Thursday, July 8, 2010

வாங்க முன்னேறலாம் : பாராட்டு எனும் மந்திரம்

முன்னேற்ற படிக்கட்டில் ஏற முக்கியமான ஒரு குணம் பாராட்டும் மனம். வீடோ அலுவலகமோ நீங்கள் எப்போதும் தனியாக இயங்க முடியாது. இன்னும் சிலருடன் சேர்ந்து தான் இயங்க போகிறீர்கள். வீட்டை பொறுத்த வரை நீங்கள் தான் குடும்ப தலைவர்/ தலைவி. எனவே பிறரை ஊக்குவிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு.

யோசித்து பாருங்கள்: உங்கள் கணவன்/ மனைவியை கடைசியாய் எப்போது எதற்காக பாராட்டினீர்கள் உடனே சொல்ல முடியுமா? இன்று பல வீடுகளில் மனைவி வேலைக்கு சென்றாலும் கூட பல வீட்டு வேலைகளை சுமக்கிறார். அவரை மனம் விட்டு பாராட்டுகிறோமா?

குழந்தைகளை கொஞ்சுகிறோமே ஒழிய, உண்மையான பாராட்டு வார்த்தைகள் அடிக்கடி சொல்கிறோமா? குழந்தைகளிடம் நாம் பேசும் ஒவ்வொரு பதினான்கு முறையில் ஒரு முறை தான் அவர்களிடம் பாராட்டாகவோ, பாசிடிவாகவோ பேசுகிறோம் என சமீபத்தில் வாசித்தேன். பிற நேரங்கள் அவர்களிடம் " இப்படி நட" " அப்படி செய்யாதே" போன்ற அதிகார வாக்கியங்கள் தான் பேசுகிறோம்.

உண்மையில் அத்தகைய வாக்கியங்கள் குறைவாகவும் பாராட்டும் வாக்கியங்கள் அதிகமாகவும் பேசுவதே அவர்களுக்கு நன்மை தரும்.
ஒருவரை பாராட்ட தன்னம்பிக்கை வேண்டும். தான் அப்படி இல்லையே, தன்னால் அப்படி செய்ய முடியலையே என மனதுள் குமைய கூடாது. நாம் பாராட்டும் போது அந்த தொனி வர கூடாது. அது கெடுதலே அதிகம் செய்யும்.

டேல் கார்நிஜி என்ற ஆங்கில எழுத்தாளர் மிக பிரசித்தம். அதிலும் அவரின் “ How to win Friends and influence people” பலரும் விரும்பி படித்த புத்தகங்களுள் ஒன்று. அதில் அவர் மனிதர்களுடன் நல்ல உறவு / நிறைய நண்பர்கள் வேண்டுபவர்கள் அவர்களை மனம் விட்டு பாராட்டுங்கள் என மறுபடி, மறுபடி சொல்கிறார்.

பசங்க - எனக்கு தமிழில் ரொம்ப பிடித்த படங்களுள் ஒன்று. அதில் வரும் ஒரு வசனம்: " ஒவ்வொரு மனுஷன் மனசும் ஒரு சின்ன பாராட்டுக்காக ஏங்கிட்டு இருக்கு" எவ்வளவு உண்மையான வரிகள்!! படத்தின் இறுதியில் கூட இறக்க இருக்கும் மாணவன் கைதட்டல் ஒலிகளால் நினைவு வந்து எழுவதாக காட்டியிருப்பார்கள். பார்க்கும் போதே நெகிழ்வில் அழ வைக்கும் காட்சி அது. இந்த படத்தின் அடி நாதமாக இருந்தது " பிறரை மனம் விட்டு பாராட்டுங்கள்" என்பதே.

கவிஞர் வைரமுத்துவை ஒரு முறை திருச்சியில் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் நண்பர்கள் சிலர் சந்தித்தோம். அப்போது அங்கிருந்த வயதான ஒருவர் அவர் எழுத்துக்களை, சில வரிகளை குறிப்பிட்டு புகழ்ந்தார். வைரமுத்து மகிழ்ச்சியில் குழந்தை போல தோற்றமளித்தார். எத்தனை தேசிய விருதுகள் வாங்கிய மனிதர்! அவரையும் ஒருவர் உண்மையாக பாராட்டும் போது குழந்தை மாதிரி குதூகலம் அடைந்ததை நேரில் பார்த்தேன்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. Even God is pleased when praised!!

எனது அனுபவத்தில் சிறு வயது முதல் இன்றுவரை பல சூழல்களில் யார் யார் என்னை எப்படி பாராட்டினார்கள் என்பதை பெரும்பாலும் நினைவில் வைத்துள்ளேன். அவற்றை அடிக்கடி நினைத்து பார்ப்பது என் மேல் எனக்கே நம்பிக்கை தரும்.

இன்னொரு பக்கம், எனக்கு ஒரு விஷயம் பிடித்து விட்டால் நிச்சயம் பாராட்டி விடுவேன். உறவினர் வீட்டில் குடித்த தேநீர் நன்றாக இருந்தால் அதை தயார் செய்தது யார் என கேட்டு நேராக அவரிடமே சென்று பாராட்டினால் தான் நிம்மதி எனக்கு. போலவே அரங்கில் ஒருவர் பாடுகிறார்/ பேசுகிறார், அது பிடித்தது எனில் விழா முடிந்து செல்வதற்குள் அவரை தேடி சென்று பாராட்டிவிடுவேன்.

ஆனால் இப்படி பாராட்டுபவர்களை வாழ்வில் மிக குறைவாக தான் பார்க்கிறேன். பலரும் மற்றவர்களிடம் பாராட்டுகிறார்களே அன்றி குறிப்பிட்ட அந்த நபரிடமே பாராட்டுவதில்லை.

எனக்கு தெரிந்த ஒரு பெண்மணிக்கு மூன்று மருமகள்கள். ஒரு மருமகளிடம் பேசும் போது மற்ற மருமகளிடம் பார்த்த நல்ல குணங்கள், அவர் வீட்டில் இருந்த போது எப்படி உபசரித்தார் என புகழ்ந்து தள்ளுவார். ஆனால் குறிப்பிட்ட அவரிடம் இவற்றிற்காக பாராட்டியிருக்க மாட்டார். இதில் என்ன பலன்? கேட்டவர் " அப்ப உங்களுக்கு அவரை தான் பிடிக்கும் போல இருக்கு" என நினைத்து கொள்வது மட்டும் தான்!! இதற்கு பதில் அவரிடமே " உனக்கு என் மேல எவ்வளவு பிரியம்; என்னை நல்லா பார்த்துக்குறியே" என சொல்லியிருந்தால் அவரும் மகிழ்ந்திருப்பார்.

உண்மையில் தன்னை முழுதாய் அறிவது தான் கடினமான செயல். நீங்கள் பாராட்டும் நபருக்கே தன் பலம் தெரியாமல் இருக்கலாம். அந்நிலையில் அவரது பலத்தை அவருக்கே நீங்கள் உணர வைக்கிறீர்கள்!! எண்ணி பாருங்கள் எத்தனை உன்னதமான செயல் இது!!

நிறைவாக பாராட்டு - சில விதிகளை பார்ப்போமா?

1. பாராட்டு உண்மையாக இருக்க வேண்டும். செயற்கையாகவோ அடுத்து அவரிடமிருந்து வேறு உதவி எதிர் பார்த்தோ இருக்க கூடாது. உண்மையான பாராட்டிற்கும், பொய் புகழ்ச்சிக்கும் வித்தியாசம் யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

2. பாராட்டுவதில் தயக்கம் கூடாது. முதலாவதாக பாராட்டுபவராக இருங்கள். முதலில் வேறு யாரும் பாராட்டி விட்டாலும் நீங்களும் எப்படி உணர்ந்தீர்கள் என சொல்லி பாராட்டலாம். 

3. பாராட்டும் போது முடிந்த வரை பொதுவாக இல்லாமல் குறிப்பிட்ட எந்த விஷயம் பிடித்தது என சொல்லி பாராட்டுவது நலம்.

4. எதற்காக பாராட்டலாம்? எதற்காகவும் பாராட்டலாம். உடைக்காக, தலை அலங்காரத்திற்காக, அவரிடம் உள்ள நல்ல பழக்கத்திற்காக ..இப்படி அந்த நேரத்தை பொறுத்து உங்கள் மனதில் அவரை பற்றி நல்ல எண்ணம் வரும் போது பாராட்டலாம். கவனம்: எதிர் பாலார் opposite sex - எனில் உடை மற்றும் அழகுக்காக பாராட்டுவது சில நேரம் ரசிக்க படாமல் போகலாம்.

5. யாரை பாராட்டலாம்? யாரையும் பாராட்டலாம். உங்களுக்கு தெரிந்தவர், தெரியாதவர், அலுவலகத்தில் உங்கள் கீழ் வேலை செய்பவர் மட்டுமல்ல உங்களுக்கு இணையான நபர், உங்கள் பாஸ் என யாரையும் சரியான காரணத்துக்காக பாராட்டலாம். (சிலர் பாஸை பாராட்டுவதை " காக்கா" பிடிப்பதற்காக செய்ய கூடும். அவ்வாறு இல்லாமல், முதல் பாயிண்டில் சொன்னது போல் பாராட்டு உண்மையாக இருக்க வேண்டும். காக்கா பிடிக்க செய்யும் முயற்சிகள் பாஸுக்கு எளிதில் தெரியும்)

6. எப்படி பாராட்டலாம்? பெரும்பாலும் நேரில் பாராட்டுவது மிக சிறந்தது. அது இயலாத போது மெயில் அல்லது போனில் பாராட்டலாம். மெயில் எனில் சிலர் அந்த பாராட்டுகளை டெலிட் செய்யாமல் நினைவாக வைத்திருக்க வாய்ப்புகள் உண்டு.

வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஒருவர் மற்றவர் மேல் ஏதோ ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி செல்கிறோம். அந்த தாக்கம் நல்ல விதமாக இருக்கட்டுமே.. உங்களை சுற்றி உள்ளவர்களை மனம் விட்டு பாராட்டுங்கள். அவர்களும் மகிழ்வார்கள். என்றும் அந்த வரிகளை மட்டுமல்ல, உங்களையும் சேர்த்தே நினைவில் கொள்வார்கள்.

(இன்னும் மேலேறுவோம்)

24 comments:

 1. அருமையான கருத்து.
  "எல்லாரோட மனசும் ஒரு சின்ன பாராட்டுக்கு தானே ஏங்கி கிடக்கு"- பசங்க படத்துல வர்ற இந்த வசனம் என்னை ரொம்ப பாதிச்சுது..

  ReplyDelete
 2. அப்பாடி!..

  எதிர் பார்த்துக் கொண்டே இருந்த கட்டுரை. மீண்டும் தொடங்கியதற்கு நன்றி மோகன்!

  verygood!

  ReplyDelete
 3. வாங்க முன்னேறலாம் தொடர் அருமை .. நல்லா போய்கிட்டு இருக்கு தொடருங்கள்.

  ஆனந்த விகடனில் தொடராகவும் பின்பு புத்தகமாகவும் வந்த “கோல்” புத்தகம் படித்திருக்கிறீர்களா? எனக்கு மிகவும் பிடித்தது. நல்ல சுவாரஸ்யமான நடையில் இருந்தது.

  படிக்கவில்லையெனில் நேரம் கிடைக்கும் போது படித்து பாருங்கள்

  ReplyDelete
 4. சின்ன பாரட்டும் அங்கீகாரமும் வேண்டித்தானே இந்த பாழாய் போன மனசு தவிக்குது உண்மையில் ஒருவரை பாரட்டுவதன் மூலம் மேலும் அவரிடம் நல்ல செயல்களை செய்ய தூண்டுகோளாய் இருக்காலாம் ஆனால் இந்த அவசர உலகத்தில் யாருக்குத்தான் நேரம் இருக்கிறது நல்ல விஷயத்தை கண்டாலும் காணதது போல கண்ணடைப்பவர்களே இங்கு அதிகம்.
  இதை நான் உணர்ந்ததே இந்த பதிவுலகத்தில் தான்

  வாழ்க வளமுடன்
  என்றும் அன்புடன்
  ஞானசேகர்

  ReplyDelete
 5. உங்களுக்கு தெரிந்தவர், தெரியாதவர், அலுவலகத்தில் உங்கள் கீழ் வேலை செய்பவர் மட்டுமல்ல உங்களுக்கு இணையான நபர், உங்கள் பாஸ் என யாரையும் சரியான காரணத்துக்காக பாராட்டலாம்.

  உண்மை தான் ஒருவருக்கு ஊக்கம் தருவது என்பது என்றும் சிறந்த விஷயமே!!!

  தொடருங்கள் !!!

  ReplyDelete
 6. குழந்தைகளிடம் நாம் பேசும் ஒவ்வொரு பதினான்கு முறையில் ஒரு முறை தான் அவர்களிடம் பாராட்டாகவோ, பாசிடிவாகவோ பேசுகிறோம் என சமீபத்தில் வாசித்தேன். பிற நேரங்கள் அவர்களிடம் " இப்படி நட" " அப்படி செய்யாதே" போன்ற அதிகார வாக்கியங்கள் தான் பேசுகிறோம்.

  எனக்கு சொல்லற மாதிரி இருக்கு பா!!!!

  ReplyDelete
 7. நீண்ட இடைவெளிக்குப் பிறகு “வாங்க முன்னேறலாம்” தொடர். நல்ல கருத்துக்களை வழங்கும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள். தொடருங்கள்.

  ReplyDelete
 8. மனதாரப் 'பாராட்டுகிறேன்'.

  தொடருங்கள்.

  ReplyDelete
 9. உண்மைதான் எமது பாராட்டுகள் அவர்களை ஊக்கப்படுத்தும்

  ReplyDelete
 10. நல்ல பதிவுங்க... பாராட்டுக்கள் (நான் சொல்லிட்டனுங்ண்ணா...)

  ReplyDelete
 11. மற்றவரைப் பாராட்டுவது என்பது ஒரு அழகிய கலை. அது எல்லோருக்கும் வராது. நம்மிடம் இல்லாத ஏதோ ஒன்று நம்மை விட வயதில் மிகவும் குறைந்த ஒரு சிறுமியிடம் கூட இருக்கலாம். அடுத்தவரைப்பாராட்டுவதும் நாம் அவரிடம் வைத்திருக்கும் மதிப்பையும் அன்பையும் தெரிவித்திப்பதும் வாழ்க்கையில் மிகவும் மன நிறைவைத்தரும் விஷயங்கள்!!

  ReplyDelete
 12. நல்ல பகிர்வு.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. நன்றி உளவு..
  **
  நன்றி கவிதை காதலன். அந்த வசனம் பலரையும் சென்று சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன்
  ***
  ராஜா ராம்: மிக நன்றி; மனம் விட்டு பாராட்டுகிறீர்கள். மிக மகிழ்ச்சியாக உள்ளது
  ***
  கண்ணா: மிக நன்றி. அந்த புத்தகம் வாசித்ததில்லை; விகடன் பிரசுரம் தானே? வாசிக்க முயல்கிறேன்
  ***
  நன்றி ஜிஎஸ்ஆர் அவர்களே; தங்கள் பாராட்டும் வாழ்த்தும் மிக இனிய உணர்வை தந்தது.
  ***
  சக்தி: நன்றிங்க; ம்ம்ம் நானும் கூட நீங்க நினைச்ச மாதிரி தான் நினைச்சேன்; :))

  ReplyDelete
 14. வெங்கட் : நன்றி
  *****
  ராமலக்ஷ்மி : நீங்க பொதுவாகவே அனைவரையும் பாராட்டும் நபர்; நன்றி
  *****
  ஹாசிம்: முதல் வருகைக்கு நன்றி
  *****
  தங்கமணி ஐயா: ஹா ஹா ரசித்தேன்
  *****
  மனோ மேடம்: நன்றி. அவ்வப்போது வருகை தந்தாலும் மனம் விட்டு பாராட்டும் தங்களுக்கு நன்றிகள் பல
  *****
  அம்பிகா: நன்றிங்க

  ReplyDelete
 15. உண்மையிலே பாராட்டப்பட வேண்டிய பதிவு.

  நா கூட என்னோட பிளாக்குல பதிவு போட்டுட்டு, யாருமே வந்து படிச்சிட்டு (பாராட்டாம) போகலையேன்னு பல தடவை யோசிச்சிருக்கேன்.. இப்ப பரவாயில்லை.. ரெண்டு, மூணு பேராவது பின்னூட்டம் போட்டு, ஊக்கம்தர்றாங்க..

  ReplyDelete
 16. உண்மைதான்..ப‌ள்ளியில் ப‌யிலும்போது எதிர்பார்க்கும் ரேங்க்கிலிருந்து இன்று அலுவ‌ல‌க‌ம், ப‌திவுல‌க‌ம் என‌ பாராட்டை எதிர்பார்க்கிற‌து ம‌ன‌ம்.. நான் அத‌ற்கு த‌குதியான‌வ‌னா என்ப‌து கூட‌ சிறிது நேர‌ம் க‌ழித்துதான் தோன்றுகிற‌து.

  ந‌ல்ல‌ தொட‌ர்...தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்

  ReplyDelete
 17. உண்மையான வார்த்தைகள்.....

  ReplyDelete
 18. Thanks Madhavan,
  Thank you Ragu &
  Nandri Vazhi Pokkan.

  ReplyDelete
 19. //ஒருவரை பாராட்ட தன்னம்பிக்கை வேண்டும்.//

  நிச்சயமாக சார்.
  இதில் வரும் பல விஷயங்கள் சாதாரணமாகத் தெரிந்தாலும் நம்பில் பலர் கடைபிடிப்பதில்லை. இனிவரும் காலங்களில் உண்மையான பாராட்டை உடனடியாகத் தெரிவிப்போம்.

  ReplyDelete
 20. ”...வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஒருவர் மற்றவர் மேல் ஏதோ ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி செல்கிறோம். அந்த தாக்கம் நல்ல விதமாக இருக்கட்டுமே..”

  அருமையான வரிகள்!
  பிடியுங்கள் என் பாராட்டை!!!

  அன்புடன் ஆர்.ஆர்.ஆர்.

  ReplyDelete
 21. பாராட்டுக்கள். ஒவ்வொருவரது முன்னேற்றத்துக்கும் காரணமாக அமைகின்றது.

  ReplyDelete
 22. Unmaidhan nanbare poyyaga allamal, unmaiyaga parattum bodhu yerpadum mana niraive thanidhan... Iruvarukkum

  ReplyDelete
 23. நீங்கள் பாராட்டும் நபருக்கே தன் பலம் தெரியாமல் இருக்கலாம். அந்நிலையில் அவரது பலத்தை அவருக்கே நீங்கள் உணர வைக்கிறீர்கள்!!

  முன்னேறத் தூண்டுகோலான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...