Tuesday, August 6, 2013

தையல்காரர் வாழ்க்கை - அறியாத தகவல்கள்

றேழு ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தின் ஆஸ்தான டைலர் அவர். ஒல்லியான, சற்று குட்டையான உருவம்; எப்போதும் 10 நாள் தாடி - கலைந்த தலையுடன் காட்சி தருவார்.

துணி தரும்போது - "எப்போ தருவீர்கள்?" என சம்ப்ரதாயமாக கேட்க வேண்டும் " அவரும் ஒரு வாரம் அல்லது ரெண்டு வாரம் " என ஏதாவது ஒன்று சொல்வார். சொன்ன தேதியில் போனால் வேலையை துளி கூட ஆரம்பித்திருக்க மாட்டார். பல்வேறு பாலோ அப்களுக்கு பிறகு தான் துணி கிடைக்கும். இந்த கடுப்பில் - ஓரிரு முறை வெளியில் தைக்க தந்து - அவை வீணாகி மீண்டும் இவரிடமே வந்து சேருவோம்

2013-06-03 10.03.56

துணி தர தாமதமாகும் போது போனிலும் நேரிலும் மிக, மிக கோபமாக இவரிடம் பேச நேரிடும். மனுஷன் கொஞ்சம் கூட அசர மாட்டார். யார் எவ்வளவு கோபப்பட்டாலும் - அவருக்கு துளி கூட கோபம் வராது. பொறுமையாக தான் பதில் சொல்வார்

நீண்ட நாளாக இவரிடம் பேட்டி எடுக்க நினைத்து சமீபத்தில் தான் சாத்தியம் ஆனது

நானும் எத்தனையோ பேரிடம் பேசிட்டேன் ! இவரிடம் பேசியது - ஒரு வித்யாசமான அனுபவமாய் இருந்தது. காரணம் - பதில்கள் எல்லாம் கேள்வியை விட சின்னதாய் இருந்தது ! பேட்டியில் உள்ள ஒவ்வொரு வரியும் - 2 அல்லது 3 கேள்விகளுக்கு பின் கிடைத்த பதில்களே ( நான் கேட்ட கேள்விகள் ஆங்காங்கு மட்டுமே கொடுத்துள்ளேன் )

நான் பேசியது அவருக்கு பிடிக்கலையோ என்று கூட நினைத்தேன். ஆனால் எனது ஹவுஸ் பாஸை  அடுத்த முறை பார்த்த போது , எடுத்தவுடனே " என்னங்க உங்க வீட்டுக்காரர்  என்கிட்டே பேட்டி எடுத்தார் தெரியுமா !" என ஆனந்த அதிர்ச்சியில் கூறியிருக்கிறார் ! மனுஷனுக்கு பெருமை தாங்கலையாம் !

இனி அவருடன் : பேசியதிலிருந்து :

" என்னோட பேரு சுந்தரன் - சொந்த ஊரு குருவாயூர் பக்கத்தில் வடக்கிய காடு ( "ஊரு பேரை அவசியம் சொல்லணுமா?") ; டைலர் வேலைக்கு வந்தது எங்க பரம்பரையில் நான் மட்டும் தான்.

டென்த் வரைக்கும் படிச்சேன். அப்புறம் ஒரு டைலரிங் ஸ்கூலில் இதுக்கான கோர்ஸ் கத்துக்கிட்டேன் . அது முடிச்சுட்டு ஒரு வருஷம் கேரளாவில் ஒரு கடையில் வேலை பார்த்தேன். எடுத்தவுடனே சின்ன சின்ன வேலைகள் தருவாங்க.கொஞ்ச நாளில்  புது துணி தைக்கிற வேலை கூட செய்ய ஆரம்பிச்சுட்டேன்

அப்புறம் வெளிநாடு போக சான்ஸ் கிடைச்சுது. பஹரினில் போய் 5 வருஷம் வேலை பார்த்தேன். அங்கு ஒரு பிரச்சனை ஆகி திரும்ப வந்துட்டேன். பிரச்சனை எனக்கு இல்லை. என் அண்ணனும் அதே ஓனர் கிட்டே டிரைவரா இருந்தார் அவருக்கும் ஓனருக்கும் ஒரு சண்டை. அதனால் என்னையும் ஊருக்கு அனுப்பிட்டாங்க

23 வயசில் சென்னை வந்தேன் - அக்கா- மாமா உள்ளகரம் பகுதியில் இருந்தாங்க அப்போ இங்கே வந்தவன் தான் - தொடர்ந்து இதே ஏரியாவில் தான் 25 வருஷமா கடை வச்சிருக்கேன் 94ல் எனக்கு கல்யாணம் ஆனது. 2 பசங்க - ஒருத்தன்  பி.காம் படிக்கிறான் இன்னொருத்தன் ஏழாவது படிக்கிறான்

மனைவிக்கும் தையல் வேலை ஓரளவு தெரியும். வீட்டிலே இருந்தபடி எனக்கு ஹெல்ப் பண்றாங்க. பெண்களுக்கான துணிகள் சில எல்லாம் அவங்க வீட்டிலே இருந்த படி தச்சு தர்றாங்க

" நீங்க வீட்டுக்கு போன பின்னும் தையல் வேலை செய்வீங்களா?"

" ஊஹூம்; வீட்டிலே தையல் வேலை செய்யவே மாட்டேன்; காலையில் 8 மணிக்கு கடைக்கு வந்தா - வீட்டுக்கு போக நைட்டு 11 மணி ஆகுது ; நடுவில் காலை 11 மணிக்கும் - 2 மணிக்கும் சாப்பிட அரை மணி நேரம் போயிட்டு வருவேன். அவ்ளோ தான். வாரத்தில் ஏழு நாளும் கடையிருக்கு. பண்டிகை நாளில் மட்டும் தான் கடை மூடுவேன் "

எங்கே குடியிருக்கீங்க? வாடகை வீடா ?

ஆமா . சென்னை வந்ததில் இருந்து ரெண்டே முறை தான் வீடு மாறிருக்கோம். ஒரு வீட்டில் 10 வருசம் ; அடுத்த வீட்டில் 15 வருஷம் வாடகைக்கு இருந்தோம் இப்ப மறுபடி மாரிருக்கோம். சிங்கிள் பெட் ரூம் - 5,000 வாடகை; இந்த கடைக்கு 2,000 வாடகை "

" இந்த தொழிலில் ஒரு சீசன் விட்டு அடுத்த சீசன் வந்துக்கிட்டே இருக்கும் இப்போ ஸ்கூல் யூனிபார்ம் சீசன்; அடுத்து தீபாவளி வரும். அப்புறம் கிருஸ்துமஸ், அடுத்து பொங்கல் இப்படி வந்து கிட்டே இருக்கும். அதனால் வேலைக்கு குறைச்சல் இல்லை"

" நம்ம கிட்டே வர்றவங்க வேற ஏரியா வீடு மாறி போனாலும் நம்ம தேடிக்கிட்டு வருவாங்க. இவ்ளோ ஏன் - வெளியூரில் இருக்க -அவங்க சொந்த காரங்க துணி கூட கொண்டு வந்து தைக்க தர்றாங்க - அருமையான தொழில் இது; கத்துக்குறதும் ஈசி . ஆனா இப்போ நிறைய ஆண்கள் இந்த தொழில் கத்துக்குறதில்லை; புதுசா கத்துக்குறது - பெண்கள் தான் அதிகம் ".

"எனக்கு ஹெல்ப்புக்கு ஒண்ணு , ரெண்டு பேர் இருக்காங்க. அப்பப்ப தான் வருவாங்க. மாச சம்பளமோ, தின சம்பளமோ அவங்களுக்கு தர்றது இல்லை. பீஸ் ரேட் தான். சுடிதார் தச்சா- இவ்வளவு, பிளவுஸ் தச்சா இவ்வளவு என தருவேன்

கட்டிங் தான் எங்க வேலையில் ரொம்ப முக்கியம். அதே நேரம் ஸ்டிட்சிங்கும் சரியா இருக்கணும் ஆள் வச்சு வேலை வாங்கினாலும் தப்பாகிடாம நான் தான் பாத்துக்கணும்

சட்டை பட்டன் தைக்கிறது, காஜா எடுக்குறது இதெல்லாம் வெளியில் குடுத்துடுறேன்

இப்போ எக்ஸ்போர்ட்டில் போயி துணி தைக்கிறாங்க அங்கே 4,000 அல்லது 5,000 சம்பளம் கிடைக்கும். மொத்தமா மாசம் அவ்ளோ பெரிய பணம் கிடைக்குதுன்னு அங்கே போயிடுறாங்க "

" ஆமா இப்போல்லாம் பெண்கள் தான் அதிகம் டைலர்களை தேடி வர்றாங்க இல்லை? ஆண்கள் அனேகமா ரெடிமேட் பக்கம் போயிடுறாங்க இல்லியா?"

" முழுக்க அப்படி சொல்ல முடியாது ஆண்கள் துணியும் நிறைய வரத்தான் செய்யுது . இளவட்ட பசங்க தைச்சு போடுறதில்லை. ரெடிமேட் தான் வாங்குறாங்க "

" பெண்களுக்கு ஏன் பிளவுஸ் மற்றும் சுடிதார் தைச்சதில் திருப்தியே வர மாட்டேங்குது ? எப்பவும் புது துணியில் பிட்டிங் சரிய்ல்லைன்னு சொல்றாங்க ?"

" எல்லாரையும் அப்படி சொல்ல முடியாது. சில பேர் தான் அப்படி.

ஒரு சிலருக்கு இன்னிக்கு ஒரு உடம்பு இருக்கும். நாளைக்கு ஒரு உடம்பு இருக்கும். தைக்க கொடுக்கும் போது உள்ள அளவு அடுத்த சில வாரத்தில் மாறி போச்சுன்னா - பிட்டிங் சரியா வராது "

துணி தைக்க இப்போ எவ்வளவு வாங்குறீங்க ?

சுடிதார் தைக்க - 200 ரூபாய்; பிளவுஸ் தைக்க - 75 ரூபாய். ஆண்கள் சட்டை தைக்க - 200 ரூபாய். பேன்ட் - 300 ரூபாய்.

அதிகமா இருக்க மாதிரி தெரியுதே விலை எல்லாம்? 200 ரூபா கொடுத்து சட்டை தைக்கிறதுக்கு பதிலா ரெடி மேட் எடுக்கலாம்னு தானே ஆண்கள் நினைப்பாங்க?

விலை வாசி அப்படி இருக்குங்க. இதுக்கு கம்மியா கட்டுபடி ஆகாது ; கொஞ்சம் ரிக்வெஸ்டா கேட்டா - கொஞ்சம் குறைச்சுப்போம். அவ்ளோ தான்.

கடைக்கு மாச செலவு 10,000 மேலே ஆகிடுது. இந்த ரேட் வாங்கினாதான் - எனக்கு மாசம் 10 ( ஆயிரம்) ரூபாயாவது கிடைக்கும்



துணி - சொன்ன நேரத்துக்கு தைச்சு தர மாட்டேன்குறீங்களே .. ஏன் இப்படி?

ஆள் இல்லாதது தான் பிரச்சனை. யார் அவசரமா கேட்குறாங்களோ அவங்களுக்கு தச்சு குடுத்துடுவோம். மத்தவங்க துணி மெதுவா தைப்பேன் இதான் விஷயம்.

துணி கிடைக்கலைன்னு நிறைய பேர் கோபப்படுறாங்க ? நீங்க பேசாமலேயே இருக்கீங்க ?

ஆமா ; எனக்கு கோபமே வராது. என்ன பண்றது ? சொன்ன நேரத்தில் குடுக்கலை இல்லை? கேட்டு கிட்டு தான் ஆகணும்

வீட்டிலாவது கோபப்படுவீங்களா? அங்கேயும் சைலண்ட் -ஆ ?

வீட்டில் - பெண்டாட்டி பையங்க கிட்டே நல்லா கோபம் வரும். இங்கே மாதிரி இல்லை (சிரிக்கிறார்)

பண்டிகை நாள் எல்லாம் விடிகாலை வரை தைப்பீங்க இல்லை?

அப்படி எல்லாம் இல்லை; பண்டிகைக்கு அவங்கவங்க சொந்த ஊரு போக வேண்டியிருக்கும். அதிகபட்சம் நைட்டு 11 - 12 மணி வரைக்கும் தான் அன்னிக்கு கடை இருக்கும்

இந்த தொழில்லே எது சந்தோஷமா இருக்கு?

நாம் ஒரு துணியை நல்லா தைச்சா - தைச்சு முடிச்சோன - நமக்கே ரொம்ப திருப்தியா இருக்கும். அதான் முக்கியம். அதுக்கடுத்து - போட்டு பார்த்துட்டு நல்லா இருக்கன்னு யாராவது சொன்னா - அது இன்னும் கொஞ்சம் சந்தோசம்

எத்தனை வயசு வரைக்கும் இந்த தொழில் செய்யலாம்?

கண் நல்லா தெரியுற வரை செய்யலாம். 60 வயசுக்கு மேலே கண் தெரியுறது கொஞ்சம் பிரச்சனை ஆகிடும். பார்வை நல்லா இருந்தா - முடியுற வரைக்கும் செய்யலாம்

உங்க பசங்க யாராவது இந்த தொழிலுக்கு வருவாங்களா?

எனக்கு கத்து கொடுக்குணும்னு ரொம்ப ஆசை. ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்ன பண்றது?

2013-06-03 10.25.53

காலை 8 லிருந்து இரவு 11 மணி வரை - தனியா ஏழு நாளும் வேலை பாக்குறீங்க; உங்களுக்கு பிரண்ட்ஸ் யாரு இருப்பா? அப்படி யாரும் இருக்காங்களா ?

கஸ்டமர்தான் பிரண்ட்ஸ் ; வேற பிரண்ட்ஸ் யாரும் கிடையாது. நீங்க எனக்கு பிரண்டா இல்லியா? சொல்லுங்க " சொல்லிவிட்டு என்னை பார்த்து வெள்ளந்தியாய் சிரிக்கிறார் சுந்தரன்.
****
அதீதம் - ஆகஸ்ட் 1 இதழில் வெளியானது

16 comments:

  1. நாம் ஒரு துணியை நல்லா தைச்சா - தைச்சு முடிச்சோன - நமக்கே ரொம்ப திருப்தியா இருக்கும். அதான் முக்கியம். அதுக்கடுத்து - போட்டு பார்த்துட்டு நல்லா இருக்கன்னு யாராவது சொன்னா - அது இன்னும் கொஞ்சம் சந்தோசம்//

    கஸ்டமர்தான் பிரண்ட்ஸ் ; வேற பிரண்ட்ஸ் யாரும் கிடையாது. நீங்க எனக்கு பிரண்டா இல்லியா? சொல்லுங்க " சொல்லிவிட்டு என்னை பார்த்து வெள்ளந்தியாய் சிரிக்கிறார் சுந்தரன். //

    மனதைத் தொட்ட பேட்டி. ‘நல்லா இருக்கு’ என்று என் டெய்லரிடம் போய்ச் சொன்னபோது அவர் கண்கள் சிரித்ததை என்னால் மறக்கவே முடியாது.

    ReplyDelete
  2. மனதைத் தொட்ட பேட்டி.....

    தொடரட்டும் இம்மாதிரி பேட்டிகள்......

    ReplyDelete
  3. Chandran Kannan commented on a link you shared.

    Kannan wrote: "எனது அம்மா ஒரு தையல்காரர். எனக்கு 33 வயது ஆகுது. எனது அப்பா எனக்கு 2 வயது இருக்கும் போதே இறந்து விட்டார். எனக்கு 24 வயது ஆகும் வரை எங்க அம்மாவின் தையல் தான் என்னையும், எனது அக்காவையும் காப்பாற்றியது.. எங்க அம்மா எங்களை மட்டும் அல்ல அவரது 4 தம்பி, 2 தங்கையையும் அவரது தையல் தொழில் மூலம் காப்பாற்றி உள்ளார். அவர் 1965 ல இருந்து தைத்து கொண்டு இருந்தார்.

    இப்ப எங்க கதைக்கு வருவோம்.. நான் படிக்கும் காலத்தில் 10க்கு 15 அறையில் இருக்கும் போது தையல் மிசின் சதம் கேட்டே படித்தும், உறங்கியும் பழக்க பட்டவன்.(இப்ப எனது மகன் தையல் மிசின் சத்தம் கேட்டல் தூங்க மாற்றான் என்பது எனது மனைவியின் வாதம்)

    எங்க அம்மா ரொம்ப famous ஆனா Ladies Tailor . எங்க வீட்டுல பார்த்திங்கன துனியா இறைஞ்சு கிடக்கும். தீபாவளி சமயத்தில் நாங்க இரவு முழுக்க துணி தசுகிட்டே இருப்போம். எனக்கு விவரம் தெரிஞ்சு ஒரு ஜாகெட் தைக்க 4.50 ரூபாய் வாங்கினோம். பின்னர் அது 25 ரூபாய் வரையுளும் எங்க அம்மா தச்சார். நீண்ட என் வற்புறுத்தலுக்கு பிறகு அவர் திப்பதை நிறுத்தி கொண்டார். இன்னும் எங்க குடும்பத்துக்கு அவர் தான் தைப்பார்.

    எங்க அம்மா திருமணமாகி 5 வருடத்தில் எங்க அப்பா இறந்து விட்டார். ஆனா எங்க அம்மா விடம் கல்யாண பொண்ணுக்கு நீங்க தான் தைக்கணும் என்று 500 பேராவது சொல்லி தச்சுட்டு போயிருப்பாங்க. அவ்ளோ ராசி. எங்க அம்மா அளவு எடுக்க மாட்டார். அளவு சட்டை வாங்க மாட்டார். பார்வை மட்டும் தான். தீபவளிக்கு இரவு முழுதும் தைப்பார். எங்கள் வீட்டில் தீபாவளி பலகாரம் சுட்டதே இல்லை. என் மனைவி வந்த பின்னர் தான் நாங்கள் சுட்டோம். இரவு கறி வாங்கி வந்து நானும் எனது அக்காவும் தான் சமைப்போம்.

    எங்க அம்மா தீபாவளி முடிந்து அவர் கால் வலித்து துடிப்பதை இப்ப நினைத்தாலும் கண்ணீர் வருகிறது. நான் இப்ப சம்பாதிப்பதெல்லாம் அவரின் கால் தூசி.பெரும்பாலும் தையல் காரர்களின் பிரச்னை.. முதுகு வலி, கால் வலி, கழுத்து வலி. இவை அனைத்தும் எங்க அம்மாவுக்கு வந்தது.. சரி.. அவர்களை பற்றிய தகவல்கள்.. சொன்ன நேரத்தில் குடுக்க மாட்டார்.

    எங்க அம்மா பண்ற அநியாயம் இருக்கே. யாராவது 3 ஜாகெட் குடுத்தால் 1 மட்டும் தான் தைப்பார். கேட்டல் இதுக்கு இதுதான் மேட்ச்.. உனக்கு தீபாவளிக்கு 1 போதும் அடுத்தவங்களுக்கும் தைக்கணும் ன்னு அடிச்சு பேசுவார். சிறுவர்களுக்கு டவுசர் தைத்தும் கொடுப்பார். எனது நண்பர்களுக்கு(5வயது இருக்கும் ன்னு நினைக்கிறன்) தீபாவளி காலை 8 மணி வரையுளும் தைக்கவில்லை. எனது நண்பனின் அம்மா எனது நண்பர்களை எந்த துணியும் போடா விடமால் எங்கள் வீட்டு அனுப்பி விட்டார். என் நண்பர்களும் உக்கார்ந்து டவுசர் வாங்கிட்டு போனார்கள்.(அதுவரை என் டவுசரை போட்டு உக்கார வச்சுருந்தேன்).

    எங்கள் வீட்டில் ஆயுத பூஜை நல்லா கொண்டாடுவோம். கதரிகோல் மிதித்தால் தொட்டு கும்பிடும் பழக்கம் எங்கள் அனைவருக்கும் உண்டு(நமக்கு சோறு போடும் தெய்வம் ஆச்சே).. இன்றும் எனது அலுவலகத்தில் பேப்பர் வெட்டும் சின்ன கதரிகோல் மிதித்தால் தொட்டு கும்பிடுவேன்.. எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்ப்பார்கள்.."

    ReplyDelete
    Replies
    1. "கதரிகோல் மிதித்தால் தொட்டு கும்பிடும் பழக்கம் எங்கள் அனைவருக்கும் உண்டு(நமக்கு சோறு போடும் தெய்வம் ஆச்சே).. இன்றும் எனது அலுவலகத்தில் பேப்பர் வெட்டும் சின்ன கதரிகோல் மிதித்தால் தொட்டு கும்பிடுவேன்.. எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்ப்பார்கள்.."
      அருமை! மனதைத் தொட்டுட்டீங்க..

      Delete
  4. உங்கள் பதிவும் மேலே பகிர்ந்துள்ளதும் மிகவும் நெகிழ்வு.

    ReplyDelete
  5. மிகவும் சுவாரஸ்யமான வலைப்பதிவு. நான் தொடர்ந்து உங்கள் வலைப்பதிவில் படிப்பவர். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. டைலர பேட்டி எடுத்து மனச தெச்சுட்டிங்க போங்க.

    ReplyDelete
  7. தைக்க கொடுத்து சொன்ன தேதில கொடுத்தா அவன் டைலரெ கிடையாது நான் கொடுத்து 6 மாசம் ஆச்சு இன்னும் முடியல எங்க ஊரு டைலர்

    ReplyDelete
  8. சிறப்பான பேட்டி. தொடரட்டும்...

    ReplyDelete
  9. அப்போதெல்லாம் விகடனில் ‘பத்து கேள்விகள்’ என்று ஒரு பகுதி வரும். ஒவ்வோர் தொழிலில் இருந்தும் ஒருவரைப் பேட்டி கண்டு வெளியிடுவார்கள். அதே போன்ற புதுமையை உங்கள் பேட்டியிலும் கண்டேன். இதே போல் உங்களுக்குத் தொடர்புள்ளவர்களின் பேட்டிகளை வெளியிடுங்கள். சுவையாக இருக்கும். –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

    ReplyDelete
  10. இந்த பதிவுகள் எல்லாமே மனதை தொடுகின்றன மோகன்-ஜி !

    நான் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை பற்றிய பதிவுக்காக தஞ்சாவூர் சென்று இருந்தபோது நீங்கள் பேட்டி எடுத்த கடைகாரரை பார்த்தேன். நீங்கள் அவரது பேட்டி பத்திரிக்கையில் வரும் என்று சொன்னீர்கள் என்று அவர் விகடன் எல்லாம் வாங்கி இருந்திருக்கிறார். நான் உங்களது பதிவை போனில் காட்டியபோது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. அருமையாருந்துச்சு பேட்டி. நல்ல தையல்காரர் கிடைப்பதுங்கறதும் இப்ப வரம் மாதிரிதான். இப்ப வர்ற ரெடிமேட் சுடிதார்கள் போடுற மாதிரி இல்லை (லோ நெக், ஹாஃப் ஸ்லீவ் அல்லது ஸ்லீவ்லெஸ்) என்பதால் தைத்துதான் போடுகீறேன். ரொம்ப வருஷமா தேடித்தேடி இப்பத்தான் நல்லாத் தைக்கீற ஒரு தையல்காரர் கிடச்சிருக்கார். ஆனா இப்பல்லாம் (இங்க) பொதுவா சொன்ன தேதியில் தந்துடுவாங்க. தரமுடியலைன்னா முதல்லயே துணி வாங்கிக்க மாட்டாங்க.

    ReplyDelete
  13. பெண்களுக்கு ஏன் பிளவுஸ் மற்றும் சுடிதார் தைச்சதில் திருப்தியே வர மாட்டேங்குது
    >>
    நிஜம்தான்.

    ReplyDelete
  14. Anonymous6:31:00 AM

    வெள்ளந்தி மனிதர்களை பேட்டி எடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்... மிக அருமை...

    ReplyDelete
  15. அருமையான் பேட்டி.. என் அம்மாவும் பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டே பெண்கள் குழந்தைகளுக்கு உடைகள் தைத்துக் கொடுப்பார், அம்மா நல்ல கிரியேட்டர்.. தைக்கும் போது விழும் பிட் துணிகளைக் கொண்டு அம்மா எங்களுக்குத் தைத்துத் தரும் கவுன்களுக்கு ஏகப்படு வரவேற்ப்பு கிடைக்கும் அதனால அப்போதே நாங்கள் விளம்பர மாடல்கள்.. அம்மாவுக்கு ஹெல்ப்பாக பட்டன், ஹூக் தைப்பது, ஹெம்மிங் பண்ணுவது எல்லாமே நான்தான். அம்மா தைப்பதைப் பார்த்தே கற்றுக் கொண்ட நான் எனக்கும் என் மகளுக்கும் பிளவுஸ் சுடிதார் தைத்துக் கொள்கிறேன் என் மகளின் சீர்பங்ஷனில் அவளுக்காக நான் தைத்துக் கொடுத்த பிளவுஸ் பார்த்த நிறைய பேர் யார் தைத்தார்கள் என விசாரித்தார்கள்,அந்தவகையில் நானுமோர் மீன்குஞ்சு!
    மோகன்குமார், உங்கள் பதிவுகள் பெரும்பான்மையோருக்கு அவரவர் கருத்துக்களோடும் அனுவங்களோடும் ஒன்றித்துப் பார்க்கத்தூண்டுகிறது. இதுவே உங்கள் பதிவுகளின் வெற்றி!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...