Thursday, September 5, 2019

வானதி டீச்சர்

        பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் பார்த்திருக்கிறீர்களா? பள்ளி மாணவர்களுக்கும்- ஆசிரியைக்கும் உள்ள அன்பை கவிதையாய் சொன்ன அற்புதமான படம் அது. படத்தில் வரும் ஷோபா டீச்சர் போல ஒவ்வொருவருக்கும் இளம் வயதில் ஒரு டீச்சர் இருந்தே தீருவார். எங்களுக்கு அது ..வானதி டீச்சர் !

ஆறாவது, ஏழாவது, எட்டாவது - மூன்று வருடமும் எங்களுக்கு அறிவியல் எடுத்தார். அறிவியல் கான்செப்டுகளுக்கும் எனக்கும் அன்று முதல் இன்று வரை காத தூரம். ஆயினும் அந்த மூன்று வருடமும் அறிவியலில் முதல் மார்க் எடுத்தேன் என்றால் அது வானதி டீச்சருக்காக !

எனது இரு அண்ணன்கள்- அக்கா அனைவரும் அதே பள்ளியில் படித்திருந்தனர். மூவரும் நன்கு படிப்பவர்கள் என்பதால் அதே குடும்பத்தை சேர்ந்த நானும் நன்கு படிப்பேன் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. அது ஒரு சுமையாய் என் மீது இறங்கியது. அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியதாகி விட்டது !

அறிவியலுக்கு வானதி டீச்சர் என்றதும் அண்ணன்களும் அக்காவும் சொன்னது : " அப்டியா ..அப்ப அந்த பாடத்தை பத்தி கவலைப்பட வேண்டாம்" .

படம்: இணையத்திலிருந்து
வானதி டீச்சர் புடவை கட்டியிருக்கும் விதமே மிக கண்ணியமாய் இருக்கும். ரெண்டுங்கெட்டான் வயது பசங்க - அவங்க மனசில் சலனம் வரக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வு அதில் இருக்கும்.

பாடத்தை தவிர வேறு விஷயம் பக்கம் அதிகம் போக மாட்டாங்க. ஆனா செம ஹியூமர் சென்ஸ் ! டக்குன்னு அந்த நேரத்துக்கு தகுந்த ஜோக் அடிப்பாங்க ! (வேறு சில டீச்சர்களும் ஜோக் அடிப்பார்கள் எனினும் அது தயாரிக்கப்பட்ட ஜோக்காய் இருக்கும். அந்த டீச்சர்கள் அடுத்தடுத்த வருஷமும் அந்த இடத்தில் அதே ஜோக்கை சொல்லிக் கொண்டு இருப்பார்கள். )

வானதி டீச்சரின் ஜோக் எல்லாருக்கும் புரிஞ்சிடாது. கொஞ்சம் உலக விஷயமும், புத்தக அறிவும் இருந்தால் தான் முழுசா புரியும். உதாரணமாய் அரசியல் வாதிகளுக்கு இருக்கும் பட்ட பெயரை வைத்து யாரையாவது கிண்டல் செய்வார்கள்.  அந்த நேரத்தில், அந்த இடத்தில் ஏன் அந்த பெயர் சொல்கிறார்கள் என்பது வகுப்பில் சிலருக்கு தான் புரியும்.

கிளாசில் தப்பு பண்ணாலோ, ஒழுங்கா பதில் சொல்லாட்டியோ டீச்சர் கிள்ளுவது பயங்கரமா வலிக்கும். வயிற்றில் உள்ள சதையை ரெண்டு விரலால் பிடிச்சு நல்லா கிள்ளுவாங்க. ஓரிரு முறை பாடம் நடத்தும் போது பக்கத்தில் பேசி அப்படி கிள்ளு வாங்கிருக்கேன். நன்கு வளர்ந்த பெரிய பையன்களை அப்படி கிள்ள மாட்டாங்க. "டீச்சர் நம்மளை கிள்ள மாட்டாங்க இல்ல" என்று சிரிப்பார்கள் அவர்கள். ஆனால் அவர்களுக்கு மட்டும் ஸ்கேல் பேசும் !

என்றைக்குமே பத்துக்கு மூன்று ஆசிரியர்கள் தான் நன்கு பாடம் நடத்துபவர்களாய் இருக்கிறார்கள். வானதி டீச்சர் நடத்தும் அறிவியல் பாடம் வீட்டில் நான் படித்த மாதிரி நினைவே இல்லை. கிளாசிலேயே நடத்தி, பாடத்தை முழுசாய் புரிய வைத்து அங்கேயே சொல்லியும் காட்டி விடுவோம். வீட்டில் படிக்க வேண்டிய அவசியமே இல்லை.

நம்மை விட பெரியவருக்கு நன்றி சொல்லணும்னா "Thank You" ன்னு சொல்லணும். நமக்கு சரி சமமான அல்லது குறைந்த வயது ஆட்கள் என்றால் " தேங்க்ஸ்" அப்படின்னு சொல்லலாம் என டீச்சர் சொல்லி தந்திருந்தார். ஒரு முறை அலமேலு என்கிற வயதான டீச்சர் தந்த ஒரு பொருளை திரும்ப தந்து விட்டு " தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடு" என்றார் வானதி டீச்சர். வகுப்பில் எல்லாரும் பார்க்கும் போது டீச்சரிடம் கேட்டேன் " அலமேலு டீச்சர் உங்களை விட வயசானவங்க ஆச்சே. நீங்க எப்படி தேங்க்ஸ் சொல்லலாம்? தேன்க் யூ தானே சொல்லணும்?"

சிரித்து விட்டு டீச்சர் சொன்னார் : " நீ என்னை விட சின்னவன் இல்லையா? அதான் உன்னிடம் தேங்க்ஸ்ன்னு சொல்றேன்; நீ அவங்களிடம் சொல்லும் போது தேன்க் யூ ன்னு சொல்லிடு"

டீச்சர் முதலில் தவறு செய்து விட்டு அப்புறம் சமாளித்தார் என்றாலும், அவர் சமாளித்த விதம் அவ்வளவு அழகாய் இருந்தது !

எனது அக்காவிற்கு மருத்துவ படிப்புக்கு சீட் கிடைத்த போது வானதி டீச்சரை பார்த்து ஸ்வீட் கொடுத்து வர டீச்சர் வீட்டுக்கு என்னை அனுப்பியது இன்னும் நினைவில் இருக்கு.

முதல் முறை அப்போது தான் அவர்கள் வீட்டுக்கு செல்கிறேன். மிக சிறிய வீடு. இனிப்பை பெற்று கொண்ட அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி ! தான் அறிவியல் சொல்லி கொடுத்த பெண் இன்று டாக்டர் ஆக போகிறார் என்று ஆனந்தம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. வகுப்புகளில் டீச்சர் அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்து நான் பார்த்ததில்லை.

அதன் பின் அவ்வப்போது டீச்சருக்கு எங்கள் ஊர் லைப்ரரியில் கதை புத்தகம் எடுத்து தர அவர்கள் வீட்டுக்கு போவேன். டீச்சருக்கு ஒரே மகன். என்னை விட நான்கைந்து வயது சிறியவன். கணவர் எதோ ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

சுஜாதா மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் இருவரின் கதைகளை தான் டீச்சர் மிக விரும்பி படிப்பார். இந்த இருவர் எழுதிய புத்தகங்களை தான் எடுத்து வர சொல்லுவார். சுஜாதா புத்தகங்கள் நான் அதிகம் வாசிக்க ஆரம்பித்ததும் இந்த கால கட்டத்தில் தான்.

பொதுவாய் ஒரு வருடம் முடிந்து அடுத்த வகுப்பு போகும் போது சென்ற வருடம் ஏழு "ஏ' வில் அறிவியல் எடுத்தவர்கள் இவ்வருடம் ஏழு " பி" க்கு அறிவியல் எடுப்பார்கள். எட்டாவது செல்லும் போது அப்படி பார்த்தால் வானதி டீச்சர் எடுக்க மாட்டார்; வேறு யாரோ வரவேண்டும். இதை ஏழாவது படிக்கும் போதே ஒரு முறை கேட்டோம் " அடுத்த வருஷம் நீங்க வர மாட்டீங்களா டீச்சர் ? " " ஆமா அடுத்த வருஷம் வேற டீச்சர் அறிவியலுக்கு வருவாங்க " என்றார்.

ஆனால் எட்டாவது அறிவியல் முதல் வகுப்புக்கு டீச்சரே வந்த போது சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனோம். பள்ளியில் எப்படி அந்த முடிவு எடுத்தார்களோ தெரியாது ஆனால் டீச்சர் எங்கள் வகுப்புக்கு அவர்கள் தான் எடுக்க வேண்டும் என்று கேட்டு வாங்கி கொண்டு வந்ததாக நாங்கள் உறுதியாக நம்பினோம்.

அந்த பள்ளியை விட்டு ஒன்பதாம் வகுப்பு நான் வேறு பள்ளிக்கு மாறி விட்டேன். அதன் பின் டீச்சரை பார்ப்பது, பேசுவது எல்லாம் குறைந்து விட்டது. ஆனால் நண்பர்கள் நந்து, மதுவிடம் டீச்சர் பற்றி அவ்வப்போது விசாரிப்பேன்

எனக்கு திருமணம் நிச்சயமான போது, நண்பர்கள் அனைவரும் வெளியூரில் செட்டில் ஆனதால் ஊரில் பத்திரிக்கை வைக்க நான் செல்லவே இல்லை. அப்பாவும் கூட டீச்சருக்கு நியாபகமாய் பத்திரிகை வைத்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் வெளியூரில் திருமணமாகி பின் நானும், என் மனைவியும்  ஊரில் இருந்த சில மணி நேரங்களில் சரியாக வீட்டுக்கு வந்து டீச்சர் என்னை ஆசிர்வாதம் செய்தார்கள். என்னிடம் இருக்கும் டீச்சரின் ஒரே புகைப்படம் அன்று எடுத்தது தான். எனக்கு மனைவியுடன் டீச்சர் காலில் ஆசி வாங்கிய போது ஏனோ அழுகையே வந்து விட்டது. ஒரு நல்ல மாணவன் - நல்ல ஆசிரியரின் மனதில் என்றும் இருப்பான் என்பதை, டீச்சர் என்னை அன்று வாழ்த்த வந்தது உணர்த்தியது .

டீச்சரை கடைசியாய் நான் பார்த்தது அன்று தான். அவர்களை பார்த்து 15 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. அதன் பின் டீச்சரின் கணவருக்கு விபத்தில் கால்களை அகற்றும் படி ஆனது. டீச்சர் அந்த கஷ்டமான காலத்தை தாண்டி வந்தார் என்று நண்பர்கள் மூலம் அறிந்தேன். எனக்கு அந்த தகவல் பல மாதங்கள் கழித்து தான் சென்னையில் தெரிந்தது. டீச்சர் இன்று ரிட்டையர் ஆகி விட்டார். இப்போது எங்கள் ஊரில் வசிக்க வில்லை. எங்கு வசிக்கிறார் என தெரியாது.

இப்போது நரைத்து போய்,வயதான தோற்றத்தில் வானதி டீச்சர் இருக்கலாம். அவரை அப்படி பார்க்க விரும்பாததே கூட நான் பல ஆண்டுகளாய் பார்க்க முயலாததன் காரணமாய் இருக்க கூடும். இன்றும் வானதி டீச்சர் என்றால் எட்டாம் வகுப்பு கிளாஸ்ரூமில் அவர் கரும்பலகை அருகே நிற்கிற சித்திரம் தான் நினைவுக்கு வருகிறது !

இந்த முறை ஊருக்கு செல்லும்போது டீச்சர் எங்கு வசிக்கிறார் என நிச்சயம் விசாரிக்க வேண்டும் என தோன்றுகிறது. டீச்சரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் " உங்களை பற்றி நான் எழுதியிருக்கேன்" என சொல்லணும்;  பின் அவர் விரும்பினால் இந்த பதிவின் பிரிண்ட் அவுட் அவருக்கு தரவேண்டும். வாசித்தால் மகிழ்வார் என்று நினைக்கிறேன்.

ஆண்டவன் அந்த வாய்ப்ப்பை தருகிறானா என்று பார்ப்போம் !

இந்த களிமண்ணை ஒரு உருவமாய் மாற்றிய எத்தனையோ கைகளில் வானதி டீச்சரின் கையும் ஒன்று ! அவர் சொல்லிகொடுத்த விஷயத்துடனே இப்பதிவை முடிக்கிறேன் :

தேன்க் யூ டீச்சர் !

56 comments:

 1. Anonymous7:28:00 AM

  மனதை நெகிழ வைத்தது. ஆண்டவன் உங்களுக்கு சீக்கிரமே அவரைச் சந்திக்கும் வாய்ப்பைத் தர பிரார்த்திக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாலஹனுமான். அவரை நிச்சயம் எங்கேனும் பார்ப்பேன் என்று தான் எனக்கும் தோன்றுகிறது

   Delete
 2. எனக்கும் கூட என்னுடைய பழைய ஆசிரியர்களின் நினைவு வருகிறது... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்கூல் பையன்

   Delete
 3. ரொம்ப டச்சிங்கா இருக்கு. nice

  ReplyDelete
  Replies

  1. மகிழ்ச்சி வரதராஜலு

   Delete
 4. Replies
  1. வாங்க ஜோதிஜி. மகிழ்ச்சி நன்றி

   Delete
 5. பதிவைப்படிக்கும் பொழுது எனக்கும் பழைய ஆசிரியர்கள மனக்கண் முன் வரிசைகட்டிக்கொண்டு நிற்கின்றனர்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா நன்றி ஸாதிகா

   Delete
 6. ஆசிரியரைப் பற்றிய நியாபகங்கள் அருமை சார்...

  ReplyDelete
 7. வெகு நாட்களுக்கு பிறகு இந்த பதிவை வாசித்தேன்... என் பால்யா காலம் என் கண்முன்னே வந்து சென்றது... எனக்கு அது போல நிறைய டீச்சர்கள் இருக்கின்றார்கள்....நன்றாக பிரசன்ட் பண்ணி இருக்கிங்க... மோகன்.

  ReplyDelete
  Replies

  1. வாங்க ஜாக்கி மிக மகிழ்ச்சி

   Delete
 8. மனதை நெகிழ வைத்த பதிவு. படிக்கும் போது என் ஆசிரியர்களின் முகமும் நினைவில் வந்து சென்றது. விரைவிலேயே அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும்..

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க ரோஷினி அம்மா

   Delete
 9. அருமையான பதிவு. நெகிழ வைத்த பதிவு. உங்கள் பதிவை படித்து அழுது விட்டேன்.
  எனக்கு நான் 1வது வகுப்பு படித்த ராஜம் டீச்சர், 8வது வகுப்பில் நீ திறமையான மாணவன் தான் என சொல்லி எனது வாழ்க்கையின் திசையேயே மாற்றிய ராஜலட்சுமி டீச்சர், own knowledge இல் எழுதுவதை ஊக்குவித்த 9வது வகுப்பு லட்சுமணன் சார் அனைவரும் நினைவுக்கு வந்து விட்டார்கள். SSLC யுடன் படிப்பு நின்று விட்டது, இருந்தாலும் இவர்கள் அனைவரும் இன்று நினைவுக்கு வந்து விட்டார்கள்.
  நன்றி திரு மோகன் குமார், உங்களது பதிவின் linkகளை தவறாது எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள், மின் தடையினால் கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் படிக்கிறேன்.
  இந்த அற்புதமான பதிவை எனது முகநூலில் பகிர்கிறேன்.
  நன்றி. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. சார் உங்கள் உணர்வுகளை அப்படியே தந்தமைக்கு மிக்க நன்றி. நாம் எழுதுவதும் சில மனங்களை தொட்டு செல்கிறது என்று அறிந்து மகிழ்ச்சி ! உங்களை ஸ்ரீவில்லி புத்தூரில் என்றேனும் சந்திப்பேன் என்று நம்புகிறேன்

   Delete
 10. நெகிழ்வான பதிவு..! எங்க அறிவியல் ஆசிரியை நீலவேணி அவர்கள் நியாபகம் வருகின்றது.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சுரேஷ்குமார் காலை நான் முகநூளில் இணைக்க வில்லை. நீங்கள் இணைத்தமைக்கும் நன்றி

   Delete
 11. Anonymous1:54:00 PM

  நல்லதோர் பதிவு.. ஞாபகங்களை கிளறி விட்ட ஓர் உன்னத தலைப்பு இது.. நன்றி.

  ReplyDelete
 12. நல்ல அருமையான பதிவு , நாம் யாவரும் சம காலத்தில்தான் படித்து இருக்கிறோம் என்பதை நினைத்து பெருமைபடுகிறேன் , நிச்சயமாக உங்கள் டீச்சர் உங்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை எல்லாம் வல்ல இறைவன் தருவானாக

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி அஜீம் பாஷா. அவரை சந்தித்தால் வானவில்லில் சுருக்கமாய் நிச்சயம் குறிப்பிடுவேன்

   Delete
 13. Arumaiyana padhivu.

  ReplyDelete
 14. அருமையானதொரு ஆசிரியையைப் பற்றிய அற்புதமான பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies

  1. மகிழ்ச்சி நன்றி அமைதி சாரல்

   Delete
 15. அழகான பகிர்வு. நன்றியுடன் ஆசிரியரைத் தேடும் மாணவர்கள் பல பேர்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராமலட்சுமி மேடம்

   Delete
 16. அருமையான பதிவு! இது மாதிரி ஆசிரியர்கள் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. //இது மாதிரி ஆசிரியர்கள் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்//

   ஆம். நன்றி சுரேஷ்

   Delete
 17. பள்ளிப் பருவத்தில் சொல்லிய வர்தைகளைக்கூட சொல்லி உள்ளீர்கள்.ஞாபகம் வருது எனக்கும்

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி சார். நன்றி

   Delete
 18. பலருக்கும் ஞாபகப்படுத்தியதைப் போல் எனக்கும் என் ஆசிரியைகள் ஞாபகத்திற்குள் வந்தனர். சந்திக்கவேண்டும் எனும் ஆவல் இருந்தாலும் ஏன் அதற்கான முயற்சியில் ஈடுபடுவதில்லை எனத் தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஆம். சந்திக்க வேண்டும் என்ற நினைவு வருகிறதே இப்போது; நிச்சயம் சந்திப்போம் அவர்களை

   Delete
 19. எங்கள் மனங்களிலும் வானதி ரீச்சர் இடம்பிடித்துவிட்டார்.

  ஆசிரியர்களை என்றும் மறக்க முடிவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. //எங்கள் மனங்களிலும் வானதி ரீச்சர் இடம்பிடித்துவிட்டார். //

   அப்படியா ? மிக மகிழ்ச்சி மாதேவி

   Delete
 20. சிறப்பான, மனதை நெகிழ வைத்த பதிவு மோகன். படிக்கும் எல்லோர் மனதிலும் அவரவர்களது ஆசிரியர்கள் நினைவு நிச்சயம் வந்திருக்கும்......

  பாராட்டுகள்.

  ReplyDelete
 21. Great one Mohan. Really moved by it.

  ReplyDelete
 22. நண்பர்களே, இப்பதிவு வானதி டீச்சர் என்கிற பெண்மணியை பற்றி அறிய உதவும் என்று தான் நினைத்தேன். அது உங்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் டீச்சரை நினைவு படுத்தியது அறிந்து நெகிழ்வான மகிழ்ச்சி ! உங்கள் அனைவரின் அன்பான வார்த்தைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி !

  ReplyDelete
 23. உங்கள் டீச்சர் பத்தின பதிவு என் டீச்சர் பத்தி நினைக்க வச்சிடுச்சி சார்... நானும் என்னோட மேல்நிலை வகுப்பு ஆங்கில ஆசிரியரை ரொம்ப நாளா பார்க்கணும்-நு நினைச்சிட்டே இருக்கேன். ஆனால் அவங்க VRS -வாங்கிட்டு அமெரிக்கா போய்டாங்கன்னு சொல்றாங்க...

  ReplyDelete
 24. அண்மையில் வலைச்சரத்தில் திரு ரிஷபன் அவர்களின் தொடர் வந்திருந்தபோது அவரைப் பாராட்டு முகத்தான்
  அவரிடம் ஒரு நாள் கைப்பேசியில் அழைத்திட, அவர் பேசுகையில், எனது இ.ரெ. உயர்னிலைப்பள்ளி, திருச்சியில்
  எனக்கு ஸிக்ஸ்த் ஃபார்ம் ( அப்பொழுதெல்லாம் ப்ளஸ் டூ இல்லை) கணித ஆசிரியர் திருவாளர் டி.எம். நரசிம்மன்
  அவர்களது மிகவும் மிகவும் மிகவும் நெருங்கிய உறவு என்றார்கள். 1955 ம் வருடம் அந்தக் கணித ஆசிரியரிடம் நான்
  அல்ஜீப்ரா, டிர்க்னாமெட்ரி படித்தது மட்டுமல்ல,
  பயங்கரமான குட்டு வாங்கியதும் அவர் எங்கள் வீட்டுக்கு வந்து என் தந்தையிடம் சொல்லி அவர் என்னை த்வம்சம்
  பண்ணியதும் நினைவுக்கு வந்தது.

  இன்றைய உங்கள் பதிவு திரும்பவும் அந்த நினைவுகளைக் கொண்டு வந்தது.

  நான் இன்று இந்த அளவுக்கு இருக்கிறேன் என்றால் அதற்கு என் ஆசிரியர் தான் காரணம் என்று
  அந்தக் காலத்தைச் சேர்ந்த என்னைப்போல் பலர் பெருமிதம் கொள்வதை பார்த்திருக்கிறேன்.

  ஒரு நல்ல ஆசிரியர் சிலபஸ்ஸில் இருக்கும் முப்பது பாடங்களை மட்டும் நமக்கு கற்றுக்கொடுப்பதில்லை.
  சீரான நல் வாழ்க்கைக்கும் பாடங்களைச் சொல்லிக்கொடுக்கிறார். மோஹன் குமாருக்கு எனது நன்றி.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. அருமை ஐயா நன்றி

   Delete
 25. மனம் நிறைந்த பாராட்டுக்கள் & நன்றி மோகன்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி உமா மேடம்

   Delete
 26. இந்த பதிவை வாசித்து விட்டு எனது பள்ளி மாணவி Facebook -ல் பகிர்ந்தது

  I read this Mohankumar,...She was my teacher too,...unforgettable loving memories !! she is in Thanjavur now,...still she looks like a same young & energetic woman!!!

  ***************
  மேலே கமன்ட் எழுதிய பள்ளி தோழி வானதி டீச்சர் பதிவு வாசித்து விட்டு தான் Facebook -ல் மீண்டும் நட்புக்கு வந்தார். அவர் மூலம் வானதி டீச்சர் தற்போதைய இருப்பிடம் கிடைக்க கூடும் ! பதிவு எழுதுவதில் இப்படி அரிதாய் சில நன்மைகள் கிடைக்கவே செய்கிறது !

  ReplyDelete
 27. Another friend in FB:

  Hi AMK - I read this da.. apadiye Needa life, school building, class room ellam memory le varudhuda...nostalgic !!

  ReplyDelete
 28. வானதி டீச்சர் குறித்த எல்லா காமன்ட்களும் ஒரே இடத்தில் இருக்கட்டும் என்ற ஒரே காரணத்துக்காக FB -ல் போட்ட காமன்ட்களும் இங்கு பகிர்ந்துள்ளேன் மேலும் டீச்சர் இவை அனைத்தையும் ஒரு நாள் வாசிக்க கூடும் !

  ReplyDelete
 29. எங்கள் மனங்களிலும் வானதி ரீச்சர் இடம்பிடித்துவிட்டார்.

  ஆசிரியர்களை என்றும் மறக்க முடிவதில்லை.

  ReplyDelete
 30. மனதில் பூப்பூக்க வைத்து விட்டீர்கள்.

  ReplyDelete
 31. சிறப்பான பகிர்வு - மீள் பதிவு என்றாலும் மீண்டும் படித்து ரசித்த பதிவு. வாழ்த்துகள்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...