Wednesday, June 15, 2011

மாமல்லபுரம் பயணக்கட்டுரை :படங்களுடன்

திருச்சி சட்ட கல்லூரியில் தொண்ணூறுகளின் துவக்கத்தில் ஒன்றாக படித்த நண்பர்கள் நாங்கள். சட்ட கல்லூரி மாணவர்கள் என்ற வார்த்தையை கேட்டதுமே உங்களுக்கு என்ன தோன்றுமோ அதற்கு நேர் எதிர் விதமானவர்கள். கல்லூரியில் படித்த காலத்திலேயே எங்கள் குழு எப்போதுமே தனித்து தெரியும். படிப்பு, பேச்சு போட்டி, கிரிக்கெட்,நாடகங்கள் இப்படி எதை எடுத்து கொண்டாலும் அதில் எங்கள் குருப் கலக்கி கொண்டிருக்கும். குறிப்பாய் அப்போது துவங்கி இன்றைக்கு வரை எந்த நல்ல காரியங்களுக்கும் எங்களால் முடிந்த பங்களிப்பை இணைந்து செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதி தான் வருடா வருடம் எங்கள் நண்பன் லட்சுமணன் நினைவாக அடையாறு பார்வை இழந்த சிறுவர் பள்ளியில் நாங்கள் நடத்தும் பேச்சு மற்றும் பாட்டு போட்டிகள்.
நாங்கள் தங்கிய காட்டேஜ் முன்பு இனியா

கல்லூரியை விட்டு வந்த பிறகும், குடும்ப நண்பர்களாக வருடத்திற்கு சில முறை எங்கள் சந்திப்பு நடக்கும். திருச்சி சட்ட கல்லூரி மாணவர்களுக்க்கென தனியாக ஒரு யாஹூ குழுமம் உள்ளது. அதில் இத்தகைய பயணங்கள் முடிந்ததும் அவரவரும் தாங்கள் எடுத்த புகை படங்களை போடுவோம். டூர் சென்று வந்த நினைவுகளை எழுதும் பொறுப்பு என்னிடம் விடப்படும் (இன்னுமா இந்த உலகம் நம்மை நம்புது !!) இந்த முறை டூர் சென்ற போது பந்தாவாக, " இந்த பயணத்தை நேரே ப்ளாகில் எழுதி விடுகிறேன். அப்புறம் உங்களுக்கு லிங்க் தருகிறேன். அதிலே படிச்சிக்குங்க " என சொல்லி விட்டு வந்தேன். நாங்கள் இந்த டூர் சென்று வந்து ஐந்து மாதத்திற்கு மேலாகி விட்டது. இதோ இப்போது தான் அதனை எழுத வாய்க்கிறது.

நாங்கள் இந்த டூர் சென்ற பிப்ரவரி மாத சனி, ஞாயிறுக்கு அடுத்த நாள் தான் எனது தமிழ்மண நட்சத்திர வாரம் துவங்கியது. ஏற்கனவே தயாரான பதிவுகளை அந்த ஒரு வாரம் முழுதும் எழுதி, அடுத்த சில வாரம் ஓய்வு எடுத்து விட்டேன். என்றாலும் ஐந்து மாதம் கழித்து எழுதுவது சற்று ஓவர் தான். எழுதாமலே போய் விடுவதை விட, இவற்றை பதிவு செய்வது நினைவுகளை திரும்பி பார்க்க உதவும். எனவே டூர் வந்த நண்பர்கள் அடியேனை மன்னித்து, மேலே வாசிக்க.
*************
எங்களுடன் படித்த செல்வராஜ், ராமலிங்கம் என்கிற நண்பர்களின் தொடர்பு இப்போது தான் கிடைத்தது. அரியலூர் கோர்ட்டில் வழக்கறிஞர்களாக உள்ள அவர்களை சென்னைக்கு வர சொல்லி அனைவரும் மாமல்லபுரத்தில் சந்தித்தோம். 

நாங்கள் தங்கிய ரிசார்ட்டில் பெரும்பாலும் வெளி நாட்டவர் தான் தங்கி இருந்தனர். ( மாமல்லபுரம் முழுவதுமே சுற்றுலா பயணிகளில் வெளி நாட்டவர் எண்ணிக்கை அதிகம் தான்).  நீச்சல் குளம், குழந்தைகள் விளையாட நிறைய இடம் இருந்தது. மேலும் பீச்சிற்கு நேர் எதிரே அறைகள். காலை எழுந்து அறையிலிருந்தே பீச்சையும், சூர்ய உதயத்தையும் பார்க்க முடிந்தது. 

முதல் நாள் சென்று இறங்கியதுமே புட்பாலில் இறங்கி விட்டோம். பெரியவர்களும் சிறியவர்களுமாய் சேர்ந்து இரண்டு அணியாக பிரிந்து ஆடினோம். ஒவ்வொருவரும் தன் அணி தான் ஜெயிக்கணும் என வெறியோடு ஆடியதால் ஆட்டம் செம இன்டரஸ்டிங் ஆக இருந்தது.



பின் நீச்சல் குளத்தில் சென்று குளித்தோம். அருமையான, பெரிய குளம் இது. நீச்சல் தெரியாத சிறுவர்களுக்கு தனியாக நிறைய இடம். தண்ணீர் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது. முதல் நாள் மதியமும், மாலையும், மறு நாளும் என மூன்று முறை அனைவரும் ஆசை தீருமளவு குளித்தோம். ஆண்களும், குட்டி பசங்களும் உள்ளே இறங்க, பெண்கள் வெளியிலிருந்து ஆதரவு தந்து கொண்டிருந்தனர். 




நண்பன் பாலாவிடம் தண்ணீருக்கடியில் சென்று எடுக்க கூடிய கேமரா இருந்தது. அதன் மூலம் எடுக்கப்பட்ட போட்டோ இதோ. எனது தோள் மீது கை போட்டிருப்பது வழக்கறிஞர்/ நண்பர் பாலா


நீச்சல் குள குளியல் போதாதென்று மாலை பீச்சில் சென்று ஒரு முறை குளித்தோம். குட்டி பசங்க செமையாக என்ஜாய் செய்தனர்.




இரவு கேம்ப் பையருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறுவர்களுக்கு என சில போட்டிகளும், கணவன் மனைவிக்கு ஜோடி பொருத்தம் போட்டியும் நடத்தப்பட்டது. ஜோடி பொருத்தம் எப்போது நடத்தினாலும் கிண்டலும், கேலியுமாக இருக்கும். யார் வெல்கிறார்கள் என்பது முக்கியமல்ல, அனைவரும் சிரித்து மகிழவே நடத்தப்படும். இம்முறையும் செம ரகளையாக இருந்தது.

ஜோடி பொருத்தத்தில் திரு. / திருமதி ப்ரேம்

எந்த டூர் சென்றாலும், இரவு எவ்வளவு நேரம் விழித்து கொண்டு அரட்டை அடித்தாலும், நண்பர்கள் கூட்டம் மறு நாள் காலை அந்த ஊரை சுற்றி வாக்கிங் போவது வழக்கம். தூங்குபவர்களை போன் அடித்தோ, காலிங் பெல் அடித்தோ எழுப்பி கூட்டி கொண்டு போவார்கள். இம்முறை இருந்தது பீச் அருகில் என்பதால் காலை சூர்யோதயம் பார்க்க கிளம்பி விட்டோம். அற்புதமாக இருந்தது இந்த அனுபவம்.

  

சூர்ய உதயத்தின் போது நண்பர்கள் : பிரபு, மோகன்குமார், பிரேம், சங்கர்
காட்டேஜ் முன்பு.... இடப்புறம் முதலில் இருப்பவர்கள் ராமலிங்கம், செல்வராஜ் ;  வலப்புறம் முன்னாள் இருப்பவர்கள் பிரேம் மற்றும் ரவி


கோயிலுக்கு அருகேயே தங்கினாலும் சென்னை வாசிகள் ஏற்கனவே பல முறை சென்றதால் அங்கே போகலை. வெளியூரில் இருந்து வந்த நண்பர்கள் மட்டும் சென்று வந்தனர்.

படகு சவாரி 

சிறு படகில் பீச்சின் உள்ளே அழைத்து சென்று காட்டுகிறார்கள். செம த்ரில்லிங் அனுபவம் இது. பத்து பேர் ஏறினால் ஆயிரம் ருபாய் வாங்குகிறார்கள் என நினைக்கிறேன். மூன்று அல்லது நான்கு பேர் உள்ள  குழுவாக சென்றால் அவர்களே இந்த முழு பணமும் கொடுத்து செல்ல வேண்டும். 

சிறு படகு. அலைகளை கிழித்து கொண்டு உள்ளே செல்லும் போது அருமையாக உள்ளது. முதல் சில நிமிடங்கள் தான் செம ஜாலி ஆக உள்ளது. இந்த நேரத்தில் அலைகள் நம் மீது தண்ணீரை வாரி இறைக்கும். சற்று தூரம் போனபின் அலைகள் தெரியாமல் கடல் அமைதியாக உள்ளது. இப்போது ஏரியில் பயணிப்பது போல் தான் உள்ளது. ஒரு சில மைல்கள் கூட்டி சென்று அங்கு நீரில் புதையுண்ட கோயிலின் ஒரு பகுதியை காட்டி விட்டு திரும்ப கூட்டி வருகிறார்கள். இப்போதுள்ள கோயிலும் நீரில் மூழ்கி இருக்க வேண்டியது ! தொல் பொருள் துறை/ மத்திய அரசு இதனை எடுத்து கொண்டதால் கோயிலை சுற்றி மிக உயரமான அளவில் கற்கள் போட்டு கோயில் காப்பற்றப்பட்டுள்ளது




எப்போதும் போனும்,கையுமாய் இருக்கும் அப்பா ப்ரேமை தேடி ஓடும் இனியா

தனது மகன்களை போட்டோ எடுக்கும் அப்பா (சாலை மாறன் )

ஞாயிறு மதியம் ரூம் காலி செய்து விட்டு கிளம்பினோம்.

மாமல்லபுரம் பார்க்க பல நல்ல இடங்கள் உள்ள ஊர். இதுவரை செல்லா விடில் நீங்களும் அவசியம் ஒரு முறை சென்று ஒரு நாளாவது தங்கி சுற்றி பார்த்து விட்டு வரலாம்.

15 comments:

  1. என்ஜாய் மாடி! :))

    காட்டேஜ் பெயரையும், வாடகையும் போட்டிருக்கலாமே மோகன்ஜி :))

    ReplyDelete
  2. காலம் கடந்தாலும் நல்ல பதிவு.

    ReplyDelete
  3. உங்கள் பயணக்கட்டுரையில் எப்பவுத் தங்கும் இடம் அங்குள்ள வசதிகள், வாடகை பற்றி எழுதி இருப்பீர்கள்...

    இந்த பதிவில் அது மிஸ்ஸிங்....

    என் நண்பன் மைசூர் ஹனிமூன் சென்ற போது உங்கள் பதிவை பார்த்து மைசூரில் ஒரு ஹோட்டலும், கூர்க்கில் ஒரு தங்கும் விடுதியை பற்றி சொல்லி இருந்தீர்கள் அது மிகவும் பயனுள்ளதாக இருந்து தொடந்து பயணக்கட்டுரை எழுதும் போது மறக்காமல் தகவலையும் தெரிவியுங்கள் நண்பரே...

    ReplyDelete
  4. //காட்டேஜ் பெயரையும், வாடகையும் போட்டிருக்கலாமே மோகன்ஜி :))//

    ஷங்கர்: உடனே எழுதியிருந்தால் சொல்லியிருக்கலாம். ஹோட்டல் பெயரே நினைவில்லை. கூட வந்த நண்பர்கள் இதனை வாசித்து விட்டு ஹோட்டல் பெயர் சொல்ல கூடும். பகிர்கிறேன்

    ReplyDelete
  5. //உங்கள் பயணக்கட்டுரையில் எப்பவுத் தங்கும் இடம் அங்குள்ள வசதிகள், வாடகை பற்றி எழுதி இருப்பீர்கள்... இந்த பதிவில் அது மிஸ்ஸிங்....//

    ஆம் சங்கவி. மேலே ஷங்கருக்கு சொன்ன பதில் தான். நாளானதால் மறந்து விட்டது. நண்பர்களிடம் கேட்டு விட்டு நிச்சயம் சேர்க்கிறேன்.

    கூர்க் பற்றிய பதிவு தங்கள் நண்பருக்கு உதவியதில் மிக மகிழ்ச்சி. இது போன்ற செய்திகள் தான் பயண கட்டுரை எழுத உந்துதலே.

    ***
    அமைதி அப்பா: தங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  6. //ஞாயிறு மதியம் ரூம் காலி செய்து விட்டு கிளம்பினோம். //

    எதையாவது மிச்சம் வைப்பீங்களா என்ன..
    எல்லாத்தையும் 'காலி' பண்ணிடனும்..

    ம்ம்.. நல்லா எண்ணம்..

    ReplyDelete
  7. நல்ல பயணக் கட்டுரை மோகன். எனக்கு உதவும்... நான் செல்ல வேண்டும் என நினைத்திருக்கும் இடங்களில் ஒன்று மகாபலிபுரம்....

    கிடைத்தால் தங்கிய இடம் பற்றிய விவரங்களையும் எழுதுங்களேன்...

    ReplyDelete
  8. 'சக்திவேலன்'
    யோவ் "மாமல்லபுரம்" யா எத்தனை
    தடவ சொன்னாலும் மகாபலிபுரம் னு போட்டு வரலார பாழ் படுத்துரிங்க?

    ReplyDelete
  9. மாமல்லபுரம் மட்டுமே எட்டிப்பார்த்துள்ளேன். ஆனால் போட்டோவில் உள்ளது போல் அழகிய காட்டேஜ் மற்றும் நீச்சல் குளங்கள் பார்க்கும்போது ஒரு தடவை அங்கு போய் தங்க வேண்டும் போல் உள்ளது. நீங்கள் கொடுத்துவைத்தவர். நல்ல நண்பர்களுடன் நீண்ட நாள் தொடர்பில் உள்ளீர்கள்.

    //ஐந்து மாதம் கழித்து எழுதுவது சற்று ஓவர் தான்//
    நானெல்லாம் பத்து வருடங்களாக எழுதவேண்டும் என இன்னமும் சிலவற்றை எழுதாமல் இருக்கிறேன் (பேப்பரில்தான் அப்போதெல்லாம் ப்ளாக் ஏது?)

    ReplyDelete
  10. //ஐந்து மாதம் கழித்து எழுதுவது சற்று ஓவர் தான்//

    வக்கீல்களெல்லாம் வழக்குகளை வாய்தா வாய்தாவாக வாங்கி வருடக்கணக்கில் இழுத்தடிப்பார்கள். அதுக்கு, அஞ்சு மாசம் ரொம்பக் கம்மி; ரொம்பவே சீக்கிரமும்தான்!! :-))))))

    ReplyDelete
  11. மோகன், பதிவில் கவர்ச்சி படம்லாம் போட்டிருக்கீங்க ;))

    இரண்டு நாட்களாவது இது போல வாழவேண்டும் என ரொம்ப நாளாய் ஏங்கிக்கொண்டிருக்கிறேன். பணிச்சுமை கழுத்தை நெரிக்கிறது :(

    ReplyDelete
  12. //காட்டேஜ் பெயரையும், வாடகையும் போட்டிருக்கலாமே மோகன்ஜி :))//

    repeatae...

    ReplyDelete
  13. மலரும் நினைவுகள்..இனிமை மோகன்..

    ReplyDelete
  14. நன்றி மாதவன் :))
    **
    நன்றி வெங்கட். நண்பர்களிடம் கேட்டு பின் சேர்க்கிறேன்
    **
    சக்தி: நன்றி
    **
    //நீங்கள் கொடுத்துவைத்தவர். நல்ல நண்பர்களுடன் நீண்ட நாள் தொடர்பில் உள்ளீர்கள். // நன்றி ஆதி மனிதன். சென்னை வரும் போது மாமல்ல புறம் சென்று வாருங்கள்
    **

    ReplyDelete
  15. ஹுசைனம்மா: இதை என் வக்கீல் நண்பர்கள் எல்லாம் படிச்சிட்டு உங்களை கோச்சிக்கிட்டு இருப்பாங்க
    **
    //இரண்டு நாட்களாவது இது போல வாழவேண்டும் என ரொம்ப நாளாய் ஏங்கிக்கொண்டிருக்கிறேன். பணிச்சுமை கழுத்தை நெரிக்கிறது :(//

    ரகு: Week end ரெண்டு நாள் லீவு தானே? ப்ளான் பண்ணுங்க தலைவா ); இன்னமும் நைட் ஷிப்ட் போறீங்களா? அப்படின்னா சனி, ஞாயிறும் தூங்க தோணும் :((

    அட ஜெட்லி: வாங்க. கூர்க் பயண கட்டுரை தகவல் உங்களுக்கு உதவியதாக முன்பு நீங்கள் சொன்ன ஞாபகம்
    **
    நன்றி மணிஜி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...