Thursday, January 7, 2016

சார்லி - சுவாரஸ்ய மலையாள படம் விமர்சனம்

ப்படி ஒரு வித்யாசமான படம் பார்த்து எவ்வளவு காலம் ஆயிற்று?

காதல் அல்லது பழிவாங்கல் - இந்த இரண்டு கதைகளுக்குள்ளேயே பல சினிமா உழலும் போது மலையாளத்தில் அவ்வப்போது இப்படி - அவுட் ஆப் தி பாக்ஸ் - யோசித்து சில படங்கள் வருகின்றன..

முதல் 10 நிமிடம் பர்ஸ்ட் கியரில் மெதுவாக போகிறது .. அப்புறம் சின்ன சின்னதாக சம்பவங்களை அடுக்க ஆரம்பிக்கிறார்கள்.. ஒரு அழகான புதிர் போல கதையும் திரைக்கதையும் விரிகிறது." எப்படிடா இப்படி கதை யோசிக்கிறீங்க? கதை இருக்கட்டும்... எப்படி இந்த மாதிரி ஒரு ஸ்க்ரீன் ப்ளே யோசிக்க முடியுது !" என இன்டர்வெல்லில் வியந்து போனேன்.

இரண்டாம் பகுதி - அந்த புதிரை நமக்கு விளக்க முற்படுவதில் கழிகிறது.. எனவே முதல் பகுதி அளவு சுவாரஸ்யம் இல்லை ( ஆனால் படம் முடிந்து வெளியே வந்த சிலர் - இரண்டாம் பாதி தான் பிச்சு உதறிட்டாங்க என பேசிக்கொண்டு சென்றனர் !! How perception differ from person to person !!)

படத்தில் காதலும் இருக்கிறது.. ஆனால் அது ஊறுகாய் தான்.

ரசித்த பல விஷயங்களில் சில மட்டும் இங்கு ..

முதலில் பல வண்ண பாத்திரங்கள்.. ஹீரோ கேரக்டரை விடுங்கள்.. மற்ற சிறு பாத்திரம் ஒவ்வொன்றும் தனித்து தெரிகிறது; திருடன் கேரக்டர், எய்ட்ஸ் நோயாளியாக வரும் கல்பனா, நெடுமுடி வேணு என எத்தனையோ சிறு பாத்திரங்களிலும் ஒரு தெளிவும் அழகும்  மிளிர்கிறது.

ஹீரோ காரக்டர்.. சான்சே இல்லை. முதல் ஒரு மணி நேரம் - ஹீரோவை பற்றி மற்ற பலரும் ஒவ்வொரு சம்பவம் பகிர்வதிலேயே கழிகிறது.. ஆனாலும் அலுக்க வில்லை.

ஹீரோ சார்லி - தான் சந்திக்கும் பலரையும் ஒரே நாளில் ஆச்சரியபடுத்தி விட்டு அவர்கள் வாழ்விலிருந்து கடந்து போகிறான். படத்தின் இறுதியில் சார்லி சொல்கிறான் " எனக்கு மற்றவர்களுக்கு சர்ப்ரைஸ் தந்து -  சந்தோஷப்படுத்தி - அந்த நேரம் அவர்கள் முகத்தை பார்ப்பது ரொம்ப பிடிக்கிறது" - இந்த பாத்திரத்தை இதை விட எளிமையாக சொல்ல முடியாது !

நிஜ வாழ்வில் இப்படி ஒருவன் இருக்கவே மாட்டான் - எனினும் - படம் பார்க்கும் போது அது தோன்றவே செய்யாமல் ரசிக்க முடிகிறது..அற்புதமான பின்னணி இசை.. படத்திற்கு apt -ஆக பொருந்தி போகிறது.

முதல் பாதியில் சார்லி இருந்த அந்த சிறு வீடு - அங்கிருக்கும் சிறு சிறு பொருட்கள் - அவை தரும் சர்ப்ரைஸ்கள் - கலை இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் !

படம் மலையாள culture - ஐ ஆங்காங்கு தொட்டு கொண்டே பயணிக்கிறது.. முடியும் போது காணும் திருச்சூர் பூரம்  திருவிழா உட்பட..

படத்தின் பின்பகுதி தமிழகத்தில் எதோ ஒரு ஊரில் நடப்பதாக சொல்கிறார்கள்.. என்ன இடம் அது.. அழகு அள்ளிக்  கொண்டு போகிறது !!

துல்க்கர் மற்றும் பார்வதி என்ற இரு அட்டகாச நடிகர்களுக்கு நன்கு தீனி போடும் பாத்திரம். திரையில் ஒருவர் வரும்போது மற்றவர் இருக்கவே மாட்டார். கதை அமைப்பு அப்படி.. கிளைமாக்சில் தான் இருவரும் சந்திக்கவே செய்கிற "காதல் கோட்டை" பாணி கதை.. இந்த இருவர் நடிப்பும் தான் படத்தை நன்கு நிறுவுகிறது..

இதனை தமிழில் எடுக்க ஏற்கனவே போட்டியாம்.. இப்படத்திற்கு செய்யும் ஆகச் சிறந்த மரியாதை அதனை அப்படியே விட்டு விடுவது தான். தமிழில் இதனை மிகச் சரியாக எடுப்பார்களா என்பது பெரும் கேள்விக்குறி..

ஒருவேளை எடுத்தால் ஹீரோ பாத்திரத்திற்கு முதல் சாய்ஸ் - விஜய் சேதுபதி; இரண்டாவது சாய்ஸ்- தனுஷ். .

படத்தை திரைக்கதை எழுதி இயக்கிய மார்ட்டின் ப்ரக்கட்- டிற்கு தான் மிக அதிக பாராட்டு சேரவேண்டும். இது இவரது மூன்றாவது படமென்றும் - முதல் 2 படங்களும் கூட வெற்றி பெற்றதாகவும் அறிகிறேன். அந்த 2 படங்களையும் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது சார்லி !

இறுதியாக..

அதிக எதிர்பார்ப்பின்றி சென்றதால் தான் எங்களுக்கு பிடித்தது. ரொம்ப எதிர்பார்க்காமல் பாருங்கள்.

சார்லி - சர்ப்ரைஸ் அண்ட் ஸ்வீட் விருந்தாளி !

2 comments:

  1. மலையாள படம் இங்கு பார்க்க கிடைக்காது. நன்றி.

    ReplyDelete
  2. மலையாள படம் இங்கு பார்க்க கிடைக்காது. நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...