Saturday, June 8, 2019

தடம்- வெள்ளை பூக்கள் - K 13 - மூன்று த்ரில்லர் படங்கள் ஒரு பார்வை

க்ரைம் த்ரில்லர் மிகப் பிடித்த ஒரு genre  ஆக மாறி வருகிறது. மலையாள படங்கள் தான் இந்த ஆர்வம் வர காரணம். அவ்வகையில் இவ்வருடம் தமிழில் வெளிவந்த 3 க்ரைம் த்ரில்லர்கள் பற்றிய ஓர் பார்வை..

வெள்ளை பூக்கள் 

நடிகர் விவேக்கை ஹீரோவாக - ஒரு துப்பறியும் நிபுணராக வடிவமைத்துள்ளார் இயக்குனர். பார்க்க வித்யாசமாக உள்ளது. அவரும் முடிந்த வரை ஜஸ்டிபை செய்துள்ளார்.


அமெரிக்காவில் தொடர் கொலைகள்.... இவற்றை செய்வது ஒரே ஆளா, ஒரு கூட்டமா.. தமிழகத்தில் இருந்து ரிட்டையர் ஆகி - அமெரிக்கா சென்ற விவேக் - இதனை கண்டறிகிறார்.

நல்ல விஷயங்கள் முதலில்...

அமெரிக்காவின் அழகை காமிரா அள்ளிக்கொண்டு வந்துள்ளது.

அந்த கில்லரை சத்தியமாக நம்மால் கணிக்க முடியாது. இத்தனைக்கும் நம் கண் முன்னே பலமுறை இருக்கும் ஒரு நபர். திரைக்கதையில் மற்ற ஆட்கள் மீது சந்தேகம் வரும்படி செய்தாலும், இந்த நபரை அழகாக ஒதுக்கி விடுகிறார்கள். கடைசி 10 நிமிடத்தில் எல்லா முடிச்சுகளுக்கும் உள்ள தொடர்பு, கொலைக்கான காரணம் இவற்றை சொல்லும்போது அனைத்துக்கும் உள்ள லிங்க் புரிகிறது.

படத்தின் பெரும் பலவீனம் - மிக மிக மிக மெதுவாக செல்வது. விவேக், சார்லி, போலீஸ் ஆபிசர் என பலரும் பல காட்சிகளில் நடந்து கொண்டே இருக்கிறார்கள். கொஞ்ச நஞ்சமல்ல.. சில பல கிலோ மீட்டர்கள் !

இறுதி காட்சியில் விடை தெரியும் வரை குழப்பமாகவே செல்கிறது.. சற்று தெளிவில்லாமலும் . திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் - இன்னும் ஷார்ப் ஆக இருந்திருக்கும்

நேரம் இருப்பின், ஒரு முறை - பொறுமையாய் காணலாம் ..

K -13

த்ரில்லர் படங்களில் ஒரு நல்ல விஷயம் - படம் சுமார் என்றால் கூட - சஸ்பென்ஸ் மட்டுமே இறுதி வரை நம்மை பார்க்க வைத்து விடும். என்ன தான் சொல்றானுங்க பார்க்கலாம் என.. அத்தகைய ஒரு சுமார் ரக த்ரில்லர் தான் K -13



வித்யாசமாக செய்ய நினைத்த முயற்சி தான். குறிப்பாக படம் முடிந்து விட்டது என நினைத்த பின் வரும் கடைசி 2-3 நிமிடங்கள் அனைத்தையும் தலை கீழ் ஆக்குவது சூப்பர். ஆனால் அந்த இறுதி சில நிமிடங்களுக்காக படம் முழுதும் பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது..

தடம் 

இந்த வருடத்தில் மட்டுமல்ல, இதுவரை தமிழில் வந்த க்ரைம் த்ரில்லர்களில் -one of the  best  என நிச்சயம் கூறலாம்.


ரொம்ப வித்யாசமான கதை- அதைவிட வித்யாசமான திரைக்கதை- எல்லாவற்றுக்கும் மகுடம் வைப்பது போல் கிளைமாக்ஸ் - படம் பார்த்து முடித்ததும்.... செய்த அடுத்த வேலை - யார் இயக்குனர் - இவர் இதற்கு முன்  என்ன படம் எடுத்தார் - என தேடி தேடி படித்தது தான்

க்ரைம் த்ரில்லருக்கு ஒரு திரைக்கதை எப்படி இருக்கவேண்டும் என பாடமே எடுக்கிறது இப்படம். போலவே கிளைமாக்ஸ் டுவிஸ்ட். அமர்க்களம்.

அருண்விஜய்க்கு அற்புதமான வாய்ப்பு. மனிதர் நன்றாக பயன்படுத்தியுள்ளார்.

படத்தில் ரொம்பவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் சோனியா அகர்வால் காரெக்டர். கணவனை இழந்த இவர் - தினம் கிளப்புக்கு சென்று சீட்டாடுகிறார். மகனை அருகில் வைத்தபடியே. இத்தனைக்கும் அவர் பாத்திரம் பணக்காரர் கூட கிடையாது. அவருக்கு ஒரு அடிக்ஷன். அது தேவையாக இருக்கிறது  !

கதை மற்றும் அதன் நெளிவு சுளிவு பற்றி நிறைய சொல்லி நீங்கள் படம் பார்க்கும் போது உங்கள் சுவாரஸ்யத்தை கெடுக்க விரும்ப வில்லை;

இந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்று.. தவற விடாமல் பாருங்கள் !

1 comment:

  1. சிறப்புக் கண்ணோட்டம்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...