Monday, December 28, 2015

பசங்க -2 சினிமா விமர்சனம்

இயக்குனர் பாண்டிராஜின் முதல் படமான பசங்க எனது மிக விருப்ப படங்களில் ஒன்று. இன்றைக்கும் தொலை காட்சியில் அப்படம் பார்த்தால் - சில காட்சிகளில் மனம் நெகிழ்ந்து விடும்..

பசங்க -2 எப்படி??



கதை 

வருடமொரு முறை பள்ளி மாற வைக்கும் இரு வெவ்வேறு குழந்தைகள்... அவர்கள் பெற்றோர் படும் பாடு.. அதற்கான தீர்வு.. இவற்றை சொல்கிறது பசங்க -2

நல்ல விஷயங்கள் 

குடும்பத்துடன் காணும் படி ஒரு டீசண்ட் படம்....மனைவி, மகள் இருவருக்கும் படம் மிக பிடித்தது.. (நான் முழுதும் திருப்தி அடையவில்லை )

கவின் மற்றும் நயனாவாக வரும் குட்டி பசங்க இருவரின் நடிப்பு அட்டகாசம்.. மிகை இல்லாமல் - அழகாக செய்துள்ளனர்.. இறுதியில் நயனா கதை சொல்லும் போது நமக்கு கண்ணீர் சற்று எட்டி பார்க்கிறது (இந்த ஒரு இடத்தில் மட்டுமே... !! பசங்க படம் இன்று பார்த்தாலும்  - இது பல இடங்களில் நிகழும் !)

கவின் தந்தையாக வரும் ராமதாஸ் பாத்திரமும், நடிப்பும் சிரிக்க + ரசிக்க வைக்கிறது..

சூர்யா + அமலா பால் மெச்சூர்ட் நடிப்பு.. மிக பொருத்தம்

இன்றைய கல்வி முறையை பல இடங்களில் மென்மையாக - புன்னகையுடன் சாடி செல்வது அட்டகாசம்.. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே - ஸ்கூல் அட்மிஷன் பற்றி பேசுவது... நிறைய பீஸ் வாங்கும் பள்ளி தான் நல்ல பள்ளி என நம்புவது; அதிகாலை 3 மணிக்கு அப்ளிகேஷன் வாங்க கியூவில் நிற்பது;  அரசு பள்ளி ஆசிரியர் - தனியார் பள்ளியில் தன் குழந்தையை சேர்ப்பது.. இப்படி பல விஷயங்களை போகிற போக்கில் சொல்லி செல்கிறார்..

படத்தின் முடிவில் அந்த குட்டி பசங்க தான் போட்டியில் வென்றனர் என முடிக்காமல் - வித்யாசமாக முடித்ததும் பாராட்டுக்குரியது ("ரிசல்ட் தெரியாமல் யாரும் வெளியே வர மாட்டாங்க " - இது என் பெண் !!)



ADHD ( Attention Deficiency hyper active Disorder) என்கிற குழந்தைகள் நோய் பற்றியும் - இது பயப்பட தேவையில்லாத ஒன்று என்பதையும் - மிக பாசிடிவ் ஆக சொன்ன விதம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று..

சில சிறு குறைகள் 

இரு குழந்தைகளை பற்றி சொல்லி செல்லும்போது - எல்லா வித சம்பவமும் இருவருக்கும் ஒரே மாதிரி நடப்பதாக காட்டி செல்வது.. அலுப்பை ஊட்டுகிறது. கவின் வகுப்பை விட்டு வெளியே வந்தால்..  நயனும் இன்னொரு வகுப்பிலிருந்து வெளியே வருவார்.. இவருக்கு பள்ளியில் TC கொடுக்கப்பட்டால் - அவருக்கும் அதே நடக்கும்.. இது மாற்றி மாற்றி காட்டும் போது - அடுத்து என்ன வரும் என்பது நமக்கு முன்பே தெரிய துவங்கி விடுகிறது..

கிராமத்தை காட்டும் போது உள்ள comfort - நிச்சயம் நகரத்தை காட்டும் போது பாண்டிராஜுக்கு இல்லை..

நிறைவாக

சூர்யா தொடர்ந்து நல்ல படங்களையே தயாரிப்பது பாராட்டுக்குரிய விஷயம்.. பாண்டிராஜிடம் இருந்து இன்னொரு நல்ல சினிமா..

குழந்தைகளுடன் பார்த்து ரசிக்க தக்க படம்.. பசங்க -2

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...