Saturday, November 19, 2016

நைட் ஷிப்ட் வேலை - விரிவான அலசல்

ல வித மனிதர்களை - அவர்கள் வாழ்க்கை, வேலை குறித்த கேள்விகளோடு வீடுதிரும்பல் மூலம் அவ்வப்போது சந்தித்து வருகிறோம். சென்னை பஸ் கண்டக்டர் பேட்டி வாசித்தது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த வரிசையில் இரவு நேர பணி செய்யும் ஒரு நண்பர் மூலம் இந்த பணியின் சங்கடங்கள் குறித்து விரிவாய் அறிய முடிந்தது. நமக்கு நன்கு அறிமுகமான பதிவர் மெட்ராஸ் பவன் சிவகுமார் தான் நமது கேள்விகளுக்கு மிக அழகாய் பதில் அளித்துள்ளார். இதோ நைட் ஷிப்ட் வேலை குறித்த அவரது பேட்டி:
**************
நீங்கள் எதனால் இரவு நேர பணியை தேர்ந்தெடுத்தீர்கள்? 

இரவுப்பணியை 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர்(நான் உட்பட)விரும்பி தேர்ந்து எடுப்பதில்லை. இந்திய – அமெரிக்க நேர வித்யாசம் ஒன்றே இதற்கு முக்கிய காரணம். அதிர்ஷ்டம் உள்ள சிலருக்கு பகல் பணி கிடைப்பது உண்டு. உதாரணத்திற்கு சிங்கப்பூர் போன்ற க்ளயன்ட் இருக்கும் அணிகளை சொல்லலாம்.

எத்தனை வருடமாக இரவு நேர பணி செய்கிறீர்கள்? தொடர்ந்து எத்தனை வருடம் ஒருவரால் இரவு நேர வேலை செய்ய முடியும்?

நான்கைந்து ஆண்டுகள் இரவுப்பணியில் வெரைட்டி வெரைட்டி ஷிப்ட்களை செய்து உள்ளேன். தொடர் இரவுப்பணி செய்தால் கஷ்டம்தான். ஜிம் பாடி என்றால் இரண்டு ஆண்டு. பிஞ்சு பாடி என்றால் ஓராண்டு தாங்கும். அதன் பின் உடல்நிலை படிப்படியாக மோசமாகும். பிரஷர் இல்லாத டீமில் இரவுப்பணி என்றால் மேலும் ஓராண்டு மைலேஜ் தரும் நம்ம பாடி.

இரவு நேர பணியாளர்கள் பொதுவாய் என்ன விதமான வேலை செய்கிறார்கள்?

எனக்கு தெரிந்து வாய்ஸ் மற்றும் நான் வாய்ஸ் என இருவகை இரவுப்பணிகள் உண்டு. வாய்ஸ் ப்ராசஸ் செய்பவர்கள் பொதுவாக அமெரிக்க எசமான்/நுகர்வோர் கேட்கும் துறை சார்ந்த சந்தேகங்களை போனில் பேசியே தீர்த்து வைப்பார். இதில் இன்னொரு வகை கலக்சன் போஸ்டிங். அதாவது கம்பேனிக்கு காசு தராமல் இழுத்து அடிக்கும் வெளிநாட்டவரை போனில் தாஜா/எச்சரிக்கை செய்து பணம் வாங்குதல். நான் வாய்ஸ் துறையில் இருப்பவர்கள் தப்பு செய்தால் மெயிலில் மட்டுமே திட்டு வாங்குவர். வாய்ஸ் ப்ராசஸ் என்றால் போனிலேயே கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

இரவிலேயே வெவ்வேறு ஷிப்ட் உள்ளதா? என்ன அது?

இரவுப்பணியில் கூட நேர வித்யாசங்கள் உண்டு. இரவு 12, 4 மற்றும் காலை சூரியன் வரும் வரை கல் உடைக்கும் வண்ணம் வெவ்வேறு ஷிப்ட்கள் உண்டு. அதிகாலை கோழி கூவும் முன் துவங்கும் ஆஸ்திரேலிய ஷிப்ட், நள்ளிரவு நாய் ஊளையிடும்போது துவங்கும் கர்ண கொடூர ஷிப்ட், அனைத்திலும் மேலாக இரவு 10 அல்லது 11 மணிக்கு துவங்கி காலை 7வரை கதற கதற அடிக்கும் ஷிப்டும் உண்டு. இதற்கு க்ரேவ்யார்ட் ஷிப்ட் என்று பெயர் வைத்து உள்ளனர். அடியேன் இந்த ஷிப்டில் பல மாதங்கள் கல் உடைத்து உள்ளேன்.

சிலர் இங்கிலாந்து நேரம் என மதியம் 1 மணிக்கு சென்று விட்டு இரவு பன்னிரண்டு மணிக்கு வருகிறார்கள். இவர்கள் பாடு சற்று தேவலாம் என சொல்லலாமா?

நீங்கள் சொல்வது சரிதான். இதற்கு யு.கே ஷிப்ட் என்று பெயர். மதிய உணவு நேரத்திற்கு பின் தொடங்கி அதிகபட்சம் இரவு ஒரு மணிக்குள் முடிந்துவிடும். ஆறு மணி நேரம் நிம்மதியான உறக்கம். அதிகாலையில் அரக்க பரக்க எழுந்திரிக்க வேண்டாம் என்பதால் பலருக்கு பிடித்த ஷிப்ட் இதுதான். குறிப்பாக இந்த ஷிப்ட் துவங்கும் மற்றும் முடியும் நேரத்தில் ட்ராபிக் தொல்லை இல்லாமல் இருப்பது மற்றொரு ப்ளஸ்.

துவக்கத்தில் இரவு விழித்து பகலில் தூங்குவதில் என்ன சிரமம் (உடல் மற்றும் மன ரீதியாக) இருந்தது? அது எப்போது சரியானது அல்லது பழகி போனது?

நினைவு தெரிந்த நாள் முதல் இரவு ஒன்பது மணிக்கு முன் தூங்கி அதிகாலை ஐந்து மணிக்கு துயில் எழுந்த எனக்கு முதலில் முழு இரவுப்பணி (இரவு 11 முதல் காலை 7) கிடைத்தபோது சங்கடமாகத்தான் இருந்தது. பல ஆண்டுகள் விளையாட்டில் நித்தம் ஈடுபட்டவன் என்பதால் உடல் ரீதியாக பிரச்னை பெரிதாக இருந்ததில்லை. அதே சமயம் மனரீதியான பிரச்னை வீட்டில் இருந்தது. “சிவா நைட் ஷிப்ட் போயிட்டு வந்து தூங்கிட்டு இருக்கு போல?” என்று அம்மாவிடம் கேட்டுவிட்டு “நேத்து நாட்டார் கடைல உளுந்து வாங்கனேன். இன்னைக்கு அந்த சீரியல் என்னாச்சி?” என்று பக்கத்து வீட்டு ஆன்ட்டிகள் உரக்க பேசி தூக்கத்தை கெடுக்கும்போது அறைக்கதவை படாரென சாத்தி, கோபத்தில் கத்தி உள்ளேன் பலமுறை.

அம்மன் கோவில் லவுட் ஸ்பீக்கர், பக்கத்து வீட்டு டி..வி.சத்தம், நன்றாக தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில் காலிங் பெல் அடிக்கும் குரியர் ஆட்கள், சேல்ஸ்மேன்கள்...இம்சைக்கா பஞ்சம்..

இரவில் வேலைக்கு நடுவே ஓரிரு மணி நேரம் தூங்க அனுமதி உண்டா?


பெரும்பாலான ஆபீஸ்களில் தூங்க அனுமதி இல்லை. கேப்டீரியாவில் வேண்டுமெனில் சில நிமிடங்கள் குறட்டை விடலாம். வேலை செய்யும்போதே தூங்கி வழியும் ஆட்கள் பலர் உண்டு. அரை தூக்கத்தில் அண்ணன்கள் இருக்கும்போது மவுஸ், கீபோர்ட் போன்றவற்றை ஒளித்து வைத்து விடுவோம். அது தெரியாமல் அவர்கள் வெறும் டெஸ்க்கில் டைப் செய்தல், மாவு பிசைவது போல மவுஸ் இருந்த இடத்தை கையால் ஆட்டுதல் போன்றவற்றை செய்வதை கண்டால் சிரிப்பை அடக்க முடியாது.

பகல் நேரம் நன்றாய் தூங்க முடியுமா? பல்வேறு சத்தங்களும் வெளிச்சமும் இருக்குமே? பகலில் தூங்க தூக்க மாத்திரை உபயோகிப்போர் உள்ளனரா?

ப்ளாட் சிஸ்டம், பங்களாவில் தங்கும் அப்பர் மிடில் கிளாஸ் மற்றும் பணக்கார ஊழியர்கள் பெரும்பாலும் நிம்மதியாக தூங்கலாம். சாதாரண வீடுகளில் தங்கி இருப்போர் ட்ராபிக் சத்தம், வீட்டில் இருப்போர் நடமாட்டம், வெளிச்சம் போன்றவற்றை தாங்கி தூங்கி ஆக வேண்டும். இல்லாவிடில் மறுநாள் ஆபீசில் வேலை செய்ய முடியாத அளவிற்கு கண்ணை சொக்கும். தூக்க மாத்திரை உபயோகிப்போர் மிகவும் குறைவுதான்.

இரவு நேரம் பணி என்பதால், ஐந்து நாள் பகலில் தூங்குவோர் வார இறுதியில் எப்படி தூங்குவார்கள்?

சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும் அவ்வளவு லேசில் தூக்கம் வந்து விடாது. நள்ளிரவை தாண்டியே விழித்து பழக்கப்பட்ட பாடி ஒத்துழையாமை இயக்கத்தை வீக்கெண்டிலும் விடாமல் பின்பற்றும். இதை நான் டைப் செய்வது கூட சனி இரவு 11மணிக்கு பிறகுதான்.

உங்கள் அலுவலகத்தில் பெண்கள் இரவு நேர டியூட்டி செய்கிறார்களா? ஆண்களுக்கும் அவர்களுக்கும் உடல் அல்லது மன ரீதியாக இரவு நேர பணியில் வேறுபாடுகள் உண்டா?

நிறைய அலுவலகங்களில் பெண்கள் இரவுப்பணியை செய்ய ஆரம்பித்து ஆண்டுகள் சில ஆகின்றன. சோர்வின் காரணமாக மயக்கம் போட்டு விழும் பெண்களும் உண்டு.பெண்கள் இரவுப்பணி வேலைக்கு சேர்ந்த சில மாதங்களுக்கு பின் மிகவும் சோர்ந்து மேலதிகாரிகளிடம் வேறு ஷிப்ட் கேட்பதும், கைக்குழந்தையை பராமரிக்க நேரம் ஒதுக்க வேலையை ராஜினாமா செய்வதும் அடிக்கடி நடக்கும்.

இரவு நேர பணியில் stress-அதிகம் என்பதால், stress relief ஆக ஆண்-பெண் செக்ஸ் அலுவலகத்திலேயே மிக எளிதாக நடக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறதே. இது எந்த அளவுக்கு உண்மை?

மிக எளிதாக நடக்க வாய்ப்பே இல்லை. இது குறித்து எவருடனும் நேரடி விவாதம் செய்ய தயார். நிர்வாகத்திற்கு தெரியாமல் சில ஆர்வக் கோளாறுகள் சேட்டை செய்வது நிஜம்தான். நிறைய டீம்கள் வேலை செய்யும் ஒரு சில அலுவலகத்தின் சாக்கடை கழிவுகளை அகற்றுகையில் கிலோ கணக்கில் காண்டம்கள் இருந்தது செய்தியாகவே வந்துள்ளது. வாய்ப்பு கிடைத்தால் வாலிபால் ஆடாதவன் எந்த துறையில்தான் இல்லை? சாப்ட்வேர் துறை ஆட்களை மட்டும் அடிக்கடி குறிப்பிட்டு பேசுவது சரியென்று தோன்றவில்லை.

உங்களுக்கு தெரிந்த கணவன் - மனைவி - ஒருவர் இரவிலும் மற்றவர் பகலிலும் வேலை பார்க்கிறார்களா? குடும்பத்தை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்?

இரவு பகல் என வெவ்வேறு வேலை நேரத்தில் இருக்கும் கணவன் மனைவிக்கு பெரிதாக பிரச்னைகள் குறைவு. ஒரே ஷிப்டில் இருந்தால் மண்டை காய்ச்சல் அதிகம். சோர்வாக வீட்டுக்கு வந்த உடன் யார் சமைப்பது, இதர வேலைகளை செய்வது என்று.

திருமணத்தின் போது இரவு நேர வேலை என்பதால் மாப்பிள்ளை அல்லது பெண் வீட்டார் யோசிக்கிறார்களா? மணம் முடிக்க மறுக்கிறார்களா?

உண்மைதான். இரவுப்பணி செய்யும் நபர்களுக்கு கல்யாணம் செய்வது என்பது மன்மோகன் வாயில் இருக்கும் கொழுக்கட்டையை பிடுங்குவதை விட கடினமான செயல். கல்யாணம் நிச்சயம் ஆனதும் பெரும்பாலான பெண்கள் வேலையை ராஜினாமா செய்து விடுவார்கள். ஆண்கள் “கல்யாணம் நடக்குற ஒரு நாளைக்கு முன்னாடி இருந்து எனக்கு பகல் ஷிப்ட் ஆரம்பம் மாமா. உங்க திரிஷாவை எனக்கே தாங்க” என்று அல்வா கிண்டுவார்கள். தாலி கட்டிய மறுநாள் நைட் ஷிப்டுக்கு கிளம்புவார் புது மாப்ளே. இது ஜகஜம்தான் சார்.

இரவு நேர வேலையில் நல்லது எது? கெட்டது எது?

திருவிளையாடல் தருமி டைப் கேள்வி..ரைட்டு. நல்லது என்றால் நைட் ஷிப்டுக்கு கிடைக்கும் அதிக சம்பளம்தான் வேறொன்றும் இல்லை. கெட்டது என்றால் அதே சம்பளத்தை சில ஆண்டுகளில் டாக்டருக்கு மொய் வைக்கும் நிலை வருவதுதான். “ராத்திரி பூரா இத்தனை வருஷம் நாயா உழைச்சனே? அதுக்கு பிரமோஷன் இல்லையா எசமான்?” என்று அப்ரைசல் நேரத்தில் மேனேஜர் சட்டையை பிடித்து யூனியன் தலைவர்(உதாரணம்: ‘துலாபாரம்’ ஏ.வி.எம்.ராஜன், ‘பாசமலர்’ ஜெமினி ) ரேஞ்சுக்கு டயலாக் பேசினால் பருப்பு வேகாது.

இரவு நேர வேலை செய்வோர் வார இறுதி நாட்களை எப்படி கழிக்கிறார்கள்? நீங்கள் எப்படி கழிக்கிறீர்கள்?

இரவு நேரத்தில் வேலை செய்வோர் அதிகபட்சம் சனி அன்று மதியம் அல்லது மாலை வரை நன்றாக ஓய்வு எடுப்பர். நல்ல பிள்ளைகள் ஏதோ ஒரு கோர்சில் சேர்ந்து சனி, ஞாயிறு அன்றும் படித்து கொண்டே இருக்கும். சுமாரான வசதி உள்ளவர்கள் டாஸ்மாக் பாரில், டப்பு பார்ட்டிகள் பப்பில் (தற்காலிக) தோழிகளுடன் சனி இரவில் புரியாத பாஷையில் ஓடும் பாட்டுக்கு மொக்கையாக மூவ்மெண்ட் போட்டு ஆடுவர். நான் கெட்ட பயக்கம் இல்லாத பயபுள்ள என்பதால் அடிக்கடி தியேட்டரில் டென்ட் அடிப்பேன். சினிமா இஸ் மை passion.

சம்பளம் குறைவாக இருந்தாலும் இரவு வேலையை விட்டு விட்டு பகல் நேர வேலைக்கு வரவே பலரும் விரும்புவதாக சொல்கிறார்களே உண்மையா?

முற்றிலும் சரி. 

பல ஆண்டுகள் நைட் ஷிப்ட் மட்டுமே செய்து, தொப்பை விழாத அதிசய பிறவிகளும் உண்டு. அவர்கள் எல்லாம் பிரம்மனால் ஸ்பெஷலாக ஆர்டர் செய்து அனுப்பப்பட்ட ஆஜானுபாகுக்கள்.  இது மிக குறைந்த சதவீதமே

ஆரம்பத்தில் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு விட்டில் பூச்சிகளாக இரவுப்பணிக்கு வருவோர் கொஞ்ச காலம் கழித்து குறைவான சம்பளம் கிடைத்தால் போதும். இந்த 'பேய் பங்களா'வை விட்டு ஓடணும்டா சாமி என்றுதான் நினைப்பார்கள்.  இது தான் பெரும்பான்மையானவர்கள் நிலை !

*******

57 comments:

 1. இரவுப் பனி என்பது நிச்சயம் கடினமான ஒன்று. அதைப் பற்றிய கேள்விகளும் பதிலும் சிறப்பாக இருந்தது.

  இது மாதிரியான புதிய முயற்சிகளை வீடு திரும்பல்-ன் தொடர் வாசகர்கள் சார்பாக வரவேற்று பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 2. அடுத்தபேட்டிக்காக வெயிட்டிங்

  ReplyDelete
 3. தினமலர் நாளிதழில் ஆறு மாதங்கள் வெறும் நைட் ஷிப்ட் மட்டுமே பணியாற்றியிருக்கிறேன். மாலை 6 மணி தொடங்கி, விடிகாலை 2 மணி வரை வேலை இருக்கும். 2 மணிக்கு மேல் போக்குவரத்து வசதி இருக்காது என்பதால், அலுவலகத்திலேயே தூங்க முயற்சிப்பேன். மெஷின் ஓடும் சத்தத்தில் தூக்கம் வராது. அதிகாலை 4 மணிக்கு ஏர்போர்ட் செல்லும் வேனில் ஏறி பரங்கிமலையில் இறங்கி சைக்கிளில் வீட்டுக்கு செல்வேன். யோசித்துப் பார்த்தால் அந்த காலம் சுவாரஸ்யமானதாகவே இருந்திருக்கிறது.

  நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவர்கள் நிஜமாகவே வெள்ளைக்கார கலருக்கு கிட்டத்தட்ட வந்துவிடுவார்கள். உடல் எனக்கு மிகக்கடுமையாக மெலிந்தது. அதற்குப் பிறகு சதை போடும் வாய்ப்பே ஏற்படவில்லை :-)

  ReplyDelete
 4. தினமலர் நாளிதழில் ஆறு மாதங்கள் வெறும் நைட் ஷிப்ட் மட்டுமே பணியாற்றியிருக்கிறேன். மாலை 6 மணி தொடங்கி, விடிகாலை 2 மணி வரை வேலை இருக்கும். 2 மணிக்கு மேல் போக்குவரத்து வசதி இருக்காது என்பதால், அலுவலகத்திலேயே தூங்க முயற்சிப்பேன். மெஷின் ஓடும் சத்தத்தில் தூக்கம் வராது. அதிகாலை 4 மணிக்கு ஏர்போர்ட் செல்லும் வேனில் ஏறி பரங்கிமலையில் இறங்கி சைக்கிளில் வீட்டுக்கு செல்வேன். யோசித்துப் பார்த்தால் அந்த காலம் சுவாரஸ்யமானதாகவே இருந்திருக்கிறது.

  நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவர்கள் நிஜமாகவே வெள்ளைக்கார கலருக்கு கிட்டத்தட்ட வந்துவிடுவார்கள். உடல் எனக்கு மிகக்கடுமையாக மெலிந்தது. அதற்குப் பிறகு சதை போடும் வாய்ப்பே ஏற்படவில்லை :-)

  ReplyDelete
 5. ரொம்ப சுவராசியமா இருந்தது. நைட் ஷிஃப்ட்காரக்ள் வீட்டில் உள்ளவர்கள், நண்பர்களோடு இணைந்து இயங்குவது கடினம்.

  ReplyDelete
 6. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ரொம்ப சுவராசியமா இருந்தது. நைட் ஷிஃப்ட்காரக்ள் வீட்டில் உள்ளவர்கள், நண்பர்களோடு இணைந்து இயங்குவது கடினம்.///

  ஆமாம்யா! போனு போட்டாக் கூட பேச முடிவதில்லை.. என்னை மாதிரி மாடு மேய்க்கிரவங்க நெலமை கூட தேவலாம் போல!

  ReplyDelete
 7. நைட் ஷிப்டில் வேலை செய்யுறவங்க துரதிர்ஷ்டசாலிகள்னு தான் சொல்லணும். எல்லோரும் முழிச்சிகிட்டு இருக்கும் போதும் இவங்க தூங்கனும், இவங்க விழிக்கும்போது எல்லோரும் தூங்கிடுவாங்க, மேலும் இவங்களும் வேலையில் மூழ்கிடுவாங்க. உலகத்தோட இவங்க கனெக்ஷன் டோட்டலி கட். புருஷன், பெண்டாட்டி வேற வேற ஷிப்டுன்ன அது இன்னமும் பரிதாபம். என்ன பண்றது வயிறுன்னு ஒன்னு இருக்கே. ஆனாலும், ரியல் எஸ்டேட் ரேட் ஏத்தி விட்டது, வீட்டு வாடகைகளை தாறுமாறா ஏத்தி விட்டது, காய்கறிகளை என்ன விலை சொன்னாலும் காசை தூக்கிஎரிஞ்சிட்டு வாங்கிகிட்டு போவது போன்ற விஷயங்களில் இவர்கள் நடுத்தர மக்களின் வாழ்வில் மண்ணை அள்ளி போட்டவர்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது சினிமா நடிகனுக்கு வேண்டுமானால் ஒத்து வரலாம், அதை நம் பக்கத்து வீட்டில் கூட பார்ப்போம் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. இதையெல்லாம் பார்த்து இவர்கள் மேல் அனுதாபம் வர மறுக்கிறது.

  ReplyDelete
 8. பரிதாபம் வருகிறது.

  தெரிந்த குடும்பத்தில், திருமணமான கணவன் தொடர்ந்து இரவு ஷிஃப்டில் இருக்க, பெண்வீட்டார் ‘வேலையை விடுகிறாயா, அல்லது பெண்ணை அழைத்துக் கொண்டு போகட்டுமா?’ என்று கேட்கும் நிலை ஆக, வேலையை விட்டுவிட்டு, இப்போது (மனைவியுடன்) வெளிநாட்டில் இருக்கிறார்.

  ReplyDelete
 9. ஆனாலும், ரியல் எஸ்டேட் ரேட் ஏத்தி விட்டது, வீட்டு வாடகைகளை தாறுமாறா ஏத்தி விட்டது, காய்கறிகளை என்ன விலை சொன்னாலும் காசை தூக்கிஎரிஞ்சிட்டு வாங்கிகிட்டு போவது போன்ற விஷயங்களில் இவர்கள் நடுத்தர மக்களின் வாழ்வில் மண்ணை அள்ளி போட்டவர்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது சினிமா நடிகனுக்கு வேண்டுமானால் ஒத்து வரலாம், அதை நம் பக்கத்து வீட்டில் கூட பார்ப்போம் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. //

  எவனாவது அதிக விலைக்குத்தான் நிலம், வீடு வாங்குவேன்னு அடம் பிடிப்பானா? அதிக விலைக்கு விக்கிறவனை விட்டுட்டு வாங்கறவனை குறை சொல்லிக்கிட்டு இருக்கீங்க. இவன் கடன் வாங்கி வாங்கலைனா இன்னொரு பணக்காரனோ, NRI வாங்கிட்டுப் போகப் போறான்.

  பிரச்சனை என்னவென்றால் நம் நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு (at least 50%) குறைந்தபட்ச நேர்மை கிடையாது. இப்படிப்பட்ட நாட்டில் இதுதான் நடக்கும்.

  ReplyDelete
 10. \\எவனாவது அதிக விலைக்குத்தான் நிலம், வீடு வாங்குவேன்னு அடம் பிடிப்பானா? அதிக விலைக்கு விக்கிறவனை விட்டுட்டு வாங்கறவனை குறை சொல்லிக்கிட்டு இருக்கீங்க. இவன் கடன் வாங்கி வாங்கலைனா இன்னொரு பணக்காரனோ, NRI வாங்கிட்டுப் போகப் போறான். \\ பணக்காரர்களும், NRI -களும் 1998 -ம் ஆண்டுக்கு முன்னர் கூட எல்லா காலகட்டத்திலும் இருந்தே வந்திருக்கிறார்கள். அப்போது ஏன் அவர்கள் வாங்கவில்லை? இந்த IT வேலை என்று வந்த பின்னர் மட்டும் ஏன் இப்படி விலை ஏறியது? அமெரிக்க வங்கிகள் இரண்டு திவாலான பின்னர், IT துறையினர் பலர் வேலையிழக்க ஆரம்பித்த போது நிலங்கள் விலை 35% வீழ்ச்சியானது எப்படி? பெங்களூருவில் IT துறையைச் சேர்ந்த 35000 ஜோடிகள் திருமணமே செய்யாமல் ஒன்றாக வாழ்கிறார்களாம் என்று செய்த தாள்களில் வருகிறது, இது நல்லதுக்குத் தானா?

  ReplyDelete
 11. me too was in UK shift. Best shift

  ReplyDelete
 12. நல்லதொரு அலசல்.. நைட் ஷிப்டினால் தூக்கத்தின் முறை கெட்டுப்போறது மட்டுமல்லாமல்,சாப்பிடும் நேரமும் மாறுபடறதால டயபடீஸ், பிபி வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கு.

  ReplyDelete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. மோகன் குமார் said...
  தாஸ். said .//ரியல் எஸ்டேட் ரேட் ஏத்தி விட்டது, வீட்டு வாடகைகளை தாறுமாறா ஏத்தி விட்டது, காய்கறிகளை என்ன விலை சொன்னாலும் காசை தூக்கிஎரிஞ்சிட்டு வாங்கிகிட்டு போவது போன்ற விஷயங்களில் இவர்கள் நடுத்தர மக்களின் வாழ்வில் மண்ணை அள்ளி போட்டவர்கள்//

  தாஸ். பீ. பி. ஓ வில் பணிபுரியும் இவர்கள் ஐ. டி மக்கள் போல் இல்லை. சாப்ட் வேர் துறை அளவு சம்பளம் இவர்களுக்கு கிடையாது. ஆனால் இரவில் பணியாற்றவேண்டும். இவர்கள் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்கள் என்பது தான் என் எண்ணம். தாங்கள் சம்பாதிக்கிறோம்; அதை என்ஜாய் செய்ய கூட முடியலை; நம் குடும்பமாவது என்ஜாய் செய்யட்டும் என்பது தான் இவர்களில் சிலர் எண்ணமாய் உள்ளது. விலை ஏற்றத்துக்கு இவர்கள் காரணம் இல்லை. இவர்கள் அனைவரும் கீழ் நடுத்தர வர்க்கத்தை ( Lower Middle Class ) சேர்ந்தவர்களே !

  ஒழுக்கம்/ "ஒன்றாய் சேர்ந்து வாழ்வது" பற்றியெல்லாம் நான் அறியேன்

  ReplyDelete
 15. நல்ல அலசல்
  கேள்விகளும் அதற்கான பதில்களும்
  யதார்த்தமாகவும் ஒளிவு மறைவின்றி இருந்தது
  இது நல்ல முயற்சி
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. நானெல்லாம் ஓய்வே இல்லாமல் நைட் பகல் என தொடர்ந்து ஏழு நாட்கள் வேலை செய்திருக்கிறேன்...தினமும் ஒரு மணி நேரம் மட்டும் தூங்கி...!இப்ப பகல்லியே வேலைய முடித்துவிடுகிறோம்.

  ReplyDelete
 17. Anonymous8:09:00 PM

  அன்புள்ள மோகன் குமார்,

  கால்சென்டர் தொடர்பான சுஜாதாவின் 'சென்னையில் மேன் ஹாட்டன் ' (மீண்டும் தூண்டில் கதைகள்) படித்திருக்கிறீர்களா ?

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. மிக அருமையான அலசல்! மிக நல்ல பதிவு! நன்றி!

  ReplyDelete
 20. Anonymous8:44:00 PM

  நல்ல கரு...நல்ல பேட்டி...பதிவுக்கு பதிவு வித்தியாசம்....BURNOUT ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் மோகன்..

  ReplyDelete
 21. மிக சிறப்பான பேட்டி!இரவு நேர BPO பணியின் கஷ்ட நஷ்டங்களைச் சிறப்பாகச் சொல்லி விட்டார் சிவா.
  நன்று

  ReplyDelete
 22. good one :) mohan erkanave nan call center pathi viriva eluthi iruken

  ReplyDelete
 23. என்றைக்காவது பகலில் தூங்கமுடியாவிடில், நரகம் என்பது என்னவென்று அன்றைய நைட் ஷிப்டில் தெரியும் மோகன்..சில விஷயங்களை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. பொதுவெளியில் வீண் விவாதம் வேண்டாம் என நினைக்கிறேன்.

  ஒவ்வொரு பதிவுக்கும் டாபிக் செம்மையா புடிக்கறீங்க :)

  ReplyDelete
 24. அருமை.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
 25. அமைதி அப்பா: நீங்களும் அவ்வப்போது இரவு பணி செய்பவர் ஆயிற்றே அதன் கஷ்டம் உங்களுக்கு தெரியும்

  ReplyDelete
 26. சாதிகா: நன்றி பேட்டி முடிந்தது இனி தான் எழுதணும்

  ReplyDelete
 27. யுவகிருஷ்ணா: தங்கள் இரவு பணி அனுபவம் பகிர்ந்தமைக்கு மிக மிக நன்றி

  ReplyDelete
 28. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நைட் ஷிஃப்ட்காரக்ள் வீட்டில் உள்ளவர்கள், நண்பர்களோடு இணைந்து இயங்குவது கடினம்.

  அந்த அளவு சொல்லமுடியுமா என தெரியலை. இந்த பேட்டி தந்த சிவா நண்பர்களோடு மிக இயல்பாய் பழகுகிறார்

  ReplyDelete
 29. வெளங்காதவன்™ said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஆமாம்யா! போனு போட்டாக் கூட பேச முடிவதில்லை.

  **********

  உண்மை தான் நண்பரே

  ReplyDelete
 30. ஹுசைனம்மா: நன்றி

  ReplyDelete
 31. ஜகன்னாத்: தங்கள் கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 32. பூர்ணிமா: நன்றி இந்த பதிவு புது மக்களை இந்த பக்கம் எட்டி பார்க்க வைக்கிறது

  ReplyDelete
 33. அமைதிச்சாரல் said...
  . நைட் ஷிப்டினால் தூக்கத்தின் முறை கெட்டுப்போறது மட்டுமல்லாமல்,சாப்பிடும் நேரமும் மாறுபடறதால டயபடீஸ், பிபி வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கு.

  **********

  மிக சரி முழு உண்மை

  ReplyDelete
 34. ரமணி சார்: மிக நன்றி மகிழ்ச்சி

  ReplyDelete
 35. வீடு சுரேஸ்குமார் said...
  நானெல்லாம் ஓய்வே இல்லாமல் நைட் பகல் என தொடர்ந்து ஏழு நாட்கள் வேலை செய்திருக்கிறேன்...தினமும் ஒரு மணி நேரம் மட்டும் தூங்கி.

  ***

  சுரேஷ் : அடேங்கப்பா !! பயங்கரம் !!

  ReplyDelete
 36. balhanuman said...

  கால்சென்டர் தொடர்பான சுஜாதாவின் 'சென்னையில் மேன் ஹாட்டன் ' (மீண்டும் தூண்டில் கதைகள்) படித்திருக்கிறீர்களா ?
  *********

  தூண்டில் கதைகள் படித்துள்ளேன். இந்த கதை நினைவில்லை புத்தகம் உள்ளது எடுத்து பார்க்கிறேன்

  ReplyDelete
 37. நன்றி சுரேஷ்

  ReplyDelete
 38. ரெவெரி said...
  பதிவுக்கு பதிவு வித்தியாசம்....BURNOUT ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் மோகன்..

  ***

  தங்கள் அக்கறைக்கு மிக நன்றி ரெவரி சார். பொதுவாய் முப்பது பதிவு drafts-ல் இருக்கும். டில்லி- குழு மணாலி சென்று வந்த பின் அது எழுபதை தாண்டி விட்டது. அதில் ஏதாவது ஒன்றை எடுத்து வெளியிடுகிறேன். எழுதுவது சிரமமாய் இல்லை. ஆனால் டில்லி பயண கட்டுரை முழுதும் முடிந்த பின் தினம் பதிவு எழுதுவது கடினமே என உணர்கிறேன் நன்றி

  ReplyDelete
 39. சென்னை பித்தன் said...
  மிக சிறப்பான பேட்டி!இரவு நேர BPO பணியின் கஷ்ட நஷ்டங்களைச் சிறப்பாகச் சொல்லி விட்டார் சிவா.

  **

  ஆம் சார். பதில்களை படித்ததும் உடனே சிவாவை மெயிலில் மனம் திறந்து பாராட்டினேன்

  ReplyDelete
 40. LK : அப்படியா? படிக்கிறேன் நன்றி

  ReplyDelete
 41. ரகு: உங்களை எது உஷ்ணபடுதுகிறது என புரிகிறது கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 42. ரத்னவேல் ஐயா: மிக நன்றி

  ReplyDelete
 43. நன்றி வெங்கட்.

  ReplyDelete
 44. This comment has been removed by the author.

  ReplyDelete
 45. மிகவும் அருமையான பதிவு. என் தந்தை குறிப்பிட்ட பணி நேரம் என்று இல்லாமல் எந்நேரமும் பணி செய்து கிடக்கும் காவல் துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். என்றாவது அதிசயமாய் வீட்டில் இருக்கும் போது தூக்கம் வராமல் எதையாவது படித்து கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துகொண்டோ அல்லது ரொம்பவும் போர் அடித்தால் எங்களையும் எழுப்பி தொந்தரவு செய்து கொண்டோ இருப்பார். ஒருமுறை நள்ளிரவுக்கு பிறகு என் அம்மாவை எழுப்பி ஒரு தூரத்து உறவினரைக் குறிப்பிட்டு அவர் பெயர் என்ன என்று கேட்டார். என் அம்மாவிற்கு வந்ததே கோபம்!!! இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது :)

  சுபாஷிணி

  ReplyDelete
 46. வித்தியாசமான பதிவு மழை பொழிகிறீர்கள். சிலர் இரவுப் பணியை விரும்பிகின்றனர்.(அவர்கள் பணியின் பொது தூங்குவதற்கு வாய்ப்பு உள்ளவர்கள் போலும்)

  ReplyDelete
 47. @mohan

  http://bhageerathi.in/?tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D

  ReplyDelete
 48. சுபாஷினி : உங்கள் தந்தை குறித்து சொன்ன கருத்துகள் மிக சுவாரஸ்யமாய் இருந்தது மிக நன்றி

  ReplyDelete
 49. நன்றி முரளி தங்கள் அன்பு வார்த்தைகளுக்கு

  ReplyDelete
 50. எல். கே :வாசித்தேன். நிறையவே எழுதி உள்ளீர்கள் புத்தகமாகவே வெளியிடலாம் நண்பரே !

  ReplyDelete
 51. பாவமுங்க நைட்ஷிஃப்ட் வேலை பார்க்குறவுங்க.. கொஞ்சம் பணத்துக்காக எவ்ளோ கஷ்டப்படுறாங்க. அவங்ககிட்ட போய் இந்தகேள்வி அவசியமா?(இரவு நேர பணியில் stress-அதிகம் என்பதால், stress relief ஆக ஆண்-பெண் செக்ஸ் அலுவலகத்திலேயே மிக எளிதாக நடக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறதே. இது எந்த அளவுக்கு உண்மை?)
  எங்கேதான் தப்பு நடக்கவில்லை,,கணவன வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டுபெண்மணிகள் ஒருசிலர் தப்பு பண்ணுகிறார்களே.. என்ன sress அவர்களுக்கு?

  ReplyDelete
 52. உமா said
  //எங்கேதான் தப்பு நடக்கவில்லை,,கணவன வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டுபெண்மணிகள் ஒருசிலர் தப்பு பண்ணுகிறார்களே.. என்ன sress அவர்களுக்கு?//

  செம கேள்விங்க !

  நான் அந்த கேள்வி கேட்ட காரணம் பலரிடம் இருக்கும் அந்த எண்ணம் தவறு என மற்றவர்கள் உணரத்தான். நானும் கூட தற்போது ஒரு BPO நிறுவனத்தில் தான் பணி புரிகிறேன். ஆனால் பகல் நேர வேலை. இங்கு சேரும் முன் பலரும் நான் எழுதிய காரணத்தை சொல்லி " இது போன்ற BPOவிலா வேலைக்கு சேர்கிறாய்" என்றனர். ஆனால் சேர்ந்த பிறகு தான் அப்படி மக்கள் சொன்னது எத்தனை தவறு என்று புரிந்தது. இங்கு அனைத்தும் CCTV காமிராவில் பதிவாவதால் இத்தகைய சம்பவங்கள் நடப்பது மிக குறைவு

  ReplyDelete
 53. thevayana pathivu

  ReplyDelete
 54. நான் 11 மணி டூ 9 மணி வரை பார்த்து இருக்கிறேன்.. ஒரு 8 மாசம் பார்த்தேன்..
  அப்புறம் முடியல வேலைய விட்டுட்டேன்.. ஏன்னா வேலைக்கு சேர்ந்த புதுசுல கிட்ட தட்ட 1 வாரம் தூங்காம நல்லா வேலை பார்த்தேன்.

  அப்புறம் 11.30 ஆனா லைட்டா தூக்கம் வரும்.. போக போக 11.30 க்கு லாம் தூக்கம் தலை விரித்து ஆடிச்சி..

  ஷிப்டே 11 மணிக்கு ஆரம்பிக்கும்...
  நான் 11.30 லாம் தூங்கிடுவேன்..
  நைட் ஷிப்ட் சூப்பர்வைசரும் நானும் ஒன்னா தான் தூங்குவோம் இதுநால இந்த விசயம் யாருக்கும் தெரியாது..
  2 மணிக்கு சாப்பாடு வரும் 3 இட்லி சாப்பிட்டு வேல பார்க்க போயிடுவோம்... நல்ல ஐாப் பட் பாடி ஒத்துக்கல....

  ReplyDelete
 55. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
  https://plus.google.com/u/0/communities/110989462720435185590

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...