Wednesday, March 9, 2011

கிராமத்து கிரிக்கெட் நினைவுகள்

உலக கோப்பை நடக்கும் நேரத்தில், எங்கள் கிராமத்தில் நாங்கள் ஆடிய கிரிக்கெட் பற்றி எழுதுகிறேன்.

எங்களுடன் விளையாடிய சுவாரஸ்யமான ஒரு நபர் தான், இந்த கட்டுரையின் நாயகன்.அவர் எங்கள் ஊரில் வசித்தாலும், பக்கத்துக்கு ஊரில் வேலை பார்த்தார். வயதில் சற்று பெரியவர் என்பதால் சார் என்று அழைப்போம்.

சார் தன்னை லெக் ஸ்பின் பவுளர் என்று சொல்லி கொள்வார். ஆனால், பந்து அப்படி ஒன்றும் ஸ்பின் ஆகாது. கிரீஸுக்கு சற்று வெளியே மெதுவாய், நேராய் வந்து அல்வா போல இறங்கும். என்னை போன்ற படு சுமாரான பேட்ஸ் மேன் கூட வேண்டிய பக்கம் விளாசலாம்.

அவரது பவுலிங் ஆக்ஷ்ன் செம காமெடியாக இருக்கும். கையை முழுதாய் சுற்றி பந்தை எரியாமல், கக்கத்துக்கு கீழிருந்தே எறிவார். இது பார்க்க, சர்வ நிச்சயமான 'த்ரோ' போல் இருக்கும். ஆனால், தான் த்ரோ செய்வதாக சார் எப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டார்.

அவரை யாரவது த்ரோ செய்வதாக கேட்டால், தனது பவுலிங்கை யார் யார் எல்லாம் சரி என ஒப்பு கொண்டனர் என்று பட்டியல் போடுவார். மேலும், பல உள்ளூர் - வெளியூர் ஜாம்பவான்கள் எல்லாம் தனது பவுலிங்கில் க்ளீன் பவுல்ட் ஆனதாகவும், வெங்கட் ராகவனுக்கு பிறகு சிறந்த ஸ்பின் பவுலர் என்றால், அது தான் தான் என்றும் கூச்சப்படாமல் அள்ளி விடுவார்.

அந்த காலக்கட்டத்தில் சார் வீட்டில் மட்டுமே டி.வி. இருந்ததால், அங்கு சென்று தான் கிரிக்கெட் மாட்ச் பார்ப்போம். ஆட்ட சுவாரஸ்யத்தில் யாராவது நகம் கடிச்சால் போச்சு... "அய்யயோ... எச்சில் பண்ணிட்டான்..." என உடனே கொல்லைக்கு கூட்டிட்டு போய் தண்ணீர் தந்து கையை கழுவ சொல்லி கூட்டி வருவார்.

இவர் குறித்த மூன்று முக்கிய சம்பவங்களாவன:

சம்பவம் - 1

மன்னார்குடி டீமுடன் ஒரு கிரிக்கெட் மேட்ச் ஆட போயிருந்தோம். நான் அப்போது பார்வையாளர்தான். எங்கள் ஊர் "பெரிய டீம்" ஆடியது.

முதலில் மன்னார்குடி டீம் ஆடியது. செமையாய் அடி பின்னி எடுத்தனர். நடுவில் நம்ம சார் பவுலிங் போட வந்தார். முதல் பந்து போட்டதுமே "த்ரோ த்ரோ" என சிலர் கத்தினர்.

பின் ஒருவன் எழுந்து, "டேய் சும்மா இருங்கடா... ஆள் நல்லா அல்வா மாதிரி பந்து போடுறார்" என்றதும், பேசாமல் இருந்தனர். சார் பவுலிங்கில் (!!?) சும்மா வெளுத்து எடுத்தனர்.

சாரின் ஒரு பந்தை ஸ்ட்ரெயிட் பவுண்டரிக்கு அடித்தான் ஒரு பேட்ஸ்மேன். மிட் ஆஃப் அண்ட் லாங் ஆனில் நின்ற ஃபீல்டர்கள் போய் பந்தை எடுக்கவில்லை.

சார் கேட்டதற்கு, "நீங்களே போய் எடுத்துக்குங்க" என்று சொல்லி விட்டனர்!

சாருக்கெல்லாம் பவுலிங் தந்து மானத்தை வாங்குறாங்க என்று கேப்டன் மேல் கோபம் அவர்களுக்கு. பின், சாரே ஓடி போய் பவுண்டரியிலிருந்து பந்தை எடுத்து வந்து அடுத்த பந்தை வீசினார். இதை இன்னமும் சொல்லி சொல்லி சிரிப்போம்.

பின்னர், எங்க டீம் பேட்டிங் செய்து 40 ரன்னுக்கு ஆள் அவுட் ஆகியது. இதில் கடைசியாக இறங்கிய நம்ம சார் "0- நாட் அவுட்".

சம்பவம் - 2

தனது திறமையை டீம் சரியாக யூஸ் பண்ணலை என சாருக்கு ரொம்ப வருத்தம்.

மன்னார்குடி டீம் எங்களை மறுபடி ஃபாலோ ஆன் ஆட சொன்னது. சார் இந்த முறை ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக செல்வேன் என்றார்.

"வேண்டாம் சார். முதல் ஓவர் பாண்டியன் போடுவான். போன இன்னிங்க்ஸ்-ல் ஆறு விக்கெட் எடுத்தான் அவன்" என்றான் ஒருவன்.

சார், "போடா.. சோழனாவது.. பாண்டியனாவது," என்று முதல் ஆளாக பேட் செய்ய போய்விட்டார்.

முதல் ஓவர் பாண்டியன் தான் போட்டான். முதல் பந்து... சாரின் ஸ்டம்ப்ஸ் ரெண்டு தெறித்து விழந்தது.

பேட்டை க்ரீஸ் அருகிலேயே வைத்து விட்டு பெவிலியன் திரும்பினார் சார். (அவுட் ஆனால் பேட்-ஐ இப்படி வைத்து விட்டு வருவது சாரின் ஸ்டைல்).

அந்த மேட்ச்சில் வழக்கம் போல் தோற்றோம். ஆனாலும் இன்றும் அந்த மேட்ச் நினைவில் இருப்பதற்கு இந்த ரெண்டு நினைவுகளும் தான் காரணம்.

சம்பவம் - 3

நம்ம சாருடன் நடந்த மற்றொரு அனுபவம் சற்று வித்யாசமானது.  ஒரு முறை நீடாவில் மாலை கிரிக்கெட் சூடு பிடித்தது. ஒரு குறிப்பிட்ட பவுலர் உடம்பை குறி வைத்து பாடிலைன் பவுலிங் போட்டு மிரட்ட, எங்கள் அணி தோற்றது. மேட்ச் முடிந்து பேசி கொண்டிருக்கும் போது " அவன் அப்படி பவுலிங் போட்டிருக்க கூடாது" என்று நான் பேச, நம்ம சார் அதை மறுத்தார். " அவன் அப்படி ஒண்ணும் அடிக்கனும்னு பந்து வீசலை; யாராலையும் சொல்லி வச்சு ஒருத்தரை பவுலிங்கில் அடிக்க முடியாது தெரியுமா? " என்றார்.


" ஏன் சார் சொல்லி வச்சு அடிக்கிற மாதிரி போட முடியாது? நான் போடுவேன் சார்" என்றேன். " பார்க்கலாம்" என சொல்ல பந்தயம் ஆனது.

மறு நாள் எட்டே பேர் தான் விளையாட சென்றோம். நானும் நந்துவும் ஒரு அணியிலிருக்க, சார் எதிர் அணியில் இருந்தார். நாங்கள் விளையாடி முடித்து விட, அடுத்து அவர்கள் பேட்டிங். எப்போது வேண்டுமானாலும் மழை வருமென்கிற மாதிரி இருந்தது. முதல் ஆள் அவுட் ஆனதும் சார் இறங்கினார். நந்துவிடம் போய் " டேய் பந்தை வெளியிலே போடு அவுட் பண்ணிட போறே; அடுத்த ஓவர் நான் போடும் போது அவர் ஆடணும்" என்றேன். அடுத்த ஓவர் ..நான் தான் வீசினேன். முதல் பந்து தரையில் இறங்காமல் நேரே சாரின் இடுப்பின் மேல் இறங்கியது. அடுத்த பந்து வீசுவதற்குள் மழை கொட்ட ஆரம்பித்து விட்டது. அனைவரும் மழையில் இருந்து தப்பி ஓடி ஒரு கட்டிட நிழலில் நின்று கொண்டிருந்தோம். சாருக்கு பந்து வீசி அவரை அடித்து விட்டேனென செம கோபம். யாரும் எதுவும் பேசலை. நந்து போன்ற சிலர் சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு நின்றிருந்தனர்.

நிற்க. இந்த சம்பவத்திற்கு பிறகு இன்று வரை சார் என்னுடன் பேசுவதில்லை!

20 comments:

 1. Anonymous8:49:00 AM

  பாவம் ஒரு காமெடி பீச பந்தால அடிச்சு பதம் பார்த்திட்டீங்களே அண்ணே! :)

  //நம்ம சார் "0- நாட் அவுட்". //

  :)

  ReplyDelete
 2. //40 ரன்னுக்கு ஆகியது ஆகியது.//

  //மற்றொரு ம் சற்று //

  மோகன்,

  சரி செய்துவிடுங்கள்.

  ReplyDelete
 3. மலரும் நினைவுகளா மோகன். சில தவிர்க்க வேண்டிய நினைவுகளை மறக்க நினைத்தாலும் அவை மறந்து போகாது. இஅதனை அந்த ஆசிரியர் படிக்காமல் இருக்கட்டும். நகைச்சுவைதான் - இருந்தாலும் தவிருங்கள்.

  ReplyDelete
 4. நினைவுகளை நினைத்தாலே சந்தோசந்தான்...

  ReplyDelete
 5. //நம்ம சார் "0- நாட் அவுட்". //

  நீங்களே சொல்லிட்டீங்க "நாட் அவுட்", அப்புறமென்ன.
  கூட வெளையாட சரியான ஜோடி இருந்திருந்தா அவர் பின்னி பெடலேடுத்திருப்பாரு..

  ReplyDelete
 6. அருமையான "மலரும் நினைவுகள்"..... பதிவு முழுவதும், ஒரு துள்ளல் நடை. :-)

  ReplyDelete
 7. மலரும் நினைவுகள்.

  பாவம் சார். பார்த்தால் மன்னிப்பு கேட்டு விடுங்கள், வயதுக்கே உரித்தான ஒரு வேகத்தில் செய்து விட்டதென.

  ReplyDelete
 8. நமக்குதான் கிரிக்கெட் தெரியாதே...
  இருந்தாலும் ஒரு வணக்கத்தை போட்டு வைப்போம்....

  ReplyDelete
 9. இந்த மாதிரி ஊருக்கு ஒருத்தர் இருப்பாரோ ??

  ReplyDelete
 10. // அடுத்த ஓவர் ..நான் தான் வீசினேன். முதல் பந்து தரையில் இறங்காமல் நேரே சாரின் இடுப்பின் மேல் இறங்கியது.//

  இந்த பச்ச மண்ணுக்குள்ள இப்படி ஒரு டெரரா?! ;)

  ReplyDelete
 11. பாலாஜி: நன்றி
  **
  நன்றி உலக்ஸ்; மாற்றிவிட்டேன்
  **
  வித்யா: நன்றி
  **
  சீனா சார்: தங்கள் அறிவுரைக்கு நன்றி. அவசியம் கருத்தில் கொள்கிறேன்
  **
  சங்கவி: நன்றி
  **
  நன்றி மாதவன்
  **

  ReplyDelete
 12. நன்றி சித்ரா
  **
  ராம லட்சுமி: நன்றி ; அவர் இப்போது எங்கள் ஊரிலேயே இல்லை :((
  **
  மனோ: நன்றி
  **
  எல். கே: நன்றி
  **
  ரகு: ம் வயசு அப்படி
  **

  ReplyDelete
 13. பேட்டை க்ரீஸ் அருகிலேயே வைத்து விட்டு பெவிலியன் திரும்பினார் சார். (அவுட் ஆனால் பேட்-ஐ இப்படி வைத்து விட்டு வருவது சாரின் ஸ்டைல்).

  excellent narration. i am able to recollect my old memory of playing days. after a long time had a hearty laugh

  ReplyDelete
 14. //நந்துவிடம் போய் " டேய் பந்தை வெளியிலே போடு அவுட் பண்ணிட போறே; அடுத்த ஓவர் நான் போடும் போது அவர் ஆடணும்" என்றேன். அடுத்த ஓவர் ..நான் தான் வீசினேன். முதல் பந்து தரையில் இறங்காமல் நேரே சாரின் இடுப்பின் மேல் இறங்கியது. //

  எனக்கென்னமோ நீங்கள் வேண்டும் என்றே ...

  ReplyDelete
 15. மலரும் நினைவுகள் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது! சில சமயம் நம் நேஷனல் ஹீரோக்கள் விளையாடும் விளையாட்டை விடவும் உள்ளூர் பொடியன்கள் ஆடும் கிரிக்கெட் ஆட்ட‌ம் மிக விறுவிறுப்பாக இருக்கும்!

  ReplyDelete
 16. மலரும் நினைவுகளா? ரைட்டு

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. Mail from Ananthanarayanan:

  Really enjoyed your younger days' cricket experience. Almost everyone in tamilnadu will have such sort of experience, it was nice that you brought it out well. I too had 2/3 senior players in my younger days, they will play all the matches because they are sponsors and we could do nothing about it. We used to make similar sort of fun.

  ReplyDelete
 19. ஆட்ட சுவாரஸ்யத்தில் யாராவது நகம் கடிச்சால் போச்சு... "அய்யயோ... எச்சில் பண்ணிட்டான்..." என உடனே கொல்லைக்கு கூட்டிட்டு போய் தண்ணீர் தந்து கையை கழுவ சொல்லி கூட்டி வருவார்
  இப்படித்தான் ரெயில் பயணத்தில் பெரியவர் ஒருவர் நான் முறுக்கைக் கடித்து சாப்பிட ஆரம்பித்ததும் லபக்கென்று மீதி பட்சணங்களை பறிமுதல் செய்து விட்டார். முழு முறுக்கையும் தின்று கை கழுவி வந்ததும்தான் ‘எச்சில் பண்ணாத’ என்று சத்தியம் வாங்கிக் கொண்டு கொடுத்தார்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...