Saturday, January 29, 2011

பள்ளியில் பேசியது என்ன?

புழுதிவாக்கம் அரசு பள்ளியில் நான் பேசியதை பதிவு செய்யுமாறு கேட்ட ஏராளமான நண்பர்கள் வேண்டுகோளுக்கிணங்க (என்னது ஒரே ஒரு ஆள் தான் கேட்டாங்களா? சரி சரி கண்டுக்காதீங்க) இந்த பதிவு. 

விழாவில் பேசியதன் சுருக்கம் இதோ:
**

ஆசிரிய பெருமக்களே, நல்லோர் வங்கி உறுப்பினர்களே, நண்பர்களே, தோழிகளே, அனைவருக்கும் வணக்கம்.

உங்களை பார்க்கும் போது என் சிறு வயது நினைவுக்கு வருகிறது. சட்டையில் மட்டுமல்ல, டிராயரிலும் சில பட்டன்கள் இல்லாமல், சில நாட்கள் செருப்புடனும், சில நாட்கள் செருப்பில்லாமலும் பள்ளி சென்ற நாட்கள் நியாபகம் வருகிறது. தமிழக மேப்பில் தேடினால் ஈசியா கிடைக்காத நீடாமங்கலம் என்ற சிறு ஊரில் அரசு பள்ளியில் தான் நானும் படித்தேன்.

இன்று எனது பேச்சு மூன்று பிரிவாக இருக்கும். முதல் பிரிவில் ஒரு சின்ன ஊரில் பிறந்து இன்று இந்த நிலைக்கு எப்படி வர முடிந்தது என்கிற என் கதை. ரெண்டாவதாக தேர்வுக்கு தயார் செய்வது மட்டும் எழுதுவது குறித்த சில டெக்னிக்குகள். மூன்றாவது தேர்வில் மட்டுமல்ல வாழ்விலும் வெல்ல நான் பயன்படுத்திய சில விஷயங்கள்.

முதலில் என்னோட பள்ளி படிப்பில் மூன்று தவறுகள் நேர்ந்தது. அவற்றை சுருக்கமாக சொல்ல வேண்டும்.

ஒன்று மட்டும் ரெண்டாம் வகுப்பு நன்றாக தான் போனது.ரெண்டாம் வகுப்பு முடித்த பின் முதல் தவறு நடந்தது. சிறு வயதில் பள்ளி டிராமாவில் நன்றாக நடித்து கொஞ்சம் பாபுலர் ஆகிட்டேன். இதனால் தங்கள் பள்ளியில் சேர்க்க ரெண்டு பள்ளி கூடங்கள் போட்டி போட்டன. ரெண்டு பள்ளியிலிருந்தும் ஆசிரியர்கள் வந்து என் அப்பாவிடம் பேசினார்கள். இதில் ஒரு பள்ளி தங்கள் பள்ளியில் சேர்ந்தால், ரெண்டாம் வகுப்பிலிருந்து நேரே நான்காம் வகுப்பு போயிடலாம் என்றார்கள். இதற்கு பெயர் டபிள் பிரமோஷன். இப்போதெல்லாம் இது கிடையாது. மூன்றாம் வகுப்பு ஆசிரியர் ராஜாங்கம் சார் கையெழுத்து சரியில்லாட்டி நல்லா அடிப்பார். அதனால் மூன்றாம் வகுப்பு படிக்காட்டி நல்லது தான்னு அப்போ நினைச்சேன். நாலாம் வகுப்பு சேர்ந்த பின் தான் அது பெரும் தவறுன்னு தெரிஞ்சது.

வகுப்பிலேயே நான் தான் சின்ன மாணவன். பசங்க எல்லாரையும் விட சின்னவனா இருப்பது பிரச்சனை இல்லை. பெண்கள் எல்லாரையும் விட சின்னவன். இதை வச்சு எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. அத்தோட என்னை விட பெரிய பசங்களுடன் படிப்பில் போட்டி போட கஷ்டமா இருந்தது. அடுத்த சில வருஷம் சிரமப்பட்டு ஏழாவது வரும்போது நன்கு படிக்க ஆரம்பிச்சிட்டேன். மறுபடி வீட்டில் இன்னொரு முடிவெடுத்தாங்க.

ஒன்பதாவது படிக்க பக்கத்துக்கு ஊரான மன்னார்குடியில் ஆங்கில மீடியத்தில் சேர்த்தாங்க. எட்டாவது வரை முழுக்க தமிழ் மீடியத்தில் படிச்சுட்டு திடீரென ஆங்கிலத்தில் படிக்க கஷ்டமா இருந்தது. இருந்தாலும் எனக்கு ஆங்கிலத்தில் ரொம்ப இண்டரஸ்ட் வந்தது அப்போ தான். இன்று வரை அது உதவுது.

பத்தாவதில் ஐந்நூறுக்கு 367 மார்க் எடுத்தேன். திடீரென எல்லா பாடமும் ஆங்கிலத்தில் படிச்சதால், இது ஓரளவு நல்ல மார்க் தான். என் குடும்பத்தில் பெரிய அண்ணன் தான் எனக்கு அப்பா மாதிரி. நிறய வயசு வித்தியாசத்தால் என்னை அடிப்பது, பிற் காலத்தில் படிக்க வச்சது எல்லாம் அவர் தான். டெண்த்தில் மார்க் குறைந்ததுக்காக அடுத்த ரெண்டு மூணு நாள், பார்க்கும் இடத்திலெல்லாம் என்னை அடித்து கொண்டிருந்தார். 

ஆங்கில மீடியத்தால் தான் மார்க் குறைந்ததென மறு படி தஞ்சாவூரில் கொண்டு போய் தமிழ் மீடியத்தில் சேர்த்தார்கள். இது பெரிய தவறான முடிவு. எனக்கு படிப்பிலேயே ஆர்வத்தை குறைச்சுடுச்சு. பிளஸ் டூவில் 897 மார்க் வாங்கினேன். இஞ்சினீரிங் கிடைக்கலை. சட்ட கல்லூரியில் சேர சொன்னார்கள். எனக்கு கோர்ட் போகும் ஆர்வம் இல்லை. அதனால் வேண்டாம் என்றேன். கம்பனிகளில் லீகல் அட்வைசர் ஆக வேலை பார்க்கலாம் என்பதால், சேர்ந்து படித்தேன். 

முதல் வருடம் முடிந்து மார்க் வந்தது. ஒரு பாடத்தில் நான் எண்பது மார்க் வாங்கியிருந்தேன். சட்ட கல்லூரியில் எண்பது மார்க் என்பது பெரிய விஷயம். எல்லோரும் இதை பற்றி பேசினார்கள். நான் நடந்து போகும் போது என் காது படவே ரெண்டு பேர் " யாரோ பஸ்ட் இயரில் எண்பது மார்க் வாங்கியிருக்கானாம்" என்று பேசி கொண்டார்கள். இதை கேட்க ரொம்ப சந்தோஷமா இருந்தது. புகழ் என்பது ஒரு போதை மாதிரி. அதை டேஸ்ட் பண்ணிட்டா அது மீண்டும் மீண்டும் வேணும்னு தோணும். அதுக்காகவே நல்லா படித்தேன். சட்ட கல்லூரியில் ரெண்டாம் வருடம் தொடங்கி ஐந்தாம் வருடம் முடியும் வரை முதல் மாணவனாக வந்தேன். இப்படி முதல் மாணவனாக வர காரணம், முதல் மாணவனாக வரணும் என தீவிரமாக நினைத்தது தான். அந்த நினைப்பு தீவிரமான பின் அதற்கான உழைப்பும் மற்ற விஷயங்களும் தானாகவே வந்து விட்டது.

வீட்டில் படி படி என்ற போது நான் படிக்கலை. எனக்காய் ஆர்வம் வந்த போது தான் நன்கு படித்தேன். அடுத்து ACS என்ற கோர்ஸ் சேர்ந்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று தெரிய வந்ததால் சேர்ந்தேன். இந்த கோர்ஸில் ஒரு பாடத்தில் பெயில் ஆனாலும் அனைத்து பாடத்தையும் மறுபடி எழுதணும். முதல் முறை தேர்வு எழுதிய போது நான் டியுஷன் சென்ற ஆசிரியரே கூட " பி. காம் படித்தவர்களே இந்த கோர்ஸ் பாஸ் செய்வதில்லை. நீயெல்லாம் அக்கவுண்ட்ஸ் படிக்காதவன் எப்படி பாஸ் செய்வாய்" என்றதால் அரை மனதோடு தான் எழுதினேன். அப்போது பெயில் ஆகிட்டேன். ஆனால் மார்க் பார்த்ததும், முழுசா மனசு வச்சு படித்திருந்தால்  நிச்சயம் பாஸ் செய்திருக்கலாம் என்று தோன்றியது. அதன் பின் எப்போதும் ACS -ல் நான் பெயில் ஆகலை. சென்னை வந்து வேலைக்கு சேர்ந்தேன். திருமணம் ஆகி ஏழெட்டு வருஷத்திற்கு பின் ICWA என்ற கோர்ஸ் சேர்ந்தேன். ஒரு புறம் என் குழந்தை படிக்க மறு புறம் நான் படிக்க, எப்படியோ அந்த கோர்ஸ் ரெண்டு வருடத்தில் பெயில் ஆகாமல் முடித்தேன். கடந்த 15 வருஷமா கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து இன்று ஒரு நல்ல நிறுவனத்தில் AGM Legal & Company Secretary ஆக உள்ளேன். 

இன்றைக்கு நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் சில செயல்களை உங்களுடன் பகிர்கிறேன்.

துணை என்ற அமைப்பின் மூலம் ஏழை குழந்தைகள் 75 பேரை கடந்த எட்டு வருடமாக படிக்க வைக்கின்றோம். இவர்கள் பெரும்பாலும் தமிழகத்தில் சென்னைக்கு வெளியே வசிப்பவர்கள். இதில் என் பங்கு Referrer என்கிற அளவில் தான். அதாவது உதவி தேவை படும் ஏழை குழந்தைகளை கண்டு பிடித்து சொல்வது. அவர்களுக்கு பீஸ் பள்ளியில் நேரே சென்று கட்டுவது. அவர்கள் எப்படி படிக்கிறார்கள் என ஒவ்வொரு முறையும் ப்ரோக்ரேஸ் கார்ட் வாங்கி பார்ப்பது. தேவையான கைடன்ஸ் தருவது 

அடுத்து பழைய கம்பனியில் உடன் வேலை பார்த்த நண்பர்கள் பலர் சேர்ந்து மாதம் ஆளுக்கு நூறு ரூபாய் போட்டு பணம் சேர்க்கிறோம். இது கிட்ட தட்ட மாதம் ஐயாயிரம் ரூபாயாவது சேர்கிறது. இதனை அந்தந்த மாதம் வருகிற வேண்டுகோள்களை பொறுத்து பள்ளி பீசுக்கோ, முடியாதவர்களின் ஆஸ்பத்திரி செலவுகளுக்கோ செய்கிறோம்.

அடுத்து சட்ட கல்லூரியில் உடன் படித்த நண்பர்கள், எங்களுடன் படித்து மறைந்த நண்பன் நினைவாக வருடம் ஒரு முறை அடையாரில் உள்ள ப்ளைண்ட் (Blind) ஸ்கூலில் வருடா வருடம் ஒரு பேச்சு போட்டியும், பாட்டு போட்டியும் நடத்துகிறோம்.

இது தான் என் முன் கதை சுருக்கம்.

ஒரு சிறு கிராமத்தில் பிறந்து என்னால் இந்த அளவு வர முடியும் என்றால், சென்னை என்ற பெரிய நகரில் உள்ள உங்களால் நிச்சயம் இன்னும் பெரிய அளவில் வர முடியும் என்ற நம்பிக்கை தரவே இதை உங்களுடன் பகிர்ந்தேன்.

நிச்சயம் படிப்பு என் வாழ்க்கையில் ஒரு மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. படித்ததால் தான் இன்று இந்த நிலையில் உள்ளேன். ஒவ்வொரு முறை கூலி வேலை செய்பவர்களையும், டீ கடையில் இருப்பவர்களையும் பார்க்கும் போது சிறு வயதில் நன்றாக படிக்காததால் வாழ்க்கை முழுக்க கஷ்ட படுகிறார்களே என வருந்துவேன். 

படிக்காமல் முன்னுக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். பல பெரிய நிறுவன முதலாளிகள் படிக்காதவர்கள் தான். சாதாரண வேலையில் சேர்ந்து தொழிலை கற்று கொண்டு பின் சொந்தமாய் தொழில் தொடங்கும் அளவு உயர்ந்தவர்களும் உள்ளனர். ஆனால் இது மிக சிறிய அளவு தான். நீங்கள் சொந்தமாய் தொழில் தொடங்க நினைத்தாலும் நன்கு படித்து விட்டு செய்யுங்கள்.

அடுத்து தேர்வு குறித்த விஷயங்கள் (பதிவர்களுக்கு அவை தேவை இல்லை என்பதால் அவை இங்கே பகிர வில்லை. பதிவர்களின் குழந்தைகளுக்கு ஓரளவு உபயோகம் ஆகும் என்றால் பின்னர் தனியே பகிர்கிறேன்).

தேர்வில் வெல்வது மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெல்வதும் முக்கியம். இது தான் கடைசியாய் நான் பேச விரும்புவது.

எந்த செயலும் இரு முறை நடக்கிறது. முதலில் மனதில். பின் நிஜத்தில். இங்கு வந்து பேச வேண்டும் என்றால் கூட முதலில் இங்கு வந்து பேச மனதில் தயார் செய்கிறேன். பின் வந்து பேசுகிறேன். அதே போல எந்த செயலும் முதலில் மனதில் நடக்க வேண்டும். பின் நிஜத்தில் நடக்கும். 

நம் பெற்றோர் யார் என நாம் தேர்ந்தெடுக்க முடியாது. உங்கள் பக்கத்து வீட்டில் யார் இருக்க வேண்டுமென நீங்கள் முடிவு செய்ய முடியாது. இதை தவிர்த்து உங்கள் வாழ்க்கையில் நடப்பதை நிச்சயம் நீங்கள் முடிவு செய்யலாம். நீங்கள் என்ன மார்க் வாங்குகிறீர்கள், என்ன வித வேலைக்கு போக போகிறீர்கள் இவை உங்கள் கையில் தான் உள்ளது.

இந்த உலகில் பண உதவி கிடைப்பது தான் கஷ்டம். அதை தவிர மற்ற உதவி செய்ய எப்போதும் மனிதர்கள் தயாராக உள்ளனர். உதவி தேவை என நீங்கள்தான் கேட்க வேண்டும்.

அடுத்து சொல்ல விரும்புவது : பாராட்டு: உங்களை சுற்றி உள்ளவர்களை நிறைய பாராட்டுங்கள், ஒவ்வொரு மனித மனமும் பாராட்டுக்கு ஏங்குகிறது. எனக்கு ரொம்ப பிடித்த, தேசிய விருது பெற்ற பசங்க படத்தில் கூட இது தான் சொல்ல பட்டது. சிறு வயது முதல் நான் பெற்ற பாராட்டுகளை இன்னும் நினைவில் வைத்துள்ளேன். மனம் சோர்ந்து போகிற போது அவற்றை நினைத்து பார்த்து கொள்வேன்.

உங்களுக்கு என்ன தேவை என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதனை முடிவு செய்து விட்டால், அதில் உறுதியாக இருந்தால், நிச்சயம் அடையலாம். அதை அடைய முயலும் போது நிறைய தடங்கல் வரும். பிரச்சனை இருக்கும்.ஆனாலும் நீங்கள் பொறுமையுடன் முயன்றால் நினைத்தது நடக்கும். நீங்கள் அடைய விரும்புவதில் உறுதியாக நின்றால், முதலில் உங்கள் இலட்சியத்தை கிண்டல் செய்தவர்கள் கூட பின்னால் உங்களுக்கு உதவுவார்கள். எனக்கும் அப்படி தான் நடந்தது.

நீங்கள் நினைத்தது அனைத்தும் அடைய என் வாழ்த்துக்கள். நிச்சயம் நான் அடிக்கடி உங்களை வந்து சந்திப்பேன். உங்களை சந்திக்கும்  பொழுதுகளில்  ஒரு நண்பனாக நீங்கள் என்னிடம் எது குறித்தும் பேசலாம். நன்றி 

Thursday, January 27, 2011

அரசு பள்ளியில் ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி

சமீபத்தில் புழுதிவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓர் விழாவில் "தேர்வுக்கு தயார் செய்வதும், தேர்வு எழுதுவதும்" என்ற தலைப்பில் பேச என்னை அழைத்திருந்தார்கள்.

உரத்த சிந்தனை என்ற அமைப்பு சென்னையிலும் பிற ஊர்களிலும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. நல்லோர் வங்கி இதன் மற்றொரு பிரிவு. நல்லோர் வங்கி பெயருக்கேற்ற படி தொடர்ந்து பல நல்ல காரியங்களில் ஈடு படுகிறது.தீபாவளி நேரங்களில் முதியோர் இல்லம் சென்று இனிப்பு, புத்தாடை வழங்கி அவர்களுடன் நேரம் செலவிட்டு வருவது, ரத்த தானம்..இப்படி. உரத்த சிந்தனை மாதா மாதம் மூன்றாவது ஞாயிறன்று சென்னை LLA பில்டிங்கில் ஒரு விழா நடத்துகிறது. இதில் கவியரங்கம், பட்டி மன்றம் என உரத்த சிந்தனை உறுப்பினர்களே பங்கு பெறும் நிகழ்ச்சி இருக்கும். பத்து வருடத்திற்கு மேல் நான் இரு அமைப்புகளிலும் உறுப்பினர். கல்யாணத்திற்கு முன் ஆர்வமாக நிறைய நிகழ்சிகளுக்கு சென்றவன் அதன் பின், மாதா மாதம் செல்வதை வேலை பளுவால் பெரிதும் குறைத்து விட்டேன்.

இருந்தும் புழுதிவாக்கம் நிகழ்ச்சி மாணவர்களுடன் சந்திப்பு என்பதால் நல்லோர் வங்கி நடத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் சம்மதித்தேன். இந்த பள்ளியில் பார்த்த சில வித்யாசமான விஷயங்கள்/மனிதர்கள் உங்களுடன் பகிர்கிறேன்.

தலைமை ஆசிரியர் 

இந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஓய்வு பெறும் இவர் சொன்னது: " இந்த பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவன், மாணவியும் மிக மிக கஷ்டப்படும் குடும்பத்திலிருந்து தான் வருகிறார்கள். பலருக்கு தந்தை இல்லை அல்லது மனைவியை விட்டு ஓடியிருப்பார். குடிகாரனாகவோ, வேலை இன்றியோ இருப்பார். நீங்கள் யாரை வேண்டுமானாலும் கூப்பிட்டு கேளுங்கள்" என்று சொல்லி விட்டு, மைதானத்தில் சென்று கொண்டிருந்த யாரோ ஒரு சிலரை அழைத்து கேட்க, ஒவ்வொருவரும் மேலே சொன்ன ஏதோ ஒரு வகையில் தான் இருந்தார்கள். கேட்கும் போதே மனதை தைத்தது.

"இவர்களில் பலரும் பள்ளிக்கு வருவதும், படிப்பதும் ரொம்ப பெருசுங்க . குடும்பத்தில் அவ்வளவு பிரச்சனை. எப்படியாவது எல்லாரையும் பாஸ் மார்க் வாங்க வச்சிடனும்னு நாங்க எல்லாரும் எவ்வளவோ கஷ்டபடுறோம். சில பேர் சரியா ஒத்துழைக்க மாட்டேன்கிறான். போன வருடம் பிளஸ் டூவில் 91 சதவீதம் பாஸ் செய்தோம். அடுத்த வருடம் பிளஸ் ஒன்னில் பெயில் ஆன பசங்களை பரவாயில்லைன்னு, ஒரு வருஷம் வீணாக்காம பிளஸ் டூ அனுப்பிட்டோம். அவங்க எல்லாம் பிளஸ் டூவிலும் பெயில் ஆனதால் பாஸ் சதவீதம் குறைஞ்சு 72% ஆகிடுச்சு. இந்த வருஷம் சரியா படிக்கதவங்களை பிளஸ் ஒன்னில் நிறுத்திட வேண்டியது தான்" என்றார்.

முத்து குமார சாமி 

அரசு துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர் தனது கிராஜுவிட்டி பணம் பத்து லட்சத்தை ஏழை குழந்தைகள் படிப்பிற்கு மட்டுமே குடுத்து விட்டார். அதன் மூலம் வருடா வருடம் மாணவர்களுக்கு யூனிபார்ம், நோட்டுகள் போன்றவை வாங்க உபயோகிக்கின்றனர். 


வெள்ளைநிற மீசை/  தலைமுடியுடன் இருப்பவர் முத்து குமார சாமி
அவருக்கு வலப்புறம் இருப்பவர் தலைமை ஆசிரியர் 

நல்லோர் வங்கி மாதம் இரு முறை மாணவர்களுக்கு பயன் படும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்துகிறது. அவற்றிற்கு அவசியம் வந்து விடுகிறார் இவர். " கிட்ட தட்ட பத்து பள்ளிகளுக்கு நான் அடிக்கடி சென்று வந்தாலும் இந்த பள்ளியில் தான் நல்ல ரிசப்ஷன் உள்ளது. நல்லோர் வங்கி போன்ற அமைப்பு செய்யும் உதவிகளை முழுமையாய் உபயோகிப்பது இவர்கள் தான்" என்றார் அவர்.

ஓய்வு பெற்ற பணத்தை இத்தகைய விஷயத்துக்கு செலவழிக்க எவ்வளவு நல்ல மனம் வேண்டும்! அவர் இப்போது எப்படி தன் வாழ்க்கையை கழிக்கிறார், தன் மகன்களுடன் உள்ளாரா என்றெல்லாம் கேள்விகள் ஓடினாலும் அதையெல்லாம் அவரிடம் கேட்க கூச்சமாக இருந்தது. கேட்கவில்லை.

பிச்சம்மாள் 

நல்லோர் வங்கியின் மூலம் இந்த நிகழ்ச்சிகளை நடத்தும் திருமதி.பிச்சம்மாள் 67 வயது இளைஞி. பசங்க எல்லாரும் "பாட்டிம்மா" என பாசத்தை பொழிகிறார்கள். ஒவ்வொரு வாரமும் கதை சொல்கிறார். பாட்டு பாடுகிறார். டான்ஸ் கூட ஆடுவாராம்!!

அரசாங்கத்தின் சமூக சேவை பிரிவில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அதனால் ஓய்வு பெற்ற பின்னும் இத்தகைய வேலைகளில் ஈடுபடுத்திக்கொள்ள ஆர்வம் உள்ளதாக கூறுகிறார். மூன்று பையன்கள், ரெண்டு பெண்கள் அனைவரும் திருமணம் ஆகி தனியாக உள்ளதாகவும் கணவருடன் தனியே இருக்கிறார். நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்து என கையால் காபி சாப்பிட்டுட்டு போங்க என மிக அன்பாக சொன்னாலும், மறுபடி ஆபிஸ் செல்ல வேண்டியிருந்ததால் என்னால் செல்ல முடிய வில்லை. நிச்சயம் ஒரு முறை சென்று அவர் கையால் காபி சாப்பிடுவேன்! எங்க மடிப்பாக்கம் தானே!!

இவருடன் இந்த நிகழ்ச்சிகள் நடத்த உதவும் மற்றொருவர் திரு. ராம நாதன். இவரும் ஓய்வு பெற்றவர் தான். பிச்சம்மாள், ராம நாதன், முத்து குமார சாமி ஆகிய மூன்று பெறும் ஓய்வு காலத்தை மிக பயனுள்ள முறையில் கழிக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்!

அடுத்து இந்த நிகழ்ச்சியில் சந்தித்த நான்கு மாணவர்கள் பற்றி..

லாவண்யா 

இந்த மாணவியின் தந்தை சமீபத்தில் விபத்தில் மறைந்து விட்டார். தாயார் மட்டுமே. குடும்பம் நடத்துவதே கேள்வி குறியானதால் , நன்றாக படிக்கும் இவள் படிப்பை பாதியில் விடும் யோசனையில் இருந்திருக்கிறாள். இது உரத்த சிந்தனை மூலம் உறுப்பினர்களுக்கு தெரிய வர, என். ஆர். கே என்ற ஆடிட்டர் இவளுக்கு மாதா மாதம் ஐநூறு ரூபாய் தருவதாகவும் படிப்பை நிறுத்த வேண்டாம் என்றும் கூறி உள்ளார். இவளுக்கு தற்போது பேன்க் அக்கவுன்ட் துவங்க பட்டு மாதா மாதம் பணம் சேர்க்க படுகிறது. விபத்தின் மூலம் தந்தை இறந்ததால் அதன் மூலம் பணம் ஏதும் கிடைக்குமா என்றும் உரத்த சிந்தனை மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முயன்று வருகிறார்கள்.

அருள் அரசு

பேச்சு போட்டியில் பேச வந்த அருள் அரசு பேசும் முன்னும், பேசும் போதும், பேசிய பின்னும் அனைத்து மாணவர்களின் கை தட்டல்களை வாங்கினான். அற்புதமான பேச்சு !! என்ன ஒரு தெளிவு! எவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்துள்ளான்! பயமே இல்லை.இவன்  பேசும் போது நான் ஆச்சரியத்தில் உறைந்து போய் அமர்ந்திருந்தேன். அருகிலிருந்த தலைமை ஆசிரியர், என் மனம் படித்த மாதிரி " எந்த பள்ளியில் எந்த போட்டிக்கு போனாலும் முதல் பரிசு வாங்கிடுவான் சார்" என்றார். " நல்லா படிப்பானா சார்" என்றேன். " இந்த வருடம் பிளஸ் ஒன். அடுத்த வருஷம் ஸ்டேட் ரேன்க் வருவான்னு எதிர் பாக்கிறோம்"

அருள் பேசி முடித்து விட்டு சென்றதும் நான் உடனே கை குடுத்து பாராட்ட போக, நான் வருவது தெரியாமல் அவன் போய் கொண்டே இருந்தான். அவன் பின்னால் நான் சென்று கொண்டே இருக்க, அவன் பாட்டுக்கு நடக்க, பள்ளியே " ஓஒ ..அருள் " என்று அலறியது. அருள் முதுகில் தட்டி கூப்பிட்டு கட்டி பிடித்து நான் பாராட்ட மாணவர்களுக்கு அவர்களை பாராட்டியது போல் மகிழ்ச்சி ஆரவாரம்..

ஜெய லட்சுமி 

ஜெயலட்சுமியின்  தாயார் பல வீடுகளில் வீட்டு வேலை செய்து  ஜெயலட்சுமியை   படிக்க வைக்கிறார்.  ஜெய லட்சுமி தொடர்ந்து அனைத்து வகுப்பிலும் நல்ல மதிப்பெண் பெறும்  மாணவியாக இருக்கிறாள். அன்று நடந்த பேச்சு போட்டியிலும் அழகாய் பேசி பரிசு வாங்கினாள். ஆக்ரோஷமாய் பேசி முடித்து விட்டு கையோடு போய் பள்ளி பைப்பில் தண்ணீர் குடித்து விட்டு தரையில் வந்து அமர்ந்த இவள் கனவு " ஐ. ஏ. எஸ்" ஆவது ! பதினொன்றாவது படிக்கும் இவள் பார்க்க எட்டாம் வகுப்பு மாணவி போல் உள்ளாள் ( Malnutrition).

ராஜேஸ்வரி

சில நேரம் நிஜம் கதைகளை விட சுவாரஸ்யமானது.

ராஜேஸ்வரி குடும்பத்துக்கு வீடு இல்லை. வாடகை குடுக்கும் வசதியும் இல்லை. பள்ளியிலேயே வாட்ச் மேன் போல தங்கி கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. நான் பேசி கொண்டிருக்கும் போது கூட, தூரத்தில் வெட்ட வெளியில் இவர்களின் அடுப்பு எரிந்து கொண்டிருந்ததை கவனித்தேன். இந்த நிலையிலும் ராஜேஸ்வரி பத்தாம் வகுப்பில் 465 மதிப்பெண் வாங்கியிருக்கிறார். தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் ராஜேஸ்வரி தொடர்ந்து முதல் மதிப்பெண் பெறும் மாணவியாக இருக்கிறார்.

இந்த வருடம் முதல், பள்ளியில் அறிமுக படுத்தப்படும் "வருடாந்திர சிறந்த மாணாக்கன்" விருது இந்த வருடம் பள்ளியையே வீடாய் கொண்ட ராஜேஸ்வரிக்கு தான் கிடைக்க உள்ளது !

நான் பேசும் போது ஒரு சாதாரண கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து இந்த நிலைக்கு என்னால் வர முடியும் என்றால், சென்னையிலிருக்கும் உங்களால் இன்னும் நன்கு வர முடியும் என்று பேசினேன். (எனது பேச்சிற்கு பாய்ண்டுகள் நண்பர்கள் சிலரிடம் கேட்டேன். நல்ல சில கருத்துகள் தந்து உதவிய ராமலட்சுமி & தேவ குமாருக்கு நன்றி.)

மாணவனாக நான் செய்த தவறுகள், அவற்றில் கற்ற பாடங்கள் ஆகியவையும் பகிர்ந்தேன். பரீட்சைக்கு தயார் செய்வது மற்றும் எழுதுவது குறித்து சில குறிப்புகள் தரப்பட்டது. இறுதியில் பேசியதிலிருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் தந்து பேச்சை முடித்தேன்.

மொத்தத்தில் இது ஒரு நெகிழ்வான, நிறைவான விழாவாக இருந்தது.

இது சம்பந்தமான இன்னொரு பதிவு:  அரசு பள்ளியில் பேசியது என்ன 

Monday, January 24, 2011

வானவில்: தஞ்சை: பொன். வாசுதேவன்: காதல் கவிதை

மனதை பாதித்த சம்பவம்


உத்தர பிரதேசத்தில் பதினேழு வயது மைனர் பெண் புருஷோத்தம் திவேதி என்ற அரசியல் வாதியால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இது பற்றி அவர் கம்பிளயின்ட் தர போக, அவர் திருடியதாக போலிஸ் கேஸ் போட்டு கைது செய்துள்ளது. இந்த சிறு பெண் தைரியமாக கற்பழிப்பிற்காக அரசியல் வாதி மேல் வழக்கு தொடர்ந்துள்ளார். பத்திரிக்கை மற்றும் பிற மீடியா இதனை எழுதியதும், திவேதி தனக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பதால், ஆண்மை அற்றவன் ஆகி போனதாகவும், தான் கற்பழிக்க வாய்ப்பே இல்லை என்றும் சொல்கிறார். இப்படி பெருந்தலைகள் கற்பழிப்பு வழக்கில் சிக்கினால் " ஆண்மை போயிந்தே" என சொல்வது பல முறை நடக்கிறது. ருசிக்கா கொலை வழக்கில் கூட போலிஸ் அதிகாரி ரதோர் இதே கதை தான் சொன்னார். இதே போல மேலும் பல உதாரணங்கள் உள்ளன. அரசு/ டாக்டர்கள் நினைத்தால் இவற்றை பொய் என எளிதில் நிரூபிக்க முடியும். இந்தியா சுதந்திரம் ஆகி அறுபது வருடம் ஆகியும் இன்னும் நீதி மன்றங்களில் ஏழைக்கு நீதி கிடைப்பது இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

தஞ்சை

எத்தனை முறை சென்றாலும் அலுக்காத ஊர் தஞ்சை. சமீபத்தில் சென்ற போது பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை முழுதும் மெருகேறுவதை கவனித்தேன். (ஆயிரமாவது ஆண்டு விழா சில மாதங்கள் முன் நடந்த போதே சென்றேன், அப்போது அந்த விழா பற்றி பதிவெழுத எண்ணி, வேலை பளுவால் தவறி விட்டேன்..)

இந்த ஆண்டு முழுதுமே தஞ்சை விழா கோலம் பூண்டுள்ளது. இம்முறை பத்து நாட்கள் நடன திருவிழா திலகர் திடலில் நடந்து வந்தது. பல குடியிருப்பு சாலைகள் சிமென்ட் தரைகளாக மாறுகின்றன. இதற்காக ஏகப்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சைக்கு நல்லது நடந்தால் நமக்கு நடந்தது போல் மகிழ்ச்சி.

பார்த்த படம் : இனிது இனிது

இனிது இனிது படம் இப்போது தான் பார்த்தேன். நல்ல வேளையாக இதன் ஒரிஜினல் தெலுங்கு படத்தை பார்க்க வில்லை. பார்த்தால் நம்மையும் அறியாமல் ஒரு பக்கம் அதனோடு ஒப்பிட்டு கொண்டே இருப்போம்.

படம் ரொம்பவே ரசிக்க முடிந்தது. கல்லூரி வாழ்க்கையை செமையாய் அனுபவித்த (என்னை போன்ற) எவருக்கும் இந்த படம் மிக பிடிக்கும். கல்லூரி முதல் நாளில் தொடங்கி கடைசி - farewell நாளில் படம் முடிகிறது. பல வித காரக்டர்கள்.. ஆனால் அனைத்திற்கும் ஒரு தனித்தன்மை/ சுவாரஸ்யம் உள்ளது. அனைவரும் பார்க்காத முகங்கள் என்பதால் நன்றாக ஒன்ற முடிகிறது. எனக்கு பிடித்தது மதுவாக வரும் ஹீரோயின் தான். Chubby ஆக பார்க்க அழகாக உள்ளார்.

ஒரு நல்ல பீல் குட் ஸ்டோரி .. தெலுங்கில் பார்க்காதவர்கள் அவசியம் பாருங்கள்.


ரசித்த கவிதை

நீ முதல் முறை
என்னை தலை சாய்த்து
கடைக்கண்ணால் பார்த்த போது
என் உள்ளத்தில் முள் பாய்ந்தது
அதை இன்னும் எடுக்க வில்லை.
முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்.
எங்கே இன்னொரு முறை என்னைப்பார் ! - மீரா

(மீராவின் கனவுகள் + கற்பனைகள் =காகிதம் என்ற இந்த கவிதை தொகுப்பு மிக பிரபலம். ஒரு காலத்தில் கல்லூரியில் படிப்போர் காதலை சொல்ல இந்த புத்தகத்தை வாங்கி பரிசளித்து விடுவார்கள்!! முழுதுமே காதல் நிரம்பி வழியும் கவிதைகள் )

சென்னை ஸ்பெஷல்: திண்டுக்கல் தலப்பா கட்டி பிரியாணி

தலப்பா கட்டு பிரியாணி என்ற பெயரில் பலரும் கடை வைத்துள்ளனர். இதில் ஒவ்வொன்றும் வெவ்வேறு குருப். நிறைய டூப்ளிகேட்டுகள் உண்டு.

"திண்டுக்கல் தலப்பா கட்டி பிரியாணி" என்ற பெயரில் ஒரு நிறுவனம் வேளச்சேரி நூறடி ரோடில் (விஜய நகர் பஸ் ஸ்டாண்டிலிருந்து சற்று தொலைவில்) தரமான பிரியாணி வழங்கி வருகிறார்கள். அட்டகாசமான பிரியாணிக்கு உத்தரவாதம் தலப்பா கட்டி பிரியாணி.குடும்பத்துடன் சென்று கூட சாப்பிடுமளவு நீட்டாக உள்ளது வளாகம். சுவையும் அருமை.

ரசித்த SMS:

Every job is a self portrayal of the person who does it. Autograph your work with excellence.

அய்யாசாமி ரசித்த டுவிட்டர்

நடு ராத்திரி மெசேஜ் அனுப்பி பிராட்பேன்ட் கனக்சன் வேணுமான்னு கேக்குறீங்களே.. யாருடா நீங்கல்லாம் ?

வீடுதிரும்பலை தொடரும் இருநூறு நண்பர்கள்

வீடுதிரும்பலை தொடர்வோர் எண்ணிக்கை இருநூறை எட்டியுள்ளது. சச்சின் போல் ரொம்ப நாளாக 190-களில் நொண்டி அடித்து விட்டு இப்போ இரு நூறாகி விட்டது. இன்னும் மூணு பேர் வந்தா இருநூறு இன்னும் ரெண்டு பேர் வந்தா இருநூறு என மனம் குழந்தை போல் கவனித்து கொண்டிருக்க, பதிவு வெளி வரும் போதெல்லாம் "You have a new follower at Indli " என்று ஓரிரு மெயிலாவது வரும்.. "யப்பா.. இங்கே வாங்கப்பா" என மனதுக்குள் கூவுவது அவர்களுக்கு எங்கே கேட்க போகிறது? :)))

தொடரும் இருநூறு நண்பர்களுக்கும், பின்னூட்டம் மூலம் ஆதரிக்கும் பிற நண்பர்களுக்கும் நன்றி !!

இருநூறாவதாக தொடரும் நண்பர் சக பதிவர், சக வழக்கறிஞர், சக எழுத்தாளர், சக கவிஞர் பொன். வாசு தேவன் (கடைசி ரெண்டும் வாசு சொல்லலாம்; நீ??என்கிறது மனசாட்சி)

அதென்னவோ நூறு, நூற்றைம்பது, இருநூறு எல்லாமே நன்கு தெரிந்த நண்பர்கள், பதிவை பற்றி நேரிலும் பின்னூட்டத்திலும் பேசுபவர்களே! குறிப்பிட்ட எண் வரும் போது திடீர்னு காணாம போயிட்டு , மறுபடி வந்து " மீ தி 100 ; மீ தி 200 " அப்படின்னு சொல்றாங்களோ? டவுட்டு !

Saturday, January 22, 2011

ஆடுகளம்..மறக்க முடியாத பாத்திரங்கள்

இணையத்தில் ஒரு வாரம் கழித்து விமர்சனம் எழுதுவது இடைவேளைக்கு பின் சினிமாவுக்கு போவது போல. இருந்தும் ஒரு நல்ல படம் பார்த்ததை பதிவு செய்யும் எண்ணத்துடன் இந்த பதிவு...

ஆடுகளம்.. கதை போன்ற விஷயங்களுக்குள் நுழைய போவதில்லை. நிறைய வாசித்து உங்களுக்கு மனப்பாடமே ஆகியிருக்கும்..அற்புதமான கேரக்டர்கள் பற்றி மட்டும்..

பெரிதும் அசத்திய கேரகடர்.. தனுஷ் தான். இந்த கேரகடர் எவ்வளவு அற்புதமாய் தனுஷுக்கு பொருந்துகிறது!! ஒவ்வொரு காட்சியிலும் அந்த கேரக்டரை தனுஷுக்குவிளக்கி சொல்லிய    வெற்றி மாறன் தான் இதற்கு பெரிய காரணமாய் இருந்திருக்க வேண்டும்.

படத்தில் பெரிதும் சிரித்தது தனுஷ் " ஐ யாம் லவ் யூ " (I am Love you) என்று தப்சியிடம் சொல்லும் காட்சி. தப்சி வீட்டில் சாப்பிட்டு முடித்து விட்டு கை கழுவும் போது " பிரியாணி பண்ணிருக்கலாம்" என்றும் வேறு ஏதேதோ பேசியவாறும் இருக்கும் தனுஷ் திடீரென " ஐ யாம் லவ் யூ " என்பதுடன் அந்த காட்சி முடிந்து விடும். அடுத்த காட்சியில் அதற்கு தப்சி பெரிய குரலில் அழுகிற மாதிரி காட்டுவார்கள். தப்சி பாட்டுக்கு அழுது கொண்டிருக்க நானோ, " ஐ யாம் லவ் யூ " வில் வெளி வராமால் சிரித்து கொண்டே இருந்தேன்..

போலவே தனுஷும் அவர் நண்பரும் " கம் டு  ஹோம்" (Come to home) என்பதற்கு அர்த்தம் புரியாமல் அடிக்கும் லூட்டி..
 
தனுஷ் " யாத்தே யாத்தே" பாட்டிலும், " ஒத்த சொல்லால" பாட்டிலும் போடும் ஆட்டம்.. அடடா அட்டகாசம்.! இதற்கும் மறுபடி வெற்றி மாறனை தான் பாராட்ட வேண்டி உள்ளது. வழக்கமான தமிழ் சினிமாவில் டான்ஸ் என்றால் பத்து பேர் ஆடினாலும் அனைவரும் ஒரே மாதிரி steps ஆடுவார்கள். ஆனால் இந்த இரு பாட்டுக்கும் தனுஷ் ஆடுவது சினிமா டான்ஸ் அல்ல. நம் தெருக்களில் செல்லும் கல்யாண அல்லது மரண ஊர்வலத்தில் ஆடும் இளைஞன் எப்படி ஆடுவானோ அது போல் தான் இருந்தது அந்த நடனம். குறிப்பாய் " ஒத்த சொல்லால" பாட்டு முழுவதும் கைலியுடன் போடும் ஆட்டம்.. கைலி அணிந்த  காலத்திற்கு என்னை கொண்டு சென்றது.(இப்போல்லாம்  எங்கே  கைலி? எல்லாம் ஷார்ட்ஸ் ஆகி போனது)

அம்மா மிக வருத்தமாய் ஏதேதோ புலம்ப, " ஆத்து ஆத்துன்னு ஆத்தாதம்மா; ரீல் அந்துர போகுது"  என சொல்லும் தனுஷ்.. இன்றைக்கும் பெற்றோர் புலம்பும் போது கிண்டல் செய்யும் இளைஞர்களை தான் கண் முன் கொண்டு வருகிறார்.

தனுஷுக்கு அடுத்து என்னை பெரிதும் கவர்ந்த  & சிரிக்க வைத்த கேரக்டர் படத்தில் அரை நிமிடம் கூட வரவில்லை. அது வில்லன் ரத்னவேலு மனைவி பாத்திரம்.  வில்லன் ரத்னவேலு அம்மா உடம்பு முடியாமல் இறக்க போகும் நிலையில் உள்ளதாக படம் முழுக்க காட்டுவார்கள் (கடைசி வரை அவர் இறக்கலை.. ) ஒரு காட்சியில் உடம்பு முடியாத அந்த பாட்டியை வீட்டுக்கு வந்து டாக்டர் ஒருவர் பார்ப்பார். பார்த்து முடித்து விட்டு பேசி கொண்டிருக்கும் போது வில்லன் மனைவி அவரிடம் ஆர்வத்துடன் கேட்பார்.. " சொந்த காரங்களுக்கு சொல்லி  விட்டுறலாமா  டாக்டரூ??" இந்த படத்தில் அவர் வந்த ஒரே காட்சியும், பேசிய ஒரே வசனமும் அவ்வளவு தான்.. ஆனால் ரொம்ப நாளானுலும் மறக்க முடியாத கேரக்டர். மாமியார் இறக்க போகிறார் என முந்தானையை பிடித்தவாறே அழுகிற பாணியில் உள்ளவர் " சொந்த காரங்களுக்கு சொல்லி விட்டுறலாமா டாக்டரூ??" என ஆர்வத்துடன் கேட்பது அந்த கேரக்டரை பற்றி அழகாய் சொல்லி விடுகிறது.

அடுத்து சேவல் சண்டையின் உச்சத்தின் போது அழுகிற சிறுவன் முகம்.. எவ்வளவு தத்ரூபம்!! தனுஷ் சேவல் தோற்று விடுமோ என்கிற பதட்டம் அவன் அழுகை மூலம் பார்ப்பவர்களை எளிதாக அடைய வைத்திருந்தார் இயக்குனர்.


பேட்டை காரன் பாத்திரம்.. மிக அற்புதமான படைப்பு. உளவியல் ரீதியில் நம்மை யோசிக்க வைக்கும் படி பாத்திரம் இருந்தாலும் அவர் பேசும் ஒவ்வொரு முறையும் ராதா ரவியின் குரல் என்பது நமக்கு உறுத்துகிறது. ராதா ரவி போல் நன்கு பாபுலர் ஆகாதவரையாவது பேச வைத்திருக்கலாம். எனக்கு தெரிந்து இயக்குனர் சறுக்கிய இடங்களுள் இது ஒன்று. மேலும் செயபாலன் பார்ப்பதற்கு வெயில் படத்தில் பசுபதி மற்றும்  பரத்திற்கு தந்தையாக வந்தவர் போலவே இருந்தார். முன் பக்க முடி குறைவு, வெள்ளை மீசை, கிருதா, பருமன், சட்டை, வேஷ்டி என அனைத்துமே வெயில் படத்து தந்தை போலவே இருந்தது..

தப்சி பாத்திரம் மற்றொரு சறுக்கல். சிறு சிறு பாத்திரங்கள் கூட பார்த்து பார்த்து செய்த இயக்குனர் ஹீரோயினுக்கு ன் அப்படி ஒரு கேரிகேச்சர் போல் பாத்திரம் வைக்கணும் என புரியலை. அந்த கேரக்டரே  தேவையில்லை என்று  சொல்ல வில்லை. அந்த கேரக்டர் இல்லா விடில் படம் டாக்குமென்டரி போல் ஆவதற்கான ஆபத்துகள் அதிகம். அந்த பாத்திரத்தில் Depth & detailing இருந்திருக்கலாம்.

கிஷோர் குறுகிய காலத்தில் தமிழில் ஒரு அற்புதமான நடிகராய் உருவெடுத்து வருகிறார். தமிழ் சினிமாவில் மச்சம் வைத்தால் அடையாளம் தெரியாமல் போவது போல் காட்டுவார்கள். இந்த படத்தில் கிஷோர் வித்யாசமான தலை முடி வைத்ததால் நமக்கு கிஷோர் என்றே மனதில் பதிய வில்லை. கிஷோர் தாண்டி அந்த கேரக்டர் பதிகிறது. நிறைய shades உள்ள கேரக்டர். இதற்கு கிஷோர் மிக சிறந்த தேர்வு..

தனுஷின் நண்பனாக வருகிற ஊளை.. நடு பல்லில் உள்ள ஓட்டை தெரிகிற மாதிரி சிரிக்கிற அந்த வெள்ளந்தி சிரிப்பும் பாத்திரமும் கச்சிதம்.

அயூப் பாத்திரம் கூட சிறிது என்றாலும் மிக அழகான கேரக்டர். " ரெண்டு கிளாஸ் தண்ணி வாங்கி குடுத்துட்டு இப்படி கேக்குறீயே; அவர் சோறு எவ்ளோ நாள் சாப்பிட்டுருக்கோம்" என செண்டிமண்டலாய் பேசுபவர்... இறந்த பின்னும் , கதையில் ரொம்ப நேரம் அவரை பற்றி பேசவும் நினைக்கவும் (சேவல் சண்டை) வைக்கிறார்கள்.

இறுதியாய்: இந்த பாத்திரங்களை உருவாக்கிய இயக்குனர் வெற்றி மாறன். அசத்தி இருக்கிறார் மனிதர்.  பாடல்களை தனியே வைக்காமல் கதையுடன் நகர்த்தி செல்வது, பேட்டை காரன் பற்றி அனைத்தும்  வெளிப்படையாய் சொல்லாமல் பார்வையாளர்களை யோசித்து புரிந்து கொள்ள வைப்பது என பல விஷயங்களுக்காக பாராட்டலாம். இப்படி ஓர் வித்யாசமான கதை களம் தந்தமைக்கு தான் முக்கியமாய் பாராட்ட வேண்டும். இடைவேளைக்கு முன் உள்ள அந்த சேவல் சண்டை & அதை சுற்றி அமைக்கப்பட்ட காட்சிகள்  அட்டகாசம்.  இடைவேளைக்கு பின் சேவல் சண்டை இல்லையே என நம்மை ஏங்க வைத்தது இயக்குனரின் வெற்றி. புது இயக்குனர்களில் நிறைய நம்பிக்கை தரும்  விதத்தில்  உள்ளார். வாழ்த்துகள் வெற்றி மாறன். உங்ககிட்டேயிருந்து இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்.

Wednesday, January 19, 2011

வானவில்: நீயா நானா & த்ரீ இடியட்ஸ்

நீயா நானாவில் நான் 

இரண்டாவது முறையாக நீயா நானாவில் பங்கு பெரும் வாய்ப்பு. இம்முறை வீடு திரும்பல் பிளாகை வாசித்து விட்டு "எழுத்தாளர்"   என்ற ரீதியில் அவர்களாகவே கூப்பிட்டிருந்தார்கள். முதல் வரிசையில் (சிறு) எழுத்தாளர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். அதில் நமக்கும் ஓர் இடம்.. ஐந்து முறை பேச வாய்ப்பு வந்தது. அதில் நான்கு ஒளி பரப்பாக ஒன்று எடிட்டிங்கில் காணாமல் போனது. (நான்கு மணி நேரம் எடுத்த ஷூட் ஒன்னரை மணி நேரமாக சுருக்கப்பட்டு ஒளிபரப்பாக,  நாம் பேசியதில் ஒன்று எடிட் ஆவதில் ஆச்சரியமில்லை) . டிடி யில் வந்த கார சாரம் நிகழ்ச்சியின் போதும், இந்த முறையும்  போட்டோ எடுத்து நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றி.
நீயா நானாவில்

கார சாரத்தில் 

நீயா நானா நிகழ்ச்சி முழுவதும் கீழே உள்ள லிங்கில் உள்ளது. நேரம் இருக்கும் போது பாருங்கள். " கதை புத்தகம் வாசிப்பது தேவையா இல்லையா" என்ற பதிவர்களுக்கு சம்பந்தம் உள்ள தலைப்பு என்பதால் நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன். இந்த லிங்கை சுட்டி காட்டிய அமைதி அப்பாவிற்கு நன்றி. 

http://www.tamilvix.com/vijay-tv-neeya-naana-16-01-2011/

"முழுவதும் பார்க்க நேரமிருக்காது; நீ எங்கே ஐயா பேசினாய்" என்று கேட்கும் நண்பர்களுக்கு மட்டும் கீழே உள்ள விவரம்:

1&2. "neeya part 1" என்ற தலைப்பில் உள்ள முதல் வீடியோவில் நான்கு நிமிடத்திலிருந்து ஆறு நிமிடத்திற்குள் இரண்டு முறை வருகிறது.
3. "neeya part 1 0" என்ற தலைப்பிடப்பட்ட, முதலாவதற்கு அடுத்து உள்ள  வீடியோவில் முதல் நிமிடத்தில் மட்டும் வருகிறது. (கோபிநாத் "I appreciate this point" என்று தட்டி குடுத்து பாராட்டியது இங்கு தான்).
4.  ஐந்தாவதாக உள்ள வீடியோவில் (neeya part 4 0 ) மூன்றாவது & ஏழாவது நிமிடதிற்கருகே வருகிறது. (இதில் ரெண்டாவது மேட்டர் "அடுத்து வருவது" என ஹைலைட் செய்து பேச்சை காட்டினார்கள்)

பார்க்க முடிந்தால் தங்கள் மேலான கருத்துகளை பகிரவும். (நேரடியே லிங்க் தந்து இங்கேயே வீடியோவை ஓட விடும் வித்தை தெரிய வில்லை) 

பார்த்த படம்:  த்ரீ இடியட்ஸ்

த்ரீ இடியட்ஸ் ஹிந்தி படம் இப்போது தான்  (புத்தாண்டில் முதலாவதாய்) பார்த்தேன். எவ்வளவு  அற்புதமாய் உள்ளது! அமீர் கான் பற்றி பாராட்டி கொண்டே போகலாம். அவர் பற்றி ஒரு தனி பதிவே எழுத வேண்டும் என நினைக்கிறேன். (கொஞ்சம் கொஞ்சமாய் அமீர் கான் ரசிகன் ஆகி விட்டேன் என்றே சொல்ல வேண்டும்!)  தமிழில் இந்த படம் எப்படி வருமோ தெரிய வில்லை. ஹிந்தியில் சப் டைட்டில்களுடன் (ஹிந்தி நஹி மாலும்) பார்த்தாலும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தவே செய்தது. நீங்கள் அவசியம் பார்க்க பரிந்துரை செய்கிறேன். 

ரசித்த கவிதை 

உன்னருகே நானிருந்து 
சொன்ன கதையெல்லாம் 
சுவையற்று போனதென்ன? 
என்னை எதிர் நோக்கி 
வீதியின் கோடி வரை 
விழிக்கிடையில் சிறைப்படுத்தி 
நிலைப்படியே நீயாக 
நின்றிருப்பாய் 
இன்று? இல்லை! 
காரணமோ 
ஆணொன்றும், பெண்ணென்றும் 
குழந்தைகள்.. காரியங்கள் 
அடுப்பில் புளிக்குழம்பு - கி. கஸ்தூரி ரங்கன்

சென்னை ஸ்பெஷல் மூன்று செய்திகள் 

சென்னை கார்பரேஷன் பெரிதாகிறது. ஏற்கனவே 174 ஸ்கொயர் கிலோ மீட்டர் அளவு இருந்த சென்னை 430 ஸ்கொயர் கிலோ மீட்டர்அளவிற்கு பெரிதாகிறது. 9 புது முனிசிபாளிடிகளும், 8 டவுன் பஞ்சாயத்துகளும், 25 பஞ்சாயத்துகளும் சென்னை கார்பரேஷனுடன் இணைக்கபடுகின்றன. இதற்கான மசோதா பாஸ் ஆகி விட்டது. 

சென்னையில் புதிதாக வேளச்சேரி என்று புது சட்ட மன்ற தொகுதி இந்த தேர்தல் முதல் வருகிறது. 

புத்தக கண்காட்சியில் சுய முன்னேற்ற புத்தகங்கள் மிக நன்றாக விற்பனை ஆனதாக ஆங்கில தினத்தந்தி (Times of India) சொல்கிறது. அப்படின்னா " வாங்க முன்னேறி பாக்கலாம்" கூட வெளியிடலாம்"னு உசுப்பி விடுறார் ஐயா சாமி :))

தமிழ் மணம் : வீடு திரும்பல் நூறாவது இடம் 

சற்று பழைய செய்தி தான். ரொம்ப நாளாக வானவில் எழுதாததால் இப்போது பகிர்கிறேன். தமிழ் மணத்தில் முதல் நூறு பதிவுகள் என்ற அறிவிப்பு கேள்வி பட்டு, வீட்டுக்கு வந்ததும் நம்மோட பதிவும் இருக்குமா என நப்பாசை உடன் பார்த்தேன். கடைசி கட்டம் வரும் போது நம்பிக்கை போய் விட்டது. கடைசியில் நூறாவது பதிவாய் வீடு திரும்பல் பார்த்து செம மகிழ்ச்சி ஆகி விட்டது.  98 ஆவது இடம் என்று சொன்னால், உடனே "அடுத்த ரெண்டு பேர் யார்?" என கேட்பார்கள். இப்போ அந்த பிரச்சனை இல்லை பாருங்க..:))

தமிழ் மணம் சிறந்த பதிவுகளில் எனது மூன்று பதிவுமே கடைசி பத்துக்குள் வந்தாலும் இறுதி கட்ட முதல் மூன்றுக்குள் எதுவும் தேர்வாகலை.. ம்ம்ம் வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்...   

வேல்ட் காப் டீம் 

வேல்ட் காப் டீம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் நீங்கள்? எனக்கென்னவோ சில சொதப்பல்கள் இருப்பதாக படுகிறது. 

இறுதியில் ஆடும் 11 பேரில் ஆறு பேட்ஸ்மன்,   ஒரு கீப்பர், நாலு பவுலர்கள் இருப்பார்கள்.   நாலு பவுலர்கள் தான் ஒவ்வொரு மேட்சிலும் ஆட போகிறார்கள். (யுவராஜ், சேவாக், பதான், ரைனா இவர்களில் மூவராவது ஆடுவார்கள். அவர்கள் சேர்ந்து ஐந்தாவது பவுலர் வேலையை செய்து விடுவார்கள்).  தேவையான நாலு பவுலர்கலுக்கு எதற்கு ஏழு பேர் எடுக்கணும்?? இன்னொரு பக்கமோ  ஆறு பேட்ஸ்மன்களுக்கு மொத்தம் ஏழு பேர் மட்டுமே ஸ்குவாடில் உள்ளனர். ஒரு சிலர் அவுட் ஆப் பார்ம் என்றாலும் அவரையே வச்சு தான் ஆடி ஆகணும்.

மேலே சொன்ன சேவாக், யுவராஜ், பதான் போன்ற ஸ்பின் பவுலர்கள் உள்ள ஸ்குவாடில் எதற்கு மூன்று ஸ்பின்னர் என புரியலை. பியுஷ் சாவ்லா சமீபத்தில் பெருசா ஏதும் சாதிக்கலை. இவரும் முனாப் படேலும் பெரும்பாலான மேட்ச்களில் விளையாடும் பதினொரு பேரில் இருக்க போவதில்லை..

ஸ்ரீ காந்த் , தோனி ரெண்டு பேருக்குமே நிறைய லக் உள்ளது. அதை தான் நம்பணும்.. ம்ம்ம் 

ரசிக்கும் விஷயம்:  பயணத்தில் முகத்தில் முத்தமிடும் காற்று 

பைக், பஸ், கார், ரயில் என எதில் சென்றாலும் பயணத்தில் முகத்தில் படும் காற்று சொல்லவொண்ணா மகிழ்வை தருகிறது. குறிப்பாய் பஸ் அல்லது ரயிலில் செல்லும் போது இறங்கும் இடத்திற்கு ஒரு நிறுத்தம் முன் எழுந்து படியருகே வந்து நின்று அந்த சில நிமிடம் தென்றலை முழுமையாய் உள் வாங்குவது என் பழக்கம். பல வருடங்கள் ஆனாலும் இன்னும் சின்ன பையன் போல இதை செய்து கொண்டு தான் இருக்கிறேன்... 

Sunday, January 16, 2011

டிவி: பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒரு பார்வை

நான் பங்கு பெற்ற நீயா நானா இன்று (16/01/2011) இரவு ஒன்பது மணிக்கு விஜய் டிவியில் ஒளி பரப்பாகிறது. முடிந்தால் பாருங்கள் 
***
டிவி சேனல்களுக்கு பொங்கல் தான் மிக கஷ்டமான (challenging ) நேரம் என நினைக்கிறேன். பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என மூன்று நாளைக்கு, ஒவ்வொரு நாளும் குறைந்தது 12 மணி நேரம் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யணுமே! இதில் ஜெயா டிவி போகி அன்றே சிறப்பு நிகழ்ச்சிகள் ஆரம்பிச்சு நாலு நாள் கொண்டாடுவாங்க!!  இந்த ஆண்டு நிகழ்ச்சிகள் எப்படி இருந்தது என ஒரு பார்வை. 

சன் டிவி 

* பொங்கல் வைக்கும் நேரத்தில் "சுப்ரமணியபுரம்" படத்தை மூன்றாவது முறையா போட்டு கொண்டிருந்தார்கள். நல்ல படம் தான்! ஆனால் வன்முறை, ரத்தம் என நல்ல நேரத்தில் பார்க்க யாரும் விரும்புவார்களா என்று கொஞ்சம் யோசித்திருக்கலாம் !

* கடந்த சில வருடங்களாகவே பண்டிகை எது என்றாலும் வடிவேலுவின் பேட்டி ஒன்று சன்னில் தவறாமல் வந்து விடும். இந்த பொங்கலும்  விதி விலக்கல்ல. அவரும் வழக்கம் போல பேசி,  பாடுவார். மாத்தி யோசிங்கப்பூ! 

* பொங்கல் மாலை "அயன்" போட்டார்கள். கிட்ட தட்ட ரெண்டு வருஷமாச்சு படம் வந்து! இப்போ தான் " புதிய சூப்பர் ஹிட் திரைப்படம் " என சன் டிவியில் வெளியிடுகிறார்கள். சரி பார்த்து நாளாச்சே என உட்கார்ந்தால், விளம்பரம், செய்திகள் என கொன்னுட்டாங்க. ஒரு உதாரணம்: ஆறு மணிக்கு போட்ட படத்தில் ஹீரோயின் தமன்னா வந்த போது மணி 7 .45 !!  (படத்தில் தமன்னா படம் ஆரம்பிச்சு இருபது  நிமிடத்தில் வந்துடுவார். இங்கு அதற்கு இவ்வளவு நேரமானது!!) 

மாட்டு பொங்கல் அன்று காலை " அருணாசலம்" படம் !  எத்தனாவது முறையாய் போடுகிறார்கள் என்று கணக்கே இல்லை. ஆயினும் நிறைய மக்கள் பார்த்தது பக்கத்துக்கு வீடுகளில் இருந்து வந்த சத்தத்தில் தெரிந்தது. 

"பட்டிக்காடா பட்டணமா" என்று சில பல ஆண்டுகளாகவே ஒரு இசை நிகழ்ச்சி பொங்கலன்று நடத்தி வருகிறார்கள். முன்பெல்லாம் கங்கை அமரன் நடத்துவார். இப்போது அவரை காணும். செட் முதற் கொண்டு மற்ற விஷயங்கள் (ரெண்டு அணி, நின்று கொண்டே பாடவும், ஆடவும்  செய்வார்கள்) மாறவே இல்லை. 

* மாட்டு பொங்கலன்று போட்ட புது படம் "சுறா" !!  வேணாம் விடுங்க.. விஜய் ரசிகர்கள் இப்போ ரெண்டு நாளாதான் ("காவலன்")  கொஞ்சம் சந்தோஷமா இருக்காங்க விட்டுடுவோம் . என்ன இருந்தாலும் விஜய்க்கு பொங்கல்( ஒரு சில படங்கள் தவிர்த்து) ராசியாய் தான் உள்ளது போலும்!!

விஜய் டிவி

* ஒரு அதிசயம் கவனித்தீர்களா! இந்த வருடம் பொங்கலில் மிக புது படமாய் போட்டது  விஜய் டிவி தான்.  வெளி வந்து சில மாதங்கள் ஆன " சிக்கு புக்கு" மற்றும் அய்யனார் !! (என்ன ஒன்று இரண்டுமே தோல்வி படங்கள் ) பார்க்காத படங்கள் என்பதால் இவற்றை சற்று பார்த்தோம். சிக்கு புக்கு விளம்பர இடைவேளையின் போது வேறெங்காவது சென்று விட்டு பின் நெடு நேரம் சென்று திரும்ப வந்தாலும் கதை எங்கும் நகரலை. ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு பக்கம் ஆர்யா- ஸ்ரேயா பஸ்- பைக்- ஜீப் என மாறி மாறி செல்ல, மறுபக்கம் பழைய ஆர்யா காதல் கதை ஒரே மாதிரி தான் போனது. முடிவில் ரெண்டு கதைக்கும் சேர்த்து வைத்த ஒரு சிறு லிங்க் மிஸ் பண்ணாமல்  பார்த்தோம் . (மறு படி போட்டால் பார்க்க முடியாது சாமி!!)

* பொங்கல் சிறப்பு நீயா நானாவில் " சினிமாவில் அழகு அன்றும் இன்றும்" என ஜல்லி அடித்தனர். இயக்குனர் சரண், அமுதன் போன்றோரும் நடிகர்கள் பானுசந்தர், சிபி, குயிலி, ரேகா போன்றோரும் வந்திருந்தனர். பானுசந்தர் ரொம்ப (மத்தவங்களை பேச விடாம) பேசினார். இதில் நிறைய கருத்துகள் பெண்களுக்கு எதிரானவை! கோபி நாத் அவரை எக்கச்சக்கமா  பேச விட்டுட்டு அப்புறமா, "இந்த கருத்துகளை ஏத்துக்க முடியாது" என்றார். நிகழ்ச்சி முடியும் முன் பாதியில் அமுதன்,   பானுசந்தர் போன்றோர் காணாமல் போய் விட்டதால் சேர்கள் காலியாய் இருக்கும் நிலை நீயா நானாவில் வந்தது ! நம்மையும் கொட்டாவி விட வைத்தது!


ஜெயா டிவி 

* ஹரியுடன் நான் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி என போட்டுட்டு பாடிய பாடல்கள் ரொம்ப சுமார் ரகம். இதில் சில பாடல்களுக்கு பின்னாலே ஆடியவர்கள் சிலம்பு சுற்றி காட்டினர். அது மட்டும் பொங்கல் அன்று நமது பாரம்பரிய கலைகளை நினைவு படுத்தும் வண்ணம் இருந்தது.  

* சிறப்பு படம் சூர்யா, ஜோதிகா நடித்த "மாயாவி" ..ஏனுங்க ஜோ நடிக்கிறதை நிறுத்தியே பல வருஷம் ஆகுதே.. இது எப்ப வந்த படம்ங்க?? 

* "கமல் ஹாஸ்யம்" என்ற தலைப்பில் பொங்கல் அன்று காலை முழுதும் கமல் & கிரேசி மோகன் ஜெயா டிவியில் பேசி கொண்டிருந்தனர். சோ, மௌலி போன்றோரை கூட்டி உட்கார வைத்து சில கேள்விகள், ஜோக்குகள் என ஓட்டினர்.  கமல் ஒவ்வொருவரிடமும் " பிளட் லைன் அப்படின்னு சொல்லுவாங்க. அது மாதிரி இங்க் லைன்னா அது எனக்கு உங்களை மாதிரி ஆட்கள் கிட்டேயிருந்து தான் வந்தது " என அலுக்காமல் சொல்லி கொண்டிருந்தார். (அவர் தான் எல்லாரிடமும் அதே வரி சொன்னார் என்றால் சேனலாவது எடிட் செஞ்சிருக்க கூடாதா??)

கலைஞர் டிவி 

* இந்த பொங்கலில் பல டிவி-க்கள் போட்ட படங்களில் உருப்படியான படம் கலைஞரில் வந்த மதராச பட்டினம் தான். இது வரை பார்க்காதவர்கள் நிச்சயம் பார்த்து பழைய சென்னையை ரசித்திருப்பார்கள்! 

மேலும் கோரி பாளையம் என்ற ரத்தம் தோய்ந்த படமும் ஆதவன் என்ற (நயன் தாராவை பார்த்து) நாம்  தெறித்து ஓடும் படமும் கலைஞரில் போட்டார்கள். இந்த படங்கள் வந்த போது அந்த சேனல் இருந்த பக்கமே போகலை.. 

* பொங்கல் அன்று காலையிலேயே திரு. க. அன்பழகன் தலைமையில் "கலைஞரின் பெருமைக்கு காரணம் "அதுவா இதுவா எதுவா" என மூன்று தலைப்புகளில் சுப. வீர பாண்டியன், கி. வீரமணி போன்ற "நடு நிலையாளர்கள்" ஒன்பது பேர் பேசினார்கள். நல்ல வேளை கடைசியில் தீர்ப்பு சொல்லும் நேரம் தான் பாத்தேன். முதல் வரிசையில் கலைஞர் மிக மகிழ்ச்சியோடு!! (சினிமா காரர்கள் பாராட்டு நிகழ்ச்சி பார்த்து போர் அடிச்சிடுச்சி போல.. அதான் பட்டி மன்றம் !) பேராசிரியர் " பேசிய ஒன்பது பேரும் நவ ரத்தினங்கள்.. அவர்கள் சொன்ன அத்தனையும் கலைஞரின் பெருமைக்கு காரணம்" என்ற அரிய தீர்ப்பு தந்து முடித்து வைத்தார். 


மொத்தத்தில் ..நீங்கள் வெளி நாடு & வெளியூர் என இருந்து இந்த நிகழ்ச்சிகளை பார்க்கா விடில், வருந்த வேண்டிய அவசியமே இல்லை. அப்படி "பார்க்கலையே" என வருந்தும் அளவு இந்த நிகழ்ச்சிகள் இல்லை. அது தான் உண்மை. 

எங்கள் ஊர் நீடாமங்கலத்தில் அருகிலுள்ள "மூன்றாம் தலைப்பு" என்ற மூன்று ஆறுகள் கூடும் இடத்திற்கு மாட்டு வண்டிகளில் கூட்டமாக சென்று பொங்கல் கொண்டாடிய நாட்கள் மனதின் ஓரத்தில்...வலிக்கிறது. 

Wednesday, January 12, 2011

ஹைதராபாத் பயண கட்டுரை: புகைப்படங்கள்

விரைவில் துவங்க உள்ளது ஹைதராபாத் பயண கட்டுரை. அதற்கான   சிறு டிரைலர் இதோ:


பிர்லாமந்திர் கோயில் முன்பு.. (1st படம் ...கோயில் முன்னே.சென்டிமன்ட்..??)



இது என்ன இடம்?  சஸ்பென்ஸ்!!  
(அய்யாசாமி மனைவி முன் இருக்கும் போஸில் இங்கே ஒரு சிலை!!)


கோல்கொண்டா கோட்டை ..


ரூம் போட்டு யோசிக்கும் "எலுத்தாளர்"
(சென்ற பதிவில் கிளியின் பின்னே இருந்தவர் இவர்தான்!)
**********
பூக்களுக்கு நடுவே ஒரு பூ (அடங்குறானா பாருங்க!!)


ரண்டக்க ரண்டக்க... ஸ்பெசல் ஆந்திரா "லாரிலு..."

                                தல மட்டும் தான் நடப்பாரா நாங்களும் நடப்போமில்ல... 


நாகார்ஜுனா சாகர் அணை (உலகின் மிக பெரிய Masonry Dam)


நாகார்ஜுனா சாகர் ஏரியில் நாங்கள் சென்ற லாஞ்சர் முன்பு 


ஏம்பா தமிழ் சினிமா ஹீரோயினை வில்லன் துரத்துற இடம் தானே இது? 


பில்டிங் நல்லாருக்கா? அத்தனையும் கார்ட்போர்டில் செஞ்சது(பிலிம் சிட்டி)



என்ன நடக்குது இங்கே? வெயிட் அண்ட் வாட்ச் ..

விரிவான பயண கட்டுரை இன்னும் நிறைய்ய்ய படங்களுடன், விரைவில்.. 

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் !!

Monday, January 10, 2011

"தீக்கடல்" - நர்சிம்மின் புத்தக விமர்சனம்

"தீக்கடல்" -  நர்சிம்மின் கவிதை தொகுப்பு உயிர்மை வெளியீடாக வந்துள்ளது.அழகான அட்டைபடம், அருமையான லே அவுட், "கவிஞர்" பற்றிய அறிமுகம், கவிஞர். ராஜ சுந்தர் ராஜன் முன்னுரை என சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லை. 

பொதுவாய் கவிஞர்கள் காதலில் தான் எழுத துவங்குவர். நர்சிம்மின் முதல் கவிதை தொகுப்பில் காதல் கவிதைகள் மிக குறைவாய் இருப்பது ஆச்சரியமாய் உள்ளது. 33 வயதில் முதல் தொகுப்பு வருவது தான் காரணமோ? (வயது எப்படி தெரியுமா?  புத்தகத்தில்  தான் போட்டிருக்காங்களே!!)
நர்சிம்மின் கவிதைகளை ஏற்கனவே வாசித்த போதே என்னை கவர்ந்தது அவர் எதையும் காட்சி படுத்தும் விதம். சில நேரங்களில் காட்சியை ஒரு ஓவியம் போல கண் முன்னே கொண்டு வருவார்.

மயானத்தில் பிணங்களை எரிப்பவன், அதனை எரித்தவாரே தன் கல்யாண தேதி முடிவு செய்யும் கவிதை (அகர முதல) வித்யாசமான களம்..நன்றாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. பிணங்களை எரிக்க உதவும் குச்சி மாட்டின் பிரசவத்துக்கு உபயோகம் ஆவதாக முடித்திருப்பது மனதை என்னவோ செய்கிறது. 

ரொம்ப அழகான மற்றொரு கவிதை பிறர் தர. 

உதிர்ந்திருந்த மலரொன்றை
எடுத்து மண் தட்டி செல்லும் தருணத்தில் 
என்னை தழுவி சூழ்ந்தது 
தீதும் நன்றும் 

இந்த கவிதை அனைவருக்கும் பொருந்தும் என்றாலும் நர்சிம் இதை எழுதிய மன நிலையும் சூழலும் பிளாக் வாசிக்கும்  நண்பர்களுக்கு  நினைவில்  வந்து போகும். 

கவிதை எழுதுவோர் அனைவரையும் அவரவர் மனைவி "என்னை பற்றி ஒரு கவிதை எழுத மாட்டேன் என்கிறீர்களே"  என்று கூறி இருப்பார்கள்.. அத்தகைய ஓர் சூழலில் ஆரம்பிக்கிறது "அவளுக்காகவேயான "  கவிதை. மனைவி அல்லது காதலி பற்றி எழுதப்பட்டது  என எண்ணி வாசிக்கும் போது " எவளென்றே தெரியாத இவள் எழுதி செல்லும் வார்த்தைகளின் வசீகரம்" என்ற வார்த்தைகள் சற்று குழப்புகிறது. (எனக்கு இன்னும் பயிற்சி தேவையோ?) 

அந்தரங்கம் கவிதை,  பூட்டப்பட்ட வீட்டை குறித்தது. ஒட்டடை, துருப்பிடித்த கைப்பிடி என நர்சிம்மின் பார்வையும் கற்பனையும் கலந்து வெளி வருகிறது. 

"கூடல் ஊடல்களின் பொருட்டல்ல 
அது ஒரு பொருட்டல்ல "

"காயும் காயம்" 

"நிழலில் எது நிழல்" 

"சொல்லின் என்ன இல்லை சொல்" 

"சகித்து கொள் சகி"

என ஒரே மாதிரியான வார்த்தைகளை வைத்து விளையாடுவது சற்று அதிகமாகவே தொடர்கிறது. (வாலியின் பாதிப்பு??) இதனை கொஞ்சம் குறைத்து கொள்ளலாமோ என்று தோன்றியது.  

பறவைகள், முதல் கவிதை தொடங்கி ஆங்காங்கு வந்து கொண்டே உள்ளது ரசிக்கும் படியே உள்ளது.

"தலையை ஆட்டி சிறகுலர்த்தும் பறவை" 

"அவ்வீட்டு 
டிஷ் ஆண்டெனா தவிர 
வேறெங்கும் அடைவதில்லை 
அவை " 

"பறவையின் இறகில் அழகை 
பார்க்குமென் கண்களில் விரிவது
அதன் சுதந்திரம் " 

"மின் விசிறியின் முனையில் 
வெட்டுப்பட்ட குருவியின் தலை "

காலை நேரம் நன்றாக இழுத்து போர்த்தி கொண்டு தூங்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். குருவிகள் &  பறவைகளை மற்ற நேரங்களில் ரசிக்க முடிந்தாலும் இந்த நேரத்தில் அவை கத்தினால் நமக்கு சிறு எரிச்சல் வரும். ஆனால் நர்சிம் அப்போதும் அதனை ரசிக்கிறார் போலும் 

"நாளை அதிகாலை 
எனக்கான 
பறவையின் குரல் 
என்னை திறக்கும்" 

இனி அதிகாலை பறவைகள் எழுப்பினால் "எனக்காக கேட்கும் குரல்" என ஒரு வேளை நான் சமாதான படுத்தி கொள்ளலாம். 

என் ரசனை/ புரிதல் பற்றி நீங்கள் எள்ளினாலும் சொல்ல தான் வேண்டும்:  சில கவிதைகள் புரிய வில்லை.  (எல்லாம் புரிந்து விட்டால் கவிதை இல்லை என்பார்களே அதனால் இருக்குமோ?)

எல்லா கவிதைக்கும் தலைப்பு இருப்பது ஆச்சரிய படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் அவசியம் தலைப்பு வைத்தாக வேண்டுமா என்ன? போலவே கவிதைகளின் தலைப்புகள் & பக்க எண்ணும் Index ஆக தந்தது...

பேருந்து பிரேக் டவுன் ஆகும் போது பல்வேறு மனிதர்களும் ஏதேதோ பேச, வண்டியின் சக்கரத்தில் சிக்கி இறந்து போன வண்ணத்து பூச்சியின்  இறகை தொட்டு பார்க்கும் மனம் நர்சிம்முக்கு வாய்த்திருக்கிறது. இந்த மனம் என்றும் தொடரட்டும். முன்னுரையில் கவிஞர் ராஜ சுந்தர் ராஜன் சொன்னது போல முதல் தொகுப்பு வந்த பின், வரக்கூடிய சோம்பல் இவரை வந்து ஆட்கொள்ளாமல்  இருக்கட்டும். 

கவிதா மனமும், வார்த்தைகளை வடிவமைக்கும் வித்தையும், நுணுக்கமான பார்வையும் வந்து விட்டது. இன்னும் நிறைய பாடு பொருள்களை பற்றி இவர் எழுத வேண்டும். நிறைய பரிட்சார்த்த முயற்சிகளை கவிதைகளில் செய்து பார்க்கலாம். பிளாக் அதற்கு நிச்சயம் உதவும்.       

முதல் கவிதை தொகுப்பிற்கு வாழ்த்துகள் நர்சிம்!!  உங்களிடமிருந்து  இன்னும் நிறைய வித்யாசமான படைப்புகளை எதிர் பார்க்கிறோம்!!
**
புத்தக விமர்சனத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி:

படத்தில் கிளிக்கு பின்னே ஒளிந்திருக்கும் பதிவர் யார்? கண்டு பிடியுங்கள் !! சரியான விடை: அடுத்த பதிவில்.

Wednesday, January 5, 2011

கேபிள் புத்தக வெளியீடு: என்ன பேசினார்கள்??

கேபிள் சங்கர் புத்தக வெளியீட்டு விழா நேற்று டிஸ்கவரி புக் பேலஸில் மிக சிறப்பாக நடைபெற்றது. பதிவர்கள், நண்பர்கள் அறை முழுதும் நிறைந்திருந்தனர். சிறிய அறை என்பதால் பல நண்பர்கள் விழா முடியும் வரை நின்று கொண்டே பார்த்தது நெகிழ்ச்சி. குளீருட்டப்பட்ட அறை.. மின் விசிறிகளும் சுழன்ற வண்ணம் இருக்க பேசியவர்கள் பேச்சில் இயல்பான நட்பும் அழகும். 

சுரேகா கவிதை நயத்துடனும், நகைச்சுவையாகவும் மிக அருமையாய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். (சுரேகா உங்க பேச்சு மட்டுமல்ல, சட்டையும் சூப்பர்)

பதிவர் கே. ஆர் பி செந்தில் வெளியிடும் முதல் புத்தகம் இது. எங்கள் அடுத்த வெளியீடு கே. ஆர் பி செந்திலின் " பணம்" என சினிமா பாணியில் கடைசி பக்கத்தில் சொல்கிறார்கள். வாழ்த்துகள் செந்தில்!

நான் சற்று தாமதமாய் சென்றதால் மோகன் பாலு என்ற நண்பர் பேச்சை கேட்க முடியவில்லை 

அப்துல்லா பேசும் போது "கேபிளை மூன்று வருடங்களுக்கு முன் சந்தித்தேன். அவர் எழுதிய ஒரு கதையில் சுஜாதா சாயல் இருப்பதாக சட்டையை பிடித்தேன். அதற்கு அவர் நேர்மையான விளக்கம் தந்தார். அன்று முதல் இன்று வரை நாங்கள் நெருங்கிய நண்பர்களாக உள்ளோம். என்னை யாரும் பார்த்தால் கேபிள் பற்றி விசாரிப்பார்கள். அவரை பார்த்தாலும் என்னை பற்றி கேட்பார்கள். அவரை சட்டையை பிடித்தது இந்த அளவு கொண்டு வந்து விட்டுள்ளது" என்றார்.

அகநாழிகை பொன். வாசுதேவன் விழாவிற்கு வர முடியாமல் போனதால் அவர் உரையை சுரேகா வாசித்தார். கதைகள் மனிதர்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தையும், கதை எழுதும் பாணி கேபிளுக்கு நன்றாகவே வருவதாகவும் வாசு கூறியிருந்தார். அவரும் சுஜாதா பாதிப்பை குறிப்பிட மறக்க வில்லை.

இயக்குனர் சீனு ராமசாமி தான் இலக்கியம் வாசிக்க துவங்கியது எப்படி என்பது பற்றியும் சினிமாவும் இலக்கியமும் எப்படி தூரமாய் உள்ளது என்றும் பேசினார். கேபிள் கதைகளை முழுதும் வாசித்து விட்டு கடிதம் எழுதுவேன் என்றார். (அப்படி எழுதினால் கேபிள் நிச்சயம் தன் பிளாகில் பகிர்வார். அப்போ படிச்சுக்குவோம்) 

லக்கி ஜெர்கின் அணிந்தவாறு ஸ்டைலாக பேசினார். மைக்கில் அவர் குரல் ரொம்ப வித்யாசமாயிருந்தது (முதல் முறை அவர் குரலை மைக்கில் கேட்கிறேன்) சில கதைகளை சிலாகித்தும் சில கதைகளை கடுமையாய் விமர்சித்தும் பேசினார்.  தனக்கு கேபிள் ஒதுக்கிய மூன்று கதைகளிலும் எந்த பெண் கேரக்டரும் இல்லை என்றும் இது நண்பனின் சதி என்றும் சொன்னார். கேபிளுக்கு இணையத்தில் தான் முதல் நண்பன் என்றும் அடிக்கடி இருவரும் பல விஷயங்களுக்காக அடித்து கொண்டாலும் இன்றும் நட்பு தொடர்கிறது என்றார். இணையத்தில் தன் கதை ஒன்றை பார்த்து விட்டு கேபிள் முதல் முறை போன் செய்து பேசும் போது "கதை அருமை. சுஜாதாவுக்கு அடுத்து நீ தான்" என்றார். அதன் பிறகு நான் கதை எழுதுவதில்லை என பலத்த சிரிப்பொலிக்கிடையே கூறினார்.  கேபிள் முதல் முறை சந்தித்தது முதல் இன்று வரை " படம் எடுக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்" என்றே கூறுவ தாகவும் விரைவில் படம் எடுக்குமாறும் பேசி அமர்ந்தார். 

ஆதி மிக மென்மையான குரலில் மெதுவாக பேசினார். நண்பர் என்று பார்க்காமல் கதைகளை வெளிப்படையாக விமர்சனம் செய்தது நன்று. 

சிறப்பு விருந்தினர் பர்வீன் சுல்தானா பேச்சு மிக சிறப்பாக இருந்தது. " இணைய எழுத்தாளர்களை பார்த்து நான் சற்று பயப்படுகிறேன். நாங்கள் மற்ற இடங்களில் பேசினால் அது பிரசுரம் ஆக சற்று தாமதம் ஆகும். ஆனால் இங்கு பேசியது உடனுக்குடன் பப்ளிஷ் ஆகிடும். மேலும் இணைய எழுத்தாளர்கள் எதற்கும் பயப்படாதவர்களாக உள்ளனர். இங்கு பேசியவர்கள் பேச்சே கூட ஆச்சரியமாக இருந்தது. எங்கள் மேடைகளில் இப்படி பேச நாங்கள் ரொம்ப யோசிப்போம். எவர் மனதும் புண்படுமோ என. ஆனால் இங்கு பேசியவர்கள் பயப்படாமல் பேசினர்.

முதலில் பேசிய மோகன் பாலு கதைகளின் உள்ளே ரொம்ப டிராவல் செய்து விட்டார். அவர் அதுனுள் ஒன்றி விட்டார். நான் அந்த அளவு உள்ளே செல்ல வில்லை. கேபிள் என்னை பார்த்த போது என் கதையில் இலக்கியம் இருக்காது; இருந்தால் சுட்டி காட்டுங்கள் என்றார். இலக்கியம் ஒரு வினாடி நம்மை சற்று நிறுத்தினால் போதும். அந்த ஸ்பார்க் தான் வெற்றி. 

கேபிள் கதைகளில் பெண்கள் பற்றிய விவரணை நிறைய இருந்தாலும் அவர் மனைவி அல்லது காதலி அழகை பற்றி மட்டும் தான் விவரிக்கிறார். காதலியின் தோழி அருகில் இருந்தால் கூட அவளை பற்றி  விவரிப்பதில்லை. இது அவரின் மனதை காட்டுகிறது. 

குண்டம்மா பாட்டி என்ற கதை என்னை ரொம்ப கவர்ந்தது. ஒரு வயதான பெண்ணின் வலி அதில் சிறப்பாக பதிவு செய்ய பட்டுள்ளது. மீண்டும் ஒரு காதல் கதை மட்டுமல்லாது மேலும் பல கதைகள் சினிமா போல் உள்ளது. இவர் சினிமாவில் இருப்பதால் கதைகளை சினிமா போன்றே யோசிக்கிறார். (மேலும் தனக்கு பிடித்த வேறு சில கதைகளை பட்டியிலிட்டார்).

அப்துல்லா மூலம் நீங்கள் அனைவரும் எனக்கு நண்பர்களாகி உள்ளனர். இனி உங்கள் பதிவுகளில் என் பங்கீடும் இருக்கும் " என அவர் பேச்சை முடித்தார். 

இறுதியாய் இவர் சொன்ன "தனக்கு எல்லா காலத்திலும் பிடித்த கதை" ரொம்ப டச்சிங் ஆக இருந்தது. இக்கதையை வேறொரு சந்தர்ப்பத்தில் வானவில்லில் பகிர்கிறேன்.

கேபிள் அனைவருக்கும் நன்றி சொன்னார். விழாவில் பேசியவர்களுக்கு அவர் புத்தகம் பரிசாக தரப்பட்டது. 

எனக்கு தெரிந்து வந்திருந்த பதிவர்கள்: உண்மை தமிழன், ஜாக்கி சேகர், மணிஜி, நரசிம், அப்துல்லா, லக்கிலுக், பட்டர்பிளை சூரியா, காவேரி கணேஷ்,  அதிஷா, ஆதி, கே.ஆர்.பி செந்தில், சங்கர் (ஜெட்லி), கார்க்கி, ரமேஷ் (சிரிப்பு போலிஸ்), பெஸ்கி, தராசு,  எறும்பு ராஜ கோபால், நித்திய குமாரன்,  சுகுமார் சுவாமிநாதன்,   எல். கே, வெற்றி, பதிவர் அனு (தன் கணவருடன்), தன சேகர், மற்றும் பலர்.

காவேரி கணேஷ் மற்றும் கேபிள் பதிவுகளில் புகை படங்கள் வெளியாகும்.

புத்தக சந்தை நேற்று துவங்கி விட்டது. நண்பர்கள் நரசிம், வாசு, நிலாரசிகன், கேபிள் உள்ளிட்டோரின் புத்தகங்கள் நன்கு விற்பனை ஆக வாழ்த்துகள் !!

Monday, January 3, 2011

வானவில் : கேபிள் சங்கர்- மன்மத அம்பு

பார்த்த படம் : மன்மதன் அம்பு 

இது காமெடி படமா சீரியஸ் படமா..  ஒன்னும் புரியலை. இதில் நடிக்க ரிகர்சல் எல்லாம் பாத்தாங்களே...எதுக்குன்னா?? படத்தில் ரசிக்க முடிந்த ரெண்டு விஷயங்கள்: நீல வானம் பாடல் concept- அருமை.  இந்த ஒரு விஷயத்துக்காகவே இந்த படம் நினைவு கூறப்படும். அடுத்து சில இடங்களில் வசனம் நன்றாயிருந்தது. மற்ற படி படம் முடியும் போது தலையை பிச்சிக்காத குறை தான். இதனை பிரிவியூ தியேட்டரில் ஓசியில் பார்த்தால் கூட "நிச்சயம் ஓடாது" என சொல்லலாம். எப்படி படத்தை வித்தாங்க.. எப்படி நம்பி தியேட்டர் காரங்க வாங்கினாங்க.. ம்ம் ..

வருஷ (ஆ)ரம்ப...  படம் இப்படியா என யாரும் என் மீது பரிதாப பட வேண்டாம். இது 2010 கடைசி நாள் பார்த்தது. இந்த வருட துவக்கத்தில் 2009-ல் வந்த ஒரு அற்புதமான படம் முதன் முறை பார்த்தேன். அது பற்றி அடுத்த வானவில்லில்...


ரசித்த கவிதை

சுதந்திரத்தை என்னால் 
உண்ண முடிய வில்லை 
சோறு கொடு ! - தமிழன்பன் 

சென்னை ஸ்பெஷல்: Hotel Rain Forest, Adyar

அடையாரில் உள்ள வெரி இன்டரஸ்டிங் சாப்பாட்டு கடை "Rain Forest ". உள்ளே காடு போல செட்டிங் செய்துள்ளனர். சின்ன சின்ன தொங்கு பாலங்கள் அதனடியில் ஓடும் ஓடை.. சில இடத்தில் மலையில் இருந்து கொட்டும் அருவி போலவும் செய்துள்ளனர்.  மரத்தாலே  ஆன தரைகள். அமரும் இருக்கைகள் கூட வித்தியாசமானவை தான். இப்போது இதே போன்ற Concept -ல் சில கடைகள் ஆங்காங்கே வந்தாலும் கூட இந்த கடை அளவுக்கு செட்டிங் அற்புதமாய் இல்லை. உணவு செம டேஸ்டியாக உள்ளது. 

ஒரே பிரச்சனை. கூட்டம்!! நாம் போனதும் நம் பெயர், நபர்கள், தொலை பேசி எண்ணை குறித்து கொள்வார்கள். இடம் காலியானதும் போன் செய்வார்கள். மாலை வேளையில் குறைந்தது அரை மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். போனில் முன்பே ரிசர்வ் செய்யும் வசதி உள்ளதாக அறிகிறேன். 

குழந்தைகள் நிச்சயம் செமையாய் என்ஜாய் செய்வார்கள். சென்று பாருங்கள் !


அய்யாசாமி தரும் ஹெல்த் டிப் :

பிதா மகன் படத்தில் மலச்சிக்கல் ஒரு மனச்சிக்கல் அப்படின்னு சூரியா பேசுவார். செம காமெடியான சீனுன்னாலும் இது நிஜம் தாங்க. உண்மையில் நிறைய பேருக்கு இந்த பிராப்ளம் இருக்கு. சிலர் இதுக்காக தினம் வாழை பழம் சாப்பிடுறாங்க. அதை விட நல்ல மருந்து ஒண்ணு இருக்கு. கொய்யா பழம்!! வாழை பழம் சாப்பிட்டு கூட பிரச்சனை சரியாகாதவங்களுக்கு  கொய்யா பழத்தில் நிச்சயம் வெற்றி கிடைச்சிடும். அட .. நமக்கு அப்படி தாங்க ஆச்சு.. 


கேபிள் சங்கர் புத்தக வெளியீட்டு விழா

பதிவர் நண்பர் கேபிள் சங்கர் நாளை மாலை (4/1/2011) தனது சிறுகதை தொகுப்பு வெளியீடு செய்கிறார். அவசியம் வாருங்கள். பதிவர் சந்திப்பாகவும் இது அமையும்....

விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுபவர்
பேராசிரியை : திருமதி. பர்வீன் சுல்தானா அவர்கள்
கலந்து கொண்டு சிறப்பிப்பவர்கள் :  இயக்குனர் திரு. சீனு ராமசாமி
ஒளிப்பதிவாளர்: திரு.செழியன்
நடிகர் : திரு. ஆர்.மோகன்பாலு


பதிவர்கள்
அப்துல்லா
லக்கிலுக் (யுவகிருஷ்ணா)
விதூஷ் வித்யா

ஆதிமூலகிருஷ்ணன்.
அகநாழிகை வாசுதேவன்


தேதி : 4/01/11
நேரம் : மாலை 6.00 மணி 
இடம் : டிஸ்கவரி புக் ஸ்டால்
                நெ.6. முனுசாமி சாலை
               கே.கே.நகர். சென்னை
மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள: 9840332666 கேபிள் சங்கர்/ 8098858248 கே.ஆர்.பி.செந்தில் “ழ” பதிப்பகம்.

வி(லை)ஷ  வாசி 

சென்ற வாரத்தில் காய்கறி சென்று வாங்கினேன். சரியே ரெண்டு நாளுக்கு ரூ. 140 ஆனது. வாங்கி விட்டு திரும்பும் போது அலுவலகத்தில் வேலை பார்க்கும் அட்டண்டர் போன்ற நபர்கள் தான் மனதில் நிழலாடினர். இவர்கள் எப்படி காலம் தள்ளுகிறார்கள் என. மறு நாள் கேண்டினில் உள்ள பையனிடம் கேட்டேன். "காய்கறி விலை எல்லாம் ரொம்ப அதிகமா இருக்கே; எப்படிவீட்டில சமாளிக்கிறீங்க!!" காண்டிராக்டில் வேலை செய்யும் இவனுக்கு மாத சம்பளம் மூன்று அல்லது நான்காயிரம் இருக்கலாம். அவன் சொன்ன பதில் மனதை அறுத்தது. "சார் காய்கறி எல்லாம் வாங்கியே ரொம்ப மாசம் ஆச்சு சார். ரெண்டு வேலையும் வெறும் சாதம் வச்சிட்டு கடையிலே தயிர் வாங்கி ஊத்தி சாப்பிடுறோம். அவ்ளோ தான்" .. 

எதனால் காய்கறிக்கு இந்த நிலை..புரியவே இல்லை.. எப்போது சரியாகும்? நிற்க...விரைவில் தேர்தல் வருகிறது!! 
Related Posts Plugin for WordPress, Blogger...