Wednesday, June 30, 2010

3 காதல் கவிதைகள்

                                                                       புகை

புகையாய் தான் நீ வந்தாய்
என்னுள் 
சிலையாய் தங்கி போனாய் !


வழி

உதட்டை மூடினேன் 
மௌன போர்வையால் 
மனசை மூட??

மரம்

மழை நின்ற பின்னும் 
நீர் சிந்தும் மரமாய் 
நீ சென்ற பின்னும் 
உன் நினைவில் நான் ..

Monday, June 28, 2010

வானவில் - டாஸ்மாக் - அனுஷ்கா - சச்சின்

சட்ட பக்கம் : உயர் நீதி மன்றம் மூடிய  டாஸ்மாக் கடைகள் 

சென்னை உயர் நீதி மன்றம் இரண்டு டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை கீழ்பாக்கில் உள்ள பெண்கள் பள்ளிக்கு அருகில் இருந்த ஒரு கடையும் ஒக்கநேக்கலில் ஒரு அங்கன்வாடி இருந்த கடையும் பள்ளி செல்வோருக்கு இடைஞ்சலாக இருந்ததால் மூட சொல்லி உத்தரவு வந்துள்ளது. பள்ளி, கோயில் அருகே இருக்கும் டாஸ்மாக்குகள் தொந்தரவாக இருந்தால் நிச்சயம் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு பதிவு செய்து அவற்றை மூட வைக்கலாம்!!

டிவி பக்கம்

சன் டிவியில் ஒரு நாள் காலை எதேச்சையாக காலை மலர் பார்க்க முடிந்தது. பாரதி பாஸ்கர் & பட்டி மன்ற ராஜா " கடன்" பற்றி பேசிகொண்டிருந்தனர். பாரதி பாஸ்கர் ஒரு மனிதன் தனது வருமானத்தில் (Take home salary) ஆறில் ஒரு பங்கிற்கு மேல் கடன் வாங்கினால் அவன் கடனில் மூழ்குவதாக அர்த்தம் என்று சொன்னார். ஆனால் நிஜத்தில் வீட்டு கடன் வாங்கும் பலரும் இந்த வகையில் வாங்குவதாக தெரியலையே!! சென்னையில் ஒரு வீடு இன்று குறைந்தது 15 முதல் 20 லட்சம் ஆகிறது; இதற்கு EMI 15000 முதல் 20000ஆகும். அப்படி ஆனால் மாதம் ஒரு லட்சம் மேல் சம்பளம் வாங்குபவர் மட்டும் தான் 15 லட்ச ருபாய் மதிப்புள்ள வீடு வாங்க முடியுமா என்ன!!

ஆனால் இந்த பேச்சினூடே முடிந்த வரை வீடு போன்ற asset-களுக்கு மட்டும் கடன் வாங்கலாம். கார் போன்ற இன்னும் செலவு வைக்கும் விஷயத்திற்கு கடன் வாங்காமல் இருப்பது நல்லது என்றனர். ம்ம்ம்..

சிங்கம் : அசத்தலான படம்  

சிங்கம் சமீபத்தில் பார்த்தேன். படம் செம சுவாரஸ்யம்!! "நேர்மையான மந்திரி" போன்ற நம்ப முடியாத பல அம்சங்கள் இருந்தாலும் பார்க்கும் போது அவை எல்லாம் மறந்து மகிழ்வாக பார்க்கும் படி உள்ளது. நம் உள் மனது எப்போதும் ஹீரோவுடன் நம்மை வைத்து பார்க்கும். எனவே ஹீரோ - வில்லன் இடையே நடக்கும் பல " நீயா நானா" டைப் போட்டிகளில் ஹீரோ ஜெயிக்க நாமே  ஜெயித்தது போல் மகிழ்கிறோம். படம் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லனும்னா "Entertainer ".

இந்த வருடம் வந்த படங்களில் தமிழ் படம் மற்றும் சிங்கம் தான் பார்த்ததில் பிடித்தது.  


தலைவியை மாற்றிய அய்யாசாமி 

ஐயாசாமி சிங்கம் பார்த்தது முதல் " அனுஷ்" " அனுஷ்" என புலம்பி வருகிறார்.  தமன்னா பைத்தியம் தெளிந்து இப்போ அனுஷ் பைத்தியம் பிடித்துள்ளது. " ஐயா சாமி; அவங்க உங்களை விட உயரம் அதிகம்" என்றேன். " அதை பத்தி, கூட நடிச்ச சூர்யாவே கவலை படலை; எனக்கு கனவுல தான வர போறாங்க; நான் ஏன் கவலை படனும் ? " என்றார்.  "ஆமா இது எத்தனாவது தலைவி?" முறைத்து விட்டு சொன்னார்:" கணக்கு வச்சிக்கிற பழக்கம் இல்ல" ரைட்டு !!

எஸ். ராவின் சற்றே வெளிச்சம்


ஆனந்த விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சற்றே வெளிச்சம் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது. 58 வாரங்கள்!! இதில் பல பகுதிகள் நான் ரசித்தேன். ஆனால் அதென்னவோ தெரியலை.. இது போன்ற எழுத்து வார வாரம் படித்தால் நன்றாக உள்ளது. மொத்தமாக படித்தால் அவ்வளவு சுவையில்லை. சுகபோதானந்தா எழுதிய தொடர் கூட இதே உணர்வு தான். என்ன காரணம் ..உங்களுக்கு தெரியுமா??


படித்ததில் பிடித்தது 

Nothing in the life is to be feared. It is only to be understood - Marie Curie

கிரிக்கட் கார்னர்: 

இந்தியா ஆசியா கோப்பை ஜெயித்தது ரொம்ப மகிழ்ச்சி; டெஸ்ட் போட்டிக்கு தேர்வான அணியில் மீண்டும் முரளி விஜய் மற்றும் சாகாவுக்கு வாய்ப்பு!! தேர்வு குழுவில் உள்ள தேர்வாளர்களுக்கு கோட்டா சிஸ்டம் உள்ளதை இது தெளிவாக காட்டுகிறது. இந்த ரெண்டு பேரும் சமீபத்தில் என்ன செய்துட்டாங்கன்னு தேர்வானாங்கலோ...!!!

சச்சின்..எதாவது டெஸ்டில் ஒரு சென்சுரியாவது  அடிச்சிடு தல..அது போதும்.. :))

தொடரும் நண்பர்கள்...

இந்த வலை பக்கத்தை தொடர்பவர்கள் எண்ணிக்கை 149-ஐ எட்டியுள்ளது.. யாருங்க அந்த அதிர்ஷ்ட கார 150-வது நண்பர்? :))

தொடரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.கடந்த சில வாரங்களாக மிக அதிக வேலை பளு..இருந்தும் எழுத வைப்பது உங்கள் ஆதரவே..பின்னூட்டங்களே ..நன்றி நண்பர்களே 

Friday, June 25, 2010

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

அப்பலோ மருத்துவமனை "Billion Hearts Beating" என்றொரு நல்ல பணியை துவக்கியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://www.billionheartsbeating.com/ என்ற இணைய தளத்தை பாருங்கள்.

குறிப்பாக இந்த பக்கத்தில் "இதயத்தை பாதுகாக்க யோசனைகள்" என்ற தலைப்பில் இவர்கள் தந்துள்ள குறிப்புகள் பயன் தரக்கூடியவை . கிட்டத்தட்ட 92 யோசனைகள் அவர்கள் தந்துள்ளனர். அவற்றில் முக்கியமான குறிப்புகளின் தமிழாக்கத்தை இரண்டு பகுதிகளாக இங்கு பகிர்கிறேன். நான் அதிகம் ரசித்தவை சற்று "Bold" -செய்து தந்துள்ளேன் முதல் பகுதி இதோ:

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

***********
1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.

2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.

3. உடல் எடை குறைவு - சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும். குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.

4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வபோது சாப்பிடுங்கள்.

5. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால், மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.

6. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுங்கள். ப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் - பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன.

7. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.

8.உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகபடுதாதீர்கள்.

9.புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.

10. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

11. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.

12. மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %) நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது.

13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

14. எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect ) இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.

15. சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள் ( Delegate ).

16.கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள். அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.


17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார் !

18. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.

19. உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி, கணினி, வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.

20. உடல் எடை கூடுவதற்கு தொலை காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்

21. உங்கள் அலை பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்; அது மோசமான பழக்கம்; மேலும் மனச்சுமையை கூட்டும்.

22. மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.

23. சிரிப்பு ( Laugh therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்க பட்டுள்ளது.

24. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்

25. உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.

26. நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என ( Optimist ) நம்புங்கள்.

27. மகிழ்வாக வாழும் கணவன்- மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு. தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.

28. நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து மீள உதவும்

29. வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.

30. பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி கொள்ளுங்கள். நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.

Wednesday, June 23, 2010

கவிஞர் விக்ரமாதித்யனின் புத்தக விமர்சனம்

கவிஞர் விக்ரமாதித்யனின் "வியாழக்கிழமையை  தொலைத்தவன்"  கவிதை புத்தகம் இந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்கியது. இது பற்றி ஒரு விமர்சனம் எழுத எண்ணி... இப்போது தான் முடிந்திருக்கிறது...


முருகேச பாண்டியன் என்பவரின் முன்னுரையில் விக்ரமாதித்யன் பற்றி ஓரளவு அறிய முடிகிறது. முன்னுரையில் இவர் மேற்கோள் காட்டிய விக்ரமாதித்யனின் வரிகள் ..... "கரடி சைக்கிள் விடும் போது நாம் வாழ்க்கையை அர்த்தபடுத்த முடியாதா "  மிகுந்த அர்த்தமுள்ளது!!

" விருந்தோம்பல்" என்ற கவிதை..ஒரு சாதாரண மனிதன் விருந்தாளிகளை எப்படி கவனிக்க முடியும் என மிக எளிமையாக பேசுகிறது..." விளையாட்டில்லை உபசரிப்பு" என்கிறார்கவிஞர்..இக்கவிதையில் ஒரு பகுதி மட்டும்...

வேலை பளு 
இருக்க கூடாது
மனைவி 
கோபித்து கொள்ள கூடாது 
உணவு பழக்கம் 
ஒத்து போக வேண்டும் 
எத்தனை இருக்கிறது 
ஒருவனை வா என்று சொல்ல..

                                                      இப்படி செல்லும் கவிதை இவ்வாறு முடிகிறது 

அவரவர்க்கும் 
ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் 
எதற்கு தேடி போய் பார்த்து  
இடைஞ்சல் பண்ணுவானேன் 
இருட்டோ வெளிச்சமோ 
இருக்கும் இடத்திலேயே இருக்கலாம் 

                          *********************
        பீடி சுற்றும் இயந்திரங்கள் என்ற கவிதையில் மனிதர்கள் ஒரே செயலை திரும்ப செய்து இயந்திரமாய் மாறி போவதை சொல்கிறார்.. வருத்தமும் எள்ளலும் சேர்ந்து தெரியும் கவிதை இது. 

மற்றொரு கவிதை மாநகரம் 

ஒவ்வொரு முறையும் 
ஒவ்வொரு காரணம் கூறி 
ஒவ்வொரு வேலை சொல்லி 
ஒவ்வொரு ஆசை காட்டி 
அழைக்கிறது மாநகரம்

எனில் 
ஒருமுறை கூட சாமான்யமாகவோ சந்தோஷமாகவோ 
திரும்ப அனுப்பியதேயில்லை 

இங்கு நகரம் என்று சொன்னாலும் நகரத்து மனிதர்களை தான் கவிஞர் குறிக்கிறார். ஒரு எளிய மனிதரை இந்த நகரம் எப்படி நடத்துகிறது!!
                        *********************
தமிழ் கூறு நல்லுலகில் இது கவிதை தலைப்பு .. இப்படி துவங்குகிறது கவிதை 

இன்று செய்யவிருப்பதை 
நாளை செய்யலாம் 
நாளை மறு நாள் 
செய்யலாம் 
அடுத்த வாரம்
அடுத்த மாசம் 
அடுத்த வருஷம் 
அதற்கடுத்த வருஷம் கூட 
செய்து கொள்ளலாம் 
செய்யாமல் போனாலும் 
சிறிதும் தவறில்லை 

செய்தாலும் சரி 
செய்யாமலிருந்தாலும் சரி 

மனிதர்களின் தள்ளி போடும் குணத்தை எள்ளல் செய்கிறார் என்று தான் புரிகிறேன் நான்...
                        *********************
கவிதைகளில் ஆங்காங்கே அமர் என்ற ஹீரோ எட்டி பார்க்கிறார். இது கவிஞரின் மறு பக்கமாக தான் இருக்க வேண்டும். புத்தக தலைப்பு கவிதையில் கூட அமர் தான் வியாழ கிழமையை தொலைக்கிறார்.. 

ஒரு கவிதையில்,  

எழுத்து தரும் போதை 
எத்தனை காலத்துக்கு 

சும்மா சும்மா கிடைக்காது 
சுயத்துக்கு தீனி 

என பொட்டில் அறைகிறார். எத்தனை உண்மை இது!! பாராட்டு, அங்கீகாரம் இவை தொடர்ந்து கிடைத்து விடுமா என்ன!! 
                        *********************
பெரும்பாலான கவிதைகள் எளிமையாகவும் புரிகிற விதமாகவும் தான் உள்ளது. சில மட்டும் தான் புரிய வில்லை. நூலின் இறுதியில் தந்துள்ள விக்ரமாதித்யன் பற்றிய குறிப்புகள் மிக சுவாரஸ்யம்.. இதில் இவர் முன் செய்த தொழில்கள் என " மளிகை கடை பையன், சித்தாள், இட்லி வடை விற்பவன் என இருபது குறிப்பிட பட்டுள்ளது..

இது நான் வாசித்த முதல் விக்ரமாதித்யன் புத்தகம்; அந்த  வித்தியாச மனிதர் பற்றி ஓரளவு உணர முடிந்தது...

நூல் விவரங்கள்:
தலைப்பு: வியாழக்கிழமையை  தொலைத்தவன்
விலை : ரூ. 50
பதிப்பகம்: வம்சி புக்ஸ், திருவண்ணாமலை 

Monday, June 21, 2010

வானவில் - அல்கா, ஹர்பஜன், மனுஷ்ய புத்திரன்

சூப்பர் சிங்கர் ஜூனியர்

சூப்பர் சிங்கர் ஜூனியர் இறுதி போட்டி மணி 5 நேரத்திற்கும் மேல் ஒளி பரப்பானது. மறு நாள் பள்ளி/ அலுவலகம் இருந்தும் கடைசி வரை உட்கார்ந்து பார்க்கும் நிலை.. அல்கா வென்றது சரியான முடிவு..இது மட்டுமல்லாது மற்ற வரிசையும் கூட ( ஷ்ரவன், ஸ்ரீ காந்த், ரோஷன், நித்யஸ்ரீ ) மிக சரி என்றே சொல்ல வேண்டும். போலவே பிரியங்கா & ஸ்ரீ நிஷா இருவரும் இறுதி போட்டி வராத போதும் ஆளுக்கு ஒரு லட்சம் பரிசு தந்தனர். ரொம்ப சரியான முடிவு இது!

அல்கா மலையாளி.. அவர் எப்படி தமிழகத்தின் செல்ல குரல் எனலாம் என சில குரல்கள் ஒலித்தன. அந்த வாதத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனாலும் பாடிய ஐந்து பேரில் நன்கு பாடியவர் என்று மட்டும் தான் பார்க்க முடியும். அப்படி பார்த்தால் அது அல்கா தான். செல்ல குரல் தமிழகத்திலிருந்து தான் வர வேண்டும் என்றால் அல்கா & ரோஷன் முன்பே விலக்க பட்டிருக்க வேண்டும்.

இறுதி போட்டியில் அல்கா சிங்கார வேலனே பாடியது அற்புதம்!! நாதஸ்வரம் கூடவே வாசித்து பார்க்க அருமையாய் இருந்தது. அடுத்து பாடிய " முன்பே வா.. அன்பே வா" அல்கா நன்கு பாட வில்லை எனினும் இதுவரை பாடிய பாடல்கள் அடிப்படையில் அல்கா வென்றது நியாயமே.

நிற்க. இனியாவது வீட்டில் டிவி சீக்கிரம் நிறுத்த பட வேண்டும்!!

இணையத்தில் வாசித்தது

இணையத்தில் வாசித்ததில் நல்ல பதிவு/ விஷயம் முடியும் போது வானவில்லில் பகிரும் எண்ணம். இந்த வாரம் ரசித்தது மனுஷ்ய புத்திரன் பேட்டி. விகடனில் வந்தது.. யூத் விகடன் பக்கத்தில் வாசிக்க முடிகிறது. "நான் மனுஷ்ய புத்திரன் ஆனது எப்படி?"
குறிப்பாக மிகுந்த நம்பிக்கை தரும் இந்த வரிகள்..

// நான் எனது வெற்றிகள், வீழ்ச்சிகள் அனைத்தில் இருந்தும் கற்றுக்கொண் டது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நாம் யாரும், எப்போதும் முழுமையாகக் கைவிடப்பட்டவர்கள் அல்ல; எந்த இருளிலும் விடிவதற்குச் சற்று நேரமே இருக்கிறது என்பதை நான் அறிந்து வந்திருக்கிறேன். கொஞ்சம் மன வலிமையும் கொஞ்சம்காத்திருக்கவும் முடிந்தால், நாம் விடுபடவேமுடியாத துர்கனவு என்று நினைத்த விஷயங்களில் இருந்தும் விடுபடுவோம்!//

உண்மை தான் நன்றி மனுஷ்ய புத்திரன் !!

கிரிக்கட் பக்கம்

இந்தியா பாகிஸ்தான் ஒரு நாள் போட்டியில் இந்தியா கடைசி ஓவரில் ஒரு பந்து மீதம் இருக்கும் போது வென்றது செம சந்தோஷமாய் இருந்தது. ஹர்பஜன் மற்றும் ரைனாவின் பொறுப்பான ஆட்டம் பெரும் ஆறுதல். இந்தியாவின் பீல்டிங் இன்னும் முன்னேற வேண்டும். அப்போது தான் ஆசியா கப் பைனல் மட்டுமல்ல அடுத்த வருட வேர்ல்ட் கப்பும் ஜெயிப்பது பற்றி நினைக்க முடியும். கொஞ்ச நாளைக்கு ஹர்பஜன் அடித்த சிக்சர்களை எண்ணி மகிழ்வோம்.

வாழ்த்துக்கள்

புத்தகம் வெளியிட்ட TVR ஐயா அவர்களுக்கும்.

செம்மொழி மாநாட்டில் பேச உள்ள கதிருக்கும்

ஜெயா டிவி காலை மலரில் பேசிய டோண்டு ஐயா/ பேசவுள்ள கேபிளுக்கும்

படித்ததில் பிடித்தது

Dedication to duty is not a sacrifice. It is the justification of ones own existence. Gandhiji

அய்யாசாமி

அய்யாசாமி தனது பைக்கில் பாக்ஸ் வைத்துள்ளார். ஆனாலும் காய்கறி மற்றும் பழங்கள் வாங்கி விட்டு பைக்கில் உள்ள சைட் கொக்கியில் மாட்டியவாரே வருவார். இதில் பல முறை காய்/ பழ பைகள் அறுந்து விழுந்துள்ளது. வீட்டில் பாராட்டும் நிறைய கிடைத்துள்ளது. இப்போதெல்லாம் முடிந்த வரை பாக்ஸில் வைத்து பார்க்கிறார். அப்படியும் பைகள் நிறைய ஆனால் சிலவற்றை கொக்கியில் மாட்டி விட்டு அடிக்கடி பின்னால் பார்த்தவாறு வண்டி ஓட்டுகிறார். ம்ம்ம்

Thursday, June 17, 2010

லட்சுமணன் என்கிற மனிதன்

சொல்லிக்கொள்கிற மாதிரி

அழகாயில்லை

சந்தன மரங்கள்

- இலட்சுமணன்
 
ஜூன் 17- எங்கள் நண்பன் லட்சுமணன் பிறந்த நாள்.. அவன் நினைவாக
இந்த பதிவு..
 
************

சட்ட கல்லூரியில் ஐந்து வருடம் உடன் படித்த லக்ஷ்மணன் 1997 வருடம் ஹீமோபிலியா என்ற நோயின் காரணமாக மரணம் அடைந்தான். "அனைவர்க்கும் இனியவன்" ஆன அவனது இழப்பு நண்பர்கள் அனைவர்க்கும் பெரிய அதிர்ச்சி. அவன் மரணத்திற்கு சில நாட்களுக்கு பின் நண்பர்கள் கூடி பேசினோம். அவனது கவிதைகளை புத்தகமாக கொண்டு வரவும், லக்ஷ்மணன் நினைவு கவிதை போட்டி தமிழகம் முழுமைக்கும் நடத்தி விழாவில் பரிசுகள் வழங்கவும், இதற்கான பணம் பலரிடமும் வசூல் செய்வோம் என்றும் முடிவு செய்தோம்.

தமிழகம் முழுதும் பல நண்பர்கள் சிறிது சிறிதாக வசூல் செய்தனர். சென்னை-ல் அமுதன், பிரேம், பாலா, நித்தி, பிரபு உள்ளிட்டோரும், திருச்சி-ல் ராஜ், சதீஷ், ஸ்ரீதர் போன்றோரும், தஞ்சை-ல் சுரேஷ், ஷீலா ஆகிய நண்பர்களும் பணம் வசூலித்தனர்.

இதே நேரத்தில் அவனது தம்பி அன்பு மூலம் லக்ஷ்மணன் கவிதைகளை திரட்டினோம். சிறு சிறு காகிதங்கள், பஸ் டிக்கெட்கள் இவற்றில் எழுதப்பட்ட கவிதைகள் ........இவற்றை தனி காகிதத்தில் பிரதி எடுத்து கவிதை ரசிக்கக்கூடிய ஒரு பத்து பேரிடம் தந்தோம். அவர்கள் தங்களுக்கு பிடித்த கவிதை தலைப்புகளை குறித்து தந்தனர். இப்படி பலரால் தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் உடன் சென்னை கிறித்துவ கல்லூரி தமிழ் பேராசிரியர் - பாரதி புத்திரன் என்ற பாலு சாமி அவர்களை நான் சந்தித்தேன். இவர் விகடன் பத்திரிக்கையில் லக்ஷ்மணன் உடன் நிருபராக பணியாற்றிய செந்தில் மூலம் எங்களுக்கு அறிமுகம் ஆனவர். இளம் கவிஞர்களை ஊக்குவிப்பவர். கல்லூரியில் வனம் என்ற தலைப்பில் வார வாரம் வெள்ளி அன்று கவி அரங்கம் நடத்துவார். இதில் லக்ஷ்மணனும் நானும் கலந்து கொண்டுள்ளோம். பாரதி புத்திரன் மீது லக்ஷ்மணன் மிக மரியாதை வைத்திருந்தான்.

ஏறக்குறைய மூன்று வாரம் தினமும் நான்கு மணி நேரம் இந்த கவிதைகளை வாசிப்பது.. அது பற்றி பேசுவது.. விவாதிப்பது..லேசாக சில வரிகளை மாற்றி எழுதுவது.. என பாரதி புத்திரன் மிகவும் இதற்காக உழைத்தார். தினம் மாலை நான் அவர் வீடு சென்று விடுவேன். பின் வேறு எந்த சிந்தனையும் இன்றி இது பற்றி மட்டும் நெடு நேரம் விவாதிப்போம். இறந்த ஒரு கவிஞர் எழுத்தை மாற்றி எழுதுவது பற்றி எனக்கு தயக்கம் இருந்தது. ஆனாலும் லக்ஷ்மணன் பாரதி புத்திரன் மீது வைத்திருந்த மரியாதையை நினைத்து கொள்வேன். லக்ஷ்மணன் இருந்திருந்தால் கூட மகிழ்ச்சி தான் அடைவான் என்று சமாதானம் செய்து கொள்வேன்.

தினமும் இரவு பாரதி பத்திரன் வீட்டில் எனக்கும் சேர்த்து சமைக்க சொல்வார். பல நாட்கள் விருந்தாளி என்பதால் Non veg தயார் செய்வார்கள். எனக்கு மிகுந்த கூச்சமாகவும் தயக்கமாகவும் இருக்கும். இவர் இந்த உதவி செய்வதே பெரிது.. இதில் இந்த உபசரிப்பு வேறா என எண்ணுவேன். ஆனால் பாரதி புத்திரனோ தினம் இரவு பத்தரை மணிக்கு தனது மிதி வண்டியில்  தாம்பரம் ரயில் நிலையம்  வரை என்னை கொண்டு சென்று விடுவார். நெகிழ்ந்த மனதுடன் தினம் ரூம் திரும்புவேன் (அப்போது திருமணம் ஆக வில்லை).

தினமும் இரவு தாமதமாக வீடு திரும்பும் லக்ஷ்மணன், அதனால் வரும் குற்ற உணர்வு குறித்து ஒரு கவிதை எழுதியிருந்தான் . இந்த கவிதைக்கும், புத்தகத்திற்கும் வீடு திரும்பல் என்ற தலைப்பு வைக்க பட்டது.

பாரதி புத்திரன் தவிர இந்த புத்தகத்திற்கு பலரும் பல வகையில் உதவினர். நண்பன் பிரேம் தனது பிரஸ்ஸில்  புத்தகம் பிரிண்ட் செய்தான்.

எழுத்தாளர் சுஜாதா மற்றும் கவிஞர் கல்யாண்ஜி ஆகியோரின் அணிந்துரை புத்தகத்திற்கு கிடைத்தது. ஓவியர் ஆதிமுலம் அட்டை படம் வரைந்து தர, ஓவியர் விஸ்வம் லக்ஷ்மணன் முகத்தை ஓவியம் ஆக வரைந்து தந்தார். எத்தகைய பெயர்கள் இவை நான்கும்!!!! இவர்கள் மட்டும் இன்றி புத்தக வெளீயிடு தொடர்பாக நாங்கள் தொடர்பு கொண்ட இலக்கிய வாதிகள் பலரும் மிக எளிமையாக பழகினர். இவர்கள் யாரும் தங்கள் பங்களிப்பிற்கு எந்த சன்மானமும் பெற வில்லை. நாங்கள் கேட்ட போதும் இந்த நல்ல விஷயத்திற்கு வாங்க விரும்ப வில்லை என்றே அனைவரும் கூறினர்.

தமிழகம் முழுமைக்குமாக நடத்தப்பட்ட கவிதை போட்டியில் சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுத்து தந்தவர் அப்போது பாரதி ராஜாவிடம் உதவி இயக்கனராக இருந்த கவிஞர் கவிதா பாரதி.

விழா, லக்ஷ்மணன் இறந்து ஆறு மாதம் கழித்து 1997 ஜூலையில்  ஒரு ஞாயிறு காலை சென்னை உயர் நீதி மன்றம் அருகே நடந்தது. அந்த ஹால் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த லக்ஷ்மணன் நண்பர்களால் நிரம்பி வழிந்தது.

எங்கள் அனைவராலும் அக்கா என அழைக்கப்படும் திருமகள் நிகழ்ச்சியை தொகுத்து பேசினார். நண்பர்கள் லக்ஷ்மணன் பற்றிய பல்வேறு செய்திகளை நினைவு கூர்ந்து பேசினர். எழுத்தாளர் பிரபஞ்சன் கவிதை புத்தகத்தை வெளியிட வழக்கறிஞர் அருள்மொழி பெற்றுக்கொண்டார். இவர்கள் தவிர லக்ஷ்மணன் சீனியர் வக்கீல் செந்தில் நாதன், பாரதி புத்திரன், ஓவியர் விஸ்வம் உள்ளிட்ட பலர் நெகிழ்வுடன் பேசினர்.

விழா முடியும் முன்பே புத்தகம் ஏராளமான பிரதிகள் விற்றது. பின் சுஜாதா குங்குமம் பத்திரிக்கையில் லக்ஷ்மணன் பற்றியும் விழா குறித்தும் எழுதினார். விகடனும் புத்தகத்தில் இருந்து ஒரு கவிதையை இரண்டு முழு பக்கங்களுக்கு பிரசுரம் செய்தது. லக்ஷ்மணன் கவிதைகளை இன்னமும் சிலர் நினைவு வைத்து மேற்கோள் காட்டுகின்றனர்.

எழுத்தில் ஈடுபாடு உள்ள எவரும் தன் எழுத்தில் வாழ்வில் ஒரு புத்தகமேனும் வெளியிட வேண்டும் என எண்ணுகிறேன். மரணத்திற்கு பின்னும் வாழ இது ஒரு எளிய வழி.

எங்கள் நண்பர்கள் வாழ்க்கையில் செய்த உருப்படியான செயல்களில் இந்த புத்தக வெளியிடு மிக முக்கியமான ஒன்று. லக்ஷ்மணன் பிறந்த நாள் ஜூன் 17. இதை முன்னிட்டு சென்னை அடையார்-ல் உள்ள செயின்ட் லூயிஸ் விழி இழந்த மாணவர் பள்ளியில் வருடா வருடம் ஒரு பேச்சு போட்டியும் ஒரு பாட்டு போட்டியும் நடத்தி வருகிறோம்.

இதோ ஜூன் மாதம் வந்து விட்டது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக போட்டிக்கான ஏற்பாடுகள் செயின்ட் லூயிஸ் விழி இழந்த மாணவர் பள்ளியில் துவங்குகின்றன. இறந்த பின்னும் வாழ்கிறான் லக்ஷ்மணன்....
பின் குறிப்பு: இது ஒரு மீள் பதிவு

மலர்கள் அழகானவை தான்

எப்படி ரசிக்க முடியும்

இறுதி ஊர்வலத்தின் பாதையில்
 
- இலட்சுமணன்




Wednesday, June 9, 2010

வானவில் -சிங்கத்தின் சிங்கம்- ஆள்ரவுண்டர் அஷ்வின்

நீண்ட நாள் கழித்து வானவில் வருகிறது. நடுவில் வந்த இடை வெளிக்கு வேலை பளு ஒரு காரணம். அது முடிந்து நிமிர்ந்தால், பதிவுலகம் அமளி துமளி பட்டு கொண்டிருந்தது. நடக்கும் நிகழ்வுகள் பார்த்தால் எழுதும் எண்ணம் வர வில்லை. புதிதாய் எழுத வரும் பதிவர்கள் மிரண்டு போகும் அளவு, இந்த பதிவுலகில் நீடிக்கணுமா என்ற அளவில் இருந்தது. நல்ல வேலையாக புயல் சற்று ஓய்ந்துள்ளது; இனி வெளியே வரலாம் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது. இது போல் மீண்டும் சில நிகழ்வுகள் நடந்தால், இவற்றை பார்ப்பதை விட குடும்பத்துடன் நேரம் செலவிடுவதே சிறந்தது என பல ப்ளாகுகள் மூட படலாம்.

டிவி பக்கம்

சூப்பர் சிங்கர் இறுதி போட்டி ஏனோ முழுசாய் களை கட்டலை..சித்ரா ஆளை காணும். மற்ற நடுவர்கள் எல்லாரையும் ஆஹோ ஒஹோன்னு பாராட்டுறாங்க (ஓட்டு போட போறது மக்கள் தானே? ) அல்கா தான் ஜெயிப்பார் என ரொம்ப நாள் முன்பிலிருந்து எழுதி வருகிறேன். மலையாள பெண் என ஓட்டுகள் குறைந்து விழவும் வாய்ப்பு உண்டு.. அப்புறம்.. இந்த ஷ்ரவன் என்ன உயரம்..!! கிட்ட தட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யா அளவு உயரம். பார்க்கலாம் அடுத்த வியாழன் ஜூன் 17 யார் சூப்பர் சிங்கர் என இறுதி முடிவு தெரிஞ்சிடும்

நிஜ நான் அவன் இல்லை

நான் அவன் இல்லை சினிமா போல ஒரு நிகழ்வு நடந்துள்ளதை வாசித்தீர்களா? ரவிச்சந்திரன் என்ற மனிதர் கிட்ட தட்ட 17 பெண்களை ஏமாற்றியுள்ளான்; பலரை மணந்து அவர்களிடம் பணம் ஏமாற்றியுள்ளான். ஒரு பெண் போலிஸ் இவனிடம் பழகி விஷயத்தை வெளியே கொண்டு வந்துள்ளார்.. ரவிச்சந்திரன் கையில் மொபைலை தூக்கி பிடித்தவாறே செமையா போஸ் தருகிறான்.. பார்க்க சுமாராய் இருக்கும் இவன் " ஏமாற்ற ஆள் எப்படி இருக்கிறார் என்பதல்ல; பேச்சு தான் முக்கியம்" என மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறான்.

சிங்கத்தின் சிங்கம்

தமிழ் சினிமாவில் தற்போது ஒரு படம் ஹிட் ஆவதே கஷ்டம்; இந்த நிலையில் சூர்யாவிற்கு தொடர் வெற்றிகள்.. சிங்கம் படம் ஹிட் என அனைத்து தரப்பும் சொல்கிறது. படம் இன்னும் பார்க்கலை.


அனுஷ்கா கண்ணடிக்கும் அந்த காட்சி மட்டும் அவ்வப்போது டிவியில் பார்த்து மகிழும் எண்ணற்ற சராசரிகளில் நானும் ஒருவன். இதற்கு நடுவே சூர்யாவின் சிங்க குட்டியும் (பையன்) ரிலீஸ். அசத்துங்க சூர்யா வாழ்த்துக்கள் !!

போபால் வழக்கு

மிகுந்த வேதனையும் வலியும் போபால் வழக்கு தீர்ப்பு கேட்டு வருகிறது. : " தாமதமாய் கிடைக்கும் நீதி மறுக்க பட்ட நீதிக்கு சமம்" ("Justice delayed is Justice denied ") என்பார்கள். இங்கு நீதி தாமதமாய் வந்தது மட்டுமல்லாது தவறாகவும் வந்துள்ளது. குற்றவாளிகள் இரு வருட தண்டனை; உடனே பெயிலில் வெளியே வந்து விட்டனர். என்ன கொடுமை இது!! முக்கிய குற்றவாளி ஒருவர் இன்னும் பிடிக்க படவே இல்லை!! கடுமையான தண்டனை இருந்தால், வெளி நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்குவர் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்க கூடும்.. நீதி மன்றங்களில் மக்களுக்கு நீதி கிடைக்கா விடில் நம் நாட்டில் வேறு எதை தான் சாதாரண மனிதர்கள் நம்புவது!!

கிரிக்கட் கார்னர்

ஜிம்பாப்வேயில் நடந்த ஒரு நாள் போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் இரண்டாவதாக பாட்டிங் செய்த அணி தான் வென்றது. கவனித்தீர்களா? அதனால இந்தியா தோத்ததுக்கு காரணம் டாஸ் தான் என்று நிச்சயம் சொல்ல வாய்ப்பு இருக்கு :))

IPL-ல் கலக்கிய சிலர் அங்கு சென்று வழிந்தனர். IPL மேட்சில் பஞ்சாப் உடன் ரெண்டு பந்தில் ஒரு ரன் அடிக்க வேண்டிய நிலை; நம்ம அஷ்வின் தான் ஆடினார். முதல் பந்து கட்டை போட்டார். கடைசி பந்து அவுட் ஜெயிக்க வேண்டிய ஒரு மேட்ச் சென்னை மோசமாய் தோற்றது.... ஜிம்பாப்வே சென்ற அஷ்வின் அங்கு ஒரு மேட்சில் 38 ரன் எடுத்தார். இப்போது அவரை ஆசியா கப்புக்கு "ஆள் ரவுண்டர் " என்ற கேட்டகரியில் செலக்ட் செய்ததாக ஸ்ரீ காந்த் சொல்றார்!! நாராயணா! இந்த கொசு தொல்லை தாங்க முடியலை நாராயணா!!

Monday, June 7, 2010

அறியாதவை

* உன் வாழ்வில் நீ விடும்
கடைசி மூச்சு
எதுவென அறிவாயா நீ?

மரணத்துக்கு பின்
உன் உயிர் என்னவாகுமென
தெரியுமா உனக்கு?

நினைவு சங்கிலி பிசகி
தூக்க உலகில் நுழையும் கணத்தை
உணர முடியுமா?

நம்பிக்கை அவநம்பிக்கை
அலை வரிசைகளில்
மாறி மாறி பயணித்ததுண்டா?





கடவுள்களின் பெயர்களும்
முகங்களும்
குழம்பி தவித்ததுண்டா?

அறிந்தோ அறியாமலோ
யார் யாரை காயப்படுத்தினோமென
கணக்கு பார்த்து
மனசுக்குள் கண்ணீர் வடித்ததுண்டா ?

* இவற்றிற்கெல்லாம்
உன் பதில் இல்லையெனில்
நோயில் வீழ்ந்து பார்.

அறியாதவைகளை அறிய வைக்கும் மந்திரம்
உன் உடலை உருக்க வல்ல
நோய்க்கு மட்டுமே தெரியும்!
Related Posts Plugin for WordPress, Blogger...