Sunday, July 5, 2015

பொன்னியின் செல்வன் - நாடகம் - ஒரு அற்புத அனுபவம்....

மேஜிக் லாண்டர்ன் நிறுவனத்தின் பொன்னியின் செல்வன் நாடகம் கண்டு பிரமித்து போனோம்....

4 மணி நேர நாடகம்.. நேரம் போவதே தெரிய வில்லை... கதை தெரியாதோருக்கு - துவக்கத்தில் புரிந்து கொள்ளவும், முழுதும் தொடரவும் சற்று சிரமம் இருந்தாலும் - போக போக அனைவரும் கதையுடன் ஒன்றி விடும்படியான அமைப்பு

கதை 

சுந்தர சோழன் என்ற அரசர் உடல் நலமின்றி இருக்க - அவருக்கு பின் யாருக்கு முடி சூட்டுவது என்ற கேள்வியில் ஆரம்பிக்கிறது கதை. மூத்த மகன் - ஆதித்ய கரிகாலன் -  இளவரசன் பட்டம் சூட்டப்பட்டவன்.. இளையவன் அருள் மொழி (இவன் தான் பொன்னியின் செல்வன் ) ..சிற்றசர்கள் குழு - உறவினர் மதுராந்தகனை அரசராக்க திட்டமிடுகிறது..

இன்னொரு பகைவர் கூட்டம் - சுந்தர சோழர் - அவரின் இரு பிள்ளைகள் - ஆதித்ய கரிகாலன்- அருள் மொழி மூவரையும் கொல்ல சதி திட்டம் தீட்டுகிறது..

சோழர் பரம்பரை என்ன ஆனது ... பகைவர்கள் திட்டம் நிறைவேறியதா என்பதே கதை..

திரைக்கதையில் ஆச்சரியங்கள்.. 

கல்கி - தனது நாவலில் பல்வேறு ஆச்சரியங்களை ஒளித்து வைத்துள்ளார்... வால் நட்சத்திரம் தெரிகிறது.. அரசர் குலத்துக்கு ஆபத்து என்று எதிர் பாராத - முக்கியமான ஒருவர் இறப்பது  ...

தனது தந்தைக்கு பிறந்தவள் என தெரியாமல் தங்கையை காதலிக்கும் அரசன் .. ( அந்த காலத்தில் இதை எழுத நிச்சயம் தைரியம் வேண்டும்.. )

இறுதியில் இறக்கும் அரசன் எப்படி இறந்தான் என்பதை கடைசி வரை சொல்லாமல் mystery ஆகவே முடிப்பது..

இப்படி சொல்லி கொண்டே போகலாம் ....

வந்திய தேவன் - குந்தவை- பழு வேட்டரையர் 

பொன்னியின் செல்வனில் நம்மை பெரிதும் கவர்வது- வெவ்வேறு குணாதிசயம் கொண்ட பாத்திரங்கள்..

அனைவருக்கும் பிடித்தமான -  குறும்புக்கார வந்திய தேவன் - வரும்போதே விசில் பறக்கிறது.. ஒவ்வொரு முக்கிய பாத்திரத்தையும் சினிமா பாணியில் - அருமையாய் அறிமுகம் செய்கிறார்கள்.முதல் பாதியில்  வந்திய தேவன் அனைவரையும் கவர்கிறான் என்றால் கதை முடியும் போது பெரிய பழுவேட்டரையர் பாத்திரம் தான் மனதில் நிறைகிறது. அதுவும் அந்த பாத்திரத்தில் நடித்த வயதானவர் மிக, மிக  அற்புதமான நடிப்பு..

ஆதித்ய கரிகாலன் வரும் முதல் காட்சியும் - சிற்றரசர்களை நடுங்க வைக்கும் படி அவர் பேசும் தோரணையும் அசத்தல்.. இரண்டே காட்சியில் வந்தாலும் ஆதித்ய கரிகாலனை மறக்க முடியாது ..!


நந்தினி - கதை முழுக்க முழுக்க இவரை மையமாக கொண்டே நகர்கிறது.. இவருக்கு இரட்டை வேடங்கள் வேறு.. இவரும் பூங்குழலி ஆக நடித்தவரும் அழகு, நடிப்பு இரண்டிலுமே கவர்கிறார்கள்..

பொன்னியின் செல்வன் நாவல் + நாடகத்தில் - பொன்னியின்  செல்வன் வருவது.. மிக குறைந்த அளவே ... இருப்பினும் அரியணை மேல் ஆசை இல்லாதவன், ஏழைகளுக்கு எப்போதும் உதவுபவன் என அவர் பாத்திரம் உயர்வாக நிற்கிறது..

மேஜிக் லாண்டன் 

இந்த குழு  செய்யும் மிக முக்கிய விஷயம்.. அந்தந்த வயதுகேற்றவரை அந்தந்த பாத்திரத்தில் நடிக்க வைத்தது தான்.. மேடை நாடகத்தில் பல நேரம்.. 50 வயது ஆசாமிகள் ஹீரோ என்ற பேரில் காதல் செய்து கொண்டிருப்பர் .. இங்கோ அவரவர் வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடிப்பது ரசிக்க முடிகிறது..நடிகர் குமாரவேல் தான் இந்நாவலை 4 மணி நேர நாடகமாக்கியது..

நாடகம் ஹவுஸ் புல் என்பது இருக்கட்டும்.. 4 மணி நேரம் ஆனாலும் - முடியும் வரை இருந்தது மட்டுமல்ல, கடைசியில் 5 நிமிடம் ஒவ்வொரு பாத்திரத்திலும் நடித்தவர்களை அறிமுகம் செய்யும் போது விடாமல் - கை தட்டினார்கள் சென்னை மக்கள்  !!

மேஜிக் லாண்டனின் பொன்னியின் செல்வன் .. இக்குழு இந்நாடகம் நடத்துவது இதுவே கடைசி முறை !! தயவு செய்து தவற விடாதீர்கள்... !!

3 comments:

 1. எல்லோர் மனத்திலும் நிலைத்து நிற்கும் பொன்னியின் செல்வனை எல்லோரும் கவரும் வண்ணம் நாடகமாக்கியது பாராட்டுக்குரியது . மணிரத்தினமே சரியாக வருமோ வராதோ என்று விட்டுவிட்ட கதை ஆயிற்றே பொன்னியின் செல்வன்.

  ReplyDelete
 2. பலரும் ரசித்துப் படித்த ஒரு கதையை நாடகமாக நடித்துக் காட்டியிருப்பது சிறப்பு. தில்லியில் நடத்தினால்..... பார்க்கலாம்...

  ReplyDelete
 3. // தனது தந்தைக்கு பிறந்தவள் என தெரியாமல் தங்கையை காதலிக்கும் அரசன் //

  இது எந்த கதாபாத்திரம் ?. யார் ? யாரை?

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...