Saturday, January 29, 2011

பள்ளியில் பேசியது என்ன?

புழுதிவாக்கம் அரசு பள்ளியில் நான் பேசியதை பதிவு செய்யுமாறு கேட்ட ஏராளமான நண்பர்கள் வேண்டுகோளுக்கிணங்க (என்னது ஒரே ஒரு ஆள் தான் கேட்டாங்களா? சரி சரி கண்டுக்காதீங்க) இந்த பதிவு. 

விழாவில் பேசியதன் சுருக்கம் இதோ:
**

ஆசிரிய பெருமக்களே, நல்லோர் வங்கி உறுப்பினர்களே, நண்பர்களே, தோழிகளே, அனைவருக்கும் வணக்கம்.

உங்களை பார்க்கும் போது என் சிறு வயது நினைவுக்கு வருகிறது. சட்டையில் மட்டுமல்ல, டிராயரிலும் சில பட்டன்கள் இல்லாமல், சில நாட்கள் செருப்புடனும், சில நாட்கள் செருப்பில்லாமலும் பள்ளி சென்ற நாட்கள் நியாபகம் வருகிறது. தமிழக மேப்பில் தேடினால் ஈசியா கிடைக்காத நீடாமங்கலம் என்ற சிறு ஊரில் அரசு பள்ளியில் தான் நானும் படித்தேன்.

இன்று எனது பேச்சு மூன்று பிரிவாக இருக்கும். முதல் பிரிவில் ஒரு சின்ன ஊரில் பிறந்து இன்று இந்த நிலைக்கு எப்படி வர முடிந்தது என்கிற என் கதை. ரெண்டாவதாக தேர்வுக்கு தயார் செய்வது மட்டும் எழுதுவது குறித்த சில டெக்னிக்குகள். மூன்றாவது தேர்வில் மட்டுமல்ல வாழ்விலும் வெல்ல நான் பயன்படுத்திய சில விஷயங்கள்.

முதலில் என்னோட பள்ளி படிப்பில் மூன்று தவறுகள் நேர்ந்தது. அவற்றை சுருக்கமாக சொல்ல வேண்டும்.

ஒன்று மட்டும் ரெண்டாம் வகுப்பு நன்றாக தான் போனது.ரெண்டாம் வகுப்பு முடித்த பின் முதல் தவறு நடந்தது. சிறு வயதில் பள்ளி டிராமாவில் நன்றாக நடித்து கொஞ்சம் பாபுலர் ஆகிட்டேன். இதனால் தங்கள் பள்ளியில் சேர்க்க ரெண்டு பள்ளி கூடங்கள் போட்டி போட்டன. ரெண்டு பள்ளியிலிருந்தும் ஆசிரியர்கள் வந்து என் அப்பாவிடம் பேசினார்கள். இதில் ஒரு பள்ளி தங்கள் பள்ளியில் சேர்ந்தால், ரெண்டாம் வகுப்பிலிருந்து நேரே நான்காம் வகுப்பு போயிடலாம் என்றார்கள். இதற்கு பெயர் டபிள் பிரமோஷன். இப்போதெல்லாம் இது கிடையாது. மூன்றாம் வகுப்பு ஆசிரியர் ராஜாங்கம் சார் கையெழுத்து சரியில்லாட்டி நல்லா அடிப்பார். அதனால் மூன்றாம் வகுப்பு படிக்காட்டி நல்லது தான்னு அப்போ நினைச்சேன். நாலாம் வகுப்பு சேர்ந்த பின் தான் அது பெரும் தவறுன்னு தெரிஞ்சது.

வகுப்பிலேயே நான் தான் சின்ன மாணவன். பசங்க எல்லாரையும் விட சின்னவனா இருப்பது பிரச்சனை இல்லை. பெண்கள் எல்லாரையும் விட சின்னவன். இதை வச்சு எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. அத்தோட என்னை விட பெரிய பசங்களுடன் படிப்பில் போட்டி போட கஷ்டமா இருந்தது. அடுத்த சில வருஷம் சிரமப்பட்டு ஏழாவது வரும்போது நன்கு படிக்க ஆரம்பிச்சிட்டேன். மறுபடி வீட்டில் இன்னொரு முடிவெடுத்தாங்க.

ஒன்பதாவது படிக்க பக்கத்துக்கு ஊரான மன்னார்குடியில் ஆங்கில மீடியத்தில் சேர்த்தாங்க. எட்டாவது வரை முழுக்க தமிழ் மீடியத்தில் படிச்சுட்டு திடீரென ஆங்கிலத்தில் படிக்க கஷ்டமா இருந்தது. இருந்தாலும் எனக்கு ஆங்கிலத்தில் ரொம்ப இண்டரஸ்ட் வந்தது அப்போ தான். இன்று வரை அது உதவுது.

பத்தாவதில் ஐந்நூறுக்கு 367 மார்க் எடுத்தேன். திடீரென எல்லா பாடமும் ஆங்கிலத்தில் படிச்சதால், இது ஓரளவு நல்ல மார்க் தான். என் குடும்பத்தில் பெரிய அண்ணன் தான் எனக்கு அப்பா மாதிரி. நிறய வயசு வித்தியாசத்தால் என்னை அடிப்பது, பிற் காலத்தில் படிக்க வச்சது எல்லாம் அவர் தான். டெண்த்தில் மார்க் குறைந்ததுக்காக அடுத்த ரெண்டு மூணு நாள், பார்க்கும் இடத்திலெல்லாம் என்னை அடித்து கொண்டிருந்தார். 

ஆங்கில மீடியத்தால் தான் மார்க் குறைந்ததென மறு படி தஞ்சாவூரில் கொண்டு போய் தமிழ் மீடியத்தில் சேர்த்தார்கள். இது பெரிய தவறான முடிவு. எனக்கு படிப்பிலேயே ஆர்வத்தை குறைச்சுடுச்சு. பிளஸ் டூவில் 897 மார்க் வாங்கினேன். இஞ்சினீரிங் கிடைக்கலை. சட்ட கல்லூரியில் சேர சொன்னார்கள். எனக்கு கோர்ட் போகும் ஆர்வம் இல்லை. அதனால் வேண்டாம் என்றேன். கம்பனிகளில் லீகல் அட்வைசர் ஆக வேலை பார்க்கலாம் என்பதால், சேர்ந்து படித்தேன். 

முதல் வருடம் முடிந்து மார்க் வந்தது. ஒரு பாடத்தில் நான் எண்பது மார்க் வாங்கியிருந்தேன். சட்ட கல்லூரியில் எண்பது மார்க் என்பது பெரிய விஷயம். எல்லோரும் இதை பற்றி பேசினார்கள். நான் நடந்து போகும் போது என் காது படவே ரெண்டு பேர் " யாரோ பஸ்ட் இயரில் எண்பது மார்க் வாங்கியிருக்கானாம்" என்று பேசி கொண்டார்கள். இதை கேட்க ரொம்ப சந்தோஷமா இருந்தது. புகழ் என்பது ஒரு போதை மாதிரி. அதை டேஸ்ட் பண்ணிட்டா அது மீண்டும் மீண்டும் வேணும்னு தோணும். அதுக்காகவே நல்லா படித்தேன். சட்ட கல்லூரியில் ரெண்டாம் வருடம் தொடங்கி ஐந்தாம் வருடம் முடியும் வரை முதல் மாணவனாக வந்தேன். இப்படி முதல் மாணவனாக வர காரணம், முதல் மாணவனாக வரணும் என தீவிரமாக நினைத்தது தான். அந்த நினைப்பு தீவிரமான பின் அதற்கான உழைப்பும் மற்ற விஷயங்களும் தானாகவே வந்து விட்டது.

வீட்டில் படி படி என்ற போது நான் படிக்கலை. எனக்காய் ஆர்வம் வந்த போது தான் நன்கு படித்தேன். அடுத்து ACS என்ற கோர்ஸ் சேர்ந்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று தெரிய வந்ததால் சேர்ந்தேன். இந்த கோர்ஸில் ஒரு பாடத்தில் பெயில் ஆனாலும் அனைத்து பாடத்தையும் மறுபடி எழுதணும். முதல் முறை தேர்வு எழுதிய போது நான் டியுஷன் சென்ற ஆசிரியரே கூட " பி. காம் படித்தவர்களே இந்த கோர்ஸ் பாஸ் செய்வதில்லை. நீயெல்லாம் அக்கவுண்ட்ஸ் படிக்காதவன் எப்படி பாஸ் செய்வாய்" என்றதால் அரை மனதோடு தான் எழுதினேன். அப்போது பெயில் ஆகிட்டேன். ஆனால் மார்க் பார்த்ததும், முழுசா மனசு வச்சு படித்திருந்தால்  நிச்சயம் பாஸ் செய்திருக்கலாம் என்று தோன்றியது. அதன் பின் எப்போதும் ACS -ல் நான் பெயில் ஆகலை. சென்னை வந்து வேலைக்கு சேர்ந்தேன். திருமணம் ஆகி ஏழெட்டு வருஷத்திற்கு பின் ICWA என்ற கோர்ஸ் சேர்ந்தேன். ஒரு புறம் என் குழந்தை படிக்க மறு புறம் நான் படிக்க, எப்படியோ அந்த கோர்ஸ் ரெண்டு வருடத்தில் பெயில் ஆகாமல் முடித்தேன். கடந்த 15 வருஷமா கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து இன்று ஒரு நல்ல நிறுவனத்தில் AGM Legal & Company Secretary ஆக உள்ளேன். 

இன்றைக்கு நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் சில செயல்களை உங்களுடன் பகிர்கிறேன்.

துணை என்ற அமைப்பின் மூலம் ஏழை குழந்தைகள் 75 பேரை கடந்த எட்டு வருடமாக படிக்க வைக்கின்றோம். இவர்கள் பெரும்பாலும் தமிழகத்தில் சென்னைக்கு வெளியே வசிப்பவர்கள். இதில் என் பங்கு Referrer என்கிற அளவில் தான். அதாவது உதவி தேவை படும் ஏழை குழந்தைகளை கண்டு பிடித்து சொல்வது. அவர்களுக்கு பீஸ் பள்ளியில் நேரே சென்று கட்டுவது. அவர்கள் எப்படி படிக்கிறார்கள் என ஒவ்வொரு முறையும் ப்ரோக்ரேஸ் கார்ட் வாங்கி பார்ப்பது. தேவையான கைடன்ஸ் தருவது 

அடுத்து பழைய கம்பனியில் உடன் வேலை பார்த்த நண்பர்கள் பலர் சேர்ந்து மாதம் ஆளுக்கு நூறு ரூபாய் போட்டு பணம் சேர்க்கிறோம். இது கிட்ட தட்ட மாதம் ஐயாயிரம் ரூபாயாவது சேர்கிறது. இதனை அந்தந்த மாதம் வருகிற வேண்டுகோள்களை பொறுத்து பள்ளி பீசுக்கோ, முடியாதவர்களின் ஆஸ்பத்திரி செலவுகளுக்கோ செய்கிறோம்.

அடுத்து சட்ட கல்லூரியில் உடன் படித்த நண்பர்கள், எங்களுடன் படித்து மறைந்த நண்பன் நினைவாக வருடம் ஒரு முறை அடையாரில் உள்ள ப்ளைண்ட் (Blind) ஸ்கூலில் வருடா வருடம் ஒரு பேச்சு போட்டியும், பாட்டு போட்டியும் நடத்துகிறோம்.

இது தான் என் முன் கதை சுருக்கம்.

ஒரு சிறு கிராமத்தில் பிறந்து என்னால் இந்த அளவு வர முடியும் என்றால், சென்னை என்ற பெரிய நகரில் உள்ள உங்களால் நிச்சயம் இன்னும் பெரிய அளவில் வர முடியும் என்ற நம்பிக்கை தரவே இதை உங்களுடன் பகிர்ந்தேன்.

நிச்சயம் படிப்பு என் வாழ்க்கையில் ஒரு மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. படித்ததால் தான் இன்று இந்த நிலையில் உள்ளேன். ஒவ்வொரு முறை கூலி வேலை செய்பவர்களையும், டீ கடையில் இருப்பவர்களையும் பார்க்கும் போது சிறு வயதில் நன்றாக படிக்காததால் வாழ்க்கை முழுக்க கஷ்ட படுகிறார்களே என வருந்துவேன். 

படிக்காமல் முன்னுக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். பல பெரிய நிறுவன முதலாளிகள் படிக்காதவர்கள் தான். சாதாரண வேலையில் சேர்ந்து தொழிலை கற்று கொண்டு பின் சொந்தமாய் தொழில் தொடங்கும் அளவு உயர்ந்தவர்களும் உள்ளனர். ஆனால் இது மிக சிறிய அளவு தான். நீங்கள் சொந்தமாய் தொழில் தொடங்க நினைத்தாலும் நன்கு படித்து விட்டு செய்யுங்கள்.

அடுத்து தேர்வு குறித்த விஷயங்கள் (பதிவர்களுக்கு அவை தேவை இல்லை என்பதால் அவை இங்கே பகிர வில்லை. பதிவர்களின் குழந்தைகளுக்கு ஓரளவு உபயோகம் ஆகும் என்றால் பின்னர் தனியே பகிர்கிறேன்).

தேர்வில் வெல்வது மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெல்வதும் முக்கியம். இது தான் கடைசியாய் நான் பேச விரும்புவது.

எந்த செயலும் இரு முறை நடக்கிறது. முதலில் மனதில். பின் நிஜத்தில். இங்கு வந்து பேச வேண்டும் என்றால் கூட முதலில் இங்கு வந்து பேச மனதில் தயார் செய்கிறேன். பின் வந்து பேசுகிறேன். அதே போல எந்த செயலும் முதலில் மனதில் நடக்க வேண்டும். பின் நிஜத்தில் நடக்கும். 

நம் பெற்றோர் யார் என நாம் தேர்ந்தெடுக்க முடியாது. உங்கள் பக்கத்து வீட்டில் யார் இருக்க வேண்டுமென நீங்கள் முடிவு செய்ய முடியாது. இதை தவிர்த்து உங்கள் வாழ்க்கையில் நடப்பதை நிச்சயம் நீங்கள் முடிவு செய்யலாம். நீங்கள் என்ன மார்க் வாங்குகிறீர்கள், என்ன வித வேலைக்கு போக போகிறீர்கள் இவை உங்கள் கையில் தான் உள்ளது.

இந்த உலகில் பண உதவி கிடைப்பது தான் கஷ்டம். அதை தவிர மற்ற உதவி செய்ய எப்போதும் மனிதர்கள் தயாராக உள்ளனர். உதவி தேவை என நீங்கள்தான் கேட்க வேண்டும்.

அடுத்து சொல்ல விரும்புவது : பாராட்டு: உங்களை சுற்றி உள்ளவர்களை நிறைய பாராட்டுங்கள், ஒவ்வொரு மனித மனமும் பாராட்டுக்கு ஏங்குகிறது. எனக்கு ரொம்ப பிடித்த, தேசிய விருது பெற்ற பசங்க படத்தில் கூட இது தான் சொல்ல பட்டது. சிறு வயது முதல் நான் பெற்ற பாராட்டுகளை இன்னும் நினைவில் வைத்துள்ளேன். மனம் சோர்ந்து போகிற போது அவற்றை நினைத்து பார்த்து கொள்வேன்.

உங்களுக்கு என்ன தேவை என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதனை முடிவு செய்து விட்டால், அதில் உறுதியாக இருந்தால், நிச்சயம் அடையலாம். அதை அடைய முயலும் போது நிறைய தடங்கல் வரும். பிரச்சனை இருக்கும்.ஆனாலும் நீங்கள் பொறுமையுடன் முயன்றால் நினைத்தது நடக்கும். நீங்கள் அடைய விரும்புவதில் உறுதியாக நின்றால், முதலில் உங்கள் இலட்சியத்தை கிண்டல் செய்தவர்கள் கூட பின்னால் உங்களுக்கு உதவுவார்கள். எனக்கும் அப்படி தான் நடந்தது.

நீங்கள் நினைத்தது அனைத்தும் அடைய என் வாழ்த்துக்கள். நிச்சயம் நான் அடிக்கடி உங்களை வந்து சந்திப்பேன். உங்களை சந்திக்கும்  பொழுதுகளில்  ஒரு நண்பனாக நீங்கள் என்னிடம் எது குறித்தும் பேசலாம். நன்றி 

15 comments:

 1. சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

  தமிழன் ஒரு இளிச்சவாயன். ‍ ஜடம்.

  ReplyDelete
 2. தேர்வுகள் பற்றியும் சொல்லலாமே . பலருக்கு உதவியாகும்

  ReplyDelete
 3. நீங்கள் ஆற்றிய உரை நிச்சயம் மாணவர்களின் நல்ல எதிர்காலத்துக்கான விதையாக, வளர்ச்சிக்கான உரமாக அமைந்திருக்கும்.

  //துணை என்ற அமைப்பின் மூலம் ஏழை குழந்தைகள் 75 பேரை கடந்த எட்டு வருடமாக படிக்க வைக்கின்றோம். இவர்கள் பெரும்பாலும் தமிழகத்தில் சென்னைக்கு வெளியே வசிப்பவர்கள். இதில் என் பங்கு Referrer என்கிற அளவில் தான். அதாவது உதவி தேவை படும் ஏழை குழந்தைகளை கண்டு பிடித்து சொல்வது. அவர்களுக்கு பீஸ் பள்ளியில் நேரே சென்று கட்டுவது. அவர்கள் எப்படி படிக்கிறார்கள் என ஒவ்வொரு முறையும் ப்ரோக்ரேஸ் கார்ட் வாங்கி பார்ப்பது. தேவையான கைடன்ஸ் தருவது//

  Great! வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இதுபோன்ற பகிர்வுகள் மேலும் பலரை பொதுச் சேவையில் ஈடுபட வைக்கும்.

  ReplyDelete
 4. நல்ல பகிர்வு மோகன். நன்றி.

  ReplyDelete
 5. //Great! வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இதுபோன்ற பகிர்வுகள் மேலும் பலரை பொதுச் சேவையில் ஈடுபட வைக்கும். //

  Retweet..

  ReplyDelete
 6. பாக்கலாம் எல். கே
  **
  நன்றி ராமலட்சுமி
  **
  நன்றி வெங்கட்
  **
  மாதவன்: நன்றி

  ReplyDelete
 7. நீ என் நண்பன் என்று சொல்லிக் கொள்ள பெரிதும் மகிழ்கிறேன்.
  வாழ்த்துகள், மோகன்!

  ReplyDelete
 8. நன்றியும் மகிழ்ச்சியும்:

  பெயர் சொல்ல &
  டாக்டர் வடிவுக்கரசி


  பெயர் சொல்ல எனது ஒன்பது & பத்தாம் வகுப்பு நண்பன்.நான் ஆங்கில மீடியத்தில் சேர்ந்து படிக்க திணறிய போது அருகில் அமர்ந்திருந்தவன். இணையம் கிட்ட தட்ட 25ஆண்டுகள் கழித்து எங்களை இணைத்தது.

  ReplyDelete
 9. நல்ல பகிர்வு சார். தொண்டுகள் பல புரியும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. ஆங்கிலம்/தமிழ் மீடியம் என்று மாற்றி மாற்றி படித்ததுதான் மார்க் குறைந்ததுக்கு காரணம் என்பது சரிதான். அப்போதெல்லாம் பெரியவர்கள்க்கு எடுத்துச் சொல்லவும் யாருமில்லை; நம் கருத்தையும் கேட்க மாட்டார்கள்.

  ஆனால் ஒருவகையில் இதுவும் தன்னம்பிக்கை கொடுக்கும் வழிதான் - தண்ணீரில் போட்டால் எப்படியாவது தத்தளித்துக் கரையேற முயல்வதுபோல, பெரியவர்களுக்குப் பயந்தாவது கஷ்டப்பட்டு நல்லா படித்து விடுவோம் அப்போவெல்லாம். இப்போ என்னடான்னா, பிள்ளைகளைப் படிக்கச் சொல்லாதீங்க, அவங்க இஷ்டப்படி விடுங்க, அப்படி இப்படின்னு நம்மளை பயங்காட்டுறாங்க!!

  நீங்கள் செய்யும் பல்வேறு சேவைகள் பாராட்டுக்குரியவை; உதாரணமாக இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  பாராட்டு குறித்து: பாராட்டுக்கு ஏங்குவது உண்மைதான். ஆனால், பாராட்டுப் பெறுவதை மட்டுமே நோக்கமாக வைத்துச் செயல்படும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்துதல் கூடாது என்பது என் கருத்து.

  ReplyDelete
 11. உங்களிடம் மாணவர்கள் அறிந்த கொள்ள வேண்டிய இன்னும் நிறைய இருக்கும் என்று நினைக்கிறேன். தொடர்ந்து நேரம் கிடைக்கும் பொழுது மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் எழுதவும்.

  தங்களுடைய இளைமை கால நினைவுகள் தங்களிடம் இன்னும் இருப்பதால்தான், 'நீங்கள் நீங்களாகவே' இருக்கிறீர்கள். பலருக்கு மறதி வந்துவிடுவதால் மாறி விடுகிறார்கள்.

  உங்களின் இந்த சேவையில் நானும் பங்கெடுத்துக் கொள்ள ஆசை. ஆனால், 'அமைதி விரும்பி' ஒருநாள் உங்களுடன் பங்கு கொள்வார் என்று மட்டுமே என்னால் இப்பொழுது சொல்ல முடியும்.

  ReplyDelete
 12. //அமைதி விரும்பி' ஒருநாள் உங்களுடன் பங்கு கொள்வார் என்று மட்டுமே என்னால் இப்பொழுது சொல்ல முடியும்//

  நல்லது. நன்றி அமைதி அப்பா

  ReplyDelete
 13. \\அதன் பின் எப்போதும் ACS -ல் நான் பெயில் ஆகலை. \\ How many times should you appear for ACS?

  ReplyDelete
 14. தாஸ் : எத்தனை முறை அப்பியர் ஆகலாம் என்பதற்கு restriction இல்லை. ஐந்து வருடத்துக்குள் முழு படிப்பையும் முடிக்கணும், இல்லா விடில் மறுபடி பணம் கட்டி ரிஜிஸ்தர் செய்து கொள்ளலாம். அப்படி கட்டினால் பாஸ் ஆகாத பரீட்சை மட்டும் எழுதினால் போதும்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...