Wednesday, April 12, 2017

மறக்க முடியாத சுவை.. திருவையாறு ஆண்டவர் அல்வா கடை ..ஒரு அனுபவம் !

திருவையாறு..பெயரைக் கேட்டதும் இங்கு நடக்கும் இசை விழா பலருக்கும் நினைவுக்கு வரும்.  கர்நாடக சங்கீதம் பற்றி அதிகம் அறியாத என்னை போன்ற தஞ்சை வாசிகளுக்கு திருவையாறு என்றால் சர்வ நிச்சயமாக "ஆண்டவர் அல்வா  கடை" தான் நியாபகம் வரும்.

Related image

சிறிய ஊர் என்றாலும் வெளியூர் பேருந்துகள் 3 இடத்தில் நின்று போகும் ஊர் திருவையாறு. இதில் பேருந்து நிலைய நிறுத்தத்தில் இருந்து கூப்பிடு தூரத்தில் உள்ளது ஆண்டவர் அசோகா கடை.

பழமையான சிறிய கடை. குறுகலான அந்த இடத்தில் சுறுசுறுப்பாக நான்கைந்து ஊழியர்கள் அல்வா, அசோகா மற்றும் காரம் கட்டிக்  கொண்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு நிற்கவே இடமில்லை; முதுகு சுவற்றில் உரசும் நிலை என்றாலும்.. எந்த குறையும் சொல்லாமல் பொறுமையாய் நின்று பார்சல் வாங்குகிறார்கள்.

உள்ளூர் மற்றும் சுற்றுப்புற  கிராம மக்கள் ஒரு புறம் என்றால் - திருவையாறு கடந்து செல்லும் டவுன் காரர்களும் கடையை விரும்பி நாடுகிறார்கள்.

உள்ளே நுழையும் போதே கடையின் ஓனர் கணேச மூர்த்தி " வாங்கய்யா... என்ன வேணும்யா? தம்பி .. ஐயாவை கொஞ்சம் கவனி " என இன்முகத்துடன்  வரவேற்பார். நெற்றில் பெரிய பட்டையும் ஒரு ரூபாய் நாணயம் சைசுக்கு குங்குமம் இல்லாமல் கணேச மூர்த்தி ஐயாவை காண முடியாது ! அரிதாக இவர் கல்லாவில் இல்லாத நேரம் ஒரு வயதான பெண்மணி (அவரது மனைவியாய் இருக்கலாம்) அமர்ந்திருப்பார் ...

இப்போது ஒரு சின்ன பிளாஷ் பேக்கிற்கு செல்வோம்
*********
எப்படி வந்தது  அசோகா?

 இரண்டாம் உலக போர் சமயம்....கோதுமை  மற்றும் ஜீனி (சென்னையில் சர்க்கரை என்பார்கள்!) கடும் தட்டுப்பாடு.. இருந்த இருப்பு அனைத்தையும் போர் முனைக்கு அனுப்பியதாலோ என்னவோ, கோதுமை, ஜீனி இல்லாமல் அல்வா உள்ளிட்ட எந்த  இனிப்பும் தயாரிக்க முடியவில்லை.

அப்போது திருவையாறில் இதே ஆண்டவர் கடை நடத்தி வந்த திரு. சுப்பையர் கோதுமை, ஜீனி- இரண்டும்  இல்லாமல் எப்படி இனிப்பு செய்வது என யோசிக்கிறார். அதன் விளைவாய் அவர் மனதில் உதித்ததே - அசோகா ! கோதுமைக்கு பதிலாக பயித்தம் பருப்பும், ஜீனிக்கு பதிலாக சர்க்கரையும் (நிஜ சர்க்கரை என்பது வெல்லத்தை பவுடர் செய்வது .. !)  போட்டு ஒரு இனிப்பு தயார் செய்கிறார்.. அது தான் அசோகா !

மிக விரைவிலேயே அசோகா பெரும் புகழ் பெற்று விட்டது. பக்கத்து ஊர்களான மாயவரம், திருச்சி , பெரம்பலூர், புதுக்கோட்டை என பல இடங்களில் இருந்த பணக்காரர்கள் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வந்து அசோகா வாங்கி சென்றனர்.

போர் முடிந்து கோதுமை, ஜீனி கிடைக்க ஆரம்பித்ததும் அசோகா தயாரிக்கும் முறையில் மாறுதல் வந்து விட்டது. அன்று முதல் கோதுமை, ஜீனி சேர்த்தே அசோகா தயார் செய்யப்படுகிறது. பயித்தம் பருப்பு மற்றும் சர்க்கரைக்கு டாட்டா சொல்லி விட்டனர் !

இன்னொரு முக்கிய விஷயம்.. இக்கடையை துவக்கிய / அசோகாவை கண்டுபிடித்த சுப்பையருக்கும், இன்று கடையை நடத்தும் கணேச மூர்த்தி அவர்களுக்கும் எந்த ரத்த சம்பந்தமும் இல்லை.

 பிளாஷ் பேக் ஓவர்.பேக் டு நிகழ் காலம் !
************

Image result for thiruvaiyaru ashoka halwa andavar shop
ல்வாவிற்கும்,அசோகாவிற்கும் ஆறு வித்யாசத்திற்கு மேலும் சொல்லலாம். முக்கியமான ஒரு வித்யாசம். அல்வாவை கத்தியில் வெட்டி எடுத்து தருவார்கள். அசோகாவை ஸ்பூனில் மட்டும் தான் .......விற்பனை செய்பவரால் கூட எடுக்க முடியும். கத்தி பயன்படாது.

இனிப்பு மற்றும் காரம் பார்சல் வாங்கும் இடத்திற்கு இன்னொரு புறம் விசாலமான அறை .. அங்கு ஹோட்டல் போல 15 டேபிள், சேர் போட்டு - மக்கள் சாப்பாடு சாப்பிடுவதை போல வாழை இலையில் அசோகா மற்றும் கோதுமை அல்வாவை ருசித்துக் கொண்டிருக்கிறார்கள்.


சென்று அமர்ந்து சப்ளையர் அண்ணனிடம் "அசோகா கொடுங்கண்ணே" என்று சொல்ல சுடசுட அசோகாவும் கூடவே தாராளமாய் மிக்சரும் வைத்து  தருகிறார். அசோகாவை வாயில் வைத்தவுடன் கரைகிறது. உள்ளம்
பூரிக்கிறது. அவசரமே படாமல் நிதானமாய் - ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு " அண்ணே .. கோதுமை அல்வா"  என்றதும் - அதையும் இலையில் வைத்து இம்முறை காராசேவு காம்பினேஷனில் தருகிறார்.அசோகாவிற்கு நான் சளைத்தவனா என்ன என அது ஒரு பக்கம் அதகளம் செய்கிறது !

அல்வாவை சாப்பிடும் போது இந்த ஊர் மக்களை எண்ணி மனம் பொறாமை கொள்கிறது. கூடவே " இந்த ஊரில் சக்கரை நோயாளிகள் எண்ணிக்கை எக்கச்சக்கமாய் இருக்கணும் " என்ற நினைப்பும் எட்டிப் பார்க்கிறது

சாப்பிட்டு முடித்து விட்டு வீட்டிற்கு பார்சல் வாங்க, விலை பட்டியலை பார்த்தால் எல்லாமே சென்னையில் இருப்பதை விட 40 % குறைவான விலை  !

Related image

ஆனால் சுவையில் சென்னை அல்வா மற்றும் அசோகா இதற்கு அருகில் கூட வர முடியாது ! இதற்கு மிக முக்கியமான காரணம்.. திருவையாறின் காவிரி நீர் மற்றும் அந்த மண்.. இந்த இரண்டின் சுவையும் அசோகாவில் தெரிவது தான் என்கிறார் இதே மண்ணில் பிறந்து வளர்ந்தவரான எனது நண்பர் மருத்துவர் வேங்கடப்பன். (திருநெல்வேலி சென்றபோது நமக்கு பல்வேறு இடங்களை  சுற்றி காட்டியதுடன் அவை பற்றி விரிவாக விளக்கியவரும் இவர் தான்.. !)

இதே ஆண்டவர் அல்வா கடைக்கு இரண்டு கட்டிடம் தள்ளி இயங்கி வருகிறது..... வேங்கடப்பன் அண்ணன்  திரு முருகப்பன் நிர்வகிக்கும் பாவை மெடிக்கல்ஸ் !

சுவையில் ஆண்டவர் அசோகாவிற்கு அருகில் கொஞ்சமேனும் வரக்கூடிய அசோகா என்றால் - தஞ்சையில் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள " ஒரிஜினல் திருவையாறு  ராமன் நெய் அசோகா" கடை மட்டுமே !

இனிப்புகளில் ஆண்டவர் அல்வா கடையில்  வேறு வகைகள் இருந்தாலும் அசோகா மற்றும் அல்வா தான் முதல் இரு இடங்களை அனாயசமாக  பெறுகிறது.காரம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப  வாங்கி செல்கிறார்கள்.

ஊரில் அசோகா கடைகள் இன்னும் சிலவும் உள்ளன.. அங்கெல்லாம் இங்கு நடக்கும் பிசினஸ்ஸில் 10 % நடந்தாலே அதிகம் தான்..

அதி அற்புத சுவை..  மிக நியாயமான விலை.. திருவையாறு செல்லும்போதோ - அல்லது அதன் வழியே செல்லும் போதோ - ஆண்டவர் அல்வா கடைக்கு அவசியம் ஒரு விசிட் அடியுங்கள்.. நிச்சயம் எனக்கு நன்றி சொல்வீர்கள் !

5 comments:

 1. திருமணமான புதிதில் மனைவியுடன் கல்லணை சென்று திரும்பும்போது ஒரு முறை மட்டும் அசோகா பார்சல் வாங்கி வந்தோம். அசோகாவை சாப்பிட்டாலும் வேறு சில காரணங்களால், அதன் சுவையை ரசித்து ருசித்து சாப்பிடவில்லை. இப்போது மீண்டும் நினைவூட்டி விட்டீர்கள். ஒரு பயணம் திருவையாறு கிளம்பி விட வேண்டியதுதான்...

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரனே உங்கள் பதிவிற்கு அன்பின் நன்றி.சிறு திருத்தங்கள் சகோதரனே.நீங்கள் குறிப்பிட்ட ஆண்டவர் அல்வாகடையின் பூர்வீகம்.இரண்டாம் உலகபோர் சம்பவம் அறியவில்லை.திரு ராமையர் என்பார் சுதந்திரத்திற்கு பின் மார்க்கெட் அருகே சிறுகடையாகத்துவங்கி பின்70 வரை இதே இடத்தில் சிறு கடையாக நடத்துகிறார்.அவரின் அன்றைய கைபக்குவத்தில் அசோகாவும் அல்வாவும் சுவைக்கு ஈடுஇணையில்லை.கூடவே மணக்கும் சாம்பாரோடு தோசை மற்றும் சுவைநிறை காபி உண்டு.தொழிலை நேர்த்தியாகச்செய்தார்.சிறுகுறை இருந்தாலும் முழுவதுமாக அப்புறபடுத்திவிடுவார்.அவரின் சுவைக்கு எல்லோரும் அடிமை.தன்காலத்திற்கு பின் தன் பிளை்ளைகள் தொடரவிரும்பாத்தால் தனதி அடுத்த கடையான ஆண்டவர் ஜெனரல் மர்சன்ட் நடத்திவந்த புன்னகை மன்னன் திரு கணேசமூர்த்தியிடம் கடையோடு ஒப்படைக்கிறார்.அவரின் கடுமையான உழைப்பே இன்று நீங்கள் காணும் உச்சர்.புதிய தலைமுறைக்கு இந்த சுவை இனிமைமிக்கது.ராமையர் சுவை அறிந்தவர்களுக்கு மறக்கமுடியாத சுவை.ராமையரின் மகன்கள் என் பள்ளி நண்பர்கள்.நானும் திருவையாறைச்சார்ந்தவன்.என் பக்கத்தில் அவரின் படத்தோடு பதிவு உண்டு.மகிழ்ச்சியோடு நன்றி கூறுகிறேன் எம்மூரின் இனிப்பை பதிவிட்டமைக்கு சகோதரனே

   Delete
  2. அன்பு சகோதரனே உங்கள் பதிவிற்கு அன்பின் நன்றி.சிறு திருத்தங்கள் சகோதரனே.நீங்கள் குறிப்பிட்ட ஆண்டவர் அல்வாகடையின் பூர்வீகம்.இரண்டாம் உலகபோர் சம்பவம் அறியவில்லை.திரு ராமையர் என்பார் சுதந்திரத்திற்கு பின் மார்க்கெட் அருகே சிறுகடையாகத்துவங்கி பின்70 வரை இதே இடத்தில் சிறு கடையாக நடத்துகிறார்.அவரின் அன்றைய கைபக்குவத்தில் அசோகாவும் அல்வாவும் சுவைக்கு ஈடுஇணையில்லை.கூடவே மணக்கும் சாம்பாரோடு தோசை மற்றும் சுவைநிறை காபி உண்டு.தொழிலை நேர்த்தியாகச்செய்தார்.சிறுகுறை இருந்தாலும் முழுவதுமாக அப்புறபடுத்திவிடுவார்.அவரின் சுவைக்கு எல்லோரும் அடிமை.தன்காலத்திற்கு பின் தன் பிளை்ளைகள் தொடரவிரும்பாத்தால் தனதி அடுத்த கடையான ஆண்டவர் ஜெனரல் மர்சன்ட் நடத்திவந்த புன்னகை மன்னன் திரு கணேசமூர்த்தியிடம் கடையோடு ஒப்படைக்கிறார்.அவரின் கடுமையான உழைப்பே இன்று நீங்கள் காணும் உச்சர்.புதிய தலைமுறைக்கு இந்த சுவை இனிமைமிக்கது.ராமையர் சுவை அறிந்தவர்களுக்கு மறக்கமுடியாத சுவை.ராமையரின் மகன்கள் என் பள்ளி நண்பர்கள்.நானும் திருவையாறைச்சார்ந்தவன்.என் பக்கத்தில் அவரின் படத்தோடு பதிவு உண்டு.மகிழ்ச்சியோடு நன்றி கூறுகிறேன் எம்மூரின் இனிப்பை பதிவிட்டமைக்கு சகோதரனே

   Delete
 2. நன்றி முரளி சார் & சரவணன்

  ஞானசேகர் : விரிவான கருத்துக்கு மிக்க நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...