Tuesday, April 23, 2013

இருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை பற்றி கேள்விப்படும் பல தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது .

1930 - 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன் பின் கிருஷ்ணசிங் மற்றும் அவருடன் இணைந்து அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள் இக்கடையை !

மாலை ஐந்தரை அளவில் தான் கடையே திறக்கப்படுகிறது. அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மொத்த ஸ்டாக்கும் காலியாகி விட கடையை மூடி விட்டு கிளம்பி விடுகிறார்கள்.


மற்ற கடைகளை விட இங்கு அல்வா நிச்சயம் அட்டகாசமாய் இருக்க முக்கிய காரணமாக சொல்லப்படுவது இது தான்:

அல்வாவிற்கு தேவையான கோதுமையை இவர்கள் கைகளால் தான் அரைக்கிறார்கள். மேலும் அதை தயார் செய்வதும் Manual முறையில் தான் ! இது தான் அல்வாவிற்கு ஒரு யூனிக் சுவை தருகிறதாம். மேலும் இந்த அல்வா தயாரிக்கும் முறை இவர்களுக்கு மட்டுமே தெரியும் .. வேறு யாருக்கும் தெரியாது !

இப்படி கையால் தயார் செய்வதால், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவிற்கு தான் இவர்களால் தயார் செய்ய முடிகிறது. அதனை மட்டும் விற்று முடித்து விட்டு, திருப்தி அடைந்து விடுகிறார்கள். இவர்கள் நினைத்தால் - கிடைத்துள்ள பெயரை வைத்து மெஷின் வைத்து இன்னும் 10 மடங்கு தயார் செய்ய முடியும் - அவ்வளவுக்கும் மார்கெட் இருக்கு என்றாலும் தங்கள் தரம் சிறிதும் குறைய கூடாது என்பதால் - பெரிய அளவில் செல்லாமல் இருக்கிறார்கள்.

பலகைகளால் ஆன பழைய கால கதவை கவனியுங்கள் !

இருட்டுக்கடை என்று பெயர் வர காரணம் - 1930 களில் கடை துவங்க பட்ட போது, ஒரே ஒரு காண்டா விளக்கு (மண்ணெண்ணெய் விளக்கு) மட்டும் இருக்குமாம். இருட்டாய் இருக்கும் கடை என்பதே பெயராகி " இருட்டு கடை அல்வா" என்ற பெயர் வந்து விட்டது. இன்றைக்கு இங்கு காண்டா விளக்கு அகன்று ஒரு 200 வாட்ச் பல்பு எரிகிறது அவ்வளவு தான் வித்யாசம். கடைக்கு பெயர் பலகை கூட இல்லை. இருந்தும் கடையின் கூட்டமோ புகழோ குறையவே இல்லை.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அருகிலேயே உள்ளது இக்கடை. வேறு கடைகளில் விசாரித்தால் உங்களை மற்ற இடங்களுக்கு மாற்றி விட வாய்ப்பு உண்டு. இக்கடையில் பிஜிலி சிங் அவர்களின் பெயர் போட்டு புகைப்படம் இருக்கும். அது தான் அடையாளம் !

இருட்டு கடை என்கிற பெயரில் இன்னொரு கோஷ்டி காபி ரைட் வாங்க, அவர்கள் மேல் இவர்கள் வழக்கு துவங்கி தங்கள் கடை பற்றி பல வருடங்களாக பத்திரிக்கைகளில் வெளி வந்த குறிப்புகளை காட்டி தங்களுக்கு தான் அந்த பெயருக்கு உரிமை உண்டு என போராடி வருகிறாகள்.

இவர்களின் குழும கடையாக சற்று தள்ளி விசாகா சுவீட்ஸ் என்ற கடை இருக்கிறது. இங்கும் இருட்டு கடை அல்வா பகல் வேளைகளில் கிடைக்கிறது ( பிஜிலி சிங் படம் இங்கும் இருக்கும் !)

உள்ளூர் வாசிகள் நூறு கிராம் அல்வா சுட சுட வாங்கி கொண்டு ஓரமாக நின்று ருசித்து சாப்பிட்டு விட்டு, சைடில் சென்று கை நீட்ட , சற்று மிக்சர் இலவசமாக தருகிறாகள். அதை சாப்பிட்டு விட்டு அங்கு மாட்டி யுள்ள பேப்பரை எடுத்து கை துடைத்து கொண்டே செல்வதை காண முடிந்தது

சில நேரங்களில் கியூவில் நின்றும் வாங்கி செல்வதுண்டாம். எப்பவும் கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்கள் தயாராய் இருக்கின்றன. நீங்கள் சென்றவுடன் கேட்கிற அளவை கொடுத்து உடன் அனுப்பி விடுகிறார்கள். இருந்தும் தீபாவளி பொங்கல் நேரங்களில் கூட்டம் மிக அதிகமாகி இருக்கும் அல்வாவை அனைவருக்கும் பகிந்தளிக்க வேண்டிய சூழலில் ரேஷன் முறையும் அமல் படுத்தப்படுமாம் ! ( ஒரு கிலோ கேட்டால் கால் கிலோ தருவது !)

வீடியோவில் இருட்டு கடை அல்வா கடையை கண்டு களியுங்கள் :
இவ்வளவு அற்புதமான, மிக சுவையான, தமிழகத்தின் நம்பர் : 1 அல்வா - ஒரு கிலோ 140 ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா?

ஊருக்கு கிளம்பும் அவசரத்தில் அல்வா வாங்கி கொண்டு வீடியோ படம் பிடித்து விட்டு, 500 ரூபாய்க்கு பேலன்ஸ் வாங்காமல் நான் கிளம்ப ஒருவர் துரத்தியவாறே வந்து மீதம் பணத்தை தந்து விட்டு போனார் !

இங்கு வாங்கப்படும் அல்வா ஒரு வாரம் வரை கெடாது ! நாங்கள் சென்னை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அல்வா வாங்கி வர, அனைவரும் இருட்டு கடை பற்றி ஆர்வமாய் கேட்டார்கள்.

அவர்களிடம் என்ன சொன்னேன் என்று கேட்கிறீர்களா?

கட்டுரையின் முதல் வரியிலிருந்து துவங்குங்கள் !
*******
அண்மை பதிவுகள்:

வானவில்: எடை கூட என்ன செய்யலாம்?

தொல்லை காட்சி - விஜய் அவார்ட்ஸ்- கலைஞர் செய்திகள்

32 comments:

 1. இருட்டுக்கடை அல்வா மட்டுமல்ல சாந்தி ஸ்விட்ஸ் அல்வாவும் அமெரிக்காவில் நண்பர்கள் மூலம் வந்து இறங்கி கொண்டிருக்கின்றன. அதை 2 மாதம் 3 மாதம் கூட ப்ரிஜில் வைத்து சாப்பிடலாம் சுவை குறையாது.

  ReplyDelete
 2. சார் அல்வா பார்சல் வேண்டும்

  ReplyDelete
 3. இதையும் விட்டு வைக்கலியா? எஞ்சாய் பண்ணுங்க.

  இருட்டுக்கடை அல்வா கேள்விப்ட்டே இது வரை என் வாழ்க்கை ஓடிவிட்டது. ஒரு முறையாவது விசிட் செய்ய வேண்டும். பார்ப்போம்.

  ReplyDelete
 4. what? இருட்டுக்கடை அல்வா வெளியூருக்கு அனுப்புறாங்களா? Avargal Unmaigal கொஞ்சம் விவரம் சொல்லுங்க ப்லீஸ்!

  ReplyDelete
  Replies
  1. its available in Nilgris, chennai

   Delete
 5. it is made from samba wheat, not maida. you have to extract the 'milk' from wheat after soaking and grinding.

  ReplyDelete
 6. சூப்பர் கவரேஜ்..

  கொஞ்சநாள் முன்ன ஃபேஸ்புக் சாப்பாட்டுக்கடைல எங்க ஊர் அல்வா பத்தி நான் போட்ட பதிவு.
  “https://www.facebook.com/groups/120396138109622/permalink/174487572700478/
  மதுரையில இருந்து குற்றாலம் கார்ல போனீங்கன்னா, புளியங்குடி மெயின்ரோடில் மார்க்கெட் தாண்டி, இடப்புறம் "லெனின் ஸ்வீட் ஸ்டால்"..

  அல்வா சுடச்சுட வாழையிலையில் வெச்சுத் தருவாங்க.நாக்குல வெச்சா வழுக்கிட்டு உள்ள போகும்.சாப்பிட்டு முடிச்சவுடனே காரம்ன்னு கேட்டா ஒரு சின்ன பேப்பர்ல மிக்சர் குடுப்பாங்க (ஃப்ரீ).அதைச் சாப்பிட்டு ஒரு டீ அடிச்சுட்டு வந்தா சூப்பர்..

  அல்வா சாப்பிட்டு டீ குடிச்சா, டீ ல இனிப்புத் தெரியாது.அதுக்குத்தான் காரம்.

  இவங்களோட இன்னொருக் கடையும் அங்க இருக்கு.அந்தக் கடை பெயர் "மாஸ்கோ".. ஓனர் ஆரம்பத்துல ரஷ்யால வேலை செஞ்சதாச் சொல்லுவாங்க...

  நிற்க.. நான் இங்கச் சாப்பிட்டு பல வருடங்கள் ஆச்சு.. இன்னும் அதே டேஸ்ட் & இப்போ இருக்கிற விலைவாசிக்கு காரம் இனாமாத் தராங்களானுத் தெரியல :)

  ReplyDelete
 7. அப்புறம் “கலந்தாய்வுக் கதை” பாகம் 2 போட்டாச்சு :)
  பாத்திருங்க :)

  ReplyDelete
 8. ஆஹா ரொம்ப நன்றி இந்த மாதரி தகவல்கள் படிப்பதில் இருக்கும் சுவாரசயமே தனிங்க

  ReplyDelete
 9. பல முறை நெல்லை நண்பர்கள் அல்வா கொண்டு வந்த போது சுவைத்ததுண்டு, இன்று உங்கள் மூலம் வரலாற்றையும் சுவைத்தேன். தகவல்களுக்கு நன்றி. என் நண்பர்களும் அறிய, உங்கள் பதிவை பகிர்கிறேன்.

  ReplyDelete
 10. சலாம் அண்ணா,

  அறியாத பல தகவல்களை அறியமுடிந்தது. மிகவும் சுவாரசியமாகவும் இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி..

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 11. மிகவும் பயனுள்ள தகவல். ஆர்வமாக படித்தேன்.

  ReplyDelete
 12. இன்னுமொரு கூடுதல் தகவலுடன் மற்றுமொரு கூடுதல் தகவல் : இருக்கடை அல்வாவில் வெறும் அல்வா மட்டுமே இருக்கும். முந்திரிப்பருப்பு போன்ற எக்ஸ்ட்ரா அயிட்டங்கள் எதுவும் சேர்ப்பதில்லை..அப்படிச் சேர்த்தால் அல்வாவின் ருசியை முழுமையாக உணரமுடியாதாம்...
  எப்பூடி நாங்க திருநேலிக்காரங்கல்லே....

  ReplyDelete
 13. நல்லதொரு ஆவணம்.

  ReplyDelete
 14. சினிமா விட்டு போகும் போது..சினிமாக்கு போகும் போது என லாலா சத்திர முக்கில் அல்வா சுட சுட வாங்கி சாப்பிட்டு கொண்டு இருப்பார்கள்.எனக்கு இருட்டு கடை டேஸ்ட்டை விட லாலா சத்திர முக்கில் அப்போது 80களில் இருந்த சில கடைகள் தான் ரொம்ப பிடிக்கும்.

  ReplyDelete
 15. நல்லதொரு தகவல் தொகுப்பு.

  //கட்டுரையின் முதல் வரியிலிருந்து துவங்குங்கள் !//

  மறுபடியுமா?

  ReplyDelete
 16. ஆனால் சர்க்கரை ரொம்ப தூக்கலாக இருக்கும் அல்லவா? அதனால் கொஞ்சம் அதிகம் சாபிட்டால் கூட பிறகு ஒரு மாதிரி ஆகி விடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. இந்த இருட்டுக்கடை அல்வா எவ்ளோ சாப்பிட்டாலும் திகட்டாது. நீங்கள் தவறாக வேறு கடையில் வாங்கி இருப்பீர்கள் என் நினைக்கிறேன்

   Delete
 17. அருமை.. படிக்கும் போதே நாக்கு ஊருது..

  ReplyDelete
 18. பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் பின்னூட்டங்கள் மூலம் இருட்டு கடை அல்வா குறித்து இன்னும் பல தகவல்கள் அறிய முடிந்தது. மகிழ்ச்சி !

  ReplyDelete
 19. அல்வா மட்டுமில்ல, அருவாளும் பேமஸ் அங்கே ஹா ஹா ஹா ஹா, ஆபீசர் இருட்டுக்கடையை இருட்டோடு திறப்பார் கூட்டிட்டு போங்க.

  ReplyDelete
 20. Anonymous7:30:00 AM

  இனிப்பான பதிவு..யாருக்கெல்லாம் அல்வா கொடுத்திங்க பாஸ்..

  ReplyDelete
 21. இருட்டுக் கடை அல்வா.... என்ன ஒரு சுவை அவர்களது அல்வாவில்...

  அங்கே சாந்தி என்ற பெயரிலும் அல்வா கடைகள் மிகவும் அதிகம்..... எது உண்மையானது என்று அந்த ஊர்க்காரர்களுக்கே வெளிச்சம்.....


  ReplyDelete
 22. நல்ல தகவல்கள்

  ReplyDelete
 23. நான் கடந்த வருடம் சபரிமலை சென்ற போது இந்த இருட்டுக்கடை அல்வா தான் வங்கி வந்தேன். நீங்கள் சொன்ன மாதிரியே அங்கு நாங்கள் விசாரித்த போது எங்களை வேறு கடைய காட்டி ஏமாற்ற பார்த்தார்கள். அந்த சமயத்தில் எங்கள் உடன் பக்தர் ஒருவரின் உறவினர் திருநெல்வேலியில் இருக்க அவரே அந்த நேரத்தில் அங்கு வந்து இந்த கடையில் வாங்கி கொடுத்தார். .. எங்களுடன் வந்த யாரும் ஒரு கிலோ வாங்கவில்லை குறைந்த பட்சம் 3 கிலோ வாங்கப்பட்டது நான் பத்து கிலோ வாங்கினேன் .... வாங்கும் பொது நாக்கில் தண்ணிர் ஊற நான் தனியா சாப்பிட அரை கிலோ வாங்கினேன் ..... கடைசி இரண்டு நாலும் நாங்கள் சென்ற பேருந்தில் ஒரே அல்வா வாசனை தான் ...
  நல்ல பதிவு பல ஞாபகங்களை கிளரிவிட்டிங்க

  ReplyDelete
 24. இருட்டுக் கடை அல்வா பற்றி அருமையான பதிவு. நன்றி திரு மோகன் குமார். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

  ReplyDelete
 25. விக்ரம் கூட தன படத்தில் தன பங்குக்குப் பாட்டில் இந்த வரியைச் சேர்த்து இன்னும் புகழை ஏற்றி விட்டார்!

  ReplyDelete
 26. தகவலும் வீடியோவும் நன்று.

  ReplyDelete
 27. முன்பெல்லாம் அல்வாவை சுடச்சுட வாழை இலையில் கட்டித் தருவார்கள். அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிடும் பொழுது ஒரு தனிச் சுவையும் மணமும் இருக்கும். ஆனால் தற்பொழுது பிளாஸ்டிக் பேப்பரில் கட்டிக் கொடுக்கப்படும் அல்வாவில் அத்தகைய சுவையும் மணமும் இருப்பதில்லை. ஏன்?

  ReplyDelete
 28. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...