Saturday, March 26, 2016

அம்மா இல்லாத உலகம் ....

ம்மா எதிர்பார்த்த ஒன்று கிடைத்து விட்டது.. மிக அதிக காத்திருப்பு, வலி, வேதனைக்கு பிறகு.. அம்மா எதிர்பார்த்த மரணம் கிடைத்தே விட்டது..

கணவர்- பெரிய மகன் மற்றும் ஒரே மகள் - அம்மாவின் அருகிலிருக்க - மார்ச் 18 - எங்களை விட்டு பிரிந்தார்.

கடைசி பிள்ளையான நான்- அம்மாவின் 40 வயதில் பிறந்தேன். அதன் பின்னரே அம்மாவின் உடல்நிலை சின்ன சின்னதாய் பாதிக்கப்பட்டது.. எனது கல்லூரி காலத்தில் அம்மாவிற்கு முதன் முறையாய் ஹார்ட் பெயிலியர்.. அம்மா நம்மை விட்டு எப்போது வேண்டுமானாலும்   பிரிவார் என்ற பயம் வந்து விட்டது.. அம்மா மீதிருந்த பிரியத்தின் பெரும்பகுதி அக்கா மீது செலுத்த ஆரம்பித்தது இந்த பயத்தினால் தான்..கடந்த 10 வருடங்களில் அம்மாவிற்கு எத்தனையோ வித நோய்கள்.. உடல் நிலை காரணமாக கடைசி சில வருடங்கள் அம்மாவின் வாழ்க்கையில்  மிக வலி மிகுந்தது. .

75 வயது வரை  அனைத்து வீட்டு வேலையும் செய்து வந்தவர், பின் எந்த வேலையும் செய்ய முடியாத படி ஆனதே அவர் மனதை புண் படுத்தியிருக்க வேண்டும்.

கடந்த 5 வருடங்களில் நிலைமை பெரிதும் மோசமானது. இரு முறை டாக்டர்கள் "பிழைக்க  மாட்டார்;உறவினர்களுக்கு சொல்லி அனுப்புங்கள்" என கூறி, அதன் பின் இரு முறையும் உயிர் பிழைத்தார். மகன்கள்- மகள் மட்டுமல்ல, சம்பந்திகள் வரை வந்து காத்திருந்து - விழித்தெழுந்த அம்மாவிடம்  பேசிவிட்டு கிளம்பினர்..

2011-ல் அம்மா பற்றி எழுதிய கட்டுரை... இங்கே...

அம்மா மை டார்லிங்

கடந்த சில மாதங்களாய் மீண்டும் உடல்நிலை  மோசம் ....

ஒரே நல்ல விஷயம்.. இறுதி காலத்தில் ( கடைசி ஏழெட்டு வருடங்கள்) முழுக்க முழுக்க - மகனுடன் அவர் இருந்தது தான்.. பெரிய அண்ணன் மற்றும் அண்ணி அவர்களின் கடைசி காலத்தில் பார்த்து கொண்டு - பெரும் புண்ணியம் தேடி கொண்டனர் ..  

மேலும் அப்பா - ஒரு நர்ஸ் செய்யும் சேவையை விட அற்புதமாய் அம்மாவிற்கான அனைத்து பணிகளையும்  சிறிதும் முகம் சுழிக்காமல், சோர்வடையாமல் இரவு பகலாய் - பல வருடங்கள் செய்தார்.

எனது மகள்  + 2 தேர்வு நடக்கும்போதே அம்மா தவறினார்.. ஆனால் மிக சரியாக - அடுத்தடுத்த  தேர்வுகள் இடையே 10 நாள் இடைவெளி இருக்கும்போதே - அவர் மரணம் நிகழ்ந்தது.. ஆபிசுக்கு கூட விடுப்பு எடுக்க தேவையின்றி - ஒரு சனி, ஞாயிறில் அனைத்து கடமைகளும்- அனைவருக்கும் முடிந்தது..

16 ஆம் நாள் காரியமும் கூட ஒரு ஞாயிறில் தான் வருகிறது.. இது தான் அம்மா !! யாருக்கும் தன்னால் கெடுதல் வரக்கூடாது என்று நினைத்த அம்மாவின் எண்ணப்படி தான் அவர் மரணத்திற்கு பிறகான காரியங்களும் நடக்கின்றன..

அம்மா இறந்த அன்று.. திருநெல்வேலியில் ACS இன்ஸ்டிடியூட் விழா ஒன்றில் பேசிக் கொண்டிருந்தேன்.. விழா முடிந்து அறைக்கு வந்து கொண்டிருக்கும்போது அண்ணனின் அழைப்பு..

" நீ கிளம்பி வா"
" ஏன் .. அம்மாவுக்கு உடம்பு முடியலையா ?"
" அம்மா இஸ் நோ மோர்"

அடுத்த அரை மணி நேரம் என்ன செய்தேன் என்பது சற்று குழப்பமாய் தான் இருக்கிறது..

நல்லவேளையாக திருநெல்வேலியில் பள்ளிக்கால நண்பன் வேங்கடப்பன் - அடுத்த கொஞ்ச நேரத்தில் என்னை காண அறைக்கு வந்தான்..  கூடவே இருந்து வற்புறுத்தி சற்று சாப்பிட சொல்லி, ரயிலுக்கு கூட்டி சென்று ஏற்றி விட்டான்..

இரவு சுத்தமாய் உறங்க பிடிக்க வில்லை.. டிக்கெட் செக்கரிடம் கூறிவிட்டு பெர்த்தை விடுத்து,  அமர்கிற படி இடம் தேடி சென்றேன்.. எத்தனையோ நினைவுகள்......

அதிகாலை 3 மணி அளவில் அம்மாவை சென்று பார்த்தது முதல், உடலை  எடுக்கும் நேரம் வரை அழவே இல்லை; அக்காவும், மனைவியும் ஏன் அழாமல் இருக்கிறேன் என பல முறை கேட்டு விட்டனர்..

பல வருடங்களாக இப்படித்தான் இருக்கிறேன்.. மரணம் அநேகமாய் என்னை அழவைப்பதில்லை..

உண்மையில் மரணம் - இறக்கிற மனிதனுக்கு மிக பெரும் விடுதலை. ஒவ்வொரு மனிதனும் எத்தனையோ அவமானங்களையும், வலியையும், வேதனையையும் சகித்து கொண்டு தான் வாழ்கிறான்.. எனவே மரணம் - இறந்த நபரை பொறுத்த வரை எந்த பிரச்னையும் இல்லை; இறந்தவர் குறித்து நாம் வருந்த ஏதும் இல்லை.

இறந்தவரின் மறைவு - அவரை சுற்றி இருக்கும் மற்றவர்களுக்கு மிகப்பெரும் வலி.. இழப்பு. அதை அவர்கள் எப்படி தாங்குகிறார்கள்; எப்படி மீள்கிறார்கள் என்பது தான் முக்கிய விஷயம்..

ஜெயந்தனின் கவிதை வரி ஒன்று இப்படி துவங்கும் " எங்கும் யாருக்கும் எதுவும் நடக்கலாம்" .. வாழ்க்கையின் நிலையாமை சொல்லும் இந்த வரி உள்ளுக்குள் ஆழமாக பதிந்து போனது..

" கடவுளாலும் முடியாத விஷயம் ஒன்று உண்டு; நடந்ததை மாற்ற அவராலும் முடியாது.. " இதுவும் கூட எங்கோ எப்போதோ கேட்ட, அதன் அர்த்தம் முழுமையாய் உள் வாங்கிய விஷயம்..

நெருங்கிய நண்பர்கள் சிலரை மரணத்திற்கு கொடுத்த போது கூட அழாமல் இருந்தததற்கு மனதில் ஊறிப்போன மேற்சொன்ன எண்ணங்களே காரணம்...

ம்மாவை கடந்த 10- 15 வருடங்களில் எப்போது பார்த்தாலும்   கட்டி பிடித்து முத்தம் தருவது என்னுடைய வழக்கம். இறந்த அம்மாவிற்கு அப்படி முத்தம் தரலாமா என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. கண்ணாடி பேழைக்குள் அம்மா இருந்தார். கடைசியில் வெளியே எடுக்கும் போது பெரும் கூட்டம்; அத்தனை பேர் முன் அம்மா கன்னத்தில் முத்தம் தர ஏனோ ஒரு கூச்சம்.. அம்மாவின் கை மற்றும் கன்னத்தை கொஞ்ச நேரம்தடவியபடி நின்றிருந்தேன்.. அம்மாவின் அதே மென்மை .. மனதை என்னவோ செய்தது..
எனது 44 வருட வாழ்வில் - எனது குடும்பத்தில் நான் கண்ட முதல் மரணம்.. (எனக்கு முன் 2 குழந்தைகள் பிறந்து இறந்துள்ளனர்.. அதனால் - அண்ணன்கள்- அக்காவிற்கு இந்த வலி ஓரளவேனும்  தெரிந்திருக்கலாம்) எனக்கு இந்த வலி புதிது.. 

நண்பர்கள் மரணம் வேறு.. ஆனால் குடும்பத்தினர் இறப்பு தரும் வலி அதை விட பல மடங்கு அதிகமாய் உள்ளது. 

அம்மாவை அடக்கம் செய்ய,  உடலை எடுத்து செல்லும் முன் லேசாக அழுகை எட்டி பார்த்தது; முழுமையாய் அழவில்லை.. 

இந்த ஒரு வாரத்தில் - மனதில் பாரம் அப்படியே இருக்கிறது.. 

வர வைத்து கொண்டாவது ஒரு பாட்டம் அழுதிருக்கலாம் என்று இப்போது  தோன்றுகிறது.. 

50 வயதை தாண்டிய எந்த பெண்ணை கண்டாலும் - அம்மாவின் நினைவை அவர் கிளறி போகிறார்.. வாகனம் ஓட்டும் போது சில நேரம் மனம் அம்மாவின் நினைவில் அழுகிறது..  

எங்கோ, எப்போதோ - எந்த மேடையிலோ அல்லது யார் முன்னோ - அம்மாவிற்காக அழுது தீர்க்க போகிறேன் என அடிக்கடி தோன்றுகிறது ...

உலகில் நாம் எத்தனையோ பேரை நேசிக்கலாம்; ஆனால் நம் மீது மிக, மிக அதிக அன்பு காட்டுவது அம்மா தான். குழந்தையில் துவங்கி நம் திருமணத்துக்கு பின்னும் நீடிக்கும் அம்மாவின் இந்த அன்பு......... நம்மை மிக அதிகம் நேசித்த அம்மாவின் பிரிவு.. உள்ளுக்குள் ஒரு வெறுமையை கொண்டு வருகிறது.. 

84 வயது வரை வாழ்ந்து விட்டு மறைந்திருக்கிறார்.. எல்லா கடமையும் முடித்து விட்டார். மிக அதிக உடல் உபாதைகள் பட்டு விட்டார்.. இருந்தும் மனம் அவரது இழப்பை ஏற்று கொள்ள மறுக்கிறது 

இன்னும் எவ்வளவு நாள் ஆகும் இந்த வலி சரியாக ? தெரிய வில்லை.. 

அம்மா பிறந்த நாள் எங்கள் யாருக்கும் தெரியாது; அம்மா- அப்பா திருமண நாள் கூடத்தான்..! அம்மாவை பொறுத்தவரை அவர்  காலமான  மார்ச் 18 மட்டுமே எங்களுக்கு - ஒரே முக்கிய நாளாகி போனது !

இறந்த ஆத்மா - 13 நாள் உலகில் சுற்றி விட்டு - பின் சொர்க்கம் அல்லது நரகம் செல்லும் என்கிறார்கள்.. அம்மா எதோ ஒரு விதத்தில் இந்த கட்டுரையையும் வாசிக்கலாம் என்பதால் அந்த 13 நாளுக்குள் இதை எழுதுகிறேன்..

"தன் மகன்  மனம் சோர்ந்திருப்பது அம்மாவிற்கு சிறிதும் பிடிக்காது; நான் மகிழ்ச்சியோடு இருப்பது தான் அம்மா வேண்டுவது " என அடிக்கடி சொல்லிக்கொள்கிறேன்..

சென்று வா அம்மா..

எங்கள் நினைவுகளில் தினமும் நீ வாழ்ந்திருப்பாய் !

22 comments:

 1. ஆழ்ந்த இரங்கல்கள். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 2. //உண்மையில் மரணம் - இறக்கிற மனிதனுக்கு மிக பெரும் விடுதலை//

  உண்மை.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. மரணம் விடுதலை என்றால் பிறகு உயிரை காப்பாற்ற போராடுவது ஏன்?

   Delete
 3. அம்மாவை இழப்பது எவ்வளவு துயரம்!

  ஆழ்ந்த இரங்கல்கள்.

  ReplyDelete
 4. ஆழ்ந்த இரங்கல்கள் ஜி ! ! அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாறட்டும்..... சீக்கிரம் மீண்டு வாருங்கள் !

  ReplyDelete
 5. தங்கள் துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம்.

  ReplyDelete
 6. ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்திக்கிறேன்.

  ReplyDelete
 7. ஆழ்ந்த இரங்கல்கள்.

  ReplyDelete
 8. தங்களது அம்மாவின் ஆன்மா அமைதி பெற, எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  அம்மாவின் மறைவு என்பது இதயத்தில் பெரிய வலிதான். காலம்தான் சமன் செய்ய வேண்டும். உங்களின் பதிவு, சென்ற ஆண்டு எனது அம்மா மறைந்தபோது எனக்கு ஏற்பட்ட துயர நினைவுகளை நினைவு படுத்தியதோடு, கண்ணீரையும் வரவழைத்து விட்டது. நானும் உங்களைப் போலவே எனது அம்மாவின், மறைவைத் தாங்க முடியாமல் ” எனது அம்மா – என்று காண்பேன் இனி? “ என்ற பதிவை எனது வலைத்தளத்தில் எழுதியுள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. i.miss.my.mother.last week i.dont what.do

   Delete
 9. Our deepest condolence
  Ramasubramanian

  ReplyDelete
 10. யதார்த்தமான வரிகள் இன்னும் வேதனை அளிக்கிறது. பெரும் இழப்பு தான், ஆறுதல் சொல்லவும் தேற்றிச் செல்லவும் மனிதர்கள் இருக்கிறார்கள்... கவலைப்படாதீர்கள் சார்... ஆழ்ந்த இரங்கல்கள் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை...

  ReplyDelete
 11. ஆழ்ந்த இரங்கல்கள். அம்மா தெய்வமாயிருந்து ஆசீர்வதிப்பார்.

  ReplyDelete
 12. ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்திக்கிறேன்.

  ReplyDelete
 13. பெற்றோரை போற்றி சேவை செய்யும் மக்களைப் பெற்ற உங்கள் தாயாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன். உங்கள் தந்தையாரையும் போற்றி காக்கவும்.

  ReplyDelete
 14. our deepest condolences to you and your family.
  uncle my mom and dad still crying...

  ReplyDelete
 15. Heart felt condolences. May God give you mental strength to overcome her absence and her soul rest in peace.

  ReplyDelete
 16. ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்திக்கிறேன்.

  ReplyDelete
 17. அம்மா தெய்வமாக உங்கள் கூடவே இருப்பார்கள் அண்ணா..கலங்க வேண்டாம் அண்ணா..என்ன சொல்வது என்றே தெரியவில்லை

  ReplyDelete
 18. அம்மா தெய்வமாக உங்கள் கூடவே இருப்பார்கள் அண்ணா..கலங்க வேண்டாம் அண்ணா..என்ன சொல்வது என்றே தெரியவில்லை

  ReplyDelete
 19. படித்து முடிப்பதற்குள் கண்கள் கலங்கிவிட்டன..,

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...