Wednesday, December 1, 2010

வாங்க முன்னேறி பார்க்கலாம் :பகுதி 8 : அன்பு

Love is the only force capable of transforming an enemy into a friend -  Martin Luther King


**
ஒரு சிறு ஜென் கதை.


ஜென் குருவைப் பார்க்க ஒருவர் வந்தார்.. குரு, "நாம் முன்பே சந்தித் திருக்கோமா?' என்றார்... "ஆம்" என்றார் வந்தவர்.. " அப்படியா? வாங்க டீ சாப்பிடலாம்" என்றார் குரு...

அடுத்து இன்னொருவர் வந்தார். குரு, "நாம் முன்பே சந்தித்திருக்கோமா?' என்றார்... "இல்லை" என்றார் இப்போது வந்தவர்." அப்படியா?  வாங்க டீ சாப்பிடலாம்" என்றார் குரு...

ஜென் கதை அளவில் மிக சிறியது. சில நேரம் அதில் கதை ஏதும் இல்லாத மாதிரி கூட தோன்றும்.. ஆனால் அது உணர்த்தும் அர்த்தங்கள் ஏராளம்.

ஜென் குரு தான் ஏற்கனவே சந்தித்த நபருடன் எவ்விதம் பேசி தேநீர் அருந்துகிறாறோ, அதே போலவே. தான் சந்திக்காத நபருடனும் பேசி தேநீர் அருந்துகிறார். நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் இருவரிடமும் ஒரே விதமான அன்பு செலுத்த வேண்டும் என்பதே இந்த கதை சொல்லும் செய்தி !!

**
அன்பு குறித்து என்னுள் எழுந்த எண்ணங்களின் மாறுதல்களை சொல்ல   சற்று  அனுமதியுங்கள்.

"தான் அன்பு செலுத்த ஒரு ஜீவன் தன் மேல் அன்பு செலுத்த ஒரு ஜீவன்" என ஏங்கிய காலம் ஒன்று உண்டு. அது கல்லூரி காலம். நண்பர்களில் சிலர்  (இரு தலை) காதல் வசப்பட்டிருக்க என்னை போன்றோர் ஒரு தலை காதலையும் ஒழுங்காய் சொல்லாமல் இதயம் முரளி போல் சுற்றி திரிந்தோம்.. 

ஒரு நேரத்தில் எனக்கு ஒரு எண்ணம்/ தெளிவு வந்தது. " அன்பு என்பது ஆண்- பெண்ணிடமும், பெண் ஆணிடமும் செலுத்த வேண்டியது தானா?
ஏன் சுற்றியிருக்கும் அனைவரையும் நேசிக்க கூடாது? பிறர்   நம் மீது அன்பு செலுத்த வேண்டும் என நாம் ஏன் காத்திருக்க வேண்டும்? நாம் அவர்கள் மீது அன்பு செலுத்துவோமே; அதில் நமக்கு கிடைக்கும்  மகிழ்ச்சிக்காக மட்டுமாவது நாம் பிறர் மீது அன்பு செலுத்துவோமே!" ..இந்த எண்ணம் வர ஒரு சிறு பின்னணி உண்டு. 

சட்ட கல்லூரியில் அதிசயமாய் ஒழுங்காய் படிக்கிற மனிதனாய் இருந்தேன். எங்கள் வகுப்பில் இரண்டாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரை முதல் மாணவனாக வந்த காலம் அது.  என் உடன் இருந்த நண்பர்கள் தேர்வு நேரத்தில் தான் முதல் முறை படிப்பார்கள். அப்போது நான் மூன்றாவது அல்லது நான்காவது முறை படித்து கொண்டிருப்பேன். தேர்வுக்கு முதல் நாள் நண்பர்கள் யாராவது வந்து சந்தேகம் கேட்டால் அவர்களை குதறி விடுவேன். " இன்னிக்கு தான் கேட்கணுமா? இவ்வளவு நாள் என்ன செய்தாய்?" என.. சில நேரம் சொல்லி தருவேன். பல நேரம் நான் படிக்கணும் என சொல்லி தர மாட்டேன். 

இது குறித்து எனக்கே பின் சற்று குற்ற உணர்ச்சி இருந்தது. இறுதி ஆண்டு படிக்கும் போது இதனை சரி செய்ய ஒரு முடிவெடுத்தேன். 

தேர்வுக்கு சரியே ஒரு மாதம் முன் அனைத்து நண்பர்களையும் (கிட்டத்தட்ட 12 பேர்)  கூட்டி Combine study  ஆரம்பித்தேன்.   நான் அனைத்து பாடங்களையும் சொல்ல, அவர்கள் கேட்டு கொள்வார்கள். பின் அவர்கள் ஆளுக்கு ஒரு பகுதியாய் திருப்பி சொல்வார்கள். இவ்வாறு அனைத்து பாடங்களும் படித்தோம். இறுதி ஆண்டில் தேர்வு பெற்றவர்களில் ஆண்களில் தேர்வு பெற்றவர்கள்  (ஓரிருவரை தவிர) அனைவரும் எங்களோடு Combine study வந்து படித்த நண்பர்கள் மட்டுமே. 

விதைத்தது அறுப்போம்
உடனே அல்ல 
காலம் கடந்து 

என நான் எழுதிய கவிதை, தேர்வில் பாஸ் செய்த நண்பர்கள் தங்கள் அன்பை மகிழ்ச்சியை, நெகிழ்வை என் மீது காட்டிய போதும், எப்படி காட்டுவது என திண்டாடிய போதும் எழுதியது தான்.
 ***
"சக மனிதனை நேசி அது தான் அவசியமானது. மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம் தான்" - தாஸ்தாவ்ஸ்கி  

எத்தனை சத்தியமான வார்த்தைகள். இந்த உலகத்தில் மிக முக்கியமானதும் அதே நேரம் கடினமானதும் பக்கத்துக்கு வீட்டு காரரை நேசிப்பது தான். இந்த பக்கத்துக்கு வீட்டு காரர் உறவு என்பது எத்தனை சிக்கலானது !! உறவினர்களிடம் சில எதிர் பார்ப்புகள் இருப்பது போல், பக்கத்துக்கு வீட்டு நண்பர்களிடமும் சில எதிர் பார்ப்புகள் நமக்கு இருக்கும். அவற்றை பல நேரங்கள் அவர்களிடம் நாம் வெளிப்படையாக பேசுவது இல்லை. ஆனால் நாம் நினைத்த படி அவர்கள் நடக்க வேண்டும் என நினைக்கிறோம். 

பக்கத்துக்கு வீட்டு நபர்கள் மூலம் நமக்கு சில தொந்தரவுகள் வந்தால், அதனை பொறுமையாக நீங்கள் எப்படி பாதிக்க படுகிறீர்கள் என விளக்கி விடுவது நலம். இப்படி பேசும் போது கோபம் வரவே கூடாது. அவர் கோபப்பட்டாலும் கூட நாம் சொல்ல வேண்டியதை பொறுமையாய் விளக்கி சொல்லி விட வேண்டும். இவ்வாறு பேசுவதுடன் அந்த விஷயத்திற்கு முற்றுபுள்ளி வைத்து விடுங்கள். நீங்கள் நினைத்த படி அவர்கள் நடவடிக்கை மாறித்தான் ஆக வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். அப்படி எதிர்பார்த்தால் ஏமாற்றம் சில நேரம் கிட்டும்.
அவர்கள் செய்யும் முட்டாள் தனங்கள்/ தவறுகள் இவற்றையும் மீறி அயல் வீட்டாரை நேசியுங்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் எவ்வளவோ பிரச்சனைகள்/ சோகங்கள் உண்டு. அதற்காகவேனும் அவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள்.

ஏதேனும் ஒரு சிறு விஷயத்தினால் பக்கத்து வீட்டாருடன் சண்டை வந்தாலும் கூட, விரைவில் அதை சரி செய்ய பாருங்கள். பண்டிகை நாட்களில் சண்டையை மறந்து அவர்கள் வீட்டுக்கு இனிப்புகள் எடுத்து சென்று உறவை புதுப்பிக்கலாம்.

"இதெல்லாம் எதற்கு? பக்கத்து வீட்டுகாரரால் எனக்கு ஆக வேண்டியது ஏதுமில்லை" என்று சொல்வீர்களாயின், இதனை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்: பக்கத்து வீட்டிலேயே பகைவனை வைத்து கொள்வது சொந்த செலவில் தனக்கு தானே குழி தோண்டி கொள்வதற்கு சமம். அவர்கள் நினைத்தால் உங்களை எப்படியும் அழ வைக்கலாம். உங்களுக்கு வங்கிகள் போன்றவற்றில் இருந்து வரும் கடிதங்கள் கிழிக்கபடலாம். முக்கிய தகவல்கள் சொல்லபடாமல் போகலாம். உங்கள் வீட்டில் திருமண வயதில் பையன் அல்லது பெண் இருந்தால், உங்கள் குடும்பம் பற்றி யாரும் பக்கத்துக்கு வீட்டை தான் விசாரிப்பார்கள். அப்போது அவர்கள் ஒன்றுக்கு நான்காக சொல்லலாம்.

இப்படி அவர்களை பகைப்பதால் விளையும் தீமைகளுக்கு அளவே இல்லை. அதற்கு பதில் அவர்கள் தரும் சிறு சிறு இடைஞ்சல்களை பொறுத்து கொண்டு போவதே நல்லது.

என் அனுபவத்தில் இரு அயல் வீட்டாரோடு  சண்டை, பேச்சு வார்த்தை நின்று, அதன் விளைவுகளை முழுமையாய் சந்தித்து பின் அவர்களுடன் மீண்டும் நல்ல உறவுக்கு மீண்டேன். அந்த அனுபவம் தான் இதனை எழுத வைக்கிறது.

"எல்லோருக்கும் தர
என்ன உண்டு என்னிடம்
புன்னகை தவிர"

 எல்லா மனிதர்களையும் பார்த்து அன்போடு புன்னகைக்க முடிகிறது என்பது தான் இந்த கவிதையில் நான் சொல்லாமல் சொல்லியது.

"பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே" என பாரதியும் " உங்கள் பகைவர்களுக்காக நீங்கள் பிரார்த்தியுங்கள்" என ஏசுவும் சொன்னதில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியுள்ளன.

ஒருவரை வெறுக்கும் போது நமக்குள் எழும் எண்ணங்கள் நம்மை தான் அதிகம் பாதிக்கிறது. ஒருவர் மீது கொள்ளும் தீரா வெறுப்பு நம்முள் தூக்கமின்மை , நிம்மதி இழப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இப்படி பல விளைவுகளை ஏற்படுத்தி செல்கின்றன. பிறரை வெறுப்பதன் மூலம் நம்மை நாமே வெறுக்கிறோம். இந்த அழிக்கும் சக்தியுள்ள எண்ணங்கள் விளைவிக்கும் தீமைக்காகவேனும் பிறரை வெறுக்காமல் இருத்தல் நலம்.
***
அன்பு என்று சொல்லும் போது குடும்பம் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியுமா?

"If you want to go fast, go alone.
If you want to go far, go together".

தமிழில் சொல்ல வேண்டுமானால்,

நீங்கள் வேகமாக செல்ல வேண்டுமானால் தனியாக செல்லுங்கள்.
நீங்கள் தூரமாக செல்ல வேண்டுமெனில் சேர்ந்து செல்லுங்கள்.

வாழ்க்கை என்பது ஒரு நெடுந்தூர பயணமே. இந்த பயணம் முழுதும் நம்முடன் வர போவது நம் குடும்பத்தார் மட்டுமே. உங்கள் இலக்கை உங்கள் குடும்பத்தாரும் அறிந்தால், அது நல்ல இலக்காய் இருக்கும் பட்சத்தில் அவர்களும் ஆதரிப்பார்கள். அப்போது சுமையை அவர்களும் சேர்ந்தே சுமக்க, உங்கள் பாரமும் வலியும் குறையும். இலக்கை அடைவது இன்னும் எளிதாகும்.

ஒரு பிரயாணத்தில் முன் பின் தெரியாத நபர் மீது தெரியாமல் கால் பட்டு விட்டால் "சாரி" கேட்கும் நாம், குடும்பத்தாரை எந்த விதம் நடத்துகிறோம்!!

எந்த ஒரு விஷயத்தையும் நாம் அடையலாம். ஆனால் அதற்கு என்ன விலை தருகிறோம் என்பதும் மிக முக்கியம். உங்கள் குடும்பத்தார் வலி, கண்ணீர் உணராது நீங்கள் இமயமே தொட்டாலும் அதில் எந்த பயனுமில்லை.

மனைவி, குழந்தை, பெற்றோர் இவர்கள் மீது அன்பு செலுத்துவதும் அவர்களுக்கான நம் கடமையை செய்வதும் மனிதனாக இருப்பதற்கான அடிப்படை தகுதிகள்.
**
பிறர் மீது அன்பு செலுத்துவது எவ்வளவு முக்கியமோ அதே போல் தன் மீது அன்பு செலுத்துவதும் மிக முக்கியம். இதென்ன கேள்வி? தன் மீது யாராவது அன்பு செலுத்தாமல் இருப்பார்களா என்று கேட்கிறீர்களா? இதற்கான பதில் அடுத்த பதிவில்.. 

22 comments:

  1. நல்ல பதிவு. அன்பு தான் வாழ்கையை அர்த்தமுள்ளதாக்கும்.

    ReplyDelete
  2. Anonymous8:14:00 AM

    அன்பைப் பத்தி ரொம்ப அன்பா சொல்லியிருக்கீங்க அண்ணே :)
    உலகம் கட்ட ஒரே கயிறு "அன்பு"
    ஆனா என்ன, அந்தக் கயிறு தான் என்னிடம் ஸ்டாக் இருக்க மாட்டேங்குது ;)

    ReplyDelete
  3. எந்த ஒரு விஷயத்தையும் நாம் அடையலாம். ஆனால் அதற்கு என்ன விலை தருகிறோம் என்பதும் மிக முக்கியம். உங்கள் குடும்பத்தார் வலி, கண்ணீர் உணராது நீங்கள் இமயமே தொட்டாலும் அதில் எந்த பயனுமில்லை.


    ......நெத்தியடி! சரியாக சொல்லி இருக்கீங்க....
    Today's post is one of your best. :-)

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு மோகன். அன்புதானே எல்லாம். ஹாட்ஸ் ஆஃப் டு யு!

    ReplyDelete
  5. நல்லா எழுதியிருக்கீங்க..

    ஜென் கதை, தாஸ்தாவ்ஸ்கி - ம்ம்ம்ம். நடக்கட்டும்;)))

    ReplyDelete
  6. நல்லா கட்டுரை.. நல்லா செய்திகள்..


    // ஜென் குரு தான் ஏற்கனவே சந்தித்த நபருடன் எவ்விதம் பேசி தேநீர் அருந்துகிறாறோ, அதே போலவே. தான் சந்திக்காத நபருடனும் பேசி தேநீர் அருந்துகிறார்.//

    நா கூட அப்படித்தான்.. இல்லீன்னா எப்படி ஓசில டீ அடிக்குறது.. ?

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. அண்ணா, உங்கள் பதிவுகளில் இது ஒரு சிறந்த பதிவு. திடமான கருத்துக்கள்.

    ReplyDelete
  9. அன்பைப் பற்றி அழகாக தெளிவாக எடுத்துச் சொல்லியதற்கு நன்றி.

    ReplyDelete
  10. அனைவரும் அறிய வேண்டிய பதிவு...

    அன்பை பற்றி அன்பாக கூறி இருக்கறீர்கள்....

    ReplyDelete
  11. தங்களைப் பற்றிய பல தகவல்களோடு
    அன்பின் அவசியத்தையும் சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்.
    நன்றி.

    ReplyDelete
  12. நல்ல பகிர்வு. அன்பில்லாமல் இந்த உலகில் எதுவும் இல்லை.

    ReplyDelete
  13. அனுபவம், அதில் துளிர்த்த கவிதைகள், ஜென் கதை என அழகாய் நகர்ந்து அன்பைப் பகிர்ந்து கொண்டுள்ளது பதிவு.

    //பிறர் மீது அன்பு செலுத்துவது எவ்வளவு முக்கியமோ அதே போல் தன் மீது அன்பு செலுத்துவதும் மிக முக்கியம்//

    உண்மை. அது எப்படி என்பதைத் தொடருங்கள்.

    ReplyDelete
  14. நன்றி கலாநேசன். ஆம் அன்பு தான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்!
    **
    நன்றி பாலாஜி. ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? எவ்வளவு குடுத்தாலும் குறையாத ஒன்று அன்பு தான். அன்பை தந்து பாருங்கள்.
    **
    நன்றி சித்ரா. மிக்க மகிழ்ச்சி.. எனது சிறந்த பதிவுகளில் ஒன்று என சொன்னமைக்கு
    **
    மிக்க நன்றி வெங்கட்.

    ReplyDelete
  15. வித்யா: நன்றி. "இன்டலக்சுவல் ரேஞ்சில் ஜென் கதை, தாஸ்தாவ்ஸ்கி" என ஓட்டுகிறீர்களா? Ok. All in the game.
    **
    நன்றி மாதவன்
    **
    தேவா. மிக்க நன்றி பின்னூட்டத்திற்கும் மெயிலுக்கும்
    **
    ராகவன் சார்: வாங்க. சிறு இடைவெளிக்கு பின் " அன்பு" உங்களை மீண்டும் இங்கு அழைத்து வந்ததில் மகிழ்ச்சி

    ReplyDelete
  16. நன்றி சங்கவி
    **
    மிக்க நன்றி அமைதி அப்பா
    **
    நன்றி கோவை டு தில்லி "அன்பில்லாமல் இந்த உலகில் எதுவும் இல்லை." உண்மை தான்!!
    **
    ரசித்து வாசித்தமைக்கு நன்றி ராம லட்சுமி.

    ReplyDelete
  17. Anonymous5:24:00 PM

    நல்ல பதிவு.

    ReplyDelete
  18. //நீங்கள் வேகமாக செல்ல வேண்டுமானால் தனியாக செல்லுங்கள்.
    நீங்கள் தூரமாக செல்ல வேண்டுமெனில் சேர்ந்து செல்லுங்கள்.//
    அருமை.

    நான் மிகவும் ரசித்த பதிவு. நன்றிங்க.

    ReplyDelete
  19. //நீங்கள் வேகமாக செல்ல வேண்டுமானால் தனியாக செல்லுங்கள்.
    நீங்கள் தூரமாக செல்ல வேண்டுமெனில் சேர்ந்து செல்லுங்கள்.//

    அருமையான வரிகள்!

    பயனுள்ள கட்டுரை!

    எப்படி தங்கத்தை புடம் போட்டபின் அது இன்னும் ஜொலிக்கிறதோ, அதேபோல்தான் அனுபவங்கள் ஒரு மனிதனை புடம் போட்டு அவனை உயர்ந்தவனாக்குகிறது. அன்பையும் கருணையும் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி அவன் அளிக்கத் தயாராகி விட்டால் அவன் மேலும் உன்னதமாகி விடுகிறான்!

    ReplyDelete
  20. "எல்லோருக்கும் தர
    என்ன உண்டு என்னிடம்
    புன்னகை தவிர"மிக அருமையான பதிவு

    நேரம் இருக்கும் போது என் வலைபூவுக்கு வாருங்கள் அன்பரே

    http://grajmohan.blogspot.com

    ReplyDelete
  21. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபு.
    ***
    ரசித்து வாசித்தமைக்கு நன்றி இளங்கோ
    **
    கருத்துக்கும் பதிவை தொடர்வதற்கும் நன்றி மனோ மேடம்
    ***
    மிக்க நன்றி ராஜ் மோகன்

    ReplyDelete
  22. //விதைத்தது அறுப்போம்
    உடனே அல்ல
    காலம் கடந்து //

    //நீங்கள் வேகமாக செல்ல வேண்டுமானால் தனியாக செல்லுங்கள்.
    நீங்கள் தூரமாக செல்ல வேண்டுமெனில் சேர்ந்து செல்லுங்கள்.//

    பயங்கரம்.. அருமையா சொல்லித் தர்றீங்க... நன்றி...

    //உங்கள் குடும்பத்தார் வலி, கண்ணீர் உணராது நீங்கள் இமயமே தொட்டாலும் அதில் எந்த பயனுமில்லை. //

    உண்மை...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...