Thursday, August 27, 2015

வானவில்- பாபநாசம் - ஒரிசா... மற்றும் விஜய்யின் புலி..

பார்த்த படம் - பாபநாசம் 

த்ரிஷ்யம் - என்ன கதை என்று சிறிதும் தெரியாமல் பார்த்து ரசித்த படம். பாபநாசம் கதை முழுதும் தெரிந்த பின்னும் ரசிக்க முடிந்தது.

தமிழுக்கு மிக பொருந்தும் விதத்தில் மிகச் சிறு, சரியான மாறுதல்கள் கொண்டு வந்தது அழகு...



கமலுக்கு நடிக்க கற்று தரவா வேண்டும்?  கேரக்டருக்கு தேவையான படி அடக்கி வாசித்துள்ளார் (க்ளோஸ் அப்பில் - வயது தெரிகிறது.. பாத்திரத்துக்கு 40 வயது என்கிறார்கள் !!)

மண் மணக்கும் வசனம், சரியான காஸ்டிங் (கெளதமி மிக மிக லேசான உறுத்தல்... ஆனால் அவருக்கும் பாஸ் மார்க் தான் ), பின்னணி இசை  என சொல்லி அடித்துள்ளனர்.. கமலுக்கு- விஸ்வரூபத்திற்கு பின் நல்லதொரு ஹிட்..

மலையாளத்தில் பார்க்காதவர்கள் இந்த வித்யாச கதையில் பிரமித்து போவீர்கள் .. அவசியம் காணுங்கள் !

ஒரிசா... ஆச்சரியபடுத்திய தகவல் ஒன்று

அண்மையில் ரயில் பயணம் ஒன்றில்  எனது கம்பார்ட்மெண்ட்டில் ஒரிசாவை சேர்ந்த இளைஞர்- தனது மனைவியுடன் பயணித்தார். அவரிடம் பேசி கொண்டிருக்கும் போது அவர் சொன்ன ஒரு தகவல் ஆச்சரிய படுத்தியது..

ஒரிசாவில் பெண்கள் அநேகமாய் வேலைக்கு செல்ல மாட்டார்களாம். படித்திருந்தால் கூட வேலைக்கு செல்வதில்லை என்றார் அவர்.

தினம் சாப்பிடவே இருவரும் உழைத்தால் தான் முடியும் என்ற நிலை உள்ளவர்கள் மட்டும் தான் வேலைக்கு செல்வார்கள் என்றார் !

"அப்ப காலேஜில் படிக்கும் பெண்கள்??" என கேட்க, மீண்டும் உறுதியாக " அவர்கள் வேலைக்கு போக மாட்டார்கள்" என்றார் !

இந்தியாவின் பல மாநிலத்தில் பெண்கள் எவ்வளவோ வளர்ச்சி அடைந்து விட - ஒரிசாவில் எப்படி இந்த மாதிரி நிலை உள்ளது !! அநேகமாய் பீகார் உள்ளிட்ட இன்னும் சில மாநிலங்களிலும் இந்த நிலை இருக்கலாம் என ஊகிக்கிறேன் !

போஸ்ட்டர் கார்னர்



ஹெல்த் பக்கம்

உடல் பயிற்சியில் மிக முக்கிய விஷயம் Consistency ! நம் அலுவலகத்தில் ஜிம் இருக்கும்......... சேரலாமா என்ற யோசனையிலேயே பல மாதங்கள் கழிப்போம். அல்லது வீட்டின் அருகில்/ வரும் வழியில் ஜிம் இருக்கும். சேரலாமா வேண்டாமா என்ற யோசனையிலேயே ரொம்ப நாள் முடிவெடுக்காது இருப்போம்.

விரைவில் முடிவெடுத்து சேர்வது தான் முதல் படி; அடுத்த முக்கிய விஷயம் சேர்ந்த பின் தொடர்ந்து செல்வது.

எப்படியோ தினம் ஜிம் போகணும் என்ற பழக்கத்தை மட்டும் எப்படியேனும் கொண்டு வந்து விட வேண்டும். ஜிம் போய் விட்டாலே முக்கால் கிணறு தாண்டி விட்டோம் என்று அர்த்தம். அதன் பின் எப்படியும் ஓரளவு வொர்க் அவுட் செய்து விடுவோம். ஜிம்மில் சேர்ந்த பின்னும் கூட நாளை போகலாம்; நாளை போகலாம் என்றே தள்ளி போடுவது தான் மிக பெரிய தவறு;

உடற் பயிற்சி குறித்து சொல்லும் போது இந்த விஷயத்தை தான் முக்கியமாக சொல்கிறார்கள் " தினமும் ஜிம் சென்று விடுங்கள்; மற்றவை தன்னால் நடக்கும் !!"

ரசித்த கவிதை

முப்பது கம்பனிகளும்
இரண்டு வெளி நாட்டு வங்கிகளும் இருக்கும்
அந்த பெரிய கட்டிடத்தை
தன் மகனுக்கு அறிமுகப் படுத்தினாள்
அந்த சித்தாள்
நாங்கள் கட்டியது என்று சொல்லி
கட்டும் போது இருந்த இடம்,
சமைத்த இடம்,
தூங்கிய இடம் எல்லாம் காண்பித்தாள்,
வெளியே இருந்தபடியே

முற்றிலும் மாறிப்போய்
 தான்  உள்ளே நுழைய கூட முடியாமல்
ஆகிப்போன அந்த கட்டிடத்தை
பெருமையுடன் பார்த்தாள்

அந்த வங்கியின்
நியோன் போர்டு இருக்கும் இடத்தில்
புடவை காயப்  போட்டது
தனக்கு மட்டும் தெரியும்
என்பதை திடீரென உணர்ந்தவளாக !
 _ முகுந்த் நாகராஜன்

(கவிதைக்கு விளக்கம் சொல்ல தேவையில்லை தான். இந்த கவிதை வாசித்ததும் முதலில் தோன்றிய விஷயம் - மிக பெரும் கட்டிடங்கள் கட்டும் நபர்கள் - அந்த கட்டிடம் முடிந்த பின் - அதன் உள்ளே கூட செல்ல அனுமதி இல்லாத நிலை .... என்ன ஒரு வருத்தமான முரண் !!) )

நெசமாத்தான் சொல்றீங்களா ? 



புலி வருது.. புலி வருது.. 

புலி ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சன் டிவியில் சில பகுதிகள் மட்டும் கண்டேன். விஜய்யின் பேச்சு சற்று ஆச்சரியப்படுத்தியது. அவருக்கு இவ்வளவு பேச தெரியுமா என்று !!!

20 நிமிடம் போல தங்கு தடையின்றி பேசினார்... நிறைய சினிமா வசனம்/ பஞ்ச் டயலாக்  இருந்தாலும், சிறு பேப்பர் இன்றி, இவ்வளவு கோர்வையாக விஜய்க்கு பேச தெரியும் என்பதே ஆச்சரியமாய் இருந்தது...

டி. ராஜேந்தர் விஜயை அளவுக்கதிகமாக புகழ்ந்தது இவ்வாரம் டுவிட்டர் மற்றும் முக நூல் மக்களுக்கு செம இன்பத்தை தந்தது. அவர் பேசியதை ஓட்டு , ஓட்டென்று ஓட்டி கொண்டுள்ளனர்...

மாதிரிக்கு சில..




1 comment:

  1. சினிமா செய்திகள் தவிர்த்து மற்றவை அருமை! அருமை!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...