Friday, December 6, 2013

வேலை செய்யும் நிறுவனத்தை இணையத்தில் திட்டலாமா?

ன்றைக்கு இணையத்தில் எழுதுவோரில் பெரும்பாலானோர் இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ - ஏதோ ஒரு நிறுவனத்தில் பொட்டி தட்டுவோர் தான். சொந்த தொழில் புரிந்தவாறே தொடர்ந்து எழுதும் சிலர் உண்டெனினும் அவர்களை விரல் விட்டு எண்ணி  விடலாம் !

எந்த ஒரு நிறுவனமும் "அற்புதமான ஒன்று " என சொல்லி விட முடியாது .. எந்த மனிதரிடம் தான் குறைகளே இல்லை..நிறுவனமும் மனிதர்களால் ஆனது தானே ?

நான்கு பேர் எங்கு ஒன்றாய் சேர்ந்தாலும் -  பாலிடிக்ஸ்-சும் சேர்வது இயல்பு. நிறுவனமும் விதி விலக்கல்ல. "வல்லான் வைத்ததே சட்டம்" என்பது  எங்கும் பொருந்தும் !

முஸ்தீபுகள் போதும். விஷயத்துக்கு வருவோம்..

Blog- பேஸ்புக் - கூகிள் பிளஸ் - டுவிட்டர் என இணையத்தின் பல இடங்களிலும் நமது கருத்துக்களை, வருத்தங்களை, சந்தோஷத்தை, ஏமாற்றத்தை பகிர்ந்த வண்ணம் இருக்கிறோம். இதில் நாம் வேலை செய்யும் நிறுவனத்தில் நமக்கு கிடைக்கும் கசப்பான அனுபவம் பற்றி எழுதலாமா என்பது பற்றி சில கருத்துக்கள் இங்கு ......
***************
னக்கு தெரிந்து இணையத்தில் எழுதுவோரில் 90 % க்கும் அதிகமானோர் தங்கள் நிறுவனத்தின் குறைகளை பற்றி மூச்சு விடுவதில்லை .. ஆனால் ஒரு சிலர் அவ்வப்போது தங்கள் மேனேஜர் மீதும், நிறுவனம் மீதும் சில வருத்தங்களை பதிவு செய்யவே செய்கிறார்கள். இப்பதிவு அவர்களுக்காக தான் !

வள வளா என்று இழுக்காமல் நேரடியே சொல்லி விடுகிறேன் - என்னை பொறுத்த வரை - நாம் வேலை செய்யும் நிறுவனம் - அல்லது அங்கு கிடைக்கும் கசப்பான அனுபவம் அல்லது மனிதர்கள் பற்றி  எழுதுவதை முழுதும் தவிர்க்க வேண்டும் என்றே நினைக்கிறேன் ! இதனை ஒரு பதிவராக மட்டுமல்லாது - ஒரு நிறுவனத்தின் சட்ட விஷயங்களை நிர்வகிக்கும் மனிதராகவும் சொல்கிறேன் என்பதை அறிக !

ஏன் நிறுவனம் பற்றி  எழுத கூடாது?

சட்ட ரீதியான விஷயங்களுக்கு முன் தார்மீக ரீதியில் சில விஷயங்கள் :

வீடோ, அலுவலகமோ - எல்லா இடங்களிலும் பிரச்சனைகளும்,  புரிந்து  கொள்ளாமையும் இருக்கவே செய்யும். அதற்காக வாயை மூடி கொண்டிருக்க வேண்டுமென்று இல்லை. அந்தந்த பிரச்சனைகளை அங்கங்கே சந்திக்க வேண்டும்.

எனக்கும் நிறுவனங்களில் பல முறை கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு. அவற்றை அங்கேயே சர்வ நிச்சயமாக பேசி விடுவேன். எதையும் உள்ளுக்குள் வைத்து கொண்டு குமுறுவது ரத்த அழுத்தத்தை தான் அதிகரிக்கும்.

ஆனால் கருத்து வேறுபாட்டை முடிந்த வரை எவ்வளவு மென்மையாக சொல்ல முடியுமோ அவ்வளவு மென்மையாக சொல்ல முற்படுவேன். சில நேரங்களில் நம் பேச்சு எடுபடும். பல நேரங்களில் படாது. சின்ன விஷயம் என்றால் வடிவேலு மாதிரி "ரைட்டு விடு " என போய் விடுவேன்.

நமது எண்ணங்களுக்கு மாறான - சில அடிப்படை விஷயங்களில் கருத்து வேறுபாடு எனில் - அவற்றுக்காக வேலையை உதறிய சம்பவம் 3 முறை எனக்கு நடந்திருக்கிறது. அந்த ஒவ்வொரு நிகழ்விலும்  எனக்கு உடன்பாடில்லாத விஷயங்கள் தொடர்வதால் - பொறுமையாக ஓரிரு மாதத்தில் வேறு வேலை பார்த்து கொண்டு வெளியில் வந்திருக்கிறேன்.

அத்தகைய நிகழ்வுகளின் போது எனது குடும்பம் மற்றும் மிக நெருங்கிய ஒரு சில நண்பர்கள் தவிர மற்ற யாரிடமும் (குறிப்பாக புதிதாக இண்டர்வியூ செல்லும் இடத்தில்) ஏற்கனவே வேலை செய்த நிறுவனத்தின் குறைகளை பற்றி பேசியது கிடையாது. காரணம் ரொம்ப சிம்பிள் -  வேற கம்பனியை பற்றி தவறாய் பேசுபவன் நாளை நம் கம்பனி பற்றியும் இப்படி பேசுவான் என இன்டர்வியூவில் உள்ளவர்கள் நினைப்பார்கள் என்ற லாஜிக் தான் !

எனது அனுபவம் சொல்வது - இதனை எழுத எனக்கு தகுதி இருக்கிறது என்பதற்காக மட்டுமே. மற்றபடி எனது சுய பெருமை பேச அல்ல !

ஆக - தார்மீக ரீதியில் சொல்ல வேண்டுமென்றால் - நிறுவனத்தின் நடவடிக்கைகள் பிடிக்கலை என்றால் பேசி பார்க்கலாம் - அப்போதும் அவர்கள் மாறலை என்றால் - பொறுமையாய் அடுத்த கடை பார்த்து விட்டு நடையை கட்டலாம்.(அதுக்குன்னு வருஷத்துக்கு ரெண்டு மூணு கம்பனி மாற சொல்லலை தம்ப்ப்ப்ரி )

சரி இப்போது சட்ட மற்றும் தனிப்பட்ட விஷயங்களுக்கு வருவோம் :

1. நாம் இணையத்தில் நிறுவனம் பற்றி எழுதியதை - தனது பாஸ் அல்லது HR படித்தால் என்ன நினைப்பார்கள்- என்ன ஆக்ஷன் எடுப்பார்கள் என்ற எண்ணம் இருப்பதால் தான் பலரும் எழுதுவதில்லை.

"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை "- உண்மையில் மேலே சொன்ன பயம் நல்லது !

இது பற்றிய கவலையில்லாதோர் தான் நிறுவனம் பற்றிய தங்கள் மனக்குமுறலை இணையத்தில் எழுதுகிறார்கள்.

நீங்கள் வேலைக்கு சேரும்போது பல்வேறு டாக்குமென்டுகளில் கையெழுதிட்டிருப்பீர்கள். அவற்றில் ஒன்று "Non Disclosure Agreement". இதில்
நிறுவனம் குறித்த எந்த ஒரு ரகசியத்தையும் வெளியில் சொல்ல மாட்டீர்கள் என்ற ஒரு வரி சர்வ நிச்சயமாக இருக்கும். கூடவே அப்படி சொன்னால் - அதற்கு என்ன தண்டனை என்பதுவும் கூட லேசாக சொல்லப்பட்டிருக்கும்.

நீங்கள் நிறுவனம் பற்றி எழுதுவதை அவர்களே பார்த்தால் -  முதலில் இதனைத்தான்  ("Non Disclosure Agreement") கையில் எடுப்பார்கள்.


நாம் சொல்கிற எந்த பதிலும் எடுபடாது. சில நேரங்களில் முதல் முறையே நாம் வெளியேற நேரிடலாம். சில நேரம் வார்னிங் தந்து பின் நமது இணைய நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்கலாம்

இணையத்தில் நிறுவனம் குறித்த நமது கோபத்தை பதிவு செய்வதை நாம் வேலை செய்யும் எந்த நிறுவனமும் விரும்புவதில்லை - பொறுத்து கொள்வதில்லை என்பதை அறிக !

2. புதிதாக ஊழியர்கள் வேலைக்கு வரும்போது, இணையத்தில் (குறிப்பாக முகநூல்) அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்வையிடுவது பல்வேறு நிறுவனங்களில் pre induction -ன் ஒரு முக்கிய அங்கமாக மாறி கொண்டிருக்கிறது. என்னை போல நிறுவனத்தில் லீகல் வேலைகளை கவனிக்கும் நண்பர்கள் பலரும் இத்தகைய சம்பவங்களை பகிர்கிறார்கள்.

அரசியல் சார்ந்தோ, அல்லது சதா சர்வ காலம் முகநூலில் புழங்குபவராகவோ, தான் வேலை செய்யும் நிறுவனத்துக்கு எதிராய் எழுதுபவராகவோ இருந்தால் எடுத்தவுடன் நிராகரித்து "ஆபர் லெட்டர் " வழங்குவதையே நிறுத்தலாம்.

சில நிறுவனங்கள் இதை வேறு விதமாக அணுகுவர். பொய்யான எக்ஸ்பீரியன்ஸ் சர்ட்டிபிகேட் அல்லது இணைய புழக்கம் அதிகம் உள்ள மனிதர்கள் வேலைக்கு வந்து விட்டால் சரி கொஞ்ச நாள் போகட்டும் என அவர்கள் வேலையில் எப்படி இருக்கிறார்கள் என பார்ப்பார்கள். வேலையில் பிரச்சனை என்றால் - அதை சொல்லி அனுப்பாமல் மேலே சொன்ன இரண்டு காரணங்களில் ஒன்றை சொல்லி வெளியே அனுப்புவார்கள்.

"ஒரு கம்பனியில் வேலை இல்லாவிட்டால் இன்னொரு கம்பனி " என்று எளிதாக சொல்லலாம். ஆனால் " முன்பு வேலை செய்த நிறுவனம் பற்றி தவறாக எழுதிய நபர் புதிதாக வேலைக்கு சேரும் நம் நிறுவனம் பற்றியும் எழுத மாட்டார் என்பது என்ன நிச்சயம்?"  என எந்த நிறுவனமும் யோசிக்கும். இதனை நினைவில் கொள்க !

******************
ஏற்கனவே சொன்ன விஷயம் தான் - நிறுவனத்தில் ஒரு விஷயம் பிடிக்கா விடில் அங்கேயே பேசி விடுதல் உத்தமம் ! இணையத்தில் அல்ல !

நன்றி !

10 comments:

  1. Anonymous7:14:00 AM

    வணக்கம்
    அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சரியான அணுகுமுறை. மல்லாக்க படுத்துக்கொண்டு காறி உமிழ்தலும் தன் கம்பெனியைப் பற்றி இணையத்தில் தவறாக எழுதுவதும் ஒன்றே.

    ReplyDelete
  3. சில விசயங்களை அங்கே பேச முடியாது,பின்னாடி நிக்குறாங்கஅப்படின்னா கண்ணாடி விக்குறாங்களானு கேப்பாங்க-இதுக்கெல்லாம் இருக்கவே இருக்கு ஃபேக் ஐடி.

    ReplyDelete
  4. எளிதாக திட்டி விடலாம் ,அதனால் வரும் பாதிப்புகளை சமாளிக்க முடியும் என்றால் !பிரச்சினைகளை தொழிற்சங்கம் மூலமாக தீர்த்துக்கலாம் !
    த .ம 3

    ReplyDelete
  5. //நிறுவனத்தில் ஒரு விஷயம் பிடிக்கா விடில் அங்கேயே பேசி விடுதல் உத்தமம் ! இணையத்தில் அல்ல !//

    சரியாகச் சொன்னீர்கள் அன்பரே

    ReplyDelete
  6. சரியான அலசல்... சிலருக்கு சொன்னால் புரிவதில்லை... அடிபட்டால் தான்... அனுபவம்...!(?)

    ReplyDelete
  7. சூப்பரான அலசல். நல்லா சொன்னிங்க

    ReplyDelete
  8. அரசாங்கம் அல்லது பொது நிருவனங்களில் வேலை பார்க்கும் உயர் நிலை அதிகாரிகள் தமது உள் நிர்வாக செயலாக்கங்களை மற்றும் பல்வேறு குறிப்புகளில் நாம் தந்துள்ள கருத்துக்களையும் சேர்த்துத்தான் வெளியிடுதல் அரசாங்க சட்டங்களுக்கு புறம்பானவை.

    அதிலும் சில துறைகளில் வேலை பார்ப்போர் உயர் அதிகாரிகள் எந்தக்காரணத்தை கொண்டும் தமது கருத்துக்களையோ எடுக்கப்பட்ட முடிவுகளில் தமது விருப்பத்துக்கு எண்ணங்களுக்கு ஒத்து போகாது இருந்தவனவற்றை சொல்லுவது அரசு விதிகளுக்கு புறம்பானவை.

    ஆகையால், பணி புரியும் நேரத்தில் அதிகம் பேசுவதை தவிர்ப்பதே நன்று. அரசு எடுத்த முடிவுகள் சில பல ஆண்டுகள் கழித்து டி.க்ளாசிபை ஆன பிறகும் அது பற்றிய நமது எண்ணங்களை தெரிவித்தல் சரியாகாது.

    இருப்பினும், இப்பொழுது உள்ள ஆர்.டி. ஐ. படி, ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றி அரசு முடிவு எடுக்கையில் என்னென்னன நடந்திருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளும் நிலை இருக்கிறது.

    இதனால் அதிகாரிகள் இன்னும் ஜாக்கிரதையாகத் தான் இருக்கிரார்கள்.
    ஆனால் க்ரேப் வைன் கம்யூனிகேஷன் நிறையாவே இருக்கிறது.
    நிற்க.

    நீங்கள் சொல்வதை பெரிதும் ஆமோதிக்கிறேன். நமக்குத்த் தொடர்ந்து சரியில்லை எனத் தொன்றிய ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து இருப்பது நமக்குத்தான் மன உளைச்சலைத் தரும்.

    பிடிக்கலையா...வெளிலே போயிடு. அதற்காக எதிரி காம்பிலே சேருவதும் சரியில்ல. விபீஷணன் மாதிரி.

    சுப்பு தாத்தா

    ReplyDelete
  9. நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் மீடியா பாலிசியில் ஒவ்வொரு வருடமும் நாங்கள் ஆன்லைன் மூலம் கையெழுத்து இட வேண்டும் அந்த பாலிசியின் படி கம்பெனியைபற்றி கம்பெனியின் மீடியாக் குழுவினரின் அனுமதி பெறாமல் எந்த ஒரு விஷயத்தையும் பகிரக் கூடாது அது மட்டுமல்ல கம்பெனியை விட்டு வெளியேறியப் பிறகும் ஒரு வருடத்திற்கு கம்பெனியைப் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியிடக் கூடது அப்படி வெளியிட்டால் அவர்கள் நம்ம மீது நஷ்ட ஈட்டு வழக்கை தொடராலம் என்பதுதான் அந்த பாலிசியின் அம்சம்...

    ReplyDelete
  10. நல்ல அலசல்.....

    நிறைய விஷயங்களை வெளியே சொல்லாமல் இருப்பது தான் நல்லது!

    த.ம. 8

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...