Monday, June 6, 2011

தரையில் இறங்கும் விமானங்கள்: விமர்சனம்

"தரையில் இறங்கும் விமானங்கள்" கல்லூரி காலத்தில் வாசித்த நாவல். மீண்டும் ஒரு முறை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.முதன் முதலாக வாசித்த இந்துமதியின் நாவல் இது தான். பின் கொஞ்ச நாள் இந்துமதி எழுத்துக்களை தேடி தேடி வாசிக்கும் அளவு இந்த புத்தகம் ஈர்த்தது. பிற கதைகள் படித்ததும், அவை இந்த புத்தகம் அளவு இல்லாது போனதாக உணர்ந்தேன். .

தரையில் இறங்கும் விமானங்கள் : கதை


விஸ்வம் ஒரு பட்ட தாரி இளைஞன். கொஞ்சம் அறிவு ஜீவி. தனக்கு பிடித்த மாதிரி இலக்கியம் வாசித்து கொண்டும், எழுதி கொண்டும், வருமானம் இன்றி காலம் கழிக்கிறான். இவன் அண்ணன் பரசு. சராசரி இளைஞன். பரசுவிற்கு திருமணம் நடக்கிறது. ருக்மணி என்ற அழகான, அறிவான மனைவி. ருக்மணி தன் கணவரின் தம்பியான விஸ்வத்துடன் இலக்கியம் குறித்து விவாதம் செய்யும் அளவு புத்திசாலி. விஸ்வத்துக்கு ஒரு காதலி உண்டு. (அவள் கதையில் மிக குறைவாகவே வருகிறாள்).

இலக்கியம், நண்பர்களுடன் அரட்டை என்று இருக்கும் விஸ்வம் தன் அண்ணன்- அண்ணி மூலம் வாழ்க்கையின் நிதர்சனம் புரிந்து கொண்டு தனக்கு பிடிக்காவிடினும் ஒரு வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறான். இத்துடன் கதை முடிகிறது.

கதை உங்களுக்கு எந்த படத்தையாவது நினைவு படுத்துகிறதா? அஜித் நடித்த "முகவரி" கிட்ட தட்ட இந்த கதை தான்.

தரையில் இறங்கும் விமானங்கள் பிடிக்க மிக முக்கிய காரணம் அதை வாசித்த வயது. விஸ்வம் பாத்திரத்துடன் வாசிக்கும் பழக்கமுள்ள நம்மை போன்ற யாரும் பொறுத்தி பார்க்க முடியும் ! காரை பெயர்ந்த சுவர்களில் தெரியும் உருவங்களையும், தூரத்தில் செல்லும் மாட்டு வண்டிகளின் சிம்னி வெளிச்சத்தையும் ரசிப்பவனாக, ஒரு நல்ல ரசிகனாக இருக்கிறான் அவன்.
கதையில் விஸ்வம் தன அண்ணன் பரசுவுடன் உரையாடும் இடம் ஒன்று அற்புதமாக இருக்கும். போலவே விஸ்வம் தன் அண்ணியுடன் உரையாடும் பல இடங்கள் மிக அருமை !. கதையை எழுதிய விதத்திலும், இயல்பான உரையாடல்களிலும்தான் வெகுவாக கவர்ந்தார் இந்துமதி.

உதாரணத்திற்கு சில உரையாடல்கள் :

" நம்ம எல்லாருக்கும் எத்தனையோ ஆசை இருக்கு. எப்படியெல்லாமோ இருக்கணும்னு நினைக்கிறோம். ஆனா எது எதுவோ நடந்து போயிடுது. இதையெல்லாம் பார்க்கிற போது பலமான ஏதோ ஒண்ணு நம்மை வழி நடத்திட்டு போகிறதுன்னு தெரியுது. அது வழியிலே நாம போய்த்தான் ஆகணும்னு புரியுது"

" ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை ஒவ்வொருவர்கள்!!"

" எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறது நல்ல நினைப்பு தான். ஆனா தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போறோம்! தெரிஞ்சுகிட்டவங்க எல்லாம் என்ன பண்றாங்க? நாம பண்ணறதைத்தான் பண்றாங்க. அதுக்காக தெரிஞ்சிக்கிறதே அவசியம் இல்லைன்னு சொல்லலை. தெரியாததாலே தப்பு இல்லைன்னு சொல்ல வர்றேன்"

"உங்க புத்திசாலித்தனத்தை நுழைச்சு எல்லாரையும் துருவி பார்க்கிறதை நீங்க விட்டுடனும். எல்லாரையும் அப்படியே ஏத்துக்கணும். நிறை குறைகளோட ஏத்துக்கணும். ஏத்துக்குட்டு சந்தோஷமா இருக்க தெரியனும். அவங்களையும் சந்தோஷ படுத்த தெரியணும்"

****
நண்பர் நிலா ரசிகன் சிறுகதை புத்தக வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் இந்து மதியை சந்திக்க நேர்ந்தது. அப்போதும் இந்த புத்தகம் பற்றி தான் அவரிடம் நான் சிலாகித்து பேசினேன். (மனதுக்குள் இந்த புத்தகம் பற்றி எத்தனைபேர் தான் இவரிடம் பேசியிருப்பார்கள் என்று ஓர் எண்ணம்). இனிமையாக பேசினார். அருகிலிருந்த கணவரை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த ஒரு நாவல் மூலம் இந்துமதிக்கு கிடைத்த பெயர் மற்ற அனைத்து நாவல்களையும் சேர்த்து கூட கிடைக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆயினும் ஒரு எழுத்தாளர் தன் வாழ்நாளில் தனது ஒரே ஒரு புத்தகம் மூலமாவது ஏராளமான மனிதர்களின் மனங்களை தொட்டார் என்றால் அதுவே போதுமே! அந்த விதத்தில் தரையில் இறங்கும் விமானங்கள் என்றும் மனதில் நிற்கிறது.

திண்ணை இணைய இதழில் ஏப்ரல் 17 தேதியிட்ட இதழில் பிரசுரமானது .

பின் குறிப்பு: கிழக்கின் அதிரடி புத்தக திருவிழா தி. நகரில் நடக்கிறது. புத்தகங்கள் நிஜ விலையிலிருந்து நான்கில் ஒரு பங்கு விலைக்கு (சில நேரம் இன்னும் குறைவு) கிடைக்கின்றன. இரண்டு முறை சென்று ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை அள்ளி கொண்டு வந்திருக்கிறேன். சென்னை வாசிகள் தவற விட வேண்டாம் !!

13 comments:

 1. நானும் சமீபத்தில் ஒரு முறை படித்தேன். என்னை மிகவும் பாதித்த நாவல்.

  நல்லதொரு ரிவியூ.

  ReplyDelete
 2. விமானம், தரையில இறங்காம, தண்ணிலையா இறங்கும் -- டவுட்டு..

  ReplyDelete
 3. நிங்கள் சொல்லியுள்ளது மிகவும் சரி! இள‌ம் வயதினர் எல்லோரையுமே அந்தக் காலத்தில் தன் கதாபாத்திரங்களால் மிகவும் ஈர்த்த நாவல்! முக்கியமாக அந்த அண்ணி கதாபாத்திரம் தன் மென்மையான குனங்கள் பலவற்றால் எல்லோரையுமே கவர்ந்து விடும். அம்மி அரைக்கும் போது கூட, அதை ஒரு நளினத்துடன் எந்த சப்தமுமில்லாமல் அரைப்பதாக எழுத்தாளர் இந்துமதி சொல்லியிருப்பார்! அதைப்படித்த பிறகு அம்மியில் அரைக்க நேரும்போது கூட அந்த நினைவு வந்து அதே போல லாவகமாக அரைக்கத் தோன்றியிருக்கிறது அந்த வயதில்! எப்போதோ படித்த நாவலை நினைவுபடுத்தியதற்கு அன்பு நன்றி!!

  ReplyDelete
 4. அடிக்கடி திண்ணையில எழுதுறீங்க.. நீங்க one of the ஆசிரியரா?
  நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள். ;-))

  ReplyDelete
 5. நன்றி வரதராஜலு சார்
  **
  மாதவன் "கடிக்காக" நீங்கள் சொன்னாலும் தலைப்பு எதற்காக என்கிற காரணம் சொல்ல நீங்கள் கேட்டது உதவுகிறது. கல்லூரி காலத்தில் "பறந்து கொண்டிருக்கும்" மனித மனம் பின் வாழ்வின் நிதர்சனம் புரிந்து தரையில் இறங்குவதை தான் இந்துமதி தலைப்பாக வைத்துள்ளார்
  **
  நன்றி மனோ மேடம். ஆண்களுக்கு விச்வம் கேரக்டர் பிடித்தது போல் பெண்கள் அந்த அண்ணியை ரசித்திருப்பார்கள் என நீங்கள் எழுதியது படித்து புரிந்து கொண்டேன்
  **
  RVS, நான் திண்ணை ஆசிரியர்களில் ஒருவரா? ஏன் இந்த கொலைவெறி?
  புத்தக விமர்சனம் மட்டும் திண்ணை அல்லது வல்லமைக்கு அனுப்பிட்டு அப்புறம் ப்ளாகில் போடுறேன்
  நன்றி

  ReplyDelete
 6. அருமையான ஒரு நாவலை அழகாக விபரித்து எழுதியுள்ளீர்கள் நண்பரே! தரையில் இறங்கும் விமானங்கள் எம் மனங்களைவிட்டு ஒருபோதுமே இறங்காது என்பதி திண்ணம்!

  நண்பரே நான் இப்போதுதான் புதியதொரு வலைப்பூவைத் தொடங்கியுள்ளேன்! உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்! நன்றி

  ReplyDelete
 7. என்னை இளமைக்காலத்தில் மிகவும் கவர்ந்த நாவல். தொலைக்காட்சிதொடராகக்கூட வந்தது.ரகுவரன் நடித்ததாக ஞாபகம்.சில எபிசோடுகள் பார்த்தபின் தேடியெடுத்து வாசித்தேன்.எல்லோரையும் அவரவர் நிறைகுறைகலளோடு அப்படியே ஏத்துக்கணும் என்ற வரிகள் இன்னும் என் நெஞ்சில் நிக்கிறது.

  ReplyDelete
 8. நன்றி குமரன். புத்த வலை பூவிற்கு வாழ்த்துகள்
  **

  நன்றி சுருதி ரவி. ஆம் இந்த நாவல் தொடராக டிவியில் வந்தது, நினைவூட்டியமைக்கு நன்றி

  ReplyDelete
 9. நல்ல அசைபோடல்.

  பின்னர் இது சென்னைத் தொலைக்காட்சியில் சீரியலாக வந்ததோ?

  ReplyDelete
 10. ஆம் ஹுசைனம்மா சென்னை தொலைக்கட்சியில் தொடராக வந்தது. அதனை விட இந்துமதி எழுத்தில் வாசிக்க தான் இந்த புத்தகம் செம சுவாரஸ்யம்

  ReplyDelete
 11. அன்புள்ள மோகன் குமார்,

  உங்களைப் போலவே எனக்கும் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த நாவலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

  என்னை மிகவும் கவர்ந்த வரிகள்...

  "நமக்கு யார் கூடவும் சந்தோஷமா இருக்கத் தெரியணும். எப்பவும் சந்தோஷமா இருக்கத் தெரியணும். எங்கப்பா அடிக்கடி சொல்லுவார்; சந்தோஷமா இருக்கத்தான் நாமெல்லாம் பிறந்திருக்கோம்னு. சிரிச்சுண்டே இருந்துட்டா சந்தோஷமா இருந்துடலாம் பார். அந்தச் சிரிப்பு மூஞ்சிலேயும், மனசுலேயும் வந்துட்டா சந்தோஷத்துக்குக் குறைச்சலே இல்லேம்பார். அவர்தான் எனக்குச் சிரிக்கக் கத்துக் கொடுத்தார்; எதுக்கும் -- எப்போதும் சிரிக்கணும்னு சொல்லிச் சொல்லிப் பயிற்சியாகவே மாத்திட்டார்.

  >>இந்த ஒரு நாவல் மூலம் இந்துமதிக்கு கிடைத்த பெயர் மற்ற அனைத்து நாவல்களையும் சேர்த்து கூட கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆயினும் ஒரு எழுத்தாளர் தன் வாழ்நாளில் தனது ஒரே ஒரு புத்தகம் மூலமாவது ஏராளமான மனிதர்களின் மனங்களை தொட்டார் என்றால் அதுவே போதுமே! அந்த விதத்தில் தரையில் இறங்கும் விமானங்கள் என்றும் மனதில் நிற்கிறது.

  நீங்கள் கூறியுள்ளது அனைத்தும் உண்மையே....

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. இந்துமதி இதுபோல் இன்னொரு நாவல் எழுதியதாக இல்லை. மினக்கெட்டு எழுதவேண்டுய தேவை அவருக்கு இல்லாமல் போயிருக்கலாம். அதனால் நல்ல கதைகள் இன்னும் எழுதும் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டார் போல

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...