Monday, September 20, 2010

எப்படி இருக்கிறது இன்றைய குமுதம்?

குமுதம் அட்டையில் உள்ள தலைப்புகளை பாருங்கள்: 

"சூர்யா கார்த்தி ஜெயித்த கதை";      
"சூடான நயன்; கூல் செய்த பிரபு தேவா" 
" காமெடி காவலன் விஜய் ", 
"கலைஞர் Vs ஜெ"...

நான்கில் மூன்று தலைப்புகள் சினிமா பற்றி.. புத்தகமும் இப்படி தான் உள்ளது; 

முழுதும் வாசித்தால் 60 சதவீதம் சினிமா செய்திகள், படங்கள்; 20 சதவீதம் அரசியல் மீதம் 20 சதவீதம் மட்டுமே தலையங்கம், சுய முன்னேற்றம், சிறு கதை.  

புத்தகத்திற்கு பேசாமல் குமுதம் சினிமா என பெயர் வைத்து விடலாம். புரட்ட புரட்ட சினிமா செய்திகளாக வரும் போது அயர்ச்சியாக உள்ளது. 

நிறைய விளம்பரங்கள் இருப்பது போல் தோன்றினாலும் எண்ணி பார்த்ததில் மொத்தம் பதிமூன்று பக்கங்களுக்கு தான் விளம்பரங்கள் உள்ளன.

சமீபத்திய கைது விவகாரத்திற்கு பின் தி.மு.க ஆதரவு பத்திரிக்கை போல் ஆகி விட்டது. இதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. 

ஒரு பக்க கதைகளில் தமிழ் சினிமாவில் ஒரு பாட்டில் பணக்காரனாவது போல் அரை பக்கத்தில் பெரிய மன மாறுதல்கள் நிகழ்கின்றன. கவிதைகள் ராணி, தின தந்தி அளவு தரத்தில் தான் உள்ளது. 

தங்கம் விலை ஏறுவது பற்றி ஒரு செய்தி, அலர்ஜி மாத்திரைகள் பற்றி ஒரு ரிப்போர்ட், கோயில் பற்றிய தொடர் ஒன்று, சுய முன்னேற்ற புத்தகம் அறிமுகம் இவை புத்தகத்தில் உள்ள நல்ல விஷயங்கள். குறிப்பாய் வாரா வாரம் இவர்கள் அறிமுக படுத்தும் சுய முன்னேற்ற புத்தகங்கள், அவற்றின் கருத்துகளை சுருக்கமாக சொல்வது - இதை நான் ரசித்து வாசிக்கிறேன். 

லேனா. தமிழ்வாணன் கணவன் மனைவி பற்றி எழுதும் தொடர் செம போர். ஒன்றுமே இல்லாமல் ஒவ்வொரு வாரமும் எழுதுகிறார். நானும் ஏதாவது உருப்படியாய் சொல்லுவார் என ஒவ்வொரு வாரமும் படித்து ஏமாந்து கொண்டிருக்கிறேன்..

வாசகர் கடிதங்களில் குமுதத்தை திட்டி எழுதினாலும் வெளியிடுவார்கள். அந்த பாணி இன்றும் தொடர்கிறது. அரசு பதில்கள்?? ம்ம் என்ன சொல்வது? மறைந்த குமுதம் ஆசிரியர் எஸ். ஏ.பி இருந்த போது எழுதிய பல பதில்கள் இன்றும் நினைவில் உள்ளது. இன்றைக்கு ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. 

இவ்வளவு எழுதுகிறேனே குமுதம் வாங்குவதை நான் நிறுத்துவேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை!  (ம்ம்.இதுக்காக எத்தனை பேர் திட்ட 
போறாங்களோ? )

மிக பெரும் வாசகர் பலம் கொண்ட பெரும் பத்திரிக்கை சினிமா தகவல்களை குறைத்து,  நல்ல விஷயங்களை நிறைய எழுத வேண்டும் என்பதே ஒரு சாதாரண வாசகனாக எனது எதிர் பார்ப்பு.

Monday, September 13, 2010

ஒரு கவிதையும், ஒரு அறிவிப்பும்..

சுயம்

எவரோ அமர்ந்து போன
இருக்கைகளில் தான்
அமர்கிறேன் ..

முன்னவர் விட்டு போன
வேலைகளை தான்
செய்து முடிக்கிறேன்

யாரோ உள்ளிழுத்து விட்ட
மூச்சைத்தான்
சுவாசிக்கிறேன்

முகம் தெரியாதவர் நடந்து போன
சுவடுகளில் தான்
பாதம் பதிக்கிறேன்

முன்னர் எவரோ பேசிய
வார்த்தைகளையே
பேசி திரிகிறேன்

யாரோ வாழ்ந்து விட்டு
மிச்சம் வைத்த வாழ்வைத்தான்
வாழ்ந்து கழிக்கிறேன்

இதுவரை இல்லாத
இனியும் இருக்க முடியா
சுயம் வாய்த்திடுமோ - என்றைக்கேனும் ?

***
அறிவிப்பு 


நண்பர்களே, அடுத்த ஒரு வாரம் சீனா ஐயாவின் அழைப்பை ஏற்று வலைச்சரத்தில் எழுதுகிறேன். அடுத்த ஏழு நாட்களில் எனக்கு தெரிந்த, நான் வாசிக்கும் பதிவர்கள் சிலரை அங்கு அறிமுகபடுத்துவேன். வாசித்து ஊக்குவியுங்கள். நன்றி 
Related Posts Plugin for WordPress, Blogger...