Wednesday, September 21, 2011

ஸ்டான்லி கா டப்பா - விமர்சனம்

சிறுவர்கள் குறித்த நல்ல படங்கள் மனதில் எப்போதும் பாதிப்பை ஏற்படுத்தவே செய்கிறது. தமிழில் "பசங்க", இந்தியில், " தாரே ஜமீன் பர் " இவை எனக்கு மிக விருப்பமான படங்கள் . இந்த இரு படங்கள் அளவுக்கு  இல்லா விடினும், பார்த்தவுடன் நம் மனதை "நறுக்"என்று குத்தும் இந்தி படம் "ஸ்டான்லி கா டப்பா"

கதை

ஸ்டான்லி மும்பையின் ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறான். தினமும் காலை முதல் ஆளாக வருகிற அவன், ஜன்னல் வழியாக பள்ளிக்கு வரும் ஒவ்வொருவரையும் பார்த்து கொண்டிருக்கிறான். முதல் வகுப்பெடுக்கும் ரோஸி மிக நல்லவர். அவருக்கு ஸ்டான்லி பிடித்தமானவன். ஆனால் அடுத்து வரும் ஆங்கில ஆசிரியை அவனிடம் தேவையில்லாமல் எரிந்து விழுகிறார்.

ஸ்டான்லி தினம் மதிய உணவு எடுத்து வருவதில்லை. "நான் இரண்டு ரூபாய் வைத்துள்ளேன். அதில் பாவ் பஜ்ஜி சாப்பிடுவேன்" என சொல்லி விட்டு வெளியே போய் வயிறு முட்டும் அளவு தண்ணீர் குடிக்கிறான். அவனது வகுப்பு தோழர்கள் தங்கள் உணவையே பகிர்ந்து தருகிறார்கள். இதற்கும் இந்தி ஆசிரியர் மூலம் வில்லங்கம் வருகிறது. ஸ்டான்லி போலவே சாப்பாடு கொண்டு வராத இவர்,  பசங்களின் சாப்பாட்டை ஓசியில் கேட்டு வாங்கி சாப்பிடுகிறார். இவர் சாப்பாடு கொண்டு வராத ஸ்டான்லியை தனக்கு போட்டி போல் பாவித்து " நீ ஏன் சாப்பாடு கொண்டு வருவதில்லை?" என திட்டுகிறார்.

பையன்கள் இவருக்கு பயந்து தினம் வகுப்புக்கு வெளியே சென்று சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். "எங்கு சென்று சாப்பிடுகிறீர்கள்?" என தினம் கேட்டு நச்சரிக்கிறார் இந்தி ஆசிரியர். பசங்க தினம் ஓர் பொய் சொல்லி அவரை ஏமாற்றுகின்றனர். கடைசியில் ஓர் நாள் மொட்டை மாடியில் அவர்கள் சாப்பிடுவதை கண்டு பிடிக்கும் ஆசிரியருக்கு கோபம் தலைக்கேறுகிறது. ஸ்டான்லிக்கு உணவு தரத்தான் தன்னை தவிர்த்தனர் என அவனிடம் "இனி மதிய சாப்பாடு கொண்டு வந்தால் தான் பள்ளிக்கு வரணும்" என கூறி விடுகிறார். 

மறு நாளிலிருந்து ஸ்டான்லி பள்ளிக்கு வர வில்லை. அவன் பள்ளிக்கு வராதது குறித்து மாணவர்கள் மிக வருந்துகின்றனர். பின் ஒரு நாள் ஸ்டான்லி வித விதமான மதிய உணவுடன் பள்ளிக்கு வருகிறான். நேரே இந்தி ஆசிரியரிடம் சென்று அவற்றை உண்ண சொல்கிறான். ஏற்கனவே ஸ்டான்லியை பள்ளிக்கு வர வேண்டாம் என சொன்னதில் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் அவர் பள்ளியை விட்டே செல்கிறார். 

ஸ்டான்லி ஏன் தினம் உணவு கொண்டு வராமல் இருந்தான்? அவன் பெற்றோர் எங்கே? அவன் பின்னணி என்ன என்கிற கேள்விகளுக்கான பதில்களை வலியுடன் இறுதி காட்சியில்  பகிர்கிறார்கள் ....

படம் கிட்டத்தட்ட 95 சதவீதம் பள்ளிக்குள்ளேயே நடக்கிறது. அதுவும் மிக அதிக பட்சம் வகுப்பறையிலேயே ! ஆனால் சற்றும் போர் அடிக்காமல் செல்கிறது. வகுப்பிற்குள் நடக்கும் பல விஷயங்கள் சுவாரஸ்யம்.

தினம் பெரிய டிபன் பாக்ஸ் கொண்டு வரும் கொழுக் மொழுக் சிறுவன் செம அழகு ! தன் நண்பனுக்கு மகிழ்வுடன் உணவு தரும் இவன், இந்தி ஆசிரியர் அவனிடம் சாப்பாடு கேட்கும் போது வெறுப்புடன் தருவது... ஆசிரியர் மேல் எல்லா பசங்களுக்கும் உள்ள வெறுப்பை அவர்கள் பார்வையிலேயே காண்பிப்பது ..இப்படி பல விஷயங்கள் நுணுக்கமாய் ரசிக்கும் படி உள்ளது.

அழகான, அன்பான ரோஸி மிஸ் கதாநாயகி மாதிரி இருக்கிறார் ! நாம் ஒவ்வொருவரும் இப்படி ஒரு தேவதை  போன்ற மிஸ்ஸை நம் இள வயதில் சந்தித்திருப்போம் தானே? ஸ்டான்லி வகுப்பில் தயார் செய்யும்  ஒரு கருவியை  இவர் வெகுவாக பாராட்ட, ஆங்கில ஆசிரியை மோசமாக திட்டுகிறார் . பார்வை (Perception) எப்படி ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது என்பதை அழகாக காட்டுகிறது

இந்தி ஆசிரியராக வரும் அமோல் குப்தே தான் படத்தின் இயக்குனரும் கூட. ஆரம்பத்தில் இவரை வெறுக்கும் நாம் பசங்க இவரை அலைய விடும் போது மனம் விட்டு சிரிக்கிறோம். ஸ்டான்லி சாப்பாடு கொண்டு வராததற்கு ஒரு காரணம் இருக்கிறது. நிறைய சம்பாதிக்கும் இவர் ஏன் சாப்பாடு கொண்டு வருவதில்லை, பணம் செலவு செய்து வாங்கி சாபிடுவதில்லை என்பதற்கு எந்த காரணமும் சொல்லப்படவில்லை.

ஸ்டான்லி ஆக நடிக்கும் சிறுவன் பார்த்தோ குப்தே இயக்குனரின் மகனே. மிக அற்புதமான நடிப்பு இவனுடையது. படம் நம் மனதில் ஆழமாக பதிய இவன் நடிப்பும் ஒரு காரணம்.

ஸ்டான்லி ஏன் சாப்பாடு கொண்டு வருவதில்லை என்பதற்கு பல காரணம் யோசித்தாலும் அவர்கள் சொன்ன காரணம் யோசிக்கவே இல்லை. ஆனால் இதை விட சரியான காரணம் இருக்கவே முடியாது ! ஒரு டாகுமெண்டரி ஆக வர வேண்டிய விஷயத்தை எவ்வளவு சுவாரஸ்யமான படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் என வியந்தவாறே இருக்கிறேன்.

நண்பர்களிடம் கடன் வாங்கி மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது இந்த படம். பள்ளி செல்லும் குழந்தைகளை வைத்தே, ஒண்ணரை வருடம் சனிக்கிழமைகளில் மட்டும் படம் பிடித்திருக்கிறார் இயக்குனர் ! படத்தை முடித்து விட்டு வெளியிட முடியாமல் சற்று தடுமாறியிருக்கிறார். கரன் ஜோகர் என்கிற புகழ் பெற்ற இந்தி தயாரிப்பாளர்/ இயக்குனர் அவருக்கு பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் (Fox Star Studios) என்கிற நிறுவனத்தை அறிமுகப்படுத்த, அவர்கள் தான் படத்தை ரிலீஸ் செய்ய உதவினர். ஐந்து கோடிக்கு மேல் வசூல் செய்த இந்த படம் நஷ்டம் ஏற்படுத்தவில்லை என்பதோடு, பரவலாக பத்திரிக்கை மற்றும் மீடியாக்களின் பாராட்டை பெற்றது. இந்த வருடம் மே மாதம் தான் வெளியானது என்பதால் விருதுகள் பற்றி வரும் காலங்களில் தான் தெரிய வரும் !

பார்த்து முடித்ததும் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த படத்தை அவசியம் பாருங்கள் !

14 comments:

 1. விமர்சனம் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. நல்ல விமர்சனம் மோகன்...

  ReplyDelete
 3. //தமிழில் "பசங்க", இந்தியில், " தாரே ஜமீன் பர் " இவை எனது ஆல் டைம் பேவரைட் படங்கள்.//

  ஆமாம், இந்தியில் நான் பார்த்த அல்லது எனக்கு புரிந்த ஒரே படம் தாரே ஜமீன் பர். தங்கள் விமர்சனத்தால்
  "ஸ்டான்லி கா தாபா" பார்க்க ஆவலாக உள்ளேன்.

  ReplyDelete
 4. தாரே ஜ‌மீன் ப‌ர் ப‌ட‌த்தில் இய‌க்குன‌ர் பெய‌ர் ஆமிர்கான் என்றுதான் வ‌ரும். ஆனால் நிஜ‌மான‌ இய‌க்குன‌ர் அமோல் குப்தேதான் என்று ஒரு செய்தி உண்டு. எப்போதோ புத்தக‌த்தில் வாசித்த‌து. ஆனால் இது எந்த‌ அள‌வு உண்மை என‌ தெரிய‌வில்லை.

  ReplyDelete
 5. விமர்சனம் மிக அருமை.

  ReplyDelete
 6. Movie name Stanley ka dubba enru varavendum ena ninaikkiren nice review

  ReplyDelete
 7. அருமையான விமர்சனம்...

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  ReplyDelete
 8. ஸ்டான்லி ஏன் சாப்பாடு கொண்டு வருவதில்லை என்பதையும் சொல்லியிருக்கக் கூடாதோ?

  ReplyDelete
 9. its stanley ka dabba..please correct.

  ReplyDelete
 10. My Review:

  http://www.madrasbhavan.com/2011/05/blog-post.html

  ReplyDelete
 11. பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது விமர்சனம். கொஞ்ச நாள் முன், இதேபோல ‘சில்லர் பார்ட்டி’னு ஒரு ஹிந்தி சிறுவர் படம் பார்த்தேன், நல்லாருந்துது. முடிவுதான் கொஞ்சம் இழுத்துவிட்டார்கள்.

  ReplyDelete
 12. நன்றி ராம்வி
  **
  வெங்கட்: நன்றி
  **
  அமைதி அப்பா: ஹிந்தியில் நீங்கள் பார்த்தே ஒரே படம் அற்புதமான படம்; சப் டைட்டில்களுடன் ஹிந்தி படம் பார்த்தால் நிச்சயம் ரசிக்கலாம்
  **
  நன்றி ராமலட்சுமி
  **
  ரகு: உண்மை தான். கேபிள் இதே கருத்தை தன் விமர்சன பதிவில் எழுதி விட்டார். அதான் அது பற்றி நான் எழுதலை
  **

  ReplyDelete
 13. நன்றி குமார்
  **
  கேரளா காரர் : நன்றி. மாற்றி விட்டேன்
  **
  நன்றி கண்ணன்
  **
  ஸ்ரீராம்: அதை சொன்னால் படம் பார்க்கிற போது படத்தை முழுதுமாய் ரசிக்க முடியாது என்பதால் சொல்லலை
  **
  சிவகுமார்: வாசித்தேன். அருமை.
  **
  நன்றி ஹுசைனம்மா: அவசியம் பாருங்கள். நிச்சயம் ரசிப்பீர்கள்

  ReplyDelete
 14. நண்பர்களே: கதையின் முக்கிய முடிச்சை சொல்லி உங்கள் ஆர்வத்தை குலைக்க விரும்பவில்லை. நிச்சயம் இந்த நல்ல படத்தை பாருங்கள்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...