Tuesday, March 21, 2017

சென்னை 1 முதல் 130 வரை-பள்ளிக்கரணை - ஒரு பார்வை

ண்மை காலமாக ஓட்டம், நடை இவற்றோடு  - சைக்கிளிங்கும் சேர்ந்து கொண்டது. 20-25 கிலோ மீட்டர் செல்வதால் - வெவ்வேறு ஏரியாக்கள் செல்ல முடிகிறது.

சைக்கிளிங் செல்லும்போது - சென்னையின் ஏரியாக்கள் பற்றி தெரிந்து கொண்டு எழுதினால் என்ன என தோன்றியது. அதன் விளைவே - இத்தொடர்.

சென்னையில் - 600001 (பாரிஸ் கார்னர்) துவங்கி 600 130 ( நாவலூர்) வரை குறைந்தது 130 ஏரியாக்கள் உள்ளன  !  இவை அனைத்தையும் பார்க்க/எழுத முடியுமா என தெரியவில்லை. முடிந்த வரை செய்கிறேன்.

ஒவ்வொரு ஏரியாவிற்கும் 3 அல்லது 4  முறை வெவ்வேறு நாள் சென்று கவனித்து எழுத எண்ணம். மேலும் அங்கு இருக்கும் நண்பர்கள்/ சாதாரண மக்கள் இவர்களிடமும் பேசி விட்டு எழுத உத்தேசம். அடுத்தடுத்த பதிவுகள் என்ன இடைவெளியில் வரும் என தற்போது சொல்ல இயல வில்லை;

பள்ளிக்கரணை நான் வசிக்கும் ஏரியாவிற்கு 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பல முறை நடந்தே இங்கு சென்றிருக்கிறேன். அப்போதே பல விஷயங்கள் கவனித்ததுண்டு. பதிவு எழுத முடிவானதும் சைக்கிளில் சில விசிட்கள்...பள்ளிக்கரணை பற்றி -இங்கு வசிக்கும் சார்ட்டர்டு அக்கவுண்டண்ட் விக்னேஷ் மற்றும் ஓட்ட பந்தயம் மூலம் நண்பரான பூபாளன் ஆகியோர் நிறைய தகவல்கள் கூறினர். அவர்களுக்கு அன்பும், நன்றியும் !

2000 ...... ஐ. டி துறை வளர்ச்சிக்கு பின் பெரிதாக வளர்ந்த இடங்களில் ஒன்று பள்ளிக்கரணை. இதற்கு ஐ. டி துறை வளர்ச்சி மட்டுமே காரணம் அல்ல. இன்னும் பல காரணங்கள் உண்டு !

எதனால் பள்ளிக்கரணையை மக்கள்விரும்புகிறார்கள்

OMR  சாலை மற்றும் வேளச்சேரிக்கு மிக அருகில் உள்ளது தான் மிக முக்கிய காரணம்.

5-6கி.மீ தூரத்தில் உள்ள சோளிங்கநல்லூர் 10-15 நிமிடத்தில்  எளிதில் அடையலாம். OMR  சாலையில் பணிபுரியும் பலர் இதனால் இந்த இடத்தை தேர்வு செயகிறார்கள்.

வேளச்சேரி ரயில் நிலையம் 5 கி.மீ தூரத்தில் இருப்பதால், ரயில் என்றால் வேளச்சேரியை தான் பலரும் விரும்புகிறார்கள்

பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் ரேடியல்  சாலை வந்த பின் பள்ளிக்கரணை வளர்ச்சி வேகமெடுத்தது

Plot  மற்றும் Flat விலை.வாடகை நிலவரம்

மெயின் ரோட்டிலிருந்து 100 -200 மீட்டர் தூரத்தில்  உள்ள இடம் எனில் ஒரு கிரவுண்ட் ஒரு கோடியை தொட்டு விட்டது. ஐந்தாறு வருடங்களில் திடீரென விலை ஏறியது; கடந்த ஒரு வருடமாக ரியல் எஸ்டேட் தேக்கத்தால் விலை ஏறவில்லை.

அப்பார்ட்மெண்ட் என்றால் - வசதிகளை பொறுத்து sq feet 4500 துவங்கி 6000 வரை போகிறது

வாடகை டபிள் பெட் ரூம் 10,000 முதல் 12000 வரை போகிறது; மூன்று பெட் ரூம் வீடுகள் 13000 முதல் 15000 வரை செல்கிறது. 10,000 முதல் 12000 ரேஞ்சில் உள்ள வீடுகள் விரைவாக வாடகைக்கு சென்று விடுகின்றன; 15000 ரேஞ்சில் உள்ளவை சற்று தாமதமாய் தான் செல்கிறது

ரிலையன்ஸ் ட்ரெண்ட் பின்புறம் உள்ள நகர்களில் சில பிரம்மாண்ட - மாளிகை போன்ற தனி வீடுகளும் இருக்கின்றன !!

நிலத்தடி நீர் மற்றும் ட்ரைநேஜ்

தண்ணீர் இந்த ஏரியாவில் நன்றாக இருப்பதாகவே சொல்கிறார்கள். மார்ஷ் லேண்ட் என்பதால் போர்வெல் வாட்டர் நன்கு கிடைக்கிறது; ஆனால் சில இடங்களில் அதன் குவாலிட்டி குறைவாக உள்ளதால் வெளியிலிருந்து தண்ணீர் வாங்குவதும் நடக்கிறது

ட்ரைநேஜ் வசதி இன்னும் வர ஆரம்பிக்க வில்லை;தற்சமயம் தனியார் நிறுவனங்களின் வண்டிகள் தான் கழிவு நீர் எடுக்க ஓடுகின்றன.

2015 வெள்ளத்தில் பள்ளிக்கரணையில் பாதி ஏரியாக்கள் பாதிப்பில்லை;மீதம் பாதி இடங்கள் நிறைய பாதிப்பிற்குள்ளாகின.

மருத்துவமனை, பள்ளிகள் மற்றும் ஹோட்டல்கள்

காமாட்சி மெமோரியல் ஹாஸ்ப்பிட்டல் பள்ளிக்கரணையிலேயே உள்ளது;மற்றும் குளோபல் ஆஸ்ப்பிட்டல் சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது;  இவை இரண்டும் பெரிய மருத்துவ மனைகள்

சான் அகாடெமி மற்றும் ஸெயிண்ட் ஜான்ஸ் பள்ளிகள் பள்ளிக்கரணைக்கு அருகில் உள்ள பள்ளிகள்.

ஜெருசலம் இன்ஜினயிரிங் கல்லூரி, பாலாஜி பல் மருத்துவ மனை, ஆசன் கலை கல்லூரி  ஆகியவை இங்குள்ள முக்கிய கல்லூரிகள்.

காமாட்சி மருத்துமவமனை அருகே உள்ளது   National Institute of Ocean Technology (NIOT).  கடல் வாழ் உயிரினங்களை  குறித்த ஆராய்ச்சி மற்றும் அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை NIOT செயகிறது

பள்ளிக்கரணையில்  ஹோட்டல்கள் பெரிய அளவில் இல்லை; பள்ளிக்கரணை - மேடவாக்கம் சாலை மிக குறுகலாக இருப்பதால் A2B, Hot Chips போன்ற   ஹோட்டல்கள் அதிகம் வரவில்லை என நண்பரொருவர் கூறினார்.

காமாட்சி ஆஸ்பத்திரியில் இருந்து பல்லாவரம் போகும் சாலையில் தற்போது A2B வந்துள்ளது;விரைவில் சரவணாஸ் என்கிற ஓரளவு டீசண்ட் வெஜ் ஹோட்டலும் திறக்க உள்ளனர்

ஹோட்டல்கள் மற்றும் பிற பர்சேஸ்சுக்கு வேளச்சேரி மற்றும் மேடவாக்கம் விருப்ப தேர்வாக இருக்கிறது.

பூங்காக்கள் ..மைதானங்கள் 

பள்ளிக்கரணை - வேளச்சேரி மெயின் ரோடில் இருக்கிறது மிக பெரிய அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ்.இதன் வெளியே மூலிகை பூங்கா என்ற போர்ட் நம்மை வரவேற்கிறது.உள்ளே எட்டி பார்த்தால் கொஞ்சம் செடி, கொடிகள், பூக்கள் இவை தான் கண்ணுக்கு தெரிந்தன. அருகில் இருக்கும் அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேனிடம் கேட்டால் " பார்க்-கிற்கு பேர் அப்படி வச்சிருக்காங்க;அவ்ளோ தான். மத்தபடி அங்கே துளசி தவிர வேற பெருசா மூலிகை இருக்குற மாதிரி தெரியலை என்றார்.

மூலிகை பூங்கா உள்ளே 

 இந்த மூலிகை பூங்கா தாண்டி 200 மீட்டரில் பள்ளிக்கரணை தாமரை குளம் வந்து விடுகிறது; மிக தொன்மையான இந்த குளம் பள்ளிக்கரணைக்கு ஒரு முக்கிய identity ஆகும் !

பள்ளிக்கரணையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான தாமரைக் குளம் 

குளத்தின் அருகே இன்னொரு பெரிய பார்க்.  200 மீட்டர் தொலைவில் அடுத்தடுத்து இரு பூங்காக்கள் !

தாமரை குளத்தை சுற்றி நடக்க வசதி செய்துள்ளனர். காலை நேரம் பலரும் குளத்தை சுற்றி ஒரு ரவுண்ட்.. பின் பார்க் உள்ளே நுழைந்து இன்னொரு ரவுண்ட் நடப்பதை காண முடிகிறது;

தாமரை குளத்தை சுற்றி நடக்கும் மக்கள் 

இப்படி நடந்தால் அரை முதல் முக்கால் கிலோ மீட்டர் தூரம் ஒரு ரவுண்டிலேயே வந்து விடும் !

அலுவலகங்கள்

காமாட்சி மருத்துவமனை எதிரில் இயங்கி வந்த காக்னிசன்ட் டெக்நாலஜிஸ் - பள்ளிக்கரணையில் இருந்த பெரிய நிறுவனம் ! தற்போது காக்னிசன்ட் இந்த இடத்தை காலி செய்து விட்டு சொந்த இடமான சிறுசேரிக்கு சென்று விட்டனர். விரைவில் சதர்  லேண்ட் பீபிஓ நிறுவனம் இதே கட்டிடத்தில் வரவுள்ளது என்கிறார்கள்.

ஜாஸ்மின் இன்போடெக் எனும் ஐ. டி நிறுவனமும், செலிபிரிட்டி பேஷன் எனும் தயாரிப்பு நிறுவனமும் இதர (ஓரளவு ) பெரிய நிறுவனங்கள். காமாக்ஷி ஆஸ்ப்பிட்டலில் இருந்து கூப்பிடு தொலைவில் இருக்கும் அப்பாசாமி அப்பார்ட்மெண்ட் எதிரே உள்ள தெருவில் சில சிறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

குப்பை பிரச்சனை

ஒரு காலத்தில் பள்ளிக்கரணையில் குப்பைகள் பெரிய மலை போல் கொட்டப்பட்டு எப்போதும் எரிக்கப்படும். காமாட்சி மருத்துவமனையில் இருந்து 100-200 மீட்டர் தொலைவில் இந்த மெகா குப்பை எரிப்பு நடக்கும். உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இதற்கு ஒரு முடிவு கட்டினர். இது மக்களுக்கு ஒரு பெரிய relief.

சுற்று வட்டம் 

வேளச்சேரி , மடிப்பாக்கம், மேடவாக்கம் - கோவிலம்பாக்கம்,பெரும்பாக்கம் ,  பெருங்குடி.. இவை பள்ளிக்கரணையை சுற்றியுள்ள இடங்கள்

குறுந்தகவல்கள்

ஒவ்வொரு ஏரியாவிலும் சில வித்தியாச தெரு பெயர் இருக்கும். இங்கு நான் கண்ட வித்தியாச தெரு..கிணற்று தெரு !பள்ளிக்கரணை 2011ல்  சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது; இது ஒரு நல்ல அட்வான்டேஜ் !

வழக்கமாக முக்கிய ஏரியாவில் அல்லது மெயின் ரோட்டுக்கு அருகில் வசதியானவர்கள் இருப்பார்கள். இங்கு மெயின் ரோட்டுக்கு அருகில் - இந்த ஏரியாவின் பூர்விக மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். காமாட்சி ஆஸ்பத்திரியில் இருந்து தாமரை குளத்துக்கு செல்லும் வழியில் உள்ள இதே சாலையில் தான் அப்பாசாமி அப்பார்ட்மெண்ட், நாட் வெஸ்ட் விஜய் போன்ற மிக பெரும் அப்பார்ட்மெண்ட்கள் இருக்கின்றன. இன்னொரு பக்கம் மிக சாதாரணமான வீடுகள்  .....ஒவ்வொரு தெருவின் துவக்கத்திலேயே உள்ளன. புதிதாக இடம் வாங்கியோர் நகரின் உள்ளே தான் வாங்கியுள்ளனர்

பள்ளிக்கரணையின் ஒரு பக்கம்  முழுதும் மார்ஷ் லேண்ட் இருக்கிறது. இதனால் தண்ணீர் மட்டம் எப்போதும் இங்கு நன்கு இருக்கும் என்றாலும் தனியார் லாரிகள் தண்ணீரை உறிஞ்சுவதும் மிக அதிகம் தொடர்கிறது; இது நிலத்தடி நீரை குறைப்பதுடன் சாலைகளையும் டேமேஜ் செயகிறது

மார்ஷ் லேண்ட் அருகே 

பாலாஜி பல் மருத்துவ கல்லூரிக்கு எதிர்புறம் உள்ள சாலைகள் அனைத்தும் சதுப்பு நில பகுதியில் சென்றே முடிகின்றன.

மார்ஷ் லேண்ட் பக்கம் உள்ள ஏரியா 

வெள்ளம் வந்த நேரம் இந்த மார்ஷ் லேண்ட் அருகே உள்ள வீடுகளில் தண்ணீர் அதிகம் புகுந்தது.

 மார்ஷ் லேண்ட் பக்கம் இன்னமும் ஏராள காலியிடங்கள் இருப்பதை காண முடிகிறது !
காலியான மனைகள் 
 

சாய் கணேஷ் நகர்...32 தெருக்களை (தெரு எண் 1,2,3 என)கொண்டிருக்கிறது. நகரின் பெயருக்கேற்ப சாய் கோயில் ஒன்றும் இங்குள்ளது.

சாய் கணேஷ் நகர் அருகே வாழை தோட்டத்துடன் கூடிய ஒரு வீடு 

நகரின் துவக்கத்திலேயே "சென்னையின் முதல் பாறையில் ஏறும்/ ட்ரெக்கிங்கிற்கு பயிற்சி அளிக்கும் ஜிம்" என ஒரு வித்தியாச ஜிம்மை காண முடிகிறது

டிராபிக் பிரச்சனை 

காமாட்சி ஆஸ்பத்திரி அருகே ஒரு சிக்னல் உள்ளது;இது எப்போதும் இயங்குவதே இல்லை; மாலை நேரங்களில் டிராபிக் போலீஸ் நின்று வாகனங்கள் செல்வதை ஒழுங்கு படுத்துகிறார்.

ஆனால் OM R சாலையில் இருந்து வரும் அலுவலக வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் மிக அதிகம் என்பதால் -வாகனங்கள் நிற்காமல் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இந்த பக்கத்தில் வாகனங்கள் வந்தால் 7-8 நிமிடத்துக்கு டிராபிக் போலீஸ் காரர் அதனை தொடர்ந்து அனுமதிக்கிறார். இந்த சிக்னலில் மட்டும் சர்வ சாதாரணமாக 10 நிமிடம் காத்திருப்பது தொடர்கிறது

டிராபிக் போலீசை சொல்லி குற்றமில்லை; வாகனங்கள் வருவது குறைந்தால் தான் அவர் நடுவில் சென்று நிறுத்தி விட்டு பிற பக்கங்களை அனுப்ப முடியும். அலுவலகம் விட்டு  OM R சாலையில் இருந்து வரும் வாகனங்கள் இடைவெளியே இன்றி வருகிறது. இங்கு சிக்னல் இருந்தால் ஓரிரு நிமிடத்தில் ரெட் வந்து - வாகனங்கள் நின்று விடும். அரசு இதற்கு ஆவண செய்தால் நல்லது !
*************
சென்னை 1 முதல்  130 வரை என தொடங்கிய இந்த தொடரில் - முதல் இடம் சென்னை 100 பள்ளிக்கரணையாக அமைந்துள்ளது !

நெக்ஸ்ட்டு??

நங்கநல்லூர் !

3 comments:

  1. பள்ளிக்கரணை பற்றிய பதிவு சிறப்பானது. பல தகவல்களை அளிக்கிறது. எனது உறவினர் சுண்ணாம்பு கொளத்தூரில் இருப்பதால்ள்அடிக்கடி பள்ளிக்கரணை தாமரைக் குளத்தைக் கடந்துசெல்வேன். மனதுக்கு ரம்மியமான காட்சி.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...