Saturday, March 4, 2017

மராத்தான் ..சில தவறான புரிதல்கள்

45 வயதுக்கு பின் ஓடத்துவங்கியவன் நான். இன்னும் முன்பே ஆரம்பித்திருக்க வேண்டும் என அடிக்கடி தோன்றும்.   "Better late than never !". இதுவரை ஆரோக்கியத்தில் பெரும் பிரச்சனை இல்லை; ஓட்டத்தின் உதவியால் இனியும் நல் ஆரோக்கியம் தொடரும் என நம்பிக்கை !  ஒரு விதத்தில் சரியான நேரத்தில் ஓட்டத்தை துவங்கியதாக சமாதானப்படுத்தி கொள்வது வழக்கம்.

மாரத்தான் குறித்து எனக்கும் நிறைய தவறான புரிதல்கள் இருந்தது; அதே விதமான  கேள்விகள் நண்பர்கள் பலர் இப்போது கேட்கிறார்கள்.அவர்களின் கேள்வியே இப்பதிவை எழுத காரணம் !

Image may contain: 4 people, people smiling, people standing
பாடகர் நரேஷ் அய்யருடன் 10 கி.மீ  ஓடிய போது ....

1.மராத்தான் என்றால் - மொத்த தூரமும் ஓடவேண்டும்..

மராத்தானில் பங்கேற்கும் முன் நானும் இப்படித்தான் நினைத்து கொண்டிருந்தேன். அண்மையில் தொடர்ந்து நடை பயிற்சி செய்யும் ஒரு நண்பர் - இதே கேள்வியை கேட்டார்.

எலைட் ரன்னர்கள் என சொல்லக்கூடிய - அட்டகாச ஓட்ட வீரர்கள் மட்டுமே முழு தூரத்தையும் ஓடி கடப்பார்கள். இவர்கள் மராத்தானில் ஓடுவோரில் 20 முதல் 30 % வரை தான் இருக்க கூடும்.

அப்போ மற்றவர்கள்?

நிச்சயம் மராத்தான் நடுவில் நடக்க கூடியவர்கள் தான் ! சிலர் பாதி தூரம் ஓடியும், மீதி தூரம் நடந்தும் கடப்பார்கள்.

இன்னும் சிலரோ அதிக தூரம் ஓடியும் - மிக குறைவாக (முடியாத போது மட்டும்) நடந்தும் கடப்பார்கள்..

சென்னை விப்ரோ மாரத்தான் போன்றவற்றில் முழு 10 கிலோ மீட்டரும் நடந்து கடந்தோரும் உண்டு.

என்னை பொறுத்த வரை மாராத்தானில் 60 முதல் 70 % ஓடுகிறேன்.மீத தூரம் நடக்கிறேன். தொடர்ந்து ஓட , ஓட - நடக்கும் நேரம் குறையலாம். இது அவரவர் எனர்ஜிக்கு ஏற்ப மாறும்.

எனவே முழுதும் ஓடணுமா என்கிற பயம் தேவை இல்லை !

2. தொடர்ந்து ஓடினால் முட்டி ஆப்பரேஷன் பண்ணனும் !!

ஓட்டத்தை விரும்பாத பலரும் - ஓட்டத்திற்கு எதிராய் சொல்லும் ஒரு காரணம் இது.

ஓடத்துவங்கும் முன் இதுபற்றி நிறைய நான் தேடி தேடி வாசித்தேன். ரன்னர்கள் பலரிடமும் பேசினேன்.

உண்மையில் சரியான படி ஓடுவது கால்களுக்கும் முட்டிக்கும் நல்ல வலு சேர்க்கும். 70-80 வயதிலும் எப்படி பல ஆண்களும், பெண்களும் ஓடுகிறார்கள்??  ஓடினாலே முட்டி பிரச்சனை வரும் என்றால் - அவ்வளவு வயதான காலத்தில் எப்படி மாரத்தான் ஓட முடிகிறது !! மேலும் 10-20 ஆண்டுகளாக எப்படி ஓடுகிறார்கள் !

எனக்கு தெரிந்த வரை ஓடுவதை நிறுத்துவோர் - வேலை பளு, பணி மாற்றம் ..குடும்ப காரணங்கள் ,தங்கள் சோம்பேறித்தனம்..இவற்றால் தான் நிறுத்துகிறார்கள். கால் பிரச்சனை ஆகி நிறுத்துவோர் மிக குறைவு.

ஓடுவதில் சில விதிகள் உள்ளன: குறிப்பாக துவக்கத்தில் வாரத்தில் 3 நாள் தான் ஓடணும். நன்கு ட்ரெயின் ஆன பின் கூட வாரத்தில் 5 நாள் ஓடலாம் (அதுவும் பெரும் மாராத்தானுக்கு டிரெயினிங் இருக்கு போன்ற காரணத்திற்காக மட்டும் )

ஒரு நாள் ஓடினால்-மறுநாள் ஓடக்கூடாது என்பது பலரும் பின்பற்றும் விஷயம்.இது தான் கால்களுக்கு ஓய்வு தர நாம் செய்யும் முக்கிய வேலை.இந்த நாளில் நடக்கலாம்;சைக்கிள் ஓட்டலாம். நீச்சல் அடிக்கலாம்....

(நன்கு பயிற்சி எடுத்தோர் குறிப்பிட்ட நாட்கள் ..உதாரணமாய் -தொடர்ந்து 10 நாள்  10 கிலோ மீட்டர் ஓடுவார்கள். இதுவும் ஒரு வித பயிற்சியே. ஆனால் இதனை அத்துடன் நிறுத்தி கொள்வார்கள்.தொடர்ந்து செய்ய மாட்டார்கள் )

நீங்கள் ஓட துவங்கினாலே, பின் இயல்பாய் ஒரு குழுவில் இணைந்து விடுவீர்கள். அங்குள்ளோர் நிச்சயம் ஓட்டத்தில் செய்ய வேண்டிய விஷயங்களை கற்று தருவார்கள். அவற்றை பின் பற்றினாலே காயத்திலிருந்து தப்பிக்கலாம்.

Image may contain: 9 people, people smiling, people standing, sky and outdoor
ப்ளூ டார்ட் பைனான்ஸ் டீம் ; இதில் 50 வயதை கடந்தோர் இருவர் உள்ளனர் !

3.ஒரு தடவை விழுந்துட்டா அவ்ளோ தான்.

நண்பர் ஒருவர் நான் ஓடுவதை கிண்டலடித்து கொண்டே இருப்பார். அவரும் ஓடியவர் தானாம் ! சோம்பேறித்தனத்தில் விட்டதாக அவரே சொல்லவும் செய்வார். ஆனால் இப்போது அவர் அடிக்கடி சொல்வது :"ஒரு கல் தடுக்கி விழுந்தா அவ்வளவு தான்; அப்புறம் லைப் முழுக்க படுத்து கிடக்க வேண்டியது தான்  !"

உண்மையில் இது இவரது சோம்பேறி தனத்தை மறைக்க, தனது செயலை நியாய படுத்த சொல்லும் காரணம் அன்றி வேறில்லை.

உட்கார்ந்து, உட்கார்ந்து  சாப்பிட்டுட்டு நல்லா தொப்பை வச்சா பட்டக்குன்னு ஒரு நாள் போக மாட்டோமா என்ன ?

ஒரு முறையல்ல, பல முறை விழுந்தாலும் ஓட்டத்தில் ஈடுபாடுள்ளோர் மறுபடி ஓடுவார்கள்.. ! காலில் சுளுக்கு, வலி போன்றவை இருந்தாலே எப்போது சரியாகும், எப்போதும் மீண்டும் ஓடலாம் என்று தான் ஏங்கும் மனது..!

4.ஒல்லியாக இருப்பவர் தான் ஓட முடியும் !

நிச்சயமாக கிடையாது; ஒரு முறை மராத்தான் வந்து பாருங்கள். எத்தனை bulky ஆன நண்பர்கள் ஓடுகிறார்கள் என தெரியும்.

விப்ரோ மராத்தானில் பார்த்த ஒரு நண்பரை இன்னும் மறக்க முடிய வில்லை. மிக மிக பருமனானவர்.. சட்டை மற்றும் மடித்து கட்டிய வேஷ்டி அணிந்தபடி மெதுவாக ஓடிக்கொண்டிருந்தார்.. நான் ஓடியது 10 கிலோ மீட்டர். அவர் ஓடி கொண்டிருந்தது 21 கிலோ மீட்டர் !!

தொடர் ஓட்டம்  எடையை ஓரளவு குறைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை; அவருக்கு நிச்சயம் ஓட்டம் சில பலன்களை தந்திருக்க வேண்டும். அநேகமாக 5 கிலோ மீட்டர் ஓட்டத்தில் துவங்கி 10 கிலோ மீட்டரை தாண்டி தான் இப்போது 21 கிலோ மீட்டர் ஓடியிருப்பார்.. அவர் குறித்த இந்த சிந்தனைகளுடன் அன்று நான் எனது ஓட்டத்தை தொடர்ந்தேன்....

5.ஓடுதல் மிக கடினமான ஒரு விஷயம் 

நாம் ஓடத்துவங்கும் வரை ரன்னர்களை ஆச்சரியத்துடன் தான் பார்ப்போம்.

உண்மையில் ஓட்டம் என்பது ரொம்ப கஷ்டமான விஷயமே இல்லை; முதலில் நம்மால் முடிந்த வேகத்தில் முடிந்த தூரம் ஓட போகிறோம். முடியலையா நடக்கப் போகிறோம். மூச்சும் மனமும் சரியான பின் மீண்டும் ஓடப்போகிறோம்.இந்த மன நிலையுடன்  ஓட்டத்தை அணுகுங்கள்

ஓடி முடித்தது பெரும் சாதனை உணர்வை தரும்..ஓட்டமே ஒரு enjoyable experience ஆகி விடும்...

6.எவ்வளவு விரைவாக  ஓடி முடிக்கிறோம் என்பது தான் முக்கியமான விஷயம்.

நிச்சயமாய் இல்லை ! எல்லா மாரதன்களிலும் பரிசுகள் உண்டு என்றாலும் -மிக விரைவாய் ஓடும் எலைட் ரன்னர்களுக்குள் தான் அந்த பரிசை பெற போட்டியிருக்கும்.

சாதாரணமாய் - தன் உடல் நலத்துக்காக ஓடும் நம்மை போன்ற ஆசாமிகளுக்கு -குறிப்பிட்ட தூரத்தை ஓடி முடிப்பது மட்டுமே இலக்கு.சில பேர் சென்ற முறை ஓடியதை விட இம்முறை குறைவான நேரத்தில் ஓடுகிறோமா என பார்ப்பார்கள்.அவ்வளவே. அதுவும் கூட அவசியமில்லை. ஓட்டம் எனும் அனுபவத்திற்கு ஓடுவோர் தான் மிக அதிகம் !

மகளுடன் சேர்ந்து ஒரு மினி மாரத்தான்(5 KM)  ஓடியபோது 

சரி..எதற்காக ஓடவேண்டும்? ஓடுவதால் என்ன பலன்?

1. உடல் நலம் தான் முதல் குறிக்கோள். இன்றைய நிலையில் பலரும் அலுவலகத்தில் 8-9 மணி நேரம் அமர்ந்த படி வேலை பார்ப்பதால் உடலுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. எனவே ஓட்ட  பயிற்சி உடலில் போதுமான கலோரிகளை எரித்து - வெயிட் போடாமல் காக்கிறது. ஏற்கனவே வெயிட் உள்ளோர் - தொடர்ந்து ஓடினால் எடை குறைவது நிச்சயம் ...

2. ஓட்டம் பல புதிய .......ஒத்த சிந்தனை கொண்ட நண்பர்களை அறிமுகப்படுத்துகிறது; இவர்களில் பலரும் நமது உடல் நலனுக்கு உதவ, ஆலோசனை சொல்ல தயாராக இருப்பார்கள்..நல்ல நட்பு ... நிச்சயம் மகிழ்ச்சி தருகிறது

3. ஓட்டம் தரும் சந்தோஷம்.. சென்ஸ் ஆப் அச்சீவ்மென்ட் ..!! ஒரு காலத்தில் நம்மால் முடியாது என்று நினைத்த ஓட்டத்தை ஓடுகிறோம். நினைத்து பார்க்க முடியாத தூரங்களை அடுத்தடுத்து  கடக்கிறோம் ..நம்மையே நாம் விரும்ப, ரசிக்க உதவும் விஷயம் இது.

சில நாட்கள் - அலுவலகம் - வீடு இரண்டிலுமே நாம் நினைத்த எதுவுமே நடக்காமல் போனாலும், ஓட்டம் நம்மை depressஆகாமல் காக்கும். "இந்த ஒரு விஷயமாவது இன்னைக்கு நாம் நினைச்ச படி நடந்திருக்கு"என்ற எண்ணமே நம்மை ஆற்றுப்படுத்தும்

4.தூக்கம் :

ஓடுவோருக்கு தூக்க பிரச்சனை இருக்க வாய்ப்புகள் மிக குறைவு (மரத்தானுக்கு முதல் நாள் மட்டும் அதிகாலை எழனும்  என்றாலும், தூக்கம் சரியாய் வராது ஓட்டம் குறித்தே சிந்தனையாய்  இருக்கும்  ...இதை ஒன்றும் செய்ய முடியாது; இன்டெர்வியூ அல்லது முக்கிய மீட்டிங்கிற்கு முதல் நாள் தூக்கம் வராத மாதிரி தான் இதுவும் )

5.பெரும்பாலும் விரும்பிய உணவுகளை சாப்பிடலாம் (அளவில் மட்டும் சற்று கவனம் தேவை ..) மேலும் ஓட ஆரம்பித்த பின் நாமே சற்று டயட் கான்ஷியஸ் ஆகி விடுவோம் ..நல்ல விஷயங்களை தேடி தேடி சாப்பிடுவோம் )

இறுதியாக ...

ரன்னிங் ஒரு மிக நல்ல ஹாபி. எத்தனையோ பேருக்கு என்னென்னவோ ஹாபி இருக்கும். அதில் .. நம் உடல்நலனில் மட்டுமே அக்கறை செலுத்தும் ஓட்டம் நமக்கும் ...நம் குடும்பத்துக்கும் மிக மிக நல்லது !

***********
தொடர்புடைய பதிவுகள்

உடல் எடை குறைப்பு: உணவாலா? உடற் பயிற்சியாலா: ஒரு நேரடி அனுபவம்

சென்னையின் மாபெரும் - விப்ரோ மாரத்தான்.. சில பாசிட்டிவ் & நெகட்டிவ்

பாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்

முதல் மாரத்தான் அனுபவங்கள் 

4 comments:

 1. Good article,useful and inspire me, encourage me to run. .. Thank u for enlight me on running..

  ReplyDelete
 2. good encouragement tips

  ReplyDelete
 3. E Mail received from a friend:

  HI,just now read our post about marathon running.

  i was operated for brain tumor in 2013 and i ran my first 10 km marathon in 2017.

  i was not confident to finish,but when older people were running, i motivated my self and finished in 2hrs 16 mints.


  www.runningandliving.com

  c25k book / app / web site

  couch to 5 km marathon - book


  you too can run


  all these will give more information for writing about marathon.


  all the best.

  S.Subramanian
  Chennai

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...