இந்தியா இன்னொரு தேர்தலுக்கு தயாராகி விட்டது. இம்முறை ஜனாதிபதி தேர்தல் ! காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளராய் அறிவித்த பின், அனைத்து நடவடிக்கையும் சூடு பிடித்து விட்டது
ஜனாதிபதி எப்படி தேர்ந்தெடுக்க படுகிறார் தெரியுமா?
லோக்சபா, ராஜ்ய சபா என அவைகளின் உறுப்பினர்களும், கூடவே அனைத்து மாநில சட்டசபை உறுப்பினர்களும் வாக்களித்து தான் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த 776 எம்.பி.க்களும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 4,120 எம்.எல்.ஏ.க்களும் என மொத்தம் 4,896 பேர் மட்டுமே இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள்.
இது பற்றி விகடன் இணைய தளம் வெளியிட்ட கட்டுரை இங்கு:
மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில், எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு வேறுபடுகிறது.ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையை,அதன் சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கையால் வகுத்து, வரும் விடையை ஆயிரத்தால் வகுத்தால் கிடைப்பதுதான் எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு.
**
இப்போதுள்ள நிலையில் காங்கிரசின் கூட்டணியில் மம்தா தவிர மற்ற அனைவரும் பிரணாபை ஆதரிக்கிறார்கள். கூட்டணியில் இல்லாத மாயாவதி போன்றோரும் கூட மகிழ்ச்சியும் ஆதரவும் தெரிவிக்கிறார்கள். எப்போதும் பீ. ஜே.பி க்கு எதிரான நிலைப்பாடையே எடுக்கும் கம்யூனிஸ்டுகள் பிரணாபை ஆதரிக்க கூடும். பிரணாப் கொல்கட்டாகாரர் என்பதும் அங்கு கம்யூனிஸ்டுகள் அதிகம் என்பதும் கூட இடது சாரி கட்சிகள் இவரை ஆதரிக்க காரணமாகலாம்.
இடது சாரிகள் ஆதரவு இல்லாமலே கூட, காங்கிரஸ் மற்றும் மாயாவதி ஆதரவுடன் பிரணாப் வெல்வதற்கு வாய்ப்புகள் மிக மிக பிரகாசமாக உள்ளன. அடுத்த ஜனாதிபதி பிரணாப் தான் என்பதில் அநேகமாய் சந்தேகம் இல்லை.
இவரது தேர்வு சரிதானா? சற்று சிந்திப்போம் :
பிரணாப் ஒரு மிக சிறந்த அறிவாளி, உழைப்பாளி என்பதில் சந்தேகம் இல்லை. இந்திரா, ராஜீவ், நரசிம்ம ராவ், மன்மோகன் என அனைத்து பிரதமர்களின் கீழ் நிதி, வெளிநாட்டு துறை போன்ற முக்கிய பொறுப்புகளை நிர்வகித்தவர். காங்கிரசின் தற்போதைய பொது செயலாளர். நாடாளு மன்ற அவை முன்னவர். ..இப்படி அவரது அரசியல் சாதனைகள் நீள்கிறது.
ஆனால் எம் கேள்வி இது தான்:
ஜனாதிபதி என்பவர் நடு நிலையுடன் இருக்க வேண்டாமா? ஆளும் கட்சி, தனது கட்சியின் பொது செயலாளரை ஜனாதிபதி ஆக்குவது என்ன விதமான அணுகு முறை? தமிழகத்தை வைத்து சொல்கிறேன். தி.மு.க ஆட்சி செய்யும் போது ஆளுநர் தேர்தல் நடக்கிறது என வையுங்கள். அப்போது பேராசிரியர் அன்பழகனை ஆளுநர் ஆக்கினால் அது சரியா? அவர் எந்த கட்டத்திலும் தி.மு.க விற்கு பாதகமாய் முடிவு எடுப்பாரா? இம்முறை வந்தது போல் ஒரு கட்சி பெரிய அளவில் வென்றால் குழப்பமில்லை. தேர்தலுக்கு பின் இரண்டு கட்சிகளுக்கு இடையே யார் ஆட்சி அமைப்பது என இழுபறி எனில், ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என முடிவெடுப்பது ஜனாதிபதி தான். அவர் அப்போது காங்கிரசுக்கு எதிராய் முடிவெடுப்பார் என எப்படி எதிர்பார்க்க முடியும்?
சோனியா விரும்புவதும் இதை தான் என தெரிகிறது. எந்நிலையிலும் தான் சொல்வதை கேட்கும் ஒரு பிரதமர் இருக்கிறார். அதே போன்றே அடுத்து ஜனாதிபதியும் தயார் ஆகிறார்.
இதற்கு முன் கூட அந்தந்த கட்சி சார்ந்தோரே ஜனாதிபதி ஆயினர் எனினும், இப்படி ஒரு ஆளும் கட்சி மந்திரி, அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜனாதிபதி ஆவது இது முதன் முறை என நினைக்கிறேன். இது நிச்சயம் நல்ல முன் மாதிரி கிடையாது.
முகநூலில் தமிழ் நண்பர்கள் பலர் பிரணாபுக்கு எதிராய் எழுதுகின்றனர். அவர்கள் சொல்லும் காரணம்: பிரணாப் இலங்கை தமிழர் விவகாரத்தில், தமிழர்களுக்கு எதிராய் நடந்தார் என்பது. மேலும் பிரணாப் நாடாளுமன்றத்தில் தூங்கும் படம் போட்டு இப்படி பட்டவரா நம் ஜனாதிபதி என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
ஆனால் பத்திரிக்கைகள் பிரணாப் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்பவர் என்றும் கொல்கத்தாவில் துர்கா பூஜை நடக்கும் நேரம் மட்டுமே தன் குடும்பத்துடன் விடுமுறையில் இருப்பார் என்றும் பாராட்டி சொல்கிறது !
On a lighter vein, பிரணாப் நிறைய உழைத்து விட்டார்.. இனியாவது ஓய்வு எடுக்கட்டும். அப்படியே பல நாடுகள் சுற்றி பார்க்கட்டும் என காங்கிரஸ் நினைத்திருக்கலாம்
பிரணாப் ஜனாதிபதி ஆவது உறுதி. ஜனாதிபதியாக அவர் காங்கிரசுக்கு உண்மையாக இல்லாமல், நாட்டு நலனை மனதில் கொண்டு நடுநிலையான முடிவுகளை எடுக்க வேண்டும், இதுவே ஒரு சராசரி இந்தியனாக நம் எதிர்பார்ப்பு !
வல்லமை ஜூன் 18 இதழில் வெளியான முகப்பு கட்டுரை
