Saturday, September 1, 2012

பதிவர் மாநாடு: கற்றதும் பெற்றதும்


ந்த பதிவு பற்றி ஒரு சின்ன டிரைலர் :
*****
"அண்ணே வணக்கமண்ணே"

"வணக்கம் வணக்கம் யாரு நீங்க"

"என்னை தெரியலையாண்ணே ? நான் ரெண்டு நாளு முன்னாடி உங்களை அடிச்சிருக்கேண்ணே !"

"அப்புடியா? நம்ம ஆதி விட்ட பிளஸ்சில் குமுறு குமுறுன்னு நம்மளை குமுறினாங்களே அதில இருந்தியாப்பா நீயி? "

"இல்லைண்ணே "

"ஓஒ அப்ப என் கல்யாண நாளும் அதுவுமா புரட்டி போட்டு எடுத்தாங்களே அந்த பிளஸ்சிலே இருந்திருக்கே !"

"அட இல்லைண்ணே "

"இத பார்றா ! அப்ப, நம்ம வீடு சுரேஷ் போட்ட பதிவுல வந்து மூஞ்சுலேயே குத்துனியா நீயி? "

"போங்கண்ணே உங்களுக்கு எதுவுமே ஞாபகம் இருக்க மாட்டேங்குது !"
***************
பதிவர் மாநாடு: கற்றதும் பெற்றதும் 

கஸ்ட் 26 -விழா எனக்கு ஏராள நண்பர்களையும் சில தற்காலிக எதிரிகளையும் (அவர்களும் மறுபடி நண்பர்களாவர் என நம்பிக்கை உண்டு) தந்துள்ளது 

குறிப்பாய் விழா குழவில் சிவா, பிரபா, ஆரூர் மூனா போன்ற சிலர் தவிர பலரையும் சந்தித்ததும், பழகியதும் இந்த விழாவை முன்னிட்டு தான்.

விழா குறித்த முதல் அறிவிப்பு வந்ததும் கேபிளிடம் போனில் பேசினேன். " என்ன கேபிள் அதிக அறிமுகம் இல்லாதவங்க விழா செய்றாங்களே ! நீங்க என்ன பண்ண போறீங்க?"

" பண்ணட்டும்யா; எல்லாரையும் ஒண்ணா சேக்கவே முடியாது. அவங்க செய்யட்டும். முடியறவங்க சேரட்டும்" என்றார். அவர் சொல்வது சரியாக தோன்றியது. அதன் பின் ஒரு ஆலோசனை கூட்டத்துக்கு சென்றேன். நான் கேட்ட முதல் கேள்வியே இது தான்:

" இது எதோ நாலு பேர் மட்டும் சேர்ந்து செய்யும் விழா மாதிரி இருக்கே. மற்றவங்க பேரும் இருந்தா தானே எல்லாரும் இருக்க மாதிரி அர்த்தம்?" என்று ! கோபப்படாமல் மதுமதி சொன்னார்" நாங்க நாலு பேர் முதலில் இப்படி செய்யணும்னு ஆரம்பிச்சோம். யாராவது ஆரம்பிக்கணும் இல்லையா? இப்போ இருபது பேர் இருக்கோம். எல்லாரும் பேசுவோம். என்ன செய்யணுமோ செய்வோம். " இப்படி தான் ஆரம்பித்தது விழா குழுவினர் நட்பு.

சில ஆண்டுகளுக்கு முன் ஐம்பது பேர் இதே கூடி பேசும்போது நாற்பது பேருக்கு மேல் இதை தொடர்ந்து எடுத்த செல்ல ஆதரவு இருந்தும் நான்கைந்து பேர் இதை மிக எதிர்த்து மேலே தொடர முடியாமல் செய்து விட்டனர். இது பற்றி பேசி, "எந்த விஷயத்திலும் ஒருமித்த கருத்து வரமுடியாது; பெரும்பான்மை முடிவு படி மேலே செல்வோம்" என்று முடிவெடுத்தோம்

வாரா வாரம் விழா பற்றி பேச ஞாயிறு டிஸ்கவரியில் கூடுவார்கள். முடிகிற வாரம் மட்டும் செல்வேன். பல வாரம் போகலை. மீட்டிங் முடிந்ததும் மதுமதி அல்லது சிவாவிடம் விபரங்கள் கேட்டு தெரிந்து கொள்வேன்.

செம காமெடியாய் பேசும் சேட்டைக்காரன் 

சேட்டைக்காரன் பேச்சை சிரித்து ரசிக்கும் பதிவர் மக்கள்

விழாவுக்கு ஹால் பார்க்கணும் எனும் போது நமக்கு தெரிந்த ACS இன்ஸ்டிடியூட் , ICWA இன்ஸ்டிடியூட் இரண்டிலும் இருக்கும் ஹால் மிக மிக அற்புதமாகவும் , ஓரளவு கம்மி வாடகைக்கும் கிடைக்கும் என்பதால் அங்கே முயன்றோம். எங்களுக்கு தேவையான அன்று (Aug 26th) இரண்டு இடத்திலும் வேறு விழா இருந்தது. ஐயாவும் மதுமதியும் போய் பார்த்து விட்டு "ஹால் அருமையா இருக்கு; ஆளுங்களும் நல்லவங்க; ஆனா அன்னிக்கு இடமில்லை" என்கிற வருத்தத்தோடு திரும்பினர்.

பின் மூன்று நாள் ஹாலுக்காக அலைந்து பின் தற்போது விழா நடந்த ஹால் பிக்ஸ் செய்தனர். இந்த மூன்று நாளும் புலவர் ஐயா, மதுமதி, பாலகணேஷ், ஜெய் அனைவரும் செம டென்ஷன் ஆக இருந்தனர். ரொம்ப சோதனையான கட்டம் அது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்று சொல்கிறார்கள். வாடகை ஐம்பதாயிரத்துக்கு மேல் இருக்கிறது. அன்று கல்யாண நாள் என்பதால் பல இடம் கிடைக்கலை. இத்தகைய கூட்டம் என்றால் ஹால் தரலை சிலர், போலிஸ் அனுமதிக்கான அலைச்சல் இப்படி எத்தனையோ பிரச்சனை இருந்தும் மூன்று நாள் வேறு வேலை அனைத்தையும் விட்டு விட்டு அலைந்து பிடித்தது தான் இந்த ஹால் !

நாங்கள் கற்ற பாடம் : ஹால் பிக்ஸ் செய்து விட்டு தான் இனி தேதியை அறிவிக்க வேண்டும். தேதி முதலில் முடிவாகி ஒரு முறை மாறுதல் வேறு ஆனதால் மறுபடி மாற்ற முடியாத நிலை. தேதியில் சற்று திறந்த மனதுடன் இருந்திருந்தால் ACS இன்ஸ்டிடியூட் or ICWA இன்ஸ்டிடியூட் போல ஒரு இடத்தில் முடித்திருக்கலாம். விழா செலவு குறைந்தது 15 முதல் இருபதாயிரம் குறைவாகியிருக்கும்.ஆனால் இந்த விழாவில் அதற்கான வாய்ப்பு இல்லை. உடனே ஹால் பிக்ஸ் செய்யும் நிலையில் அன்று இருந்தோம். இந்த ஹால் கிடைத்ததே பெரிது

அடுத்து பட்ஜெட். கிட்டத்தட்ட 75000 ஆகும் என முன்பே திட்டமிடப்பட்டிருந்தது. அதை எப்படி புரட்ட போகிறோம் என்பது கேள்வி. பொதுவாய் இத்தகைய விழாக்களில் வெளியூர் நண்பர்களிடம் பணம் கேட்பதில்லை. உள்ளூர் நண்பர்கள் ஸ்பான்சர் மூலமோ, தங்கள் சக்திக்கு ஏற்றவாரோ பணம் போடுவார்கள்.

மக்கள் சந்தை ஒரு ஸ்பான்சர் ஆக கிடைத்தது பெரிய பலம். அவர்கள் 25000 தந்தது போக ஐம்பதாயிரம் புரட்ட வேண்டியிருந்தது. நண்பர்கள் எல்லோரும் ஒரே அளவு தான் காண்டிரிபியூட் செய்யணும்; வெவ்வேறு அளவு பணம் என்றால் பிரச்சனை வரும் வாய்ப்புண்டு என ஆளுக்கு ஆயிரம் ரூபாய் போட முடிவானது. தேவையெனில் இவர்களே மீண்டும் பணம் போடவேண்டும் என்றும் பேசியிருந்தோம்.

மேலும் ஒவ்வொரு பதிவருக்கும் தொடர்ந்து வாசிப்போர் வேறுபடுவர்; எனவே அனைவரும் குழு முடிவுகளை ஒவ்வொரு கட்டத்திலும் தங்கள் ப்ளாகுகளில் ஒரே நேரத்தில் போடுவதாக முடிவானது. இதற்கான முழு டெக்ஸ்ட் ஒருவர் தயார் செய்து அனைவருக்கும் மெயிலில் அனுப்புவர். அனைவரும் படித்து பார்த்து விட்டு, கருத்து சொல்ல ஒரு நாள் போல் நேரம் தந்து, கருத்துகள் வந்தால் ஏற்று கொண்டு, இல்லா விடில் அதே டிராப்ட் பப்ளிஷ் ஆகும். இப்படி தான் ஆரம்பம் முதல் கடைசி வரை தொடர்ந்து அனைவரும் ஒரே பதிவுகளை வெளியிட்டோம், அதில் சிலர் தலைப்பிலும் மற்றும் உள்ளே சற்று மசாலா சேர்த்தும் வெளியிடுவர்.

இன்விடேஷன் வெளியிட்ட அன்றே முக நூலில் சென்னையில் எனக்கு தெரிந்த அனைத்து பதிவர் நண்பர்கள் Facebook wall-க்கும் சென்று இன்விடேஷன் குறித்த லிங்க் தந்து , விழாவுக்கு அவசியம் வாருங்கள் என எழுதிவிட்டு வந்தேன்.

விழா துவங்க ஒரு வாரம் முன்பு, இன்னும் குறைந்தது இருபதாயிரம் தேவை என்கிற நிலை; சென்னை பதிவர்களில் குறிப்பிடத்தக்க அளவு வந்திருந்தாலும் இன்னும் வரவேண்டிய நண்பர்கள் பலர் இருந்தனர். அவர்களில் சிலரிடம் போனில் பேசி சென்னை நண்பர்கள் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் பணம் போடுகிறோம். உங்களால் முடிந்தால் குடுக்கலாம் என்று கூறியிருந்தேன். அவர்களும் வங்கி கணக்கு தகவல் அனுப்புங்கள் பணம் அனுப்பிடுறோம் என்றனர். வங்கி கணக்கு தனி நண்பரின் பெயரில் இருந்ததால் அதை பொதுவில் (நம் பதிவுகளில்) பகிர முடியாது. தனி நபர் பெயரில் ஏன் பணம் வசூலிக்கிறீர்கள் என்று கேள்வி வரும் ( நாம் இன்னும் இயக்கமாய் ரிஜிஸ்தர் செய்ய வில்லை. இனி தொடர்ந்து விழா நடத்த ரிஜிஸ்தர் செய்ய இதுபோல் பல காரணம் உண்டு. போலீசில் எழுதி தரும் போது உங்களுக்கு இயக்கம்/ லேட்டேர்பேட் தேவைப்படும்; இன்னும் பல இடங்கள் சொல்ல முடியும் )

முதலில் Facebook-ல் சொன்ன போது வருவதாய்  சொன்ன நண்பர்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மெயில் அனுப்பினேன். இப்படி சிலருக்கு மட்டும் அனுப்ப ஒரே காரணம் தான் நான் நினைத்தது.

நண்பர்களில் வெவ்வேறு பிரிவினரும் வெவ்வேறு அளவு சம்பாதிக்கின்றனர். அவர்களில் ஓரளவு நல்ல சம்பளம் வாங்குவோருக்கு ஆயிரம் ரூபாய் தருவது சிரமமாய் இராது. சிலருக்கு அந்த ஆயிரம் ரூபாய் நாங்கள் கேட்ட ஆகஸ்ட் 20-  போல் நிச்சயம் கஷ்டமான விஷயமாய் இருக்கும். இது நானாகவே முடிவு செய்து, சில நண்பர்களிடம் மட்டும் மெயில் அனுப்பினேன். அதிலும் மிக தெளிவாக உங்களுக்கு முடிந்தால் ஆயிரம் ரூபாய் பணம் அனுப்ப முயலவும் என்று தான் கூறியிருந்தேன். பண விஷயம் என்பதால் இந்த மெயில்கள் அனைத்திலும் மதுமதி மற்றும் நண்பர் ஜெய் இருவருக்கும் காப்பி மார்க் செய்திருந்தேன்.

இதனை பணம் தந்தால் தான் விழாவுக்கு வரலாம் என்று புரிந்து கொண்டனராம் சில நண்பர்கள் ! "முடிந்தால் ஆயிரம் ரூபாய் பணம் அனுப்ப முயலவும் " என்பதில் எங்கிருந்து " பணம் தந்தால் தான் விழாவுக்கு வரலாம் " என்று அர்த்தம் ஆகிறதோ தெரியவில்லை.

பணம் தராமல் விழாவுக்கு வந்தால் சங்கடமாய் இருக்கும் என்கிறார்கள் சிலர். சென்னையில் நடக்கும் பல பதிவர் விழா, பீச் மீட்டிங் சென்றுள்ளேன். ஒவ்வொரு முறையும் யார் செலவு செய்கிறார்கள் என்று கூட தெரியாது. யாரோ டீ- க்கு காசு தருவார். யாரோ விழா நடத்துவார். இவை அனைத்திலும் யாரோ ஒரு நண்பர் பணம் தர, நானும், இன்று வராமல் போன நண்பர்கள் உட்பட மற்றவர்கள் ஒன்றாய் தான் உண்டோம்; பணம் யார் தந்தார் என்பது கூட தெரியாமல் ! அப்போது நமக்கு அசிங்கமாய் இல்லையே ! இப்போது எங்கிருந்து இந்த காரணம் முளைக்கிறது?

சரி போகட்டும். உண்மையில் என் நண்பர்கள் என்று நினைத்த கார்க்கி, கண்ணன் ராமசாமி, மயில் ராவணன் போன்றோரோ அல்லது நான் மெயில் அனுப்பிய வேறு யாரோ எனது மெயிலை ஒரு குழுவிடம் அனுப்பி " பணம் கேட்டாங்கப்பா" என்று விழா முடிந்த பின் பிரச்சனை ஆக்கினர்.

நீங்கள் உண்மையில் என் நண்பர்கள் என்றால் எனக்கு ஒரு போன் செய்து கேட்டிருக்கலாம். " பணம் தந்தால் தான் வரணுமா? எல்லாரும் பணம் போடுகிறார்களா? " என கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாம். உங்கள் மனதில் என்ன இருக்கிறது என நீங்கள் சொன்னால் தானே தெரியும்? நீங்களாக எதையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய?



நான் உங்களை நண்பர்கள் என்று நம்பி அனுப்பிய மெயிலை, எனக்கு எதிராக குரல் எழுப்பும் நண்பர்களிடம் குடுத்து " இதையும் கேளுங்க" என்று விஷம் தோய்ந்த கத்தியை முதுகில் சொருகிய அந்த வீரர் யார் என தெரிய வில்லை. ஆனால் நண்பர்களே இன்று என்னை தேவையின்றி பிரச்சனையில் சிக்க வைக்க முயன்று எனது மெயிலை அனுப்பிய இந்த நபர், நாளை வேறு பிரச்சனையில் உங்கள் முதுகிலும் விஷம் தோய்ந்த கத்தியை இறக்க கூடும் ! அவர் பெயர் சொல்லா விட்டாலும் நீங்கள் இதை மனதில் கொள்ளுங்கள் !

"மாச சம்பள காரனுக்கு கடைசி ஒரு வாரம் கஷ்டம் தான்" என்று ஓபன் ஆக எழுதும் லக்கி போன்ற நண்பரிடம் எப்படி போய் இருபது தேதிக்கு மேல் பணம் கேட்க முடியும்? இதனால் தான் நான் சிலரிடம் கேட்டு சிலரிடம் கேட்காமல் போனேன். " இது பிரச்சனை ஆகும் வாய்ப்பு உண்டு; உங்களுக்கு குறிப்பிட்ட நபர் நன்கு தெரிந்த நண்பர் என்றால் மட்டும் கேளுங்கள்; இல்லையேல் கேட்காதீர்கள்" என மதுமதியும் ஜெய்யும் பலமுறை கூறினர். நன்கு தெரிந்த நண்பர்கள் என்று தான் நம்பினேன்.:(((

நண்பர் சரவணன் பீ.கே. பியுடன்


" இதுக்கு பதிலா ஏதாவது நல்லது செஞ்சா தேவலை " என்றனர் இந்த நண்பர்கள். (எப்போ விழா முடிஞ்சோன !) அரசு பள்ளிகளுக்கும் ஏழை மாணவர்களுக்கும் ஏற்கனவே உதவுவது பற்றி சொன்னால் " நீ பேசாம முதலமைச்சர் ஆகிடு " என்று கிண்டல் அடிக்கிறார்கள். பாஸ்டன் ஸ்ரீராம் போன்றோர் செய்வதை தான் நாங்களும் செய்கிறோம், அவர்கள் சொன்னால் பிரச்சனை இல்லை. நாங்கள் சொன்னால் புகழுக்கு செய்கிறோம் என்பதா? அட  புகழுக்காகவாவது  நல்ல காரியம் செய்யுங்களேன் ! நாலு பேருக்கு நல்லது நடக்கட்டும் !

அப்புறம் பதிவர் சந்திப்பு நடந்தது நிறைய பேருக்கு தெரியலையாம். இன்னும் பப்ளிசிட்டி பண்ணிருக்கனுமாம் !

கேபிள் கொத்து பரோட்டாவில் இந்த விழா பற்றி எழுதுறார்; இன்விடேஷன் பகிர்கிறார். சிபி தனி பதிவு போடுறார். விழா குழிவினரில் பத்துக்கும் மேற்பட்டோர் தினம் விழா முன்னேற்பாடு பற்றி பதிவு போட்டோம்  ! 

சதீஷ் செல்லத்துரைன்னு ஒரு பதிவர்.. " என்னங்கடா இதே வேலையா பதிவர் சந்திப்பு பத்தியே எழுதிட்டு இருக்கீங்க" என திட்டி ஒரு பதிவு போட்டார். அவர் எங்கே இருக்கார் தெரியுமா? இந்தியாவின் எல்லை காவல் படையில் பணி புரியும் வீரர். பதிவர் சந்திப்பு பற்றி இந்தியா பார்டர் வரைக்கும் கேட்டது சென்னையில் இருக்கும் சிலருக்கு கேட்கலைன்னா என்ன சொல்றது?

கருத்துகளை டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த கூட்டங்களில் நேரில் வந்து பேசியிருக்கலாம். போன் செஞ்சு சொல்லிருக்கலாம். மெயில் ஐ. டி தந்தோம் எழுதிருக்கலாம். அதை எல்லாம் விட்டுட்டு எப்படா விழா முடியும்னு பார்த்துகிட்டு  இருந்துட்டு இப்படியெல்லாம் பேசுவது என்ன உணர்த்துகிறது என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன் ! 

இந்த சந்திப்பு நடக்கணும் என்பது பல முறை பலரால் பேசி கை விடப்பட்டது. மதுமதி அவரது சமீபத்திய பதிவில் " பிரபல பதிவர்களால் நடத்த முடியாத இந்த விழா, எப்படி பிரபலம் இல்லாத பதிவர்களால் நடத்த முடிந்தது" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதன் பதில் ஒரே வார்த்தை. இரண்டே எழுத்து தான். ஈகோ ! இன்று எழும் ஒரு சில எதிர் குரல்களுக்கும் காரணமும் அதுவே என்பது என் தாழ்மையான கருத்து  !

சரி விடுங்க, ஒரு குட்டி கதையுடன் இந்த பதிவை முடிப்போம் :

ஒரு தந்தை, அவர் மகன் இருவரும் ஒரு கழுதையை கூட்டி கொண்டு சென்று கொண்டிருந்தனர். வழியில் பார்த்த ஒருவர் " ஏம்ப்பா சின்ன பையனை வெயிலில் வச்சு நடக்க வைக்கிறே? கழுதை மேலே வச்சு கூட்டி போகலாமில்ல?" என்றார்

சரியென சிறுவனை கழுதை மேல் வைத்து கூட்டி செல்ல " ஏம்ப்பா, அப்பாவை நடக்க விட்டுட்டு நீ உட்காருறே ? இதுவா மரியாதை?" என்று ஒருவர் கேட்க, சிறுவன் இறங்கி கொண்டு அப்பா கழுதை மேல் அமர்ந்து சென்றார்.

அதனை பார்த்த ஒருவர் "கழுதை பாவம் .. அதுமேலே இவ்ளோ பெரிய ஆள் உட்கார்ந்து போறியே? " என்றார்.

அப்புறம் கழுதையை தோளில் தூக்கி கொண்டு நடந்தாராம் அப்பா.

***
எல்லோரையும் திருப்தி படுத்த நினைத்தால், அனைத்து கருத்தையும் implement செய்ய முயன்றால் கழுதையை சுமந்த கதை தான் !
***

கடேசி பதிவு:

பதிவர் மாநாடு சாதித்தது என்ன? நாளை !
Related Posts Plugin for WordPress, Blogger...