Friday, October 24, 2025

சூப்பர் சிங்கர் - சீசன் 11 - அம்மா ஸ்பெஷல் - ஒரு பார்வை

சூப்பர் சிங்கர் எபிசோடுகளை ஹாட்ஸ்டார் மூலம் தொடர்ந்து கண்டு வருகிறேன்; நா. முத்துக்குமார் ஸ்பெஷல், பின் இளையராஜா 50 வருட கொண்டாட்டம், இப்போது அம்மா ஸ்பெஷல்...என கான்செப்ட்கள் - தொடர்ந்து பார்க்க வைத்துவிட்டது .

                  

அம்மா ஸ்பெஷல் பாட்டுக்கள் பல இடங்களில் நெகிழ்த்தியது. கண்ணீர் சிந்த வைக்க ஏதுவாய் அனைத்து விஷங்களும் செய்தார்கள்; நமக்கும் கண்ணீர் அவ்வப்போது எட்டி பார்க்கவே செய்தது

இம்முறை வெகு சிலரை தவிர்த்து - பல போட்டியாளர்களும் மிக சாதாரண அல்லது ஏழ்மை குடும்பத்தில் இருந்து வந்திருக்கின்றனர்; அதிலும் பாதி பேராவது " சிங்கிள் மதர்" ! தனியாக குழந்தையை வளர்த்து இத்தகைய போட்டி வரை கொண்டு வருவது பெரிய விஷயம் தான்

சரண் என்கிற இளைஞர் எப்போதும் இளையராஜா பாடல்களையே பாடுவார்; இளையராஜா சுற்றில் பாடும் முன் " நான் ஏழை என்பதாலோ, தாழ்த்தப்பட்டவன் என்பதாலோ எல்லா இடங்களிலும் ஒதுக்க படுகிறேன். என்னை ஏன் எல்லாரும் ஒதுக்குகிறார்கள்? " என்று கேள்வி எழுப்பினார்; தன்னை சமமாய் நடத்தாத சில நிகழ்வுகளையும் கூற, மிஷ்கின் அவரை சமாதானம் செய்தார்

இம்முறை அவர் அம்மா முதலில் வரவில்லை என்று கூறிவிட்டு, அவர் பாடும்போதே வரவைத்து - அவரையும் பார்க்கும் பலரையும் அழ வைத்தனர்;

போட்டியாளர்களுக்குள் இருக்கும் நட்புணர்வு - இந்த கதைகள் சொல்லப்படும்போதெல்லாம் அவர்களில் பலரும் அழுகின்றனர்; அல்லது அழுபவர்களை மட்டும் காமிரா காட்டுகிறது

அம்மா குறித்தான இந்த எபிசோட் பார்க்கும் போது எனக்கு மறுபடி மறுபடி ஒரே விஷயம் தான் தோன்றிக் கொண்டே இருந்தது

அம்மா- அப்பா உயிருடன் இருப்போர் எவ்வளவு அதிர்ஷ்ட சாலிகள் ! அம்மா- அப்பா இருக்கும் வரை குழந்தைகளுக்கு இயல்பாகவே ஒரு பாதுகாப்பு வளையம் வந்துவிடும். பெற்றோர்க்கு முதல் குறிக்கோள் குழந்தைகள் நலன்  தான் - அதற்காக எந்த எல்லை வரையும் செல்வர்; இது தான் குழந்தைகளுக்கு மேற்சொன்ன பாதுகாப்பு வளையமாக செயல் படுகிறது !

என்னைப் போல பெற்றோரை இழந்தவனுக்கு தான் அந்த அருமையும் அவர்கள் இல்லாத வலியும் தெரியும். பெற்றோர் இருக்கும்போது - அவர்கள் அருமையை நாம் உணர்வதே இல்லை; மேலும் அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் ஏசலாம்; அவர்கள் திருப்பி தர போவதில்லை

பெற்றோர்- குறிப்பாக அம்மா ! அவரது ஒரு எக்ஸ்ட்டென்சன் தான் நாம். எனவே நமக்கு நடக்கும் பல விஷயங்கள் நாம் சொல்லாமலே கூட அவர்கள் உணர்வார்கள்; தனிப்பட்ட முறையில் எனக்கு மனதில் ஏதோ பிரச்சனை ஓடி கொண்டிருக்கும்; அது பற்றி அவரிடம் வெளிப்படையாய் பேசாவிட்டாலும் அம்மாவின் பேச்சில் அதற்கு ஏதோ ஒரு தீர்வு- ஒளி கிடைக்கும்; எப்படிம்மா என் மனசை படிச்ச மாதிரி பேசுறே என பல முறை யோசித்திருக்கிறேன்; ஒரு முறையும் சொன்னது இல்லை

சூப்பர் சிங்கருக்கு வருவோம்

எத்தனை எத்தனை கண்ணீர் கதைகள்

வடசென்னையில் சிறு இட்லி கடை வைத்திருக்கும் அம்மாவின் மகன் பூமணி -

                       
   
இம்முறை அனைத்து சுற்றிலும் தானே பாட்டெழுதி புதிய கானா பாட்டுக்களை பாடுகிறான். மிக ஏழ்மையான குடும்பம் - பல முறை இருப்பதிலேயே அதிக பாயிண்ட்கள் எடுக்கிறான் இந்த இளைஞன்

வெங்கடாச்சலம் என்னும் இளைஞர் - எல்லாரையும் விட சற்று வயதில் கூடியவர் (30-35 வயது) - மைக் சிஸ்டம் வாடகைக்கு விடும் கடையில் வேலை செய்பவர்- எப்படியோ இந்த அளவு வந்து விட்டார்

மனோ என்னும் இளைஞரின் தாய் ஏழ்மை காரணமாக அவரை பாட்டு டீச்சர் வீட்டிலேயே விட்டு விடுகிறார்- அங்கேயே மகன் போல தங்கி விடுகிறார் அவர்

ஆப்ரஹாம் - தான் சொந்த பிள்ளை இல்லை- வளர்ப்பு பிள்ளை - ஆனால் தனக்காக பின் அவர்கள் குழந்தையே பெற்று கொள்ளவில்லை - தன்னை எப்படி அன்புடன் வளர்த்தனர் என பேசினார்

இலங்கை தமிழ் பெண் திஷாதனா - - இவரும் மிக ஏழ்மை குடும்பம் - படிப்பு செலவிற்கு மிஷ்கின் முழுமையாய் உதவுவதாக சொன்னார்.

பொதுவாக ஜீ தமிழில் தான் இத்தகைய விளிம்பு நிலை மனிதர்களுக்கு மிக அதிக வாய்ப்புகள் தருவர்; இம்முறை விஜய் டிவியில் இது நிகழ்ந்துள்ளது

பாடகர்களில் தவசீலி குரல் மிக வசீகரிக்கிறது; அந்த கால ஜென்சி , சுவர்ணலதா போல தனித்துவம் வாய்ந்த குரலாக இருக்கிறது ;


பெரும்பாலும் நன்றாகவே பாடுகிறார்

ஆண்களில் ஹ்ருதை & ஆப்ரஹாம் குரல் அட்டகாசமாக இருக்கிறது.

ஆர்கெஸ்டரா நிஜமாகவே ரொம்ப அற்புதமாய் வாசிக்கின்றனர்;

அம்மாக்கள் அனைவரும் இருக்கும் போது எலிமினேஷன் இருக்காது என நினைத்தால், 2 பேரை எலிமினேட் செய்துவிட்டனர்.

OTT வந்த பிறகு டிவி பார்க்கும் வழக்கம் வெகுவாக குறைந்தாலும் இந்த சீசன் சூப்பர் சிங்கர் மட்டும் - வித்யாசமான கான்செப்ட்களால் OTT-ல் தொடர்ந்து பார்க்க வைக்கிறது !

************
அண்மை பதிவுகள் 
- - - - - -

Monday, October 20, 2025

சினிமா விமர்சனம் - Dude ! சில கேள்விகள்.. சில வருத்தங்கள்..

பிரதீப் ரங்கநாதன் முதல் மூன்று படங்களும் அட்டகாசமாய் தந்திருந்தார். இந்த தலைமுறையின் நாடி துடிப்பை நன்கு அறிந்தவராகவே அடையாளம் காணப்பட்டார். ஆனால்.. ஆனால்?


 
ஸ்பாய்லர் அலர்ட் - கதையின் சில மைய புள்ளிகள் பேசப்படும்.. கதை தெரிய வேண்டாம் என எண்ணினால் - அடுத்த சில பாராக்களை தவிர்த்து விடுதல் நலம் !

கே பாக்கியராஜின் அந்த ஏழு நாட்கள் - அப்டேட்டட் வெர்ஷன் தான் - Dude மையக்கதை ! அதன் கிளைமாக்ஸை மாற்றி - காதலனுடன் அந்த பெண் சென்றால் எப்படி இருக்கும்?

அப்படி செல்வது கூட தவறில்லை- எங்கேயோ சில இடங்களில் நடக்கவே செய்யும். பிடிக்காத ஒரு ஆணுடன் விருப்பமில்லாமல் ஒரு பெண் வாழ்வது பிற்போக்குத்தனம் என கொள்ளலாம்.

ஆனால் Dude ல் என்ன நடக்கிறது? பெண்ணின் காதலன் - திருமணத்திற்கு முன்பே - அவளை மணக்க போகிறவனிடம் மேடையில் வைத்து சொல்கிறான்.. நீ கல்யாணம் பண்ணிக்கோ- ஆனால் நாங்கள் ரெண்டு பேரும் ஒன்றாய் சேர்ந்து வாழ்ந்து கொள்கிறோம் என ! என்ன கருமம் இது !

இதை விட கொடூரம் - அந்த 3 பேரும் ஒரே வீட்டில் வாழ்வதாய் தான் காட்டுகிறார்கள் ! பழைய காதலன் மூலம் அந்த பெண் திருமணத்திற்கு பின் குழந்தையும் பெற்று கொள்கிறாள் !

இரண்டாம் பாதியில் ஹீரோவின் மற்றொரு நண்பன் அவனை பார்க்கும் போதெல்லாம் காறி துப்புவதை பல முறை காண்பிக்கிறார் இயக்குனர்; மக்கள் இதையே தான் நம்மை பார்த்து செய்ய போகிறார்கள் என அவருக்கு ஏன் தோன்றவே இல்லை?

சினிமா என்பது ஒரு மிகப்பெரிய மீடியா.. சினிமா பார்த்து நல்லதை எடுத்து கொள்கிறார்களோ இல்லையோ - கெட்ட விஷயம் சர்வ நிச்சயமாய் இளம் தலைமுறை சிலராவது எடுத்து கொள்வர்.

இதே கதை ஒரு நாவலாக எழுதப்பட்டால் கூட - அது நன்கு படித்த - யோசிக்கும் தன்மையுள்ள மனிதர்களிடம் மட்டும் சென்றிருக்கும். சினிமா எனும்போது ஜெனரேஷன் Z - இது எல்லாமே இயல்பு தான் என்ற முடிவுக்கு வர மாட்டார்களா?

இவை அனைத்துக்கும் அடிப்படை ஆணவ கொலை என்கிறார்கள். ஆணவ கொலை தவறு தான் ! ஆனால் இரண்டாம் பாதியில் ஒரு மணி நேரம் வாந்தி வர வைக்கும் காட்சிகளை வைத்து விட்டு கடைசி 10 நிமிடம் ஆணவ கொலைக்கு பயந்தே இப்படி செய்தோம் என முடிப்பது என்ன நியாயமோ?

எனக்கு வருத்தமான இன்னொரு விஷயம் - இது பிரதீப் ரங்கநாதன் படம் + நீண்ட விடுமுறை என்பதால்- ஏற்கனவே போட்ட காசை எடுத்துவிட்டனர்; நிச்சயம் சில கோடி லாபத்துடன் அடுத்த 10 நாட்களுக்கு திரை அரங்கில் ஓடும் .. இது இயக்குனர் கீர்த்திஸ்வரன் மற்றும் பிரதீப்பிற்கு தாங்கள் செய்த தவறை உணர முடியாமல் செய்துவிடும் ..

பணம் தேவை தான் அதற்காக எப்படியும் சம்பாதிக்கலாமா பிரதீப் & கீர்த்தீஸ்வரன்? அடுத்த தலைமுறைக்கு எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என சொல்லி கொடுத்து/ கெடுத்து தான் சம்பாதிக்க வேண்டுமா?

பிரதீப் மற்றும் கீர்த்திஸ்வரன் - தங்கள் சோசியல் மீடியாவில் மிக மகிழ்வாக வெற்றியை கொண்டாடுகின்றனர்; இத்தகைய இயற்கைக்கு எதிரான படங்கள் தான் ஓடும் என ஒரு க்ரூப் நிஜமாகவே ரூம் போட்டு யோசிக்க வைத்து விடலாம்- இந்த படம் !

இந்தியாவை உலக அரங்கில் பலரும் மதிக்க ஒரு முக்கிய காரணம் -நமது குடும்ப அமைப்பு; திருமணத்திற்கு பின் - ஒரு மனைவி - ஒரே குடும்பம் என பெரும்பான்மை மக்கள் வாழ்வது பிற்போக்கு தனம் அல்ல ! அது தான் இந்தியாவை மதிக்க வைத்திருக்கிறது

இப்படி எல்லாம் நடக்கவே இல்லையா? எடுத்தால் என்ன தப்பு என்றால்- மாஸ் மீடியாவில் எதை எடுக்க வேண்டும் என ஒரு சுய கட்டுப்பாடு படைப்பாளிக்கு வேண்டும். குடும்ப உறவுகளில் கூட சில நேரம் - தவறான உறவுக்குள் சிலர் போயிருக்க கூடும்.. அதனை glorify / justify செய்து முழுசாய் ஒரு படம் எடுத்தால் - இன்னும் எத்தனையோ பேருக்கு இது தவறில்லை என்ற எண்ணம் வர வைக்கும். சிந்துசமவெளி என்றொரு படம் இப்படி குடும்ப உறவை தவறாக காட்டி எடுக்கப்பட்டு பலரும் அதனை கடுமையாய் கண்டித்தனர்; இக்காலத்தின் சிந்துசமவெளி - Dude !

சாதாரண பார்வையாளராக - நாம் செய்ய கூடியது ஒன்று தான்.. தயவு செய்து புறக்கணியுங்கள் இத்தகைய படைப்புகளை !

அண்மை பதிவுகள்:

Friday, October 17, 2025

என் இனிய ஸ்நேகா

என் இனிய ஸ்நேகா....

குடும்பத்தில் உள்ளோருக்கெல்லாம்,  பிறந்த நாள் போது சர்ப்ரைஸ் தருபவள் நீ.. உனது தனித்தன்மையில் சிறப்பான ஒன்று இது !

உனது பிறந்த நாளுக்கு உனக்கு என்ன சர்ப்ரைஸ் தருவது? உன் அளவு நான் புத்திசாலி இல்லை ! இருப்பினும் சில நினைவுகளை, எண்ணங்களை பகிர எண்ணுகிறேன்;

இது உனது 27 ஆவது பிறந்த நாள் என்பதால் - 27 விஷயங்கள் :)

1. உன்னை கடவுளின் பரிசு என்றே நானும் அம்மாவும் எண்ணுகிறோம். அம்மா கர்ப்பத்தின் போது வாமிட்டிங்கிற்கு எத்தனையோ ஊசிகள் போட்டும் நீ பாதிப்பின்றி பிறந்தது கடவுள் செயல் தான் என்பது முக்கிய காரணம்.


 நாம் எல்லோருமே எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் ! திருமணத்திற்கு பின் எந்த நாடு, எந்த ஊர் போவோம் என்றே தெரியாமல் வாழும் பல்வேறு பெண்கள் இடையே - கல்யாணத்திற்கு பின்னும் - அம்மா- அப்பா கூப்பிடு தூரத்தில் நீ இருப்பதும்- நினைக்கும் போதெல்லாம் உன்னை பார்க்க முடிவதும் எங்கள் வாழ்க்கையை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்கும் !

2. சிறு வயதில் விளையாட்டாய் சொன்ன விஷயங்களில் எத்தனை நடந்தே விட்டது.. !! நான் எப்படியும் வயதான பின் பிராக்டிஸ் ஆரம்பிப்பேன்; நீயும் இதே கோர்ஸ் படித்தால் - நாம் தினமும் பார்க்க முடியும் என சொன்னது அப்படியே நடந்தது ! எத்தனையோ பெற்றோர் தங்கள் தொழிலுக்கு மகன்/ மகள் வரவேண்டும் என நினைத்தாலும் பலருக்கும் இவ்வாறு நிகழ்வதில்லை ; ஆனால் நீ இதே தொழிலுக்கு வந்தது மிகப் பெரும் விஷயம்; சுய தொழிலில் இன்று சில வலிகள் இருந்தாலும் என்றோ ஒரு நாள் அவையெல்லாம் worth தான் என உனக்கு நிச்சயம் தோன்றும் !

3. கொரோனா வந்த காலத்தில் வீடு- அலுவலகம் இரண்டையும் நீ அசால்டாக சமாளித்த விதம்- உண்மையில் வேறு ஒரு ஸ்நேகாவை எங்களுக்கு காட்டியது.

சில விதத்தில் நீ பயங்கர தைரிய சாலி- ஈசியாக அழ மாட்டாய் ; ஆனால் சில விஷயத்திற்கு தேவையின்றி பயப்படவும் செய்வாய் (விடு.. கவலையோ, பயமோ இல்லாத மனிதர்கள் யாருமே இல்லை !)

4. நீ கடவுள் தந்த கொடை என்றால் - கூக்ளி - நீ எங்களுக்கு தந்த ஆக சிறந்த பரிசு ! 



ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாய் மனிதர்கள் இருக்கிறார்களா என்ன? ஆனால் சர்வ நிச்சயமாய் pet வைத்திருக்கும் மனிதர்கள் ஒவ்வொரு நாளும் சில மணித்துளிகளாவது சந்தோஷத்தை அடைகிறார்கள்; நீ இல்லாத வீட்டில் கூக்ளி தான் எங்களுக்கு ஆறுதல்; இதனை யோசித்து தான் நீ அவனை எங்களுக்கு அளித்துள்ளாய் ! 


பெற்ற குழந்தை கூட கடைசி காலம் வரை நம்முடன் படுத்து தூங்காது - ஆனால் உன் தம்பி இத்தனை வருடத்திற்கு பிறகும் எங்களோடு தான் உறங்குகிறான் !

5. ACS இன்ஸ்டிடியூட் மீட்டிங் ஒன்றிற்கு சென்ற நான்- மாலை மீட்டிங் முடிந்த பின்- வேறு நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்த விட்டு 11 மணி வரை இல்லம் வரவில்லை; நாள் முழுதும் உயிர்ப்புடன் இருந்த மொபைல் 10 மணிக்கு பாட்டரி தீர்ந்து ஆப் ஆகிவிட்டது. தாமதமாய் வருவேன் என்பதை சொல்லவும் இல்லை; எனது நம்பர் ரீச்சபிள் இல்லை என்றதும் - நான் டிரைவிங்கில் இருக்கும் போது - கவுன்சில் மெம்பர்கள் சிலருக்கு போன் அடித்து (இரவு 11.30 க்கு மேல்..!) அப்பாவுக்கு என்ன ஆச்சு; வீட்டுக்கு வரவில்லை என விசாரித்திருக்கிறாய். 

12 மணி அளவில் நான் வீடு வந்து சேர வீட்டுக்கு வெளியிலேயே நின்றிருந்த - உன் முதல் கேள்வி " போனுக்கு என்ன ஆச்சு? " " சார்ஜ் இல்லை ; ஆப் ஆகிடுச்சு " என சொல்ல, போனை வாங்கி சார்ஜ் இல்லாததைப் பார்த்து விட்டு-  வீசி தரையில் எறிந்து விட்டாய். எனக்கு கோபம் வராமல் சிரிப்பு தான் வந்தது..... உனக்கு என் மீது இருந்த அக்கறை பார்த்து...கோபமாய் இருந்த சித்ராவிடமும் சொன்னேன் " என் பொண்ணு என்னை எப்படி லவ் பண்றா பாத்தியா?"

6. "நீங்கள் ஹாலில் இல்லா விட்டால் வந்த உடனே....அப்பா எங்கே? என்று தான் கேட்பாள்" என்று சித்ரா சொல்வாள்.


என் அம்மா போலவே - என் முகம் பார்த்தே நான் மூட் அவுட் அல்லது டென்ஷனில் உள்ளேன் என புரிந்து கொண்டு என்ன விஷயம் - மூஞ்சே சரியில்லை என்பாய்

இவை எல்லாமே உன் அன்பை எனக்கு காட்டும் !

7. ACS தேர்தலில் நான் 3 மாதம்- வீடு ஆபிஸ் இரண்டையும் மறந்து சுற்றிக் கொண்டிருக்க ஆபிஸை நீ தான் சமாளித்தாய். ஆபிஸ் பக்கம் வராமல்  நான் தேர்தலுக்கு அலைவதால் நீ என் மேல் கோபமாய் இருப்பாய் என்று தான் நினைத்திருந்தேன்; ஆனால் தேர்தல் அன்று நீயும் களத்தில் இறங்கி ஒரு நாள் முழுதும் வேலை செய்தது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் + மகிழ்ச்சி !

8. ஒரு உண்மையை சொல்ல வேண்டும்; நீ வந்த பிறகு தான் நம் அலுவலகம் சரியான திசைக்கு செல்ல ஆரம்பித்தது. Placement, Valuation, POSH - இந்த மூன்று துறைகளில் நாம் விரிவாக்கம் செய்ததும் நீ வந்த பிறகு நடந்தவையே ! 



மிக முக்கியமாய் நமது trainees & associates இடம் நீ பழகும் விதம் ! எட்டரை வருடங்களாக நமது ஆபிஸை பார்த்தவன் என்ற முறையில் என்னால் இதை சர்வ நிச்சயமாக உணர முடிகிறது !

9. என்னோடு வண்டியில் வரும் பல நேரம் பின்னால் அமர்ந்து பாட்டு பாடிக் கொண்டே வருவாய்; அம்மாவிடம் கேட்டால் என்னோடு வரும்போது பாடவே மாட்டாளே என்று சொல்கிறார் .. அதென்ன அப்பாவுடன் வரும்போது மட்டும் குஷியோ தெரிய வில்லை !

10. உனது கல்யாண ஏற்பாடுகளின் போது நமக்கு சிற்சில சண்டைகள் வந்த வண்ணம் இருந்தது; நீ தேவையின்றி மிக அதிக செலவு செய்கிறாய் என்பது என் எண்ணம். அவ்வப்போது நான்இதை சொல்லிக் கொண்டே இருந்தாலும் மண்டப அலங்காரம் உள்ளிட்ட சில விஷயங்களில் நீ விடாப்பிடியாய் நின்று grand ஆக செய்து விட்டாய். 



உண்மையில் திருமணம் முடிந்த பிறகு தான் நீ செய்த செலவுகள் எல்லாம் தேவையான ஒன்று- நான் தான் புரிந்து கொள்ளாமல் தடுக்க எண்ணினேன் என்று தோன்றியது

11. நீ, நான், அம்மா எத்தனையோ ஊர்களுக்கு பயணம் சென்றுள்ளோம்; அவை ஒவ்வொன்றுமே மறக்க முடியாத நினைவுகள்; கூக்ளி பயலால் இப்போது நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வெளியூர் செல்லவே முடிய வில்லை ! 




நாங்கள் தனியே பயணம் செய்யும் போது நிச்சயம் உன்னை நாங்கள் மிஸ் செய்யவே செயகிறோம்.. உன்னை போல் அட்டகாசமாய் பிளான் செய்ய எங்களால் முடியாது; அஷ்வின் இந்த விஷயத்தில் மிகக் கொடுத்து வைத்தவர் ! டூரில் அவர் ஜாலியாக உன் கூட வந்தால் போதும் !

12. நீயும் நானும் சேர்ந்து நடித்த ஸ்கிட் - கொடைக்கானலில் ஒரு முறை- சென்னையில் ஒரு முறை- இவை என்றுமே மறக்க முடியாத அனுபவங்கள்- இரண்டு முறையும் எத்தனையோ பேர் முடித்த உடன் வந்து பாராட்டினர்


 
நாம் நடித்த கொடைக்கானல் ஸ்கிட் இரண்டரை மணி நேரம்- சினிமா போல் ஓடியது; அது முடிந்து- அடுத்த சில நிமிடங்களில் டிரஸ் மாற்றி விட்டு வந்து Campfire - ல் நீ மற்ற பெண்களுடன் சேர்ந்து போட்ட ஆட்டம் - உண்மையில் நாங்களே திருஷ்டி வைக்கும் அளவு இருந்தது ! என்னடா இந்த பொண்ணு எல்லா பக்கமும் சிக்ஸர் அடிக்கிறா என்று பலரும் நினைத்திருக்க கூடும் !

13. நம் அலுவலகத்தில் இருந்த/ இருக்கும் பலரும் உன்னைப் பற்றி சொல்லும் ஒரு விஷயம்: "ரொம்ப ரொம்ப நல்லா சொல்லி தருவாங்க - ஈஸியா புரியிற மாதிரி - தெளிவா சொல்லி குடுப்பாங்க" ; நிச்சயம் இது ஒரு மிக நல்ல திறமை .. குறிப்பாய் பிறருக்குப் பயன் படும் விதமான திறமை !

உனக்கு பிடித்த ஒரு quote : We raise by lifting others !

14. சின்ன வயதிலிருந்தே சந்தோஷமாய் இருப்பதே வாழ்க்கையின் லட்சியம் என்கிற மாதிரி தான் நடந்து கொள்வாய் ! சந்தோஷமான சூழலை - நீயாகவே உருவாக்கிக் கொள்வாய்.. இன்னமும் இது தொடர்ந்தாலும், தற்போது அலுவலக பொறுப்புகளால் இது சற்றே குறைந்துள்ளது என எண்ணம் எனக்கு ..

15. அம்மா- அப்பாவிடமிருக்கும் பல நல்ல விஷயங்கள் உன்னிடம் உண்டு உதாரணமாய் - என்னிடம் இருக்கும் எழுத்து மற்றும் பேச்சு திறன், அம்மாவின் தைரியம் மற்றும் நல்ல டேஸ்ட் ! 



இருப்பினும் எங்களிடமிருந்து எடுத்துக் கொள்ள இன்னும் கூட சில குணங்கள் உண்டு.. யோசித்துப் பார் !

16. பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் : எனது சோசியல் மீடியாவின் அட்மின் நீ என்பது ! குறிப்பாய் வீடியோக்கள் - படங்கள் - சில நேரம் வார்த்தை கோர்வை -இவை உன்னையே சார்ந்தது- நேரில் பலரும் குறிப்பிடும் போது " என் பெண் தான் செய்தாள் " என பெருமையாய் சொன்னாலும், கேட்டவர்களிடம் மட்டும் தான் சொல்கிறேன்.. இந்த விஷயம் தெரியாதோர் தான் மிக அதிகம் !

17. சிவகார்த்திகேயன் fan ஆன உன்னுடன் அநேகமாய் அனைத்து சிவகார்த்திகேயன் படங்களும் முதல் நாளே பார்த்திருக்கிறேன் - சிவா நடித்ததால் மட்டும் மொக்கை படமான மிஸ்டர் லோக்கல் பார்த்து விட்டு கூட நல்லா இருக்கு என்பாய் நீ ! இதில் ரெமோ முதல் நாளே படம் பார்க்க இரவு நேரம் நெடுந்தூரம் பைக்கில் சென்று வந்தது இன்னும் நினைவில் இருக்கு ! 

ஏனோ இப்போது சிவகார்த்திகேயன் படங்கள் முதல் நாள் அல்ல- தியேட்டரில் சென்று பார்ப்பதே உனக்கு குறைந்து விட்டது ! (சிவகார்த்திகேயன் பிறந்தது கூட 17 ஆம் தேதி தான்- பிப்ரவரி - 17!)

18. எல்லாமே நல்ல விஷயமாய் சொல்லி விட்டால் எப்படி ? ஒரு விஷயத்தையாவது மாற்றிக் கொள்ள சொல்ல வேண்டும் இல்லையா? மொபைலுடன் - சோசியல் மீடியாவுடன் செலவிடும் நேரத்தை குறைத்து மனிதர்களிடம் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்து ; 50க்கு பிறகு தான் மனிதர்கள் தேவை எங்களுக்கு புரிகிறது; இவ்வளவு நாள் வேலை -வேலை என இருந்த நாங்கள் - இப்போது தான் மனிதர்களை தேடி செல்கிறோம் - நீயாவது முதலில் இருந்தே மனிதர்களுடன் நெருக்கமாய் இரு- உனக்கு பெயர் என ஸ்நேகா என வைத்ததே அப்படி இருப்பாய் என்பதற்காக தான் !

மிக மிக focus ஆக படிப்பு, படிப்பு என்றே இருந்து விட்டாய் - வெளி உலக அனுபவம் சற்று குறைவே (புது ஆட்களுக்கு - நீ பேசும் விதத்தில் இது தெரியாது ) - இதற்கு நேர் மாறாக அஷ்வின் மிக அதிக உலக அனுபவம் கொண்டவர்-

நீ நிறைய புதுப்புது அனுபவங்கள் பெறவேண்டும் - புது விஷயங்கள் - மனிதர்கள்- இவைகள் மூலம் தான் இவை கிடைக்கும்

19. தனிப்பட்ட முறையில் என் வாழ்க்கையில் மிக அதிக மகிழ்வான காலம் என்றால் அது நீ குழந்தையாக இருந்த காலம் தான்- ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை உன்னுடன் மட்டுமே செலவிடுவேன்- நீ பேசும் பேச்சுக்கள், விளையாட்டு இவற்றால் நான் சிரித்து கொண்டே இருந்த காலம் என்றால் அது மட்டும் தான் ! குறிப்பாய் நாள் முழுதும் பார்க்காமல் மாலை பார்க்கும் போது நீ ஓடி வந்து ஏறிக்கொள்வாய் - அந்த கணம் சந்தோஷத்தின் உச்சம் !

20. சிறு வயதில் எவ்வளவு கொஞ்சி முத்தங்கள் தந்துள்ளேன்- ஆனால் சற்று பெரியவள் ஆன உடனே அதை நிறுத்தி விட்டாய் ! 



ஏதேனும் நீ சாதித்தால் - பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றில் மட்டும் நைசாக ஒரு முத்தம் கொடுப்பேன்; அதையே ஒழுங்காய் வாங்காமல் ஓடி விடுகிறாய் !

21. நீ பெரியவள் ஆனது ஒரு அரை ஆண்டுத் தேர்வின் போது நிகழ்ந்தது; தேர்வு பாதிக்காமல் - அதே நேரம் நெருங்கிய உறவினர்களை அழைத்து சிறு விழாவும் நடத்தி விட்டோம் - போலவே - நீடாமங்கலம் பாட்டி இறந்த நேரம் உனக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. இருப்பினும் தேர்வு பாதிக்காமல்- தஞ்சை சென்று வந்தோம் - இவை எல்லாமே இயற்கை மற்றும் கடவுளின் அருள் உனக்கு எப்போதும் இருப்பதையே காட்டுவதாக நினைக்கிறேன்

22. மன உறுதி உனக்கு ரொம்பவே அதிகம் ! மிக குறைவாக உண்பது - இரவில் அல்லது காலையில் சாப்பிடாமலே இருப்பது இதெல்லாம் என்னால் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்கள் !

23. உனக்கு உடன் பிறந்தவர்கள் இல்லையே என்ற வருத்தம் இருந்தாலும் - சுவாதி மற்றும் மகேஷ் உடன் உனக்கு இருக்கும் அழகான நட்பு நாங்கள் எப்போதும் ரசிக்கும் விஷயம்; 




கசின்-களான அவர்கள் சகோதரர்கள் இல்லாத குறையைப் போக்குவர் என நினைக்கிறேன்; போலவே வினோத்தும் கூட !


24. நன்றாகப் பாட தெரிந்தவள் நீ- ரசித்துப் பாடுவாய் - அதனாலேயே அது அருமையாய் இருக்கும்; இந்த கால பாட்டுக்கள் மட்டும் இன்றி எங்கள் கால இளையராஜா பாட்டுக்கள் வரை நீ விரும்பிப் பாடுவது ஆச்சரியமான விஷயம் !

25. பள்ளியில் படித்த போது உங்கள் வகுப்பில் நான் வந்து ACS கோர்ஸ் பற்றி பேசியது; 



நீ மதுரை சென்ற போது 10 நாள் பார்க்க முடியாமல் ஒரு நாள் EDP கிளாஸ் கேட்டு வந்து எடுத்தது..இந்த இரண்டு நிகழ்வுகளும் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- காரணம்- நான் ஆசிரியராக - நீ மாணவியாக இருந்த இடங்கள் இவை !

26. உனது திருமணம்.. எவ்வளவு விரைவாய் நடந்தது ! நம்பவே முடியவில்லை !


அதிலும் எல்லா விதத்திலும் நல்லவரான அஷ்வின் அமைந்தது எங்களுக்கு மிக மகிழ்ச்சியான விஷயம் ! நாம் பலருக்கும் முடிந்த நன்மைகள் செய்துள்ளதால் தான் இப்படி அமைந்தது என்பது அம்மாவின் நம்பிக்கை !

27. வாழ்க்கை இன்னும் என்னென்ன ஆச்சரியங்களை நமக்காக ஒளித்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை !

உன்னோடு சேர்ந்து அடுத்த நிமிடம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்களை காண நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம் !

*******
Related Posts Plugin for WordPress, Blogger...