Saturday, February 1, 2014

சென்னை ஆட்டோ - மீட்டர் குறித்து ஒரு மேட்டர் !

மிழகத்துக்கு வெளியே பயணிக்கும் ஒவ்வொரு முறையும் மற்ற மாநிலங்களில் ஆட்டோ கட்டணம் மிக குறைவாக இருப்பது - பெரு மூச்சை வரவழைக்கும். இதே தூரத்துக்கு சென்னையில் எவ்வளவு ஆட்டோ கட்டணம் இருக்கும் என்று கணக்கு போட்டால் வருத்தம் இன்னும் அதிகமாகும்.

தமிழகத்தில் மட்டும் ஆட்டோ கட்டணம் அதிகமாக இருக்க என்னென்னவோ காரணம் சொல்வார்கள் ஆட்டோ காரர்கள்.

"Empty  ஆக திரும்பணும் ;

மத்த ஊரு போல இங்கெல்லாம் ஆட்டோ அதிகம் உபயோகிப்பதில்லை;

எல்லாரும் வாங்குற  அளவு தானே நானும் வாங்குறேன் ?"

ஆகியவை மாதிரிக்கு சில..

இந்த நிலையை மாற்ற தமிழக அரசு முதல் சில அடிகளை எடுத்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று...
(விலை வாசியை விண்ணை முட்ட வைத்தது, சென்ற ஆட்சிக்கு சற்றும் குறைவின்றி அடிக்கும் கொள்ளை போன்றவற்றில் இந்த ஆட்சி மீது வருத்தம் இருந்தாலும் அரிதாக நடக்கும் நல்ல விஷயத்தையும் சொல்லத்தானே வேண்டும் ?)

உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்... ஆட்டோக்களில் எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்துவதை தமிழக அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. அநேகமாய் சென்னையில் 98 % ஆட்டோக்கள் எலக்ட்ரானிக் மீட்டர்  பொருத்தி விட்டன என்றே தோன்றுகிறது.

இப்போது இன்னொரு சிக்கல் : மீட்டர் பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும் என்று மீண்டும் ஆட்டோ காரர்கள் - ஏறும்போதே செல்லும் இடம் கேட்டு விட்டு " எவ்வளவு ஆகும் " என பழைய கதையை ஆரம்பிக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களில் அவ்வப்போது ஆட்டோவில் பயணித்ததில்  இப்படி அதிக தொகை கேட்கும் ஆட்டோவில் " மீட்டர் போட்டால் தான் வருவேன் " என்றால் " சரி சார்.. மேலே கொஞ்சம் போட்டு குடுங்க " என்று வருகிறார்கள். மேலே 20 ரூபாய் கொடுத்தாலும் கூட பழைய காலம் போல பகல் கொள்ளை இல்லாமல் தப்பிக்க முடிகிறது

நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பலரும் கூட "மீட்டர் போட்டால் மட்டுமே ஆட்டோவில் ஏறுவது " என்ற வழக்கத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதை பகிர்கிறார்கள்

மாற்றம் முழுவதுமாக வந்து விட்டது என்று சொல்ல முடியாது. சட்டம் ஒரு பக்கம் இருந்தால் கூட - அதனை எப்படி மீறுவது என்று ஏராளமான ஆட்டோ காரர்கள் திட்டமிடுகிறார்கள்

அண்மையில் கீழ்கட்டளை சிக்னல் அருகே நண்பரின் வருகைக்காக காத்திருக்கும் போது இரண்டு பக்கமும் போலிஸ் நின்று கொண்டு - பயணிகளுடன் செல்லும் ஒவ்வொரு ஆட்டோவையும் நிறுத்தி மீட்டர் போட்டு விட்டு ஓட்டுகிறார்களா என்று செக் செய்ததுடன் மீட்டர் போடாமல் ஓடும் ஆட்டோ காரர்களை எச்சரித்து அனுப்புவதை காண முடிந்தது.

குறிப்பாக ஒரு போலிஸ் காரர் பின்னால் அமர்ந்திருந்த பயணிகளிடம் "அவர் மீட்டர்  போடாட்டி கூட -  நீங்க  போட சொல்லுங்க சார் ; போடாட்டி ஆட்டோ நம்பரை குறிச்சுக்கிட்டு  போலிசுக்கு போன் பண்ணுங்க. ஆயிரம் ரூபா பைன் போடுவோம் " என்று சொல்லி கொண்டிருந்தார் !

மீட்டர் போட்டு செல்லும் ஆட்டோக்கள் என்பது லட்சகணக்கான சென்னை வாசிகளின் கனவு. அது நிஜமாக இது ஒரு வாய்ப்பு !

நாம் தான் இதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மீட்டர் போட மாட்டேன் என்று சொல்லும் ஆட்டோக்களை முழுவதும் புறக்கணிப்பதும், மீட்டர் போட்டால் மட்டுமே ஆட்டோவில் ஏறுவதும் சென்னை வாசியாக நாம் செய்ய வேண்டிய காரியம் .

அனைத்து ஆட்டோக்களிலும் சூடு வைக்க முடியாத மீட்டர் பொருத்தப்பட்டு - அவசியம் மீட்டர் போட்டு தான் வண்டி ஓட்ட வேண்டும் என்று அரசு சட்டம் இயற்றி விட்டது. தயவு செய்து மீட்டர் போடாமல் செல்லும் ஆட்டோவில் ஏறி நாமே மாறுதல் வரும் சூழலை குழி தோண்டி புதைக்க வேண்டாம் !

மாறுதல்கள் அவ்வளவு சீக்கிரம் வந்து விடாது. சற்று போராடத்தான் வேண்டும். நமது பங்களிப்பும் இவ்விஷயத்தில் அவசியம் தேவை.

11 comments:

 1. அடுத்த நூற்றாண்டில் இங்கும் வந்து விடும் என்று நினைக்கிறேன்...! ஹா... ஹா...

  ReplyDelete
 2. எலக்ட்ரோனிக் மீட்டருக்கு சூடு வைப்பது எளிது; நீங்கள் வாங்கும் பெட்ரோல் கணக்கை பாருங்கள்; குறைந்த பட்சம் ஒரு ஐந்த லிட்டர் வாங்குங்கள்; evaporation rate கணக்கை கழித்தாலும் நீங்கள் குறைந்து 200 -250 மில்லி திருடு இருக்கும். அதாவது 5% இது கம்மி; highway-ல் இருக்கும் பங்கில் இன்னும் அதிகம் இருக்கும்!

  ReplyDelete
 3. வணக்கம் மோகன் சார்,
  ஆட்டோ மீட்டர் போட்டுதான் இப்போதெல்லாம் ஓடுவதாக சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,சரி அது உங்கள் அனுபவம்.நான் எப்படியும் மாதத்தில் 4 அல்லது 5 முறை ஆட்டோவில் பயணப்படும் சந்தர்ப்பம் வரும் .ஆட்டோ மீட்டர் முறை படுத்தப்பட்ட பின் எனக்குவாய்த்த அனுபவம் ஏமாற்றமே.அதாவது அக்டோபர் மாதம் முதல் இன்றுவரை 20 முறைக்கு மேல் ஆட்டோ பிடித்திருப்பேன்.அதில் ஒரே முறை மட்டுமே மீட்டர் பணம் கொடுத்தேன்.மற்ற நேரங்களில் மீட்டர் போட ஒத்துகொள்ளும் ஆட்டோ கிடைக்க காத்திருந்து வெறுத்து பின் அவர்கள் சொல்லும் பணத்தில் பேரம் பேசி ஏறி விடுவது.மனம் வெறுத்து ஒரு ஆட்டோகாரரிடம் வண்டியில் போய் கொண்டிருக்கும்போது அது பற்றி கேட்டபோது
  1.எப்பவுமே ஆட்டோ ஒரு இடத்திற்கு கூப்பிட்டால் அவர்கள் சென்று திரும்ப அதே இடத்திற்கு வரும் பணத்தை கணக்கிட்டு தான் கேட்பார்களாம் .இதான் ஆட்டோவின் நடைமுறையாம்.ஏன் என்றால் திரும்ப வரும் போது சவாரி கிடைப்பதில் உத்தரவாதம் கிடையாதாம்.
  2.மேலும் போலீசுக்கே இவர்கள் சிரமம் புரிந்து விட்டதாம்.அதனால் தான் இப்போவெல்லாம் நிறுத்துவது கிடையாதாம்.
  3.அரசாங்கம் ஆளுங்கட்சி சார்பு தொழிற்சங்கத்தை மட்டும் அழைத்து மீட்டர் பற்றி ஆலோசித்து முடிவெடுத்து விட்டதாம் என்று சொல்லி ஆளும் கட்சியை வசை பாடினார்.
  4.மேலும் மற்ற மாநிலங்களை சொன்னால் அங்கே ரோடு நேராக இருக்கும் என்றெல்லாம் ஏதேதோ சொன்னார்.
  5.இறுதியாக சொன்னார் பாருங்கள் ஒரு விஷயம்,ஆட்டோ மீட்டர் தொடர்பான ஸ்டிக்கர் பற்றி கேட்டபோது அது 200.300 கொடுத்தால் போலீசே விற்பதாகவும் சொன்னார்.

  நான் நினைப்பது.: மீட்டர் செக்கிங் முக்கிய சாலைகளில் மட்டுமே சொல்லிகொள்ளும்படி நடக்கிறது.நாம் வசிக்கும் தெருக்களில் ஆட்டோ எடுத்தால் அவர்கள் சொல்வதுதான் விலை.மீட்டர் போட்ட ஆட்டோவில் தான் ஏறவேண்டும் என்ற என் வைராக்கியம் வெறுத்து போய் நீர்த்து விட்டது.ஆனாலும் சுஜாதா அவர்கள் லஞ்சம் ஒழிப்பு தொடர்பாக சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.அசாத்திய பொறுமை வேண்டும் அது இல்லாமல் கிடைக்கும் வரை காத்திருந்து எல்லோரும் பழக்க பட்டால் மட்டுமே சாத்தியம்.

  ReplyDelete
 4. எல்லா இடத்திலும் இந்த மீட்டர் முறை அமுலுக்கு வந்தால் நன்றாக இருக்கும்...

  ReplyDelete
 5. // மாறுதல்கள் அவ்வளவு சீக்கிரம் வந்து விடாது. சற்று போராடத்தான் வேண்டும். நமது பங்களிப்பும் இவ்விஷயத்தில் அவசியம் தேவை. //

  பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் அங்கம் வகிக்கும், காம்ரேடுகளின் தொழிற்சங்கத் தலைவர்கள் மட்டுமே இதனை முன்னிறுத்த வேண்டும். மககள் நலன் பேசும் அவர்கள் செய்வார்களா?

  ReplyDelete
 6. உச்சநீதி மன்றம் பலமுறை எச்சரித்த பிறகுதான் அரசே இதுபோன்ற நடவடிக்கை எடுத்த ஆரம்பித்தது. தலையிடாவிட்டல்? இத்தனை ஆண்டுகள் இரு அரசுகளும் என்ன செய்துகொண்டிருந்தன எனும்போது அவர்களுக்கும் இதில் பங்கு இருந்திருகும் என்பது உண்மையாகிறது. தமிழகத்தின் பெரும்பாலான ஆட்டோ தொழிற்சங்களை நடத்துபவர்கள் இந்த இரு கட்சியினர்தான்.

  நமது ஆட்டோ ஓட்டுனர்கள் தமிழகத்திற்கு மிகுந்த அவப்பெயரை வழங்கியிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த நிலை இனியும் தொடருமா ?

  கே. கோபாலன்

  ReplyDelete
 7. கொஞ்சம் திருந்தி இருக்கிறார்கள்! ஆனால் முழுவதுமில்லை! சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்தபோது இரண்டு ஆட்டோவில் ஏறினேன். இரண்டிலும் மீட்டர் போடவில்லை! பேரம் பேசித்தான் வந்தார்கள். பொழுது சாய்ந்துவிட்டதால் மீட்டர் போடும் ஆட்டோவிற்கு காத்திருக்க நேரமும் இல்லை! ஆனால் மீட்டர் போடச்சொல்லுவதால் முன்பைவிட ஆட்டோக் கட்டணம் பேரம் பேசுவதிலும் குறைந்திருப்பது நிஜம்!

  ReplyDelete
 8. என் அனுபவம்
  கடந்த மாதத்தில் நான் பயணித்த 10 ஆட்டோ சவாரிகளில் 8 ஆட்டோ மீட்டர்களில் சூடு
  போலீஸ் காரன் மற்றும் அரசாங்கம் ஒழுங்காக இல்லாத வரைக்கும் மாற்றம் ஒரு பகல் கனவே

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம். என்னத்த சொல்றது. இவங்களுக்கும் ஒரு ரூபாய்க்கு இட்லியும் 5 ரூபாய்க்கு சாதமும் அரசாங்க உணவகம் வழங்குகிறது.

   கோபாலன்

   Delete
 9. ஆட்டோ மீட்டருக்கு உச்ச நீதிமன்றம்தான் காரணம் என்றாலும், பெயர் என்னவோ 'அம்மா'விற்கு தான் கிடைத்துள்ளது!

  ReplyDelete
 10. பல இடங்களில் இன்னும் மீட்டர் போடுவதில்லை. மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வரவேண்டும்.... பார்க்கலாம்..

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...