Sunday, June 26, 2016

டாப்ஸ்லிப்- என்ன பார்க்கலாம்? எங்கு தங்கலாம்?பயணப்பதிவு

டாப்ஸ்லிப் - மர வீடு ( Tree house ) செல்லலாம் என்று தான் முதலில் துவங்கினோம்... 

பொள்ளாச்சி சென்று பின் டாப் ஸ்லிப் செல்ல வேண்டும் என்பதும் பொள்ளாச்சிக்கு நேரடி ரயில் ஒன்றே ஒன்று தான் சுற்று வழியில் செல்கிறது என்பதும் தெரிந்தது. கோயம்பத்தூர் வழியே பொள்ளாச்சி செல்வது தான் சுருக்கு வழி.. ஆனால் இந்த ரயில் பல ஊர் சுற்றி விட்டு 13 மணி நேரம் எடுத்து கொள்கிறது 

மேலும் நாங்கள் திட்டமிட்டது மிக குறுகிய நாட்களில் தான். எனவே ஸ்லீப்பர் பஸ்ஸில் பயணிக்க திட்டமிட்டோம் 

பொள்ளாச்சி வரை ஸ்லீப்பர் பஸ்ஸில் செல்ல SRM டிரான்ஸ்போர்ட் தான் மிக சிறந்த பஸ். காரணம் ஏ. சி ஸ்லீப்பர்  பஸ் குறைந்த விலையில் (700) இந்த வண்டியில் தான் உள்ளது. செல்லும் போது SRM யிலும் - திரும்பும் போது  K P N ஸ்லீப்பர் பஸ்ஸிலும் ( 1000) பயணித்தோம்  (SRM ஞாயிறு இரவுக்கு சீக்கிரம் புக் ஆகி விடுகிறது ) 


டாப்ஸ்லிப் செல்ல முதலிலேயே ரூம் புக் செய்து கொள்வது அவசியம். நல்ல விஷயம் - பணம் ஏதும் முன்னால் கட்ட வேண்டியதில்லை; அங்கு சென்று கட்டினால் போதும். 

வனத்துறை அதிகாரி காசிலிங்கம் என்பவரை போனில் தொடர்பு கொண்டு - ட்ரீ ஹவுஸ் வேண்டுமென புக் பண்ணினோம் 

இவரது போன் : 94867 80715

பொள்ளாச்சி சென்று, இவர்கள் அலுவலகத்தில் பணம் கட்டி - அந்த அனுமதி சீட்டுடன் சென்றால் தான் மேலே (Topslip) தங்க முடியும். மாற்றாக - நீங்கள் ஒரு நாள் பயணமாக மட்டும் டாப்ஸ்லிப் சுற்றி பார்க்கிறீர்கள் - அங்கு இரவு தங்க வில்லை எனில் - காசிலிங்கம் அவர்களிடம் பெர்மிஷன் ஏதும் வாங்க தேவையில்லை என நினைக்கிறேன். 


மூன்று நாளுக்கும் கார் ஏற்கனவே புக் செய்திருந்தோம்..

பரத் என்பவர் காருக்கு ஏற்பாடு செய்து தந்தார்; இவரது தொலைபேசி எண் : 94890 33707 (இவர் பொள்ளாச்சியில் ரிஸார்ட்டும் வைத்திருக்கிறார்; அங்கு தங்குங்கள் என மிக சொன்னாலும் ஏற்காதீர்கள்; டாப் ஸ்லிப் செல்ல முடிவெடுத்தால் டாப் ஸ்லிப்பில் வனத்துறை/ அரசு விடுதியில் தங்குவதே சிறந்தது ; மலைக்கு கீழ் அல்ல ); இவரிடம் கார் மட்டும் வேண்டும் என கேட்கவும்.

டாப் ஸ்லிப், பரம்பிக்குளம், பொள்ளாச்சி, ஆழியார் என 3 நாள் நம்முடனே கார் இருக்க - 4500 ரூபாய் மிக ரீசனபிள் ஆக தோன்றியது. இதுவே கோயம்பத்தூரில் இருந்து என்றால் 5500 வாங்குகிறார்கள்

பஸ் - காலை 6 மணிக்கெல்லாம் சென்று விட்டது.  நாங்கள் இறங்கிய சில நிமிடங்களில் நாங்கள் இருந்த இடத்திற்கு முன்பே புக் செய்த கார் வந்துவிட்டது .

பொள்ளாச்சி வனத்துறை அதிகாரி அலுவலகம் செல்ல, அவர்கள் 9.30 மணிக்கு தான் வருவார்கள் என்றனர்..வேறு எங்கு செல்லலாம் என யோசித்து அருகில் உள்ள அம்பாரம் பாளையம் ஆற்றுக்கு சென்றோம்..

ஆற்றில் ஒரு பக்கம் அதிக ஆழமில்லை; மறு பக்கம் நல்ல ஆழம். பாதுகாப்பான இடத்தில் மட்டுமே குளித்தோம். ரிஸ்க் ஆன மறுபக்கம் செல்ல வில்லை. இந்த ஒரு மணி நேரமும் ஜாலியாக பொழுது போனது


ஆற்றில் இன்னொரு பக்கம் ஏராள சலவை தொழிலாளிகள் துணிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.. இவர்களிடம் சலவை செய்யும் விதம் பற்றி சற்று விசாரித்து விட்டு கிளம்பினோம்




காசிலிங்கன் அவர்கள் போலீஸ் போன்ற (வனத்துறை) உடை அணிந்து தனது புல்லட்டில் மிக சரியாக 9.30க்கு வந்து இறங்கினார். 4 குடும்பங்கள் டாப் ஸ்லிப் செல்ல அனுமதி பெற காத்து கொண்டிருந்தனர்

ட்ரீ ஹவுஸ் maintenance வேலை நடக்கிறது; முடிய வில்லை; மூங்கில் வீட்டில் தங்குங்கள் என அனுமதி சீட்டு தந்தார். ஒரு நாள் வாடகை 2500; இருவருக்கு மேல் தங்கினால் அதற்கு தனி சார்ஜ் (முன்பே ட்ரீ ஹவுஸ் வேலை நடக்கிறது என்றால் - வராமல் போவோமோ என்று சொல்ல வில்லை போலும் )

டாப் ஸ்லிப்பில் பைசன் காட்டேஜ் - குறைவான செலவில் தங்க விரும்புவோருக்கு சரியான சாய்ஸ். இது 900 வாடகையில் இருந்து துவங்குகிறது; மர வீடு மற்றும் மூங்கில் வீடு ஒரு நாள் வாடகை 2500 ரூபாய்.  இங்கு அனைத்துமே அரசு நிர்வகிக்கும் அறைகள் மட்டுமே. தனியார் லாட்ஜ் எதுவும் இல்லை; பொள்ளாச்சி வனத்துறை மூலம் தான் அறைகள் புக் செய்ய வேண்டும். (மிக அரிதாக டாப் ஸ்லிப்பில் தங்க வேண்டாம் என்ற எண்ணத்துடன் வரும் டூரிஸ்ட் பின் தங்கலாம் என முடிவெடுத்து டாப் ஸ்லிப்பில் உள்ள வனத்துறை அதிகாரியை அணுகினால் அவர் அறை  இருக்கும் பட்சம் அனுமதி வழங்குகிறார்; இருப்பினும் பொள்ளாச்சி வனத்துறை மூலம் முன்பே புக் செய்வது நல்லது )


மலை ஏறுவது சிரமமாகவே இல்லை. கொண்டை ஊசி வளைவுகள் ரொம்ப சுற்றி எடுக்க வில்லை; வாந்தி, மயக்கம் வரும் வாய்ப்புகள் மிக மிக குறைவு

அனுமதி சீட்டை காட்டியதும் நமது அறைக்கு அழைத்து செல்கிறார்கள். செக் இன் டைம்: மதியம் 12 மணி; செக் அவுட் டைம்: மறு நாள் காலை : 10 மணி; அறை காலியாக இருந்தால் 11 மணி போல் கூட நம்மை தங்க அனுமதிப்பார்கள்

Bamboo House தான் இருக்கும் அறைகளில் கடைசியாக உள்ளது; இதில் ஒரே பிரச்சனை - இந்த அறை ஒரு கடைசி என்றால் - சாப்பிடும் இடம் இன்னொரு கடைசி - எனவே 10 நிமிடம் நடந்தால் தான் சாப்பிடும் இடத்தை அடைய முடியும்.

இரவு நாங்கள் சாப்பிட நடந்த போது 2 காட்டெருமை வழியில் நின்று கொண்டிருந்தது  !! நல்லவேளையாக அங்கிருந்த வனத்துறை ஊழியர்கள் நமக்கு தைரியம் சொல்லி காட்டெருமை சாலை விட்டு அகன்றதும் சாப்பிடும் இடத்துக்கு அழைத்து சென்றனர்.

காட்டெருமை அருகில் சென்றால் மிக ரிஸ்க் தான் என்றும் சற்று தூரத்தில் இருந்தால் பிரச்சனை இல்லை சென்றும் கூறினர்

Bamboo House ஒன்று மட்டுமே உள்ளது; அறை நன்றாக இருந்தாலும் கழிப்பறையில் - டைல்ஸ் எல்லாம் சற்று அழுக்காக இருந்தது; பைசன் உள்ளிட்ட மற்ற அறைகள் எப்படி என தெரியவில்லை



டாப் ஸ்லிப்பில் முக்கியமாக 3 activities தான். 

1. யானை மேல் ஏறி சவாரி செல்வது; இது நாங்கள் தங்கிய அறைக்கு மிக அருகில் நடந்தது. 

யானைக்கு மேல் அருமையாக மெத்தை போல தைத்து, சுற்றிலும் ஒரு கூண்டு போல் செய்து 4 அல்லது 5 பேர் அமர்ந்து செல்கிற மாதிரி செய்துள்ளனர். எனவே உடம்பு உறுத்தாது; கீழே விழாமல் பாது காப்பும் கூட  

காட்டுக்குள் 20 நிமிடம் யானை சவாரி மிக இனிமையாக இருந்தது; யானை பாகன் பல சுவாரஸ்ய தகவல்கள் பகிர்ந்து கொண்டார்; மேலும் சற்று முன் புலி வந்து சென்ற காலடி தடம் காண்பித்தார். 




நாங்கள் சென்று வந்த யானை பெயர் சூர்யா; 30 வயதுக்கு மேல் ஆன சீனியர் யானை அது 


இந்த படத்தில் யானை குளிக்க வில்லை; முகம் கழுவி கொள்கிறது !!


2. இரண்டாவது activity - Safari  -  வனத்துறை வேனில் தான் செல்ல வேண்டும். 25 நபர்கள் சேர்ந்தால் ஆளுக்கு 120 ரூபாய் வாங்குவார்கள். ஒரு ட்ரிப்புக்கு 3000 ரூபாய் என கணக்கு

குறைவான நபர்கள் இருந்தால் 3000 ரூபாய் அவர்கள் பங்கிட்டு கொள்ளவேண்டும் (நாங்கள் போன போது 18 பேர் இருந்தோம்; 3000 ரூபாயை ஆளுக்கு 175 என பங்கிட்டு கொண்டோம்; இதனை வனத்துறை அதிகாரிகளே கணக்கிட்டு வாங்கி விடுகிறார்கள்)

இந்த Safari மாலை 4-5 ட்ரிப்பில் செல்வது சிறந்தது. அப்போது 24 யானைகள் அனைத்தும் ஒன்றாக பார்க்க முடியும், மேலும் அவற்றுக்கு சாப்பாடு கொடுப்பதை காணலாம்.

12 மணிக்கு செக் இன் என்பதால் அனைவரும் மாலை ட்ரிப் தான் செல்லுவர்; அப்போது தான் 25 பேர் சேருவர்; அவர்கள் அனைவரும் பார்த்து விட்டால் காலை 7.30 ட்ரிப்புக்கு ஆட்கள் இருக்காது

காட்டுக்குள் சின்ன பஸ் பயணம்; கரும் குரங்குகள், மயில், மான் இவற்றை காண முடிகிறது

வேன் பயண வழியில் கண்ட மயில் 

யானைகள் சாப்பிட்டு முடித்ததும் மேய அனுப்பி விடுகிறார்கள்; அப்படி மேயும் ஒரு யானை 

24 யானைகள் இருக்கும் இடம் சென்றதும் - சாப்பாடு குடுக்கும் நேரம் நீங்கள் சென்றால் - ஜாலியாக இருக்கும். மிக பெரும் உருண்டைகளை அவை அனாயசமாக சாப்பிடுவதை காண முடியும்

மாலை 5 மணி தவிர மற்ற நேரம் Safari செல்வது மிக வேஸ்ட்; நாள் முழுதும் அறையில் தங்காமல் - பகல் நேரம் வரும்  பயணிகளையும் இந்த Safari அழைத்து போகிறார்கள்; ஆனால் அவர்கள் என்ன பார்ப்பார்கள் என தெரியவில்லை; யானைகள் மேய சென்று விடும்; பார்க்க முடியாது

யானையுடன் ஆர்வமாய் போட்டோ எடுக்கும் மக்கள் 


அருகிலேயே சிறு வீட்டில் ரெண்டரை வயது குட்டி யானையை சென்று பார்த்தோம்; கூட்டமாக அனுமதிக்க மாட்டார்கள். வேன் ட்ரைவர் சொன்னதால் சில பேர் மட்டும் சென்று கண்டோம்

சிறு வயது யானை  பரம சாதுவாக இருக்கிறது; அருகில் நின்றால் நமது கால்களை தொடுகிறது; ஆள் ஆளுக்கு இதை ரொம்பவும் செல்லம் கொஞ்சினார்கள்; வளர்ப்பவர் சொல்கிற பேச்சை அப்படியே கேட்கிறது

3. டாப் ஸ்லிப்பில் மூன்றாவது activity ட்ரெக்கிங்; காலை 7 அல்லது 8 மணி வாக்கில் ட்ரெக்கிங் செல்வது தான் சிறந்தது; பகலில் வெய்யில்; மாலை விலங்குகள் பயம் - அனுப்ப மாட்டார்கள்

மேலும் டாப் ஸ்லிப் வன அலுவலக ஆபிஸ் அருகே சிறு   கண்காட்சி சாலை உள்ளது




டாப் ஸ்லிப்பில் அனைத்து தங்கும் இடங்களுக்கும் சேர்த்து ஒரே உணவகம்; இங்கு மத்திய சாப்பாடு ரொம்ப சுமார். இரவு - சப்பாத்தி குருமா - காலை தோசை இரண்டும் ஓகே  ; வெவ்வேறு வித உணவு கிடைக்காது; இருப்பதை சாப்பிட வேண்டும். அதுவும் முதலிலேயே சொல்லி வைத்து விட வேண்டும்.

நிறைவாக:

1. டாப்ஸ்லிப் - ஒரு நாளுக்கு மேல் தங்க/ பார்க்க ஏதுமில்லை;

2. நன்கு விசாரித்து - மர வீடு கிடைத்தால் தங்கவும்; மேலும் Chittal House  என்ற கெஸ்ட் ஹவுஸ் நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள்; இங்கு சமைத்து தர ஆள் இருக்கிறார்கள் என கேள்வி; எனவே சாப்பாடு பற்றிய கவலை இல்லை

எகானாமி வகை வேண்டும் எனில் பைசன் காட்டேஜ் போன்ற 1000 ரூபாய்க்கும் குறைவான இடங்களை கேட்டு பெறலாம்.

3. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெய்யில் தான்; நல்ல கிளை மேட் எதிர்பார்த்து ஏமாற வேண்டாம் (அக்டொபர் மேல் சென்றால் பகலும் குளிராக இருக்கலாம் )

4.யானை மேல் சவாரி அவசியம் செல்லவும்; ஜாலியான எக்ஸ்பீரியன்ஸ் அது;மேலும் மாலை 5 மணிக்கு மட்டும் யானைகள் தங்கியிருக்கும் இடத்துக்கு செல்லும் Safari செல்லவும்

5. உணவு சுமார் தான். Be prepared !

டாப்ஸ்லிப்பில் இருக்கும் ட்ரைபல் பள்ளியில் - மாணவர்களுடன் சில மணி நேரங்கள் செலவிட்டேன்; அது பற்றியும், யானைகள் பற்றி சில தகவல்களும் அடுத்த பதிவில் .....

தொடர்புடைய பதிவுகள்

டாப் ஸ்லிப்- பழங்குடி மக்கள் + மாணவர்கள் வாழ்க்கை-ஓர் அனுபவம்

பொள்ளாச்சி- டாப்ஸ்லிப்- பரம்பிகுளம் பயணம் -புகைபடங்கள் ட்ரைலர்

7 comments:

  1. Informative
    Good narration
    Planned to go this year

    ReplyDelete
  2. Informative
    Good narration
    Planned to go this year

    ReplyDelete
  3. சுவாரஸ்யமாகவும் தகவல் நிறைந்ததாகவும் அமைந்த பதிவு! நன்றி!

    ReplyDelete
  4. நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது வகுப்பிப் படித்த அனைவரும் சென்ற இடம்.... இனிமையான பயணம் அது. குடும்பத்துடன் சென்று வர வேண்டும்.

    ReplyDelete
  5. அருமையான பதிவு சார். நேரில் அழைத்து செல்வது போல் உங்களால் எப்படி அழகாக விவரிக்க முடிகிறது. சூப்பர் சார்.

    ReplyDelete
  6. ஒரு கதை மாதிரி அட்டகாசமாக வர்ணனை செய்திர்கள்.நண்பரே .ஆனைமலையில் தான் இருக்கிறோம் என்று பெயர்.ஆனால் இப்படி ரசித்து அனுபவித்ததில்லை நான் நீங்கள் எப்படி மெரீனாவை அவ்வளவாக ரசிக்கமாட்டீர்களோ அதேபோல் நாங்களும்.இதைத்தான் இக்கரைக்கு அக்கறை பச்சை என்பார்களோ.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...