Friday, August 26, 2016

தர்மதுரை - சினிமா விமர்சனம்

ற்றே வித்யாசமான பீல் குட் படம் !

4  சகோதரர்களுடன் வாழும் விஜய் சேதுபதி - என்ன காரணத்தினாலோ அவர்களுடன் சண்டையிட்டு கொண்டே இருக்கிறார். இதில் தொடர் குடி வேறு.. நிலைமை மோசமாகி தம்பிகள் இவரை கொல்ல திட்டமிட - அம்மா ராதிகா இவரை தப்ப  வைக்கிறார்.

தனது மருத்துவ கல்லூரி தோழிகளை காண விஜய் சேதுபதி செல்ல - 2 பிளாஷ் பேக் விரிகிறது..

இறுதியில் சகோதரர்களை சந்திக்க.யாவரும் நலம் !

Image result for dharma durai

படத்தில் மிக ரசிக்க வைக்கும் பகுதி .. ஐஸ்வர்யா வரும் அரை மணி !

துணுக்கு எழுத்தாளர்கள் என  ஓர் தனி இனம் உண்டு ! அவர்களை எந்த படத்திலும் பாத்திரமாக கண்ட  நினைவில்லை. இப்படத்தில் ஐஸ்வர்யாவை  அப்படி காண மகிழ்ச்சியாய் இருந்தது..

விஜய் சேதுபதிக்கு -  ரகளை செய்ய, நடிக்க ஸ்கொப் உள்ள பாத்திரம். He fits the character perfectly.

தமன்னா நிறைவு.. ஸ்ருஷ்டி -  திருஷ்டி பொட்டு..

விஜய் சேதுபதி- தமன்னா ரிலேஷன்ஷிப் மிக அழகாய் matured - ஆய் கொண்டு சென்றுள்ளனர்..

படத்தின் இறுதியில் மயக்கத்தில் இருக்கும் டாக்டர் விஜய் சேதுபதி- அருகில் ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டு எழுந்து -மருத்துவ சீட் பார்த்து விட்டு ஊசி போடுவார்.. சுஜாதா சிறு கதையில் இதை ஒத்த காட்சி ஒன்று உண்டு..

Image result for dharma durai aishwarya

மருத்துவ கல்லூரி சம்பந்தப்பட்ட காட்சிகளில் செயற்கை தனம்.. நிறையவே லாஜிக் ஓட்டைகள்.. இவை அனைத்தையும் தாண்டி படம் - அது எடுத்து கொண்ட வித்யாச  கதை களனுக்காக ரசிக்க முடிகிறது..

தர்மதுரை...நிச்சயம் ஒரு முறை காணலாம் !

Monday, August 22, 2016

ரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை - பேட்டி

வ்வொரு பயணத்திலும் எத்தனை வித்தியாச மனிதர்களை சந்திக்கிறோம் ! அப்படி ஒரு ரயில் பிரயாணத்தில் தான் இவரை சந்தித்தேன். மனைவி, இரு மகள்கள், தந்தை - அம்மா என குடும்ப சகிதமாய் எங்கள் அருகிலேயே பயணித்தார். அந்த குடும்பம் குறிப்பிட்ட ஒரு ஊருக்கு கோடை விடுமுறையில் பயணம் செய்தது குறித்து பேசிக்கொண்டிருக்க, பயணம் நமது விருப்ப சப்ஜக்ட் என்பதால் நானும் அந்த பேச்சில் கலந்து விட்டேன். சிறிது நேரத்தில் தான் தெரிய வந்தது.. அவர் ஒரு ரயில் டிரைவர் என்பது !

அந்த ரயிலில் பயணித்த டிக்கெட் செக்கர் உட்பட ரயில்வே ஊழியர்கள் பலரும் அவரை பார்த்ததும் நின்று பேசி விட்டு சென்றனர். அவர்களுக்குள் உள்ள நட்பும் அன்னியோன்னியமும் ஆச்சரியமாய் இருந்தது. தொடர்ந்து அந்த ரயில் டிரைவரிடம் பேசியதில் இருந்து:
****
னக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. பத்தாவது முடிச்சுட்டு பாலிடெக்னிக் படிச்சேன். என்னோட 19 வயசிலேயே ரயில்வேக்கு தேர்வாகிட்டேன். அப்போருந்து 25 வருஷமா ரயில்வே வேலை தான். இந்த வேலைக்கு தேர்வானவுடன் முதலில் சில மாசம் ட்ரைனிங் கொடுப்பாங்க. அப்புறம் ரயில் ஓட்டுனர் அருகே பயணிக்கும் அசிஸ்டன்ட் ஆக இருக்கணும். குட்ஸ் ரயில் ஓட்டுறது மாதிரி நிறைய படிகள் தாண்டிட்டு, பயணிகள் ரயிலை முதல் தடவையா ஓட்ட ஆரம்பிக்க பல வருஷம் ஆகும். நான் சேர்ந்து 25 வருஷம் ஆனா கூட, இன்னமும் அடிக்கடி எங்களுக்கான டிரைனிங்கில் கலந்துக்குறேன்

                                   
           
நான் வேலைக்கு சேர்ந்த புதுசில் கரி என்ஜின் தான் இருக்கும். இப்போ நினைச்சு பார்த்தா எப்படி அந்த சூழலில் வேலை பார்த்தோம்னு ஆச்சரியமா இருக்கு. இப்போ இருப்பதெல்லாம் பெரும்பாலும் டீசல் எலக்ரிக் எஞ்சின். ரொம்ப அட்வான்ஸ்ட் எஞ்சின் இது. நாம போற இந்த வண்டியோட எஞ்சின் பார்த்தீங்கன்னா வெளிநாட்டில் இருந்து (அமெரிக்கா) வந்தது.

எங்க வாழ்க்கை இப்போ எவ்வளவோ பரவாயில்லை. நிலக்கரி எஞ்சின் காலத்தில் எல்லாம் ஏகமா கஷ்டப்பட்டுட்டோம். இப்போ மீட்டர் காஜ் கூட ஒழிஞ்சு, எல்லாம் பிராட் காஜ் ஆகிடுச்சு. வண்டி அதனால் செம ஸ்பீட் ஆக போகும்.

குளிர் காலத்தில் எஞ்சின் இருக்கும் இடத்தில் செம குளிர் பிச்சு எடுத்திடும். டில்லி மாதிரி ஊரில், ரயில் எஞ்சினுக்குள் ஹீட்டர் இருக்கும். Temperature குறிப்பிட்ட டிகிரிக்கு கீழ் போயிட்டா ஹீட்டர் தானாவே ஆன் ஆகிடும்.

இப்போ வண்டி எல்லாம் ஸ்டார்ட் செஞ்சு விட்டா போதும். ஸ்பீட் கண்ட்ரோல் செய்வது, வண்டி போற டைரக்ஷன் பார்த்து கொள்வது, பிரேக் போடுவது, டிராக்கை கண்காணித்தபடி இருப்பது - இது தான் எங்க வேலை.

சாப்பாடு, டீ, காபி சாப்பிடுவது எல்லாமே எங்களுக்கு வண்டி ஓடும்போதே தான் நடக்கும். டேஷ் போர்டில் சாப்பாடு டப்பா வச்சு பொறுமையா சாப்பிடுவோம்.

நான் ஆர்வமாய் கேட்பதை பார்த்து " இந்த வண்டி டிரைவர் எனக்கு அதிகம் பழக்கம் இல்லை; இல்லாட்டி உங்களை எஞ்சினுக்கு கூட்டி போய் காட்டுவேன்; என் மனைவியை ஒரு முறை எஞ்சின் கூட்டி போய் காட்டிருக்கேன்". என்றார்.

"வண்டி ஓட்டும்போது எத்தனையோ விபத்து பார்த்தாச்சு. ஒரு முறை ரயில்வே கேட் மூடிருக்கு. அதில் புகுந்து ஒரு கணவன், மனைவி கிராஸ் பண்றாங்க. கணவன் டூ வீலரில் டிராக்கை தாண்டி போயிட்டார் மனைவி கையில குழந்தையுடன் போனில் பேசியபடி நடந்து போறார். அடி பட்டுட்டார். என்ன பண்ண முடியும்? எங்களால் வண்டியை நிறுத்தி அவங்களை காப்பாத்தவே முடியாது. நான் உடனே பிரேக் போட்டாலும் வண்டி அரை கிலோ மீட்டர் தாண்டி தான் நிக்கும். பல நேரம் எங்களுக்கு ஆட்கள் அருகில் வரும்போது தான் தெரிவாங்க".

"தெரியாம அடிபடுறது ஒரு பக்கம்னா, தெரிஞ்சே வந்து விழுறது இன்னொரு பக்கம். ரயில் அருகில் வந்த உடன் தான் டிராக்கிற்கு வருவாங்க. ஒண்ணுமே செய்ய முடியாது. வந்த புதுசில் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. இப்போ இத்தகைய சாவுகள் எந்த பாதிப்பும் ஏற்படுத்துறது இல்லை. பார்த்து பார்த்து பழகிடுச்சு"

"ஒரு முறை பாலம் ஒன்றில் வண்டி போகுது. வெள்ளை சட்டை கருப்பு பேன்ட் போட்டு கொண்டு ஒரு ஆள் தூரத்தில் நிக்குறான். பார்த்தவுடன் எனக்கு சந்தேகம் வந்துடுச்சு. பிரேக்கை லைட்டா பிடிச்சுகிட்டு வண்டியை சற்று மெதுவா ஓட்டினேன். வண்டி அருகில் போகும்போது அந்த ஆள் டிராக்கில் வந்து படுத்துட்டான். டக்குன்னு பிரேக்கை போட்டு வண்டியை நிறுத்திட்டேன். என்னடா வண்டி நிக்குதுன்னு பார்த்த மக்கள் ஓடி போயி அந்த ஆளை பிடிச்சிட்டாங்க. பக்கத்திலேயே அந்த ஆளோட பைக் இருந்தது. அதோட சேர்த்து அவரை நம்ம வண்டியில் தூக்கி போட்டுட்டு போயி அடுத்த ஸ்டேஷனில் போலீசில் ஹாண்ட் ஓவர் செஞ்சுட்டோம். காதல் தோல்வி போலிருக்கு. இப்படி அரிதா ஓரிரண்டு பேரை காப்பாத்தியும் இருக்கேன்".

வண்டி ஓடும்போது ஏதும் பிரச்சனை என்றால் பயணம் செய்வோர் செயின் புல்லிங் செய்வது பற்றி கேட்க, "மிக பெரிய பிரச்சனை என்றால் தான் செயின் புல்லிங் செய்யணும். பயணிகள் அவங்களுக்குள் இருக்கும் சண்டைக்கெல்லாம் செய்ய கூடாது. செயினை பிடிச்சு இழுத்தா வண்டி உடனே தானா நின்னுடும். என்னால ஒண்ணும் செய்ய முடியாது. எந்த கம்பார்ட்மெண்ட்டில் இருந்து இழுத்தாங்களோ அதுக்கு வெளியில் ஒரு லைட் எரியும். முன் பக்கத்தில் இருந்து இழுத்திருந்தா, என்ஜினில் இருந்து நாங்க போய் பார்ப்போம். பின் பக்கத்தில் இழுத்திருந்தா கார்ட் போய் பார்ப்பார். சரியான காரணம் இல்லாம் இழுத்தா பைன் கட்டணும், கோர்ட் போகணும். சில நேரம் யார் இழுத்தாங்கன்னு தெரியலைன்னு எழுதி முடிச்சிடுவாங்க"

ரயில்வேயை பொருத்தவரை மொத்தமா லாபம்னு சொன்னாலும், தென்னக ரயில்வே மட்டும் பார்த்தா அது லாசில் தான் ஓடுது. சில இடங்களில் ரொம்ப கம்மியான விலையில் டிக்கெட் வாங்குறாங்க உதாரணமா திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு தினம் ஒரு ரயில் ஓடுது. இதில் டிக்கெட் வெறும் 10 ரூபா தான். 1000 பேர் பயணிச்சா கூட 10,000 தான் வசூல் ஆகும். டீசல் செலவு தொடங்கி, எங்க சம்பளம் மத்த செலவு என கணக்கு பார்த்தா இந்த 10,000 ரூபா பத்தவே பத்தாது. ரயில்வேக்கு லாஸ் தான். வடக்கிலே Ore - எல்லாம் குட்ஸில் நிறைய போகும். அதனால் அங்க லாபம் வந்துடுது. பொதுவா ரயில் டிக்கெட் விலை ரொம்ப கம்மியா இருக்கு. அதை கொஞ்சமாவது அதிகப்படுத்தணும்

என்னோட குடும்பத்திலே இதுவரை யாரும் ரயில்வேயில் இருந்ததில்லை. அப்பா ஸ்கூல் தலைமை ஆசிரியரா இருந்து ஓய்வு பெற்றவர். ரெண்டு பொண்ணுங்க. முதல் பொண்ணு பிளஸ் ஒன் படிக்கிறா டெண்த்தில் ஐநூறுக்கு 477 மார்க் எடுத்தா. அவ படிக்கிறது திருநெல்வேலியில் ரொம்ப நல்ல ஸ்கூல். இத்தனைக்கும் அங்கே படி படின்னு ரொம்ப படுத்துறதில்லை. சொல்லி கொடுக்குற விதம், படிக்க சொல்லுற விதம் எல்லாமே வித்யாசமா இருக்கும்.

வீட்டுல கேபிள் டிவி கூட கட் பண்ணலை. ஆனா அவ ஒரு மணி நேரம் மட்டும் தான் டிவி பார்ப்பா. நாங்களும் அவளை அதிகம் பிரஷர் பண்ணுறது இல்லை. அவ தானாவே தான் ஆர்வமா படிக்கிறா

ஒன்பதாவது படிக்கும் சின்னவள் சரியான வாலு. சின்ன பசங்க தான் எப்பவும் வாலா இருக்காங்க. ரெண்டாவது குழந்தை வந்த பின், முதல் குழந்தை சற்று மெச்சூர்ட் ஆக நடந்து கொள்ள ஆரம்பிச்சுடுறாங்க

அம்மாவுக்கு கான்சர் -அதுக்கான ட்ரீட்மென்ட்டுக்கு தான் சென்னை போறோம். அரையாண்டு லீவு ஆச்சா? பசங்க அப்படியே சென்னை சுத்தி பாக்கட்டும்னு கூட்டி போறேன்.

நான் ஒரு நாள் வண்டியில் கிளம்பி சென்னையோ அல்லது வேறு ஊரோ போனா, அடுத்த நாள் இரவு தான் அங்கிருந்து கிளம்பி மறுபடி வீட்டுக்கு வருவேன். ஒரு நாள் ரெஸ்ட்.   வீட்டில் தொடர்ந்து எங்களால் தங்க முடியாது. அதனால் வருஷத்துக்கு ஒரு தடவை குடும்பத்தோட ஒரு வாரம் எங்காவது வெளியூர் போவோம். அந்த ஒரு வாரம் தான் குடும்பத்தோட இருக்க கூடிய நாட்கள். மத்த படி எங்க வேலையில் லீவு அது இதுன்னு நினைக்கவே முடியாது
************
ங்கள் குடும்பமும் அவர் குடும்பமும் நன்கு பேசி பழக ஆரம்பித்து விட்டனர். அன்றைய தினம் கிறிஸ்துமஸ் என்பதால் வீட்டில் செய்த கேக் தந்தனர்.

சென்னையில் என்னென்ன இடம் பார்க்கலாம் என்ற தகவல்கள் பேசிவிட்டு, பரஸ்பரம் போன் நம்பர் தந்து கொண்டோம்.

வண்டி எங்காவது நின்றால் வாழைப்பழம் வாங்க வேண்டும் என்று நான் சொல்ல, மதுரையில் நின்றதும் " பழ வண்டி தூரமா இருக்கு; நான் போய் வாங்கி வர்றேன். நீங்க இறங்காதீங்க. வண்டி எடுத்துட்டா பிரச்சனை " என்று சொல்லி விட்டு அவர் சென்றார். திரும்பி வந்தவர் கையில் ரெண்டு டஜன் வாழைப் பழங்கள். ஒரு சீப்பு பழங்களை தங்கள் வீட்டுக்கு கொடுத்து விட்டு, அடுத்த டஜனை எங்களுக்கு தந்தார். எவ்வளவு வற்புறுத்தியும் எங்களிடம் பணம் வாங்கி கொள்ளவே இல்லை.

மனிதர்களிடம் மனம் விட்டு பேசி, பேசுவதை காது கொடுத்து கேட்டாலே, அவர்கள் மனதுக்கு மிக நெருக்கமானவர்களாக ஆகி விடுகிறோம் ....இல்லையா !
************

அதீதம் பிப்ரவரி இதழில் வெளியானது

Thursday, August 18, 2016

வானவில் - அம்மா கணக்கு -விமான நிலையம் டிக்கெட் மிஸ் ஆன அனுபவம்

பார்த்த படம்: அம்மா கணக்கு 

தனுஷ் தயாரிப்பில் அமலா பால், சமுத்திர கனி நடித்த படம்.. சற்று தாமதமாக தான் பார்க்க முடிந்தது.

வீட்டு வேலை செய்து - மகளை தனி பெண்மணியாக வளர்க்கும் அமலா - மகள் சரியாக படிக்கவில்லையென கவலை கொள்கிறார். அதே பள்ளியில் - அவள் வகுப்பில் சேர்ந்து 10 வது படிக்கிறார் !! மகள் கோபம் கொண்டாளா - நன்கு படித்தாளா என்பது இறுதி பகுதி..

நோக்கம் நன்றாக இருந்தாலும் execution அந்த அளவு சரியில்லை..

குறிப்பாக அமலா பால் வேலைக்காரி போல் தோற்றம் இல்லை; சமுத்திரக்கனி காமெடி செய்கிறாரா என்ன .. ??  மகள் ஒரே நாளில் மனமாற்றம் அடைகிறார்.. !! படிப்படியே இது நிகழ்ந்திருக்கலாம்..

இறுதி காட்சியில் வருகிற சில வசனங்கள் மிக நன்று..

உன்னோட கனவை பார்த்து நிறைய பேர் சிரிப்பாங்க. நீ அவங்களை பார்த்து சிரிச்சுட்டு நகர்ந்து போயிடு. சில பேர் தான் உன்னோட கனவை சப்போர்ட் பண்ணுவாங்க. அவங்களை மட்டும் நெருக்கமா வச்சிக்க

வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டம் வரும். ஆனால் அத்தனை கஷ்டமும் சரியா போயிடும்..

படத்தில் ஆங்காங்கு  இத்தகைய வசனங்களும் நெகிழ்ச்சியான தருணங்களும் நிறைய இருந்திருக்கலாம்..

டிவியில் போடும்போது இந்த 1.45 மணி நேர படத்தை ஒரு முறை கண்டு களியுங்கள் !

அழகு கார்னர் 

Manjima Mohan (aka) Manjima Mohan #2


விமான நிலையத்தில் ஒரு டென்ஷன் 

அண்மையில் விமான நிலையத்தில் எனக்கு நிகழ்ந்த சம்பவம் இது.

முதலில் நமக்கான டிக்கெட் பெற்று கொள்ள வேண்டும். பின் செக்யூரிட்டி செக் எனப்படும் நமது உடல் பரிசோதனை.. இது முடிந்ததும் நமது டிக்கெட்டில் சீல் போட்டு தருவார்கள். இந்த சீல் இருந்தால் தான் விமானத்தில் உள்ளே விடுவார்கள்.

செக்கியூரிட்டி செக் முடித்து விட்டு நமது விமானத்திற்கான அழைப்பு வரும் வரை காத்திருந்தேன். விமான அழைப்பு வந்ததும் தேடினால் டிக்கெட் காணும் !!!! டிக்கெட் இல்லாமல் சர்வ நிச்சயமாக விமானத்தின் உள்ளே விட மாட்டார்கள்.

உடன் எனது  கம்பெனி செகரட்டரி இன்ஸ்டிடியூட் நண்பர் ராமசுப்ரமண்யம் இருந்தார் "டென்சன்  ஆகாதீங்க;பொறுமையா பாருங்க" என தைரியம் சொல்லிக்கொண்டிருந்தார்

பல முறை தேட, ஈ டிக்கெட் மட்டும் இன்னொரு காப்பி இருந்தது.

நமது விமானத்திற்கான ஊழியர்கள் மேலே செக்கியூரிட்டி மேனேஜர் இருப்பார். அவரை சந்தியுங்கள் - ஏதேனும் டிக்கெட் கீழே விழுந்திருந்தால் தருவார்கள் என்றனர். அது வேறு தளம் !!

அவசரமாய் சென்று பார்த்தேன். அப்படி டிக்கெட் ஏதும் இல்லை. நம்மிடம் இருந்த ஈ டிக்கெட்இன்னொரு காப்பியில்  சீல் போட்டு தந்து அனுப்பி வைத்தனர்.

அன்று எக்ஸ்டரா பிரிண்ட் அவுட் இல்லா விடில் என்ன ஆகியிருக்கும் !!

செக்கியூரிட்டி செக் - அது இது என நம்மை எல்லாவற்றையும் வைத்து விட்டு தேட சொல்லும்போது இப்படி டிக்கெட்டை மிஸ் செய்ய வாய்ப்புகள் உண்டு..

ஆண்கள் எப்போதும் சட்டை பையில் டிக்கெட்டை வைக்க வேண்டும் - கீழே வைக்கவே கூடாது  என்கிற வழக்கம் வைத்து கொள்ளலாம் என்றார் உடன் பயணித்த நண்பர் ராம்  ! பெண்கள் பாடு சற்று கஷ்டம் தான்.. அவர்கள் தவறாமல் பர்சில் வைத்து கொள்ளலாம் !

போஸ்டர் கார்னர் 


என்னா காட்சி

வழக்கமாய் என்னா பாட்டு என எழுதுவேன்.. மாறுதலுக்கு இம்முறை ஒரு அற்புதமான காட்சி.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மாதவனின் வளர்ப்பு மகள் - அவளது நிஜ தாயாரை சந்திக்கும் காட்சி.

நந்திதா தாஸ்- கிரித்திகா -சிம்ரன் என அனைவரின் நடிப்பும் அட்டகாசம். அதுவும் கிரித்திகா இப்படத்திற்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது பெற்றது மிக சரி என சொல்லும் காட்சி இது. போலவே நந்திதா தாஸ் தவிர வேறு யாரால் இவ்வளவு சிறப்பாக நடிக்க முடியும் என தெரிய வில்லை..

காட்சியில் திடீரென மழை பெய்வது சினிமாத்தனம் என்றாலும், அதற்கடுத்த ஷாட்டில் - மாதவன், சிம்ரன், நந்திதா - அக்குழந்தை அனைவரும் ஒரு குடைக்குள் இருப்பர்.. மனதை என்னவோ செய்யும் ஷாட் அது...

இறுதியில் அவள் அம்மா என்று கூப்பிடும்போது பார்க்கும் நம்மாலும் அழாமல் இருக்க முடியாது !



கவிதை கார்னர் 

அப்பாவின் சாயலில் உள்ள
பெட்டிக் கடைக்காரரிடம்
சிகரெட் வாங்கும்போதெல்லாம்
விரல்கள் நடுங்குகின்றன! - நா. முத்துக்குமார்

தொல்லை காட்சி

ஜுனியர் சூப்பர் ஸ்டார் என்கிற நிகழ்ச்சி ஜீ தமிழில் துவங்கி உள்ளனர். வழக்கமாக ஜுனியர்கள் பாடுவது தான் நிறைய நடக்கும். இங்கு குட்டீஸ் சிறு நாடகம் போடுகிறார்கள். பாக்ய ராஜ், குஷ்பூ மற்றும் அர்ச்சனா ஜட்ஜ் ஆக வரும் இந்நிகழ்ச்சி ஓரளவு ரசிக்கும் படி உள்ளது. ஜட்ஜ்கள் குட்டீசை தொடர்ந்து ஊக்குவிக்கும் விதம் மட்டுமே பேசுகிறார்கள்.. 

Monday, August 15, 2016

கவிஞர் நா. முத்துக்குமார் ......

மூன்று நாட்களாக நண்பர்களுடன் பயணத்தில் இருந்தேன்; எவ்வித தொலை தொடர்பு சாதனங்களும் (தொலைபேசி, டிவி, Landline ) இல்லாத இடம்...

ஊருக்கு திரும்புகையில் சிக்னல் வந்ததும் முதல் செய்தியாக கவிஞர் நா. முத்து குமார் மரணம்....



ஹெபடைட்டிஸ் பி எனும் அசாதாரண நோயால் இறந்துள்ளார். இந்நோய்க்கு - முன்பே வாக்சின் தரலாம்.. வந்த பின் உயிர் காப்பது சற்று சிரமம்... நமது குழந்தைகளுக்கு இந்த வாக்சின் அநேகமாய் தந்திருப்பர்.. நமக்கு போட்டிருக்க மாட்டோம் !!
********
5 ஆண்டுகளுக்கு முன் ... தமிழில் ஒவ்வொரு வருடமும் மிக அதிக பாடல்கள் எழுதியது கவிஞர் வாலி அல்லது கவிஞர் வைரமுத்துவாக இருக்கும்.. ஆனால் கடந்த 5 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் மிக அதிக பாடல் எழுதியது  நா. முத்து குமார் தான் ! அதுவும் முதல் ரேங்க்கிற்கும் அடுத்த ரேங்கிற்கும் 50 மார்க் வித்தியாசம் இருந்தால் எப்படி இருக்கும்.. ! அந்த அளவு வித்யாசம் இருக்கும் ..இவருக்கும் அடுத்த அதிக பாடல் எழுதியவருக்கும் ..

உண்மையில் நான் யோசித்துள்ளேன்: இதே ரீதியில் போனால் முத்து குமார் எத்தனை ஆயிரம் பாடல்கள் எழுதுவார்.. அநேகமாய் தமிழில் மிக அதிக திரை இசை பாடல் எழுதியவராய் நா. முத்து குமார் இருப்பார் என்று நம்பினேன்.. அந்த நம்பிக்கை பொய்த்து விட்டது..

பாடல்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் ... தரத்திலும் சிறிதும் குறைவில்லை.. குறிப்பாக யுவனுடன் சேர்ந்து இவர் இசை அமைத்த பல பாடல்கள் மிக மிக அற்புதம்..

இவர் எழுதியதில் எனக்கு பிடித்த சில பாடல்கள் :

************
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்
வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை…



*************
(நினைத்து நினைத்து பார்த்தேன்...)



பேசிப்போன வார்தைகள் எல்லாம்
காலந்தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா
பார்த்துப்போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா
****************
நா. முத்து குமார் அவர்களை மெட்றாஸ் கிறித்துவ கல்லூரி நடத்தும் வனம் கவியரங்கில் சில முறை சந்தித்து பேசி உள்ளேன்.. மென்மையான, நட்பான மனிதர்..

70-80 ஆண்டுகள் வாழ்ந்து ஒரு மனிதன் சாதிப்பதை விட 10- 15 ஆண்டுகளிலேயே மிக மிக அதிகமாக சாதித்து விட்டார்..

இறந்தவருக்கு துயரில்லை.. இருப்பவருக்கு தான் துயரம்...

நா. முத்து குமார் அவர்களின் குடும்பம் குறித்தே மனம் சுழல்கிறது. இந்த துயரத்திலிருந்து மீண்டு வரும் தைரியம் மற்றும் ஆற்றலை அவர்களுக்கு இறைவன் வழங்கட்டும் !

முக நூல் மற்றும் பதிவுலகில் அவருக்கு ஏராள நண்பர்கள் ... அவர் குடும்பத்துக்கு ஏதேனும் செய்ய முடியுமா என அவசியம் யோசியுங்கள்.. என்னால் முடிந்த பங்களிப்பை நானும் செய்வேன்.

Sunday, August 7, 2016

வானவில் + தொல்லை காட்சி...

பார்த்த படம்: தனு வெட்ஸ் மனு (ரிட்டன்ஸ்)

மாதவன் - கங்கனா நடித்த இந்த ஹிந்தி படம் அண்மையில் கண்டோம்; துவக்க காட்சியில் கணவன்- மனைவி சண்டை போட்டு கொண்டு பிரிகிறார்கள். இறுதியில் எப்படி இணைந்தனர் எனும் விஷயத்தை நடுவில் ஹீரோவுக்கு இன்னொரு கலியாணம் போன்ற விஷயங்களோடு கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் பெரிதும் கவர்ந்தது  ஹீரோயின் கங்கனா நடிப்பு தான். ! அட்டகாசம். 2 பாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டும் ஒருவரே தான் என ரொம்ப உற்று பார்த்து தான் ஓரளவு நம்பவேண்டும். இல்லையேல் வெவ்வேறு நபர் என்று தான்  நினைப்போம்.அந்த அளவு நடிப்பு, உடை, பேச்சு என அனைத்திலும் முழுக்க வேறு பாடு காண்பித்துள்ளார்.

கங்கனா நடிப்பை தவிர சொல்லிக்கொள்ளும் படி வேறு எதுவும் இல்லை !

அழகு கார்னர் 




பைக் பிரச்சனை 

அண்மையில் எனது பைக்கில் சிறு பிரச்சனை; நிறுத்தும் போதெல்லாம் கொஞ்சம் ஆயில் ஒழுகி கொண்டிருந்தது. மெக்கானிக்கிடம் காட்டணும் என நினைத்த படி 2 வாரம் ஓட்டிவிட்டேன் ; வண்டியை அப்புறம் எடுத்து  போனால்,இன்ஜின் ஆயில் முழுக்க காலி ஆகி வண்டி ஓடிருக்கு; சில பார்ட்ஸ் மாத்தணும் என அதுக்கு மட்டுமே 1500 மேலே செலவு  வச்சிடுச்சு.முதலிலேயே பார்த்திருந்தால் ஆயில் சீல் மட்டும் 100 ரூபாய்க்குள் மாற்றி பிரச்னையை முடித்திருக்கலாம் !


இரு சக்கரமோ, நான்கு சக்கரமோ - பிரச்சனை என்றால் விரைவில் மெக்கானிக்கை சந்திக்கணும் என சில நண்பர்கள் அடிக்கடி சொல்வர்.. அனுபவ பூர்வமாய் உணர்த்த நிகழ்ச்சி இது !

கவிதை/ போஸ்ட்டர் கார்னர் 



என்னா பாட்டுடே: என் Fuse போச்சு 

ஆரம்பம் படத்தில் வரும் இப்பாடல் -  பட ரிலீசுக்கு ரொம்ப நாள் கழித்து தான் கவனித்தேன். வித்யாசமானதொரு கான்செப்ட்.

பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் -மெட்டு- படமாக்கம் என எல்லாமே different தான்.. பாட்டை கேட்டாலே ஒரு ஜாலி மூட் வரும்.. டிவியிலும் சரி ஆடியோவாகவும் சரி அடிக்கடி கேட்கும்/ பார்க்கும் பாடல் ஆகி  விட்டது..



தொல்லை காட்சி கார்னர் 

** சன் மியூஸிக்கில் ஒரு நல்ல நிகழ்ச்சி " கோலிவுட் சம்ப்ரதாயம்" தமிழ் சினிமாவில் பலமுறை வரும் காட்சிகளின் தொகுப்பு. இந்த வாரம் கொள்ளை காட்சிகளை வரிசை படுத்தி கலாய்த்து தள்ளினர். செம காமெடியாய் இருந்தது. இயலும் போது பார்த்து சிரிக்கலாம்

** விஜய் டிவியில் ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி தற்போது ஒரே பள்ளியை சேர்ந்த மாணவர்- ஆசிரியர் ஜோடியாக ஆடுகிறார்கள். பசங்க எல்லாம் ஷார்ப் ஆக இருக்க, பல நேரம் ஆசிரியரால் சரியான வார்த்தை கண்டு பிடிக்க முடியாமல் போகிறது.. நீண்ட நாளாக தமிழ் சார்ந்த இந்த நிகழ்ச்சி வருவதில்.. மகிழ்ச்சி !
Related Posts Plugin for WordPress, Blogger...