Tuesday, October 11, 2011

சில்க் ஸ்மிதா - வண்டி சக்கரம் மீண்டும் சுழலுகிறது

கட்டுரை : தேவா

டெல்லி, மும்பை, புனே நகர பத்திரிகைகளில் Dirty Pictures பற்றின teasers (தமிழில் இவற்றை "உசுப்பேற்றிகள்" என சொல்லலாமா?) வெளி வர ஆரம்பித்து விட்டன. யூ டியூபில் இந்த படத்தின் முன்னோட்டத்தை மட்டும் இதுவரை 9,00,000 முறை பார்த்து இருக்கிறார்கள். இந்த படத்தை பற்றின கட்டுரைகள், சில்க் ஸ்மிதாவை பற்றின சிறுசிறு செய்திகள், தற்கொலை செய்து கொண்ட நடிகைகளை பற்றின விஷயங்கள், வெளிவந்து இந்த படத்தினை பற்றிய எதிர்பார்ப்பை மக்களிடம் உசுப்பேற்றி விடுகின்றன. சில்க் ஸ்மிதா தென்னாட்டில் தான் அதிகம் நடித்தார் என்றாலும், வடநாட்டிலும் அவர் வெகுவாக அறியப்படுகிறார் (Thanks to Midnight masalas!).

இளையராஜாவின் இசை, PC ஸ்ரீராம் கேமரா, DFT படித்தவர்களின் வருகை இவைபோலதான் தமிழ் சினிமாவின் எண்பதுகளில், 90 - களின் ஆரம்பத்தில், சில்க் ஸ்மிதா ஒரு முக்கிய கூறாக இருந்தார். சில்க் ஸ்மிதா பாடல்கள் இல்லாத திரைப்படங்கள் டிஸ்டிரிபியூடர்களால் அவ்வளவாக விரும்ப படவில்லை. லயனம், தமிழ்நாட்டில் வயது வந்தவர்களுக்கான படங்களில் ஒரு benchmarking படம் என்றுதான் சொல்லவேண்டும் (ஆங்கிலத்தில் Sirocco மாதிரி). சில்க் படங்கள் ஓடிய திரையரங்குகளில் ஆண்களின் வெப்ப மூச்சு காற்று விரவி இருந்தது.

எங்கள் ஊரில் எல்லா நிகழ்வுக்கும் திரைப்பட பாடல்களை பெரிய ஸ்பிகர்களில் ஒலி பரப்புவார்கள். எழவு வீடுகளில் முதல் பாடல் "போனால் போகட்டும் போடா" என்றால் கடைசி பாடல் "சில்க்கோட கையால வாங்கிகுடி" என்பது தான், திருமண வீடுகளில் முதல் பாடல் "பூமுடிப்பாள் இந்த பூங்குழலி" என்றால் இரண்டாவது அல்லது மூன்றாவது பாடல் "சில்கின்ன கையால வாங்கிகுடி" என்பதகாத்தான் இருக்கும். நிகழ்ச்சிகள் மாறினாலும், சில்க்கின் ஆதிக்கம் மாறாது. திருவிழாவின் ரெகார்ட் டான்சில் நீங்கள் கேட்கவே வேண்டாம்... எங்கெங்கு காணினும் சில்க் மயம்தான்.

சில்கை பற்றி பேசும்போது கண்டிப்பாக மூன்றாம் பிறை, கோழி கூவுது, அலைகள் ஓய்வதில்லை போன்றவற்றை பற்றி நினைவுகொள்ளாமல் இருக்க முடியாது. ஆனால் அவருக்கு அந்தமாதிரியான படங்கள் அதிகம் வாய்க்கவில்லை என்பது தமிழ் திரையுலகில் பெரிய ஆச்சர்யமான விஷயம் ஒன்றும் இல்லை. சில்க், "அம்மன் கோவிலுக்கு போகலாமா"என கேட்டால் கூட அவர் "அடல்ட்ஸ் ஒன்லி போகலாமா" என்பதாகத்தான் நம் காதில் விழும்படி நம் தமிழ் சினிமா நம்மை மாற்றிவிட்டது.
சில்க் ஸ்மிதாவின் காலத்தில் டிஸ்கோ சாந்தி, பபிதா, அனுராதா போன்றவர்கள் இருந்தாலும் சில்க் ஸ்மிதா அளவிற்கு அவர்கள் பிரபலம் அடையாமல் போனதன் காரணம் அவர்களிடம் சில்கிடம் இருந்த "பட்டை சாராய" கவர்ச்சி இல்லாதுதான். அவரிடம் அடிப்படையில் ஒரு அழகிய நடிப்பு திறனும் பட்டை தீட்டாத கவர்ச்சியும் இருந்தது. அவரது ஆடைகளை அவரே வடிவமைத்து, அவரே அவரது மேக் அப்பை செய்து கொண்டது அவரை மற்ற கவர்ச்சி நடிகைகைளிடம் இருந்து வேறு படுத்தி காட்டியது.

ஆமாம், இன்றைய படங்களில் கவர்ச்சி நடனங்கள் இல்லையே, ஏன்? ஹிப்பிகள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, மதன் சொல்வார், அவர்கள் உங்கள் ஒவ்வொருவரின் உள்ளும் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படிதான், இந்த கவர்ச்சி நடிகைகள் எல்லோரும் ஒவ்வொரு கதாநாயகிக்குள்ளும் ஒளிந்து இருக்கிறார்கள். மேலும், இன்டர்நெட் வந்து இந்த சாப்ட் போர்ன் என்பதை கொஞ்சம் காலி செய்துவிட்டது. என்னிடம், இன்னுமொரு தியரி இருக்கிறது. இந்த கவர்ச்சி நடிகைகள் இருந்த காரணத்தால் தான், மிகச்சிறந்த நடிகைகள் நமக்கு கிடைத்தார்கள் - ஸ்ரீ வித்யா, சுஜாதா, ரேவதி, ராதிகா, ஷோபா , ரோகினி, ஊர்வசி... இதற்கு காரணம் கவர்ச்சி நடிகைகள் கவர்ச்சியை கவனித்து கொள்ள, அந்த கதாநாயகிகள் கதையையும் நடிப்பையும் கவனித்து கொண்டார்கள். இன்று...? வேண்டாம் அந்த விவாதத்தை விட்டுவிடுவோம்...


சில்க் பற்றிய என் மாயையை உடைத்தது, அனிதா பிரதாப் (வேலுப்பிள்ளை பிரபாகரனை இரண்டு முறை பேட்டி எடுத்த செய்தியாளர்) எழுதிய "In the veils of Sorrow" என்கிற செய்தி கட்டுரைதான்.

அனிதா பிரதாப்

இந்த கட்டுரை முதலில் 'சண்டே' பத்திரிகைளும் பின் அவரது "island of Blood" என்ற புத்தகத்திலும் வெளி வந்தது. இந்த கட்டுரை வந்த அந்த பத்திரிகை பத்து மடங்கு விலை போனதாம் (1 ரூபாய் பத்திரிகை 10 ரூபாய்). அந்த கட்டுரையில் அவர் ஷோபாவை பற்றியும் சில்க் ஸ்மிதாவை பற்றியும் எழுதி இருப்பார். சில்க் வந்து என் முன்னால் அமர்ந்தபோது அவர் அந்த வீட்டு வேலைக்காரி இல்லை, அவர் தான் சில்க் என்று நம்ப மிகவும் நேரம் எடுத்தது; பழுப்பேறிய சல்வார் கமீஸில், சீர்கழிகப்பட்ட, உதாசினபடுதப்பட்ட, அழுக்கான (Wan, Wasted and unwashed) பெண்ணாக சில்க் என் முன்னால் வந்து அமர்ந்தார் என்கிற அவரது எழுத்தை படிக்கிற போது நமக்கு சோகம் கவ்வுகிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை தன் சாரைப் பார்வையிலும், மினுக்கும் உதடுகளிலும் கவர்ந்து வைத்து இருந்தவர் பின் எப்படி இப்படி ஆனார் என்பது இன்னுமொரு கட்டுரைக்கான விஷயம்.

Dirty Pictures வித்யா பாலன் நடிப்பில், ஏக்தா கபூர் தயாரிப்பில் வெளி வருகிற படம். நஸ்ருதீன் ஷா, துஸார் கபூர், இம்ரான் காஷ்மி ஆகியோரும் இந்த படத்தில் உள்ளார்கள். இது சில்க் சுமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாய் வைத்து எடுக்கப்படுகிற படம். மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிற இந்த படம் டிசம்பர் 2 அன்று (சில்க் சுமிதாவின் பிறந்த நாள்) வெளி வர இருக்கிறது. எனகென்னமோ வித்யா பாலனால் சில்க் சுமிதாவை திரையில் கொண்டு வரமுடியும் என தோன்றவில்லை, காரணம் சில்க் சுமிதாவை சுற்றி யாராலும் (சில்க் உட்பட) அறிந்து கொள்ள முடியாத ஒரு கவர்ச்சி காற்று இருந்ததுதான். மேலும், "கவர்ச்சியான வித்யா பாலன்" என்பதே ஒரு Oxymoron, என்னை பொறுத்த வரை. ஒரு வேளை, இந்த படத்தை சில்க் பற்றின கதை என சொல்லி விட்டு நடிகைகளை பற்றின ஒரு பொதுவான கதையாக எடுக்கிறார்களோ என்னவோ - அதுவும் சாத்தியமே, ஏனென்றால் சில்க் சுமிதாவின் கதையும் மற்ற நடிகைகளின் கதையும் வேறுவேறு அல்ல தானே! டிசம்பர் 2 வரை காத்திருப்போம்.

கட்டுரை : தேவா

7 comments:

  1. நல்ல அலசல்...

    மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது இப்படம்...

    டிசம்பர் வந்தால் தெரிந்துவிடும்....

    ReplyDelete
  2. //சில்க் சுமிதாவின் கதையும் மற்ற நடிகைகளின் கதையும் வேறுவேறு அல்ல தானே//

    உண்மை. எல்லாவற்றையும் தரக்கூடிய(து என்ற நம்பிக்கையில்) பணத்துக்காக எதையும் செய்யத் துணிபவர்களுக்கு, மனநிம்மதியை, ஆதரவை, அன்பை அந்தப் பணம் தராது என்பதை புரிந்துகொள்ளும்போது “டூ லேட்” ஆகிவிடுகின்றது!!

    ReplyDelete
  3. //எனகென்னமோ வித்யா பாலனால் சில்க் சுமிதாவை திரையில் கொண்டு வரமுடியும் என தோன்றவில்லை, காரணம் சில்க் சுமிதாவை சுற்றி யாராலும் (சில்க் உட்பட) அறிந்து கொள்ள முடியாத ஒரு கவர்ச்சி காற்று இருந்ததுதான். //

    உண்மை.
    படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

    ReplyDelete
  4. டிசம்பர் வரை காத்திருக்கலாம்.

    ReplyDelete
  5. காட்டன், பாலிஸ்டர் -- அதப் பத்தியும் விரிவா சொல்லிட்டா ஒரு கம்ப்ளீட்நஸ் கேடைச்சுடும்..

    btw.. good analysis..

    One main difference.. Divya Balan is very fair in complexion compared to Smita..

    ReplyDelete
  6. பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் தேவா சார்பாக நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...