Thursday, January 3, 2019

கனா சினிமா விமர்சனம்


சென்ற வருடத்தின் டாப் 10 படங்களில் ஒன்று வருட இறுதியில் வந்துள்ளது - கனா !

இந்தியில் வெளியான சக் தே இந்தியா பாணி கதை தான்... ஒன்றுமில்லாத ஒரு டீமை ஒரு கோச் (அங்கு ஷாருக்- இங்கு சிவகார்த்திகேயன்) ஜெயிக்க வைக்கிறார்.

ஆனால் ஒற்றுமை அத்துடன் நின்று விடுகிறது. அக்மார்க் தமிழ் விஷயங்களோடு காமெடி- செண்டிமெண்ட் - சரியான காஸ்டிங் - இனிய பாடல்கள் என மிக ரசிக்கும் படி ஒரு படம் தந்துள்ளது கனா டீம்கதை 

விவசாயி முருகேசன் (சத்யராஜ்) மகள் கௌசல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்)..  அப்பாவின் கிரிக்கெட் ஆசையை நிறைவேற்ற தானும் ஒரு கிரிக்கெட் வீரர் ஆக எண்ணுகிறார். ஒரு பெண் கூட கிரிக்கெட் ஆடாத கிராமத்தில் ஆண்களுடன் ஆடி - பல்வேறு பாலிடிக்ஸ் கடந்து இந்திய அணி வரை நுழைவதும்  உலக கோப்பை விளையாடுவதும் ஒரு பகுதி கதை.

மற்றொரு புறம் விவசாயி முருகேசன் - விவசாயத்தில் படும் கஷ்டத்தை - தனது நிலத்தை / வீட்டை தக்க வைத்து கொள்ள போராடும் போராட்டத்தை மிக அருமையாக கொண்டு செல்கிறார் இயக்குனர்

திரைக்கதை மற்றும் இயக்கம் 

இப்படம் நம் மனதில் பதிய, ரசிக்க மிக முக்கிய காரணம் கிரிக்கெட் உடன் விவசாயத்தையும் சேர்த்து திரைக்கதை அமைத்த புத்தி சாலித்தனம் தான்.

கிரிக்கெட் - விவசாயம் இரண்டையும் தொடர்ந்து மாற்றி மாற்றி காட்சி படுத்துவது அழகாகவும் அலுக்காமலும்  படத்தை கொண்டுசெல்கிறது.

ரத்தம், சதை, நரம்பு இவை அனைத்திலும் கிரிக்கெட் வெறி ஊறிய ஒரு கிரிக்கெட் வெறியானாக இருந்தால்  மட்டும் தான் இப்படத்தின் சில காட்சிகளை காட்சிப்படுத்தியிருக்க முடியும்.

பிளாஷ்பேக்கில் நகர்கிறது கதை. கௌசல்யா லோக்கலில் பங்கு பெறும்  முதல் மேட்ச்  - அதில் ஒரு முக்கியமான கட்டத்தில் மேட்சை நிறுத்திவிட்டு நிகழ் காலத்திற்கு வருகிறார் பாருங்கள். அப்போது போலீஸ் ராமதாஸ் பேசும் வசனத்திற்கு தியேட்டர் குலுங்குகிறது. டிவியில் கிரிக்கெட் பார்க்கும்போது  மிக சுவாரஸ்ய கட்டத்தில் கரண்ட் போனால் எப்படி இருக்கும் - அதே மனநிலை தியேட்டரில் அப்போது....அந்த காட்சியெல்லாம் சொல்லி அடித்த சிக்ஸர் இயக்குனர்க்கு !

உலக கோப்பை போட்டியில் மேட்ச் டை ஆகி மீண்டும் - ஒரு சூப்பர் ஓவர் ஆடுவது போல் வைத்ததெல்லாம். - செம தைரியம்... எத்தனை மக்களுக்கு சூப்பர் ஓவர் கான்செப்ட் புரியும் என நினைக்காமல் - தில்லாக வைத்துள்ளார்.

கௌசல்யா உலக கோப்பை போட்டிக்கு தேர்வானாலும் - அணிக்குள் வராமலே இருக்க, செமி பைனலில்  அவளை ஆட வைக்கும்போது சிவா சொல்கிறார்.. அவளை இவ்வளவு நாள் ஒதுக்கி வைக்கலை..ஒளிச்சு வச்சிருந்தேன் ! அட்டகாசம் ..Goosebump moments !

ஆங்காங்கு வசனங்களும் தெறிக்க விடுகின்றன. "ஆசைப்பட்டா மட்டும் பத்தாது.. அடம் பிடிக்க தெரியணும்.." இது வசனம் மட்டுமல்ல.....படம் முழுதும் அடிப்படையாய் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் ஒரு முக்கிய செய்தி.

ஸ்போர்ட்ஸ் படத்திற்கான template அப்படியே இருப்பதால், சக் தே இந்தியா, டங்கல் போன்ற படம் பார்த்த மக்களுக்கு திரைக்கதையின் பல இடங்களை ஊகித்து விட முடியும்.. இது ஒன்று தான் படத்தின் மைனஸ்

நடிப்பு

படத்தின் வரவேற்புக்கு முக்கிய காரணம் சரியான காஸ்டிங்.

ஐஸ்வர்யா ராஜேஷ் - மிக சரியான தேர்வு; அவர் கௌசல்யாவாகவே தான் தெரிகிறார். அனைத்து உணர்ச்சிகளும் காட்டும் இவரது முகம் - இறுதி மேட்சில் மட்டும் இறுகி போகிறது (Focus !) கிளைமாக்சில் இவர் பேசும் வசனம் - மிக முக்கிய மெசேஜ் ! மக்கள் சரியாக உள் வாங்குகிறார்கள்...இப்படம் அவருக்கு ஒரு கோல்டன் ஆப்பர்ச்சுனிட்டி.. சரியாக பயன்படுத்தியுள்ளார் !

சத்யராஜ் - மிக நிறைவான நடிப்பு. போலவே அவரது மனைவி ரமா - அவருக்கு ஸ்கொப் சற்று குறைவு எனினும் தனது பங்கை மிக சரியாக செய்துள்ளார்

சிவா - முதன் முறை சீரியஸான பாத்திரம்..படத்தின் வியாபாரத்திற்கு இவர் முகம் நிச்சயம் உதவி விடுகிறது. இவர் சொல்லும் டெக்கினிக்குகள் குறைவுதான் எனினும் ஒவ்வொன்றும் சுவாரஸ்யம் !

படத்தின் இன்னொரு ஆச்சரியம் - மற்ற பாத்திரங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிற மாதிரி அமைத்த இயக்குனர்க்கு ஸ்பெஷல் ஷொட்டு.

ஐஸ்வர்யாவை ஒரு தலையாய் காதலிக்கும் பையனை ஒரு கட்டத்தில் அண்ணா என்று ஐஸ்வர்யா அழைப்பது, இறுதி மேட்சில்  பார்வையாளராக உட்கார்ந்து கொண்டு " கௌஷி வில் யூ மேரி மீ" (கோலி வில் யூ  மேரி மீ" - என பெண்கள் காட்டும் பேனர் போல) காட்டுவது என காமெடி பண்ணுகிறார். இவருடன் சச்சின் மற்றும் டெண்டுல்கர் என இருவர் கிச்சு கிச்சு மூட்டியபடி இருக்கிறார்கள் 

கிரிக்கெட் அணியில் கூட சில பெண்களை தனித்து தெரிய வைத்துள்ளார் இயக்குனர் ...

Image result for kanaa cricket scenes

கௌஷி உடன் கிரிக்கெட் ஆடும் இளைஞர்கள் பாத்திரமும் மிக மிக அழகு !

இசை இன்ன பிற 

பாடல்கள் - படத்தோடு சேர்த்து ரசிக்கும் படி உள்ளது. குறிப்பாக வாயாடி பெத்த புள்ள;

ஒரு தலையாய் காதலித்து ஆடும் பாட்டை மட்டும்  கத்திரி போட்டிருக்கலாம் (நீளம் கருதி)

இறுதி மேட்ச்கள் - கிராண்டாக எடுத்துள்ளது அட்டகாசம்

பாடகர் - பாடலாசிரியர் என தமிழ் சினிமாவில்அறிமுகமான இப்பட இயக்குனருக்கு முதன் முறை படமியக்கும் வாய்ப்பு வந்துள்ளார் அவரது கல்லூரி நண்பரான சிவா..படம் முடிந்து இறுதி டைட்டில் கார்ட் ஓடும்போது மக்களிடம் எழும் தன்னிச்சையான கை தட்டல் ஒலி இருவரின் வெற்றியை காட்டுகிறது !

கனா -அவசியம் காணுங்கள் !

1 comment:

  1. படம் வந்த அன்றே சென்ற படம் - எங்கள் செல்லத்திற்காக...

    விமர்சனம் சிக்ஸர்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...