Friday, February 18, 2011

ஆணும் பெண்ணும் - சிறுகதை

குளிப்பதற்காக பாத் ரூமுக்குள் வாணி நுழைந்த அடுத்த நிமிடம் செல்போன் சிணுங்க ஆரம்பித்தது. கதவைத் திறந்து கொண்டு வெளியே வருவதற்குள் நின்று விட்டது. அவசரமாய் குளிக்க ஆரம்பித்த சற்று நேரத்தில் லேண்ட் லைன் அலறியது. " அவராகத்தான் இருக்கும்!  செல்போனை எடுக்க வில்லை என்றதும் லேண்ட் லைனில் யாருடனாவது பேசிக்கிட்டிருக்கிறாளோ என செக் பண்ணியிருப்பார்".

யோசித்தவாறே குளித்து முடித்து உடை மாற்றும் போது மீண்டும் அழைத்தான் நிதின்.

" போனை கூட எடுக்காம என்ன பண்ணிக்கிட்டிருந்தே?"
"குளிச்சிக்கிட்டிருந்தேங்க"
" இப்போ அங்க மணி என்ன ?"
"பதினொன்னு"
"இப்பத் தான் குளிக்கிறியா?"
"......"
பேச்சை மாற்ற எண்ணியவள் " சாப்பிட்டீங்களா?" என்றாள்.
"ஆச்சு. சப்பாத்தி. தினமும் ரொட்டி சப்பாத்தின்னு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சு எனக்கு"
" ம்ம்... என் சமையல் அருமை தெரியணும்ல"

ஒரு சில நொடி மௌனத்திற்கு பிறகு " அடுத்த வீட்டு ரவி இன்னிக்கு எந்த ஷிப்ட் போறான் ? " என்றான்.

ரவி ஷிப்ட்டில் வேலைக்கு போவதால் இப்போ வீட்டில் இருப்பானோ, அதனால்தான் வாணி போனை எடுக்கலையோ என்று அடுத்த சந்தேகம்!

"தெரியலைங்க. அவங்க வீட்டுல யாரையும் இன்னிக்கு நான் பாக்கலை "
"அவன் உன்னை பாக்குற பார்வையே சரியில்லை. ஜாக்கிரதையா இருன்னு சொல்ல வந்தேன்.  வீட்டை பூட்டிட்டேள்ள?”

"ம்ம்"
" பிளைட் எட்டு மணிக்கு வந்துடுச்சுன்னா டின்னர் சாப்பிட வந்துடுவேன்னு நினைக்கறேன்"

அவன் பேசி முடித்ததும் அலுப்புடன் நாற்காலியில் சாய்ந்தாள். திருமணமாகி ரெண்டு வருடமாகிறது. " ஒரு வேளை குழந்தை வந்திருந்தால், இவ்வளவு தூரம் சந்தேகப்பட மாட்டானோ என்னவோ? ம்ம்... கடவுள் இன்னும் கண் திறக்கலை"  அடிக்கடி தோன்றி மறையும் எண்ணம் மறுபடி..

வேலை விஷயமாக வெளி நாடு அல்லது உள் நாட்டிலேயே எங்காவது ஒரு ஊர் என்று மாதத்திற்கு பத்து நாளாவது டூர் போவான் நிதின்.


அந்த பத்து நாளும் அவளுக்கு கொடுமையாய் இருக்கும். சமைக்கவே பிடிக்காது. ஒரு ஆளுக்காக சமையல் என்ன வேண்டியிருக்கு என்று  சோம்பேறித்தனம் வந்து விடும். கண்கள் டி.வியை பார்த்துக்  கொண்டிருந்தாலும் மனம் வேற எதையாவது நினைக்கும். எவ்வளவு தான் புலம்புவது? வயதான காலத்தில் அம்மாவை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும் என்று நிறைய விஷயங்களை வாணி அவர்களிடம் சொல்வதே இல்லை.

"பி. எஸ். சி.க்கு பதில் அப்பாவிடம் சண்டை போட்டாவது இஞ்சினீரிங் படிச்சிருந்தா இப்போ வேலைக்கு போயிருக்கலாம். தப்பு பண்ணிட்டேன்" என்று அவ்வப்போது ஆட்கொள்ளும் சுய வெறுப்பு..

" இரவு என்ன சமைப்பது? ம்ம்.. தினமும் இது ஒரு பிரச்சனை.  என்ன சமைப்பது என்று யோசிப்பதே பாரமாய் ஆகி விட்டது.  மதியம் ஒரு தூக்கம் போட்டு விட்டு, மாலை காய்கறி வாங்கிகிட்டு வந்து டின்னர் ரெடி பண்ணனும்..."   யோசித்தவாறே காலை சாப்பாட்டை முடித்தாள்.

இரவு எட்டரைக்கு கார் வந்தது. வாசலை திறந்து வைக்க முடியாதபடி கொசுக்கள். ஜன்னல் வழியே பார்த்து விட்டு மகிழ்ச்சியோடு ஓடி வந்தாள். நிதின் காருக்கு பணம் தந்து விட்டு வாணியை பார்த்து சிரித்தான்.
" எப்படி இருந்துச்சு மீட்டிங்?"
"ம்ம்"
உள்ளே வந்து சாக்ஸை கழட்டியவாறு " காபி குடு" என்றான்.

காபி போட உள்ளே ஓடினாள்.  சோபாவில் அமர்ந்தவனின் கண்ணில் முதலில் பட்டது போனும், அருகிலிருந்த காலர் ஐ டியும். மெதுவாய் சென்று காலர் ஐ டியை அழுத்தி எங்கிருந்தெல்லாம் போன் வந்ததென பார்த்தான். அம்மா நம்பர், அப்பா நம்பர்,அதற்கடுத்து அவள் தோழி திவ்யாவின் நம்பர்.." பார்த்துவிட்டு மீண்டும் சோபாவிற்கு வந்து விட்டான்.

காபி குடிக்கும் போது அருகில்வந்த வாணியிடம் " இதென்ன உன்னிடமிருந்து புது ஸ்மெல்? புதுசா ஸ்ப்ரே ஏதும் வாங்கினியா " 

" நீங்க இல்லாம என்னிக்குங்க நான் அதெல்லாம் வாங்கியிருக்கேன்? குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம் " என்றாள்.

குளிக்கப் போகும் போதுதான் வாணியின் செல்போன் கண்ணில் பட்டது. கதவை மூடி விட்டு இன்கமிங் கால்களை ஆராய்ந்தான். ஏதோ ஓர் தெரியாத எண்ணிலிருந்து இரு முறை போன் வந்துள்ளதே ! சந்தேகத்துடனே குளித்தான்.

சாப்பிட்டு முடித்ததும் " டயர்டா இருக்கு படுக்கலாம்" என்றான்.

" என்னங்க ஒன்னுமே பேச மாட்டேங்கறீங்க. என்ன ஆச்சு உங்களுக்கு? "

படுத்த பிறகு கேட்டான். " ஏதோ ஒரு நம்பரிலிருந்து இன்னிக்கு ரெண்டு தடவை போன் வந்துருக்கே யார் அது? "

" ஐயோ ஆரம்பிசிட்டீங்களா? அது ஏதோ கிளப்பிலேந்து போன் பண்ணி மெம்பராகுங்கன்னாங்க ".

"அவங்க எதுக்கு ரெண்டு தடவை போன் செய்யணும்?"

" முதல் தடவையே " இண்டரெஸ்ட் இல்லைன்னு சொல்லிட்டேன். தெரியாம மறுபடி போன் பண்ணிட்டு சாரி கேட்டாங்க"

"இதை என்னை நம்ப சொல்றியா?"

""ஐயோ ஏங்க இப்டி பேசுறீங்க. எப்படி புரிய வைக்கிறது. நான் என்ன தப்பா நடந்துட்டேன்? எதை வச்சு ஏன் மேலே சந்தேக படுறீங்க? " பேச்சு அழுகையாக மாறியது.

நிதின் மெளனமாக படுத்திருந்தான். நாளை அந்த நம்பருக்கு போன் செய்து பார்த்திருந்தா உண்மைலேயே அது கிளப் தானான்னு தெரிஞ்சிருக்கும். ச்சே!  இவள் கிட்டே கேட்காம அதைச் செய்திருக்கலாம். இப்ப அழ ஆரம்பிச்சிட்டாளே!"

"சரி போதும் நிறுத்தறியா? நான் தூங்கணும்"

" குளவி கூட்டில கை வச்சிட்டமோ? இன்னிக்கு தூங்கின மாதிரி தான். எப்படி வரும் தூக்கம்? ம்ம்.. அந்த சைனாக் காரி என்னமா மசாஜ் பண்ணா?  சான்சே இல்ல. கடைசி நாள் தான் பார்த்தோம் அவளை. முன்னாடியே வராம போய்ட்டா " அவனுள் எண்ணங்கள் ஓடியபடியே இருக்க...

வாணியின் விசும்பல் தொடர்ந்தது.
*******

நேற்றைய பதிவுகள் :17 comments:

 1. கதை மிகவும் அருமை சந்தேகபுத்தி உள்ளவர்களுடன் எப்ப்டி வாழ்வது...தப்பு செய்பவர்களுக்குதான் அந்தபுத்தி வரும்..அந்தப் பெண் விழித்துக்கொள்வது நன்று...இது ஒரு நோய் .

  அருமையான கற்பனை. பாராடுக்கள்.

  ReplyDelete
 2. நன்றி நிலா மதி. இந்த வாரம் முழுக்க கட்டுரைகளாகவே உள்ளதே என கதை ஒன்று முயற்சித்தேன். இன்னும் கூட நம் ஊரில் இது போல நடக்கவே செய்கிறது. பெண்கள் பாவம் தான். இது பெண்ணை பெற்றதும் தான் மிக உரைக்கிறது

  ReplyDelete
 3. இதுக்குத்தான், நாங்கலாம தேவையில்லாத கால் (இன்கமிங், அவுட் கோயிங்) எல்லாத்தையும் டெலீட் பண்ணிடுவோமில்ல..!!

  ReplyDelete
 4. இது பெண்ணை பெற்றதும் தான் மிக உரைக்கிறது//

  கதைய விட இதுதான் டாப்பு! :))

  தாயுமானவரைய்யா நீர் :))

  ReplyDelete
 5. அருமையான கதை...

  ReplyDelete
 6. " குளவி கூட்டில கை வச்சிட்டமோ? இன்னிக்கு தூங்கின மாதிரி தான். எப்படி வரும் தூக்கம்? ம்ம்.. அந்த சைனாக் காரி என்னமா மசாஜ் பண்ணா? சான்சே இல்ல. கடைசி நாள் தான் பார்த்தோம் அவளை. முன்னாடியே வராம போய்ட்டா " அவனுள் எண்ணங்கள் ஓடியபடியே இருக்க...

  வாணியின் விசும்பல் தொடர்ந்தது.


  ......கதையில், இந்த இடத்தில் - "ஆண் பெண்" குறித்த சமூக பார்வை - சரியாக சொல்லி இருக்கீங்க...
  ஆண்மகன் எப்படி இருந்தாலும், அவன் பொண்டாட்டி மட்டும் ஒழுக்கமாக அமைஞ்சுடணும் என்ற சொல்லாத விதியில் தானே பார்க்கிறது.

  ReplyDelete
 7. நல்ல கதை, அந்தப் பெண் பாவம்..

  ReplyDelete
 8. கதை நல்லா இருக்கு மோகன். சந்தேகம் ஒரு கொடிய நோய்! அந்த பெண் தான் பாவம்!

  ReplyDelete
 9. மன நோயை மறைத்து வாழும் மனிதர்கள். நல்ல கதை.

  ReplyDelete
 10. இந்த நோய் வந்து விட்டால் நிம்மதி அவுட்!

  ReplyDelete
 11. Anonymous2:30:00 PM

  anne vanakkam. சிறுகதை அருமை. அப்புறம், உங்க ப்ளாக் எல்லாம் படிச்சேன். பிரமாதம். நானும் உங்க ஊரு தான். கோவில்வெண்ணி முன்னாடி ஆதனூர் மண்டபம். தற்பொழுது குடும்பம் திருவாரூரில் . நான் சென்னையில்.

  ReplyDelete
 12. நல்ல கதை.நல்லாருக்கு.

  ReplyDelete
 13. கதை நல்லாயிருக்கு.

  சந்தேகம் வந்தால் வாழ்க்கையில் நிம்மதி,மகிழ்ச்சி கெட்டுவிடும்.

  ReplyDelete
 14. மாதவன்: நன்றி. நம்பர் டெலிட் பண்ற அளவு உங்களுக்கு என்ன பிரச்சனை தம்பி ? :))
  **
  ஷங்கர்: நன்றி. பெண் குழந்தை வளர ஆரம்பித்ததும் வாழ்கையை பார்க்கும் பார்வை சற்று மாறவே செய்கிறது
  **
  சங்கவி: நன்றி
  **
  சித்ரா: சரியான இடத்தை சுட்டி சரியா சொன்னீங்க. கதை எழுத காரணமே அந்த பகுதி தான்
  **
  நன்றி KRPசெந்தில்
  **
  நன்றி அமைதி சாரல்
  **
  மிக்க நன்றி மாதவி

  ReplyDelete
 15. வெங்கட்: நன்றி
  **
  நன்றி ராம லட்சுமி
  **
  டாக்டர் சார்: சரியா சொன்னீங்க நன்றி
  **
  செந்தில் குமார்: நன்றி; நம்ம ஊரா ? மகிழ்ச்சி,
  **
  நன்றி ஆயிஷா
  **
  மாதேவி: நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...