Monday, October 20, 2025

சினிமா விமர்சனம் - Dude ! சில கேள்விகள்.. சில வருத்தங்கள்..

பிரதீப் ரங்கநாதன் முதல் மூன்று படங்களும் அட்டகாசமாய் தந்திருந்தார். இந்த தலைமுறையின் நாடி துடிப்பை நன்கு அறிந்தவராகவே அடையாளம் காணப்பட்டார். ஆனால்.. ஆனால்?


 
ஸ்பாய்லர் அலர்ட் - கதையின் சில மைய புள்ளிகள் பேசப்படும்.. கதை தெரிய வேண்டாம் என எண்ணினால் - அடுத்த சில பாராக்களை தவிர்த்து விடுதல் நலம் !

கே பாக்கியராஜின் அந்த ஏழு நாட்கள் - அப்டேட்டட் வெர்ஷன் தான் - Dude மையக்கதை ! அதன் கிளைமாக்ஸை மாற்றி - காதலனுடன் அந்த பெண் சென்றால் எப்படி இருக்கும்?

அப்படி செல்வது கூட தவறில்லை- எங்கேயோ சில இடங்களில் நடக்கவே செய்யும். பிடிக்காத ஒரு ஆணுடன் விருப்பமில்லாமல் ஒரு பெண் வாழ்வது பிற்போக்குத்தனம் என கொள்ளலாம்.

ஆனால் Dude ல் என்ன நடக்கிறது? பெண்ணின் காதலன் - திருமணத்திற்கு முன்பே - அவளை மணக்க போகிறவனிடம் மேடையில் வைத்து சொல்கிறான்.. நீ கல்யாணம் பண்ணிக்கோ- ஆனால் நாங்கள் ரெண்டு பேரும் ஒன்றாய் சேர்ந்து வாழ்ந்து கொள்கிறோம் என ! என்ன கருமம் இது !

இதை விட கொடூரம் - அந்த 3 பேரும் ஒரே வீட்டில் வாழ்வதாய் தான் காட்டுகிறார்கள் ! பழைய காதலன் மூலம் அந்த பெண் திருமணத்திற்கு பின் குழந்தையும் பெற்று கொள்கிறாள் !

இரண்டாம் பாதியில் ஹீரோவின் மற்றொரு நண்பன் அவனை பார்க்கும் போதெல்லாம் காறி துப்புவதை பல முறை காண்பிக்கிறார் இயக்குனர்; மக்கள் இதையே தான் நம்மை பார்த்து செய்ய போகிறார்கள் என அவருக்கு ஏன் தோன்றவே இல்லை?

சினிமா என்பது ஒரு மிகப்பெரிய மீடியா.. சினிமா பார்த்து நல்லதை எடுத்து கொள்கிறார்களோ இல்லையோ - கெட்ட விஷயம் சர்வ நிச்சயமாய் இளம் தலைமுறை சிலராவது எடுத்து கொள்வர்.

இதே கதை ஒரு நாவலாக எழுதப்பட்டால் கூட - அது நன்கு படித்த - யோசிக்கும் தன்மையுள்ள மனிதர்களிடம் மட்டும் சென்றிருக்கும். சினிமா எனும்போது ஜெனரேஷன் Z - இது எல்லாமே இயல்பு தான் என்ற முடிவுக்கு வர மாட்டார்களா?

இவை அனைத்துக்கும் அடிப்படை ஆணவ கொலை என்கிறார்கள். ஆணவ கொலை தவறு தான் ! ஆனால் இரண்டாம் பாதியில் ஒரு மணி நேரம் வாந்தி வர வைக்கும் காட்சிகளை வைத்து விட்டு கடைசி 10 நிமிடம் ஆணவ கொலைக்கு பயந்தே இப்படி செய்தோம் என முடிப்பது என்ன நியாயமோ?

எனக்கு வருத்தமான இன்னொரு விஷயம் - இது பிரதீப் ரங்கநாதன் படம் + நீண்ட விடுமுறை என்பதால்- ஏற்கனவே போட்ட காசை எடுத்துவிட்டனர்; நிச்சயம் சில கோடி லாபத்துடன் அடுத்த 10 நாட்களுக்கு திரை அரங்கில் ஓடும் .. இது இயக்குனர் கீர்த்திஸ்வரன் மற்றும் பிரதீப்பிற்கு தாங்கள் செய்த தவறை உணர முடியாமல் செய்துவிடும் ..

பணம் தேவை தான் அதற்காக எப்படியும் சம்பாதிக்கலாமா பிரதீப் & கீர்த்தீஸ்வரன்? அடுத்த தலைமுறைக்கு எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என சொல்லி கொடுத்து/ கெடுத்து தான் சம்பாதிக்க வேண்டுமா?

பிரதீப் மற்றும் கீர்த்திஸ்வரன் - தங்கள் சோசியல் மீடியாவில் மிக மகிழ்வாக வெற்றியை கொண்டாடுகின்றனர்; இத்தகைய இயற்கைக்கு எதிரான படங்கள் தான் ஓடும் என ஒரு க்ரூப் நிஜமாகவே ரூம் போட்டு யோசிக்க வைத்து விடலாம்- இந்த படம் !

இந்தியாவை உலக அரங்கில் பலரும் மதிக்க ஒரு முக்கிய காரணம் -நமது குடும்ப அமைப்பு; திருமணத்திற்கு பின் - ஒரு மனைவி - ஒரே குடும்பம் என பெரும்பான்மை மக்கள் வாழ்வது பிற்போக்கு தனம் அல்ல ! அது தான் இந்தியாவை மதிக்க வைத்திருக்கிறது

இப்படி எல்லாம் நடக்கவே இல்லையா? எடுத்தால் என்ன தப்பு என்றால்- மாஸ் மீடியாவில் எதை எடுக்க வேண்டும் என ஒரு சுய கட்டுப்பாடு படைப்பாளிக்கு வேண்டும். குடும்ப உறவுகளில் கூட சில நேரம் - தவறான உறவுக்குள் சிலர் போயிருக்க கூடும்.. அதனை glorify / justify செய்து முழுசாய் ஒரு படம் எடுத்தால் - இன்னும் எத்தனையோ பேருக்கு இது தவறில்லை என்ற எண்ணம் வர வைக்கும். சிந்துசமவெளி என்றொரு படம் இப்படி குடும்ப உறவை தவறாக காட்டி எடுக்கப்பட்டு பலரும் அதனை கடுமையாய் கண்டித்தனர்; இக்காலத்தின் சிந்துசமவெளி - Dude !

சாதாரண பார்வையாளராக - நாம் செய்ய கூடியது ஒன்று தான்.. தயவு செய்து புறக்கணியுங்கள் இத்தகைய படைப்புகளை !

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...