Thursday, February 17, 2011

பரோட்டாவும் குழந்தைகளும்

"ரசிக்கும் விஷயம்" என வானவில்லில் பிடித்த சிலவற்றை ஒரு பாராவிற்கு மிகாமல் எழுதுவது வழக்கம். அப்படி ஒரு பாராவிற்குள் அடக்க முடியாத ரொம்ப ரொம்ப பிடித்த இரண்டு விஷயங்கள் இந்த பதிவில்:

1. பரோட்டா

பரோட்டோவை எனக்கு ரொம்ப, ரொம்ப, ரொம்ப பிடிக்கும். வழக்கமாய் நடக்கும் ஒரு சம்பவம் சொன்னால் உங்களுக்கு புரியும்.

ஓட்டல்களுக்கு செல்வதென்றால், பொதுவாய் வெவ்வேறு இடங்களுக்கு செல்வோம். அப்படி எங்கு சென்றாலும் வித வித டிஷ்களை முயற்சிப்போம். ஆர்டருக்கு எல்லாம் சொல்லி முடித்து விட்டு இறுதியில் நைசாக "ஒரு பரோட்டா" என்பேன். மனைவியும் பெண்ணும் "அதானே" என்று  சிரிப்பார்கள். பரோட்டா மீதான காதல் தொடங்கியது இன்று நேற்றல்ல பள்ளி காலத்திலிருந்தே!

நீடாமங்கலத்தில் வஹாப் சார் புரோட்டா கடை இருந்தது. வஹாப் சார் எங்கள் ஊர் பள்ளியில் எங்களுக்கு கணக்கு பாடம் எடுத்தவர். ரொம்ப அருமையாக, எளிமையாக நடத்துவார். அவர் வைத்திருந்த பரோட்டா கடை தான் இது. சில நேரம் மாலையில் அவரும் கல்லாவில் அமர்ந்திருப்பார். இவர் கடை பரோட்டா சூடாகவும் செம டேஸ்டியாகவும் இருக்கும்.

ஏழாவது படித்த போது தம்பு சாமி என்ற நண்பனும் நானும் கடை தெருவில் நடந்து போகிறோம். வஹாப் சார் கடையை கடக்கும் போது எச்சில் ஊற ஆரம்பித்து விட்டது. ஒருவனிடம் பத்து காசும் மற்றொருவனிடம் பதினைந்து காசும் மட்டுமே உள்ளது. ஒரு பரோட்டா விலையே முப்பது காசு. அதுக்கே அஞ்சு காசு குறையுது. " சரி அஞ்சு காசு கடன் சொல்லிட்டு ஒரு பரோட்டா வாங்கி ரெண்டு பேரும் சாப்பிடலாம்" என முடிவு செய்தோம். கடையில் அன்றைக்கு நல்ல வேளையாக சார் இல்லை.

கல்லாவில் இருந்தவரிடம் ஐந்து காசு குறைகிற விஷயத்தை சொன்னோம். சிரித்த படி சரி என்று சொல்லி விட்டார். இவர் தான் பரோட்டாவை பிய்த்து போட்டு சாப்பிடும் பழக்கத்தை எங்களுக்கு ஏற்படுத்தினார். சுட சுட இருக்கும் பரோட்டாவை அனாயாசமாக பிய்த்து போடுவார். இப்படி பிய்த்து போட்டால் நிறைய குருமா ஊற்றி சாப்பிடலாம் என்பது மற்றொரு தொழில் ரகசியம்.

உள்ளே சென்று அமர்ந்தோம். ஒரே ஒரு பரோட்டோவை ஒரே இலையில் ரெண்டு பேரும் சாப்பிட்டோம். குருமா மட்டும் ; "ஊத்து..ஊத்து" என எக்கச்சக்கமா வாங்கினோம். சாப்பிட்டு முடித்து வெளியே வந்த போது இருந்த திருப்தி இருக்கே அடடா !! 

தஞ்சை செல்லும் போதெல்லாம் சாந்தி பரோட்டா கடையில்,பரோட்டா  சாப்பிடாமல் வருவதில்லை. டால்டாவில் செய்தது எனினும் மொறு மொறுவென்று சூப்பரா இருக்கும்.

தஞ்சையில் மற்றொரு சிறந்த பரோட்டா கிடைக்கும் இடம் சிலோன் பரோட்டா கடை. ஞானம் தியேட்டர் அருகே இருந்த இந்த ஹோட்டலில் உள்ள பரோட்டா செம பெரிதாக இருக்கும். குருமாவும் வித்யாசமாக இருக்கும். இரண்டு பரோட்டாவிற்கு மேல் சாப்பிடவே முடியாது.

பரோட்டாவை வீட்டில் செய்வது ரொம்ப கஷ்டம். செய்தாலும் சப்பாத்தி மாதிரி தான் இருக்கிறது. ஓட்டல்களில் என்ன டெக்னிக் செய்கிறார்களோ ஓட்டல் பரோட்டா தான் பெஸ்ட் ! என்ன தான் ஹவுஸ் பாஸ் " மைதா மாவு. எண்ணை நிறைய.. வெயிட் போடும்" என மிரட்டினாலும் பரோட்டா மேல் உள்ள காதல் தொடர்கிறது. தொடரும்.

2. குழந்தைகள்

சின்ன வயது முதலே சிறு குழந்தைகள் மேல் கொள்ளை பிரியம். கடைசி குழந்தையானதால் என்னை எல்லோரும் கொஞ்ச, நான் கொஞ்ச யாருமில்லாமல் போனது பெரிய ஏக்கமாய் தெரிந்தது. " எனக்கு தம்பி- தங்கச்சி வேணும்" என அம்மாவிடம் அழுவது அடிக்கடி நடக்கும். "ஆப்பரேஷன் பண்ணியாச்சு. இனிமே பிறக்காது" என்றால் புரியாமல் அழுவேன்.

பெரியண்ணனுக்கு திருமணமாகி குழந்தை பிறந்த பின்தான் நான் கொஞ்ச குட்டி பாப்பா கிடைத்தது. தங்க நிறத்தில் பொம்மை போலிருப்பான். அவனுக்கு "பொம்மு" என்று நான் வைத்த பெயர் நிலைத்து விட்டது.


" பொம்மு யார் செல்லம்? " என கேட்டு, " சித்தப்பா செல்லம்" என சொல்லி கொடுத்து அதற்கு நான் தொடர்ந்து கை தட்டி, கை தட்டி கேட்க பயல் ரொம்ப குஷியாயிட்டான். அவனது அம்மா, அப்பா யார் உருட்டி, மிரட்டி கேட்டாலும் " சித்தப்பா செல்லம்" என்றே சொல்லுவான்.

அவனுக்கு ஏழு, எட்டு வயதிருக்கும் போது அண்ணன் குடும்பம் திருச்சியிலிருந்தது . நானும் திருச்சி சட்ட கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன். முதலில் சில காலம் வெளியிலும் பின் அண்ணன் வீட்டிலேயும் தங்கினேன். சில நாட்கள் தெரு கடைசியில் வரும் என்னை பார்த்து விட்டு " " சித்தப்பா ஆஆ " என கத்தியவாறு செருப்பு போடாமல் ஓடி வருவான். அவ்வளவு பிரியம்! அவனுக்கு Frooti குடிக்க ரொம்ப பிடிக்கும். கடைக்கு கூட்டி போய் Frooti வாங்கி தந்து விட்டு, " நீ குடிச்சிட்டு எனக்கு பாதி தரணும்" என்பேன். "சரி சரி" என குடிச்சிட்டு டப்பாவை குடுத்தால் கொஞ்சம் கூட மிச்சமிருக்காது. நான் ஏமாந்ததை பார்த்து மகிழ்ச்சியாய் சிரிப்பான். 

அடுத்து அக்காவிற்கு பிறந்த குழந்தைகளை கொஞ்சுவது வழக்கமானது . சிசேரியன் ஆபரேஷன் என்பதால் அக்காவும், வயதானதால் அம்மாவும் தூக்க முடியாமல் - அந்த இரு குழந்தைகளுக்கும் Vaccine போட தூக்கிச் சென்றே தலை நிற்காத சிறு குழந்தைகளை தூக்கி பழக்கமானது.

கல்யாணமானபின் குழந்தையை குளிக்க வைப்பது, சாப்பாடு ஊட்டுவது இதிலேயே காலை பொழுதுகள் மகிழ்வுடன் கழிந்தன. அப்போது வீடியோ கேமரா வாங்குமளவு வசதி இல்லாததால் என் பெண் செய்த சேஷ்டைகளை எல்லாம் தனி நோட்டில் எழுதி வைத்தேன். அவற்றை இப்போதும் படிக்க சொல்லி கேட்டு, சிரிப்பாள் அவள் .

குழந்தை பிறந்த  அன்று அது கடவுள் போல என்பார்கள். பிறந்த அன்றே குழந்தைகளை பார்க்கவும் அன்றே கையில் தூக்கி பார்க்கவும் மிக விரும்புவேன்.

வீட்டிற்கருகே இருக்கும் சிறு குழந்தைகள் எப்போதுமே எனக்கு தோஸ்தாக இருக்கும். அரிதாக தற்போதுள்ள தெருவில் யாருமில்லை :((

உடன் படித்த வக்கீல் நண்பர்களுடன் குடும்ப சகிதம் சந்திப்பதும், வெளியூர் டூர் செல்வதும் வருடத்திற்கு சில முறை நடக்கிறது. இந்த வக்கீலுங்க அங்க வந்தும் கோர்ட்டு, ஸ்டே, ஜட்ஜ்னு அவனுங்க கதைகளை பேசிக்கிட்டு இருப்பாங்க. நான் அவர்கள் பசங்களுடன் விளையாட போயிடுவேன். பசங்க முதலில்  "அங்கிள்" என்று ஆரம்பித்து, அப்புறம் " வாடா போடா" ரேஞ்சுக்கு நம்மளை கூப்பிடுவாங்க.ஆனா  இவர்களிடம் கற்று கொள்ள எவ்வளவோ இருக்கு. :)))

நம் அனைத்து கவலைகளையும் தற்காலிகமாய் மறந்து சிரிக்க, இளமை காலத்தை மீண்டும் ஒரு முறை நாம் வாழ, உதவிடும் தருணங்கள் குழந்தைகளுடன் செலவிடும் நிமிடங்களே !

33 comments:

 1. ரெண்டு விஷயமும் அனேகமாக எல்லாருக்கும் பிடிக்கும்..

  ReplyDelete
 2. அட.. முதல் புரோட்டா எனக்கே எனக்கா ?
  (முதல் கமெண்டு, முதல் ஒட்டு -இன்டலி, தமிழ்மணம்)

  ReplyDelete
 3. //பசங்களுடன் விளையாட போயிடுவேன். பசங்க முதலில் "அங்கிள்" என்று ஆரம்பித்து, அப்புறம் " வாடா போடா" ரேஞ்சுக்கு நம்மளை கூப்பிடுவாங்க.ஆனா இவர்களிடம் கற்று கொள்ள எவ்வளவோ இருக்கு. :)))//

  நிதர்சனமான உண்மை. நல்ல பகிர்வு. நன்றி மோகன்.

  ReplyDelete
 4. குழந்தைலயிருந்தே பரோட்டா பிடிக்கும்கறதுனால இந்த டாபிக்கா? :))

  ReplyDelete
 5. //நம் அனைத்து கவலைகளையும் தற்காலிகமாய் மறந்து சிரிக்க, இளமை காலத்தை மீண்டும் ஒரு முறை நாம் வாழ, உதவிடும் தருணங்கள் குழந்தைகளுடன் செலவிடும் நிமிடங்களே//

  நூறு சதவீதம் உண்மை :-)

  ReplyDelete
 6. அப்போது வீடியோ கேமரா வாங்குமளவு வசதி இல்லாததால் என் பெண் செய்த சேஷ்டைகளை எல்லாம் தனி நோட்டில் எழுதி வைத்தேன்.//

  மிக நல்ல விஷயம். எப்போதாவது, அமைதி விரும்பி "நான், சின்ன வயதில் எப்படி நடந்து கொண்டேன்?" என்று கேட்கும் பொழுது ஏதோ, நினைவில் உள்ள ஒன்றிரண்டை மட்டும் சொல்லுவோம். "அவ்வளவுதானா?" என்பான். அசடு வழிவோம்.

  இப்பொழுது குழந்தையை வளர்க்கும் பெற்றோர்கள் உங்களைப் பின்பற்றினால், எங்களை மாதிரி அசடு வழியத் தேவையில்லை.

  இரண்டும் நல்ல பகிர்வு. நன்றி.

  ReplyDelete
 7. குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழித்தால் வயதான ஒரு எண்ணமே வராது. நல்ல பதிவு

  ReplyDelete
 8. இரண்டும் நல்ல பகிர்வு.

  ReplyDelete
 9. பரோட்டாவா புரோட்டாவா:)
  எதுவாயிருந்தாலும் அளவோட சாப்பிட்டா ஆநந்தம் . நீங்க விவரிக்கிறது எனக்கே ஆசையாக இருக்கிறது:0)
  வீட்ல குருமா செய்கிற முறையைச் சொன்னாங்கன்ன்னல் இங்க பதியுங்க.சைவ குருமா:)

  ReplyDelete
 10. மோகன் இப்போதைக்கு என் பையனும் பரோட்டா பைத்தியம் பிடித்து அலைகிறான். எங்கம்மா சூப்பரா பரோட்ட செய்வாங்க. கூகிள் பஸ்ஸில் புகைப்படங்கள் பகிர்ந்திருந்தேன். முட்டை டால்டா என எதுவுமில்லாமல் மொறுமொறுவென லேயர் லேயராக அருமையாக இருக்கும்:)

  ReplyDelete
 11. நல்ல பதிவு

  இரண்டு தனித்தனி விடயங்களாக எழுதியிருந்தாலும் நான் இரண்டையும் ஒன்றாகவே நினைத்தேன்.

  1. எங்கள் ஊர் சிதம்பரத்தில் பேருந்து நிலையம் எதிரே வேலு கபே என்கிற உணவு விடுதியில் சிறுவயதில் பலமுறை புரோட்டாவை இரசித்து சாப்பிட்டுள்ளேன்.

  அப்புறம் - மூர்த்தி கபே என்கிற புரோட்ட கடை மிகவும் பிரபலமாகிவிட்டது. சிதம்பரத்தை விட்டு சென்னைக்கு இடம்பெயர்ந்து 8 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போதெல்லாம் சிதம்பரம் சென்றால் கட்டாயம் மூர்த்தி கபே'வில் புரோட்டா சாப்பிடுவது உண்டு.

  LKG/UKG படிக்கும் எனது குழந்தைகளுடன் இப்போது சிதம்பரம் சென்றாலும் - புரோட்டாவை பொட்டலமாக கட்டி வாங்கிவந்து - புதுச்சேரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மகிழுந்தில் அமர்ந்தபடி சாப்பிடுவது உண்டு.

  2. சென்னைக்கு வந்த பிறகும் குழந்தைகள் புரோட்டா கேட்டு அடம்பிடிப்பதால் - சென்னையில் சுவையான புரோட்டாவை தேடி அலைவது ஒரு கடினமான வேலையாகிவிட்டது. நுங்கம்பாக்கம் அஞ்சப்பரில் அவ்வப்போது புரோட்டா வங்குவது உண்டு... ஆனால், அது ஒருபோதும் சிதம்பரத்தில் கிடைக்கும் புரோட்டா போன்று சுவையாக இருப்பதில்லை.

  (என்னவோ போங்கள் - இதை சொல்லும்போது எனக்கு நெஞ்சம் கனக்கிறது.)

  ReplyDelete
 12. //மைதா மாவு. எண்ணை நிறைய..//

  வீட்டில் செய்யும் போதுதான் தெரியும் அது சாஃப்டாக லேயர் லேயராக வர எவ்வளவு எண்ணெய் தேவையென்பது:)!

  குழந்தைகளைப் பற்றிய பகிர்வு யாழின் இனிமை.

  நல்ல பதிவு.

  ReplyDelete
 13. புரோட்டா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் பதிவு பிடிக்கும்! வீட்டில் செய்ய முடியாது என்பதாலேயே கவர்ச்சி அதிகம்!

  ReplyDelete
 14. நம் அனைத்து கவலைகளையும் தற்காலிகமாய் மறந்து சிரிக்க, இளமை காலத்தை மீண்டும் ஒரு முறை நாம் வாழ, உதவிடும் தருணங்கள் குழந்தைகளுடன் செலவிடும் நிமிடங்களே !


  ...well-said!
  குட்டீஸ் போட்டோஸ்.... சூப்பர்!

  ReplyDelete
 15. நீங்க பரோட்டாவை பற்றி சொல்லி இருப்பதை வாசிக்கும் போதே ....இங்கே நாவில் நீர் ஊற வச்சுட்டீங்களே! ஊருக்கு வந்ததும், முதலில் பரோட்டா சாப்பிடணும்.... :-)

  ReplyDelete
 16. நல்ல பதிவு.
  தங்களது பதிவை படித்தவுடன் புரோட்டா சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது. நன்கு ரசித்து எழுதியிருக்கிறீர்கள்.
  எனது மகன் பிரகாஷ் சிறுகுழந்தைகள் மிகவும் பிரியமாக இருப்பான். நாங்கள் இருக்கும் தெருவில் அவன் தூக்கி வரும் பிள்ளைகளது பெற்றோரது நட்பு காலங்காலமாக தொடர்கிறது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. அண்ணே பசியக் கெளப்பி விட்டுடீகளே!!
  தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி முதல் கேட் அருகாமையில் ஒரு சிலோன் பாய் பரோட்டா போடுவார்.தஞ்சை ப்ரகாஷ் அறிமுகப்படுத்தினாரு எனக்கு அந்த கடைய.அவ்ளோ சாஃப்டா தோசை மாதிரி இருக்கும்ணே.சால்னாவ ஊத்தி ஊத்தி இன்னிக்கு பூரா சாப்பிட்டுகிட்டே இருக்கலாம்
  அதே மாதிரி பட்டுக்கோட்டைல ‘அய்யா திருமண மண்டபம்’ எதிரில் ‘அக்கா கடை’ன்னு ஒண்ணு இருக்கும். அங்கயும்,’சம்பூர்ணா ஹோட்டல்லய்யும்’ பரோட்டா டேஸ்டா இருக்கும்.
  இங்குன கிண்டி மடுவன்கரைல ‘மாஸ்’னு ஒரு ஹோட்டல் உண்டு.ப்ரோட்டா சூப்பர்.ஆனால் எப்போதும் கூட்டமா இருக்கும்.

  ReplyDelete
 18. ப‌ரோட்டா மேட்ட‌ர்...செம‌ சுவார‌ஸ்ய‌ம். ம்ம்..என‌க்கு..ப்ச் எல்லாவ‌ற்றையும் வெளுத்துக்க‌ட்டுகிறேன்...பார‌ப‌ட்ச‌மின்றி ;)

  ReplyDelete
 19. நன்றி மாதவன். உனக்கு நிச்சயம் நான்தான் பரோட்டா வாங்கி தரனும். (தினம் பதிவுகளை தமிழ் மணம் & இன்ட்லியில் சேர்ப்பதால்)
  **
  நன்றி வெங்கட். குழந்தைகள் உடன் விளையாட உங்களுக்கும் பிடிக்கும் போலும்.
  **
  middleclassmadhavi said...
  குழந்தைலயிருந்தே பரோட்டா பிடிக்கும்கறதுனால இந்த டாபிக்கா? :))
  என்னமா யோசிக்கிறீங்க? டேங்க்சு
  **
  நன்றி அமைதி சாரல் மேடம்

  ReplyDelete
 20. புரோட்டா எனக்கும் புடிச்ச மேட்டரு தான்...

  ரசித்தேன்...

  ReplyDelete
 21. //இப்பொழுது குழந்தையை வளர்க்கும் பெற்றோர்கள் உங்களைப் பின்பற்றினால், எங்களை மாதிரி அசடு வழியத் தேவையில்லை.//
  அமைதி அப்பா: என்னை எப்படி பாராட்டலாம் என பாத்துக்கிட்டே இருப்பீங்க நீங்க :)) எல்லாம் ஒரு அன்பும் உரிமையும் தான். நன்றி
  **
  அமுதா கிருஷ்ணா said...
  குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழித்தால் வயதான ஒரு எண்ணமே வராது.  ஆம் மேடம். அதை சொல்ல விட்டுட்டேன்!!நன்றி

  **

  ஆயிஷா: நன்றி

  **

  வல்லி சிம்ஹன் சார்: பரோட்டாவா புரோட்டாவா:)? எங்க ஊர் பக்கம் புரோட்டா அப்படிம்பாங்க, இங்கே பரோட்டான்னு சொல்றாங்க.

  //வீட்ல குருமா செய்கிற முறையைச் சொன்னாங்கன்ன்னல் இங்க பதியுங்க//

  ரொம்ப நம்புறீங்களே !!(ஆனா நிஜமா சூப்பரா சமைப்பாங்க. என்னை பார்த்தாலே அவங்க சமையல் எப்படின்னு தெரிஞ்சுடும்)

  ReplyDelete
 22. வித்யா: அப்படியா? அவருக்கு இப்பவே பரோட்டா ஆசை வந்துடுச்சா? ரைட்டு.

  ஹவுஸ் பாசுக்கு முடிந்தால் அந்த பஸ் பரோட்டா காட்டுகிறேன். நன்றி
  **
  அருள்: விரிவான நினைவுகளுக்கு மிக்க நன்றி. ஊர் பரோட்டா, ஊர் பரோட்டா தான். சென்னை பரோட்டா எல்லாம் அது கிட்டே வர முடியாது.
  **
  //வீட்டில் செய்யும் போதுதான் தெரியும் அது சாஃப்டாக லேயர் லேயராக வர எவ்வளவு எண்ணெய் தேவையென்பது:)!//
  ஆமாங்க ராம லட்சுமி.
  குழந்தை பதிவை நீங்க ரசிப்பது இயல்பு தான். உங்க பதிவுகளில் தான் எத்தனை முறை
  குழந்தைகள் புகை படங்கள் போட்டுருக்கீங்க!

  **
  Sriram said:

  //வீட்டில் செய்ய முடியாது என்பதாலேயே கவர்ச்சி அதிகம்!//

  ஸ்ரீ ராம்: எஸ். நன்றி

  **

  ReplyDelete
 23. //நாவில் நீர் ஊற வச்சுட்டீங்களே! ஊருக்கு வந்ததும், முதலில் பரோட்டா சாப்பிடணும்.... :-)//

  வாங்க சித்ரா; நாங்க வாங்கி தர்றோம் அப்படியே பதிவர் சந்திப்புக்கும் ஏற்பாடு செஞ்சிடலாம்.
  **
  ரத்னவேல்: தங்கள் அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றி
  **
  நன்றி மா ரா. தஞ்சை பிரகாஷ் எனக்கும் மிக அறிமுகம். அவரது கதை சொல்லிகள் செஷன்களுக்கு சென்றுள்ளேன். ரொம்ப வித்யாசமான மனிதர். தஞ்சை அனுபவம் உங்களுக்கும் உண்டா? நேரில் பார்க்கும் போது பேசுவோம்
  **
  ரகு பேச்சிலர்: வெளுத்து கட்டுங்க. நன்றி
  **
  டகால்டி; டேன்க்ஸன்னா .

  ReplyDelete
 24. எனக்கும் பரோட்டாதான் ஃபேவரைட் ருசி என்பதைத் தாண்டி ரெம்ப நேரம் பசி அடக்கும் என்பது முக்கிய காரணம் :)))

  குழந்தைகள்..

  அவர்களிடம்தான் கற்க நிறைய இருக்கிறது!

  ReplyDelete
 25. நானும் எங்க போனாலும் இந்த "பரோட்டாவை விட மாட்டேன்....

  ReplyDelete
 26. நீங்களும் பரோட்டா பார்ட்டியா? :)
  நான் இப்போதான் அதை கொறச்சுருக்கேன்!!

  சாந்தி பரோட்டாவுக்கு நானும் ரசிகன், கல்லூரி காலத்தில்! சிலோன் கடை இப்போ இல்லேன்னு நினைக்கிறேன்..

  ReplyDelete
 27. //பரோட்டாவை வீட்டில் செய்வது ரொம்ப கஷ்டம்//

  நல்லவேளை எனக்கும் அது சரியா செய்ய வராது (எதுதான் வந்திருக்கு?)!! இல்லைன்னா, எங்க வீட்டுப் பரோட்டாப் பிரியர்கள் தினமும் என்னை செய்ய வச்சிருப்பாங்க!!...

  ReplyDelete
 28. இரண்டு விஷயங்களுமே நல்ல பகிர்வு.

  ReplyDelete
 29. பெரிய தத்துவமா இருக்குமோ என்று நினைத்துப் படித்தேன் - கடைசியில் குழந்தைகளுக்கு பரோட்டா சாப்பிடப் பிடிக்கும் என்று நான் பள்ளி நாட்களில் படிக்காமல் எழுதின கட்டுரை போலவே வந்திருக்கிறதே?:) ரசித்துப் படிக்கும்படியாக எழுதுகிறீர்கள்; வாழ்த்துக்கள்.

  எண்பத்து நாலுக்கு முன்... சென்னை சத்யம் தியேடர் பீடர்ஸ் ரோட் முனையில் ஒரு பரோட்டாக் கடை இருந்தது. பரோட்டா சாப்ஸ் சொர்க்கம். பரோட்டாவின் அளவு கூட ஜியோமெட்ரிக் விதிகளையொட்டி செய்தாற்போலிருக்கும். உருவமும் செதுக்கி வைத்தாற்போல் பருமனும் காதல் பெண்ணின் முகமும் உடலும் போல். டால்டா தடவாதே என்று திட்டினால், வெண்ணை தடவிக் கொடுப்பான். மிருதுவாக இருக்கும், காதல் பெண்ணின் கன்னம் போல். பரோட்டாவின் ஒவ்வொரு லேயரும் காதல் பெண்ணின் துகிலவிழ்க்கும் சுகம். சாப்ஸ் போதைக் கிணறு. பரோட்டாவைக் கிள்ளி ஏலக்காய் கிராம்பு மணத்தோடு சாப்ஸில் தோய்த்து இளஞ்சூட்டோடு வாயிலிட்டு மென்றால்... காதலாவது ஒண்ணாவது.

  இது பரோட்டாவும் காதலும் :)

  ReplyDelete
 30. ஷங்கர்: நன்றி. நீங்களுமா?
  **
  சௌந்தர்: அட இன்னொரு நண்பர் நம்மை மாதிரி! தேங்க்ஸ்
  **
  தஞ்சாவூரான் said...
  சிலோன் கடை இப்போ இல்லேன்னு நினைக்கிறேன்..  ஆம் நானும் அப்படி தான் நினைக்கிறேன்

  **

  ஹுஸைனம்மா said...

  நல்லவேளை எனக்கும் அது சரியா செய்ய வராது (எதுதான் வந்திருக்கு?)!! இல்லைன்னா, எங்க வீட்டுப் பரோட்டாப் பிரியர்கள் தினமும் என்னை செய்ய வச்சிருப்பாங்க!!..

  ஹாஹ் ஹாஹ் நன்றி
  **
  கோவை டு தில்லி மேடம் : மிக்க நன்றி

  ReplyDelete
 31. பேச்சிலா இருந்த காலத்தில் பரோட்டா சாப்பிடுவதற்கென்றே கடைகடையாய் அலைவோம்.. அதுவும் நெல்லை, தூத்துக்குடி கடையென்றால் அடிக்கடி செல்வோம். என்னதான் இருந்தாலும் ஊருல க்டையில் இருக்கிற சால்னா டேஸ்ட் இங்க இருக்குறதேயில்லை.
  ஒருமுறை நண்பனொருவனை ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்திருந்தோம். எதேச்சையாக அந்த ஆஸ்பிட்டலின் எதிரில் பரோட்டாக் கடை. ரெம்பப் பிடித்துப் போயிருந்ததால், அடிக்கடி அவனைப் பார்க்கச் செல்வோம். உன்ன யாருடா பார்க்க வந்தது. பரோட்டா சாப்பிட வந்தோம் என அவனிடம் சொல்லிவிட்டு அவனைக் கொஞ்சம் காண்டேத்திவிட்டே வருவோம்.. நல்ல பகிர்வு :-)

  ReplyDelete
 32. parootta na enakkumae uyir thaan.ippakuda.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...