Sunday, September 22, 2013

ஆனந்த யாழை மீட்டும் -மகள்களின் தினம்- சில நினைவுகள்

இன்று மகள்களின் தினம் என்று முகநூலில் வாசித்தேன் ......

எனது மகள் குறித்த நினைவுகளை அவளது இரண்டு வயது வரை ஒரு தனி டயரி குறிப்பாக எழுதி வைத்திருந்தேன். அதிலிருந்து மிக சிறிய பகுதி இங்கு.......

பிறந்த நாள் 

முதல் நாள் இரவு முதலே மனைவிக்கு Uneasy ஆக இருந்தது. ஆனால் பிரசவம் என சொல்ல தெரியவில்லை. டாக்டர் குறித்து கொடுத்திருந்த நாளுக்கு நிறையவே நேரம் இருந்தது. முதல் பிரசவம் என்பதால் இருவருக்கும் அனுபவம் இன்றி பிரசவ வலி கூட சரியாக உணர முடியாமல் போகும் ! எங்களுக்கும் அப்படியே நடந்தது

எந்த நேரமும் பிரசவ வலி வரலாம் என்று தெரிந்து காருக்கு சொல்லி வைத்திருந்தாலும், அந்த தினம் பிரசவ வலி என்று தெரியாமல் எனது அப்போதைய TVS Champ வண்டியிலேயே ஈக்காட்டுதாங்கல் முதல் தாம்பரம் வரை பயணமானோம்

மருத்துவரிடம் சென்று பார்த்ததும் அவர் இன்று மதியம் டெலிவரி ஆகிடும் என்றதும் நம்பவே முடியவில்லை. "இன்னும் 10 - 15 நாள் இருக்கே " என புலம்பி கொண்டிருந்தேன் (உள்ளுக்குள் பிரசவத்துக்கு TVS சாம்ப் வண்டியில் அழைத்து வந்த குற்ற உணர்ச்சி )

அன்று மாலை - மகளை முதன்முறை பார்த்த நிமிடம் இன்னும் பசுமையாய் நெஞ்சுக்குள்.....

ரோஸ் நிறத்தில் - பிரிந்து உரியும் தோலுடன் ....குறைந்த முடியுடன் - என் மூக்கு சாயலில் நர்ஸ் கையிலிருந்த ஸ்நேகாவை பார்த்தேன். இன்று வரை அந்த நாளை விட மகிழ்ச்சியான நாள் வாழ்நாளில் இருக்க முடியாது !

முதல் நாள் இரவு வலியில் சுத்தமாய் தூங்காத மனைவி - குழந்தை பிறந்த நாளன்று (நார்மல் டெலிவரி!) அந்த மகிழ்ச்சியிலேயே இரவு முழுதும் அவளை பார்த்தவாறு சுத்தமாய் தூங்க வில்லை !

எட்டு மாதம் 

ஸ்நேகாவை அழைத்து கொண்டு அப்போது நாங்கள் குடியிருந்த காலனி கிரவுண்டில் ஜாக்கிங் செல்ல சில முறை முயற்சித்ததுண்டு. அவளை ஓரமாய் அமர வைத்து விட்டு ஓடினால் " அப்பா நம்மை விட்டுட்டு எங்கேயோ போகிறார்" என்கிற மாதிரி பெரிதாய் அழ ஆரம்பித்து விடுவாள். பின் அவள் அம்மாவிடம் தந்து விட்டு ஓடினாலும் அழுகை தான்.....

இதே மைதானத்தில் இருக்கும் கொடிக்கம்பம் அவளுக்கு மிக பிடித்தமான ஒன்று. சுதந்திர தினம் போன்ற நேரங்களில் கொடியேற்றவே இந்த கம்பம் இருக்கும். இதற்கு கொடிக்கம்பத்திற்கு ஸ்னேஹா வைத்த பெயர் "இந்தியா ". காலை அல்லது இரவு சாப்பிட வைக்க பல முறை இந்த இந்தியாவிற்கு அழைத்து வருவது வழக்கம். ஒரு கையால் கம்பத்தை பிடித்தவாறு சுற்றி சுற்றி வருவாள்...

தாய்ப்பால் குடிப்பது ஒரு புறமென்றால். பாட்டிலில் பால் குடிப்பதும் ரொம்ப பிடிக்கும். பாட்டில் கண்ணில் பட்டாலே " பாயி.. பாயி.. " என்பாள் (பால்..பால்!) . இரவில் முழுதும் சாப்பிட்டு விட்டாலும், பால் பாட்டிலை பார்த்தால், " பாயி.. பாயி.. " என குடித்து விட்டு தான் -  விடுவாள். சில நேரம் நிறைய குடித்து வாந்தி எடுத்து விடுவதும் உண்டு. இதனால் இரவில் பால் பாட்டிலை கண்ணில் படாமல் ஒளித்து வைத்து விடுவோம்

ஒரு வயது 

டேப் ரிக்கார்டர் வால்யூமை அதிகப்படுத்தி அலற வைத்து விட்டு எப்படி குறைப்பது என்று தெரியாமல் அங்கிருந்து ஓடி விடுவாள் !

காய்கறி வாங்கி வந்தால் தக்காளியை எடுத்து " பப்பாளி, பப்பாளி" என்றபடி அதனை போட்டு அமுக்கி ஒரு வழி செய்து விடுவாள்

ஒரு பிஸ்கட் தந்தால் கொஞ்சம் கொஞ்சமாய் வாய்க்குள் ஊற வைத்து சாப்பிடுவாள். ஒரு பிஸ்கட் சாப்பிட 15 நிமிடத்துக்கு மேலாகும். ...ஆனாலும் கீழே போடவே மாட்டாள். இந்த 15 நிமிடத்தில் எங்கெங்கோ போவது வருவது என்று என்ன அட்டகாசம் செய்தாலும் பிஸ்கட் மட்டும் பத்திரமாக கையில் இருக்கும் !

குழந்தை பயந்த மாதிரி இருந்ததால் தர்க்கா கூட்டி சென்று சொல்ல சிலர் பரிந்துரைத்தனர். மாலை 6.30 க்கு தர்க்காவில் பிரார்த்தனை முடித்து விட்டு - பின் அங்கு காத்திருக்கும் குழந்தைகளுக்கு காதில் ஓதுவார்கள். " ஊ ஊ " என ஓதுவதால் அவர்களுக்கு ஊ தாத்தா என பெயர் வைத்து விட்டாள் சிநேகா. தர்க்காவில் பிரார்த்தனை நடக்கும் சத்தம் கேட்டால் " ஊ தாத்தா .. ஊ தாத்தா " என்று சொல்வாள்.

பச்சை மற்றும் சிகப்பு நிறத்தில் இரண்டு பந்துகள் இருந்தன. அதை கையில் எடுத்து கொண்டு சிறிது தூரம் நடந்து பின் ஷார்ட்புட் போல தூக்கி எறிவாள். கட்டிலுக்கு கீழே அல்லது பிரிட்ஜ் கீழே பந்து சென்று விட்டால், எடுக்க முடியாமல் அழுகை தொடரும்.... நாம் மறுபடி மறுபடி எடுத்து தந்தால் கவலையே படமால் மறுபடி தூக்கி எறிவாள். ஒரு அளவுக்கு மேல் பொறுமை இன்றி நாம் பந்தை ஒளித்து வைக்க வேண்டும்.

ஏதாவது ஒன்று பிடித்து விட்டால், " அகாருக்கே " (அழகாருக்கே !) என்று ரசித்து சொல்வாள்

எல்லா பொருளையும் தன்னுடையது என்று நினைக்கும் குணம் இந்த ஒரு வயதில்... எந்த பொருளாக இருந்தாலும் " என்னோது ; தம்ம மாட்டேன் " (என்னோடது; தர மாட்டேன் )

எனது நண்பன் ஸ்ரீதர் மற்றும் அவன் மனைவி ஒரு முறை நெற்றியில் பல பொட்டுகள் வைத்து கண்ணாடியில் பார்க்கும் பழக்கும் ஏற்படுத்தி விட - அது தொடர்கதையாகி விட்டது. கண்ணாடியில் ஒட்டியிருக்கும் பொட்டை எடுத்து நெற்றியில் வைத்து கொள்வதும், சில கீழே விழுந்தால், சில நேரம் பசை இல்லாத பக்கத்தை எடுத்து வைக்க முயன்று - தோற்பாள். சில நேரம் நம் முகத்திலும் பல பொட்டுகள் வைத்து விடுவாள்.

************
எல்லோரும் ஒரே விதமான வாழ்க்கை தான் வாழ்கிறோம் என தல சுஜாதா சொன்னது போல் இதே விதமான சில குறும்புகளை உங்கள் மகளும் செய்திருக்கலாம் ! 
************
அந்த நோட்டில் இன்னும் நிறையவே இருக்கிறது.. ஞாயிறு கணினியில் நீண்ட நேரம் அமர்ந்தால் - மகளிடமிருந்து அடி விழும்.. 

அதனால் 

மீ எஸ்கேப் !

8 comments:

 1. குறும்புகள் நிறைய நிறைய....

  ReplyDelete
 2. தங்கமான நிமிடங்கள்...!!
  அழகான பகிர்வுகள்..!

  ReplyDelete
 3. என்றும் நீங்காத இனிய அழகான நினைவுகள்

  ReplyDelete
 4. சுகமான தருணத்தை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி!

  ReplyDelete
 5. மகளைப் பற்றிய உள்ளார்ந்த உணர்வுகள் பதிவில் தெரிகிறது. ஸ்னேஹாவிற்கும், அவள் அம்மா, அப்பாவிற்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. குழந்தை சினேகா பற்றிய தகவல்கள் அருமை! தொடருங்கள்....

  ReplyDelete
 7. இன்று வரை அந்த நாளை விட மகிழ்ச்சியான நாள் வாழ்நாளில் இருக்க முடியாது !//வேறென்ன ஆனந்தம் வேண்டும்

  ReplyDelete
 8. அழகான நினைவலைகள்..பெண்குழந்தைகள் என்றால் கொஞ்சம் கூடுதலாகவே இரசிக்கலாம்
  ஒன்றரை வயதில் என் மகள் எப்போதும் குடுகுடுவென ஓடிக்கொண்டிருப்பாள் கொஞ்சம் குண்டுபாப்பா என்பதால் அடிக்கடி கீழே விழுந்து விடுவாள், அப்போதெல்லாம் நான் பார்த்து,பார்த்து, என்று கூற... அவள் ஒவ்வொருமுறை விழும்போதும் ”பார்த்து” என்று அவளாகவே சொல்லிக்கொண்டு ஒரு கையை ஊன்றி எழுந்து ஓடுவாள். மறக்கவே முடியாத அழகிய கவிதைகள் பெண்குழந்தைகளின் ஒவ்வொரு செய்கைகளும்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...