Friday, January 11, 2013

எஸ் ரா : பயணங்களும் பரவசங்களும் ...ஒரு இனிய அனுபவம் !

பயணங்களும் பரவசங்களும் - எஸ் ராமகிருஷ்ணன் 
- By: தேவகுமார் 

சங்கம் 4 ன் ஒரு பகுதியாக எஸ்ரா பயணங்களும் பரவசங்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அரசியல் காரணங்களால் சங்கமம் நிறுத்தப்பட்ட சூழலில், புது (சிறு) வடிவம் கொண்டு சங்கம் - 4 என, இந்த வருடம் நிகழ்ந்தது (சங்கமம் நிகழ்ச்சியின் அமைப்பாளர்களில் Fr. கஸ்பராஜ் மட்டுமே சங்கம் 4 - இல் தெரிந்த முகம்). சங்கமம் அளவிற்கு வீச்சு இல்லை ஆயினும்  நன்றாகவே நிகழ்ந்ததாக தெரிகிறது. நான் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தியோடர் பாஸ்கரன், எஸ்ரா மற்றும் செல்வராஜ் (முன்னாள் தஞ்சை பல்கலைகழக துணை வேந்தர்) ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

பயணங்களை பற்றி பேசும்போதெல்லாம் புது பொம்மை கிடைத்த ஒரு சிறு குழந்தை மாதிரி எஸ்ரா மாறுவதை இம்முறையும் (ஜனவரி 4) கண்டேன். சில விஷயங்கள் அவர் வேறு இடத்தில் பகிர்ந்து கொண்டது தான் ;  இரண்டாம் முறை அவர் பேசி கேட்கும் போதும், புது உணர்வை கொடுத்தது.

பேசும் போது ஒரு இடத்தில் சொன்னார்: (பேசிய இடம் அடையாரின் கரையில் இருக்கும் தமிழ் இசை அரங்கம்) " இந்த அடையாறு கடலில் கலக்காமல் கடலுக்கு அருகில் வந்து ஒரு மேட்டில் ஏறி இந்த கடலில் கலந்து விட மாட்டோமா என ஏக்கத்தோடு பார்க்கிறது".

பார்வையாளர்களும் அப்படிதான் நினைத்து இருப்பார்கள் - எஸ்ராவின் பயண அனுபவத்தின் மிக அருகில் அவர் நம்மை அவர் பேச்சால் கொண்டு போய் விடுகிறார், கேட்கும் நமக்கும் அவரோடு பயணங்களில் கலந்து விட மட்டோமா என ஒரு ஏக்கம் வருகிறது.
தான் சிறுவனாய் இருந்தபோது வீட்டின் படியில் இருந்து வீதியை வேடிக்கை பார்த்ததில் இருந்து அவரது பயணங்களை பேச ஆரம்பித்தார். மாட்டு வியாபாரிகளோடு பக்கத்து ஊர் சந்தைக்கு இரவில் சென்றது, இரவின் பாதைகள் எவ்வளவு இனிமையானவை; மாட்டு வியாபாரிகள் வாசனைகளை மட்டுமே வைத்து எப்படி மரங்களையும் வழியில் இருக்கும் பூச்சி மற்றும் பாம்புகளை அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என அவர் பேசிய போது, எனக்கு இரவில் எங்கள் கடலை வயல்களுக்கு நட்சத்திர வெளிச்சத்தில் தண்ணீர் காட்டியது நினைவுக்கு வந்து போனது.

அவர் கண்ணகி கோவலனின் வழி (வலி) தடங்களின் வழியே செய்த பயணத்தை பற்றி பேசினார். அதில் ஒரு சிரத்தையும் உண்மையும் தெரிந்தது. அவ்வளவு சிரமங்களிடையே எப்படி அவரால் பயணம் செய்ய முடிந்தது, கண்டிப்பாய் அளவுக்கு மீறிய பயண ஆசையும், அதி தீவிர தேடலும் இருந்தால் மட்டுமே அது முடியும். அவர் பேசும்போது சொல்கிற விஷயங்கள் ஆச்சர்யமானவை.

பூம்புகாரில் நடுக்கடலுக்கு படகேறி போய் அங்கே ஆழ்கடலில் இருந்து நல்ல தண்ணீரை மீனவர்கள் மொண்டு கொடுத்தது ஆச்சர்யம். அது அந்த கடலின் கீழ் பழைய பூம்புகார் நகரம் இருக்கிறதோ என எண்ண தோன்றுகிறது. சிலபதிகாரத்தை அது நடந்த இடங்களுக்கெல்லாம் போய் படித்து, மிச்சம் இருக்கிற சிலபதிகார அடையாளங்களை பார்த்து வந்ததை அவர் சொன்ன போது நான் அதில் எவ்வளவு சிரமம் இருந்து இருக்கும் என நினைத்தி கொண்டிருக்க, எஸ்ரா சொன்னார் " எனக்கு என் பயணத்தை பற்றிய எந்த புகாரும் இல்லை" (எவ்வளவு கொடுத்து வைத்த ஜீவன் அவர்).

பயணங்கள் ஒருவரின் அடையாளத்தை இழக்க செய்கிறது. பயணத்தின் போது நமை அடையாளம் கண்டு கொள்பவர்கள் மிகவும் குறைவு, நீங்கள் நீங்களாக இருக்கலாம் என்பது. எனக்கு இப்படி தோன்றியது - வெவ்வேறு ஊர்களுக்கு நீங்கள் பயணம் போகும் போது உங்களின் அடையாளம் களைந்து, ஒரு பொதுவான மனிதராக மாறிவிடுவீர்கள் என்பதுதான். அவர் சொன்னதில் இன்னுமொரு கவனிக்க வேண்டிய தகவல் ஒரு பயணத்தின் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் மனிதர்களின் உடைகள், உணவு, வீடுகள் போன்றவை மாறிக்கொண்டே இருக்கும்... எவ்வளவு சரி !

உங்களுக்கு மறக்க முடியாத பயண சம்பவம் என்ன என்று பார்வையாளர் கேட்டதற்கு, அவர் மத்திய பிரதேசத்தில் பயணிக்கையில் ஜுரம் வந்து எந்த நேரத்திலும் மயங்கலாம் என்னும் நிலையில், ஏதோ ஒரு நிறுத்தத்தில் இறங்கியதுதான் அவருக்கு தெரியும், விழித்தபோது ஒரு மருத்துவமனையில் இருந்திருக்கிறார். அவரை அங்கு சேர்த்த மனிதர், இவர் கண் விழித்ததும் நடந்ததை சொல்லி விட்டு இவரிடம் வேறு எதுவும் பேசாமல், பணம் வாங்காமல் சென்று இருக்கிறார். எஸ்ரா சொன்னார் இப்படி பட்ட மனிதர்கள் தான் எனது பயணத்திற்கு தைரியம் கொடுக்கிறார்கள், இன்னும் மனித நேயம் குறைந்துவிடவில்லை என்பதை நிருபித்து கொண்டே இருக்கிறார்கள்.

அவர் ஒரு அழகிய மழை போல பேசி கொண்டே போனார். அவர் பேசுவதற்கு முன், அவரின் கையில் இருந்த குறிப்பில் வெவ்வேறு ஊர்களின் பெயர்களை எல்லாம் எழுதி இருந்தார். ஆனால் அவற்றை பற்றி ஒன்று கூட பேசாமல், ஒரு திட்டமிடபடாத பயணத்தை போலே ஒன்றில் இருந்து வேறொன்றுக்கு மாறி கொண்டே போனார், ஆனாலும் அவர் பேச்சு தறியில் நெய்யப்படும் ஒரு அழகிய பட்டு துணியை போலே நம் கண் முன்னாலே உருவாகி கொண்டு இருந்தது.

எஸ்ராவிடம் நாம் தனியே பேசும்போதும் சரி, அவர் மேடையில் உரை நிகழ்த்தும்போதும் சரி , நமக்கு தெரிவது அவரது அன்பும், ஆழ்ந்த அனுபவங்களும் மனித நேயம் சார்ந்த நுணுக்கமான பார்வையும் தான். இந்த பேச்சும் அப்படிதான். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பேச்சு... எஸ். ராவினுடையது !

                                                                                                                          தேவகுமார் 

6 comments:

 1. //ஆனாலும் அவர் பேச்சு தறியில் நெய்யப்படும் ஒரு அழகிய பட்டு துணியை போலே நம் கண் முன்னாலே உருவாகி கொண்டு இருந்தது.//

  வாவ், அசத்தல்!

  ReplyDelete
 2. ரொம்ப நல்ல அனுபவத்தைப்பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 3. எனக்கு பிடிச்ச எழுத்தாளர்களில் ஒருவர் எஸ்.ரா. அவர் பற்றி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 4. அருமையானதோர் பகிர்வு..

  //வெவ்வேறு ஊர்களுக்கு நீங்கள் பயணம் போகும் போது உங்களின் அடையாளம் களைந்து, ஒரு பொதுவான மனிதராக மாறிவிடுவீர்கள் என்பதுதான். அவர் சொன்னதில் இன்னுமொரு கவனிக்க வேண்டிய தகவல் ஒரு பயணத்தின் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் மனிதர்களின் உடைகள், உணவு, வீடுகள் போன்றவை மாறிக்கொண்டே இருக்கும்.//

  ரொம்பச்சரி.

  ReplyDelete
 5. எஸ்.ராமகிருஷ்ணன் மீது கொண்ட மதிப்பை மேலும் கூட்டி விட்டார் தேவகுமார்.

  ReplyDelete
 6. எஸ் ரா அவர்கள் பேசும்போது அவர் கைகளின் அசைவு ஒரு நாட்டியம்போல இருக்கும்.பேச்சையும் நடனத்தையும் ஒரே சமயத்தில் ரசிக்கலாம். ரசித்தேன்.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...