Friday, July 13, 2018

வானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்

பார்த்த படம்- இரும்பு திரை 

பார்த்து ஓரிரு மாதம் ஆகிவிட்டது; ப்ளாக் இப்போது தான் எழுதுவதால் படம் பற்றி சில வரிகள்...

நிச்சயம் வித்யாசமான கதைக்களன்.. சொல்லப்படவேண்டிய விஷயம் தான் .. ஆன்லைனில் நாம் தரும் பல்வேறு தகவல்கள் எப்படி விற்கப்படுகிறது -அது எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது தான் பின்புலம்.

Image result for irumbu thirai

ஆனால் தேவைக்கு சற்று அதிகமாகவே பயமுறுத்திவிட்டனர். நெட்பாங்கிங் பயன்படுத்துவதே ரிஸ்க்; ஆன்லைனில் பொருள் வாங்குவது - தகவல் தருவதே அபாயம் என சற்று ஓவரா தான் போயிட்டாங்க. ஒரு லிமிட் உடன் நிறுத்தியிருக்கலாம்.

தனி ஒருவன் போல வில்லன் காரக்டர் மிரட்டலாக வைத்து எடுக்க எண்ணம் போலும். அந்த அளவு இல்லாவிடினும் அதில் முக்கால் பங்காவது கலக்குகிறார் வில்லன் அர்ஜுன்.

ஒரு டூயட் கூட இல்லாமல் செல்கிறது படம். விஷால் குடும்பம் குறித்த டீட்டையிலிங் குறைத்திருந்தால் கதை இன்னும் ஷார்ப் ஆக இருந்திருக்கும்

வித்தியாச பின்புலனுக்காக நிச்சயம் ஒரு முறை காண வேண்டிய படம் !

இப்படம் - எங்க ஊர் மடிப்பாக்கம் - குமரன் தியேட்டரில் பார்த்தோம். தனி ஒருவனுக்கு பிறகு மீண்டும் இந்த தியேட்டருக்கு இப்போது தான் செல்கிறோம். அப்படம் பார்த்த போது தியேட்டர் மிக நன்றாக பராமரிக்கப்படுவது குறித்து எழுதியிருந்தேன்.. இப்போது பார்த்தால் சீட்கள் கிழிந்தும் - கழிவறை சுத்தமின்றியும் இருக்கிறது; இன்னொரு முறை இங்கு அழைத்து வராதீர்கள் என மகளும் மனைவியும் சொல்லும்படி ஆகிவிட்டது; வேளச்சேரி PVR-ம் பீனிக்ஸ் மாலும் தான் சரி ... போலிருக்கிறது !

அற்புத சென்னை கிளைமேட் 


சென்னைக்கு என்ன ஆனது.. நான்கைந்து நாளாக வெய்யில் அதிகமின்றி பகலும் கூட இனிதாக இருக்கிறது; மதியம் ஒருமணிக்கு வெளியில் சென்று விட்டு இல்லம் திரும்பினால் வெய்யில் மெல்லிய மந்தகாசமாக அடிக்கிறது.  மாலையில் அளவோடு மழை பெய்து மகிழ்விக்கிறது. சென்னையை சிலருக்கு பிடிக்காத ஒரே காரணம் அதிக வெய்யில் தான்..வெளியூர் ஆட்கள் சென்னைக்கு  டிசம்பர் - ஜனவரியில் வருவதை விரும்புவதும் இதனால் தான். இப்போதைய கிளைமேட் போல் வருடத்தில் பாதி நாள் இருந்தாலே சென்னை சொர்க்கமாகி விடும்!

போனில் வரும் மரண தகவல் 

கடந்த சில மாதங்களில் இரண்டு முறை - நண்பர் தவறியதாக அவரது போனில் இருந்தே தகவல் வந்தது. நண்பர் மரணத்துக்கு பின் அவர்கள் உறவினர் - அவரது போனில் இருந்தே - இறந்தவரின் நண்பர்களுக்கு அனுப்பினர்...

இனி இது வழக்கமாகி விடுமா? நான் இறந்த பின்னும் எனது போனில் இருந்து தான் குடும்பத்தினர் தகவல் அனுப்புவார்களா என சிந்தனை ஓடியது

நண்பர் போனில் இருந்தே அவர் இறந்த தகவல் வருவது பெரும் அதிர்வை/ அதிர்ச்சியை உண்டாக்கவே  செய்கிறது!

அண்மையில் இறந்தவர் - 56 வயது; மகனுக்கு திருமணம் முடிந்த மறுநாள் உடல் நலம் குன்றியது. மகனுக்கு ரிசப்ஷன் நடக்க இருந்ததை இதனால் தள்ளி வைத்தனர். மருத்துவ மனையில் இருந்த போதும் அடுத்த சில நாளில் இதய பாதிப்பால் - இறந்துவிட்டார்

மனிதர் 56 வயதில் - 80 வயதுக்கான உழைப்பை கொடுத்து விட்டார். எப்போதும் வேலை-வேலை தான். மிக அவசரமாக தான் தொலை பேசியில் பேசுவார். தன்னால் முடிந்ததை விட அதிகம் இழுத்து போட்டு கொண்டு செய்துள்ளார் என இப்போது தான் யோசிக்கிறேன்

நிதானமாக - ரசித்து வாழ்வது எத்தனை முக்கியம் என்பதை இவரது மரணம் உணர்த்தியது !

படித்ததில் பிடித்தது 

ஒரு விஷயத்தை நன்றாக செய்து முடிப்பதோடு உன் வேலை முடிந்தது. உன்னை பற்றி பேசுவதை மற்றவர்களுக்கு விட்டு விடு

பிக் பாஸ்

பிக் பாஸ் என்பது 100 நாள் நடக்கும் ஒரு சீரியல். இதில் பல விஷயங்கள் (எல்லாம் அல்ல !) ஸ்க்ரிப்ட் தான் !

தினம் சண்டை வரவேண்டும் என்பது அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை போல.. அப்போது தான் சுவாரஸ்யம் இருக்கும் என. ஆனால் எரிச்சல் தான் வருகிறது

இவ்வாரம் பாலாஜி,  நித்யா,பொன்னம்பலம் மற்றும் யாஷிகா எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகியுள்ளனர். பாலாஜி,  நித்யா- வை அவ்வளவு சீக்கிரம் விட்டு விட மாட்டார்கள். (இந்த சீரியலில் முக்கிய சஸ்பென்ஸ் அவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்களா என்பது தான்...ஆகவே... )


யாஷிகா போன்ற அழகு பெண்ணை அவ்வளவு சீக்கிரம் அனுப்புவது சிரமம்.. எனவே பொன்னம்பலம் தான் கிளம்புவார் என நினைக்கிறேன்

ஆனால் இணையத்தில் மிக அதிக சப்போர்ட் இருப்பது பொன்னம்பலத்துக்கு தான். மாறாக மிக அதிக எதிர்ப்பு இருப்பது யாஷிகாவிற்கு.

நிஜமாக ஓட்டுகளை எடுத்தால் யாஷிகா தான் அவுட் ஆக வேண்டும்... எலிமினேஷனில் மேட்ச் பிக்சிங் இருக்கா என்பது இவ்வார இறுதியில் தெரியும் !

கவிதை பக்கம்

தகப்பனாக இருப்பது
---------------------------------

“அப்பா இன்னும் வரலை”
எனக் கூறும்
மகனின் பொய்யைக்
கேட்டுக்கொண்டு இருக்கிறேன்,

வீட்டினுள்
இருந்தபடி.

“போயிட்டாருப்பா”
எனத் திரும்பும்
மகனின் முகம்
காண இயலாததாய்
இருக்கிறது.

கடன்காரனாய்
இருப்பதையும்விடக்
கொடுமையானது

சிலநேரம்...

தகப்பனாய்
இருப்பது.

- பா. ராஜாராம்

இக்கவிதையை எழுதிய அற்புதமான மனிதர் பா. ராஜாராம் மறைந்தது இந்த வாரம் கிடைத்த இன்னொரு அதிர்ச்சி !

கிரிக்கெட் கார்னர்

இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடு செல்லும்போதெல்லாம் எனது எதிர்பார்ப்புகளை குறைத்தே வைத்து கொள்வேன். இம்முறை அற்புத பார்மில் இருக்கும் இங்கிலாந்து அணியை 20-20ல் 2-1 என வென்றது மிக ஆச்சரியம் + மகிழ்ச்சி. வென்ற இரண்டு மேட்ச்சும் நிறைய பந்து மீதம் இருக்கும் போது வென்றனர். தோன்ற மேட்ச் கடைசி வரை கொண்டு சென்றனர்.

ஹர்டிக் பாண்டியா நல்லதொரு பவுலிங் ஆல் ரவுண்டர் ஆக உருவாகி வருவது நிறைவு. சில நேரம் கண்டிஸ்டன்ட் ஆக இருப்பதில்லை என்றாலும் கூட இவர் போன்ற மல்டி டைமன்சன் வீரர் அவசிய தேவை தான் !

KL ராகுல் எனக்கு மிக பிடித்த வீரர்களுள் ஒருவர்.  அவருக்கு நிறைய வாய்ப்புகள் தற்போது வழங்க துவங்கியுள்ளார். பயன்படுத்தி கொண்டால் இந்திய அணிக்கும் அவருக்கும் மிக நல்லது !

நேற்று துவங்கிய ஒரு நாள் தொடரிலும் முதல் போட்டியை 40 ஓவரில் விளாசி அட்டாகாசமாக துவங்கியுள்ளது இந்திய அணி.

குல்தீப் பந்து வீச்சில் ஆறு  விக்கெட் எடுக்க, ரோஹித் இன்னொரு பெரிய சதம் அடித்து வெற்றி தேடி தந்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் இந்தியா இதுவரை ஒரு நாள் போட்டி தொடர் வென்றுள்ளதா என தெரியவில்லை; ஆனால் அப்படி வெல்ல இது நல்லதொரு வாய்ப்பு ! பார்க்கலாம் !

2 comments:

  1. Old News to Latest News in this வானவில்.

    ReplyDelete
  2. படிக்க சுவராஸ்யமாக இருக்கிறது

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...