Saturday, February 1, 2014

சென்னை ஆட்டோ - மீட்டர் குறித்து ஒரு மேட்டர் !

மிழகத்துக்கு வெளியே பயணிக்கும் ஒவ்வொரு முறையும் மற்ற மாநிலங்களில் ஆட்டோ கட்டணம் மிக குறைவாக இருப்பது - பெரு மூச்சை வரவழைக்கும். இதே தூரத்துக்கு சென்னையில் எவ்வளவு ஆட்டோ கட்டணம் இருக்கும் என்று கணக்கு போட்டால் வருத்தம் இன்னும் அதிகமாகும்.

தமிழகத்தில் மட்டும் ஆட்டோ கட்டணம் அதிகமாக இருக்க என்னென்னவோ காரணம் சொல்வார்கள் ஆட்டோ காரர்கள்.

"Empty  ஆக திரும்பணும் ;

மத்த ஊரு போல இங்கெல்லாம் ஆட்டோ அதிகம் உபயோகிப்பதில்லை;

எல்லாரும் வாங்குற  அளவு தானே நானும் வாங்குறேன் ?"

ஆகியவை மாதிரிக்கு சில..

இந்த நிலையை மாற்ற தமிழக அரசு முதல் சில அடிகளை எடுத்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று...




(விலை வாசியை விண்ணை முட்ட வைத்தது, சென்ற ஆட்சிக்கு சற்றும் குறைவின்றி அடிக்கும் கொள்ளை போன்றவற்றில் இந்த ஆட்சி மீது வருத்தம் இருந்தாலும் அரிதாக நடக்கும் நல்ல விஷயத்தையும் சொல்லத்தானே வேண்டும் ?)

உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்... ஆட்டோக்களில் எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்துவதை தமிழக அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. அநேகமாய் சென்னையில் 98 % ஆட்டோக்கள் எலக்ட்ரானிக் மீட்டர்  பொருத்தி விட்டன என்றே தோன்றுகிறது.

இப்போது இன்னொரு சிக்கல் : மீட்டர் பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும் என்று மீண்டும் ஆட்டோ காரர்கள் - ஏறும்போதே செல்லும் இடம் கேட்டு விட்டு " எவ்வளவு ஆகும் " என பழைய கதையை ஆரம்பிக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களில் அவ்வப்போது ஆட்டோவில் பயணித்ததில்  இப்படி அதிக தொகை கேட்கும் ஆட்டோவில் " மீட்டர் போட்டால் தான் வருவேன் " என்றால் " சரி சார்.. மேலே கொஞ்சம் போட்டு குடுங்க " என்று வருகிறார்கள். மேலே 20 ரூபாய் கொடுத்தாலும் கூட பழைய காலம் போல பகல் கொள்ளை இல்லாமல் தப்பிக்க முடிகிறது

நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பலரும் கூட "மீட்டர் போட்டால் மட்டுமே ஆட்டோவில் ஏறுவது " என்ற வழக்கத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதை பகிர்கிறார்கள்

மாற்றம் முழுவதுமாக வந்து விட்டது என்று சொல்ல முடியாது. சட்டம் ஒரு பக்கம் இருந்தால் கூட - அதனை எப்படி மீறுவது என்று ஏராளமான ஆட்டோ காரர்கள் திட்டமிடுகிறார்கள்

அண்மையில் கீழ்கட்டளை சிக்னல் அருகே நண்பரின் வருகைக்காக காத்திருக்கும் போது இரண்டு பக்கமும் போலிஸ் நின்று கொண்டு - பயணிகளுடன் செல்லும் ஒவ்வொரு ஆட்டோவையும் நிறுத்தி மீட்டர் போட்டு விட்டு ஓட்டுகிறார்களா என்று செக் செய்ததுடன் மீட்டர் போடாமல் ஓடும் ஆட்டோ காரர்களை எச்சரித்து அனுப்புவதை காண முடிந்தது.

குறிப்பாக ஒரு போலிஸ் காரர் பின்னால் அமர்ந்திருந்த பயணிகளிடம் "அவர் மீட்டர்  போடாட்டி கூட -  நீங்க  போட சொல்லுங்க சார் ; போடாட்டி ஆட்டோ நம்பரை குறிச்சுக்கிட்டு  போலிசுக்கு போன் பண்ணுங்க. ஆயிரம் ரூபா பைன் போடுவோம் " என்று சொல்லி கொண்டிருந்தார் !

மீட்டர் போட்டு செல்லும் ஆட்டோக்கள் என்பது லட்சகணக்கான சென்னை வாசிகளின் கனவு. அது நிஜமாக இது ஒரு வாய்ப்பு !

நாம் தான் இதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மீட்டர் போட மாட்டேன் என்று சொல்லும் ஆட்டோக்களை முழுவதும் புறக்கணிப்பதும், மீட்டர் போட்டால் மட்டுமே ஆட்டோவில் ஏறுவதும் சென்னை வாசியாக நாம் செய்ய வேண்டிய காரியம் .

அனைத்து ஆட்டோக்களிலும் சூடு வைக்க முடியாத மீட்டர் பொருத்தப்பட்டு - அவசியம் மீட்டர் போட்டு தான் வண்டி ஓட்ட வேண்டும் என்று அரசு சட்டம் இயற்றி விட்டது. தயவு செய்து மீட்டர் போடாமல் செல்லும் ஆட்டோவில் ஏறி நாமே மாறுதல் வரும் சூழலை குழி தோண்டி புதைக்க வேண்டாம் !

மாறுதல்கள் அவ்வளவு சீக்கிரம் வந்து விடாது. சற்று போராடத்தான் வேண்டும். நமது பங்களிப்பும் இவ்விஷயத்தில் அவசியம் தேவை.
Related Posts Plugin for WordPress, Blogger...