Monday, January 16, 2017

வானவில்- ஜோக்கர்- கேதார் ஜாதவ் - அசீம் பிரேம்ஜி

பார்த்த படம்- ஜோக்கர் 

சென்ற வருடம் வெளியான ஜோக்கர் இப்போது தான் காண முடிந்தது. அரசியல் வாதிகளை நேரடியே கிழி கிழி என கிழிக்கிறது படம்! கலைஞர் தொடங்கி ஆளும் கட்சி வரை - வித்யாசமே இன்றி தோலுரிக்கிறார்.  படம் எப்படி சென்சாரை தாண்டி இந்த அளவில் வந்துள்ளது என்பதே ஆச்சரியம் தான் !

Image result for joker tamil movie

படம் துவங்கும் போது நமக்கும் குழப்பமாக தான்  உள்ளது; ஹீரோ தன்னை ஜனாதிபதி என்று சொல்லி கொள்கிறார் என்றால் - கூடவே சிலர் அவரை ஜனாதிபதி என்று சொல்கிறார்கள் !!

அழுத்தமான பிளாஷ் பேக் ..  நம்மை உலுக்குகிறது.. நமது அரசியல் வாதிகள் இப்படித்தான் இருக்கிறார்கள்.. கழிவறையில் மட்டுமல்ல  சுடுகாட்டில் கூட ஊழல் இல்லாமல் கட்ட முடியாது அவர்களால்..

மனதை கனக்க வைத்து விட்டு -போராட்டம் தொடரும் என முடிகிறது படம்.

ஹீரோவாக வரும் குரு சோமசுந்தரம்  நடிப்பு அற்புதம். வாழ்ந்திருக்கிறார் மனுஷன். தலையை ஒரு கையால் கோதியபடியும் கண்ணை சிமிட்ட படியும் இருப்பது.. பகத் சிங்கை திறந்து விடட்டுமா என கேட்பது என அசத்துகிறார். அவருடன் எப்போதும் கூட வரும் பெரியவர் டிராபிக் ராமசாமியை நினைவு படுத்தும் பாத்திரம்.. படத்தின் இறுதியில் இவர் சொல்லும் ஒரு வசனம்.. " நாம் யாருக்காக போராடுறோமோ அவங்களே நம்மளை மதிக்க மாட்டேங்குறாங்க ; பைத்தியம்னு சொல்றாங்க" என்பது தான் இப்படம் தரும் மிகப்பெரும் செய்தி

ஜோக்கர் - நல்ல மாற்று சினிமா விரும்புவோர் அவசியம் காண வேண்டிய படம்.

படித்த புத்தகம்: அசீம் கம்பியூட்டர்ஜி 

சொக்கன் எழுதிய அசீம் பிரேம்ஜி வாழ்க்கை வரலாறு அண்மையில் வாசித்தேன் .

பிரேம்ஜியின் வாழ்க்கை வரலாறு என்பதை விட விப்ரோ என்கிற நிறுவனம் பற்றி தான் அதிகம் எழுதியுள்ளார்.

வெளிநாட்டில் கல்லூரியில் படிக்கும்போது தந்தை இறந்து விட- படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நிறுவனத்தை கவனிக்க இந்தியா வருகிறார் பிரேம்ஜி. ஏதேதோ பிசினஸ் செய்து வந்த அவர்கள் கணினி துறைக்குள் நுழைந்தது எப்படி, அத்துறையில் அவர்களின் பிரமிக்க வைக்கும் வளர்ச்சி இவற்றை பேசுகிறது இப்புத்தகம்.

விப்ரோவை கிட்டத்தட்ட நெடுஞ்செழியன் போன்றோருடன் ஒப்பிட முடிகிறது; எப்போதும் இரண்டு அல்லது மூன்றாம் நிலை தான். இன்போசிஸ் மற்றும் T C S எப்போதும் முதல் 2 இடங்களை பிடித்துக் கொள்ள, மூன்றாம் ரேங்க் மாணவனாகவே இருக்கிறது விப்ரோ. "நாங்கள் எப்போதும் அதிக ரிஸ்க் எடுப்பதில்லை" என்பதை தங்கள் குறைகளில் ஒன்றாக ஒப்புக் கொள்கிறார் பிரேம்ஜி.

மேலும் கணினி துறை தவிர அவர்களின் பிற நிறுவனங்கள் அந்த அளவு Turnover / வளர்ச்சியை காணவில்லை; இதற்கு பிரேம்ஜி சொல்லும் விளக்கம்: "அவையெல்லாம் நன்கு செட்டில் ஆன நிறுவனங்கள் .. டாப் மேனேஜ்மென்ட்டின் நேரத்தை அதிகம் எடுத்து கொள்வதில்லை.."

அசீம் பிரேம்ஜி அவர்களை எனக்கு  மிக பிடிக்க ஓர் காரணம்: அவர் செயகிற CSR (Charity) விஷயங்களுக்கு தான் ! பள்ளி கல்வி துறையில் எத்தனையோ ஏழை குழந்தைகளுக்கு இந்நிறுவனம் செய்யும் தொண்டு பாராட்ட படவேண்டிய ஒன்று.

சென்னை ஸ்பெஷல் - பல்லாவரம் மீன் மார்க்கெட்

பல்லாவரத்தில் புதிதாக ஒரு மீன் மார்க்கெட் வந்துள்ளது; பல்லாவரத்திலிருந்து - பம்மல் செல்லும் சாலையில் ஹோட்டல் மார்ஸ் அருகே வந்துள்ள இந்த மார்க்கெட் . சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டும் இயங்குகிறது.

மீன்களின் விலை  மிக குறைவாக கிடைக்கிறது; குறிப்பாக வஞ்சிரம் மீன் புதிதாக இருப்பதுடன் வெளியில் உள்ள கடைகளை விட 50 % விலை குறைவாக உள்ளது.  பல்லாவரம், குரோம்பேட்டை, நங்கநல்லூர், மடிப்பாக்கம் போன்ற இடங்களில் உள்ள நண்பர்கள் சிறிது தூரம் என்றாலும் நல்ல மீன்- குறைவான விலையில் வாங்க இங்கு ஒரு விசிட் அடிக்கலாம் !

டிவியில் பார்த்த படம்- கடவுள் இருக்கான் குமாரு 

இயக்குனர் ராஜேஷ் தனது காரியரின் துவக்கத்தில் சில சிரிக்கும் படியான காமெடி படங்களை தந்தவர்.. அதற்குள் சரக்கு மொத்தமும் காலியாகிடுச்சா ! கடைசி சில படங்கள் செம மொக்கை வாங்குகிறது. அதிலும் இந்த படம் தாங்க முடியலை.. சிரிப்பு என்பது மருந்துக்கும் இல்லை; ஓசியில் .....டிவியில் பார்த்த நமக்கே இப்படி இருக்கே.. காசு தந்து தியேட்டரில் பார்த்தவர்கள் எப்படி நொந்து போயிருப்பார்கள்.. ! இதில் இன்னொரு கொடுமை இப்படம் போட்டது விஜய் டிவியில்.. 3 மாசத்துக்கு ஒரு முறை கண்டிப்பா போட்டு கொலையா கொல்லுவாங்க ! ஹூம் :(

QUOTE CORNER


கிரிக்கெட் கார்னர் 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் மேட்சில் இங்கிலாந்து 350 ரன் அடிக்க,இந்தியா 60க்கு 4 விக்கெட் என்றதும், "வேற வேலையை பார்க்கலாம்" என நகர்ந்தாச்சு; அவ்வப்போது க்ரிக் இன்போவில் ஸ்கொர் பார்த்து கொண்டிருந்தேன். கோலி அடித்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை; (ஹர்ஷா போக்லே ட்வீட்டில் கோலிக்கு செஞ்சுரி அடிப்பது .......பல் துலக்குவது, குளிப்பது போல இன்னொரு தினசரி வேலை என எழுதியிருந்தார் )

கேதார் ஜாதவ் 60 பந்தில் செஞ்சுரி அடித்தது ரணகளம் ! உண்மையில் இந்த இன்னிங்ஸ் தான் மேட்சை நம் பக்கம் திருப்பியது; ஜெயிக்க  60 ரன் இருக்கும்போது இருவரும் அவுட் ஆனாலும் பாண்டே பொறுப்புடன் ஆடி ஜெயிக்க வைத்தார். இந்திய அணி கோலியின் தலைமையில் fearless and aggressive ஆட்டம் ஆடிவருவது ரசிக்கும்படி உள்ளது. தொடரட்டும் !

சின்னத்திரை குறித்த நீயா நானா 

சின்னத்திரை நடிகர்கள் - இந்த மீடியா குறித்து பேசிய  நிகழ்ச்சி பல தகவல்களை தந்தது:

* இங்கு நடிகர்களுக்கு குறைந்த பட்ச தினசரி சம்பளம் 500 முதல் 750 ரூபாய் தானாம் ! கேரக்டர் ரோல் செய்வோருக்கு தினசரி 1000 ம் - ஹீரோயின் போன்றோருக்கு 3000 முதல் 6000 வரை கிடைக்குமாம். அதுவும் மாதத்தில் சில நாட்கள் மட்டுமே வேலையும், சம்பளமும் கிடைக்குமாம் !

* குடும்ப செலவுகளுக்கே சரியான வருமானம் இல்லா நிலையில் வேறு வேலை பார்க்கலாம் என நினைக்கும் போது புதிதாய் ஒரு வாய்ப்பு வருவதும், பின் அதன் பின்னே ஓடுவதும் என கழிகிறது காலம் .. புலிவால் பிடித்த கதையாக தான் இருக்கிறது வாழ்க்கை .

* திருமணம் என்பது பொதுவாகவே கடினம் எனினும், ஆண்களுக்காவது பெண் கிடைத்து விடுமாம். நடிகைகளுக்கு வரன் கிடைப்பது குதிரை கொம்பாம். காதல் திருமணம் தான் ஒரே வழி என்று பேசினர்...

சின்னத்திரை நட்சத்திரங்கள் வாழ்க்கை நிச்சயம் கவலைக்குரிய ஒன்று தான் !

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...