Friday, October 24, 2025

சூப்பர் சிங்கர் - சீசன் 11 - அம்மா ஸ்பெஷல் - ஒரு பார்வை

சூப்பர் சிங்கர் எபிசோடுகளை ஹாட்ஸ்டார் மூலம் தொடர்ந்து கண்டு வருகிறேன்; நா. முத்துக்குமார் ஸ்பெஷல், பின் இளையராஜா 50 வருட கொண்டாட்டம், இப்போது அம்மா ஸ்பெஷல்...என கான்செப்ட்கள் - தொடர்ந்து பார்க்க வைத்துவிட்டது .

                  

அம்மா ஸ்பெஷல் பாட்டுக்கள் பல இடங்களில் நெகிழ்த்தியது. கண்ணீர் சிந்த வைக்க ஏதுவாய் அனைத்து விஷங்களும் செய்தார்கள்; நமக்கும் கண்ணீர் அவ்வப்போது எட்டி பார்க்கவே செய்தது

இம்முறை வெகு சிலரை தவிர்த்து - பல போட்டியாளர்களும் மிக சாதாரண அல்லது ஏழ்மை குடும்பத்தில் இருந்து வந்திருக்கின்றனர்; அதிலும் பாதி பேராவது " சிங்கிள் மதர்" ! தனியாக குழந்தையை வளர்த்து இத்தகைய போட்டி வரை கொண்டு வருவது பெரிய விஷயம் தான்

சரண் என்கிற இளைஞர் எப்போதும் இளையராஜா பாடல்களையே பாடுவார்; இளையராஜா சுற்றில் பாடும் முன் " நான் ஏழை என்பதாலோ, தாழ்த்தப்பட்டவன் என்பதாலோ எல்லா இடங்களிலும் ஒதுக்க படுகிறேன். என்னை ஏன் எல்லாரும் ஒதுக்குகிறார்கள்? " என்று கேள்வி எழுப்பினார்; தன்னை சமமாய் நடத்தாத சில நிகழ்வுகளையும் கூற, மிஷ்கின் அவரை சமாதானம் செய்தார்

இம்முறை அவர் அம்மா முதலில் வரவில்லை என்று கூறிவிட்டு, அவர் பாடும்போதே வரவைத்து - அவரையும் பார்க்கும் பலரையும் அழ வைத்தனர்;

போட்டியாளர்களுக்குள் இருக்கும் நட்புணர்வு - இந்த கதைகள் சொல்லப்படும்போதெல்லாம் அவர்களில் பலரும் அழுகின்றனர்; அல்லது அழுபவர்களை மட்டும் காமிரா காட்டுகிறது

அம்மா குறித்தான இந்த எபிசோட் பார்க்கும் போது எனக்கு மறுபடி மறுபடி ஒரே விஷயம் தான் தோன்றிக் கொண்டே இருந்தது

அம்மா- அப்பா உயிருடன் இருப்போர் எவ்வளவு அதிர்ஷ்ட சாலிகள் ! அம்மா- அப்பா இருக்கும் வரை குழந்தைகளுக்கு இயல்பாகவே ஒரு பாதுகாப்பு வளையம் வந்துவிடும். பெற்றோர்க்கு முதல் குறிக்கோள் குழந்தைகள் நலன்  தான் - அதற்காக எந்த எல்லை வரையும் செல்வர்; இது தான் குழந்தைகளுக்கு மேற்சொன்ன பாதுகாப்பு வளையமாக செயல் படுகிறது !

என்னைப் போல பெற்றோரை இழந்தவனுக்கு தான் அந்த அருமையும் அவர்கள் இல்லாத வலியும் தெரியும். பெற்றோர் இருக்கும்போது - அவர்கள் அருமையை நாம் உணர்வதே இல்லை; மேலும் அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் ஏசலாம்; அவர்கள் திருப்பி தர போவதில்லை

பெற்றோர்- குறிப்பாக அம்மா ! அவரது ஒரு எக்ஸ்ட்டென்சன் தான் நாம். எனவே நமக்கு நடக்கும் பல விஷயங்கள் நாம் சொல்லாமலே கூட அவர்கள் உணர்வார்கள்; தனிப்பட்ட முறையில் எனக்கு மனதில் ஏதோ பிரச்சனை ஓடி கொண்டிருக்கும்; அது பற்றி அவரிடம் வெளிப்படையாய் பேசாவிட்டாலும் அம்மாவின் பேச்சில் அதற்கு ஏதோ ஒரு தீர்வு- ஒளி கிடைக்கும்; எப்படிம்மா என் மனசை படிச்ச மாதிரி பேசுறே என பல முறை யோசித்திருக்கிறேன்; ஒரு முறையும் சொன்னது இல்லை

சூப்பர் சிங்கருக்கு வருவோம்

எத்தனை எத்தனை கண்ணீர் கதைகள்

வடசென்னையில் சிறு இட்லி கடை வைத்திருக்கும் அம்மாவின் மகன் பூமணி -

                       
   
இம்முறை அனைத்து சுற்றிலும் தானே பாட்டெழுதி புதிய கானா பாட்டுக்களை பாடுகிறான். மிக ஏழ்மையான குடும்பம் - பல முறை இருப்பதிலேயே அதிக பாயிண்ட்கள் எடுக்கிறான் இந்த இளைஞன்

வெங்கடாச்சலம் என்னும் இளைஞர் - எல்லாரையும் விட சற்று வயதில் கூடியவர் (30-35 வயது) - மைக் சிஸ்டம் வாடகைக்கு விடும் கடையில் வேலை செய்பவர்- எப்படியோ இந்த அளவு வந்து விட்டார்

மனோ என்னும் இளைஞரின் தாய் ஏழ்மை காரணமாக அவரை பாட்டு டீச்சர் வீட்டிலேயே விட்டு விடுகிறார்- அங்கேயே மகன் போல தங்கி விடுகிறார் அவர்

ஆப்ரஹாம் - தான் சொந்த பிள்ளை இல்லை- வளர்ப்பு பிள்ளை - ஆனால் தனக்காக பின் அவர்கள் குழந்தையே பெற்று கொள்ளவில்லை - தன்னை எப்படி அன்புடன் வளர்த்தனர் என பேசினார்

இலங்கை தமிழ் பெண் திஷாதனா - - இவரும் மிக ஏழ்மை குடும்பம் - படிப்பு செலவிற்கு மிஷ்கின் முழுமையாய் உதவுவதாக சொன்னார்.

பொதுவாக ஜீ தமிழில் தான் இத்தகைய விளிம்பு நிலை மனிதர்களுக்கு மிக அதிக வாய்ப்புகள் தருவர்; இம்முறை விஜய் டிவியில் இது நிகழ்ந்துள்ளது

பாடகர்களில் தவசீலி குரல் மிக வசீகரிக்கிறது; அந்த கால ஜென்சி , சுவர்ணலதா போல தனித்துவம் வாய்ந்த குரலாக இருக்கிறது ;


பெரும்பாலும் நன்றாகவே பாடுகிறார்

ஆண்களில் ஹ்ருதை & ஆப்ரஹாம் குரல் அட்டகாசமாக இருக்கிறது.

ஆர்கெஸ்டரா நிஜமாகவே ரொம்ப அற்புதமாய் வாசிக்கின்றனர்;

அம்மாக்கள் அனைவரும் இருக்கும் போது எலிமினேஷன் இருக்காது என நினைத்தால், 2 பேரை எலிமினேட் செய்துவிட்டனர்.

OTT வந்த பிறகு டிவி பார்க்கும் வழக்கம் வெகுவாக குறைந்தாலும் இந்த சீசன் சூப்பர் சிங்கர் மட்டும் - வித்யாசமான கான்செப்ட்களால் OTT-ல் தொடர்ந்து பார்க்க வைக்கிறது !

************
அண்மை பதிவுகள் 
- - - - - -

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...