Sunday, June 10, 2012

சிறகிசைத்த காலம்: பள்ளிபருவ நினைவுகள்

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலை பள்ளி நூற்றாண்டு விழாவில் " சிறகடித்து பறந்த என் பள்ளி நாட்களில் " என்ற தலைப்பில் பல்வேறு இலக்கிய வாதிகளும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பேசியுள்ளனர். பிரபஞ்சன், எஸ். ரா, பொன்னீலன், நாசர், திலகவதி, லெனின், பவா. செல்லத்துரை, ஞானி, தங்கர் பச்சான், மருது ஆகியோர் விழாவில் பேசியதன் தொகுப்பும், கூடவே அவர்கள் படைப்போன்றும் சிறகிசைத்த காலம் என்கிற இந்த புத்தகத்தில் இடம் பெறுகிறது. புத்தக சந்தையில் வாங்கிய இப்புத்தகம் இப்போது தான் முழுமையாய் வாசிக்க முடிந்தது.

விழாவில் பேசிய பிரபஞ்சனின் பேச்சுடன் தான் புத்தகம் துவங்குகிறது. பின்னர் பேசிய பலரும் மேற்கோள் காட்டி, பாராட்டிய பேச்சு இது. " ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வீட்டு பாடம் என்கிற ஒன்று தர கூடாது. ஏழு அல்லது எட்டு மணி நேரம் மாணவர்களை தங்கள் கட்டு பாட்டில் வைத்து விட்டு, அதன் பின்னும் வீட்டு பாடம் தருவதில் அர்த்தமில்லை" என்கிறார் பிரபஞ்சன். பள்ளி கூடம் உண்மையில் எதையும் கற்று தருவதில்லை என்றும் " ஊர் சுற்றி பார்ப்பவன் தான் அறிவாளியாக இருக்க முடியும்" என்கிறார்.

பிரபஞ்சனின் " மரி என்கிற ஆட்டுக்குட்டி" சிறுகதை நெகிழ்த்துகிறது. மரி என்கிற பத்தாம் வகுப்பு மாணவியை பள்ளியிலிருந்து நீக்க வேண்டும் என அவள் வகுப்பு ஆசிரியரிடம் கூறுகிறார் தலைமை ஆசிரியர். பல நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை, வந்தாலும் அவள் நடவடிக்கை சரியில்லை போன்றவையே காரணங்கள். அவள் வகுப்பு ஆசிரியர் அவள் இல்லம் சென்று அவள் நடவடிக்கைக்கான காரணம் உணர்கிறார். அவளின் வாழ்க்கை உண்மையில் பரிதாபத்திற்குரியது. அன்பின் மூலமே அவளை சரிப்படுத்துகிறார். மிக அருமையான கதை இது. முடிவில் "மரி விசும்பி விசும்பி அழுதாள்" என முடிக்கிற போது நமக்கும் மனம் பாரமாகி போகிறது. அன்பை கரு பொருளாய் கொண்டு எழுதும் பிரபஞ்சன் போன்ற எழுத்தாளர்கள் மிக குறைவு.

எழுத்தாளர் பொன்னீலன் பேச்சில் இரண்டு சம்பவங்கள் நம்மை அதிர வைக்கின்றன. முதலாவது அவர் ஆசிரியர் பற்றிய ஒரு சம்பவம்: அவரது ஆசிரியர் ஒருவர் தன் குழந்தை இறந்த போது கல்லூரிக்கு வந்து முதல் இரண்டு வகுப்புகள் பாடம் எடுத்து விட்டு, மாணவர்களிடம் " என் பெண் இறந்து விட்டாள்; அதனால் நான் அடுத்த வகுப்பு வர மாட்டேன். மதியம் நிச்சயம் வந்து விடுவேன்" என சொல்லி சென்றாராம். அதன் படி மதியம் வந்து சோகத்தை துளியும் காட்டாது பாடம் எடுத்தாராம் ! எப்படி பட்ட உன்னத ஆசிரியர் எல்லாம் நம் மண்ணில் இருந்திருக்கின்றனர் !

அவர் பகிர்ந்த மற்றொரு நெகிழ்வான சம்பவம் அவர் பள்ளி கல்வி இயக்குனராக இருக்கும் போது நிகழ்ந்துள்ளது. திருநெல்வேலி அருகே ஒரு கிராமத்து பள்ளி. அந்த பள்ளியில் ஆறாம் வகுப்பிற்கு சரியான கூரை இல்லை. இரண்டு குச்சிகளை வைத்து அதன் மேல் கீற்றை போட்டு ஒரு ஆசிரியை அற்புதமாக பாடம் நடத்துகிறார். வரலாற்று பாடத்திற்கு ஒரு மேப் கூட இன்றி எவ்வளவு அழகாய் அவர்களுக்கு மேப்பில் இருக்க கூடிய ஒவ்வொரு ஊரையும் விளக்கினார்; அவர்கள் அதனை எப்படி ஒரு விளையாட்டாக செய்து பயின்றனர் என்பதை பார்த்து கண் கலங்கி நின்ற உணர்வை பகிர்கிறார்.

பிரபஞ்சன், தான் சந்தித்த ஆசிரியர்களில் பத்துக்கு இரண்டு பேர் தான் நன்கு பாடம் நடத்த கூடியவர்களாக இருந்தார்கள் என்கிறார். ஆனால் பொன்னீலனோ அதற்கு நேர் மாறாக ஓரிரு ஆசிரியர்கள் தான் சரியில்லாமல் உள்ளதாக சொல்கிறார். இவை இரண்டிலிருந்தும் மாறுபட்டு திலகவதி "ஆசிரியரை பிடித்தால் பாடம் பிடிக்கும். எனவே ஆசிரியரை தனக்கு பிடித்தமானவராய் மாற்றி கொள்ள வேண்டும்" என்கிறார்.

இங்கு பேசிய இலக்கிய வாதிகள் அனைவரும் தாங்கள் கணக்கில் வீக்காக இருந்ததை கூறியிருக்கிறார்கள். தங்கர் பச்சான் ஒரு படி மேலே சென்று " கணக்கு சரியாக வராதவர்கள் தான் பெரிய கலைஞர்களாக வர முடியும்" என்கிறார்.

படைப்புகளில் பல நம் மனதை தொடுகிறது.

சுந்தர ராமசாமியின் "நாடார் சார்" சிறுகதை பள்ளிக்கு வருகிற புது ஆசிரியர் வருடம் தோறும் குறிப்பிட்ட பள்ளியுடன் கால் பந்தில் தோற்கும் மாணவர்களை அந்த ஆண்டு எப்படி ஜெயிக்க வைக்கிறார் என சொல்கிறது. அந்த பள்ளியும், ஆசிரியர்களும், அவர்கள் அரசியலும் கூட அழகாய் வெளிப்படுகிறது. ஆட்டத்தில் வென்றாலும் கூட ஆசிரியர் மனம் வருந்தும்படி ஒரு சம்பவம் இறுதியில் நடக்கிறது. கதை அத்துடன் நிறைவுறும் போது நமக்கு மனம் வலிக்கிறது.

தங்கர் பச்சானின் "குடி முந்திரி" சிறுகதை அவரது எழுத்தாற்றலை நமக்கு உணர்த்துகிறது. கிராமத்திலிருந்து டவுனுக்கு சென்று படிக்கும் கல்லூரி மாணவன் தந்தையிடம் "ஷூ" கேட்கிறான். தந்தை ஷூவிற்கு பணம் தர, பல ஆண்டுகளாக வருமானம் தந்த குடிமுந்திரி மரத்தை வெட்டுகிறார். அந்த பையன் இதனால் வருத்ததுடனே அந்த ஷூவை அணிகிறான். அவனது தந்தை இறந்த பின் அந்த ஷூ அணிவதை நிறுத்தி விட்டாலும், தூக்கி எறிய மனமின்றி ஒவ்வொரு முறை வீடு மாறும் போதும் அதனை எடுத்து கொண்டே செல்கிறான்.

கதை விவசாயிகள் வாழ்வு, சென்னையின் கலாசாரம் என பல விஷயங்களை தொட்டு செல்கிறது. குடி முந்திரி மரம் ஷூ ஆக உருமாறுவதும், அந்த ஷூ ஒரு நபரிடமிருந்து கடைசியில் வேறு நபரிடம் செல்வதும், மாற்றத்தை வலியுடன் உணர்த்துகிறது.

பவா. செல்லத்துரை மற்றும் திலகவதியின் சிறுகதைகளும் மனதை தொடவே செய்கிறது.

விழாவில் பேசிய பலரும் நமது கல்வி முறையை குறை கூறியும், அது மாற்ற படவேண்டும் என்று பேசினாலும், அதே கல்வி முறை எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த புத்தகம் ஒரு வித்யாசமான அனுபவம் தரும் என்ற எண்ணத்தில் புத்தக சந்தையில் வாங்கினேன். அதனை நிச்சயம் தரவே செய்தது. . தொகுத்து வெளியிட்ட பவா. செல்லத்துரை & நெடுஞ்செழியனும் அகம் பதிப்பகத்தாரும் பாராட்டுக்கு உரியவர்கள்.

*********
ஜூன் 4, 2012 தேதியிட்ட கீற்று இணைய இதழில் வெளியானது  

16 comments:

 1. எனக்குள்ளும் என் பள்ளி நினைவுகளையும்
  என் பள்ளி ஆசிரியர்களையும் ( குறிப்பாக
  ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை மட்டும்)
  நினைவுறுத்திப் போனது
  புத்தகத்தை நிச்சயம் வாங்கிப் படிக்கவேண்டும் என
  ஆர்வத்தைத் தூண்டிப்போகும் பதிவு மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. நல்ல விமர்சனம். பாராட்டுகள்...

  ReplyDelete
 4. வெறும் மதிப்பெண்ணை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு மனிதனால் வாழ்கையில் வெற்றி பெற முடியாது என்பதை மக்களும், அரசாங்கமும், கல்வி ஆய்வாளர்களும் உணர்ந்து கற்பிக்கப்படும் முறையில் மாற்றம் கொண்டுவர ஆவணை செய்ய வேண்டும்..!

  அது நிகழுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  ReplyDelete
 5. வாசிக்கும் ஆவலைத் தருகிற விமர்சனம். நல்லதொரு பகிர்வு. நன்றி.

  ReplyDelete
 6. உங்களது ஒவ்வொரு பதிவும் அருமை, பயனுள்ளது. எழுத்து நடையும் அருமை.
  இந்த அருமையான பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. வித்தியாசமான பகிர்வு ! வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 8. அனைத்து பிரவுசர்களுக்குமான ஷார்ட்கட் கீகள் ----- http://mytamilpeople.blogspot.in/2012/06/shortcut-keys-for-web-browsers.html

  ReplyDelete
 9. நன்றி ரமணி

  ReplyDelete
 10. நன்றி வெங்கட்

  ReplyDelete
 11. உண்மை தான் நன்றி வரலாற்று சுவடுகள்

  ReplyDelete
 12. நன்றி ராமலட்சுமி மேடம்

  ReplyDelete
 13. மிக மகிழ்ச்சி. நன்றி ரத்னவேல் ஐயா

  ReplyDelete
 14. நன்றி தனபாலன் சார்

  ReplyDelete
 15. http://ramamoorthygopi.blogspot.in/2010/10/12.html

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...