Wednesday, June 23, 2010

கவிஞர் விக்ரமாதித்யனின் புத்தக விமர்சனம்

கவிஞர் விக்ரமாதித்யனின் "வியாழக்கிழமையை  தொலைத்தவன்"  கவிதை புத்தகம் இந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்கியது. இது பற்றி ஒரு விமர்சனம் எழுத எண்ணி... இப்போது தான் முடிந்திருக்கிறது...


முருகேச பாண்டியன் என்பவரின் முன்னுரையில் விக்ரமாதித்யன் பற்றி ஓரளவு அறிய முடிகிறது. முன்னுரையில் இவர் மேற்கோள் காட்டிய விக்ரமாதித்யனின் வரிகள் ..... "கரடி சைக்கிள் விடும் போது நாம் வாழ்க்கையை அர்த்தபடுத்த முடியாதா "  மிகுந்த அர்த்தமுள்ளது!!

" விருந்தோம்பல்" என்ற கவிதை..ஒரு சாதாரண மனிதன் விருந்தாளிகளை எப்படி கவனிக்க முடியும் என மிக எளிமையாக பேசுகிறது..." விளையாட்டில்லை உபசரிப்பு" என்கிறார்கவிஞர்..இக்கவிதையில் ஒரு பகுதி மட்டும்...

வேலை பளு 
இருக்க கூடாது
மனைவி 
கோபித்து கொள்ள கூடாது 
உணவு பழக்கம் 
ஒத்து போக வேண்டும் 
எத்தனை இருக்கிறது 
ஒருவனை வா என்று சொல்ல..

                                                      இப்படி செல்லும் கவிதை இவ்வாறு முடிகிறது 

அவரவர்க்கும் 
ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் 
எதற்கு தேடி போய் பார்த்து  
இடைஞ்சல் பண்ணுவானேன் 
இருட்டோ வெளிச்சமோ 
இருக்கும் இடத்திலேயே இருக்கலாம் 

                          *********************
        பீடி சுற்றும் இயந்திரங்கள் என்ற கவிதையில் மனிதர்கள் ஒரே செயலை திரும்ப செய்து இயந்திரமாய் மாறி போவதை சொல்கிறார்.. வருத்தமும் எள்ளலும் சேர்ந்து தெரியும் கவிதை இது. 

மற்றொரு கவிதை மாநகரம் 

ஒவ்வொரு முறையும் 
ஒவ்வொரு காரணம் கூறி 
ஒவ்வொரு வேலை சொல்லி 
ஒவ்வொரு ஆசை காட்டி 
அழைக்கிறது மாநகரம்

எனில் 
ஒருமுறை கூட சாமான்யமாகவோ சந்தோஷமாகவோ 
திரும்ப அனுப்பியதேயில்லை 

இங்கு நகரம் என்று சொன்னாலும் நகரத்து மனிதர்களை தான் கவிஞர் குறிக்கிறார். ஒரு எளிய மனிதரை இந்த நகரம் எப்படி நடத்துகிறது!!
                        *********************
தமிழ் கூறு நல்லுலகில் இது கவிதை தலைப்பு .. இப்படி துவங்குகிறது கவிதை 

இன்று செய்யவிருப்பதை 
நாளை செய்யலாம் 
நாளை மறு நாள் 
செய்யலாம் 
அடுத்த வாரம்
அடுத்த மாசம் 
அடுத்த வருஷம் 
அதற்கடுத்த வருஷம் கூட 
செய்து கொள்ளலாம் 
செய்யாமல் போனாலும் 
சிறிதும் தவறில்லை 

செய்தாலும் சரி 
செய்யாமலிருந்தாலும் சரி 

மனிதர்களின் தள்ளி போடும் குணத்தை எள்ளல் செய்கிறார் என்று தான் புரிகிறேன் நான்...
                        *********************
கவிதைகளில் ஆங்காங்கே அமர் என்ற ஹீரோ எட்டி பார்க்கிறார். இது கவிஞரின் மறு பக்கமாக தான் இருக்க வேண்டும். புத்தக தலைப்பு கவிதையில் கூட அமர் தான் வியாழ கிழமையை தொலைக்கிறார்.. 

ஒரு கவிதையில்,  

எழுத்து தரும் போதை 
எத்தனை காலத்துக்கு 

சும்மா சும்மா கிடைக்காது 
சுயத்துக்கு தீனி 

என பொட்டில் அறைகிறார். எத்தனை உண்மை இது!! பாராட்டு, அங்கீகாரம் இவை தொடர்ந்து கிடைத்து விடுமா என்ன!! 
                        *********************
பெரும்பாலான கவிதைகள் எளிமையாகவும் புரிகிற விதமாகவும் தான் உள்ளது. சில மட்டும் தான் புரிய வில்லை. நூலின் இறுதியில் தந்துள்ள விக்ரமாதித்யன் பற்றிய குறிப்புகள் மிக சுவாரஸ்யம்.. இதில் இவர் முன் செய்த தொழில்கள் என " மளிகை கடை பையன், சித்தாள், இட்லி வடை விற்பவன் என இருபது குறிப்பிட பட்டுள்ளது..

இது நான் வாசித்த முதல் விக்ரமாதித்யன் புத்தகம்; அந்த  வித்தியாச மனிதர் பற்றி ஓரளவு உணர முடிந்தது...

நூல் விவரங்கள்:
தலைப்பு: வியாழக்கிழமையை  தொலைத்தவன்
விலை : ரூ. 50
பதிப்பகம்: வம்சி புக்ஸ், திருவண்ணாமலை 

6 comments:

  1. நல்ல விமர்சனம் நண்பரே. புதிய புத்தகங்கள் படிக்க இங்கு வசதியில்லை என்பது ஒரு பெரிய குறை.

    ReplyDelete
  2. நல்ல கவிதைகள்..... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. ரசனையான பகிர்வு. வாய்ப்புக் கிடைத்தால் வாங்கிப் படிக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  4. நல்ல ஒரு கவிஞரையும் அவர் கவிதைகளையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    ReplyDelete
  5. நன்றி வெங்கட்
    ***
    வணக்கம் சித்ரா; நன்றி
    ***
    ராமலக்ஷ்மி: நன்றி
    ****
    மோகன்: முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  6. நன்றி மோகன்!

    நண்பனை பற்றி பேசுவது என்னை பேசுவது போலதானே?

    அப்ப, நன்றி சொல்லலாம்தானே!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...