மாபான்லூர்.. இந்த பெயரை உச்சரிக்கும் போதே முகத்தில் புன்னகை வந்து விடுகிறது .. இங்கு சென்ற அனைவருக்கும் பல இனிய நினைவுகள் நிச்சயம் இருக்கும்...
சிறிய மலை மேல் அமைந்த ஒரு அழகிய ஊர்... முதல் 5 கிலோ மீட்டர் மோசமான சாலை.. பின் நல்ல தார் ரோடு.. அங்குள்ள கெஸ்ட் ஹவுஸ்க்கு போன் செய்தால் கீழே வந்து நம்மை ஜீப்பில் அழைத்து சென்று விடுவார்கள்.. சாலை சரியாகும் வரை அவர்கள் ஜீப்பில் செல்வதே நல்லது (ஜீப் பயணம்...ஒருவருக்கு ரூ. 100 வாங்குகிறார்கள்)
ஜீப்பில் சென்று இறங்கியதுமே அந்த இடத்தில் அழகில் அசந்து போகிறோம்.. சுற்றிலும் மலை, ஏரி ..எங்கெங்கு காணினும் பசுமை..
எங்கு பார்த்தாலும் மனிதர்கள் கண்ணில் படவே இல்லை ... எப்போதாவாது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை யாரேனும் ஒருவர் நடந்து செல்வதோடு சரி...
இங்கு உள்ள கெஸ்ட் ஹவுஸ் லோக்கல் பஞ்சாயத்தால் நிர்வாகம் செய்யப்படுகிறது.. அற்புதமான உபசரிப்பு.. மிக நல்ல சாப்பாடு. மேலும் குளிர் காய நெருப்பு துண்டுகளை சட்டியில் போட்டு நமக்கு தந்த வண்ணம் உள்ளனர்...
மாலை ஆறு மணிக்கு மேல் பனி சூழ்ந்து விடும் என்பதால் பகல் முழுதும் பசுமையான சூழலில் சுற்றி வந்தோம்,,,
மாலை கெஸ்ட் ஹவுஸ் வந்த போது அந்த பகுதி MLA அங்கு வந்திருந்தார்.அவரிடம் வரும் வழியில் உள்ள சாலையை செப்பனிட சொல்லி கோரினோம். அவசியம் மிக விரைவில் செய்ய இருப்பதாக சொன்னார்.
இரவு.. அந்த பகுதி முழுமையையும் பனி சூழந்தது. அருகில் இருக்கும் ஏரி கூட கண்ணில் படவில்லை...
காலை இன்னும் பல ஆச்சரியங்களை உள்ளடக்கி வைத்திருந்தது.
சில நிமிடம்.. பனி. பின் . வெய்யில்.அடுத்த ஓரிரு நிமிடம் மழை .. இதே சூழலே காலை 7 முதல் 9 வரை நீடித்தது. வருடத்தின் 365 நாளும் இதே போல் தான் இருக்குமாம் !!
அடுத்த நாள் காலை.. கிளம்ப மனமின்றி மாபான்லூர் விட்டு கிளம்பினோம்..
அந்த அற்புத ஏரியை தாண்டும் போது " இன்னொரு முறை இந்த இடத்துக்கு வருவோமா?" என்று ஒருவரை ஒருவர் கேட்டு கொள்ள, ஜீப் மெதுவாக அந்த சொர்க்கத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது ...
**********
Mawphanlur Guest house contact Phone No: 9615 043 847
No comments:
Post a Comment