சியில் கவர்ந்த சில விஷயங்கள்/ மனிதர்கள் :

பெண்களில் பச்சை துப்பட்டா அணிந்து வாயாலேயே இசை அமைத்து காட்டிய பெண்மணி மிக மிக அற்புதமான இசை பிரியை ! (நீயா நானாவில் பெயர் போடாததால் இப்படி தான் அவரை அடையாளம் சொல்ல வேண்டியிருக்கு)

கீழே உள்ள வீடியோவில் ஆறு நிமிடம் முதல் ஏழரை நிமிடத்துக்குள் இவர் பேசு/பாடு-கிறார். இதில் இளைய நிலா பாட்டின் கிட்டார் இசையை இவர் வாயாலேயே இசைத்து காட்டுகிறார் பாருங்கள் .. அட்டகாசம் ! இந்த பகுதியை வீடியோவில் பார்க்கும் ஒவ்வொரு முறையும் உதடுகள் சிரிக்கிறது. கண்களிலோ நீர் கோர்க்கிறது.. மூன்று நான்கு முறை பார்த்த போதும் இப்படி ஆகி விட்டது..! ஏன் என்றே புரிய வில்லை ..!

இளையநிலா பாட்டை பற்றி தனி பதிவே எழுதலாம்...பள்ளியில் படித்த போது, எனக்கு நினைவு தெரிந்து ரசித்த முதல் பாடல் இது. பாடலின் வரிகள் தான் சிறுவயதில் என்னை கட்டி போட்டது. படத்தில் பாடலை படமாக்கிய விதமும் அற்புதமாய் இருக்கும். வளர்ந்த பின் இப்பாடலில் ராஜா என்ன அற்புதமாய் இசை அமைத்துள்ளார் என்பதெல்லாம் புரிந்தது. இன்றைக்கும் இளையநிலா என் ஆல்  டைம் favourite பாடல்களில் ஒன்று.

பொன்மானை தேடி பாடல் வரிகளை எழுதி வைத்து விட்டு இறந்து போன தங்கை பற்றி பேசிய நபரும், தன் தந்தை இறக்கும் போது மறுபடி மறுபடி கேட்ட பாட்டை 15 வருடமாக கேட்க தைரியமின்றி இருக்கிறேன் என்று பேசிய நபரும் நெகிழ வைத்தனர்.

ஆண்களில் வெள்ளை சட்டையும் வெள்ளை பேண்ட்டும் அணிந்த வயதான ஒருவர் மிக அழகான குரலில் பாடினார். இவர் சொல்லிய கல்லூரி கால நினைவுகளும் அருமை ! போலவே சற்று பருமனாக இருந்த ஒரு ஆண் மிக நல்ல பாடல்களை மிக அற்புதமாக பாடினார் !

ஹாஸ்டலில் உள்ள ரேடியோ ரூம், அங்கு போடும் ரிக்கார்ட் பிளேயர்கள், டீ கடையில் திரும்ப திரும்ப ஒரே பாட்டை போட சொன்னது என, நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை தான் இவர்கள் அனைவரும் பேசினர் !

வீட்டம்மா " நீங்க போயிருந்தா இன்னும் நிறைய பாட்டு சொல்லிருப்பீங்க" என்று சொல்லி கொண்டே இருந்தார். நிகழ்ச்சியில் பலரும் சுட்டி காட்டிய பாடல்கள் அனைத்தும் என்னிடம் மொபைல், கணினி இரண்டிலுமே உள்ளவையே ! வேலை செய்யும் போதும் சரி, பதிவு எழுதும் போதும் சரி, இந்த பாடல்களை தான் கேட்டு கொண்டே இருப்பேன். அதனால், நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாட்டு பாடும் போதும், கேட்கும் போதும் Goosepumps !!

அதிசயமாய் கோபி அதிகம் டாமினேட் செய்யாமல் அடக்கி வாசித்தார். நிகழ்ச்சி முடிய இரவு 11 .30 ஆனபோதும் முழுதும் பார்த்து விட்டு நெகிழ்ந்த மனதுடன் உறங்க போனோம்.

இந்த எபிசொட் வீடியோ முழுவதும் இதோ உங்கள் பார்வைக்கு !



நீங்கள் நிகழ்ச்சி பார்த்திருந்தால் அவசியம் உங்கள் உணர்வுகளை இங்கு பதிவு செய்யுங்கள் ! 

Thursday, July 26, 2012

தாஜ்மஹால்.. வாவ்..! நேரடி அனுபவம்

தாஜ்மஹால்.. இந்தியர்கள் மட்டுமல்ல, நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டவரும் தவறாமல் பார்க்க விரும்பும் இடம். எங்கள் டில்லி பயணத்தில் ஆக்ரா சென்றபோது தாஜுக்கும் சென்றோம். அருமையான அனுபவமாய் இது இருந்தது

எங்களுடன் வந்த நண்பன் தேவா இதுவரை பத்து முறைக்கும் மேல் தாஜ்மஹால் வந்துள்ளதாக சொன்னது ஆச்சரியமாய் இருந்தது. இங்கு வரும் ஒவ்வொரு முறையும் மனசு என்னவோ போல் ஆகி விடும் என்று சொன்ன தேவாதான் தாஜ்மஹால் பற்றி பல்வேறு தகவல்கள் நமக்கு சொன்னது.
 
****
நாம் செல்லும் பஸ் அல்லது கார் தாஜுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்த படுகிறது. பஸ், கார் அருகில் அனுமதித்தால்,  கட்டிடத்தை புகை பாழாக்கும் என்பதால் !

ஒரு கிலோ மீட்டர் முன்பு இறங்கும் நாம், பாட்டரியில் இயங்கும் காரில் பயணிக்கிறோம்.

பாட்டரியில் இயங்கும் கார்
ஒரு ஆளுக்கு பத்து ரூபாய் வாங்கி கொண்டு தாஜிற்கு இருநூறு மீட்டர் முன்பு கொண்டு போய் விடுகின்றனர். அதன் பின் மீதம் உள்ள தூரத்தை நடந்து கடக்கிறோம்.

தாஜ்க்கு செல்லும் சாலையை இந்த வீடியோவில் பாருங்கள்



உள்ளே நுழையும் முன் மிக தீவிரமான செக்கிங் நடக்கிறது.



























தாஜுக்கு பல வழிகள் உள்ளன. நீங்கள் செல்லும் பேருந்து குறிப்பிட்ட திசையில் உள்ள நுழைவு வாயிலில் உள்ளது எனில் மீண்டும் நீங்கள் அதே இடத்துக்கு வர வேண்டும். எனவே எந்த திசை exit-ல் நீங்கள் வெளியேற வேண்டும் என்பதை குறித்து வைத்து கொள்வது முக்கியம்

நுழைந்ததும் தெரிகிற கட்டிடம் பாருங்கள் இதுதான் தாஜ் என்றால் அடிக்க மாட்டீர்கள்?



இந்த இடத்திலிருந்து சிறிது தொலைவு சென்றால், வலப்புறத்தில் தாஜ்மஹாலை காணலாம் !

முதல் பார்வையில் தாஜ்மஹால்  

முதன் முதலில் தாஜ்மஹாலை  பார்க்கும்  அந்த சில நொடிகள் மனதை என்னவோ செய்கிறது. நெடு நாள் பார்க்க நினைத்து பார்ப்பதால் இந்த உணர்வா, அல்லது அந்த இடம் தருகிற சிலிர்ப்பா என தெரியவில்லை. இந்த வீடியோவில் தாஜ்மஹாலை பார்த்து ரசியுங்கள்




தாஜுக்குள் ஷூ போட்டு செல்ல அனுமதி இல்லை. (வெள்ளை நிற கட்டிடம் பாழ் ஆக கூடாது என்று தான்) ஆனால் வெய்யில் கொதிக்குமே என்று திக்கான சாக்ஸ் எடுத்து சென்றிருந்தோம்.

இம்முறை ஒரு முன்னேற்றம். நமது ஷூ மேல் ஒரு கவர் போட்டு கொண்டு செல்ல அனுமதிக்கிறார்கள். இந்த கவர் போட்டு கொண்டால் ஷூவுடனே செல்லலாம். இதற்கு பத்து ரூபாய் வாங்குகிறார்கள். முன்பெல்லாம் வெளி நாட்டு பயணிகளுக்கு மட்டுமே இந்த சலுகை தந்து வந்துள்ளனர். அதென்ன வெளி நாட்டு பயணிகள் மட்டும் இப்படி போவது என எதிர்ப்பு கிளம்ப, இந்தியர்களுக்கும் இப்போது இப்படி அனுமதிக்கிறார்கள்


தாஜ்மஹாலுக்குள் மக்கள் கூட்டம்
ஆனால் ஒரு முறை போய் வந்து கழட்டி போட்ட கவரை,  சிலர் எடுத்து அணிந்து கொண்டு செல்கின்றனர். இன்னும் சிலர் காலிலிருந்து கவர் கீழே கழன்று விழுந்தாலும், கவலைப்படாமல்  ஷூவுடன் செல்கின்றனர். இதனால் இந்தியர்களுக்கு இந்த சலுகை எவ்வளவு நாள் தொடரும் என தெரியலை.

உள்ளே நுழைய கட்டிடம் முழுமையும் சுற்றி வர வைக்கிறார்கள். இந்த வெய்யிலில் ஏன் தேவையின்றி சுற்ற விடுகிறார்கள் என பல முறை வந்த தேவா வருந்திய படி வந்தார்

முன்பு இங்கு நிறைய காமிரா மேன்கள் இருப்பாராம். அவர்கள் தாஜ் முன் நாமிருக்கிற மாதிரி மிக அழகான படங்கள் எடுத்து தருவர். நாம் எடுக்கும் படங்களை விட அவர்கள் எடுப்பவை மிக அற்புதமாக இருக்கும். ஆனால் அவர்களுடன் நடந்த ஏதோ சண்டையால் புகைப்படகாரர்கள் மட்டுமல்லாது கைடுகளும் யாரும் தற்போது தாஜ் அருகே அனுமதி இல்லை !

கீழே மும்தாஜ் கல்லறை உள்ளது. அங்கு தற்போது யாரும் அனுமதிக்க படுவதில்லை.

தாஜுக்கு பின்னே யமுனை ஆறு உள்ளது. இங்கு நன்கு தண்ணீர் இருக்கும் போது போட்டிங் இருக்குமாம். இப்படி போட்டிங் சென்றபடி தாஜின் அழகை பார்த்து ரசிப்பது ஒரு பொழுது போக்கு.

வெளியே வெய்யில் தகிக்க தாஜ்மஹால் உள்ளுக்குள் போனதும் மிக கூல் ஆக இருந்தது. மார்பிள் மகிமை !

தாஜ் கட்டிடம் முன்பு மிக பெரிய புல்வெளி உள்ளது. அதில் நிறைய நாரைகள் இருந்தன.
நாரைகள் 
மிக கூட்டமான இந்த இடத்தில் கவலைப்படாமல் உலா வரும் நாரைகளை பார்க்க வேடிக்கையாக இருந்தது.

தாஜுக்கு நேரே போட்டோ எடுக்க ஒரு பெஞ்ச் உள்ளது. அதில் ஏதாவது குடும்பத்தை சேர்ந்தோர் ஒவ்வொருவராய் அமர்ந்து படம் எடுக்கிறார்கள்.


பத்து பேர் உள்ள குடும்பத்தில் வித வித காம்பினேஷனில் பத்து நிமிஷத்துக்கு மேல் படமெடுக்க நேரம் எடுக்கிறார்கள். இதனால் அங்கு காத்திருக்கும் மற்றவர்கள் அமர்ந்து படம் எடுக்க வாய்ப்பு தருவது பற்றி கவலைப்படுவதே இல்லை. ஆக்ரா கோட்டையிலும் இதே தான் நடந்தது.

****
நிற்க. தாஜ்மகாலில் எடுத்த படங்கள், வீடியோ மற்றும் தாஜ் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே பதிவில் அடக்கினால் ரொம்ப டூ மச்சாய் இருக்கும். எனவே தாஜ் விசிட் அடுத்த பகுதியுடன் நிறைவடையும் !

****

அடுத்த பகுதியில்:

தாஜ்மஹாலில் சோகமான டயானா

தமிழர் குடும்பம் இங்கு பேசிய சுவாரஸ்ய டயலாக்

தாஜ்மஹாலின் அதி அற்புத    Caligraphy writing

எடுக்க கூடாத இடத்தில் புகைப்படம் எடுத்து மாட்டி கொண்ட அய்யாசாமி

இதுவரை பார்க்காத சில கோணங்களில் தாஜ் புகைப்படம் !



தாஜ் குறித்து நீங்கள் அறியாத ஏராள தகவல்கள்...!

Wednesday, July 25, 2012

வானவில் 98: ராகுல் காந்தியும் அது-இது-எதுவும்

முகப்புத்தக கிறுக்கல்கள்

ராகுல் காந்தி இனிமே கட்சி மற்றும் ஆட்சியில் தீவிரமா குதிக்க போறாராம். இது வரை இறங்கிய அனைத்து தேர்தலிலும் ஜெயித்த லெக் தாதா ..வாங்கோ வாங்கோ !

###########

ஜிம் மாஸ்டர் இன்னிக்கு என் பெண்டை நிமித்திட்டார். . செம வொர்க் அவுட்

(இப்படி ஒரு Status போட்டா தானே நான் தினம் ஜிம்முக்கு போறது உங்களுக்கு தெரியும் ஹிஹி)

###########

அம்மா ஆட்சியில் என்னென்னவோ இலவசமா கிடைக்குது. ஆனா இந்த கொத்தமல்லி இதுவரை காய்கறி கடையில் இலவசமா குடுத்தாங்க. இப்போ இல்லைங்குறாங்க. இதுக்கு எவ்ளோ செலவானுலும் சரி அம்மா தான் ஒரு பஞ்சாயத்து பண்ணி விடணும் :)

டிவி கார்னர்

இந்த வார "அது இது எது"வில் "சிரிச்சா போச்சு " பகுதி செம காமெடியாய் இருந்தது. பார்த்து கொண்டிருந்த நானும் பெண்ணும் சிரித்து சிரித்து கண்ணில் தண்ணீர் வந்து விட்டது.

ஒருவர் இறந்து விட, அவரை வெவ்வேறு நடிகர்கள் வந்து பார்த்து வருத்தம் தெரிவிக்கிறார்கள். அதற்கெல்லாம் இறந்தவரின் மகன் கவுண்டமணி கவுண்டர் கொடுப்பது தான் கான்செப்ட். கவுண்டமணியாக நடித்தவர் அனைவர் தலைமுடியையும் பிடிச்சு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டினார். இருந்தாலும் நிச்சயம் முழுதும் சிரிக்கிற மாதிரி இருந்தது.

நீங்கள் பார்க்க விரும்பினால் இந்த வீடியோவில் பார்த்து சிரியுங்கள் :




அய்யாசாமி

ஒரு நாள் இரவு உறங்க போகு முன் பால் இருக்கும் பாத்திரம் டைனிங் டேபிள் மேல் இருப்பதை பார்த்தார் அய்யாசாமி. வீட்டம்மா மறந்து வெளியில் வச்சுட்டார் என பிரிட்ஜுக்குள் எடுத்து வைத்தார்.

மறு நாள் காலை முதலில் எழுந்த அய்யாசாமி, குக்கர் வைப்பது, பால் சுட வைப்பது உள்ளிட்ட வேலைகள் செய்து வைத்தார் . அந்த பாலை சுடவைத்து முடிக்கும் போது உள்ளே வந்த வீட்டம்மா, " இது நான் தயிர் உரைக்கு ஊற்றிய பாத்திரம் ஆச்சே? தயிர் ஆகலை? எப்படி சுட வைக்கிறீங்க?" என கேட்க, மிரண்டு போயிட்டார் அய்யாசாமி.

தயிர் உரைக்கு ஊற்றிய பாத்திரத்தை தான் இரவு பிரிட்ஜுக்குள் வைத்து விட்டு காலை சுட வைத்திருக்கார். எந்த பதிலும் சொல்லாமல் கிட்சனிலிருந்து வெளியே எஸ் ஆகி பேப்பருக்குள் தலையை நுழைத்து கொண்டார். "மோர் குழம்பு வைக்கணும்னு நினைச்சேன்; இப்படி ஆகிடுச்சே" என புலம்பியவாறு வேறு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார் வீட்டம்மா ! 

நாட்டி அஜூ கார்னர் 

நாட்டி வர வர ரொம்ப செல்லம் கொஞ்சிக்கொண்டு இருக்கிறாள். மனைவியும் மகளும் கையில் தூக்கி வைத்து கொண்டால் அவர்கள் கன்னத்தை நன்கு கொஞ்சுவாள். நெற்றியில் இருக்கும் பொட்டினை கவ்வி எடுத்து லேசாய் கடித்து விட்டு கீழே போட்டு விடுவாள். அந்த பொட்டு அவள் சாப்பிட முடியாது என்று தெரிந்தாலும் இப்படி கவ்வுவதை தொடர்கிறாள் ! "நான் தான் இந்த வீட்டில் செல்லம் ! என்னைத்தான் கொஞ்சுறாங்க ...தெரிஞ்சிக்கோ" என்கிற மாதிரி அஜூவை மிரட்டவும் தவறுவதில்லை !

கிரிக்கெட் கார்னர் 

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே  இன்னொரு சீரிஸ் ! வருஷக்கு ஒரு முறையாவது அவங்க நம்ம ஊர் வந்துடுவாங்க. நாம அவங்க ஊர் போயிடுவோம். தற்போது நடைபெறும் போட்டிகளில் விடுமுறை நாட்களில் கூட இலங்கை மைதானங்கள் காலியாக உள்ளது. ( நம்ம நாட்டில் அலுவலகம் இருக்கும் நாளில் கூட லீவு போட்டு விட்டு பல்லாயிரக்கணக்கில் மக்கள் கிரிக்கெட் பார்க்க போவாங்க.)

இந்தியாவின் பீல்டிங் மற்றும் பவுலிங் வழக்கம் போல் கொடுமையா இருக்கு ! இந்திய அணியை பேட்டிங் மட்டுமே காப்பாத்தி கிட்டு இருக்குதுன்னு நினைச்சா நேத்து அதிலும் சொதப்பிட்டாங்க :(

பதிவர் பக்கம் : இரா. எட்வின் 

இரா. எட்வின் என்கிற பதிவரின் ப்ளாக் சமீபத்தில் வாசித்தேன். பள்ளி ஒன்றில் ஆசிரியராய் இருக்கிறார்  திரு. எட்வின். அவரது இந்த பதிவு அருமையாய் இருந்தது. இதில் சொல்லப்படும் அந்த வரி "எதற்கும் உதவாத ஒருவன் எங்கும் இருக்க மாட்டான்" எவ்வளவு நிஜம் !  

போட்டோ கார்னர் -1

புதிதாய் திருமணமான இரு ஜோடிகளை எந்த வண்டியில் கூட்டிட்டு போறாங்க பாருங்க.



படம் கேரள திருமணத்தில் எடுக்கப்பட்டதாம் !

போட்டோ கார்னர் -2: யார் இது ?

இந்த படத்தில் புறமுதுகு காட்டும் நபரை அடையாளம் தெரிகிறதா? யார் இவர்? என்ன நடக்கிறது இங்கே?




ஊகிக்க முயலுங்கள்.. விடை அடுத்த வானவில்லில் ...

Tuesday, July 24, 2012

மாருதி நிறுவன மேனேஜர்களுக்கு வெட்டு! நடந்தது என்ன?


டில்லியிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில், ஹரியானா மாநிலத்தில் உள்ளது  மானேசர் என்கிற ஊர். இங்கு தான் மாருதியின் தொழிற்சாலை உள்ளது. மாருதி Swift கார் இந்த தொழிற்சாலையில் தயார் ஆகிறது. 

ஒன்பது மாதங்களுக்கு முன் இதே தொழிற்சாலையில் மிக பெரும் ஸ்ட்ரைக் நடந்து பல வாரங்கள் மூடப்பட்டிருந்தது. இம்முறை அதை விட பெரிய வன்முறை. காயம் பட்ட 26 ஊழியர்கள் மருத்துவமனையில் இருக்கின்றனர். இதில் ஒரு ஜப்பானியரும் அடக்கம். இரு காலும் பிராக்சர் ஆகி தீயில் சிக்கி ஒரு ஊழியர் இறந்தே விட்டார். வன்முறையில் ஈடுபட்ட தொண்ணூறு ஊழியர்கள் ஜெயிலில்...!

மாருதி நிறுவனத்துடன் ஜப்பானிய நிறுவனமான சுசுகி (Suzuki ) மோட்டார் நிறுவனம் இணைந்து Joint Venture முறையில் இந்த நிறுவனம் இயங்குகிறது.

வெளி நாட்டினரை பொறுத்த வரை எப்போதுமே ஊழியர்களின் safety-க்கு தான் மிக அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஒரு ஊழியர்க்கு தயாரிப்பில் அடிபட்டாலே, இனி யாருக்கும் இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்வது என பல வாரங்கள் பேசி, ஊழியர்களுக்கு அது பற்றி நிறைய டிரைனிங் தருவார்கள். இத்தகைய வன்முறை, அதுவும் ஒரே நேரத்தில் பல மேனஜர்கள் தாக்கப்பட்டது வெளி நாட்டு முதலீட்டாளர் களை பெரும் அளவு மனதை பாதித்திருக்கும்.

                               

ஒரே ஒரு ஊழியர் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில் துவங்கி உள்ளது எல்லா பிரச்சனையும் !

ஜியாலால் என்கிற ஊழியர் ஒரு வாய்ச்சண்டையில் ராம்கிஷோர் என்கிற மேனஜரை அன்று காலை அறைந்து விட்டார். இதனால் ஜியாலால் மீது நடவடிக்கை எடுக்க நிர்வாகம் பேசி உள்ளது. இதில் கோபமான ஊழியர்கள் production-ஐ நிறுத்தி விட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். பின் மதிய ஷிப்ட்டுக்கு வந்த ஊழியர் கூட்டமும் சேர்ந்து விட அனைவரும் சேர்ந்து 700 கம்பியூட்டர், மற்றும் சர்வர்(Server) -களை எரித்துள்ளனர்.

மெசனைன் பிலோர் என்று சொல்லப்படும் முதல் மாடியில் தான் உயர் அதிகாரிகள் அனைவரும் அமருவார்கள். அங்கு நுழைந்த கூட்டம் மேனேஜர்கள் அனைவரையும் சேர் மற்றும் இரும்பி கம்பியால் தாக்கி இருக்கிறது. பின் சில இடங்களுக்கு தீயும் வைத்து விட்டது. இவர்கள் அடித்ததில் இரு கால்களும் பிராக்ச்சர் ஆன அவனிஷ் குமார் தேவ் என்கிற மேனேஜர் தீயில் சிக்கி இறந்து விட்டார். 

இப்போது நிறுவனம் லாக் அவுட் செய்யப்பட்டுள்ளது.

லாக் அவுட் ஆன நிறுவனம் எப்போது திறக்கப்படும் என்பது தெரியவில்லை. குறைந்தது இரண்டு வாரம் முதல் ஒரு மாதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாளைக்கு இதனால் நிறுவனத்துக்கு 15 கோடிகள் நஷ்டம் ! ஆனால் நிறுவனம் இப்போது பணத்தை பெரிதாய் நினைக்காது. ஊழியர்களின் மனதில் உண்டான தாக்கம், பயம் சரியாவது தான் முக்கியம் !

ஊழியர்கள் நிர்வாக முடிவுகளுக்கு மேனஜர், வி.பி போன்றோரை காரணமாக நினைப்பது எவ்வளவு தவறான விஷயம் ! வன்முறை நிச்சயம் இப்பிரச்சனைக்கு தீர்வாகாது. இது போன்ற பிரச்சனையில் தாக்கியவர்கள் ஜெயிலுக்கு போய் விட முக்கிய பிரச்சனை திசை திரும்பி விடும்.

உண்மையில் இது போன்ற நேரத்தில் தான் காந்திய வழிகள் பயன்படும். ஊழியர்கள் தினமும் நிறுவனம் வந்து உள்ளேயே அவர்கள் தங்கள் போராட்டத்தை அமைதியாக தொடர்ந்திருந்தால் நிர்வாகம் இறங்கி வந்திருக்கும்.

இது பற்றி டில்லியில், இந்த தொழிற்சாலைக்கு சற்று அருகில் இருக்கும் என் நண்பர் ஒருவரிடம் கேட்ட போது பிரச்சனைக்கு அடிப்படை என அவர் கூறிய காரணங்கள் :

1. நிர்வாகம் தற்போது சுசுகி-யிடம் இருகிறது. அவர்களின் working culture வேறு; நமது working culture வேறு.

2. பொதுவாகவே ஆட்டோமொபைல் துறையில் உள்ள போட்டியினால் வேலை பளு ஊழியர்கள் மீது அதிகமாக இருப்பது மற்றும் அது இடைநிலை நிர்வாகிகளின் மேல் ஏற்படுத்தும் சுமை

3. இந்த பகுதியில் உள்ள தொழிலாளர்களின் ஒட்டு மொத்த மன நிலை. இவர்கள் அனைவரும் ’குஜ்ஜர்’ என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள். எளிதில் உணர்ச்சி வசப் படுபவர்கள். தேவர் மகன் படத்தில் சிவாஜி கூறுவது போல் வேல் கம்பு போன்றவற்றை விட்டு விட்டு வர சற்று காலம் ஆகலாம். அருகில் உள்ள (விவசாய!!) நில உரிமையாளர்கள் தொழிற்சாலைகளுக்கும் மற்றவர்களுக்கும் தங்கள் நிலங்களை விற்று பணம் சம்பாதித்தைக் கண்டு தாங்களும் அது போல அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களூக்கு வந்திருக்கும். அதை யூனியன் தலைவர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

4. தற்போது இதில் மாவோயிஸ்டுகளின் தலையீடும் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. (குறிப்பிட்ட நபர்களை சரியான தருணத்தில் தாக்கியிருப்பதால் இது உணர்ச்சி வசப்பட்டு நடக்கவில்லை; தாக்குதல் திட்டமிட்டது என்று போலிஸ் நினைக்கிறது)

5. இது ஒரு 'tip of a volcano' தான். அரசு ’குறைந்த பட்ச ஊதியத்தை’ உயர்த்த நீண்ட காலம் எடுப்பதும் ஒரு காரணம். (உதா 2008-2010 வரை கு.ப.ஊ.உயர்வு வெறும் 50 ரூபாய் தான். இந்த காலத்தில் விலைவாசி உயர்வோ மிகவும் அதிகம். இது அரசு தொழில் முத(லை)ல்வர்கள் இணைந்து நடத்தும் ஒரு கூட்டு சதி. ஊதிய உயர்வைத் தள்ளிப் போட்டால் முதலாளிகளூக்கு லாபம். அதில் ஒரு பகுதி அமைச்சருக்கும் கிட்ட கூடும் !

************
இது பற்றி இன்னொரு டில்லி நண்பர் இப்படி கூறுகிறார் :

மாருதி மானேசர் தொழிற்சாலையில் இது வரை மூன்று நான்கு முறை இம்மாதிரி பிரச்சனைகள் வந்திருக்கின்றன. இந்த முறை எல்லா எல்லையையும் தாண்டிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சாதாரணமாகவே ஒரு கும்பலாக இருக்கும்போது எதையும் செய்யலாம் என்ற துணிச்சல் [மாஸ் சைகாலாஜி] இருக்கும். இம்முறை நடந்தது, ஹரியானாவிற்கோ, இந்தியாவிற்கோ நிச்சயம் நல்லதல்ல. ஊழியர்களுக்குப் பாதுகாப்பில்லை எனும்போது எந்த நிர்வாகம் இங்கே முதலீடு செய்வார்கள்.? 

************
நிறைவாக :

கடந்த ஒரு வருடத்தில் மூன்று முறை மாருதியின் மானேசர்  பிளான்ட் மூடப்பட்டது (Lock Out) மிக பெரும் கருப்பு புள்ளி. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நிலைமையை சரி செய்ய வேண்டும். அப்போது தான் வெளி நாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியா மீதான நம்பிக்கை குலையாமல் இருக்கும். எல்லா விஷயத்திலும் தூங்கி வழியும் மத்திய அரசு உடனே இதை செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் !

********
வல்லமை ஜூலை 24, 2012 இதழில் வெளியான கட்டுரை

Monday, July 23, 2012

காய்கறி எப்படி பார்த்து வாங்கணும்? 31 குறிப்புகள்

ம்ம வீட்டம்மா அவ்வப்போது சில வீட்டு/ சமையல் குறிப்புகள் புத்தகத்தில் படித்தோ நண்பர்களிடம் கேட்டோ எழுதி வைத்திருப்பார். காய்கறி வாங்குவது எப்படி என ஏதோ புத்தகத்தில் வாசித்து சில குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன்

என்னென்ன காய்கறி என்ன பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு : பொறியல், சூப் - ஆகியவை செய்யலாம். மேல் பகுதி நார் அதிகம் இருக்காது, உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினால் நல்லது

2. வெள்ளை வெங்காயம்: ( Salad used in Chinese Food) நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : நல்ல முருங்கை முறுக்கினால் வளைந்து கொடுக்கும். முற்றவில்லை என்று அர்த்தம்

4. சர்க்கரை வள்ளிகிழங்கு : உறுதியான கிழங்கு இனிக்கும் அடிபட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் மெதுவாக சென்றால் நல்லது என்று அர்த்தம்

6.தக்காளி : நன்றாக சிவந்த தக்காளி கூட வாங்கலாம். பெங்களூர் தக்காளி ஒரு வாரம் அப்படியே இருக்கும். கெடாது.


7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போது தான் விதைப்பகுதி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்

16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிகிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக்கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார்த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய் : தோல் soft-ஆக இருப்பது போல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம் 

23. பீன்ஸ்  பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக்காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்

24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌ சௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்

30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31.  பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்

****
பெண்களுக்கு இவற்றில் பலவும் ஏற்கனவே தெரிந்திருக்கும் ! ஆண் நண்பர்கள் இனிமே கரீட்டா காய்கறி வாங்கி வீட்டம்மாவை அசத்துங்க !

இந்த குறிப்புகளை சீரியசாக படித்து சந்தேகம் எல்லாம் கேட்டதில் குடும்ப பொறுப்பு நிறைய வந்து விட்டது என மகிழ்வோடு சொல்லி தந்தார் நம்ம வீட்டம்மா. அவருக்கு என்ன தெரியும்... ஒரு பதிவு தேற்ற தான் நாம் அக்கறையாய் விசாரித்தது என ? :)

****

நேற்றைய பதிவு: சொல்லுங்கண்ணே சொல்லுங்க : இங்கே வாசிக்கலாம் 

Sunday, July 22, 2012

சொல்லுங்கண்ணே சொல்லுங்க - ஒரு பார்வை

டிவியில் தற்சமயம் வெளிவருபவற்றில்  ஒரு மிக சிறந்த நிகழ்ச்சி ஆதித்யா டிவியில் வெளிவரும் " சொல்லுங்கண்ணே சொல்லுங்க".

சனி மற்றும் ஞாயிறு மதியம் ஒன்று முதல் இரண்டு வரை இது ஒளிபரப்பாகும். வார நாட்களில் இரவு ஒன்பது முதல் பத்து வரை ஏற்கனவே வந்தவை மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது. நாங்கள் அநேகமாய் இதனை பார்க்க தவறுவதே இல்லை.

ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என அனைவரையும் சிரிக்க வைத்து விடும் இந்நிகழ்ச்சி.

இதனை நடத்தும் இமான் சற்று பருமனாக, கருப்பாக இருப்பார். திருநெல்வேலி தமிழ். கேட்கவே மிக இனிமையாக இருக்கும். வெள்ளை வேஷ்டியுடன் இவர் போடும் கலர் கலரான சட்டை ஜூப்பரு...!

சில வார்த்தைகளை இவர் உச்சரிப்பது இன்னும் காமெடியாய் இருக்கும். உதாரணமாய் பிரதமரை "Biரதமர் " என்பார். (நம்ம கேப்டன் மாதிரி!)

பொது அறிவு கேள்விகளை சாலைகளில் உள்ள மக்க்களை பிடித்து கேட்கிறார் இமான். அவர்கள் சொல்லும் பதிலும், அதற்கு இமான் கொடுக்கும் கவுண்டரும் சிரிச்சு மாளாது.

உதாரணத்துக்கு :

" சில தலைவர்களோட அடைமொழி சொல்றேன் அவங்க யாருன்னு கண்டுபிடிங்க" என சொல்லிவிட்டு இமான் கேட்ட கேள்விகளும் பதிலும்.

"புரட்சி கவிஞர்னா யாரும்மா?" - இமான்

" வைரமுத்து "

"எலேய் .. வைரமுத்து புரட்சி கவிஞரா? நல்லா தெரியுமா?"

"ம்ம்"

" சரி. வைக்கம் வீரர்னா யாரு"

"காமராஜர்"

" அவரு வைக்கம் வீரரா? பாப்பா.. நீ நல்லா வருவே"
***
இன்னொருவரிடம் " புரட்சி கவிஞர் யாருங்க?"

" பாரதியார்"

"பெருந்தலைவர்னா அது யாரு?"

"கலைஞர்"

"அட. கலைஞரை தான் பெருந்தலைவர்னு சொல்லுவோமா? சரி வைக்கம் வீரர் யாரு "

" காந்தி"

"வைக்கம் வீரர் காந்தியா? நீ எம். ஏ படிச்சிருக்க இல்ல? நீ சொன்னா சரியா தான் இருக்கும்."

****
இன்னொரு நபரிடம் அதே கேள்விகள் " "புரட்சி கவிஞர் என்று யாரை சொல்லுவோம்?"

" கண்ணதாசன்"

"வைக்கம் வீரர் யாரு?

"வைகோ "

"எல்லாரும் நல்லா கேட்டுகிடுங்க வைக்கம் வீரருன்னா அது வைகோ"

****
ஒவ்வொரு பதிலும் சொன்ன பின் இமான் கொடுக்கிற கமன்ட் மற்றும் முகபாவம் அங்கு சுற்றி நிற்கும் அனைவரையும், டிவியில் பார்க்கும் நம்மையும் சிரிக்க வைத்து விடுகிறது. இந்த பிரோக்ராமின் வீடியோ ஒன்றை பாருங்கள் :




பெரும்பாலும் பொது அறிவு கேள்விகள் தான் என்றாலும் சில நேரம் கணவன்- மனைவிகளாய் பார்த்து அவர்களிடம் " உங்க ரெண்டு பேரில் யார் பயந்தாங்கொள்ளி? யார் தைரியசாலி? " என்றெல்லாம் கேள்வி கேட்டு கலாட்டா செய்வார்.

நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரே காரணம்- நிகழ்ச்சி நடத்தும் இமான். செம நகைச்சுவை உணர்வு மனுஷனுக்கு ! பின்னி எடுத்துடுறார் !
சில கேள்விகள் மிக எளிதாக, இதற்கு போய் மக்களுக்கு பதில் தெரியலையா என்கிற ரீதியில் இருக்கும். இன்னும் சில கடினமாய் இருக்கும்.

ஒவ்வொரு நாள் நிகழ்ச்சி முடிவில் Bloopers போல நிகழ்ச்சி படமாக்கும் போது நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவங்கள் காட்டுவார்கள்.

நாள் முழுதும் எவ்வளவோ டென்ஷன் இருக்க, இரவில் ( 9 to 10) இந்நிகழ்ச்சி பார்த்து மனம் விட்டு சிரிப்பது நல்ல relaxation-ஆய் உள்ளது !

நிகழ்ச்சியில் நான் விரும்பும் மாற்றம் ஒன்றே ஒன்று தான். நிகழ்ச்சியில் பலரிடமும் கேள்வியை கேட்ட பிறகு அந்த கேள்விக்கான சரியான பதில் சொல்லும் ஒருவரை கடைசியாகவோ, அல்லது நடத்தும் இமானோ சரியான பதில் சொன்னால், பொது அறிவும் நமக்கு டெவலப் ஆன மாதிரி இருக்கும்.

சொல்லுங்கண்ணே சொல்லுங்க -பாருங்கண்ணே பாருங்க !

***
வல்லமை ஜூலை 18 , 2012 இதழில் வெளியானது !
***
இது ஆறாவது வாரம் ...! உங்களால் தான் இது சாத்தியமானது ! நெஞ்சார்ந்த நன்றி  !!

      புதுப்பிக்கப்பட்ட நாள் : 2012-07-22      
வலைப்பதிவுகளின் முன்னணி பட்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வெளியிடப்படும். கடந்த ஏழு நாட்களில் வலைப்பதிவுகள் வாசகர்களிடம் பெற்ற பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாக கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும்

Saturday, July 21, 2012

உணவகம் அறிமுகம் -சிட்டி சென்டர்- சட்டே மலேசியா

சிட்டி சென்டரில் காலை காட்சி சினிமா சென்று விட்டு மதியம் அங்கு சாப்பிடுகிற அனுபவம் கிடைத்தது. விலை சற்று கூட தான் இருக்கும். ஆனால் காலை சினிமா, பின் சாப்பாடு அப்புறம் அங்குள்ள லைப் ஸ்டைலில் பர்ச்சேஸ் என மிகபெரிய சதி திட்டத்துடன் குடும்பத்தினர் வந்ததால், வேறு வழி இல்லை. அன்று சிட்டி சென்டரில் தான் சாப்பிடுகிற நிலைமை.

சிட்டி சென்டர் மாடியில் புட் கோர்ட் ( Food Court ) தனியே உள்ளது. நிறையவே கடைகள் இருந்தன. ஒவ்வொன்றாக பார்வையிட்டு விட்டு, சட்டே மலேசியா என்கிற இந்த கடையை தேர்ந்தெடுத்தேன்.பர்மா உணவு என்று போட்டிருந்ததால் சற்று வித்யாசமாய் முயலலாமே என்பது எண்ணம்.

மூன்று பேருக்கும் ஆளுக்கு ஒரு ஐட்டம் ஆர்டர் செய்தோம். பரோட்டாவுடன் நூடுல்ஸ் போன்ற ஐட்டம்  சேர்த்து   ஒரு காம்போ பேக். 

                            

அடுத்தது ரெகுலர் மீல்ஸ். இதில் சிக்கன் குழம்புடன் ஒரு காம்போவும், மீன் குழம்புடன் இன்னொரு காம்போவும் வாங்கினோம். 

அனைவரும் எல்லாவற்றையும் டேஸ்ட் செய்யவே செய்தோம். 







மீல்ஸ் 

எங்கள் உணவு வரும் வரை காத்திருந்த போது, இன்னொருவர் முட்டை கொத்து பரோட்டா ஆர்டர் செய்திருந்தார். போட்டோ மட்டும் எடுத்தேன் 
முட்டை கொத்து பரோட்டா 
நம்ம உணவு தயார் ஆகுது :


விலை எல்லாம் சற்று அதிகம் தான். ஒவ்வொரு காம்போ பேக்கும் 130  அல்லது 140 ரூபாய். மூவருக்கு நானூறு ரூபாய்க்கு மேல் ஆகி விட்டது 

கணினி வைத்து இரு இளம் பெண்கள் பில் போட்டு தருகிறார்கள் 




விலை பட்டியல். படங்கள் எல்லாம்  நம்ம மொபைலில் எடுத்தது. எப்படி நம்ம மொபைல் ...பரவால்லியா? 


உணவின் சுவைக்கு வருவோம். 

பர்மா பரோட்டா சுவை மட்டுமே நன்றாய், நம் பரோட்டாவை விட மிக மெத்தென்று வித்யாசமாய் இருந்தது.   அதற்கான சைட் டிஷும் ஓகே. 

வறுத்த மீன் குட். குழம்புகள் இரண்டும் சுமார் தான். கீரை என்ற பெயரில் ஒன்று வைத்து கொடுமை செய்திருந்தனர்.

உண்மையில் போர்டில் தான் மலேசியா மற்றும் பர்மா எல்லாம் உள்ளதே தவிர நிஜத்தில் இரண்டு வகை உணவும் இல்லை. புரோட்டா மட்டுமே மலேசிய வகை என்று நினைக்கிறேன். சாப்பாடு எல்லாம் இந்தியன் வகை உணவு தான் !

நல்ல பசியில் சாப்பிட்டதால் உள்ளே இறங்கி விட்டது. உணவு என் பெண் உட்பட யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யவில்லை என்பது ஆறுதல். 

வீடுதிரும்பல் பரிந்துரை: இங்கு Food Court இருப்பதால், பர்மா பரோட்டா மட்டுமே இங்கு வாங்கி கொள்ளுங்கள். மற்ற உணவுகள் அருகிலுள்ள வேறு கடையில் வாங்கி கொண்டு அனைத்தையும் சேர்த்து சாப்பிடலாம்.   பர்மா பரோட்டா நிச்சயம் உங்களுக்கு ஒரு வித்தியாச அனுபவம் தரும் !
Related Posts Plugin for WordPress, Blogger...